வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அலைபேசி இல்லாத காலம் ..பொற்காலம். ஐந்து நிமிடம் கூட அலைபேசி இல்லாமல் இப்போதெல்லாம் யாராலும் இருக்க முடிவதில்லை.. வாட்ஸ் அப்பில் எத்தனை மெசேஜ் வந்திருக்கிறது? நாம் வைத்த ஸ்டேட்டஸ் மெசேஜை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள்? பேஸ்புக்கில் நாம் எழுதிய செய்திக்கு எத்தனை பேர் கமெண்ட் போட்டிருக்கிறார்கள்? இப்படி காலை எழுந்ததில் இருந்து இரவு வரை நம் வாழ்க்கையை ஆக்டோபஸ் போன்று ஆட்கொண்டுள்ளது.
அலைபேசி வசதி இல்லாத காலம் ... 'பொற்காலம்.' அட.. ஆமாங்க.. நான் இப்பவும் நினைத்து நினைத்து பார்த்து சந்தோஷப்படும் ஒரு காலம். (நீங்களும் தான்)அப்படி என்ன சந்தோஷத்தை கண்டீர்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது.

காலை எழுந்தவுடன் தோட்டத்திற்குச் சென்று அன்று மலர்ந்த பூக்களுக்கு எல்லாம் காலை வணக்கம் சொல்லி பிடித்த பூவை பறித்து லவ் யூக்கள் சொன்னது... குளித்து முடித்து அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று முதல் வணக்கத்தை இறைவனுக்குச் சொல்லி அன்றையப்பொழுதை ஆரம்பித்தது... மாலை பள்ளி விட்டு வந்ததும் முகம் கழுவி உடைமாற்றி பக்கத்து பானு அக்கா வீட்டிற்குச் சென்று கதைகள் பேசியது...(கதை என்றால் ..எப்பொழுது நாம் சினிமாவுக்கு, எங்கள் ஊர் தியேட்டருக்கு போகலாம் என்று கேட்பதுதான்...)
அப்போது எதிர்த்த வீட்டு கோமளா மாமி, அடியே ஆனந்தி, (ஊரில் அனைவருக்கும் நான் ஆனந்தி தான்) இங்க ஒரு நிமிஷம் செத்த வந்துட்டு போயேன் என்று சொல்ல நான் செல்ல..., காலையில் மாமா( உயரம் அதிகம்) கொடியில் போட்டிருக்கும் துணியை எடுத்து தரச் சொன்னதை , எடுத்து தந்து... அப்படியே போடாமல் மடிக்கவும்,செய்ய. மாமி சுடச்சுட பில்டர் காபி ஒரு கையிலும் மறு கையில் வாழைக்காய் பஜ்ஜியுமாய் வந்து நீட்டவும் சரியாக இருக்கும். மாமி வேண்டாம்ன்னு உதடு சொன்னாலும். சாப்பிடு என்று மூளை சொல்வதைக் கேட்டு ,சாப்பிட்டு மாமிக்கு நன்றி சொல்லி வீட்டிற்கு வந்து படித்தது...

படித்து முடித்ததும் அம்மாவிடம் அனுமதி கேட்டு( அப்பா பிறந்த நாளுக்கு பரிசாக அளித்த ஸ்பீக்கரில் ) இசைஞானியின் பாடலை அலற விட்டு அதனுடனேயே பாடியது... அப்பாவின் காலடி ஓசை வாசலில் கேட்கும் தருணம் ஸ்பீக்கர் ஒலியின் அளவைக் குறைத்தது...
இரவு அப்பாவின் அலுவலகக் கதை அக்காக்களின் கல்லூரி அட்ராசிட்டிகள் , பள்ளியில் நடந்த களேபரங்கள் என்று ...அன்று நடந்த கதைகள் ஒவ்வொன்றை பற்றியும் விலாவாரியாகப் பேசி ஒன்றாக கூடி உணவருந்தியது..

கிண்டல்கள் கேலிகள்என உரையாடல்கள் நீண்டுகொண்டேபோக... அம்மா போதும் "சாப்பிடும் போது அதிகம் பேசக்கூடாது", 'கை காயக்கூடாது' தரித்திரம் முதலில் கையை கழுவி விட்டு பிறகு அமர்ந்து பேசுங்கள் என்று சொன்னதை வேதவாக்காய் கேட்டு எழுந்து சென்றது.. விவித் பாரதியின் வர்த்தக ஒளிபரப்பை கேட்டுக் கொண்டே. பாத்திரங்களை துலக்கி அதனதன் இடத்தில் வைத்து, சமையலறை மேடையை சாணி போட்டு மெழுகி கோலமிட்டது..
தூங்கப் போகலாம் என்று நினைக்கும் போது (காரணமே இல்லாமல்) கரண்ட் கட் ஆக.. புழுக்கம் தாங்காமல் திண்ணைக்கு பாயையும் தலையணையும் எடுத்துச் சென்று நிலவைப் பார்த்தபடி, நட்சத்திரங்களுடன் உரையாடிகொண்டே உறங்கியது...

திருமணமத்திற்குப் பிறகு மொட்டை மாடிக்குச் சென்று காலாற நடந்து கதைகள் பேசியது.. அவருக்கு பிடித்தது ,எனக்கு பிடித்தது இப்படி ஒவ்வொன்றையும் அழகாய் பகிர்ந்து கொண்ட தருணங்கள்.. குறிப்பாக அத்தை மாமாவோடு உரையாடிய நிகழ்வுகள்.. மாமாவின் அறிவுரைகள், அத்தையின் அனுபவங்கள்.. இப்படி எல்லாவற்றையும் அழகாய் பகிர்ந்து கொண்டு சந்தோஷமாக இருந்த தருணம் அலைபேசி இல்லாத காலமே! உறவுகளை அழகாய் இணைத்தது. அலைபேசி வசதி இல்லாத அந்தக் காலம் 'பொற்காலம்'
ஜூனுன்' பார்த்ததெல்லாம் அழகான காலங்கள். மொத்தத்தில் இந்த அலைபேசி என்னும் சாத்தான் உள்ளேன் ஐயா என்று சொல்லும் வரை... உறவுகளுக்குள் பிரிவினை வந்ததே இல்லை. அப்படியே வந்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசி சமாதானப்படுத்தி விடுவார்கள் அப்புறம் என்ன திரும்பவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்... !
(அலைபேசியை தேவைக்கு மட்டும் உபயோகப்படுத்தினால்... இனி நாம் வாழ்கின்ற காலங்களும் பொற்காலமாகவே இருக்கும்) நம்மால் முடியும் முடியாதது என்று எதுவும் இல்லை! இன்றிலிருந்து முயற்சி செய்துதான் பார்ப்போமே! ஆல் தி பெஸ்ட்!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.