வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
திரைப்படப்பாடல்களை ஒரு காலத்தில் வானொலி மூலம் ரசித்துக் கொண்டு இருந்தோம். இன்னும் சொல்லப்போனால் இலங்கை வானொலி நம் வாழ்வுடன் கலந்து இருந்தது. இப்போது 55 வயதைக் கடந்தவர்களுக்கு இது புரியும்.
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட சில பாடல்கள் இனிமையானவை. அவை இடம் பெற்ற திரைப்படங்களை நான் பிற்பாடுதான் பார்த்தேன். அப் பாடல்களைக் கேட்கும் போது அப்பாடல் காட்சியில் நடித்த நட்சத்திரம் யாராக இருக்கும் என்று நான் கற்பனை செய்து வைத்ததற்கும் உண்மைக்கும் சம்பந்தம் இல்லாமல் அதுவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.

உதாரணமாக
சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா என்ற பி பி சீனிவாஸ் குரலைக் கேட்டவுடன் நான் கற்பனை செய்தது ஜெமினி கணேசனை. ஆனால் உண்மையில் வி. நாகையா!
கூந்தலிலே நெய் தடவி பாடல் ஜானகியும் ஜேசுதாசும் பாடியது. பாசமுள்ள அந்த 'சித்தப்பா ' யார் என்ற கேள்விக்கு எழுபதுகளின் இறுதியில் ஒரு நாள் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் விடை கிடைத்தது. அவர் கொஞ்சமும் எதிர்பாராத நட்சத்திரம் - நாகேஷ்!
தானே முளைத்த மரம் என்ற பாடலை இதோ எந்தன் தெய்வம் படத்தில் உணர்ச்சிகரமாக டிஎம்எஸ் பாடி இருப்பார். நான் படத்தின் ஹீரோ முத்துராமனை கற்பனை செய்ய, உண்மையில் பாடி நடித்தவர் மேஜர் சுந்தரராஜன் !
புது முகங்கள் நடித்த ராகபந்தங்கள் என்று ஒரு படம் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்து வந்த சுவடு தெரியாமல் போய் விட்டது. அதனால் படத்தை பார்க்க இயலவில்லை. ஆனால் அதில் 'நலம் தருவாய் என் தாயே மீனாட்சி' என்ற குன்னக்குடி இசையில் ஜேசுதாஸ் பாடிய பாடல் இனிமையாக இருக்கும். நான் படத்தில் நடித்த ஹீரோவை கற்பனை செய்து வைத்திருந்தேன். சமீபத்தில்தான் யூடியூப்பில் பார்த்தேன். பூஜை அறையில் பாடுவது போல் அமைந்த இந்த பாடல் காட்சியில் நடித்தவர் வி. கே. ராமசாமி!
1982 பாரதி நூற்றாண்டு விழா என்பதால் அந்த ஓராண்டு காலம் இலங்கை வானொலியில் மதியம் ஒலிபரப்பில் முதல் பாடலாக பாரதியார் பாடல் ஒன்றை ஒலி பரப்புவார்கள். அவ்வாறு அடிக்கடி ஒலி பரப்பப்பட்ட ஒரு பாடல் எஸ் பி பி பாடிய 'நல்லதோர் வீணை செய்தே' அப்போது வெளியான வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம் பெற்றது. நான் கமலஹாசன் பாடுவது போல் இருக்கும் என நினைக்க திரையில் சீரியசாக பாடி நடித்தவர் பூர்ணம் விஸ்வநாதன்!
எப்படியோ கண்ணதாசனும், வாலியும், புலமைபித்தனும் கேவிஎம்மும், ஜி.ராமனாதனும், எஸ்எம்எஸ்ஸும், விஸ்வநாதன் ராமமூர்த்தியும் வி.குமாரும், சங்கர் கணேஷும், விஜயபாஸ்கரும் இன்ன பிற பழைய திரைப்பட கலைஞர்களும் பாடக பாடகியரும் இன்னமும் என்போன்ற எத்தனையோ ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்!!! இலங்கை வானொலியில் இவர்களின் படைப்புகளை கேட்ட நாட்கள் வாழ்வின் பொன்னாட்கள்!!!
-எஸ். சங்கரநாராயணன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.