வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இசைப்புயல் ஆரவாரம் இல்லாத அலட்டிக் கொள்ளாத மனுஷர். எளிமை அடக்கம் புதுமை இவற்றின் மொத்த அடையாளம் அவரின் இசையில் வந்த ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு சரித்திரம் சொல்லும். போகிற போக்கில் எத்தனையோ ஹிட் பாடல்களை அள்ளி தந்திருக்கிறார்.
பிரபல இனிப்பு கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் எந்த இனிப்பு மிகவும் நன்றாக இருக்கும் என்று கேட்டால் ... எப்படி பதில் வராதோ.. அதைப் போல்தான் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வந்த பாடல்களில் எதுமிகவும் பிடிக்கும் என்பதைச் சொல்வது/ வரையறுப்பது மிகவும் கடினம். இருந்தாலும் என் மனதுக்கு நெருக்கமான மூன்று பாடல்கள் இதோ!

' கிழக்கு சீமையிலே 'படத்தில் வந்த...
'அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ
முழு நிலவானதெப்போ
மவுனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதெப்போ
ஆத்தங்கர மரமே அரசமர இலையே'...
இந்தப் பாடல்தான் என்னை முதன்முதலாக ஏ ஆர் ரகுமானின் இசையை கூர்ந்து கவனிக்க வைத்தது. இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பாடலில் வரும் மாமன் மகன்போல நமக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை எழும்.
எனக்கு அத்தை மகன், மாமன் மகன் என்று யாரும் கிடையாது. அப்படி ஒருவர் இருந்தால் இப்படி என்னை பார்த்து பாடி இருப்பாரோ என்று அடிக்கடி மனதுக்குள் ஒரு கேள்வி எழும். கூடவே வெட்கம் கலந்த சந்தோஷமும் வரும்.
இந்தப் பாடலில் முதலில் மெதுவாக ஆரம்பிக்கும் பீஸ்ட்... போகப்போக வேகமெடுக்கும். மனோ மிகவும் அருமையாக பாடி இருப்பார் . கிராமத்து ஒட்டுமொத்த அழகையும் இந்தப் பாடலில் இசையாய் வடித்திருப்பார் இசைப்புயல்.
அடுத்தது 'டூயட் 'படத்தில் வந்த '
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே மானமுள்ள ஊமை போல தானம் கேட்க கூசி நின்றேனே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்....
என் உயிரோடு கலந்த பாடல் இது. இந்தப் படத்தில் கதாநாயகியை கதாநாயகன், கதாநாயகனின் தம்பி மற்றும் வில்லன் மூவரும் காதலிப்பர். ஒரு கட்டத்தில் அண்ணனுக்கும் தம்பிக்கும் தாங்கள் நேசிக்கும் நபர் ஒருவர்தான் என்ற உண்மை தெரிய வரும்போது அண்ணன் மேல் மிகுந்த கோபம் கொள்வார் தம்பி.

அண்ணன் வாய்மூடி மௌனமாக இந்தப் பாடலை மனதிற்குள்பாடுவதாக காட்சியமைப்பு இருக்கும்.
மிரளச்செய்யும் இசை. பாடல் வரிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இசை.. அட்சர சுத்தமாக இருக்கும்.
'அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல் கொள்கை மாறாது' என்ற வரிகளில் நம் மனதை ஏதோ செய்யும் இசை. இந்தப் பாடலை கண்மூடி கேட்டால் விழிகளில் கண்ணீர் வழியும்.
மின்சார கனவு படத்தில்,
'வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்'...
என்ற பாடலின் இசை காதலின் சுகத்தையும், காதலின் தோல்வியையும் அதிகமாக்கும்... வல்லமை பெற்றது.

இந்தப் பாடலில் மேஜிக் செய்வார் இசைப்புயல் இந்தப் பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும்.... நம் மனசு தன்னாலேயே உற்சாக மோடுக்கு சென்றுவிடும் . இசை உலக தரத்தில் இருக்கும். இந்தப் படத்தில் இசை ராஜ்ஜியமே நடத்தியிருப்பார் ஏ. ஆர் .ரகுமான்.
அதிலும் 'உலகை ரசிக்க வேண்டும் உன் போன்ற பெண்ணோடு...' என்று முடிக்கும் தருணத்தில் எந்தவித இசையும் இல்லாமல் வண்டின் ரீங்காரம் மட்டும் கேட்பது .. இசைப்புயலின் 'டச்.
' திரையரங்கம் என்றும் பாராமல் எழுந்து நின்று கை தட்டினேன் . பார்த்தால் என்னைப் போலவே பலரும் எழுந்து நின்று கைதட்டி கொண்டிருக்கின்றனர்.
காலத்தால் அழிக்க முடியாத இசையை படைக்கும்
எங்களின் இசைப்புயலே!
வேறாக இருந்தாலும்,
அன்பின் மூல
வேராக இருப்பவர் நீங்கள் !
யாராக இருந்தாலும்
உங்கள் இசையின் மூலம்
உறவை ஆறாகப் பெருக்குபவர் நீங்கள் !!
வாழ்க நலமுடன்!
அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.