வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நாங்கள் எனது பிறந்த ஊரான தூத்துக்குடியில் ஒரு ரத வீதியில் உள்ள ஒரு வீட்டில் குடி இருந்தோம். வீடு கிராமத்து வீட்டை போல நீளமாக இருக்கும். ஒவ்வொரு அறைக்கும் பெயர்கள் உண்டு.
முதலில் வருவது தார்சா, பிறகு கீழ் திண்ணை, மேல் திண்ணை , ரேழி, சின்ன நடை, பாவுள், அதற்கு அடுத்து அடுக்களை பின்னர் முற்றம். இதில் நாங்கள் எல்லோரும் (மூன்று சகோதரிகள், இரெண்டு சகோதரர்கள்) மேல் திண்ணையில் படுக்க வேண்டும். திண்ணைக்கு தடுப்பு சுவர் இல்லாததால் குளிரை தடுக்க ஒரு சாக்கால் செய்யப்பட்ட ஒரு திரை போடப்பட்டிருக்கும். அதற்கு பின்னால் நாங்கள் வரிசையாக படுத்திருப்போம்.

விடிகாலை ஐந்து மணி அளவில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த திருஞானசம்பந்தர் மடத்தில் இருந்து ஒலிபெருக்கியில் “விநாயகனே வினை தீர்ப்பவனே...” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் என்னை எனது அக்கா "ஏய் எழுந்திரு, திருப்பாவைக்கு போக வேண்டாமா?" என்று எழுப்புவார்கள். உடனே வேகமாக எழுந்து தயாராகி வாசலுக்கு வந்தால் குளிரையும் பொருட்படுத்தாமல் ஐந்து நிமிட வேக நடை அல்லது ஓட்டத்தில் பஜனை மடத்தை அடைவோம்.
அங்கு திருப்பாவை பாடும் எல்லா குழந்தைகளும் வந்திருப்பார்கள். முதலில் சில ஸ்லோகங்களை பாடிவிட்டு அன்றைய நாளுக்கான திருப்பாவை பாடலை பாடுவோம். பிறகு எதிரே இருக்கும் தெப்பக்குளத்தை சுற்றிக்கொண்டு சிவன் கோவில் தெரு வழியாக மீண்டும் பஜனை மடத்தை அடைவோம். வழி நெடுக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக வருவோம். இதற்கு நடுவில் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு வரும் ஆண்கள் குழுவும் பஜனை மடத்தை வந்து அடையும் . அவர்களும் ஒன்றிரெண்டு பாடல்களை பாடுவார்கள்.

அதன் பிறகு பாவை குழுவில் உள்ள நாங்கள் 'வங்கக்கடல் கடைந்த' என்ற முப்பதாவது பாடலை பாட ஆரம்பிக்கும்போது அங்கே விநியோகம்செய்ய பிரசாதங்கள் சர்க்கரை பொங்கல், புளியோதரை முதலியன கமகமவென்று மணம் வீசிக்கொண்டு வர ஆரம்பிக்கும். நாங்கள் எல்லோரும் 'வங்கக்கடல் கடைந்த மாதவனே, கேசவனே' பாடலை ஜெட் வேகத்தில் பாடி முடித்து விட்டு பிரசாதம் வாங்க ஓடுவோம்.
இப்படியாக, உற்சாகமாக கழியும் மார்கழி மாதக்கடைசியில் திருப்பாவை போட்டிகள் நடத்தப்படும். இவற்றில் வயது வரம்புப்படி இருக்கும் மூன்று அணிகளில் நானும் எனது இரண்டு சகோதரிகளும் இருப்போம். அப்பொழுது எனக்கு ஏழு வயது இருக்கும், போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டு எல்லா பாடல்களையும் மனப்பாடம் செய்வேன். போட்டி நாள் அன்று நடுவர்கள் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழிச்சி என்று ஒவ்வொன்றிலிருந்தும் ஏதாவது ஒரு பாடலை கேட்பார்கள்.

அவர்கள் கேட்கும்போது ஒரு பயம் நெஞ்சிலிருந்து எழும், ஓ கடவுளே ! படித்தது எல்லாம் சரியாக சொல்ல வேண்டுமே , இன்னாரின் தங்கை சரியாக பாடவில்லையே ,என்று யாராவது குறை சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் தொண்டையிலிருந்து சத்தமே வராது. பின்னர் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மூன்று பாடல்களையும் சொல்லிவிடுவேன்.
வருடாவருடம் எப்படியாவது இரண்டு பரிசுகளாவது எங்களுக்கு கிடைத்து விடும். ஒரு முறை எனக்கு முதல் பரிசாக பெரிய பிளாஸ்டிக் பாக்ஸ் கிடைத்தது . அதற்கு மற்ற குழைந்தைகளின்பெற்றோர் 'ஓ! இத்துனூண்டு குழந்தைக்கு இவ்வளவு பெரிய பரிசா! டப்பாவுக்குள் அவளையே போட்டுடலாம் போலிருக்கே! என்று பொறாமையிலும் தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்திலும் பேசியதாக என்னுடைய அம்மா சொன்னதுண்டு.
அந்த டப்பாவை என்னுடைய கல்யாணத்திற்கு கொடுக்கும் பாத்திரங்களுடன் என் அம்மா எனக்கு அனுப்பிவைத்தார். அது இன்றும் என்னிடத்தில் உள்ளது. அதை பார்க்கும் போதெல்லாம் என் நினைவலைகள் பின்னோக்கிச்செல்லும்.
மார்கழி மாதம் என்றாலே நினைவுக்கு வரும் இன்னொரு விஷயம் வீட்டு வாசலில் போடும் பெரிய பெரிய கோலங்கள். இதில்மூத்த இரண்டு சகோதரிகள் கைதேர்ந்தவர்கள்.தினமும் கோல நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு எந்த கோலம் போடலாம் என்று முடிவு செய்வார்கள்.

காலையில் சீக்கிரம் எழுந்துகொண்டு வாசலுக்கு சென்று பார்த்தால் அதே கோலத்தை பக்கத்துக்கு வீட்டு வாசலில் கண்டு அதிர்ந்த நாட்களும் உண்டு.
நான் மிகவும் சிறியவள் என்பதால் எனக்கு கோலம் போட கிடைக்கும் இடம் எதுவென்றால் ,வாசலில் இருந்து வீட்டின் பின்புறம் செல்வதற்காக இருக்கும் 'முடுக்கு' தான். இருந்தாலும் அதையும் விடாமல் பாதை முழுவதும் எனக்கு தெரிந்த சிறிய சிறிய கோலங்களாக போட்டு நிரப்பி விடுவேன்.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்ற விஷ்ணு பகவானையும், ஆண்டாள் நாச்சியாரையும் நினைத்துக்கொண்டு அன்று நான் கற்று அறிந்த பாடல்கள், ஸ்லோகங்கள் இன்றும் மறக்காமல் இருக்கிறது.
ஆனால் இன்று இப்படியான எல்லா சந்தோஷங்களையும், ஞாபகங்களையும் மனதில் அசைபோட்டுக்கொண்டு எங்கோ ஒரு ஊரில் தனியாக யூ டியூபில் மார்கழி மாதத்தின் அடையாளங்களான திருப்பாவையையும், கோலங்களையும் ரசித்து வருகிறேன்.

எப்பொழுதும் பெண்கள் மாத்திரம் ஏன் தன்னுடைய விருப்பு, வெறுப்புகள், சந்தோஷங்கள், சிநேகிதிகள், எல்லாவற்றையும் பிறந்த ஊரில் விட்டு விட்டு,வேலைக்காகவும், திருமண பந்தந்தாலும் வேறு ஊரில்சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள் என வியக்கிறேன்.
காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாற வேண்டும் அல்லவா?
-கமலா ரமேஷ் ,
பெங்களூரு.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.