Published:Updated:

நான் கத்தினது ராஜா சாருக்கு கேட்டுருச்சு! - அமெரிக்க வாழ் தமிழரின் கச்சேரி அனுபவம் | My Vikatan

Illayaraja

நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த உச்சக்கட்டம் கார்த்திக் பாடிய விக்ரம் விக்ரம் பாடல்.. கார்த்திக் அந்த பாடலை குரலில் தீத்தூவி பாடிக்கொண்டே ஹா ஹா ஹா என கமல்ஹாசனைப் போலவே சிறப்பாக பாட, அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கியது..

Published:Updated:

நான் கத்தினது ராஜா சாருக்கு கேட்டுருச்சு! - அமெரிக்க வாழ் தமிழரின் கச்சேரி அனுபவம் | My Vikatan

நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த உச்சக்கட்டம் கார்த்திக் பாடிய விக்ரம் விக்ரம் பாடல்.. கார்த்திக் அந்த பாடலை குரலில் தீத்தூவி பாடிக்கொண்டே ஹா ஹா ஹா என கமல்ஹாசனைப் போலவே சிறப்பாக பாட, அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கியது..

Illayaraja

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி (#concert) ஒரு தெய்வீக அனுபவம். நான் சொல்வது உங்களில் பலருக்கு பெருமிகையாகத் தோன்றலாம். ஆனால் அந்த அனுபவத்தை நேரிலிருந்து அனுபவித்த ஒவ்வொருவரும் இதைத்தான் பேசிக்கொண்டிருந்தனர். மற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு இல்லாத ஒரு அனுகூலம் (advantage) இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளுக்கு இருக்கிறது. அது அந்த இசை உருவாக்கியவரே அந்த நிகழ்ச்சியை நடத்துவதனால் கிடைக்கும் ஒரு அனுகூலம். நாம் ஒவ்வொரு நாளும் ரேடியோவில் சீடியில் காரில் டிவியில் மொபைலில் கேட்டு ரசித்த பாடல்களை நுனித்தரம் (accuracy) குறையாமல் ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு சத்தமும் அப்படியே நேரில் இசைக்கக் கேட்கும் போது கிடைக்கும் பரவசத்தை சொல்ல வார்த்தைகள் தேடி தேடி இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன்..

இளையராஜா | Raaja - Live in Concert
இளையராஜா | Raaja - Live in Concert

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் என்னுடைய வீட்டில் இருந்து 45 நிமிட கார் பயண தொலைவில் உள்ள ஓக்லாண்ட் நகரில் உள்ள மிகப்பெரிய திடலில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடைய பல நிகழ்ச்சிகளை யூடியூபில் பார்த்து மகிழதிர்வுகளை(vibe) அடைந்திருக்கிறேன். எனவே அவர் நேரில் தோன்றிப் பாடும் முதல் பாடல் ஜனனி ஜனனி என்ற பாடல் என்று நன்றாகவே தெரியும் என்பதால் கச்சேரிக்கு சென்ற அந்த 45 நிமிட கார் பயணத்தில் ரிப்பீட் மோடில் அந்த பாடலை கேட்டுக் கொண்டே போயிருந்தேன்.

கச்சேரி தொடங்கியது .. குரு பிரம்மா குரு விஷ்ணு என ஜனனி ஜனனி பாடலின் தொடக்க வரிகளை சேர்ந்திசை கலைஞர்கள்(chorus) பாட வெள்ளை உடை வெள்ளை துண்டோடு என் கேமராவின் கண்களே கூசும் அளவுக்கு வந்து நின்றார் இசைஞானி. ஜனனி ஜனனி என்று அவர் பாட ஆரம்பித்ததும் என் மொத்த உடலும் உறைந்து கண்களில் கண்ணீர் திரண்டு நிற்க ராஜா தன் குரலை உயர்த்தி "சக்தி பீடமும் நீ" என்று பாடும்போது திரண்டு நின்ற மொத்த கண்ணீரும் வழிந்தோடி என் மொத்த உடலும் புல்லரிப்பில் சிலிர்த்துப் போனது.. அடுத்த 3 மணி நேரம் உன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கப் போகிறது என்று ராஜா என் தலையில் ஆணி அடித்தது போல இருந்தது.. வரும் வழியில் நான் ரிப்பீட் மோடில் கேட்டு வந்ததை விடவும் பல மடங்கு சிறந்த ஒலியில் இருந்தது அந்த பாடல். இருக்காதா பின்னே..! எனக்காக என் ராஜாவே நேரில் தோன்றி அல்லவா பாடிக்கொண்டிருக்கிறார்!

அடுத்து கார்த்திக் வந்து பாடிய நான் கடவுள் படத்தின் ஓம் சிவோகம் பாடலும், என் மனம்கவர் பாடகர் மனோ வந்து பாடிய ராம ராஜ்யம் படத்தின் ஜனதானந்த காரகா பாடலும் சேர்ந்து கொடுத்த தெய்வீக இசை அனுபவத்துக்கு பிறகு, அப்படி ஒரு அதிர்வை எவரும் எதிர் பாராத வகையில் ஒலிக்க தொடங்கியது ஹேராம் பாடலின் தொடக்க இசை! அப்படி ஒரு தரத்துல்லியமான (exact quality) இசை!

இளையராஜா
இளையராஜா

அடுத்து ஆட்டமா தேரோட்டமா பாடல் ஒலிக்க அதைப் பாடிய ஸ்வர்ணலதா சேச்சியை நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது அம்பா சம்பா ரம்பா தான் அம்பா பொண்ணு ரம்பா தான் என பின்னால் கடைசி வரிசையில் ஒரு இளைஞர் கூட்டம் ஒன்று மன்சூர் அலிகான் போல போதையில் ஆடிக்கொண்டு இருந்தது. அடுத்ததாக ஆசை நூறு வகை பாடலை பாடகர் முகேஷ் பாட, "முத்து ரதம் போலே சுத்தி வரும் பெண்கள்" என தொடங்கும் வரிகளை வாட்சப் ஸ்டேட்டஸ்களிலும், ரீல்ஸ்களிலும் கேட்டுப் பழகிய இளசுகளிலியிருந்து அந்த பாடல் வரும் காலத்தில் இளைஞராய் இருந்து இப்போது பெருசுகளான அத்தனை பேரும் மொத்தமாய் ஆடிய ஆட்டம் அப்பப்பா.. !

நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த உச்சக்கட்டம் கார்த்திக் பாடிய விக்ரம் விக்ரம் பாடல்.. சமீபத்தில் விக்ரம் படத்தின் வெற்றியை இன்னும் யாரும் மறந்திராத வேளையில் கார்த்திக் அந்த பாடலை குரலில் தீத்தூவி பாடிக்கொண்டே ஹா ஹா ஹா என கமல்ஹாசனைப் போலவே சிறப்பாக பாட, அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கியது.. பாடல் முடிந்ததும் அரங்கம் எழுப்பிய கரவொலிகளும் விக்ரம் விக்ரம் கோசங்களும் ராஜா வுக்கு கேட்டுவிட்டது, கார்த்திக்கை மீண்டும் அழைத்து மறுபடி பாட சொல்ல, அவர் மீண்டும் ஒரு முறை அந்த பாடலை பாடி முடித்து மறுபடியும் வந்த கரகோசத்துக்கு நடுவே ராஜா சொன்னார் "40 வருஷத்துக்கு முன்னாடி நான் போட்ட பாட்டு.." என்று ஆர்ப்பரிக்கும் அரங்கம் நோக்கி கை நீட்டினார்.

"மடை திறந்து" பாடலை மனோ வந்து சிறப்பாக பாடிய பின் அரங்கம் எழுப்பிய கரகோசங்களுக்கு பின்னர் சற்று அமைதியான வேளையில் "மனோ சார் லவ் யூ" என கத்த நான் ஓரளவு முன் வரிசையில் அமர்ந்திருந்ததால் என் குரல் தனியாக கேட்டது. உடனே ராஜா சார் மனோவை பார்த்து நீ திருப்பி சொல்ல மாட்டியா என குறும்பாக கேட்க மனோ தனக்கே உரிய சிறுபிள்ளை குரலில் "லவ் யூ டூ" என்றார். மொத்த கூட்டமும் என்னை பார்த்து "வாவ்...ஹே மேன்" என ஆர்ப்பரிக்க, பின் ராஜாவும் "நானும் உங்க எல்லாரையும் லவ் பண்ணுறேன்" என சொல்ல.. ஆத்தாடி என்ன ஒரு ஆனந்த அனுபவம் என் வாழ்வில்! (குசேலன் பட வடிவேலு "அண்ணா இன்னும் ஒரு தடவ சொல்லுங்க ன்னா." moment.. )

தமிழ் ரசிகர்களுக்கு சமமான அளவில் தெலுங்கு ரசிகர்களும் இருந்ததால் ஒரு தமிழ்ப்பாடல் ஒரு தெலுங்குப் பாடல் என மாற்றி மாற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது செல்லக்குரல் ஸ்வேதா மோகன் வந்து "நின்னுக் கோரி வர்ணம்" பாடலை தெலுங்கில் அருமையாகப் பாடி முடித்ததும் தெலுங்கு ரசிகர்களின் கரகோசத்துக்கு பிறகு ராஜா ஸ்வேதாவை பார்த்து கண் அசைக்க அவர் மீண்டும் தமிழில் அந்த பாடலின் முதல் சரணத்தைப் பாட தமிழ் உள்ளங்களும் குளிர்ந்தது!

இளையராஜா
இளையராஜா

அடுத்ததாக ச்சும் ச்சும் ச்சும்ச்சாக் என மாசி மாசம் ஆளான பொண்ணு பாடலின் இசை வந்ததும் கூட்டம் குதூகலமாக யாரும் எதிர்பாரா விதமாய் ராஜாவே அந்த பாடலை தெலுங்கில் பாட, அப்படி ஒரு பிரதியை(version) நான் இதற்கு முன் கேட்டதே இல்லை என ஆச்சரியப்பட்டு கேட்டுக் கொண்டிருந்த போது மேலும் ஒரு ஆச்சரியம்.. ராஜா அந்த பாடலை தமிழிலும் பாடி அசத்தினார்..

பிறகு மனோ வந்து எனக்கு மிகவும் பிடித்த ஓ பிரியா பிரியா பாடலை தெலுங்கில் பாட, சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம் என்ற பாரதியின் வரிகள் போல.. மனோவின் குரலில் அத்தனை அழகாய் ஒலித்தது தெலுங்கு. பாடி முடித்து அவரும் தன் பங்குக்கு தமிழில் "வீடு பொய்யடி வாழ்வு பொய்யடி " என தமிழிலும் பாடிய நேரத்தில் புல்லரித்து புல்லரித்து என் உடம்புக்கே அலுத்திருக்கும்..!

கடைசியாக எந்த சத்தமும் பின்னணி இசையும் இல்லாமல் மௌனமான அரங்கத்தில் ஆஆஆ என ஆரம்பித்தது அந்த இறுதிப் பாடல்.. தென்பாண்டி சீமையிலே என ராஜா தொடங்க அரங்கமும் ஒரு ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அந்த மௌனத்தை ரசித்துக்கொண்டு இருந்தது. ராஜா அந்த பாடலில் அவருடைய வரிகளை போட்டு.. ஏழேழு கடல் கடந்து இங்கு வந்த ரசிகர்களே! உங்களுடன் எப்போதும் என் இசை தானே..! என் இசை தானே...!" என்று பாடி முடிக்க அரங்கத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைத்தட்டி நன்றி சொன்னோம்.. நான் என்னையும் மறந்து "ராஜா சார் நீங்க நீடூழி வாழ்க.. தேங்க் யூ ராஜா சார் " என கோசமிட்டு, அந்த தெய்வீக அனுபவத்தில் இருந்து வெளியே வந்தேன்.

இளையராஜா
இளையராஜா

ஆனாலும் ஒரு சிறு மனக்குறை. இந்த குறையை முன்னவே எழுத தொடங்கினால் என் விரல்கள் நடுங்கி விடுமோ என்று கடைசியாக குறிப்பிடுகிறேன் என் இனிய எஸ் பி பி உயிரோடு இருந்திருந்தால் அவரையும் அவர் குரலையும் நேரில் கேட்டு சிலிர்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்! எனினும் இப்படிப்பட்ட வாழ்நாள் அனுபவம் ஒரு இசைக் கச்சேரியில் கிடைக்கும் என சிறிதளவும் நினைத்தது இல்லை. மீண்டும் கிடைக்குமா என்றும் தெரியவில்லை.. 80 வயதில் இந்த ராஜாவால் எப்படி ஒரு நொடியும் அமராமல், அசராமல் 3 மணி நேரத்துக்கு மேலாக நிகழ்ச்சி நடத்த முடிகிறது?! எப்படி இத்தனை வயது முதிர்வையும் மீறி இவ்வளவு ஆற்றல்?! அவர் சொல்வது போல் நிஜமாகவே அவருடன் சரஸ்வதி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் போல..

கலை!! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா அது!

- மாடசாமி மனோஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.