வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
தோழர் நல்லக்கண்ணு ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் இல்லத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"திணை நிலவாசிகள்" நாடகக் குழு சார்பாக பறை, சிலம்பம் மற்றும் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை குறித்த நாடகம் என கலைஞர்கள் சூழ் மாலை நேரத்தில் ஐயாவோடு சில மணி நேரங்கள் இருக்க நேரம் கிடைத்தது.
சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றவர் எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும், ஊரையும் கேட்டுத் தெரிந்துக்கொண்டார். நான் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி என்றதும் ஒரு சிறு புன்னகையோடு அங்கெல்லாம் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்துள்ளது என்று புன்னகைத்தார். ஒவ்வொரு தோழர்களும் அவர்களின் ஊர் பெயர்களை சொல்லும் போதும் அந்த பெயர்களை திரும்ப அவர் அழுத்திச் சொல்லும் போது புரிந்துக் கொள்ள முடிந்தது. இவர் கால்தடங்கள் படாத ஊர்கள் இல்லையென்று. அவரின் கனிவும் அணுகுமுறையும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அவரை சந்தித்து பேசிய போது அவரின் தூய்மையான அந்த குணம் தான் என்னைக் இக்கட்டுரை எழுத தூண்டியது. இது அரசியல் பதிவல்ல ஒரு கலைஞனாக, 98 வயதை தொடும் அப்பழுக்கற்ற மனிதனின் எளிமையை பறைசாற்றும் ஒரு சாமானியனின் பதிவு.
திரு. நல்லக்கண்ணு ஐயா வெறுமனே ஒரு அரசியல்வாதி என்று சொல்லோடு அடக்கிவிட முடியாது. அரசியல்வாதி என்ற சொல் இவருக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது. மிகச் சிறந்த கலைஞர். ஆகச் சிறந்த மனிதர், சுதந்திர போராட்ட வீரர், தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவர்.
97 வயது முடிந்து 98ம் வயதில் அடியெடுத்து வைக்கும் திரு.நல்லகண்ணு ஐயா இன்றைய இளைஞர்களுக்கு உந்து சக்தியாகவும், முன்னுதாரணமாகவும் திகழக்கூடியவர். முக்கியமாக கலைஞர்களுக்கு மதிப்பளிக்க கூடியவர். கலைஞர்களை அங்கீகரிக்க கூடியவர் என்று சொன்னால் மிகையாகாது.

அறவழியில் போராடியவர், அப்பழுக்கற்ற அரசியல்வாதியாய் திகழ்பவர், எளிய மக்களின் குரலாய் இருப்பவர். எளிய மக்களின் துயரம் போக்கும் அரசியல் தலைவராய் வாழ்கிறவர். 12 வயதில் மக்களுக்கு பணி செய்ய கிளம்பியவர் இந்த 98 வயதிலும் தொடர்ந்து மக்களின் பக்கம் நிற்கிறார்.
பொதுவாக அரசியலுக்கு வருபவர்கள் பொறுப்பில் இருக்கும் போதே முடிந்த அளவு சொத்துக்கள் சேர்த்து வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஊரிலும் இவ்வளவு சொத்துக்கள் உள்ளது. இத்தனை சொகுசு வசதிகள் உள்ளது என்ற மன ஓட்டம் பொது மக்களிடையே உள்ளது.

ஆனால் தன்னைத் தேடி வந்த ஒரு கோடி ரூபாயையும் கட்சிக்காகவும், விவசாயியின் நலனுக்காகவும் பகிர்ந்துக் கொடுத்தவர் திரு.நல்லகண்ணு ஐயா அவர்கள். 2022ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் உயரிய விருதான"தகைசால் தமிழர்" விருதும் அதோடு ரொக்கமாக ரூபாய் பத்து லட்சமும் பரிசாக கொடுத்தது தமிழக அரசு.
அரசு கொடுத்த பத்து லட்சத்தோடு, ரூபாய் ஐந்தாயிரமும் சேர்த்து பத்து லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக முதல்வர் நிவாரண நிதிக்கு ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள் கொடுத்தது வரவேற்பும், விமர்சனமும் பெற்றது அனைவரும் அறிந்ததே.

சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் வெளிவந்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தாவது,
"எங்க அப்பா, என் கூடப் பொறந்தவங்களுக்கு எல்லாம் அவங்கவங்க பேருல வீட்டை எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை மட்டும் மனைவி பேர்ல தான் எழுதி வெச்சாரு. பொது வாழ்க்கையில இருக்கேன். வீட்டையும் வித்து செலவு பண்ணிடுவேனோனு பயம் அவருக்கு என்கிறார் தோழர். நல்லக்கண்ணு."
எதையும் தனக்காக சேர்த்துக் கொள்ளாமல் மக்களின் நலனுக்காக போராடியவர், அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டவர், கலைகளையும், கலைஞர்களையும் மதிக்க கூடியவர், தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவர், அற வழியில் பல போராட்டங்களை வென்று காட்டியவர், இன்றைய இளைஞர்களுக்கு மிகப் பெரிய பாடமாக இருப்பவர். இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணி செய்து நீடூழி வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் "காம்ரேட்".
-கோ.ராஜசேகர், தருமபுரி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.