வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எப்படி மறக்கமுடியும் அந்த பெயரை “சுப்புலட்சுமி”. அவள் ஒரு தேவதை.
பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்றேன். அப்போதுதான் பார்த்தேன் சுப்புலெட்சுமியை. அப்போது அவள் பெயர் எனக்கு தெரியாது. ஆவலுடன் அவளை பார்த்துக்கொண்டு நின்றேன். அவளின் பக்கத்தில் அவளுடைய அப்பா நின்றுக்கொண்டிருந்தார்.
என்னிடம் வந்து முதலில் பேசியது அவளின் அப்பாதான்.
“என்ன தம்பி எங்க இருந்து வரீங்க என்று கேட்டார்”
நானும் பதில் சொன்னேன்.
“அப்பறம் என்ன கோர்ஸ் செலக்ட் பண்ணி இருக்கீங்க என்கிறார்”
“நான் பி காம் என்றேன்”
“ஓ அப்படியா என் மகளும் பி காம் தான்” சேர இருக்கிறாள் என்கிறார்.
எனக்கு அவர் மகளை அறிமுகம் செய்து வைத்தார்.
“ஹாய் என் பேரு சுப்புலட்சுமி” என்றாள்
நானும் “ஹாய் நான் மகேஷ்” என்றேன்.
முதல் சந்திப்பு இனிதே முடிவுற்றது.

பின்பு வீட்டுக்கு சென்று அதே யோசனையில் இருந்தேன். கடவுளிடம் வேண்டிக்கொண்டேன், எப்படியாவது எனக்கும் சுப்புலக்ஷிக்கும் அந்த கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்று.
பத்துநாள் நாள் கழித்து வீட்டுக்கு ஒரு விரைவுத் தபால் வந்தது. பிரித்து பார்த்தால், அதே கல்லூரியில் இருந்துதான் பி காம் சேர சொல்லி அழைப்புக் கடிதம். ஒரே மகிழ்ச்சி! வீட்டில் எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டேன். சுப்புக்கு அழைப்புக் கடிதம் போய் இருக்குமா என்று உடனே அங்கே போனது மனது. இன்னும் கல்லூரிக்கே போகவில்லை, அவளையும் பார்க்கவில்லை, சுப்புலட்சுமி இப்போதே சுப்புவானாள்! எனக்கு எல்லாம் பேராசைதான்.
என்னுடைய வீடு கல்லூரியில் இருந்து 2 கிலோமீட்டர்தான், சைக்களில்தான் செல்வேன். முதல் நாள் கல்லூரியில் நுழைந்தோம் என் கண்கள் சுப்புவைதான் தேடுகிறது. எங்கே அவள்…. எங்கே அவள்….. இதோ வருகிறாள்.அவள் வரும் சைக்கிள் எனக்கு பல்லக்குபோல தெரிகிறது ராணியைப் போல வந்து இறங்கினாள் என்னுடைய சுப்பு.

எல்லோரும் பேசி நண்பர்கள் ஆனோம். சுப்பு என்னிடம் வந்து
“ எப்படி இருக்கீங்க” என்றாள், எனக்கோ வயிற்றிலே ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்துக் கொண்டிருந்தது.
“ நான் நல்ல இருக்கேன்.. நீங்க”… “ம் நல்ல இருக்கேன்” என்றாள்.
“எங்க இருந்து வரீங்க” என்றேன்
“நான் ரயிலடியிலிருந்து வரேன்” என்றாள். அது கல்லூரியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம்.
எங்கள் ஏரியாவை கடந்துதான் அவள் போகவேண்டும். அவள் சைக்கிளை பார்த்துதான் நானும் கிளம்புவேன். கல்லூரிக்கு போகும் வரைக்கும் பேசிக்கொண்டே போவோம். நண்பர்கள் கலாய்ப்பார்கள், ஆனால் என் கண்ணுக்கு சுப்பு மட்டும்தான் தெரிவாள்.
கணக்கியல் டியூஷன் அவள் சேர்ந்தாள்.அவளை பார்க்க வேண்டும் என்றே நானும் அங்கே சேர்ந்தேன். இத்தனைக்கும் என்னுடைய வீட்டிலிருந்து டியூஷன் 4 கிலோமீட்டர். சுப்புவை பார்க்க வேண்டும் என்றாள் சந்திர மண்டலத்திற்கு கூட போகலாம்.
இதயம் முரளியும் நானும் ஒன்றுதான். மனசுக்குள்ளையே காதலை வைத்துக் கொண்டு சொல்லாமல் தவித்தேன். சுப்புவும் என்னிடம் நன்றாகத்தான் பேசுவாள். என்னிடம் மட்டும்தான் கலகலவென்று பேசுவாள்.

இப்படியே 3 வருடங்கள் ஓடின. கல்லூரி வாழ்க்கை முடிவிற்கு வரும் நேரம் வந்தது. பாழாய்ப்போன பயம், என் சுப்புவிடம் என்னுடைய காதல் சொல்லவிடவேயில்லை கடைசிவரை.
எல்லோரும் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவளிடம் என்னுடைய நோட்டை நீட்டினேன். எனக்கு ஏதாவது எழுதி கொடு என்று. சுப்பு எழுதினாள்.
“அமைதியின் சிகரமே
கலங்காதிரு
காலம் வரும்
உன் திறமையை வெளிக்காட்டு
மறவாதிரு
இந்த ஏழையின் நட்பை” என்று எழுதினால்.
மேலும் என்னிடம் சுப்பு என்னக்காக ஒரு கவிதை எழுதிக் கொடு என்றாள்.
எனக்கு இதைவிட அருமையான வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து கண்டிப்பாக எழுதி தருகிறேன் என்று அவளுடைய நோட்டில் எழுத தொடங்கினேன்.
“உயிர் என்ற தலைப்பில்
என்னை ஒரு கவிதை
எழுத சொன்னால்
என் ஒற்றைவரி கவிதை
உனதுபெயர்”
உப்பு இல்லாமல் கூட வாழ்த்திடுவேன்
வாழவே முடியாது
சுப்பு இல்லாமல்
ஐ லவ் யு சுப்பு” என்று எழுதிக் கொடுத்தேன்.

அதனை படித்துப்பார்த்த சுப்பு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. என்ன சொல்ல போகிறாளோ என்று என்னுளே ஒருவித அச்சம் கலந்த பயம். என் தோளில் செல்லமாக ஒரு அடி அடித்து எதற்காக இப்போது சொல்கிறாய் அப்படியே போக வேண்டியதுதானே இந்த மூன்று வருஷம் போன மாதிரி போடா பைத்தியம் என்று என்னை கட்டிப்பிடித்தாள்.
என்னால் எதுவும் பேச முடியவில்லை அப்போதும் என்னுள் ஓடியது இதயம் வரிகள்
“வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு என்னாளோ”
இப்போது எங்களுக்கு திருமணமாகி குழந்தைகள். இன்னமும் அசைபோட்டுக் கொண்டு இருக்கிறோம் அந்த இனிமையான நாட்களை.
-ஸ்ரீராம் பாலமோகன்
ஆதம்பாக்கம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.