Published:Updated:

டி.எம்.எஸ் ஏன் ரொம்ப ஸ்பெஷல்? - 60ஸ் கிட்ஸ் பகிர்வு | My Vikatan

soundararajan.t.m ( Vikatan photo Library )

இதில் என்ன புதுமை? பாடகர்கள் எல்லா நடிகர்களுக்கும் பாடுவது இயல்புதானே, என்று உங்கள் மனதிலோடுவது என் காதுகளில் கேட்கிறது! ஒவ்வொரு நடிகரின் குரலுக்கேற்பத் தன் குரலை மாற்றிப் பாடியதுதான் அவர் செய்த அதிசயம்.

Published:Updated:

டி.எம்.எஸ் ஏன் ரொம்ப ஸ்பெஷல்? - 60ஸ் கிட்ஸ் பகிர்வு | My Vikatan

இதில் என்ன புதுமை? பாடகர்கள் எல்லா நடிகர்களுக்கும் பாடுவது இயல்புதானே, என்று உங்கள் மனதிலோடுவது என் காதுகளில் கேட்கிறது! ஒவ்வொரு நடிகரின் குரலுக்கேற்பத் தன் குரலை மாற்றிப் பாடியதுதான் அவர் செய்த அதிசயம்.

soundararajan.t.m ( Vikatan photo Library )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

‘கல்யாண வீடோ, காது குத்தல் விழாவோ,கருமாதி மண்டபமோ…இப்படித் தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் எனது பாடல்களை ஒலி பரப்புவதை நானே கேட்டு இன்புறச்செய்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி!’ என்பார் கவிஞர் கண்ணதாசன். அவர் அப்படிப் பெருமிதம் அடையக் காரணமாக இருந்தவர் டி.எம்.எஸ் என்றால், அதில் மிகையில்லை!

தொண்ணூறு வயதைத் தாண்டி (1922-2013) வாழ்ந்த TMS, சுமார் அரை நூற்றாண்டாகப் பாட்டால் நாட்டைக் கட்டிப் போட்டிருந்தார். இன்னும் பல ஆண்டுகளுக்கும் அவர் குரல் அவனியில் ஆட்சி செலுத்தப் போவது நிச்சயம்!

சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், நாகேஷ், ரஜினி, கமல்என்று பல நடிகர்களுக்கும் குரல் கொடுத்த அவர், டி.ஆரின் முதல் படமான ‘ஒருதலை ராகம்’ கதாநாயகனுக்கும் தன் குரலில் பாடி அசத்தியவர். மேலும் பல நடிகர்களுக்கும் தன் பின்னணிக் குரலால் புகழ் சேர்த்தவர்!

வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ்
வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ்

இதில் என்ன புதுமை? பாடகர்கள் எல்லா நடிகர்களுக்கும் பாடுவது இயல்புதானே, என்று உங்கள் மனதிலோடுவது என் காதுகளில் கேட்கிறது! ஒவ்வொரு நடிகரின் குரலுக்கேற்பத் தன் குரலை மாற்றிப் பாடியதுதான் அவர் செய்த அதிசயம். திரையில் நடிகர் பாடும்போது, அவர் சொந்தக் குரலிலேயே பாடுவதைப்போன்ற பிம்பத்தை ஏற்படுத்திய மறக்க முடியாத பாடகர்- டி.எம்.எஸ்.பாடலைக் கேட்கும்போதே, அது நடிகர் திலகத்துற்குப் பாடியதா அல்லது மக்கள் திலகத்திற்குப் பாடியதா என்பதை எமைப்போன்ற சாதாரண ரசிகனும் கண்டு பிடித்து விடுவான்! அதுவே அவரின் வெற்றி!

காதல், வீரம், சோகம், பக்தி, தத்துவம், துள்ளல்,நையாண்டி, தாலாட்டு, கிராமியம்,கோபம்,தாபம்,கெஞ்சல்,கதறல் என்று எல்லா எல்லைகளையும் தொட்டவை அவர் பாடிய பாடல்கள்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள்!அவற்றில் மேற்கூறிய அத்தனை தன்மைகளும் உண்டு. 2500 க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்கள்!

soundararajan.t.m
soundararajan.t.m
Vikatan photo Library

ஆலயங்களிலும், அன்பையும் பக்தியையும் பரப்பும் பாசக் குரல். சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த, தூங்கா நகரமாகிய மதுரையில் , பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இவர், ’மூவெட்டில் செய்யாத திருமணம் திருமணமல்ல!’ என்ற பழம் பாடலுக்கொப்ப, தன் 24 வது வயதில் சுமுத்ரா என்ற பெண்ணை மணந்தார்(1922-1946).

அக்காலத்தில் பிரபலமாக இருந்த காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று, மேடைக் கச்சேரிகளில் வளர்ந்து வந்த அவரை, 1950 ல் சுந்தர ராஜ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் என்ற திரைப்படத்தில் ‘ராதே என்னை விட்டுப் போகாதடி!’ என்ற பாடலைப் பாட ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் வாய்ப்பு கிடைக்க, தேவகி படத்தில் பாடி நடிக்கும் சிறப்பும் தேடி வந்தது.

வளமான குரலுடன், அழகான உச்சரிப்புடன் அவர் குரல் சினிமாவில் உச்சம் தொட, அத்தனை முன்னணி நடிகர்களும் அதற்கு வாயசைத்தார்கள்! ரசிகர்கள் வாய் பிளந்து ரசித்தார்கள்.

1962 ல் வெளியான பட்டினத்தார் படத்தில் பட்டினத்தாராகவும், அருணகிரி நாதர் படத்தில் கதாநாயகனாகவும் நடித்ததோடு, அப்படத்தில் வரும்’முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற திருப் புகழ் பாடலை, உலகறியச் செய்த பெருமை டி.எம்.எஸ்.ஐ மட்டுமே சாரும்.

soundararajan.t.m
soundararajan.t.m
Vikatan photo Library

ஒரு சாதாரண மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை நடைபெறும் அத்தனை நிகழ்வுகளுக்கும் இவர் குரல் பதிவாகி உள்ளது என்பதை சற்றே சிந்தித்தால் உணரலாம்! கரு தொடங்கி, கடைசியில் மண்ணோடு மண்ணாகிப் போகும் வரை,மனித வாழ்வோடு இணைந்தது இவர் குரல்!

‘காது கொடுத்துக் கேட்டேன் அஹா

குவா குவா சத்தம்…

இனி கணவனுக்குக் கிட்டாது

அவள் குழந்தைக்குத்தான் முத்தம்!…என்ற பாடலில்,

ஓராம் மாசம் உடலது தளரும்

ஈராம் மாசம் இடையது மெலியும்

மூன்றாம் மாசம் முகமது வெளுக்கும்

நாலாம் மாசம் நடந்தால் இரைக்கும்….

என்றும்,மேலும் மசக்கையின் தன்மை குறித்தும் விளக்குவார்!

கரு தோன்றி 10 மாதத்தில் குழந்தை பிறக்க, தாலாட்டுப் பாடியாக வேண்டுமே! அவர் பாடிய தாலாட்டுக்குத்தான் எவ்வளவு மகத்துவம்! தலை முறைகளைக் கடந்து இன்றைக்கும் அந்தத் தாலாட்டுப் பாட்டு, குழந்தைகளை மட்டுமல்ல-குடும்பத்தையே சேர்த்துத் தாலாட்டியல்லவா தூங்க வைக்கிறது!

‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

வளரும் விழி வண்ணமே

வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே!

நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே….’

soundararajan.t.m
soundararajan.t.m
Vikatan photo Library

பிறந்து,வளர்ந்து,பருவ வயதை அடைந்தாயிற்று.அப்புறம் வர வேண்டியதென்ன?காதல்தானே! அதுதானே இயற்கை!

‘நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்!

நாளோடும் பொழுதோடும்

உறவாட வேண்டும்!’…

‘கண்ணும் கண்ணும்

பேசியதும் உன்னாலன்றோ!

இன்பக் காதலிசை

பாடியதும் நீயேயன்றோ!…

அது என்னவோ தெரியவில்லை,காதலுக்கும் தண்ணீருக்கும் மிகுந்த தொடர்பு எப்பொழுதுமே உண்டு!

காதலர்கள் கடற்கரை தேடியும்,நதிகளின் தீரங்கள் நாடியும் ஓடிப் போய் ரசிப்பதே வாடிக்கை! படகை ஓட்டி மகிழ்வதில்தான் எவ்வளவு பரவசம்!

‘அமைதியான நதியினிலே ஓடும்-ஓடம்

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்!

காற்றினிலும் மழையினிலும்

கலங்க வைக்கும் இடியினிலும்…’

நீருக்கு அடுத்தபடியாகக் காதலர்களைக் கவர்வது மலர்கள்தானே!

‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன்!’

soundararajan.t.m
soundararajan.t.m
Vikatan photo Library

ஜெயிக்கும் காதல்கள், அந்தக் காதலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அமைதியோடு நின்று விடுகிறது!

ஆனால் தோற்கும் காதல்கள்களல்லவா வரலாற்றுப் புகழும், வரும் சந்ததியினர் பேசும் பொருளுமாகி இலங்குகிறது.

காதலர்கள் தோற்றாலும், அவர்கள் காதல் சாகா வரத்துடன், சரித்திரமாகி நிலை பெற்று விடுகிறது.

‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

என்னைச் சொல்லிக் குற்றமில்லை

காலம் செய்த கோலமடி,

கடவுள் செய்த குற்றமடி!’

‘நூலுமில்லை வாலுமில்லை

வானில் பட்டம் விடுவேனா?

நாதியில்லை தேதியில்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா?

இணைந்த காதலர்களுக்கோ இவ்வுலகமே சொர்க்கந்தானே!

‘இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

இதயத்தில் விழுந்தது திருமண மாலை

உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்

உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்…’

திருமணமாகிச் சில வருடங்கள் ஓடிய பிறகு, பக்தியிலும் மனம் பரவசமாவதுதானே இயல்பு!

‘ஆறு மனமே ஆறு-அந்த

ஆண்டவன் கட்டளை யாரு?

தேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத்

தெய்வத்தின் கட்டளை யாரு?

பெரும்பாலான மனிதர்களின் வாழ்வில், ஏதோ ஒரு நேரத்தில் பெருஞ் சோதனை ஏற்படுவதுண்டு. அதற்குக் காரணம் நெருங்கிய உறவுகளாக இருக்கலாம். கட்டிய மனைவியாகவோ, களிப்பூட்டிய மகன், மகளாகவோ இருக்கலாம். அப்படி ஏதும் நடக்காமல் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டக்காரர்களே!

டி.எம்.எஸ்
டி.எம்.எஸ்

‘சோதனை மேல் சோதனை

போதுமடா சாமி!

வேதனைதான் வாழ்க்கை என்றால்

தாங்காது பூமி!

உயிர்களுக்குத் தீங்கு செய்யாத உயர்ந்த மனிதர்கள் இந்த உலகத்திலேயே இறை நிலையை எய்தி விடுவதுண்டு.

நல்லவர்களுக்கு உதவ அந்த இறைவனும் இறங்கி வந்து மனித வேடமேற்பதுண்டு!

‘பாட்டும் நானே பாவமும் நானே

பாடும் உனைநான் பாட வைத்தேனே!

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்

காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?!

soundararajan.t.m
soundararajan.t.m

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம்!பாத்திரத்தின் வேலை முடிந்ததும்…விடை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்!

‘ஆடிய ஆட்டமென்ன?பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன?திரண்டதோர் சுற்றமென்ன?

கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு!வீதி வரை மனைவி!

காடு வரை பிள்ளை!கடைசி வரை யாரோ!?

இப்படி வாழ்வின் அனைத்துத் தருணங்களையும் தன் கணீர்க் குரலால் கவர்ந்தவர் நம் டி.எம்.எஸ்.இவர் போன்றவர்களுக்கு இறப்பு என்பதே இல்லை!

இவ்வுலகை இசை ஆளும் வரை, இவரின் ராஜாங்கம் நடந்து கொண்டுதான் இருக்கும்! ஒரு பிறவியின் முழுதான அனைத்துத் தருணங்களுக்கும் தன் குரலைக் காணிக்கையாக்கியவர் இவர்.

பின்னணிப் பாடகராக, நடிகராக வலம் வந்த இவரை, 2003 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ வந்து கௌரவித்தது!

2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’நடைபெற்ற போது, ‘செம்மொழியான தமிழ் மொழியாம்…’பாடலே இவர் இறுதியாகப் பாடிய பாடலென்று விபரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ, இறவாப் புகழ் பெற்றவர் இந்த டி.எம்.எஸ்., என்பதே சாசுவதம்!

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.