வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நேரங்கிடைக்கும் போதெல்லாம் நடராஜண்ணணன் வீட்டில் ஆஜராகி விடுவேன். அவரைப் பார்த்து நான்கைந்து நாட்களாகி விட்டன. எனவே காலையில் டிபன் முடிந்ததும், அவரை ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விடலாம் என்று போனேன். அன்று சனிக்கிழமை. எனக்கும் விடுமுறை. இது அபீஷியல் விடுமுறை இல்லை! வேறு விதமானது.
சென்னையில் பணி புரியும் எனக்கு,அப்பாவின் இறப்பு,போன் மூலம் வந்தது. இப்பொழுது போல செல் காலம் இல்லை அது!அவசரத்திற்கு டிரங்க் காலும், ஆரோக்கியம் விசாரிக்கக் கடிதப் போக்குவரத்தும் இருந்த காலம்! அப்பா, திடீரென இறந்து விட்டார். சாதாரண ஜூரம் என்று ஹனிபா ஹாஸ்பிடல் சென்று,காரில் இருந்து தானாகவே இறங்கி,வாசல் வரை சென்றவர் மயங்கி விழ, அண்ணனும், அம்மாவும் பின்னாலே தடதடக்க, டாக்டரே ஓடி வந்து பல்ஸ் பார்த்து விட்டு,உதட்டைப் பிதுக்கியிருக்கிறார். ஒலிம்பிக் போட்டிகளில், வினாடிகளைக் கூடப் பிரித்து அளவிடும் நிலை வந்து விட்டதைப்போல, அப்பாவின் மரணத்தை அவ்வளவு விரைந்து எமன் முடித்து விட்டான். கடைக்குட்டி என்பதால் என் மீது அனைவருக்குமே பாசம் அதிகம். அதிலும் அப்பாவின் பாசம் அளவிட முடியாதது!

நான் ஊர் சேர்ந்தபோது உறவுகள் அனைவரும் வந்து விட்டனர். மூன்று அண்ணன்களும் எனக்காக எதையும் விட்டுக் கொடுப்பவர்கள். தில்லை மாமாதான் என்னிடம் பேசினார்.
‘ஏய்.. ஒன்னால லீவு போட முடியும்னா சொல்லு. இல்லாட்டா அவனுங்க யாரையாவது கொல்லி போடச் சொல்லலாம்’. ‘இல்ல மாமா.. தாய்க்குத் தலைமகன், தந்தைக்குக் கடை மகன்’ என்பதுதானே வழக்கு. இந்தக் கடமையையும் செய்யலைன்னா எப்படி? நானே செய்யறேன்!’ என்று நான் சொல்லிய பிறகு, மாமா பிறவற்றைப் பார்த்துக் கொண்டார்.
கொல்லி வைத்தவர்கள் ஆறு தாண்டக் கூடாது என்றார்கள்.
-தாண்டவில்லை.
இருட்டிய பிறகு வெளியே போகக் கூடாது என்றார்கள்.
-போகவில்லை.
புலாலைத் தொடக்கூடாது என்றார்கள்
-தொடவில்லை.
ஊறுகாய், வற்றல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டுமென்றார்கள்.
-தவிர்க்கப்பட்டன.
பாயில் படுக்கக் கூடாது என்றார்கள்.
-படுக்கவில்லை.
15 ஆம் நாள் வரை ஊரில் தங்க, விடுப்பு விண்ணப்பம் அனுப்பி விட்டுத் தங்கி விட்டேன்.
தினமும் யாராவது வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள்.சனிக் கிழமை மட்டும் யாரும் வர மாட்டார்கள். அதைத்தான் விடுமுறை என்று மேலே குறிப்பிட்டேன்.
‘என்ன தம்பி! நாலைஞ்சு நாளா இந்தப் பக்கத்லயே காணோம்?சென்னை போய்ட்டீங்கன்னா அப்புறம் எப்பவோ. அப்பா கவலையை விடுங்க. அவரு நல்லவரு தம்பி. பொசுக்குன்னு போய்ட்டாரு. ம். என்னை மாதிரியா?’ என்று சொல்லும்போதே அவர் கண்கள் நீர் கட்டின.
கைகள், மரத்தாலான காலைத் தடவின. ஆம். அவருடைய வலது கால் தொடைக்குக் கீழே இல்லை. முழங்காலுக்குக் கீழே சதை குரூப்பித்து வலி தர, உறவினரைப் பார்க்கத் தஞ்சாவூர் மருத்துவமனை சென்ற அவர், மருத்துவரிடம் காண்பிக்க, அந்த மருத்துவர்தான் அது கான்சரின் ஆரம்பம் என்றார். சென்னை மருத்துவமனை செல்ல அறிவுறுத்தினார். மூன்று மாத சிகிச்சை பலனளிக்கவில்லை. உயிரைக் காப்பாற்ற, காலைக் காவு கொடுக்க வேண்டுமென்றார்கள். செகண்ட் ஒபீனியனும் அதையே ஊர்ஜிதப்படுத்த, தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனை, அவருக்கும் காலுக்கும் உள்ள தொடர்பைத் துண்டித்தது. ஒரு யூனிட் ரத்தம் கொடுத்து விட்டு நானும் கூடவே இருந்தேன். அந்த நாள் மறக்க முடியாத நாள். மயக்கம் தெளிந்ததும் அவர் கால் வலியால் துடித்ததை இன்றைக்கு நினைத்தாலும் மனது வலிக்கிறது.
ஆனாலும் அவர் அயர்ந்து விடவில்லை; பயந்து விடவில்லை; ஒதுங்கி ஓரமாக உட்கார்ந்து விடவும் இல்லை; துணிச்சலுடன் தன் பழைய தொழிலையே தொடர்ந்தார். சைக்கிள் ரிப்பேரிங் உட்கார்ந்து செய்யக்கூடிய பணிதானே.நானும் அவரும் விபரம் தெரிந்த நாளிலிருந்து நண்பர்கள்.

பக்கத்து வீட்டு சங்கரனும் அவர் மூலமாக நண்பரானார். சங்கரன் என் தந்தையின் வயதில் உள்ளவர். பண்பையும், அன்பையும் அவரிடந்தான் கற்றுக் கொள்ள வேண்டும். பிரியத்தை சீர்காழி மழையாகப் பொழிவார், இடைவெளி இல்லாமல்; வேகம் குறையாமல். காதுமட்டும் கொஞ்சம் மந்தம். உரக்கப் பேச வேண்டும். அவரும் உரக்கத்தான் பேசுவார். பண்ணையில் மணியம் பார்த்ததால், எப்பொழுதும் பிசியாக இருப்பார். அவர் சைக்கிளுக்கு ஓய்வு குறைவுதான். அந்தக் காலத்தில் அந்த இரும்புக் குதிரைதான் எங்களின் வந்தியத்தேவன் குதிரை!
பேச்சு, எப்பொழுதும் போல, அரசியல், சினிமா, என்று சுற்றி இறுதியாக உள்ளூர் பிரச்னையில் வந்து நின்றது.
‘தம்பி…முந்தா நாளு நடந்த நிகழ்ச்சி நாம ரொம்ப உஷாரா இருக்கணும்னு சொல்ற மாதிரி இருக்கு…’
‘அப்படியா?என்னண்ணன் ஆச்சு?எதுவும் ரொம்ப சீரியசா?’
‘ஒரு விதத்ல அப்படித்தான். நம்ம பாண்டி ரோட்ல, ஒத்தைப் பனை மரத்தடியில சிலரை மறைச்சு வழிப்பறி நடந்ததா முன்னாடி சொன்னாங்க.இப்ப பார்த்தீங்கன்னா,முந்தா நாளு இருட்டுற நேரத்ல,நம்ம சங்கரன் அண்ணனை ஒருத்தன் நடு மதகடி வரைக்கும் தொறத்திக்கிட்டு வந்திருக்கான்.அவரு பாவம் சைக்கிளை வேகமா மிதிச்சிக்கிட்டு வந்து தப்பிச்சிட்டாராம்.மதகைத் தாண்டி அவன் வரலயாம்.அப்படியே சைக்கிளைத் திருப்பிட்டானாம்!நேரா எங்கிட்ட வந்து,மூச்சு இறைக்க இறைக்க விஷயத்தைச் சொல்லிட்டுப் போனாரு!’
நான் வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்ததும் அவர் ஒன்றும் புரியாமல் விழித்தார்!
‘அந்த ஒருத்தன் நான்தாண்ணே! நான்தான் அவன்!’
‘ உண்மையாவா சொல்றீங்க? வெளையாடாதீங்க தம்பி… நீங்க எங்க அங்க’
‘ஆபீசுக்கு ஒரு டெலிகிராம் கொடுக்கப் பாண்டிக்குப் போனேன். திரும்பி வந்த போதுதான் சங்கரன் அப்பா முன்னாடி வந்ததைப் பார்த்தேன். சைக்கிளைக் கொஞ்சம் வேகமாக நான் மிதிக்க,அவர் அதைவிட அதிக வேகமாக மிதிக்க, என்ன அவசரமோ என்றபடி, விசாரிக்கலாமே என்ற எண்ணத்தில் என் பெடலின் வேகத்தைக் கூட்ட, அவர் மேலும் வேகமெடுத்து விட்டார். நடு மதகடி வந்ததும், வழக்கம் போல அங்கு சைக்கிளை நிறுத்தி விட்டு லெட்ரீன் போயிட்டேன். மெல்லத்தான் திரும்பி வந்தேன்.அவர் ஏதோ அவசரமாக வந்ததாகத்தான் நான் எண்ணினேன்.மசண்டை நேரம் என்பதால் என்னை அவரால் அடையாளம் கண்டிருக்க முடியாது என்றுதான் நினைத்தேன். பாவம்! அவர் வேறு விதமாக நினைத்துப் பயந்து…’
இப்பொழுது என் சிரிப்பில் நடராஜண்ணனும் கலந்து கொண்டார்! எப்பொழுது அதை நினைத்தாலும் ஒரே சிரிப்புத்தான்.. என்ன ஒரு வருத்தம். என்னோடு சேர்ந்து சிரிக்க நடராஜன் அண்ணனும், சங்கரன் அப்பாவும் இப்போது உயிரோடு இல்லை!
‘நான் அவனில்லை’ என்ற கதைகளைக் கேட்கும் போதெல்லாம் என் மனதுக்குள் ‘நான்தான் அவன்!’ என்ற சப்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.