வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
வாழ்க்கையில் சில நேரங்களில் கடுமையான தருணங்களை சந்திக்க நேரிடும்!
உண்மையில் ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது, இரண்டு விதமான நிகழ்வுகளையும் கடந்தே செல்லும்.. ஒன்று மகிழ்ச்சி, மற்றொன்று துக்கம். இரண்டும் நன்மைக்கு தான் என்ற மனநிலையை. ஆழமாக பற்றிப் பிடிக்க வேண்டும். மாறாக மனிதன் மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடிந்த அளவுக்கு, துக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் விளைவுகள், பெரும்பாலான பிரச்சினைகள் உருவாக காரணமாகின்றது.

எதையும் இலகுவாக பெற வேண்டும் என்ற எண்ணம், கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்ற safe zone மனநிலை தான், நம்மை அடுத்த கட்டத்திறகு நகர்த்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. அதனால், வாழ்க்கையில் சில கஷ்டங் களை சந்திக்க தயங்கக்கூடாது. எப்படியாவது க்ஷ்டப்பட்டு ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும். எந்த எல்லைக்கும் சென்று அதை தவற விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அதை நினைத்து நினைத்து நொந்து, வாழ்க்கையையே வெறுக்கும் நிலைக்கு நம்மை தள்ளிவிடும்.
உதாரணமாக என்னுடைய வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்தது. சில நேரங்களில் என்னுடைய நிலையை நினைத்தால், தனிமையில் அல்லது கழிவறையில் மனம் விட்டு அழ வேண்டும் போல் தோன்றும். அந்தளவுக்கு வாழ்க்கையில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளது. காரணம் வேறு யாரும் அல்ல, நானே தான் அதற்கு முழு பொறுப்பும்.

சரியான வாய்ப்புகள் கிடைக்கும் போது, அதன் மதிப்பை உணராமல், அதன் லாபத்தை பற்றி சிந்திக்காமல் விட்டதின் விளைவு, இன்று வரை அதை நினைத்து வருந்திக் கொண்டே இருக்கின்றேன். அதனால் எப்போதும் கிடைத்த வாய்ப்புகளைப் கொண்டு ஒரு சிறப்பான நிலையை அடையும் வரை போராடுங்கள். அதில் என்ன கஷ்டமோ கஷ்டமோ எதிர்கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறப்பான இடத்தை நீங்கள் பெற முடியும். இல்லையென்றால், நீங்கள் ஜீரோவில் தொடங்கி மீண்டும் ஜீரோவில் வந்து தான் நிற்பீர்கள். அதை நீங்கள் நினைத்து வருத்தப்படும் பொழுது, உங்களால் நிச்சயமாக அதை ஜீரணித்துக் கொள்ள முடியாது.
இப்போது என்னுடைய வாழ்க்கை எடுத்துக் கொள்ளுங்கள். நான் படித்ததோ ஐடி-யை எலக்ட்ரீசியன் துறை. ஆனால் நான் சிறிது காலம் மட்டுமே அந்த பணியில் இருந்தேன். அதன் பிறகு நான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றினேன். அங்கு முதலில் அலுவலகமாக ஊழியராகத்தான் பணி செய்து வந்தேன்.

பிறகு எனக்கும் தட்டச்சு படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதனால் அருகில் உள்ள ஸ்கூலில் மாதம் 100 ரூபாய்க்கு தட்டச்சு பயிர்சியில் சேர்ந்தேன். தினம்தோறும் சரியாக காலை 7 மணிக்கு சென்று ஒரு மணி நேரம் ஆர்வத்தோடு டைப் பண்ணி தட்டச்சு செய்தேன்.
அதனால் எனக்கு குறுகிய காலத்திலேயே தட்டச்சு பயில முடிந்தது. பிறகு நான் பத்திரிகை அலுவலகத்தில் தட்டச்சு ஆளாக பணி புரிந்து வந்தேன். நாட்கள் போகப்போக எனக்கு எழுதுவதின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் சிறு பத்திரிகைகள், மாத இதழ்கள், வார இதழ்களுக்கு வாசக கடிதங்களை எழுதி அனுப்பினேன்.
அது ஒவ்வொரு இதழ்களிலும் வெளிவர வெளிவர எனக்கு ஆர்வம் அதிகமானது. இப்படி தொடர்ச்சியாக எழுத்து பணியை மேற்கொள்ள ஆரம்பித்தேன். அதன் பிறகு வாசக கடிதங்கள் எழுதின, அனைத்து பத்திரிகைகளுக்கும் சிறு சிறு கட்டுரைகளை எழுதி அனுப்ப ஆரம்பித்தேன்.
அதில் ஒரு குறிப்பிட்ட கட்டுரைகள் வெளியாகின, அது எனக்கு மேலும் உற்சாகத்தை அதிகப்படுத்தியது. இப்படி தொடர்ந்து எழுத்துத் துறையில் என்னுடைய பெயரை நிலைநாட்ட முயற்சி செய்தேன். அதன் விளைவாக அந்த பத்திரிகை அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருக்கும்போதே, பெங்களரில் ஒரு வெப்சைட்டில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

பெங்களூரில் பணி செய்யும் வாய்ப்பு, புதிய நண்பர்களுடன் தொடர்பு என்று பல்வேறு அனுபவங்களை, நான் பணி செய்த ஒன்றரை ஆண்டுகள் எனக்கு கற்றுத் தந்தது. அதேபோல் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் பணி செய்யும் போது எந்த மாதிரியான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதையும், ஓரளவு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதன் பிறகு அங்கிருந்து சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகவே வெப்சைட்டில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, இப்போது எப்படி என்று தெரியவில்லை. அப்பொழுது ஃபர்ஸ்ட் ஷிப்ட், செகண்ட் ஷிப்ட், ஜெனரல் ஷிப்ட் என்று மூன்று தான் இருந்தது. ஆனால் தொலைக்காட்சியில் நான்காவதாக ஒன்று இருந்தது. அதுதான் இரவு பணி. ஒரு சில பேருக்கு இரவு பணி என்பது வரமாக இருந்தாலும், என்னை போன்றவர்களுக்கு அது மிகவும் கஷ்டமாக தெரிந்தது.

நன்கு தூங்கி எழுந்து சென்றாலும், என்னால் இரவு பணியில் ஒரு முழுமையாக பணியாற்ற முடியவில்லை. இதனால் என்னால் அரை மணி நேரம் செய்தித் தொகுப்பை கூட சிறப்பாக அமைக்க முடியவில்லை. இதன் விளைவு செய்தி ஆசிரியர் மற்றும் rundown இன்சார்ஜிடம் பல்வேறு விதமான அவமானங்களை நான் சந்தித்தேன். அதனுடைய விளைவு அவசரகதியில் வேலையை விடும் நிலை ஏற்பட்டது.
சகப் பணியாளர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும் நான் வேலையின் மதிப்பை உணராமல் பணியில் இருந்து விடுபட்டேன். இந்த திடீர் பணி இழப்பால், என்னால் அடுத்த நிறுவனங்களில் சேர முடியவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக சுயமாக தொழில் செய்து வந்தேன். அப்போது என்னுடைய ஊடகப் பணி என்னிடமிருந்து நெடுந்தூரம் சென்று விட்டது.
இதனுடைய பாதிப்பு பொருளாதார ரீதியாகவும் பணி ரீதியாகவும் மிகவும் சிரமப்பட்டு, அதன் பிறகு ஒரு மாதமிருமுறை இதழில் பணி கிடைத்தது. அங்கு நான்கு வருடங்களுக்கு மேலாக இப்போது வரை பணி செய்து வருகிறேன். ஆனால் நான் தொலைக்காட்சி பணியை விட்டதனுடைய விளைவை இன்று வரை சந்தித்து வருகிறேன்.

அதனால் தான் சொல்கிறேன் நீங்கள் முன்நோக்கி செல்லும் ஒரு துறையில் எவ்வளவு கஷ்டங்கள் அவமானங்கள் வந்தாலும் அதை விட்டு விடாமல் அதிலிருந்து உங்களுக்கான முன்னேற்றத்தை தேடுங்கள். வாய்ப்பை பெறுங்கள். எந்த கஷ்டங்கள் வந்தாலும், உங்களுடைய துறையை நீங்கள் விட்டு விடாதீர்கள். அது உங்களுடைய சுயமரியாதையை இழக்கும் அளவுக்கு கூட கொண்டு சென்று விடும் என்பதை என்னுடைய அனுபவத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் சில நேரங்களில் கடுமையான நேரங்களை சந்திக்க நேரிடும் என்று, அறிஞர்கள் இதை தான் சொல்கிறார் போல!
-ஹாதியா பாத்திமா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.