வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நான் திருமணமான புதிதில் புகுந்த வீட்டு சொந்தங்கள் அனைவரும் அன்பாக பழகினார்கள். பொதுவாகவே மாமனார் என்றால் கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக நடந்து கொள்வார் என்று எங்கள் காலக்கட்டத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் அந்த முன்முடிவை என் மாமனார் உடைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மனசார பாராட்டுவார். அவரின் அனுபவத்தில் கற்றறிந்த நிறைய நல்ல விஷயங்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் போதிப்பார்.
மேலும் மாமனாரிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுக்கள் நம்மை வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் வெற்றி பெற துணைப்புரியும்.
எனக்கு என் மாமாவிடம் இருந்து கிடைத்த முதல் பாராட்டு ரொம்ப ஸ்பெஷல். அதனை மறக்கவே முடியாது. (தேதி கூட இன்னமும் நினைவில் இருக்கிறது.) முதல் பாராட்டு மட்டுமல்ல.. அவர் பாராட்டிய அனைத்து தருணங்களும் தேதி வாரியாக எனக்கு மனப்பாடம். மாமாவை பற்றி எழுதும் போதெல்லாம் என்னை அறியாமல் என் மனம் ஒரு உற்சாக மோடுக்கு சென்றுவிடும்.

எனக்கும், மாமாவுக்குமான தோழமை மிகவும் அழகானது. எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது. திருக்குறள்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு படிப்பினையை கொடுக்கும் அது போல் தான் மாமாவின் ஒவ்வொரு பாராட்டும். என்னை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது .
என்னை முதன்முதலாக பெண் பார்க்க வந்த மாமா எங்களது வளவனூர் வீட்டு முகவரியை தாளில் எழுதி தரச் சொன்னார். (சென்னை தி.நகர் அக்கா வீட்டில் பெண் பார்க்கும் படலம்) நானும் பயபக்தியோடு வெள்ளைத் தாளில் கருப்பு மையில்... எங்கள் வீட்டு முகவரியை எழுதி மாமாவிடம் நீட்ட, அதை வாங்கிய மாமா உடனே நிமிர்ந்து பார்த்து கையெழுத்து மிகவும் அழகாக இருக்கிறது ஆதிரை என்று மனம் திறந்து பாராட்டினார். அந்த முதல் பாராட்டு கல்வெட்டாய் மனதிற்குள்...
அதன் பிறகு நிறைய நிறைய பாராட்டுகள்.

அவரது அம்மாவைப் போலவே ( ஆண்டாள்அம்மா) எனது செய்கைகள் ஒவ்வொன்றும் இருப்பதாக அவர் பாராட்டியது!
அவரின் 70 வது பிறந்த நாளுக்கு என் மனதில் அவரைப் பற்றி நான் எவ்வளவு உயர்வாக நினைத்து இருக்கிறேன் என்பதை ஒரு கடிதம் (வாயிலாக) எழுதி பரிசளித்ததை, படித்துப் பார்த்த அவர் மனம் திறந்து பாராட்டியது..!
எங்கள் வீட்டுக்கு வரும் உறவுகள் அனைவரிடத்திலும் என் சமையலைப் பற்றி சந்தோஷமாக பாராட்டி உணவளித்தது!
அவரின் எண்பதாவது பிறந்தநாளுக்கு வித்தியாசமான புகைப்படத் தொகுப்பை நான் பரிசளிக்க அவர் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக ``எப்படி ஆதிரை... இத்தனை புகைப்படங்களை சேகரித்தாய் ?! இந்த எண்பதாவது பிறந்தநாளை மிகவும் அர்த்தமுள்ளதாகியது உனது பரிசு’’ என்று சொன்னது..!
மகளின் திருமண பத்திரிகையைக் காண்பிக்கும் போது , முதலில் கையைக்கொடு என்று சொல்லி கைகுலுக்க., நான் புரியாமல் விழிக்க.. நீ சொன்னதை நிறைவேற்றி விட்டாய். 'வங்கி மேலாளர்’ என்று கணவரின் பெயருக்குக் கீழே போட்டிருந்ததை சுட்டிக்காட்டியது! (மகளின் திருமண பத்திரிகையில் அப்படி இருக்க வேண்டுமென்ற என் ஆசையை ஒருமுறை கணவரிடம் சொன்னதை.. என் மாமாவிடம் சொல்லி இருந்தேன் அதை நினைவுப்படுத்திய பாராட்டு தான் அது)

எனது மகளின் திருமணம் முடிந்த மறுநாள் காலை என்னை அழைத்த அவர், ஒரு சின்ன விஷயத்தில் கூட தவறு நேராமல் மிக நேர்த்தியாக திருமணத்தை நடத்தி விட்டாய்.. 'வாழ்த்துக்கள் 'என்று சொல்லி கையில் இருந்த இனிப்பை ஊட்டியது!
வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் எனது வீட்டு(முக்கியமாகசமையலறை) சுத்தத்தைப் பற்றி சொல்லி ஆதிரையிடமிருந்து அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னது.
மாதாமாதம் பல் மருத்துவரிடம் சென்று வரும்அவருக்குநான் செய்தகஞ்சியை கொடுக்க, அகமும், முகமும் மலர மிகவும் சுவையாக இருக்கிறது.. உடலும் உள்ளமும் குளிர்ந்தது ஆதிரை என்று சொன்னது..! பத்திரிகைகளில் வரும் எனது கட்டுரைகளை முதன் முதலாக படித்து விமர்சித்து அதன் நிறை குறைகளைப் பாராட்டியது.

எல்லா விஷயங்களிலும் எனது கருத்தையும்கேட்ட பிறகே முடிவெடுக்கும் மாமா .. 'விருப்பு வெறுப்பு இல்லாமல் விலகி நிற்கிற மனதில் வரும் எண்ணம் புனிதமானது ..அப்பொழுது அதில் ஆசையிராது. எதிர்பார்ப்புகள் இருக்காது" என்ற படிப்பினையை போதித்த மகான்.
அவர் பாராட்டிய பாராட்டுகள் ஒவ்வொன்றும் என் உயிர் உள்ளவரை நினைவில் இருக்கும்.
மாமா மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தவர். சந்தோஷமாக வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் பிறரை சந்தோஷப்படுத்த தயங்க மாட்டார்கள். பிறரை சந்தோஷப்படுத்துவதே அவர்களுக்கு முக்கியம் என்று நினைப்பார்கள். எந்த பிரதிபலனும் இன்றி ஒருவரை சந்தோஷப்படுத்த சந்தோஷப்பட்டவர்களுக்கு தான் தெரியும். அது என் மாமாவிற்கு (மட்டும்தான்) தெரியும்.
கடைசி கடைசியாக 19 மே 2016 அன்று இரவு நான் செய்து கொடுத்த கோதுமை ரவா உப்புமவை கையில் எடுத்தவர், எனது அம்மா செய்வது போல் உதிரி உதிரியாக செய்திருக்கிறாய் என்று சொன்ன பாராட்டு இன்னமும் நெஞ்சுக்குள்ள ...அப்படியே!
(இப்பவும் கண்ணை மூடினால் அவர் சொன்னது அப்படியே கண்முன்னே நிழலாடுகிறது.)
ஆம்... மறுநாள் காலை மாமா இல்லை. உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

"பாராட்டு என்பது மனிதருக்கு கிடைக்கும் வரம்... வாழும் காலத்திலேயே அதை எனக்கு கொடுத்த என் மாமாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்."
இன்று பிறர் செய்யும் நல்ல விஷயங்களை உடனுக்குடன் பாராட்டும் எனக்கு, ..'உன்னுடைய பாராட்டு உத்வேகத்தையும் புத்துணர்ச்சியும் தருகிறது 'என்று பிறர் சொல்லும் போது.. மனம் தாங்கொணா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும். மாமாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் இந்த பாராட்டும் ஒன்று.
இனி ஒரு ஜென்மம் எனக்கு இருந்தால் கண்டிப்பாக மாமாக்கு மருமகளாகவே வர ஆசைப்படுகிறேன்.
எப்படி இருக்கீங்க மாமா? அத்தையைக்கேட்டதாக சொல்லுங்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.