வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மலைகளின் அரசி எது என்றால் பலரும் எளிதாக கூறிடும் பதில் உதக மண்டலம் என்பது. கடுமையான வெயில் நிறைந்த சென்னையில் கல்லூரிக் கால வாழ்வை கழித்த எனக்கு, 2008 - ம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மலைகளின் அரசியாம் உதகையில் பணியாற்றிய போது ஏற்பட்ட சில அனுபவங்களை இந்த கட்டுரையில் பகிர்கிறேன்.
குளிர்ச்சி மிகுந்த இங்கிலாந்தில் இருந்து வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இங்கிருந்த வெப்ப சூழல் தாங்க முடியாத சூழலில் லண்டனில் இருந்து கப்பல்களில் ஐஸ் கட்டிகளை சென்னை மாகாணம் கொண்டு வந்து இன்றும் சென்னையிலுள்ள ஐஸ் ஹவுஸ் எனும் கட்டிடத்தில் சேமித்தவர்கள், குளிர்ச்சியான இடம் தேடிச் சென்ற போது ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த இடம்தான் இன்றைய நீலகிரி மாவட்டமாக உள்ள உதக மண்டலம்.

பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ள நீலகிரி ரயில் வண்டி யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒன்று. வழக்கமாக இரண்டு தண்டவாள பாதை கொண்ட தொடர் வண்டி தொடர்ச்சியாக உள்ள தொடர் வண்டி, டீசல் மூலமாக இயங்கிடும் ரயில் எஞ்சின், மின்சார எஞ்சின் என பார்த்தே, பயணித்தவர்களுக்கு பழகியவர்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்லும் தொடர் வண்டிப் பயணம் அலாதியான வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
ஆம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான தொடர் வண்டிக்கான ரயில் பாதை வழக்கமான இரண்டு தண்டவாளங்கள் மட்டுமல்லாது நடுவே ஒரு பற்சக்கர பாதை ஒன்றுடன் கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும். தொடர் வண்டி பெட்டிகள் மேலே செல்கையில் ரயில் பெட்டிகளின் பின் புறமாக பொருத்தப் பட்டிருக்கும் ரயில் எஞ்சின் பின்னால் இருந்தே மேலே தள்ளிச் செல்லும்.

வழக்கமாக உள்ள இரண்டு தண்டவாளங்கள் தவிர நடுவில் உள்ள பற்சக்கர பாதையில் பற்றி மேலே தள்ளிச் செல்ல வசதியாக எஞ்சினில் பற்சக்கரம் ஒன்றும் உண்டு. எரிக்கப்படும் நிலக்கரி மூலமாக கொதிக்கும் நீரில் இருந்து எழும்பும் நீராவி மூலமாக இயங்கிடும் இந்த ரயில் எஞ்சின் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பயணிக்கும்.
கீழிருந்து மேலே செல்கையில் பின் புறம் இருந்து முட்டித் தள்ளிய படி செல்லும் எஞ்சின், மேலிருந்து கீழிறங்கும் போது முன்பாக இருந்து மலையில் இருந்து இறங்கும் தொடர் வண்டி பெட்டிகள் வழுக்கி கீழே வந்து விடாதபடி தாங்கி வரும் .
குன்னூரில் இருந்து உதகை நகர் வரை வழக்கமாக இரண்டு தண்டவாளத்தில் இயங்கிடும் ரயில் டீசல் எஞ்சினே இருக்கும். திறந்த வெளியில் பயணிக்கும் இந்த மலை ரயில் பாதை தொடர்வண்டி சில இடங்களில் மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்க பாதைகளின் வழியாக பயணிக்கும். பகல் நேர பயணத்தின் போது திறந்த வெளியில் இருந்து இருளாக இருக்கும் சுரங்கப் பாதைகளில் நுழைந்தவுடன் தொடர் வண்டி பெட்டியில் உள்ள விளக்குகள் ஒளிரும். சுரங்கப் பாதை கடந்து திறந்த வெளிக்கு வந்தவுடன் தொடர் வண்டி பெட்டிகளில் தானாகவே ஒளிரும் விளக்குகள் தானாகவே அனைக்கப்படும்.

தரைப் பகுதியில் அஞ்சலக பணிகளுக்காக அஞ்சல் துறை என அடையாளம் பொறிக்கப்பட்ட வாகனம் வருவதை பார்த்திருப்போம். அந்த வாகனத்தில்தான் அஞ்சலகங்களுக்கு தேவையான கடிதங்கள் இதர பொருட்களை எடுத்துச் செல்வர். ஆனால் குன்னூர் பேருந்து நிலையத்தில இருந்து காலை ஏழு மணிக்கு மேலாக கிளம்பும் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டதும் முதலில் நேராக சென்று நிற்கும் இடம், குன்னூரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக. அங்குள்ள அஞ்சலக பணியாளர்கள் பேருந்து ஓட்டுநரிடம் சில சாக்கு பைகள் அடங்கிய மூட்டைகளை தருவார். பெற்றுக் கொள்ளும் ஓட்டுநர் மலை முகடுகளில் உள்ள கிராமங்களை நோக்கி பேருந்தினை ஓட்டிச் செல்வார்.
செல்லும் வழியில் உள்ள கிராமங்களை நெருங்குகையில் பேருந்தில் இருந்து ஒலி எழுப்புவார். அந்த சப்தத்திற்காகவே காத்திருக்கும் அந்த கிராம அஞ்சலக பணியாளர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அஞ்சலக தபால்கள் அடங்கிய சாக்கு பையினை பெற்றுக் கொள்வார். இத்தகைய பணி இன்று வரை தொடர்கிறது.
குன்னூர் போன்ற நகர்ப்புற பகுதிகளில் இருந்து மலைகளின் முகடுகளில் நீண்ட நெடுந் தூரங்களில் உள்ள மலை கிராமங்களுக்கு செல்லும் இரவில் கடைசியாக செல்லும் பேருந்துகள் கடைசியாக உள்ள மலை கிராமங்களிலேயே நிறுத்தப்படும். அந்த பேருந்தில் செல்லும் ஓட்டுநரும், நடத்துநரும் இரவு முழுவதும் அங்கேயே தங்குவார்கள்.

மலைக் கிராம மக்கள் இவர்கள் தங்குவதற்காக தயார் செய்து வைத்துள்ள அறைகளில் தங்குவார்கள். இன்றைய காலக் கட்டத்தில் இரு சக்கர வாகனம், பல நான்கு சக்கர வாகனம் என மாறிவிட்ட சூழலில், பல்லாண்டுகளுக்கு முன்பாக இத்தகைய நவீன போக்கு வரத்து வசதிகள் வராத நிலையில் மலைக் கிராம மக்களில் யாருக்கேனும் நள்ளிரவில ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் அவர்களை உடனடியாக நகர்ப்புற மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காகவே பேருந்துடன் அவர்கள் தங்கியிருப்பார்களாம். உணவங்களில் உணவருந்த அமர்ந்தால் ஆவி பறக்க சூடாகவே பறிமாறுவார்கள். குளிருக்கு அதுவே இதமாக இருக்கும். பருகுவதற்கு மட்டுமல்ல கைகளை கழுவிட கூட சுடு தண்ணீரையே தருவார்கள். அந்த குளிரான சூழலில் வாழும் மக்கள்!
-வீ.வைகை சுரேஷ்.