வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இதோ இன்றோடு 2022 நிறைவடைந்து நாளை 2023 பிறக்கப் போகிறது. வழக்கமாக அனைவரும் கேட்பார்கள் இந்த புத்தாண்டுக்கான சபதம் என்னவென.
என்னுடைய சுய அனுபவத்தில் ஏற்பட்ட வலிகளை எப்படி எதிர்கொண்டேன், மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தது என்பதை விவரித்து, வாசிக்கும் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தவறாமல் பின்பற்ற வேண்டுமென கூறிடும் உணர்வுப்பூர்வமான உண்மைகளை இந்த கட்டுரையில் காண்போம்.
அது 2020ம் ஆண்டு. மார்ச் மாதம் கொரோனோ பெருந்தொற்று ஆரம்பித்த சமயம் அது. ஊரடங்கு தொடங்கி உலகடங்கு என்ற நகர்வினை நோக்கிய காலம்.
கொரோனா பெருந்தொற்றினை தடுக்கும் முன்களப் பணியாளனாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். சீனா வூகான் மாகாணம் சென்று மருத்துவ கல்வி பயின்ற பலரும் நாடு திரும்பிய நேரம். நேரடியாக அவர்களுடைய இல்லம் தேடிச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை நலக்கல்வி வழங்க வேண்டிய சூழல்.
ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்ட நிலை.

தினமும் இரவு நேரத்தில் மாவட்ட எல்லையில் நின்று வெளி மாநிலங்களில் இருந்து லாரி போன்ற வாகன ஓட்டுநர்களை நிறுத்தி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வது, முக கவசம் தந்து அணியச் சொல்வது சமூக இடைவெளியை தவறாது பின்பற்றச் சொல்வது போன்ற தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டேன்.
தினமும் வீடு திரும்பும் நான் நேராக குளியலறை சென்று முழுமையாக உடையோடு கிருமி நாசினி தெளித்த நீரில் குளித்த பின்பே வீட்டிற்குள் வந்து குழந்தைகளோடு அளவாளவிய காலம். குழந்தைகளின் நலன்கருதி ஊருக்கு அனுப்பிய பின்பாக முழுமையாக கொரோனோ பெருந் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டேன்.
எப்போதுமே இரு சக்கர வாகன பயணத்தின் போது தவறாமல் தலைக்கவசம் அணிந்தே பயணிக்கும் பழக்கம் கொண்டவன் நான். எப்போதுமே தலைக்கவசம் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் இருக்கும். ஏதேனும் மளிகை கடைக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை எடுத்தாலும் தவறது தலைக்கவசம் அணிந்து கொள்வேன்.

வாழ்க்கை துணையையும் குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பிவிட்டதால், அவர்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் மேலிட ஒரு நாள் இரவு இரு சக்கர வாகன பயணம் மேற்கொண்டேன். லேசான சாரல். ஒரு வேகத்தடையில் என்னுடைய வாகனம் ஏறி இறங்குகையில் வண்டி இடறி கீழே விழ நானும் தவற கீழே விழுகிறேன். எப்போதும் போல் தலைக்கவசம் அணிந்திருந்த நான் அப்போதும் அணிந்திருந்தேன். ஆனால் தலைக்கவசத்தின் Neck Lock எனும் கழுத்துப் பகுதியில் போட்டு Lock போடாத நிலை.
எப்போதுமே தலைக்கவசம் தவறாது அணியும் நான் ஒரு போதும் தலைக்கவசத்தின் கீழாக உள்ள பட்டையில் உள்ள Neck lock போட்டது இல்லை. ஆம் இன்றைய நாளில் கூட பலரும் இரு சக்கர வாகன பயணத்தின் போது தலைக்கவசத்தை முன்பாக உள்ள எரிபொருள் கலன் மீதோ, பக்கவாட்டு கண்ணாடிக்கான கம்பியின் மீதோ வைத்து பயணிக்கிறார்கள். தலை மீது அணிந்த பலரும் தலைக்கவச Neck Lock போடாமலே பயணிக்கிறார்கள்.
நான் தலைக்கவசம் அணிந்தும் தலைக் கவசத்தின் Neck Lock போடாத நிலையில் கீழே விழுந்ததில் தலைக்கவசம் தனியாக கழன்று சென்றுவிட எனக்கு தலைக்காயம்.

தலைக்காயம் காரணமாக ரத்தம் வழிந்த நிலையில் நான் எனது சுய நினைவிழந்த நிலையில் சாலையில் கிடக்க , நான் வண்டியிலிருந்து விழுவதை கவனித்த ஒரு காவலர் ஒருவர் வந்து என்னை தூக்கி அவரே 108 அவசர வாகனத்திற்கு தகவல் கூறிட அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்க, அங்குள்ள மருத்துவர்கள் எனக்கு தேவையான அவசர சிகிச்சையளிக்க என்னுடைய உடையில் இருந்த எனது அடையாள அட்டை உதவியுடன் குடும்பத்தினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் வந்து விட , சுய நினைவிழந்த நிலை தொடர... Tracheostomy எனும் சிகிச்சை மூலமாக கழுத்துப் பகுதியில் பொருத்தப் பட்ட குழாய் மூலமாக உணவளிக்கப் பட சுய நினைவிழந்த தொடர... அங்கிருந்த மருத்துவர்கள் எனது குடும்பத்தினர் ஆலோசனைப்படி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
சி.எம்.சி கொண்டு செல்லப்பட்ட நான் சுமாராக இரண்டரை மாத காலமாக சுய நினைவிழந்த நிலையில் இருந்த நான் அதன் பின்னராக மெதுவாக சுய நினைவு திரும்பிய நிலையில் எனக்கு அங்கே Physiotherapy, Occupational therapy, Speech therapy போன்ற இயன்முறை சிகிச்சைகள மூலமாக மீண்டு வர முடிந்தது. நான் சுய நினைவு திரும்பிய நிலையில் என்ன பேசுவேன் என்ன எழுதுவேன் என்று எனது குடும்பத்தினர் ஆவலோடு காத்திருந்த நேரத்தில் எழுது கோலை மிக நன்றாக பிடித்து எனது கையொப்பம், எனது குழந்தைகளின் பெயர்களை எழுதினேன்.
மேலும் " எனக்கொரு ஆனந்த விகடன் புத்தகம் வாங்கி தர முடியுமா, நான் படிக்க வேண்டும் " என்று கேட்டேனாம். தலைக்காயம் காரணமாக ' நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ' படம போன்று சில ஞாபகங்களை இழந்திருப்பேன் என கருதிய எனது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆச்சரியமான ஆனந்தம், நான் ஆனந்த விகடன் வேண்டுமென கேட்டதில். அந்த அளவுக்கு ஆனந்த விகடன் என்னுடைய உணர்வில் கலந்த ஒன்றாக இருந்துள்ளது.

விபத்துக்கு முன்பாக நான் என்னுடைய வரவு செலவு யாரிடம் எவ்வளவு பணம் எதன் பொருட்டு கொடுத்தேன், வாங்கினேன் போன்ற தகவல்களை எனது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ள தவறிய நிலை, குறைந்தபட்சமாக ஒரு தினசரி டைரி மூலமாக இத்தகைய தகவல்களை எழுதி வைக்காத நிலை அதனால் ஏற்பட்ட குடும்ப பொருளாதார சிக்கல்கள் ஏராளம். என் மீதான உண்மையான அன்பான அக்கறையான மனிதர்கள் யார், எத்தகைய தவறுகளை தவிர்க்க வேண்டுமென உணர்வுப்பூர்வமாக உணர்ந்த நாட்கள் இவை.
இடைப்பட்ட காலத்தில் ஓ. டி.டி , வெப்சீரிஸ் , மாறி விட்ட அரசியல் களம் என ஏறத்தாழ 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ' என்ற நிலையை நிஜமாக உணர்ந்த நாள்.
மருத்துவர்கள் பலரும் ஆச்சரியமாக நலம் விசாரித்ததோடு ' இத்தகைய விபத்தில் இருந்து நீங்கள மீண்டு வர காரணமாக இருந்தது உங்களுடைய தன்னம்பிக்கையே, எனவே தலைக்காயத்தில் Stage-1 என்ற நிலையே. நிறைய வாசிக்க எழுத மூளைக்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக விரைவாக முழுமையாக பழைய மாதிரியாக மாறி விடுவீர்கள என்றனர். அந்த வகையல் இந்த விபத்துக்கு முன்பாக விகடனில் இடம் பெற்ற 'சொல்வனம் ' பகுதியில் எனது கவிதை, வாசகர் மேடை பகுதியில் எனக்கான மேடை, ஜீனியர் விகடன் கழுகார கேள்வி பதில் பகுதியல் எனது கேள்விகள் என இடம் பெற்று புத்துணர்சசி தருவதாக அமைந்தது. இந்த 2022 வருடம் எனக்கு மறு உயிர் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.

கொரோனா தடுப்பூசிகளை போட்டு நலமாக உள்ள எனக்கு இதோ இந்த #MyVikatan என்னும் தளம் மற்றுமொரு மருந்தாக அமைந்துள்ளது.
எனவே புதிதாக பிறக்கவிருக்கும் புத்தாண்டில் அனைவருமே கட்டாயமாக இரு சக்கர வாகன பயணத்தின் பொழுது தலைக்கவசம் அணிவோம், தலைக்கவசத்தின் Neck Lock மறக்காமல் போட்டுக் கொள்வோம், தினமும் காலையில் உடற்பயிற்சியோடு, யோகா பயிற்சிகளையும் செய்வோம். புத்தகங்களை வாசிப்போம், நமது வரவு செலவுகளை நமது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்வோம், தினசரி டைரி மூலமாக எழுதி வைக்க வேண்டுமெனவும், இதனை இந்த புத்தாண்டுக்கான சபதமாக, உறுதிமொழியாக ஏற்போம் என்று கூறி விடை பெறுகிறேன் நன்றி.
அன்புடன்........
வீ.வைகை சுரேஷ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.