வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் என்னுடைய நெருங்கிய தோழி அவள் அம்மாவிற்கு உடல்நலமில்லை என்றாள். மழையும் அதுவுமாக இருக்கிறது நீ இப்போது வர வேண்டாம். மழை விட்டதும் வா என்றாள். என் மகள் என்னை அழைத்த போது திருப்பூர் ஆத்தாவுக்கு உடம்பு சரியில்லை. மழை விட்டதும் போய் பார்த்து விட்டு வர வேண்டும் என்றேன். கண்டிப்பாக போய் வாருங்கள். அந்த காலத்தை மறக்க முடியுமா என்று கேட்டு நினைத்தாலே இனிக்கும் மலரும் நினைவுகளுக்கு போய் விட்டோம் இருவரும்.

என் மகள் சிறுமியாக இருந்தவரை ஏன் திருமணத்திற்கு முன்பு வரை விடுமுறைக்கு அங்கே தான் வருடாவருடம் ஒரு வாரம் போய் தங்கி வருவது வழக்கம். என்னையும் சொந்த மகளாக பாவித்து அன்பு செலுத்தியவர்கள் அவர்கள். நாங்கள் விடுமுறைக்கு போகும் போது என் தோழியின் அக்கா தங்கைகளின் குடும்பமும் கூடி விடும்.
இவர்கள் வந்திருப்பது தெரிந்து தோழியின் பங்காளி வீட்டினரும் குடும்பத்துடன் வந்து விடுவார்கள். உள்ளூரில் இருப்பவர்களும் இங்கே தான் இருப்பார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றிருக்கும். அது ஒரு புராதனமான மூன்று கட்டு வீடாதலால் அத்தனை பேரையும் அந்த வீடு தாங்கும். கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பேராவது சேர்ந்து விடுவார். அதுவும் கோடைக் காலமானதால் வயல் வரப்பு தொழில் என்று வெளியே போகும் ஆண்களும் இரவு உணவிற்கு வந்து விடுவது வழக்கம்.

சில சமயங்களில் உறவினர் வீடுகளுக்கு வண்டி கட்டிக் கொண்டு முக்காலும் இரவு உணவிற்கு போவதுண்டு. அது போன்ற சமயங்களில் அம்மாவின் கட்டளைப்படி இங்கேயிருந்து குடத்தில் தண்ணீர் மதியம் மீதமானவைகள் பழம் திண்பண்டங்கள் எல்லாம் கொண்டு போய் விடுவார்கள். ஏனெனில் அதுவும் கிராமம். இத்தனை பேருக்கும் தேவையானதை அவர்களால் கொடுக்க முடியாது.
நம்மை விட ஏழைகள் வீட்டிற்கு போகவும் வேண்டும். அவர்களுக்கு செலவும் வைக்கக் கூடாது என்பார்கள்.
அவர்கள் வீட்டில் போய் இறங்கியதும் இவர்கள் வீட்டு பெண்கள் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலை செய்து உண்டு விட்டு மகிழ்வுடன் திரும்புவர். அங்கே ஒருவருக்கு ஒருவர் இப்படித் தான் உதவிக் கொள்வது பழக்கம். யாருக்கும் வேலை பளுவும், அய்யோ விருந்தாளிகள் வருகிறார்களே என்ற அலுப்பும் இருக்காது.

அதுவும் ஒரு உறவினரின் வீடு அமராவதி ஆற்று ஓரத்தில் தென்னை மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவில் இருக்கும். தண்ணீரில் நீந்தி ஆட்டம் போட்டு இஷ்டத்திற்கு மண்ணில் உருண்டு புரண்டு விளையாடி சிறுவர்கள் முதல் இரு பேரர்களுக்கு தாத்தாவான மூத்த அக்காவின் கணவர் வரை இரு பிரிவாக பிரிந்து கபடி நொண்டி ஓடி பிடித்து விளையாடி நிலா சோறு உண்டு மகிழ்ந்து போவோம். ஊரை விட்டு கிளம்புகையில் பிள்ளைகளுக்கு அழுகையாக வரும். இன்னும் ரெண்டு நாள் இருந்து விட்டு போகலாம் என்று அழுவார்கள். அம்மா சொல்வார்கள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்று. இது வருடாவருடம் வழக்கமாக நடக்கும் நிகழ்வு.
இன்று பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் வாழந்து வந்தாலும் சேர்ந்து வளர்ந்த கதையை மறக்க மாட்டார்கள். அதை இன்றும் நினைவில் வைத்து பேசுவாள் என் மகள்.

ஆத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றதும் மூத்த அக்காவிற்கு அதாவது பிள்ளைகளின் பெரிய பெரியம்மாவுக்கு போன் செய்து ஆத்தாவின் சுக சௌக்கியத்தை கேட்டறிந்து கொள்வார்கள். கொஞ்ச நாளைக்கு அவர்கள் மத்தியில் இந்த பேச்சு ஓடும். வேலை பளுவில் ஓடிக் கொண்டிருக்கும் இளம் தலைமுறையினரை குடும்பத்துடன் சேர்த்து வைத்துக் கொள்வது வீட்டில் இருக்கும் முதியோர்களும் அவர்களுடனான சிறியவர்களின் மலரும் நினைவுகளும் தானே!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.