வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
கார்த்திகை மாதம் பிறந்ததும் பக்தர்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீப திருவிழா, மற்றும் அய்யப்பனுக்கு மாலை போட்டு விரதமிருப்பது...போன்ற நிகழ்வுகள் நடக்கும்.
திருவண்ணாமலையில் நடக்கும் தீப திருவிழா உலகளவில் புகழ் பெற்றது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட பக்தியோடு வந்து இங்கு சிவனை கார்த்திகை மாதத்தில் வழிபடுவார்கள்.
சாதாரண நாட்களிலும் திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

திருவண்ணாமலை பிறப்பு இறப்பு நீக்கக்கூடிய ஸ்தலம். மலையே இங்கு லிங்க வடிவில் இருப்பதால் அதை சுற்றினால் இறைவனையே சுற்றி வருவதற்கு சமமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனை வணங்குகிறார்கள்.
தொண்டர் இணங்கு மலை..
வானோரும் ஏனோரும் போற்றி வணங்கு மலை..
தன் அடியார் செய்த குறை எல்லாம் மறக்கு மலை..
நாளும் குறைவிலாச் செல்வம் அளிக்கு மலை..
-என்று அண்ணாமலை வெண்பாவில் குரு நமசிவாயர்
இம்மலையின் புகழைப் பாடியுள்ளார்.
தமிழர்கள் காலம்காலமாக கொண்டாடி வரும் விழாக்களில் 'திருக்கார்த்திகை தீப' விழாவும் ஒன்று. இம்மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" என்று 'வானத்தைப் போல' படத்தில் ஒரு பாடல் வரும். கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டை விளக்குகளால் அலங்கரிப்பதால் இருளுக்கு அங்கே இடமில்லை. எல்லா நாளும் கார்த்திகையாக இருந்தால் அந்த வீடு ஒளிமயமானதாக இருக்கும்.

Vikatan Photo Libraryதங்கள் வீட்டின் பெருமைக்கு காரணமான அண்ணனை உயர்த்திப் பாடும் பாடலில் கவிஞர் பா.விஜய் இந்த அழகான வரிகளை தந்திருந்தார். கார்த்திகை மாதம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை இதன் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம் ஆகும். கார்த்திகை தீப திருவிழா இங்கே ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்மீகத்தில் அக்னிக்கு பிரதான இடமுண்டு. ஆலயத்தில் தீபம் ஏற்றுவது, ஹோமம் செய்வது, தீப ஆராதனை செய்வது, தீமிதி நடத்துவது அதற்கு உதாரணங்களாக இவைகளைச் சொல்லலாம்.
இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை விளக்க வள்ளலார்
'அருட்பெருஞ்ஜோதி...அருட்பெருஞ்ஜோதி..தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி..." என்று கூறினார்.
"அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.."
.-என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார்.

"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியன் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று "
-நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் பொய்கையாழ்வார்
பாடியுள்ளார்.
அதன் விளக்கம் 'இந்த உலகை அகலாக நினைத்து கடல் நீரை நெய்யாக்கி சூரியனை நெருப்பாக்கி திருமாலுக்கு விளக்கேற்றி துன்பம் நீங்க வழிபடுவேன் என்பதாகும்.
இறை வழிபாட்டில் அக்னி முக்கியமானது என்பதற்கு இவைகள் சான்றாகும். கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாலை ஆறு மணி அளவில் வீடுகளில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வீட்டை சுற்றி அலங்கரிப்பார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்று விளக்கேற்றுவார்கள்.
மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இத் தீப திருவிழா. விளக்கில் உள்ள எண்ணெய்யும் திரியும் தங்களை கரைத்துக்கொண்டு நமக்கு பிரகாசமான வெளிச்சத்தை தருகின்றன. தன்னலமில்லாமல் பிறருக்காக வாழும் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்பதே இத்திருவிழா நமக்கு உணர்த்துகிறது.

முன்னோர்கள் தங்கள் மகனுக்கு திருமண வயது வந்த உடன் 'வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு பெண்' வேண்டும் என்று சொல்லி பெண் தேட ஆரம்பித்துவிடுவார்கள். தமிழர்கள் வரலாற்றில் அந்த வார்த்தைகள் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது.
தங்களுக்கு பிறகு குடும்பம் பிரகாசமாக செழித்து வளர வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
"விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்கப்போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.."
என்று கண்ணதாசன் தனது பாடல் ஒன்றில் எழுதியிருப்பார். விளக்கேற்றினால் நல்லது நடக்கும் என்பதை வலியுறுத்தி சொல்லியுள்ளார்.
"தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது.."
விழியே கதை எழுது என்று தொடங்கும் காதல் பாடலிலும்கூட தீபம் ஏற்றினால் நல்ல காலம் வரும் கனவு மெய்ப்படும் என்று எழுதியுள்ளார்.

கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் நீண்ட விளக்கம் ஒன்றை தந்துள்ளார். நம் முன்னோர்கள் எதை செய்தாலும் நல்வாழ்வுக்கு வழி வகுக்கும் வகையில் விஞ்ஞான ரீதியாக செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு அவனின் உள்வளர்ச்சிக்கு உதவுவதோடு முக்தியை நாடிச் செல்வதற்கும் உதவுகிறது. அந்த வகையில் விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது.
நாம் பார்த்து உணர்வதற்கு ஒளி மிக மிக அவசியம். வெளிச்சம் இல்லாவிட்டால் நம்மைச் சுற்றியுள்ள எதையும் பார்க்க இயலாது. கார்த்திகை தீப திருநாளில் முக்கியத்துவம் வெறும் வெளிச்சம் மற்றும் விளக்கு ஏற்றுவது பற்றி மட்டுமல்ல.
இம்மாதத்தில் குறைந்தது தினமும் மூன்று விளக்காவது ஏற்ற வேண்டும். ஒன்று நமக்காக இன்னொன்று நமக்கு நெருக்கமானவர்களுக்கு மற்றொன்று நமக்கு சிறிதும் பிடிக்காதவர்களுக்கு... இந்த மூன்று விளக்குகளையும் தினமும் ஏற்ற வேண்டும் என்று சொல்கிறார்.

கார்த்திகை மாதத்தில் பகல் பொழுது குறைவாக இருக்கும். ஆதலால் வெளிச்சம் அதிகமாக நமக்கு தேவைப்படும். யோகக் கலையில் இருப்பவர்கள் கைவல்ய பாதை எனும் ஞான நிலை முக்தி நிலைக்கு செல்லும் காலம் இதுதான்.
கார்த்திகை தீப திருவிழாவின் இன்னொரு முக்கிய நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். இவ்விழாவில் பனை மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. பனை மரத்தை வெட்டி எடுத்து வந்து சிவாலயங்களுக்கு வெளியே நட்டு அதைச் சுற்றி 10 அல்லது 15 அடிக்கு பனை ஓலைகளை கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள்.
மாலையில் தீபம் ஏற்றி சுவாமிக்கு ஆராதனை முடிந்து அந்த சுடரால் சொக்கப்பனை ஏற்றுவார்கள். அது நன்றாக கொழுந்து விட்டு எரியும் போது அந்த ஜோதியை சிவமாக எண்ணி பக்தர்கள் அனைவரும் வழிபடுவார்கள்.
எரிந்து முடிந்ததும் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை அனைவரும் நெற்றியில் இட்டுக்கொள்வார்கள். வயல்களில் விளைச்சல் அமோகமாக நடக்க மீதி இருப்பதை அதன் மேல் தூவுவார்கள். பயிர்களை தாக்கும் பூச்சிகள் இந்த சாம்பல் பட்டு அழிந்து விடும்.

கார்த்திகை திருநாளில் அவல் பொரி, நெல் பொரியில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து சுவாமிக்கு படையல் போடுவார்கள்.
இந்நாளில் நம் உள்ளத்தில் நம்மை அறியாமல் உள்ளே புகுந்து இருக்கும் தீய எண்ணங்கள், தீய சக்திகள் அனைத்தும் ஜோதியின் சக்தியால் எரிந்து அழிந்து போகும்.
கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்து உலகம் முழுவதும் தீய சக்திகள் அழிந்து போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். நல்லது நடக்கட்டும்.
===
திருமாளம் எஸ். பழனிவேல்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.