வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நான் ஐந்தாம் வகுப்பிற்கு போன போது அங்கே கடந்த ஆண்டு தேர்வாகாத மாணவர்கள் நால்வர் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தனர். எப்படியும் எங்கள் எல்லோரையும் விட நான்கைந்து வயது பெரியவர்கள். அதில் ஒருவன் குத்தாலிங்கம். வேட்டி கட்டியிருப்பான். மாலையில் மார்க்கெட்டில் அரை டவுசர் போட்டு அவுங்க அப்பாவின் எண்ணெய் கடையில் வேலை செய்து கொண்டிருப்பான். இவர்கள் நால்வரையும் ஏன்னோ பேர் சொல்லியோ கூப்பிடக் கூடாது. அண்ணான்னு கூப்பிடலாம் இல்லை என்றால் வாங்க போங்கன்னு கூப்பிடலாம் என்று கண்டிஷன் போட்டாச்சு.

முன் பெஞ்சில் நன்றாக படிக்கக்கூடியவர்கள் ஒழுங்கா தலை வாரி இருப்பவர்கள் தான் அமருவர். கடைசி பெஞ்ச் பையங்களிடம் பேச மாட்டார்கள். பயப்படுவதைப் போல அவர்களை தப்பா பேசுவார்கள்.
ஆசிரியர்களும் கடைசி பெஞ்ச் என்று சொல்லாமல் மாப்பிள்ளை பெஞ்ச் என்பார்கள். ஏனெனில் கல்யாண வயசுல இருக்கிறவன் என்று அர்த்தமாம். ஆக மொத்தம் அவர்களை எந்த ஆசிரியரும் ஒன்றும் சொல்வதில்லை. தண்ணி தெளிச்சு விட்ட கேஸ் என்று கூடுதல் பட்டமும் உண்டு.

இளம் பெண்ணான கிருஷ்ணவேணி டீச்சர் புதிதாக வந்தார்கள். மாப்பிள்ளை பெஞ்ச் கலைத்து நால்வரையும் இடம் மாற்றினார்கள். குத்தாலிங்கம் என்னருகில். கொஞ்சம் அவனை படிக்க வைக்குமாறு சொன்னார்கள்.
முதலில் பயந்தாலும் பின்பு தினம் வாய்ப்பாடு சொல்லி தந்தேன். அவனோடு சேர்ந்து இலந்தை மரம் ஏறி பாவாடையை கிழித்துக் கொண்டு குளத்தில் நீச்சல் அடிக்கிறேன்ன்னு தலை நனைத்து அம்மாவிடம் அடி வாங்குவது பழக்கமாயிற்று.
தக்களியூண்டு இருக்கும் வகுப்புத்தலைவியான நான் கரும்பலகையை சுத்தம் செய்ய ஏய் குத்தாலிங்கம் இந்தா பாரு இதை துடைச்சு குடுன்னு சொல்வேன்.

ரொம்ப வருஷம் கழிச்சி ஊருக்கு போன போது பள்ளிக்கு சென்றேன். பழைய நினைவுகள் பசுமையாக இருந்தாலும் பழைய கட்டிடம் இடித்து எல்லாம் புதிதாக இருந்தது.
மார்க்கெட்டில் குத்தாலிங்கம் அவுங்க அப்பாவின் எண்ணெய் கடையுடன் உரக்கடை வேளான்கடை என்று ஜகதஜோதியாக இருக்கிறான். என்னைக் கண்டதும் அடையாளம் கண்டு மிகவும் நட்புடன் வரவேற்று மகிழ்ந்தான்.
ஆங். சொல்ல மறந்துட்டேனே. குத்தாலிங்கம் ஐந்தாம் வகுப்பு மட்டுமல்ல பட்ட மேற்படிப்பு படித்து தேர்வாகி இன்று டாக்டர்.
குத்தாலிங்கம் பி ஹெச்.டி.
அப்புறம் எதுக்கு எண்ணெய் கடை என்று கேட்டேன். புன்னகைத்து விட்டு சொன்னான். விவசாயமும் வியாபாரமும் ரெண்டு கண்கள் என்று. மாப்பிள்ளை பெஞ்ச்காரன் தேர்வில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் ஜெயித்து விட்டான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.