வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஏழை மக்களின் மீது எவ்வித அக்கறையும் இல்லாத அரசியல்வாதிகளைச் சாட,
"ரொட்டி இல்லையென்றால் கேக்கை சாப்பிட சொல்லுங்கள்"
எனும் உதாரண வாசகம் அரசியல் அரங்கில் பயன்படுத்தப்படுவதுண்டு…
அந்த வாசகம் பிரெஞ்சுப் புரட்சியின் போது, மக்கள் ரொட்டி கூட கிடைக்காமல் பசியால் தவிக்கிறார்கள் என கூறப்பட்டதற்குப் பதிலாகப் பிரெஞ்சு ராணி மேரி அன்டோனெட் கூறியதாகக் குறிப்பிடப்படுவது உண்மையல்ல !
பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவவாதியுமான ரூஸோவின் சுயசரிதையான "The Confessions of Jean-Jacques Rousseau" நூலில் குறிப்பிடப்படும் வாசகம் அது. இளவரசி ஒருத்தியிடம் மக்கள் ரொட்டிக்குக் கூட அல்லாடுகிறார்கள் என முறையிட்டபோது,
"ரொட்டி இல்லையென்றால் கேக்கை சாப்பிட சொல்லுங்கள்"
என அவள் பதிலளித்ததாக வரும் வாசகம். அந்த இளவரசியின் பெயரையும் ரூஸோ குறிப்பிடவில்லை ! மேலும் ரூஸோவின் சுயசரிதை 1766ம் ஆண்டில் எழுதப்பட்டது. மேரி அன்டோனெட், பதினாறாம் லூயியை மணந்துகொண்டதோ 1770ம் ஆண்டில் !

உண்மையோ புனைவோ, அந்தந்த காலகட்டத்தின் அரசியல் சூழலையும் மக்களின் நிலைமையையும் பிரதிபலிக்கும், ஏழைகளின் பசியை உணராத ஆட்சியாளர்களை பற்றிய இது போன்ற சொல் வழக்குகளை உலகின் அனைத்து பகுதி நாட்டுப்புறவியலிலும் காணலாம்.
நம் மண்ணின் உதாரணமாக,
"ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
அதைக் காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்.."
எனும் நாட்டுப்புறப் பாடலை குறிப்பிடலாம்.
ஆட்சியாளர்களின் அட்டுழீயங்களையும் அராஜகங்களையும் பொறுத்துக்கொள்ளும் சராசரி சாமானியன் அன்றாட உணவுக்கே தடுமாறும் நிலை ஏற்படும் போது பொங்கி எழுந்ததற்கான காரணங்கள் வரலாறு நெடுகிலும் மட்டுமல்லாமல் நிகழ் காலத்திலும் உண்டு !
ரொட்டி பஞ்சம் புரட்சியைத் தூண்டியிருக்கிறது...
வெங்காயத்தின் விலை ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது !

நம்மூர் அரிசியைப் போல, மேற்கத்திய நாடுகளின் அடிப்படை உணவு பிரெட் எனப்படும் பன் ரொட்டி. பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய ரொட்டியான பக்கேத் (Baguette), இந்த ஆண்டின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்து பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
கோதுமை மாவுடன் சிறிது உப்பும் ஈஸ்ட்டும் கலந்த மிக எளிய ஒரு ரொட்டிக்கு ஏன் பாரம்பரிய அந்தஸ்து ?...
பிரெஞ்சு பக்கேத் ரொட்டியின் தனித்துவம் அதன் வடிவம் ! பொதுவாக பிரெட் வகை ரொட்டிகள் வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும்.
உருண்டை ரொட்டிகளும் உண்டு. ஆனால் இந்த பிரெஞ்சு பக்கேத் ரொட்டியோ ஏறக்குறைய முக்கால் அடி நீளத்துக்கு மணிக்கட்டு பருமனில் இருக்கும்.
பழைய ஹாலிவுட் படங்களின் பாரீஸ் நகர காட்சிகளில், ஈபிள் கோபுரம் பின்புலத்தில் தெரியத் தொப்பியும் நீண்ட ஓவர் கோட்டுமாக நடக்கும் பாரீஸ் நகரவாசிகளின் கைகளிலோ கக்கத்திலோ இந்த நீண்ட ரொட்டியும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் !

க்ளிஷே காட்சி என்றாலும் பிரெஞ்சு மக்களின் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் உணவுப் பொருள் இந்த பக்கேத் !
ஏறக்குறைய ஒரே அளவு மற்றும் ஒரே கால் கிலோ எடையில், ஒரே விலையில் நாடு முழுவதும் விற்கப்படும் அடிப்படை உணவுப் பொருள் பக்கேத் ரொட்டி. பிரான்ஸ் நாட்டின் வாங்கும் திறன் மற்றும் விலை வீக்கத்தை கணக்கிடும் குறியீடாகவும் பக்கேத் ரொட்டி விளங்குகிறது.
ரொட்டிக்கான பிரெஞ்சு பொதுப்பெயர் பேன் (Pain) …
தடி, சிறிய குச்சி, கழி என்பதான பொருள் படும் பிரெஞ்சு வார்த்தை பக்கேத் (Baguette)...
கழியைப் போன்று இருப்பதால் பக்கேத் ! தமிழ்ப் படுத்தினால் கழி ரொட்டி !
இந்த ரொட்டி ஏன் கழி போன்ற அமைப்பில் தயாரிக்கப்படுகிறது என்பதற்கான நிச்சயமான காரணம் தெரியவில்லை. நெப்போலியன் காலத்தில், அதிக அளவிலான ரொட்டிகளைக் குறைந்த இடப்பரப்பில் நிரப்பி ராணுவ வீரர்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாகவே கழி வடிவ தயாரிப்பு தொடங்கியது என்பது பொதுவாகக் கூறப்படும் காரணம் !

பிரெஞ்சுக்காரர்களின் மூன்று வேளை உணவிலும் பக்கேத்துக்குக் கட்டாய இடம் உண்டு.
அவித்தால் இட்லி சுட்டால் தோசை என்பது போல,
நீளமாக வகுந்து உள்ளே வெண்ணெய்யும் ஜாமும் தடவினால் காலை உணவு, கறித்துண்டையும் பாலாடை சீவல்களையும் திணித்தால் மதிய உணவு என பல்வேறு பரிமாணங்கள் பக்கேத்துக்கும் உண்டு !
மக்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்திலும் தெருவுக்கு ஒன்றாக நீக்கமற நிறைந்திருப்பவை புலாஞ்செரி (Boulangerie) எனப்படும் பேக்கரிகள். ரொட்டி கேக் தொடங்கி அவசரத்துக்கு வாங்க வசதியாகப் பால், சர்க்கரை வரை விற்கும் இந்த பேக்கரிகளின் பிரதான விற்பனை பொருள் பக்கேத் ரொட்டி !
சாதா பக்கேத் தொடங்கி விதவிதமான சாண்ட்விச் பக்கேத்துகள் வரை வாங்குவதற்காக மதிய உணவு நேரத்தின் போது ஒவ்வொரு புலாஞ்செரியிலும் அனைத்து தரப்பு மக்களையும் கொண்ட நீண்ட வரிசைகள் நிற்கும் !
வெண்ணெய் தடவிய பக்கேத்தில் பாடம் செய்த பன்றிக்கறியும் பாலாடைக்கட்டி சீவல்களும் திணிக்கப்பட்ட "Jambon beurre" எனப்படும் சாண்ட்விச் படு பிரபலம் ! நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் விற்பனையாகும் இந்த சாண்ட்விச், பிரெஞ்சுக்காரர்களின் எவர் கிரீன் பேவரைட் !
மாலையில் வீடு திரும்பும் பெரும்பாலானவர்களின் கைகளிலும் பக்கேத் கட்டாயம் !

உடலை ஊடுருவும் குளிர் கால மாலை வேளையில் சுடச்சுட வாங்கிய பக்கேத்தின் முக்கால் பகுதியைப் போகும் வழியிலேயே தின்றுவிட்டு மிச்சத்துடன் வீட்டுக்குப் போய் வாங்கி கட்டிக்கொள்ளுவது சிறுவர்கள் மட்டுமல்ல, சில கணவன்மார்களும் தான் !
மாமிச வகைகளையும் காய்கறிகளையும் ஒரு கை பார்த்தபடி உயர் ரக ஒயினை உறிஞ்சும் இடைவெளியில் ஒரு துண்டு பக்கேத்தை பணக்காரர்கள் விழுங்கும் அதே பிரான்சில் ஒரு துண்டு கறியுடன் ஒரு பக்கேத்தை சாப்பிட்டு பசியாற்றிக்கொள்ளும் அடித்தட்டு மக்களும் அகதிகளும் உண்டு !
நான் பிரான்ஸ் வந்த புதிதில் கண்ட ஒரு சம்பவம் ...
பாரீஸ் நகரின் செல்வந்தர்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில், ஒரு கடை வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துக்கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி.
மதிய உணவு நேரம்.
உயர்தர ஆடைகள் அணிந்த ஒரு மனிதர் வலது கையில் பிடித்திருந்த பக்கேத் ரொட்டியை முன்னால் நீட்டியபடி அந்த மூதாட்டியை நெருங்கினார்...

அந்த ரொட்டியை வாங்குவதற்காக அவள் இரு கைகளையும் ஏந்தியபடி,
"மெர்ஸி...மெர்ஸி..." எனப் பிரெஞ்சு மொழியில் நன்றி செலுத்த...
"பிச்சை எடுக்கும் இடமா இது ? நான் திரும்புவதற்குள் நீ இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்..."
என,
கையில் பிடித்திருந்த பக்கேத்தை அவளது முகத்துக்கு நேராக ஆட்டி ஆட்டி கோபத்துடன் எச்சரித்த அந்த மனிதர் கடைக்குள் சென்றுவிட்டார் !
அந்த மூதாட்டியின் முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றம்.
ஒரு பக்கேத்தின் விலை ஒரு யூரோ டாலருக்கும் குறைவு. தொண்ணூறு சென்ட்ஸ் எனப்படும் பைசாக்கள் தான் ! பாதி பக்கேத்தும் வாங்கலாம், வெறும் நாற்பத்தைந்து பைசாக்களுக்கு ! அந்த மனிதர் மீது கோபம் கொண்டதற்கு மாற்றாக அன்று நானே அவளுக்குப் பாதி ரொட்டியாவது வாங்கி கொடுத்திருக்கலாம்…
ஏனோ அந்த யோசனை அன்று எனக்குத் தோன்றவில்லை...
-காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.