வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இன்றளவிலும் நம் கிராமிய மணம் கமழும் பலவகை காரணிகளை பேசிக்கொண்டே போகலாம்,
அதில் குறிப்பானது திண்ணைகள் இந்த திண்ணைகள் எனப்படுவது பழங்கால ஓடுகள் வேய்ந்த வீடுகளில் வாசல் கதவுகளுக்கு அப்பால் வீட்டின் இருமருங்கும் பலர் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் மேடை போன்ற ஓர் இடமே இந்த திண்ணைகள்.
பல தலைமுறை கதைசொல்லிகளின் நியாபகங்களை நமக்குள் மீட்டெடுக்கும் இந்த திண்ணைகள் அவர்களின் இரவு நேர இருப்பிடங்கள்.

நமக்குள் கற்பனை கேந்திரத்தை உள்வாங்க செய்து ஓர் தனியானதொரு கற்பனை உலகுக்குள் நம்மை காசில்லாமல் அழைத்துச் சென்ற வாகனங்கள் தான் இந்த கதை சொல்லிகள்.
பெரும்பாலான பழங்கால கதைசொல்லிகளின் தனித்த அடையாளமானது பழைய கால புகையிலை சுருட்டுகள் அல்லது பீடிகள், பெண் என்றால் ரெங்கவிலாஸ் புகையிலை இவைகள்தாம் கதைசொல்லிகளின் கற்பனை அல்லது நியாபக பெட்டகத்தை தட்டி எழுப்பும் எரிபொருட்கள். சிலர் இதில் விதிவிலக்கானவர்கள்.
இவைகளை மென்று கொண்டே தம் பொக்கை வாய் பல் தெரிய கதைசொல்லிகள் “அந்தக் காலத்துல எல்லாம்” என்று டைட்டில் கார்டு போடும்போதே நம் எண்ணங்கள் யாவும் நமது கற்பனை குதிரையை தட்டி எழுப்பி அவர்களின் வாய்வழியே ஊடுருவும் சொற்களினூடே கால இயந்திரத்தை இயக்க ஆரம்பித்துவிடும்.
அனாயாசமான சொற் பிரயோகங்களை பயன்படுத்தி வெள்ளந்தியாக உச்சரிக்கும் அவர்களின் பாங்கைப் பற்றி மட்டுமே இன்னும் பல யுகங்கள் பேசிக்கொண்டே போகலாம்.

அப்படியாக அவர்கள் சொல்லும் கதை மாந்தர்களின் கதா நாயகத்தன்மைக்கு நாம் நம் விருப்பப்படி பலர்களை பொருத்திப் பார்த்து ரசிக்கலாம், சிலவேளை அபரிமிதமான கதாநாயக தோற்றத்திற்கு நம்மையும் பொருத்திப் பார்த்து நமக்குள் ரசித்துக் கொள்ளலாம்.
ஓர் காவிய படைப்பை கண்முன் நிறுத்திக் காட்டும் ரசனை அவர்களின் கதைகளுக்குள் பொங்கிப் பெருக்கெடுக்கும்.
சிலவேளைகளில் திகில் நிறைந்த பேய்’ கதைகளை அவர்கள் சொல்லியதாக எமக்கும் சில பல ஆண்டுகள் மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவர்கள் பேய்களோடு விளையாடியதையும், பேய்களை ஏமாற்றியதையும் கூறக் கேட்டு அந்த பிரமிப்பில் இருந்து அகலாமல் அந்த பேய் நினைவுகளை நெஞ்சில் சுமந்து எம் அருகாமையில் அவைகள் நடமாடித் திரிவதாகவே உள்ளூர உந்தப்பட்டு சிற்சில எட்டுக்களில் கடக்க வேண்டிய நமது வீட்டுக்கு வருவதற்குள் ஏழாயிரம் முறைகள் இதயத் துடிப்பானது துடித்து அந்தப் பேய் நிமிடங்களை நம் நாடி நரம்பெங்கும் பாய்ச்சும் அத்தோடு நம்மை பின் தொடர்ந்து ஏதோ ஓர் உருவம் நமக்குப் பின்னால் வருவதாக உணர்வுகள் உந்தப்படும்.

அவ்வுணர்வானது நம் வீட்டின் கதவருகே வந்து கதவை திறக்கும் வரை நம்மை ஓர் நரகப் பாதையிலே தப்பி வந்தவரைப் போல நிம்மதி கொள்ள வைத்தாலும் உறங்கி விடியும்வரை அவ்வுணர்வுகள் அடங்காது.
பிற்காலத்தில் பேய்கள் யாவும் வெறும் மனப்’பிரம்மைகள் என்று தெரியும் வரையிலும் அப்பேய் கதைகளின் அலாதியான அச்ச உணர்வு தந்த சுவாரசியம் இன்னும் அது போன்றதொரு கதை கலன் பேசும் தளங்களில் அஞ்சாமல் துஞ்சி நம்மை வீற்றிருக்க வைக்கும் அலாதியே தனிதான்.
சிலவேளைகளில் நாம் ஜனிப்பதற்கு முன்னரே தன் ஜென்மத்தை முடித்த நம் முன்னோர்களை இக்கதை சொல்லிகளின் வா(ய்)யிலாகவே நம் கண் முன்னால் நாம் கண்டு அவர்கள் வாழ்ந்த உலகுக்குள் ஒரு கால இயந்திரத்தின் துணை கொண்டு பயணித்து வந்த ஓர் அற்புதமான உணர்வை பெறுவோம்.

அப்படியாக வாழ்ந்து மறைந்த மனிதர்களின் வரலாற்றை மீட்டெடுத்து நம் மன வெளிக்குள் திரையிட்ட இக்கதை சொல்லிகள் நம் வரலாற்று ஆசான்கள்.
நல்ல நீதி போதனை கதைகளினூடே நம் மனவெளியை நலவாய் நீந்திக் கடக்க உதவிய நன்னெறி போதகர்களாகவும் அமைந்து வாழ்க்கையை நம் முன்னோர்களின் வழி நலமாக வாழக் கற்றுத் தந்தவர்கள் இந்த கதை சொல்லிகள்.
இரவு சிற்றுண்டி முடித்துக் கொண்டு பின்னிரவு பத்து மணியை கடந்தவுடன் கதை சொல்லியின் வீட்டுக் கதவு திறக்கப்படும் வரை வெண் திரையை மூடி இருக்கும் மடக்குத் திரை திறக்கப்பட்டு ஓர் திரைப்படத்தை காண இருக்கும் ஆவலில் ஒவ்வொருவரும் அவர் வீட்டுத் திண்ணையில் தவமிருப்பர்.
தமது ஆதர்ச கதாநாயகராக கதை சொல்லியின் வரவை எதிர்பார்த்தும் இன்றைய தினம் அவர் சொல்லப் போகும் கதை கலன் குறித்த எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆர்வம் மேலிட காத்திப்பர்.
பழங்கால நாகரிகமும், பண்டைய வாழ்க்கை முறையும் மீண்டுமொருமுறை கதை சொல்லிகளின் வாய்வழி மீண்டு வந்து எம்மிடம் வாழ்ந்து விட்டுப் போகும்.

நம் பாட்டர், முப்பாட்டர் திருமணம் மற்றும் அவர்கள் வாழ்க்கை முறை போன்றவற்றை நம் எண்ணத்திரைக்குள் கொண்டுவந்து அவர்களின் கலாச்சாரத்தை எமக்கு காட்டித் தந்து நாம் தற்போது உய்த்துணரும் கலாச்சாரத்தோடு சீர்தூக்கி பார்த்து உணர்ந்து கொள்ள வைத்த கலாச்சார மீட்பராகவும் இருந்துள்ளனர்.
நாம் வரலாற்றில் படிக்காத வெள்ளையர் வந்து விட்டுப் போன எச்ச சொச்சங்களை இக்கதை சொல்லிகள் தம் அனுபவத்தின் நுகர்வை மீட்டெடுத்து நமக்கு தரும்போது ஓர் புதிய வரலாற்று எச்சங்களை முதன் முதலில் நாம் கண்டுணர்ந்த தருணம் ஓர் கர்வம் தலைக்கேறும்.
அவை நாம் படித்த வரலாற்றின் மற்றொரு புள்ளியில் நின்று நம்மைப் பார்த்து சிரிக்கும்.இந்த கதை சொல்லிகளின் கதாநாயக பிம்பமும், அவர்களின் வார்த்தை மகுடிக்கு மயங்கிக் கட்டுண்ட தலைமுறை காலமெல்லாம் தொண்ணூறோடு தொலைந்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.
இன்றோ! ஒவ்வொரு வீட்டிலும் இந்த வாய்மை மிக்க வரலாற்றாசிரியர்கள் வாய்’ கட்டுண்ட விரியன் பாம்பைப் போல் வெறும் ஆறடி கட்டிலுக்குள் முடக்கப்பட்டு தமது கண்வழியே ரெண்டாயிரமாண்டின் புள்ளிங்கோ’வுடைய ரோபோட் அசைவுகளைக் கண்டு முனகிக் கொண்டிருப்பது நமக்கோ பல வரலாறுகள் இதுபோன்ற கதை சொல்லிகளின் வாய்வழியே வெளிவர வழியின்றி மென்று தின்னப்பட்டு அவர்களோடு ஜீரணித்துக் கொண்டிருப்பதாய் தோன்றுகிறது.

ஆனால் இன்றைய இளைஞர்களுக்காக “இந்த கெழம்’ ஏதாவது மூலையில் கிடந்து முனகிக் கொண்டே இருக்கும்” என ஓர் அலட்சியக் கடப்பாட்டோடு தம் முன்னால் விரிந்து கிடக்கும் பளிங்குத் திரைக்குள் பகடையாக உலாவும் போலி புரட்டு தொலைக்காட்சித் தொடர்களை பார்த்து பரவசத்துக் கொண்டிருக்கும்.
அதேநேரம்! இமைக்குள் தேக்கிவைத்த தம் முன்னோரின் காலச் சுவடிகளை தம் நெஞ்சுக்குள் தேக்கியபடி கசிந்து உருகி தாம் அவர்களிடம் கண்ட சான்றுகளையும் அவர்கள் வாழ்ந்து சென்ற எச்சங்களின் மிச்சத்தையும் எம் இதயத்தை விட்டும் எம் சந்ததிக்கு இறக்கி வைத்து விட மாட்டோமா! என்ற ஏக்கத்துடனே! பிதுங்கி வழியும் கண்ணீர் குமிழை தம் சேலை நுனி அல்லது துண்டின் முனையில் துடைத்தவாறே வரலாற்றின் ஆணிவேர்கள் வராண்டாவில் புரண்டு கிடக்கின்றன.
அந்தோ பரிதாபம்! அவர்களோடு எம் கலாச்சாரத்தின் ஆணிவேர் அதே கலாச்சாரத்தின் மின்னணு எச்சங்களால் மிச்சமின்றி பிடுங்கப்பட்டு தம் பரம்பரையின் பண்டைய வரலாற்றின் நகர்வை நாம் நுகராதவாறு மண்ணுழைய வைத்து விடும் என்பதுவே நிதர்சனம்.
சதை தளர்ந்து, நரை தள்ளி, தோல் சுருங்கி தளர்வு நடைபோட்டு தம் பழுப்பு நிற கண்களைச் சுருக்கி “அடடே! வாப்பா! நீ இன்னாருடைய மகனா?” என நம்மை விளித்து அன்பைச் சொரியும் அந்த பொக்கை வாயை அலட்சியப் போக்குடன் கடந்து விடுவீர்களானால் உங்களது அந்த இன்னாரின் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஓர் பேருவகையை உதாசீனப்படுத்தி சென்று விட்டீர்கள் என்பதுவே பொருள்.

இன்னும் நீங்கள் ஒவ்வொரு முறையும் “கிழடுகள்’ என்ற அலட்சியத்தோடு கடந்து செல்லும் அவர்கள் ஒவ்வொருவரும் காலச் “சுவடுகள்” என்பதை கருத்தில் கொள்க.
வரலாற்றில் எங்கோ! என்றோ வாழ்ந்து மறைந்தவர்களின் வரலாறுகளை புத்தகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள நமக்குத்தான் நம் குடும்பத்தில் நமக்கு முன்னால் வாழ்ந்து விட்டுப் போனவர்களின் வரலாறுகள் அவசியமற்றுப் போனது.
நம் வேரினை அறியா விழுதுகளாக நாம் நம்மின் வாழ்வை சுருக்கி தடமற்று வாழ்ந்து மறைவது ஓர் வாழ்வியல் பிழையின்றி வேறேது.
நமது செவிக்குள் வந்தறையும் பொக்கை வாய் போதனைகளை ஏளனச் சிரிப்போடு நாம் கடந்துவிட அவையோ என்றோ ஒரு நாள் நம் பிழையான வாழ்வால் பொருளற்று வீற்றிருக்கும் போது நெஞ்சுக்குள் வந்து பரிகசித்துச் செல்லும். இப்படியாக! இறுதி கதை சொல்லியும் தம் இமையை மூடி விடும் போது, அதனின் உயிர்த் துளி சலனமற்று உறையும் போது அங்கு வேரறுந்த தனி மரமாய் நாம் வெறுமையாவோம்.
மண் மூடும் முன் மகத்தான அந்த முதுமைக்குள் பொதிந்து கிடக்கும் நம் வரலாற்றுப் பேழை களை திறந்து வாசித்து தெளிவடைவோம். முதுமையை போற்றுவோம்....
எண்ணமும் எழுத்தும் ...
பாகை இறையடியான்..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.