வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
2023 புது வருடத்தின் என் முதல் நாள் அனுபவம் இதோ. நேற்றிருந்த உலகம் இன்றைக்கு மாறிவிடப் போகிறதோ எனத் தோன்றும்படி வாட்ஸ் ஆப்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அதே உணர்வுடன் புதிய வானம் புதிய பூமி என்று பாடியபடியே , கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று கிளம்பினேன்.
வெளியில் வந்து பார்த்தபோது, வானத்தின் நிறமும், பூமியின் நிறமும் நேற்றுப் பார்த்த மாதிரிதான் இருந்தது. தெருக்களில் அதே வாகன போக்குவரத்துக்கள், மெட்ரோ ரயில் வேலைகளுக்கு இன்று விடுமுறை போலும்..ஆட்கள் இல்லை,, எதையோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மக்கள், பஸ் ஸ்டாப்பில் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் நபர்கள்,, காய்கறிகள் மற்றும் பழ வண்டிகள், உயிரிழந்த நீர் நில வாழ் உயிரினங்களின் விற்பனைக் கூடங்கள், ஆட்டோ அண்ணாக்களின் காத்திருப்புக்கள், தலைமேல் பறக்கும் மெட்ரோ ரயில், கண்ணில் தென்பட்ட விமானங்கள், ஒரு ஆம்புலன்ஸ், சிக்னலை மதிக்காத வாகனஓட்டுநர், பைக்கில் சீறிப்பாய்ந்த புள்ளிங்கோ... என நகரத்தின் சாயல் இன்றும் அப்படியே தான் இருந்தது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் , துப்புரவுப் பணியாளர்களின் சுத்தம் செய்யும் பணிகளும்.,, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு காவல் அதிகாரிகளின் பணிகளும் எப்போதும் 24/7 தான்.
ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றபோது, அங்கு அரசு பள்ளி மாணவர்கள் சிலர் கூட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர். சமீபமாக அரசு பள்ளியில் பயிலும் சில மாணவர்களின் அட்டகாசங்களைப் பற்றிய வீடியோக்களைப் பார்த்து பதறிய நெஞ்சம், இன்று சில மாணவர்கள் கோவிலில் வந்து சர்வீஸ் செய்யும் காட்சியைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இவற்றையெல்லாம் ஊடகங்கள் எடுத்துக் கூறுவதில்லை.
முழுவதுமாக பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அஞ்சனை மைந்தனின் தரிசனம் சீக்கிரமே கிடைத்ததில் மனம் நிறைந்தது.

அப்படியே நகரை வலம் வந்ததில் புத்தாண்டுக்கான உற்சாகங்கள் எங்கும் தென்படவில்லை.நேற்று இரவே கொண்டாடி முடித்து விட்டார்கள் போலும்.. பாண்டிபஜார் நடைபாதையில் அதையே வீடாக பயன்படுத்தும் நபர்கள் சிலர் உறங்கிக் கொண்டும் , சிலர் பேசிக் கொண்டும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர்.. எல்லாக் கடைகளும் திறந்திருக்க வாடிக்கையாளர்களின் வரவுக்காக பணியாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
வழக்கம்போல் உயர்தர சைவ ஹோட்டல்கள், மனிதர்களால் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தன. வானொலியில் திரும்பத் திரும்ப 2022 ன் டாப் பாடல்கள் வந்துக் கொண்டிருந்தன. ஆனாலும் இடையில் ஆலுமா டோலுமா பாட்டும் வந்தது.

நேற்றைய அதே நகரம் தான் இன்றும்..அப்போது புத்தாண்டு என்பது என்ன? எதற்கிந்த கொண்டாட்டங்கள்? என்றால்... வாழ்க்கையை உற்சாகமூட்ட, ஒரு மாறுபட்ட மனநிலையை நம்மில் ஏற்படுத்த அவ்வளவு தான்.. கொண்டாட்டங்கள் வாழ்க்கையை ஆனந்தமாக்கும். ஆனந்தமாய் வாழுவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஜன்னல் ஓரம் வந்து நின்ற காக்கைகளுக்கு இன்று வழக்கத்திற்கு மாறாக இனிப்பு வைத்ததால், அவைகளும் ஹாப்பி அண்ணாச்சி தான். அதை சாப்பிட்டுவிட்டு அவைகள் காகா எனக் கரைந்தது, எனக்கு அவைகள் ஹேப்பி நியூ இயர் என்று கூறியது போலவே தோன்றுகிறது..
-Mrs. J Vinu
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.