வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
கொரொனா காலத்தில் டீம்ஸ், ஜும், வெபெக்ஸ் போன்ற டெக் உபயத்தில் பேருந்துநிலையம், மளிகை கடை, வீட்டு மொட்டைமாடி, ரயில் பயணம், மரத்தடி, சமையல் நேரம் என எல்லா இடமுமே அலுவலகமுமாகவும் பள்ளியாகவும் செயல்படவும் செயல்படவைக்கவும் முடிந்திருக்கிறது.
உலகின் எந்த மூலையில் இருப்பவரும் எவருடனும் எந்த நேரத்திலும் விவாதிக்கவோ, தரவுகளை பரிமாறிக்கொள்ளவோ முடிகிறது. நேரம் காலமறியாது மீட்டிங் மற்றும் வகுப்புகள் அல்லது தேர்வுகள் வைப்பது ஊழியர்கள் மற்றும் மாணாக்கருக்கு மன உளைச்சல் மற்றும் தொந்தரவுதான் என்றாலும், இதன் மூலம் அடையும் ஆதாயத்தை கூட்டாக மறுத்து ஒதுக்கிவிடமுடியாது. வேகமான அலைக்கற்றை மற்றும் உயர்தர டெக் அபிவிருத்தியின் அளப்பரிய ஒருங்கிணைந்த சாதனை இது.

இவ்வாறிருக்க, ஒரு வதந்தி வேகமாக பரவ வேண்டும் என்றால் அதை வாட்சப்பில் அனுப்பிவிட்டால் போதும் என்பது தற்காலத்தில் அதுவும் தேர்தல் நேரத்தில் மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. அரசியல்வாதியின் பெயரையும் அவர் சொல்லாத சாதி மத கருத்தையும் நிரப்பி, ஏதேனும் நியூஸ் சேனலின் டெம்ப்ளேட்டில் போட்டுவிட்டால், அந்த நாளுக்கான பொழுது போக்கு ரெடி.
இது பள்ளிக்கான வாட்சப் க்ரூப்பிலும் பங்கம் வைத்ததுதான் விஷயமே. 150 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பயிற்றுவித்து பலரை முக்கியமான பதவியில் உயர்த்தி அமர வைத்திருக்கும் பெருமை எமது பள்ளிக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல், மொஹம்மத் அலியோடும், இம்மானுவேலோடும் என்னை சாதி மத வேறுபாடின்றி, இம்மட்டும் உரையாட வைத்திருக்கும் பெருமையும் எமது பள்ளிக்கு உண்டு.

கடந்த சில நாட்களாக பள்ளியின் வாட்சப் குழுவில் நடந்த விவாதத்தில் பல நண்பர்கள் கலந்துகொள்ள தகுதியற்ற நிலையில் உரையாடல்கள் இருந்தன. நடந்தவற்றை கூராய்வு செய்வதில் பயனில்லை. ஆயினும், சாதியை குறிப்பிட்டும் மதத்தின் பெயரால் என, வசைபாடல்கள் அச்சில் ஏற்ற முடியாத அளவில் அரங்கேறின.
பகிர்ந்துண்ட மதிய உணவுகள், சாம்பல் புதனில் வேட்டையாடிய பிரியாணி, PTA ஹாலில் கண்டு மகிழ்ந்த மலையாளப் படங்களையும், PET பீரியடில், பள்ளியில் களித்து கொண்டாடிய தருணங்களையும் பகிர்ந்துகொள்ளவே அந்த குழு தொடங்கப்பட்டது.
பேனா மை தீர்ந்தபோது மேஜையில் மை ஊற்றி அதை உறிந்து எழுதிய நட்பை துவேஷ விதைகள் முழுங்கிவிட்டன. பகிர்ந்துண்ட நட்பே சிதறிகிடக்கும்பொழுது பள்ளிக்கு வெளியே மற்றவர்கள் பிரிந்துகிடப்பதில் ஆச்சர்யமில்லை.
தனியாய் இருக்கும் ஈர்க்குச்சியை காட்டிலும் துடைப்பத்தில் இணைந்து நிற்கும் ஈர்க்குச்சிக்கு வலிமை அதிகம். இதன் பொருட்டே சிங்கம், கூட்டமாய் நின்ற நான்கு எருதுகளை பிரித்து வேட்டையாடிய கதையை மூன்றாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் வடித்து வைத்தனர். உண்டு பல வருடங்களாய் ஆகிவிட்டபடியால் வடித்த சாதம் செரித்துவிட்டதோ எனும் எண்ணும்படியாய் இருக்கிறது நம்மவர்களின் நடவடிக்கை.
“Divide and Rule” என்பது ஆங்கிலேயருக்கு மட்டும் வெற்றி தரவில்லை, எங்களுக்கும் தான் என பல சாதி, மத அடிப்படையிலான கட்சிகள் கறை படிந்த பல்லை காண்பித்து கொக்கரிக்கின்றன.

பிறந்தது முதல் இன்றுவரை பல கிறித்துவ முகமதிய நண்பர்கள் என்னுடன் பயணிக்கிறார்கள். வாழ்வின் பல முக்கிய தருணங்களில் உடனிருந்திருக்கிறார்கள் மற்றும் இருக்கிறார்கள். தர்காவில் மந்திரித்ததும், பள்ளி சேப்பலில் மண்டி போட்டு சிலுவையிடம் பிரார்த்தித்ததும் பசுமையான மற்றும் அழகான நியாபகங்கள்.
பதினெட்டு வருடங்களுக்கு பிறகு ஒப்பீட்டளவில் இந்த பரிமாற்றங்கள் மிகவும் குறைந்திருக்கிறது.
ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை நிதர்சனமாக நாம் காணமுடிகிறது. நேர்மறையாய் தெரிந்தவர்கள் மறையின் பெயரால் இப்போது எதிர்மறையாய் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு இலக்கற்ற பயணம். ஆனால் அதை ஒரு கானல் நீருக்கு பின்னால் ஓடவைத்துள்ளார்கள்.

இந்த துவேஷம் நம் தலைமுறை மட்டுமில்லாது அடுத்தடுத்த தலைமுறையின் முகத்திலும் ரத்தத்தை உறைய வைக்க முயற்ச்சிக்கிறது. இதன் மூலம் வெற்றி முரசு கொட்டப்போவது முதலாளிகள் மட்டுமே.
ஆனால் பிளவுண்டு கிடப்பது ராமும் அம்ஜத்கானும் தான் என்பதை நாம் உணரவேண்டிய தருணமிது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.