வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
2000 - 2002 ஆசிரியர் பட்டயப் பயிற்சி பயின்ற இடத்தில் மீண்டும் சங்கமித்த நிகழ்வு...
கடந்த சில வருடங்களாக முயற்சித்தும் முடியாமல் தள்ளி தள்ளி சென்ற நிகழ்வு நண்பர் பிரகாஷின் பொங்கியெழுந்த ஆக்ரோசத்தின் விளைவாக நடந்தேறியது என்பதே உண்மை.
முன்னாள் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட DIET குழுவில் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிர்ந்த பொழுது " எது தேவையோ அத பற்றி பேசுங்கப்பா... அதவிட்டுவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தான் இப்ப ரொம்ப முக்கியமா?" என்ற ஆவேச பதிவின் எதிர்வினையே இந்த சந்திப்பு என்பதை நினைக்கும் பொழுது மெய்சிலிர்ப்பதை தவிர்க்க இயலவில்லை.

தேனி மாவட்டம், உத்தமபாளையம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2000- 2002 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் விழா டிசம்பர் 25 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் விரிவுரையாளர் மோகன்ராம் (முதல்வர், DIET ஒட்டன்சத்திரம்) மற்றும் அலுவலக எழுத்தர் குமணன் ( கண்காணிப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட நிகழ்வு வீட்டு விஷேசம் போல் காட்சியளித்தது.
வால்பாறையில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் "சீல் சிவா" என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் எங்களது நண்பர் சிவக்குமார் அவர்கள் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று யதார்த்தமான முறையில் வரவேற்புரை நிகழ்த்தினார்.
படித்தது இடைநிலை ஆசிரியராக இருந்த பொழுதிலும் மென்மேலும் படித்து இன்று முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் எங்கள் ஆசை நாயகன் பெத்தண்ணக்குமார் அவர்கள் நிகழ்வினை முறையாக தொகுத்து வழங்கினார்.

முன்னதாக அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பறைக்குள் நுழைந்து 20 வருடங்களுக்கு முன்னர் தாங்கள் அமர்ந்திருந்து படித்த இருக்கைகளில் அமர்ந்து ஞாபகங்களை மீட்டி பரவசமடைந்தனர்.
வருகை புரிய வாய்ப்பில்லாதவர்களின் இடங்களில் தங்களது குழந்தைகளை அமர்த்தி அழகூட்டி மகிழ்ந்தனர். இம்மண்ணுலகை விட்டு மறைந்தவர்களை நினைத்து கண்கலங்கிய நிகழ்வும் அரங்கேறியது.
சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரையும் முன்னாள் மாணவர்கள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களின் நெகிழ்வான அனுபவ பரிமாற்றங்களும் நடந்தேறின. தங்களைச் செதுக்கிய டயட்டின் சிறப்புகளை பகிர்ந்து தங்களது நன்றியை காணிக்கையாக்கி கொள்ளும் வாய்ப்பாக இந்நிகழ்வு உருமாறத் தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்த போதிலும் இன்று பலரும் இடைநிலை ஆசிரியர்களாகவும் பட்டதாரி ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பதை அறிந்து பெருமிதம் பூண்டு மகிழ்ந்தோம்.
மதியம் அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தனர்.

குடும்ப உறுப்பினர்களும் எவ்வித பாசாங்குமின்றி அனைவரிடமும் கலந்துரையாடிய நிகழ்வு சிறப்பம்சமாக அமைந்தது என்பதே உண்மை. "ஸ்டேடஸ் அங்கிள்" என்று எனக்கு எனது தோழியின் மகள் வைத்துள்ள பெயரை அறிந்து புல்லரித்துப் போனேன் என்பதே மெய்.
அடியேன் உரையாற்றும் பொழுது " உங்களது படைப்புகள் பற்றி கூறுங்கள்?" என்று எமது தோழியின் கணவர் கூற, ஓரிரு நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து பின் மீண்டேன். நிகழ்விற்கு பின் இறுதியாக தோழியின் கணவரிடம் பேசும்பொழுது தான் உண்மை புலனாகியது. அவர் மிகச் சிறந்த படைப்பாளியாக மிளிர்ந்து வருகிறார் என்பதும் என்னைக் குறித்த பேச்சும் அவர்களிடையே நடைபெற்றுள்ளது என்பதையும் அறிந்து புளகாங்கிதம் அடைந்தேன் என்பதே நிதர்சனம்.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு கேக் வெட்டி கொண்டாடினோம்.
இவ்வினிய விழாவிற்கு அனுமதி வழங்கிய DIET முதல்வர் சௌந்தர்ராஜன் அவர்களுக்கும் விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
20 வருடங்களுக்கு முன் நாங்கள் நட்டு பராமரித்த செடிகள் இன்று வளர்ந்தோங்கி வளர்ந்து பூஞ்சோலையாக காட்சியளித்து எம்மை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தது. இது குறித்து தனியாகவே ஒரு கட்டுரை வரையலாம்...
நாங்கள் தங்கிப் படித்த விடுதிக்கு நானும் திருமலை அண்ணனும் சென்று பழைய நினைவுகளை மீட்டி பரவசத்தில் திளைத்தோம்.

வருங்காலங்களில் இது போன்ற சந்திப்பு விழாக்கள் தொடர்ந்து நடைபெற உத்தேசிக்கப்பட்டது.
பல்வேறு சூழல் காரணமாக சிலரால் வர இயலாமல் போனது மட்டுமே சிறு வருத்தம்.
அனைவரையும் கண்டவுடன் மனதில் பூத்த பூரிப்பை சொல்லில் வடிப்பது கடினமே...
எவ்வித பாசாங்குமின்றி அதே உரிமையுடன் அளவளாவிய அக்காக்களின் அன்புக்கு என்றென்றும் அடிமையே...
சிறிது நேரமே இருந்தாலும் உள்ளத்தில் கரை புரண்டு ஓடிய உற்சாகத்திற்கு அளவே இல்லை.
சின்னஞ்சிறு தருணங்களைக் கூட அசை போட்டு மகிழ்ந்த தருணங்கள் கவித்துவமானவைகளே...
ஆண்களை விட பெண்களே கூடுதலாக கலந்து சிறப்பித்த அற்புதமான நிகழ்வே இது. படிக்கும்பொழுதே எங்களை விட (22) அவர்களே எண்ணிக்கையில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது...
அனைவரின் குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிடில் இந்நிகழ்வு சாத்தியமாகி இருக்காது என்பதே உண்மை.
காலம் பலவற்றைக் கற்று தந்தாலும் சிலவற்றை மறக்க வைத்தாலும் பள்ளிப் பருவக் காலமும் கல்லூரிக் காலமும் பசுமரத்தாணியாகவே பிரகாசிக்கும் என்பது எவ்வளவு உண்மையென்பது இன்று நிரூபணமாகியது.

வருங்காலங்களில் அனைவரும் (விரிவுரையாளர்களும் மாணவ ஆசிரியர்களும்) சந்திக்கும் நாளாக அமையும் என்ற நம்பிக்கையில் பிரிந்திருக்கிறோம்...
விழாவினைச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
20 ஆண்டுகளுக்கு முன் பிரிவு உபச்சார விழாவில் வண்ணப் பலகையில் நான் எழுதிய வாசகமே இன்றும் நினைவிலாடுகிறது.
"முடிவில்லா பயணத்தில் இன்றைய நாள் காற்புள்ளி மட்டுமே!"
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே...
-பா.அசோக்குமார்
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.