வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மே மாதம் என்றதும் பெரிய லீவு என்னும் கோடை விடுமுறையை எண்ணி மனசு குதூகுலமாகி விடும். மூன்று மாமாவின் பிள்ளைகள், நாங்கள், சித்தியின் பிள்ளைகள் என பதினைந்து சின்ன உருப்படிகள். பெரியவர்கள் பத்து பேர். மூன்று கட்டு வீடானாலும் இடம் கொள்ளாமல், பூனைக்குட்டி போல ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு திரிவது.
ஒரு ஓட்டு வீடு, மஞ்சள் ஒளி உமிழும் ஒற்றை குண்டு பல்பு, குட்டையிலிருந்து குடம் குடமாய் வீட்டில் கொண்டு சேர்த்த தண்ணீர், மதியம் தாமரை இலையில் சுடச்சுட சாப்பாடு, திண்ணையில் வரிசையாக படுத்து மதியம் ஒரு கோழி தூக்கம், காவலுக்கு எந்நேரமும் கையில் யாரையும் அடித்திராத ஆனால் அடிப்பாரோ என்று பயமுறுத்தும் புளிய விலார் எடுக்கும் சின்ன மாமா, சிறுமியாய் நான், மாமன் மக்கள் சித்தியின் மக்கள் என பெரிய பட்டாளம்.

களத்து மேட்டில் வட்டமாய் உட்கார்ந்து நிலவொளியில் சித்தி எங்கள் சின்ன கைக்கு ஏற்றார் போல் சின்ன சின்னதாக உருட்டி வைத்து, ஒரு பிடி கூடுதலாக உண்ட உணவு, தொட்டுக்கொள்ள ஒன்றுமிருக்காது. பக்கத்தில் உள்ளவர்களை தொட்டுக்கிறேன் என்று அருகிலுள்ளவரை தொட முயல, எச்சக்கையால் தொடாதே என அவர்கள் அலற, கையிலும் காலிலும் மருதாணியிட்டு களத்து மேட்டில் பனவோலை பாய் விரித்து படுத்து, வானத்தைப் பார்த்துக் கொண்டு அமெரிக்காவில் நூறு மாடி கட்டிடத்தில் நூறாவது மாடி மட்டும் நகரும் என்று நான் விடும் கதைகள், பேய் கதை சொல்லி பயமுறுத்தும் மல்லிகா...நினைத்தாலே இனிக்கும் இளமை நினைவுகள்..மறக்க மனம் கூடுதில்லையே.
பள்ளித் திறக்கப் போகும் அன்று விடிகாலை பேருந்திற்கு கிளம்பி சித்தி போட்டுக் கொடுக்கும் தோசையின் வாசனையில் இன்னும் ரெண்டு கூட கேட்டு, சித்தியின் தோசை மணம் வேறு எங்குமில்லை இன்றளவும்.

உன்னை விட்டு போக மாட்டேன் என்று சித்தியைக் கட்டிக் கொண்டு அழ அடுத்த காலாண்டு லீவுக்கு வர தானே போறே என்று மாமா இழுக்க...
சித்தி என்பவள் தன்னலமில்லாத அன்பில் அம்மாவை விட ஒரு படி கூடுதலானவளாகத் தான் இருப்பாள் நம் எல்லோர் நினைவில். அப்படித் தானே.
மாமாவுக்கு 97 வயது. இன்னும் 3 வருஷம் எப்படியாச்சும் தன்னக்கட்டு. 100 ஐ ஜமாய்ச்சிடலாம்னு சொல்லியிருக்கோம்.
நண்பர்கள் உங்களுக்கும் அழைப்பு உண்டு. தயாராயிருங்கள்.!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.