வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு புறம்.மேலும் அகலப் படுத்த முடியாத சாலைகள் மறுபுறம்.அகலப்படுத்தியே ஆக வேண்டுமென்ற நிலை வருகின்றபோது,விளை நிலங்களை வீணாகக் காவு கொடுக்க வேண்டிய அவலம்!போக்குவரத்து நெரிசலால் காலமும்,எரிபொருளும் வேஸ்ட் ஆவதோடு,எரி பொருளின்
தேவையும் அதிகரித்து,விலை கூடி,சாமானியர்களைச் சங்கடப்படுத்தும் நிலை!வாகனங்கள் விடும் புகையால் மாசடையும் சுற்றுச் சூழல்.இப்படி சங்கிலித் தொடர் போல சங்கடங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.இதோடு மட்டுமல்லாது வாகனங்களை நிறுத்த இடமில்லாததால், பலர் வீட்டுக்கு எதிரேயுள்ள சாலைகளையே ஆக்கிரமித்துக் கொள்ளுவதையும் அனுபவத்தில் காண்கிறோம். இதற்கெல்லாம் முடிவே வராதாவென்று ஒவ்வொருவர் மனத்திலும் ஓர் எண்ண ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும்.அதன் வெளிப்பாடு சில சமயங்களில் பெரிதாகவே தோன்றும்.

தனக்கு நெருங்கிய உறவினரை ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது,நெரிசல் ஏற்பட்டு நகர முடியாத நிலையிலும்,புதிய வேலைக்காண நேர்காணலுக்கு அவசரமாகச் செல்கையில் நம் வாகனம் சிக்கிக் கொள்ளும் போதும்,சில மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் செய்த ரயிலை,
விமானத்தைப் பிடிக்கக் கிளம்புகையில் எதிர் பாராத விதமாக சாலையில் ஏற்படும் தாமதம் காரணமாக நம் இரத்த அழுத்தமே எகிறும் போதும்,இப்படியாக நாம் நேரடியாகப் பாதிக்கப்படும் போதுதான் போக்குவரத்து நெரிசலின் தாக்கத்தை உண்மையாக உணர முடியும்!
சரி! இதற்கு என்னதான் மாற்று?எப்படி நம் சாலைகளை நெரிசலின்றி ஆக்குவது?என்பதை சாலை ஆய்வு நிபுணர்கள் சிந்தித்து வழிகளைக் கூறினால் எல்லோரும் இன்புற்று வாழலாம்!ஆனால் அந்த வகையில் சிந்தனைகள் ஏதும் ஓடி,சாத்தியமான அறிக்கைகள் ஏதும் அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் ஏதும் தெரிவிக்கவில்லை! எல்லோரும் சாலைகளை விரிவாக்க வேண்டுமென்றே கூறுவதாகத்தான் தெரிகிறது.
ஒரு குடும்பத்தில் வருமானத்தைக் கூட்ட உடனடி வழி வகை இல்லாதபோது, வருகின்ற வருமானத்திற்குள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். அதைப் போலவே, சாலைகள் விரிவாக்கம் சாத்தியமில்லாதபோது,இருக்கின்ற சாலைகளை விவேகத்துடன் பயன்படுத்திக் கொள்வதே வேண்டப்படும் ஒன்று. மேலும்,பிற வசதியான போக்குவரத்துச் சாதனங்களையும் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகின் மூன்றாவது இடத்தில் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து,நமது இந்திய நாடு மிகப் பெரும் ரயில்வே நெட் ஒர்க்கைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ,எல்லா லயன்களுமே அகலப் பாதை ஆக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு நில்லாது,பெரும்பான்மையானவை மின்சார மயமும் செய்யப்பட்டு விட்டதாகச் செய்திகள் மேலும் கூறுகின்றன. இந்த நிலையில், அதன் பயன்பாடு முழுமையான அளவில் இல்லை. அடிக்கடி ரயில்கள் விடுவதால் தண்டவாளங்கள் விரைந்து தேய்ந்து விடப்போவதில்லை!
மின்சாரமே பயன்படுத்தப்படுவதால், செலவு மட்டுமல்ல,சுற்றுச் சூழல் மாசும் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. ஒரு ரயில்,பல பேரூந்துகள் ஏற்றிச் செல்லும் பயணிகளை,எளிதாக ஏற்றிச் செல்லும். அத்தோடு விரைவாகப் போகவும் முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், ஐரோப்பிய நாடுகளில் இயக்கப்படும் பொதுப் போக்குவரத்தை ஆராய்ந்ததன் அடிப்படையிலுமே இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

பரீட்சார்த்த முறையில் நம் சோதனையைச் செயல்படுத்தும் பகுதியாக தாம்பரம்-செங்கல்பட்டு சாலையை எடுத்துக் கொள்ளலாம். தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்வே பாதையும், தெற்கே செல்லும் ஜிஎஸ்டி சாலையும் அருகருகேதான் செல்கின்றன. பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் பகுதிகளில் எப்போதுமே போக்குவரத்து ஜாம்தான்!அதிலும் வெள்ளிக் கிழமை மாலைகளில் நகரை விட்டு வெளியே செல்லும் சாலையிலும், திங்கட்கிழமை காலையில், நகரை நோக்கி வரும் சாலையிலும் பயணஞ்செய்ய அனைவருமே அஞ்சும் நிலைதான் இன்று வரை உள்ளது.
சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள வண்டலூர் மேம்பாலம் ஓரளவுக்கு நெரிசலைக் குறைத்துள்ளது என்பது உண்மை என்றாலும், வண்டலூரில் புதிய பேரூந்து நிலையம் திறக்கப்பட்டதும் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை இப்போது சொல்வது கடினமே!
நகரின் பல பகுதிகளிலிருந்தும் செங்கல்பட்டிற்கு மட்டுமே நூற்றுக்கணக்கான பஸ்கள் தினசரி செல்வதாலேயே நெரிசல் அதிகமாகிறது.மேலும் அச்சாலையில்தான் தென் மாவட்டங்களுக்கும், மத்திய மாவட்டங்களுக்கும் செல்லும் அனைத்துப் பேரூந்துகளும் செல்ல வேண்டியுள்ளன.
நம்முடைய பரிந்துரை இதுதான். தாம்பரத்திலிருந்தோ, நகரின் பிற பகுதிகளில் இருந்தோ செங்கல்பட்டிற்கு நேரடி பஸ் போக்குவரத்தை நிறுத்தி விட வேண்டும். மேட வாக்கம் பகுதியிலிருந்து, தாம்பரத்திற்கும், வேளச் சேரிக்கும் பஸ்கள் விடப்பட்டு, இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் பயணிகளைக் கொண்டு செல்ல வேண்டும். அதுபோலவே மண்ணிவாக்கம், முடிச்சூர் போன்ற ரயில் போக்குவரத்து இல்லாத பகுதிகளிலிருந்து பேரூந்துகள் தாம்பரம், கூடுவாஞ்சேரி போன்ற ரயில் வசதி உள்ள பகுதிகளுக்கு விடப்பட வேண்டும். அங்கிருந்து தேவைப்படும் அளவில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

இது போலவே முக்கிய ரயில் நிலையங்களிலிருந்து அவற்றுடன் தொடர்புடைய கிராமங்கள் மட்டுமே,பேரூந்தால் இணைக்கப்பட வேண்டும். ’பீக் அவர்ஸ்’ என்றழைக்கப்படும் காலை, மாலை வேளைகளில் 20,22 பெட்டிகளுடனும், மற்ற நேரங்களில் தேவைக்கேற்ப பெட்டிகளைக் கூட்டியும், குறைத்தும் ரயில்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் நிச்சயமாகக் குறையும். பயணிகளும், குறைந்த செலவில் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும். இதே முறையை நாளடைவில் பல இடங்களுக்கும் விரிவு படுத்துவதன் மூலம், சிறப்பான சாலை மேம்பாட்டைக் கையாள்வது எளிதாகும்.
பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டி அகல ரயில் பாதை அமைத்ததை, இதன் மூலம் லாபகரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். என் சிற்றறிவுக் கெட்டிய வரை இது பயன் அளிக்கும் என்றே தோன்றுகிறது.இதில் தேவைப்படும் மாற்றங்களை நிபுணர்கள் செய்து,இதனை மேலும் மேம்படுத்தலாம்!மக்களின் வாழ்க்கையும்,பயணமும் இனிதாக வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்தால் நிச்சயம் விடிவுண்டு.
-ரெ.ஆத்மநாதன்,
காட்டிகன்,சுவிட்சர்லாந்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.