வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரிய
என் மகனும் மகளும் எப்போதும் என்னைக் கேட்கும் கேள்வி , நம்ம வீட்ல நாய் வளர்க்கலாமா? வாங்கிக் வர்றீங்களா?? என்பது தான். கிட்டத்தட்ட எட்டு ஒன்பது வருடங்களாக இந்தக் கேள்வியை அவர்கள் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்..ஆனால் என்னால் முடியாது என்ற ஒற்றைப் பதிலைத் தான் அவர்களுக்கு அளித்திருப்பேன். முதலில் நாய் என்றால் எனக்கு அதீத பயம். தெனாலி படத்தில் கமல் ஏதேதோ கூறி அவருக்கு பயம் என்பார்.

எனக்கு அவர் அளவிற்கு நோய் முற்றவில்லை எனினும், நாய் பயம் அதிகம். ஆளில்லாத் தெருக்களில் இருக்கும் நாய்களுக்கு பயந்தே, நான் என் வெள்ளை நிற இரும்புக் குதிரை( scooty) யை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வதுண்டு.
காட்டில் சிங்கத்தை எதிரில் பார்த்தால் கூட அச்சப்படுவேனா? எனத் தெரியாது.. ஆனால் ரோட்டில் தனியாக நான் நடக்கும்போது நாயைக் கண்டால் அவ்வளவுதான் எனக்கு, முன்வைத்த காலை பின்வைத்து விடுவேன்.
தலைபோகிற வேலையாக இருந்தாலும் சரி,.. வீட்டிற்குத் திரும்பி விடுவேன்.
இத்தனைக்கும் என் பள்ளிப்பருவக் காலத்தில், ஒரு நாள் திடீரென என் அப்பா ஒரு அழகிய வெள்ளைநிற பொமரேனியன் வகை நாய்க்குட்டியை வாங்கி வந்தார். அது பிறந்தே சில நாட்களான குட்டி நாய். அந்தக் குட்டி நாயைப் பார்த்து அப்போது எனக்கு பயமெல்லாம் வரவில்லை.

பெரிய அளவில் நாயின் எனக்கு மகிழ்ச்சியைத் தராவிட்டாலும், அதைப் பார்க்கும் போது பிடித்திருந்தது. அதற்கு ஸ்கூபி( Scooby) என நாமகரணம் செய்திருந்தோம். வந்த சில மாதங்களிலேயே அது நன்றாக வளர்ந்தும்விட்டது ..
எனக்கு வளர்ந்த அந்த நாயைப் பார்க்கும்போது ஏதோ ஒரு பயம். நான் அதை தூக்கியதோ இல்லை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதோ கிடையாது.

என் அப்பா தான் அதன்மேல் பாசமாக இருந்தார். அதனைக் கொஞ்சியது கிடையாதே தவிர, அதற்கு தேவையான குளியல் சோப்பு , ஷாம்பு ஆகியவற்றை எங்கோ தூரத்தில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று வாங்கிக் கொண்டு வந்து தருவேன்.. என் சித்தப்பா தான் அதைக் குளிப்பாட்டி விடுவார்.அதனாலேயே அது என் சித்தப்பாவைப் பார்த்தால் பயந்து நடுங்கும். வீட்டில் நான் மட்டும் இருந்து யாரும் இல்லாவிட்டால், ஸ்கூபி யைக் கட்டிப் போட்டு விடுவேன்.
அதற்குத் தேவையான உணவை அதனருகே வைத்துவிட்டுச் சென்றுவிடுவேன். அதுவும் எதற்கும் சளைத்ததல்ல. நான் அதற்கு பயப்படுகிறேன் என்று அதற்குத் தெரியும்.. அதனாலேயே அவ்வப்போது என்னைத் துரத்தும். அது எங்கு இருக்கிறதோ.. அங்கு நான் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.

என் வீட்டு விருந்தினர்களுக்கு எப்போதும் ஸ்கூபி ஒரு பேசுபொருள் தான்.. என் அப்பாவும் வருபவர்களிடம் ஸ்கூபியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அவருக்கு வயது ஏறஏற... மனிதர்களை விட நாயிடம் பாசம் அதிகமானது. அதற்கும் என் அப்பாவின் மேல் அதிக பாசம். என் தந்தை இறப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே அது வீட்டை விட்டு தானாகவே வெளியேறி விட்டது. கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடனேயே சுகதுக்கத்தில் பங்கெடுத்த ஸ்கூபி என் அப்பாவின் மரணத்தை ஏற்க மனதில்லாமல் , வீட்டை நிராகரித்து விட்டது போலும்...
இன்னொரு அனுபவம்..
கோவையில் நாங்கள் குடியிருந்தபோது, அபார்ட்மெண்ட் வாசலில் ஒரு நாய் வசித்து வந்தது. பார்ப்பதற்கு வசதியான உயர்ரக நாயைப் போல் இருக்கும்.. அதை யார் பழக்கப்படுத்தியிருந்தார்கள் எனத் தெரியவில்லை,, அது பால் பிஸ்கட் மற்றும் தயிர்சாதம் இவற்றை மட்டும் தான் உண்ணும். வேறு எதையும் தொடாது. அந்த நாய் யாரையும் துரத்தாது என செக்யூரிட்டி கூறியதால் எனக்குப் பயம் போனது...

ஒருநாள் எதேச்சையாக அதற்கு தயிர் சாதம் வைத்தேன். அதற்கு அன்றுமிகுந்த பசி போலும். மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு என்னைப் பார்த்தது.. அதன் பிறகு நான் தனியாக வெளியில் சென்றால் தெருமுனை வரை கூடவே நடந்துவரும்.
நான் தெருவைக் கடந்ததும் பிறகு திரும்பிவிடும். என்னுடன்அது தெருவில் பாதுகாப்பாக வருவது எனக்கு ஏனோ அவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது. நேரம் கிடைத்த போதெல்லாம் அதற்கு பசிக்குமே என்று பிஸ்கட் மற்றும் தயிர் சாதம் அளித்துக் கொண்டிருப்பேன்.
நான் மட்டுமல்ல எங்கள் தெருவில் அனைவரும் அதை நன்றாகப் பார்த்துக் கொண்டனர்.. அதை பப்பி எனச் செல்லமாக அழைத்துக் கொண்டிருந்தனர். பப்பிக்கு என்னவாயிற்று எனத் தெரியவில்லை,,, ஒருநாள் காலையில் அது காணாமல் போனது. எல்லா இடங்களிலும் தேடியும் அது கிடைக்கவில்லை....பப்பி இல்லாத தெரு என்னவோ போல் மாறியுது.. பாசம் காட்டி பின்னர் காணாமல் போவது ஏற்று கொள்ள மனதில் தைரியமில்லை என்பதாலோ என்னவோ இன்று வரை நாய் வளர்க்கும் ஆசை எனக்கு வரவில்லை!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.