வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இதோ அதோ என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அவரின் தீவிர ரசிகையான நான் அவர் நடித்த திரைப்படங்களில் என்னை அதிகம் சிரிக்க வைத்த திரைப்படத்தை இங்கே பகிர்கிறேன்.
ரஜினி சாரை திரையில் கோபமாக பார்த்திருப்போம்.. சண்டை காட்சிகளில் ரசித்திருப்போம் . அவரின் மென்மையான காதலில் நாமும் கட்டுண்டிருப்போம். ஆனால் படம் முழுவதும் அவரி சிரிப்புடன் பார்த்த அனுபவம் 2k கிட்ஸ்க்கு தெரியுமா ?
சூப்பர் ஸ்டாரின் நகைச்சுவை மின்னும் (வாழ்வில் மறக்க முடியாத) ஒரு திரைப்படம் தில்லுமுல்லு...

நாம் சிரிக்க மறந்த நாள் என்பது நம்மால் வீணாக்க பட்ட நாள்சார்லி சாப்ளின்
என் மனது எப்பொழுதெல்லாம் வருத்தத்தில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் நான் தேடி தேடிச் சென்று பார்க்கும்ஒரே திரைப்படம் ..'தில்லுமுல்லு'தான். ரஜினியை திரைப்படங்களில் கோபமாக பார்த்திருப்போம். அழுகையோடு பார்த்திருப்போம். ஆனால் அவரால் சிரிக்க வைக்க முடியுமா என்று சந்தேகித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கும் இந்த திரைப்படம்.
அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்/இந்திரன் இந்தப் பெயரை கேட்டவுடன் சிரிப்பு தன்னால் வரும் . பொய்களை அஸ்திவாரமாக அடுக்கி வேலை பெறும் சந்திரன் அந்த வேலையை தக்க வைக்க மேலும் மேலும் பல பொய்களை அடுக்குவான். அந்த பொய்கள் ஒவ்வொன்றும் சுவாரசியம். அதில் வெளிப்படுவது உச்சகட்ட ஹாஸ்யம். ஒரு கட்டத்தில் சந்திரன் பொய்களின் வளையத்தில் சிக்கிக் தனக்கு ஒரு தம்பி இருக்குமாறு கூறுவான் அவன் பெயர் இந்திரன் என்பான். அந்த பொய்க்கு சந்திரன் கொடுத்த முதல் பெரிய விலை அவன் ஆசையாக வளர்த்த மீசை.

மீசை மழித்த பின் திரையில் கருப்பு உடையில் சட்டை பட்டன்கள் திறந்த நிலையில் கண்ணாடி அணிந்து கையில் சங்கிலியோடு ரஜினி கதவை காலால் நீட்டி திறந்து நடந்து வரும் அவரது ஸ்டைல்... வேற லெவலாக இருக்கும்.
சந்திரனாக செயற்கைத்தனமான அடக்கம் மற்றும் தயக்கத்தோடு வெளிப்படும் ரஜினியின் பேச்சு. இந்திரனாக நையாண்டியும் நக்கலும் குழைத்து எகத்தாளமாக மாறி ஒலிக்கும் அந்தத் தோரணையில் ரஜினி மாஸ் காட்டியிருப்பார்.
சந்திரனுக்கு முதலாளியாக வரும் தேங்காய் சீனிவாசன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி என்றகதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அனைவரது தில்லுமுல்லுகளையும் அப்பாவியாக எதிர்கொள்ளும் வேடம் அவருக்கு அவ்வப்பொழுது சந்தேகம் கொண்டு அதனால் வெகுண்டெழுந்து பின் சாந்தமடையும் சவாலான வேடம். சார் ..பிராந்தி என்று தன் முன் கிளாஸ் நீட்டும் சர்வரிடம் தேங்காய் சீனிவாசன் 'நான்காந்திடா 'என்று சொல்லும்போதும்,
சார் அவன் பெயர் லட்சுமி நரசிம்மன் ஷார்ட்டா 'லக்கி' சார் என்று சொல்லும் உதவியாளரிடம் உம்மபேர் கூட பக்கிரிசாமி பிள்ளை ஷார்ட்டா 'பக்கி'ன்னு கூப்பிடறதா என்று சொல்வதாகட்டும் நான் industrialist என்று சொல்வதற்கு பதிலாக.. industrist என்று சொல்லி. தான் உளறியதை அப்பாவித்தனமாக விளக்கும் போதாகட்டும்..
சவுகார் ஜானகி ``நானும், அக்காவும் இரட்டைப் பிறவிகள்’’ என்று கூறும் பொழுது இரட்டைப் பிறவி என்பது உங்கள் பரம்பரை வியாதியா என்று கேட்பதாகட்டும்... கையில் சாவியை சுழற்றிக்கொண்டே ஸ்டைலான நடையுடன் நுழைந்து மிஸ்டர் ஸ்ரீராம் என்று அலட்சியமாக ரஜினி அழைக்கும் போது.." யாரது ..யாரது " என்று தேங்காய் சீனிவாசன் தரும் பதற்றமான முகபாவங்களையும் நினைத்து நினைத்து பார்க்கும் பொழுது சிரிப்பை அடக்க முடியாது.

அதேபோல்... இந்திரன்.. சிந்து பைரவி ராகத்த சிவரஞ்சனி ராகத்தில் மிக்ஸ் பண்ணி.. அட்டானராகத்தல அவரோ கணத்த படிச்சு தொடையில ஆதி தாளம் போட்டா கிடைக்கிற ராகம் கல்யாணியா.. காம்போதியா கரகரப்பிரியாவா... சண்முகப்பிரியாவா.. இல்ல ஸ்ரீபிரியாவா ன்னு கன்னா பின்னான்னு சங்கீத கேள்வி கேட்கும் பொழுது .. எழும் சிரிப்பலைகள் அடங்க நேரம் ஆகும்.
நாகேஷின் ரசிகனாக வரும் ரஜினி ஸ்டைலில் நடிக்கும் சிறுவனின் வில்லத்தனம் கொண்ட நடிப்பு படம் நெடுகிலும் சிரிப்பை வரவழைக்கும். மீனாட்சி துரைசாமி என்ற பெயரில் துறுதுறுவென்று வளையவரும் சவுகார் ஜானகியை சொல்லாமல் விடுவதா?? அவர்கள் போடும் இரட்டை வேடம் சிரிப்புக்கு உத்தரவாதம் அதிலும் குறிப்பாக வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து பாத்ரூமிலிருந்து வெளிவந்து(ஸ்டண்ட் மாஸ்டர் லெவலுக்கு ) தேங்காய் சீனிவாசனிடம் பேசிய பிறகு அவர் சென்றதும், நான் செத்தேன்' என்று சொல்லி
நாற்காலியில் சாய்ந்து உட்காரும் ஒரு காட்சி போதும் அவர்களின் நடிப்பைச் சொல்ல..

சந்திரனனைப் போலவே தனக்கும் இன்னொரு சகோதரி உண்டு எனச் சொல்லி. பிறகு அல்லாடுவது ... சிரிப்புக்கு நான் கியாரண்டி என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்கும். எளிமையான ஆள்மாறாட்ட கதையை திறமையான நடிகர்களை கொண்டு நடிக்க வைத்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருப்பார் இயக்குனர். அவருக்கு கை கொடுத்திருப்பார் வசனம் எழுதிய விசு.
இசையில் பட்டையைக் கிளப்பி இருப்பார் எம்.எஸ்.வி அவர்கள். ஆபேரி ராகத்தில் அமைந்த ராகங்கள்16 என்ற பாடல்் இன்றளவும் (40 வருடங்களை கடந்த பிறகும்) மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சி களைபறக்கசெய்யும் மொத்தத்தில்... நான்சோர்ந்து இருக்கும் நேரத்தில் மனச்சோர்வில் இருந்து விடுபட.. என்னை மீட்டெடுக்கும் ஒரு திரைப்படம் 'தில்லு முல்லு ' என்றால் மிகையில்லை.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.