வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஒவ்வொரு குடும்பத்திலும் அக்காவைப் பெற்ற அனைவரும் அவளுருவில் இன்னொரு அன்னையைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.
இந்த தமிழ் பிரபஞ்சத்தில் பிறப்பொக்கும் எல்லா மழலைக்கும் முதற்சொல் “ம்மா” என்றால் அதனோடு இணைச்சொல்லாக “க்கா” என்பதாகவே இருக்கக்கூடும். அந்த அளவிற்கு நம் இதயங்கள் அக்காக்களின் ஆத்மாக்களால் நிரம்பி வழிகின்றன எனலாம்.

என்று அம்மா தன் கரங்களில் துவளும் நம்மை அக்காக்களின் கரங்களில் தந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறாளோ! அன்றிலிருந்தே தொடங்கி விடுகிறது. நம் மீதான ‘அக்காக்களின் அன்பும், பாசமும் என நாம் அர்த்தம் கொள்ளலாம்...
தன் கரங்களை ஊன்றுகோலாக்கி இந்த உலகை சொல்லிக் கொடுப்பவள் ‘அம்மா’என்றால், தன் இடையை நம் இருப்பிடமாக்கி இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்பவள் அக்கா'வாகத் தானே இருக்க முடியும்.
நமது இளம் பிராயத்தில் அன்னையவள் அடிக்க வரும் அடிகளுக்கு பயந்து வெருண்டு அழும் நம்மை காக்க, தன் முதுகை கேடயமாக்கி...
அன்னையின் அடிகள் அனைத்தையும் நம் மீது கொண்ட பச்சாதாபத்தால் தன் முதுகில் தானே வாங்கிக் கொண்டு நம்மை காத்து நிற்பவள் ‘அக்கா’என்றால் அது மிகையல்லவே.
நம்மைப் பொறுத்தவரையில் அம்மா என்பது ஓர் ஆன்மாவின் உயிரெழுத்தென்றால் 'அக்கா’ என்பது அன்பை மெய்ப்பிக்கத் தரும் மெய்யெழுத்தாகும், இவ்விரண்டுமே நம்மை நமது இவ்வுலக இருப்பை தீர்மானிக்கும் தலையெழுத்து என்றே கூற முடியும்.

முன்பொரு சிறு பிள்ளைப் பருவத்தில் உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பும் ஓர் இரவின் இருளில் வீதிவழி நாங்கள் இருவரும் நடந்து வருகையில் பேய், பிசாசு (இவை எமது சிறு வயது பயம்) அண்டாது எனச் சொல்லி எனது முன் நெற்றியில் தன் எச்சிலால் திலகமிட்டு தன் தாவணி முனைக்குள் என் தலை மறைத்து வீடுவரை எனது பயம் போக்கி காத்து வந்தாள் அக்கா அவ்வமயம் அவளின் தனிப்பெரும் கருணை என் மீது போர்த்தபட்டதாகவே நான் உணர்ந்தேன்.
அன்னையின் அன்பும் ‘அக்கா’வின் பாசமுமே மானுட உயிர்கள் மீது கொண்ட ஆண்டவனின் அளப்பெரும் கருணை என்பேன்.
நாம் தவழும்போதும் தடுமாறி விழும்போதும் தன் கரங்களால் தாங்கிப் பிடித்து நடக்க பயிற்றுவிப்பாள் ‘அக்கா, நம் பிஞ்சு கரங்களைப் பற்றித் தூக்க ‘அன்னை'யவள் அக்கா'வை அழைக்கும் போதெல்லாம் புத்தம் புது புன்னகை நம் இதழ்களிலே பிறந்திடும் நம்மைப் பற்றிப் பிடித்திருக்கும் அவளது கரங்களினூடே காணும் காருண்யத்தை அவளது பிடியின் இறுக்கத்தில் கண்டுணரலாம்.

நம் சிறு குழந்தைப் பருவத்தில் நமது நாசி புறந்தள்ளும் கழிவுகளை தன் விரல்களுக்கிடையில் வெளித்தள்ளி அன்று தரித்த தன் புத்தாடையில் தேய்த்துக் கொள்வாள்!, மேலும் நம் கழிவுகளை எல்லாம் களைந்தெறிய தன்னிரு கரங்களையே அசுத்தமாக்குவாளே! அந்த நொடிப் பொழுதுகளில் அவளது மாசற்ற இருதயத்திற்குள் நின்றிடும் பேரன்பை நம் பிஞ்சு மனதும் படம் பிடித்து காலம்தோறும் அவளை புத்தாடைக்குள் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்ற வேண்டும். அதுவே அந்த தியாக உருவின் மாட்சிமைக்கு நாம் செலுத்தும் பேருபகாரமாகும்.
அன்னையவள் மார்பனைப்பிற்க்குபின் அனைத்து மழலையுள்ளமும் பெரு மகிழ்கொள்வது எனில் அது ‘அக்கா’வின் புன்னகை மாறா அந்த இன்முகம் கண்டதும்தானே என்பேன்.
அவளருகில் நாம் உண்ணும் போதெல்லாம் நம் வாய்க்கு தன் கரங்களால் முதலில் அன்ன மூட்ட முனைந்திடுவாள் அதன் பிறகே அவ்வன்னத்தை தனது வாய்க்குள் செலுத்திடுவாள் அந்த அன்னமிட்ட கைகளின் வாசம் இன்னமும் நாசிக்குள் நீங்க மறுத்து நிற்கிறது.
நிலாச் சோறில்லா பிள்ளைக்கு ‘அக்கா’வின் இன்முகம் மட்டுமே முழு நிலவாய் எப்போதும் இருந்திருக்கிறது, அந்த இன்முகம் கண்டதும் கிண்ணத்தில் கிடக்கும் ஒரு பருக்கை அன்னமும் அமிர்தமென தொண்டைக்குள் இறங்கும்.

எப்போதெல்லாம் அக்கா'வின் கரம் பற்றி நடக்கின்றோமோ! அப்போதெல்லாம் அவளது அகிம்சை கரங்களின் அரவணைப்பினில் இன்னொரு அன்னையை அவளுருவில் நாம் காண்போம்.
எனது சிறு வயது இரவுகளின் பல உறக்கங்களை அம்மா, அக்கா இருவரின் இடைவெளிகளில் மட்டுமே நான் அதிகம் கண்டடைந்திருக்கிறேன்.
உலகியல் அணிகலனாக தம் பேரன்பை தமது தம்பிமார்களிடம் பொழியும் இதயங்களின் பேரரசிகளான அக்கையர்களுக்கு ..
"அக்கா’என்பது தனி உயிர் அல்ல அது நம்முள் உயிர்த்திடும்
நம்முயிர் நம்முள்ளம் என்றும் சுமக்கும் இன்னுயிர் அது..”
இனியொரு முறையேனும் இறைவனை கண்டால் இன்னொரு இதயமும் கேட்க வேண்டும், அதில் அவளை மட்டுமே தனியாய் சுமக்க வேண்டும் என்ற பேரவா உள்ளத்தில் பிறப்பெடுக்கிறது.

மீண்டுமொரு முறையும் சிறு குழந்தையாகி, இதயத்திற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும், இனி 'லப்டப்'.. 'லப்டப்', எனும் அதன் உயிரோசையை மருவி "க்கா...க்கா"..எனவும் துடிப்பதற்கு.
அவளுக்காகவும் துடிப்பதற்கு ஓரிதயம் மட்டுமல்ல ஓராயிரம் இதயங்கள் கேட்க வேண்டும் அந்த ஒப்பற்ற ஓரிறையிடம் அதில் அவளை மட்டுமே என்றும் தனியாய் சுமப்பதற்கு ...
என்றென்றும் பிரியமுடன்.....
பாகை இறையடியான்..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.