வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
விடிய விடிய நாடகங்கள் பார்த்த இரவுகள் இன்றும் கண்முன் வந்து நிற்கிறது. அந்த வண்ண விளக்குகள், மிளிரும் மேடை, மத்தளச் சத்தம், அரிதாரம் பூசிய முகங்கள், ஜிகு ஜிகுவென மின்னும் உடைகள், ஜொலிக்கும் கிரீடங்கள், பபூனின் நகைச்சுவைகள் என நாடகங்களும் அதன் பிரமிப்பும் தான் குழந்தைப் பருவங்கள் முழுவதும் நிறைந்திருந்தது. சிறு வயதில் கோவில் திருவிழாக்கள், சடங்கு நிகழ்வுகள் என எங்கு நாடகம் நடப்பது தெரிந்தாலும் முதல் ஆளாக அங்கு சென்றுவிடுவேன். புரிகிறதோ இல்லையோ நாடகங்களை தேடி தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்சம் நாட்களில் வீட்டிற்கு டி.வி. வந்தது ஆர்வமாக நாடகம் பார்க்க வந்த பெண்கள் கூட்டம் கண்ணை கசக்கிக் கொண்டு சீரியலில் மூழ்கியது. இளைஞர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் அணியை தீவிரமாக ஏலம் எடுக்க தொடங்கியிருந்தனர். காலம் வேகமாக ஓடிவிட்டது... ஊர்த் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லாம் மறந்தே போய்விட்டது. பாரம்பரியத்தில் இருந்து நவீனத்தின் மீது ஆர்வம் ஈர்க்கப்பட்டது.

எல்லாம் நவீனம் ஆகும் போது கலையும் நவீனமாவிடுகிறது. விடிய விடிய நடக்கும் தெருக்கூத்துகள் போல் இல்லாமல் Modern Theatre அதிகரிக்க துவங்கின. பரம்பரை பரம்பரையாக நாடகங்கள் நடித்து வருபவர்களைத் தாண்டி படித்தவர்கள், பெண்கள், ஐ.டி.யில் பணிபுரிபவர்கள் என இளைய தலைமுறையினரின் ஆர்வம், ஆதிக்கம் நாடகத்தில் அதிகரித்தது. ஆங்காங்கே நவீன நாடகக் குழுக்கள் துவங்கப்பட்டது. சென்னை,கோவில்பட்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற ஊர்களில் இந் நவீன நாடக செயல்பாடுகள் தீவிரமாக இருந்தது. ஊரைச் சுற்றி தேடி தேடி நாடகம் பார்த்த எனது ஆர்வம் தற்போது ஊர் ஊராக சென்று நாடகம் பார்க்க வைத்தது. இப்போது எந்த ஊரில் நாடகம் நடந்தாலும் நேரம் ஒதுக்கி பயணம் செய்து பார்த்து விடுகிறேன். இப்படி நாடகத்தின் மீது ஆர்வம் கொண்ட எனக்கு நண்பர்கள் மூலம் ஓர் இனிய செய்தி இன்ப அதிர்ச்சியாக கிடைத்தது.
சென்னையில் "Short + Sweet" என்ற கான்செப்டில் நாடகங்கள் நடைபெறுகிறது. நவம்பர் 3 முதல் 27ம்தேதி வரை ஒரு மாதத்திற்கு நடக்கும் இந்நிகழ்வில் வாரம் நான்கு நாட்கள் ஒரு நாளைக்கு "பத்து நாடகங்கள்" அவை ஒவ்வொன்றும் "பத்தே நிமிடங்கள்" தான் என்றனர். "பத்து நாடகங்கள் பத்தே நிமிடங்களா..." புதுசாக இருக்கிறதே...! அப்படி என்னதான் நடக்கிறது பார்த்துவிடுவோம் என்று ஆர்வத்தோடு தயாரானேன்.
வார நாட்களில் மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையிலும்... வார இறுதி நாட்களில் இரண்டு மணி முதல் நான்கு மணி மற்றும் 7 மணி முதல் 9 மணி வரையிலும் இரண்டு காட்சிகளாகவும் நாடகங்கள் நடைப்பெற்றது. நாடகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விட்டது என்பது உண்மை தான் ஆனால் முற்றிலும்உண்மை இல்லை. ஒவ்வொரு நாட்களும் கூட்டம் களைகட்டியது நாடக நிகழ்வு போல இல்லாமல் நாடகத் திருவிழா போல் இருந்தது. பத்து நாடகங்களும் பத்து விதம். ஒவ்வொன்றும் தரமாக இருந்தது.
Short + Sweet நாடகங்களைப் பார்க்கும் போது பத்து நிமிடத்தில் இவ்வளவு விஷயங்கள் பேசிவிட முடியுமா என்ற ஆச்சரியமும் வியப்பும் அதிகரித்தது. மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடகங்கள், மனதை கனக்கச் செய்யும் சீரியஸ் நாடகங்கள் என வெரைட்டியாக இருந்தது. சமுக அக்கறை, தன்பால் ஈர்ப்பு, உடல் சார்ந்த மாற்றங்கள் ஆகிய கருத்துக்களில் வெளிபடையாக பேச தயங்கும், கட்டாயம் பேச வேண்டிய, பேசி புரிய வைக்க வேண்டிய விஷயங்களை இந்த நாடகங்கள் Short ஆகவும் Sweet ஆகவும் உரக்க பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 45 நாடுகளில் நடைப்பெற்று வரும் Short + Sweet கான்செப்ட் நாடகங்கள் இந்தியாவில் சென்னையில் மட்டுமே நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்வு கோவிட் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து தற்போது மீண்டும் துவங்கியிருப்பது நாடக நடிகர்கள், இயக்குநர்கள், நாடக ஆர்வலர்கள் என எல்லோருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
ஏறத்தாழ ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் இதில் பங்கேற்றன. ஒவ்வொரு நாளும் நாடகம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு வோட்டிங் ஷீட் கொடுக்கப்பட்டு அந்த நாளின் சிறந்த இரண்டு நாடகங்கள் பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நாடக ஆளுமைகளையும் நடுவர்களாக வரவழைக்கப் படுகிறார்கள். நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் வாக்குகளின்படி சிறந்த நாடகங்கள் இறுதிசுற்றுக்குள் நுழையும். ஒவ்வொரு நாளும் Play of the day அறிவிக்கப்படுகிறது எனவே தங்கள் நாடகம் தான் பெஸ்ட் என நிரூபிக்க நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு திறமையை வெளிப்படுத்துவதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைப்பெற்றது இந்நிகழ்வு..!
கவிதைகள் போல கதைகள் போல சிறுகதைகள் போல தமிழில் நாடகங்களும் அதிகம் எழுதப்படவேண்டும். எந்தவொரு கலைக்கும் என்றும் அழிவில்லை. அனைத்து கலைகளும் எங்கோ ஓரிடத்தில் யாரோ ஒருவரால் தொடர்ந்து இயங்கி கொண்டேதான் இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்க மறந்துவிடுகிறோம். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட எங்கோ ஒரு நடிகர் அரிதாரம் பூசிக் கொண்டிருப்பார்... விளக்குகள் ஒளிர தயாராக இருக்கும்... திரைகள் திறக்க ஆர்வமாக இருக்கும்... இருக்கைகள் எனக்காக காத்திருக்கும்... அதோ கட்டியங்காரனின் குரல்கள் கேட்கிறது..!
-கோ.ராஜசேகர், தருமபுரி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.