“நெடிய உருவம். இரட்டை நாடி. தொப்புளுக்குக் கீழ் மடித்துக் கட்டிய லுங்கி... லுங்கியை இடுப்போடு அழுத்திப் பிடித்துக் கொள்ளவும், காசு பணம் வைத்துக் கொள்ளவும் வசதியாகத் துருத்திக்கொண்டுள்ள, பர்ஸ்ஸுடன் கூடிய, சாயம் போன பச்சை கலர் பெல்ட்.
கழுத்தில் மாலை போலத் தொங்கும் கலர் கலராய்க் கட்டமிட்டத் துண்டு...
அய்யனார் சிலை போல வஜ்ரமாய் இறுகிய அகலமான மார்பு...
வயிற்றை அரைகுறையாய் மறைத்தபடி காட்டும் நீல நிற முண்டா பனியன்.
தினவெடுத்து கரணை கரணையாக உருண்டுத் திரண்டு நிற்கும் புஜங்கள்...

வீச்சரிவாளை அழுந்தப் பிடித்திருந்ததால் வலது புஜம் அதிகமாய் திரண்டதுபோல் தெரிந்தது.
அடர்ந்து வளர்ந்து வளைந்த முரட்டு மீசைத் துடிக்கக் கண்கள் கோபத்தில் கோவைப்பழமாய்ச் சிவந்திருந்தது.
“அந்தப் பய எங்கே போனாலும் விடமாட்டேன். தலையை வெட்டி வீசுவேன்...” சவால் விட்டபடி நின்ற வீரமுத்துவிடம் நெருங்க முடியாத அளவுக்குக் ‘குப்’பென்று சாராய வாடை வீசியது.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதை உணர்ந்த மாதய்யா சற்றே பொறுமையைக் கடைபிடித்தார்...
“வீரமுத்து...”
“......................” அவன் பேசும் நிதானத்தில் இல்லாததால் கண்களை உருட்டி மாதய்யாவைப் பார்த்தான்.
“அம்மாவும், பாட்டியும் என்னா சேதி?’ ன்னு அப்போபிடிச்சிக் கேக்கறாங்களே...! பதில் சொன்னியா அவுங்களுக்கு...?” சாதாரணக் குரலில், நிதானமாகக் கேட்டார்.
‘கெஞ்சினால் மிஞ்சுதலும், மிஞ்சினால் கெஞ்சுவதும்’தானே நடைமுறை.
“அய்யா...! நீங்க இதுல தலையிடாதீங்கனு முன்னேமே சொல்லிப் போட்டேன்...!” என்றான் குரல் உயர்த்தி.
“ஊர்ல எதுக்குடா நாங்கல்லாம் இருக்கோம்...? வேடிக்கைப் பாக்கவா...? ஆம்பளைங்க இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள்ளே பூந்து ரகளை கட்டுவே...! ஊர்காரங்க சவுங்கையா நிக்கணுமா...?” சீறினார் மாதய்யா.
சீற்றம் கண்டு. இறங்கிப் பேசினான் வீரமுத்து.
“அய்யா... அது வந்து...!” என்று ஏதோ சொல்ல வந்தவனை மேலே பேசவிடாது அடக்கினார் மாதய்யா.
“என்னடா அது வந்து, இது போயி...னு...” வீரமுத்துவிடம் கர்ஜித்தார்.
அதைத் தொடர்ந்துத் தன் தெருவாசிகளிடம் பேசினார்.
“குடி போதைல பக்கத்து ஊரான், நம்ம ஊருக்குள்ள வந்து வீடு பூந்து ரகளை கட்றான். வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கறீங்களே...?”
“..................”
“இன்னிக்கு இவங்களுக்கு...! நாளைக்கு நமக்கு... நெனப்பிருக்கட்டும்....!”
“கிராம சேவகரய்யா..! நடந்தது என்னன்னு தெரியாம...!” ஞாயம் பேச வாயெடுத்தான் வீரமுத்து.
“அப்படி என்னடா கொலைக் குத்தம் செஞ்சிட்டான் எங்கத் தெருப் பையன்... அவன் என்னதான் தப்பு பண்ணட்டுமே... அதுக்காக, நீ இப்படி வீடு பூந்துருவியா.?”
“.................”
“கேப்பாங்கேள்வி இல்லாத ஊருனு எண்ணமோ...? மொத வேலையா வீடு பூந்ததுக்கு உடையவங்ககிட்ட மன்னிப்புக் கேளு... அப்பறமா எதுவும் பேசு...!”
‘மன்னிப்புக் கேளு...!’ என்று மாதய்யா சொன்னதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள் தெருவாசிகள்.
“மன்னிப்புக் கேக்கணும்...! மன்னிப்புக் கேட்டுத்தான் ஆவணும்...!!” என்றெல்லாம் ஆங்காங்கேயிருந்து பரவலாகக் குரல் உயரத் தொடங்கியது.
“அய்யா...! உங்களுக்கு மரியாதை வெச்சி இறுதியாச் சொல்றேன். இந்த விசயத்துல நீங்க தலையிட்டா நல்லா இருக்காது... சொல்லிப்புட்டேன்...” எச்சரிக்கை செய்த வீரமுத்துவின் குரலில் உறுதி இருந்தது.
“வீரமுத்து... நீ மன்னிப்புக் கேட்ட அடுத்த நிமிசம்...; ஊர் பஞ்சாயத்துக் கூட்டி விசாரிச்சி அபராதம் போடறோம்...”
அந்த நேரத்தில், “டேய் மாது...! அவன் மன்னிப்பெல்லாம் கேட்க வாண்டாம், அவனை உடனே இடத்தைக் காலி பண்ணச் சொல்லு... பகவானே அவனை தண்டிக்கட்டும்...”
திடீரென்று பசுபதி குருக்களின் அம்மா, ராமுவின் பாட்டி, யாரும் எதிர்பாராமல் திடீரென்று குறுக்குச் சால் ஓட்டியதுதான் சூழ்நிலையை மேலும் இறுக்கமாக்கிவிட்டது.

வீரமூத்து குடிபோதையில் இருந்ததால், இன்னதுதான் பேசுகிறோம் என்கிற வரைமுறை இல்லாமல், ‘புழுத்த நாய் கூடக் குறுக்கே போக முடியாத’ வகையில் மிகவும் நாராசமாகப் பேசினான்.
கோபத்தின் ‘சுர்...ர்... ர்... ர்... ர்...’ என்று உச்சம் தொட்டது மாதய்யாவுக்கு.
ஒரே எட்டில் ‘சட்......’டென்த் தெருவாசலுக்குப் பாய்ந்தார்.
நந்தவன வேலியில் சமீபமாக நட்டுத் தளிர்ந்திருந்த பூவரசு வேலிக்காலை, இரண்டு ஆட்டு ஆட்டிப் பிடுங்கினார்.
சிலம்பம் சுற்றும் லாகவத்துடன், கையில் கோலுடன் வந்த மாதய்யா, வீரமுத்துவின் பின்னங்கால் பகுதியில் தாக்கப் போவதைப் போலப் போக்குக் காட்டினார்.
மாதய்யா ‘எக்ஸ்சர்வீஸ் மேன்’ என்பதாலும், தனக்குச் சூழ்நிலை சாதகமாக இல்லை என்றும் அறிந்த வீரமுத்து, சந்துப் பக்கமாக தப்பித்து ஓடினான்.
அவனைத் தொடர்ந்து, அவனால் ஏவப்பட்டக் கூலிப்படையும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடினார்கள்.
*******************
‘ராமு என்ன தப்பு செய்தான், எதற்காக இந்த கலாட்டா...?’ என்று ஊரில் யாருக்கும் தெரியவில்லை.
“வாராவாரம் வரும்போது ராமு வீரமுத்துவோட சாராயக்கடைல கடன் சொல்லி சரக்கடிச்சிருக்கான். கடனை வசூல் பண்ண வந்திருக்கான்...” வதந்தி பரப்பினார்கள்.
“அப்படியா...? ராமு குடிகாரனா...?” முகம் சுழித்தார்கள்.
“குருக்களாத்துப் பையனுக்கு குடிப்பழக்கம் எங்கேந்து வந்துது...?” வியப்புடன் வினவினார்கள்.
“கலிகாலம்...” என்று சமாதானம் செய்துகொண்டார்கள்.
“குருக்களய்யா ஏதாவது தெய்வ குத்தம் பண்ணியிருப்பாரோ…?” சம்சயமாய்ப் பேசினார்கள்.
“சிவன் சொத்து குல நாசம்னு சொல்றது சரியாத்தான் இருக்கு…” உறுதி செய்தார்கள்.
“நெருப்பில்லாம புகையுமான்னேன்....” சந்தேகித்தார்கள்.
“எந்தப் புத்துல எந்தப் பாம்புனு....” ஊகித்தார்கள்.
‘வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ...’ என்று கதை வைத்தார்கள்.
“சல்லிசானா... சந்தைக்கு வந்துத்தானே ஆகணும்...” எனக் காத்திருந்தார்கள்.
வீரமுத்துவும், கூலிப்படையும் ஓடிய பின், மாதய்யா உள்ளூர் ஜனங்களுக்குச் சொன்னார்.
“என்னதான் நம்ம ஊர் ஜனங்க தப்பேப் பண்ணியிருந்தாலும், தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா ஆகறதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாதுங்கறேன்...”
“....................”
“ஊர்க்காரங்க நாம ஒத்துமையா இருந்தாத்தான் எதையும் சமாளிக்க முடியும்கறேன்...”
“....................”
“அடிக்குப் பயந்து ஓடிட்டாங்க’னு நினைக்கப்படாது...! அடிபட்ட பாம்பு போல கருவங்கட்டிக்கிட்டு சமயம் பாத்துத் தாக்கிடுவாங்க...”
“....................”

கிராமத்து ஜனங்களை எச்சரிக்கை செய்துவிட்டுப் புறப்பட்டபோது...
“மாது, செத்தே உள்ளே வந்துட்டுப் போயேன்...” என்று அழைத்தாள் பசுபதி குருக்களின் அம்மா.
“..............” அமைதியாய் அருகே வந்தார்.
“மாது... என்னத் தப்பு தண்டா பண்ணிப்பிட்டான்’ ராமு. இப்படி அருவாளும் கையுமா என்னத்துக்கு வீரமுத்து இப்படிக் குதிக்கறான்...?
“................”
நம்மாத்து வாசல்ல வந்து இப்படி ஊர் சிரிக்கப் பண்ணிட்டானே...மாது...!”
“மாமி...! கொழந்தைகளுக்குக் காலாகாலத்துல செய்ய வேண்டியதைச் செய்யணும்...! இல்லேன்னா இப்படித்தான்...” குறிப்பாகச் சொன்னார்.
“என்னென்னமோ சொல்றேளே மாமா...! விவரமாச் சொல்லுங்கோ...!” பதறினாள் குருக்களின் மனைவி, ராமுவை பெற்ற தாய்..
“ராமுவுக்கு வீரமுத்து தங்கையோட...”
“என்ன சொல்றே மாது... வயத்துல புளி கரைக்கறதே...! இந்த கன்றாவியையெல்லாம் பார்க்கத்தான் பகவான் என்னை உசுரோட வெச்சிருக்கானோ... சிவ...சிவா...” ராமுவின் பாட்டி புலம்பினான்.
“ சும்மாப் பொலம்பறதுல அர்த்தமில்லே... நடந்தது நடந்ததுதான்... நடக்கவேண்டியதைப் பார்க்கோணும். அதுதான் புத்திசாலித்தனம்னேன்...”
“....................”
“முள்ளு மேல துணி விழுந்து நன்னா சிக்கிண்டாச்சு. மெது மெதுவாத்தான் எடுக்கணும்னேன்.
“....................”
பசுபதி வந்ததும் நீங்க அவனண்ட எதுவும் சொல்லவேண்டாம். என்கிட்ட அனுப்புங்கோ. எதபதமா எடுத்துத்சொல்றேன். பசுபதி ஹார்ட் பேஷண்ட் வேற...” சொல்லிவிட்டு வீடு திரும்பினார் மாதய்யா.
***********************
ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குப் புறப்பட்ட பசுபதி, ரயிலடி வினாயகர் கோவிலுக்குச் சென்று நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டார். காதுகளை பிடித்தபடி தோப்புக்கரணம் போட்டார்.

கோவிலை விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து போகும்போது, கடந்த இரண்டு நாட்களாக ராமுவின் ஒவ்வொரு அசைவும் காட்சியாக விரிந்தது அவர் முன்.
பதினைந்து வயதில் அவனைக் கட்டி வைத்து அடித்த வேப்பமரத்தைப் பற்றிச் சொன்னானே...ஏன்…?
அதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே நின்றானே மணிக்கணக்காய்... எதற்கு...?
கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை.
*************
டவுன் பஸ் ஏறினார்.
‘மேற்கே போகும் ரயில்’ ஒன்று, குடமுருட்டிப் பாலத்தில் “டடட்ட்... டட்ட்... டடாங்க்... டட்ட்... டட்ட்... டடாங்க்...” என வேகத்துக்குத் தக்க பேரோசை எழுப்பியபடி விரைந்தது.
ரயில் தண்டவாளங்களுக்கு இணையான சாலையில், பசுபதி பயணித்த நகரப் பேருந்தைத், துரிதகதியில் கடந்தது ரயில்.
‘இந்த ரயிலைப் போல ‘எல்லாம் கடந்து போகணும்... ஈஸ்வரா....’ மனதுக்குள் ப்ரார்த்தனை செய்து கொண்டார்.

பஸ்ஸை விட்டு இறங்கின உடனேயே பட்டாணித்தெரு பரிபூரணம் குருக்களை அழைத்துப் பேசினான்.
அவன் மூலம் தன் வீட்டு விஷயம் கேள்விப்பட்ட பசுபதி, ஏதோ ஒரு கெட்ட கனவு கண்டதைப் போல இருந்தது. துடித்துப் போனார்.
ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தார்....
அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய், மனைவியும், வயதான தாயாரும்... நடந்ததை விவரமாகச் சொன்னார்கள்... “மாதுவைப் போய் பார்...” என்றாள் அம்மா.
*******************
மாதய்யா, பூர்வ பீடிகையோடு எதபதமாக விவரத்தைச் சொன்னதும், பசுபதி ‘எள்ளிலை வேப்பலை’யாகக் குதிக்க ஆரம்பித்துவிட்டார். “இப்பவே போய் ராமுவை...” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். ‘கத்தட்டும்’ என்று விட்டார். ஆத்திரம் ஓரளவுக்கு அடங்கியதும் மாதய்யா எடுத்துச் சொன்னார். “பசுபதி... சொல்றதை கவனமாக் கேட்டுக்கோ...! உடனே டவுனுக்குப் போய் அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் ஊர்ப் பக்கம் வரவேண்டாம். உன் தலைக்கு ஆபத்து’னு ராமுவுக்கு ஒரு தந்தி கொடுத்துட்டு வந்துடு...” “அவன் இங்கே வரலைன்னா, இந்த வீரமுத்து அங்கேயே போய் தலைய வாங்கமாட்டான்னு என்ன நிச்சயம் மாது...” “....................” அவனுக்கு முன்னே நானே போய் அவன் கழுத்தை நெரிச்சிக் கொன்னுட்டு போலீஸ்ல சரண்டராயிடறேன்... கோடரிக்காம்பு...! கோடரிக்காம்பு...!!” அடக்க முடியாத ஆற்றாமையால் பொங்கிப் பொங்கிக் கத்தினார்.
“பசுபதி...! இந்த மாதிரி சமயங்கள்’லதான் விவேகம் வேணும். போ... நான் சொல்றபடி தந்தியோ, ட்ரங்கால் புக் பண்ணியோ, அல்லது ரெண்டுமோ பண்ணி, சேதியைக் கன்வே பண்ணிட்டு வா... மத்ததை அப்பறம் பாத்துக்கலாம்...”
“சரி மாது...!” என்று சொல்லிவிட்டு டவுனுக்குக் கிளம்பினார் பசுபதி குருக்கள்.
*********************
பேருந்து நிலையத்திற்குப் போகும்போதும்...
டவுன் பஸ் வரும் வரையிலும்...
பேருந்துப் பிரயாணத்தின்போதும்...
இறங்கித் தந்தி ஆபீஸ் போகும் வரை... நிறைய நிறையச் சிந்தனை செய்தார் பசுபதி.
சிந்தனையின் முடிவில், ‘மாதய்யா சொல்கிற யோசனை கொஞ்சமும் சரியில்லை...!’ எனப் பட்டது.

********************
அவசரத்துக்குச் சேதி சொல்வதற்காக , ராமு கொடுத்துவைத்திருந்த ஃபோன் நம்பருக்கு முதல்முதலாக “ஹலோ...” சொன்னார்...! - பசுபதி
“... ... ... ...”
“ராமு அப்பா பேசறேன்...”
“... ... ... ...” சிறிது நேரம் மௌனமாக இருந்தது எதிர்முனை.
“ராமு இன்னும் ரூமுக்கு வந்து சேரலீங்களே...!”
“நான் ராமு அப்பா பேசறேன்..”
“ஆட்சேபணை இல்லேன்னா, என்னண்ட தகவல் சொல்லுங்கோ... கன்வே பண்ணிடறேன்...”
“தயவு பண்ணி, ராமுவை உடனே புறப்பட்டு கிராமத்துக்கு வரச்சொல்லுங்கோ...! ரொம்ப அர்ஜெண்ட்...!!”
“சரி சார். சொல்லிடறேன்…”
“... ... ... ...”
எதற்கும் இருக்கட்டுமே என்று, ‘அவசரம்...! உடனே வரவும்’ என்று ஒரு தந்தியும் கொடுத்தார்.
******************
ராமு, பூட்டைத் திறக்கும்போதே, ஹவுஸ் ஓனர் தகவல் சொன்னார்.
“ஏன்...? எதுக்கு...?.. ன்னு ஏதும் சொன்னாங்களா...?”
“ம்ஹூம்... உடனே புறப்பட்டு வரச்சொல்லுங்கோனு மட்டும்தான் சொன்னார் உன் தகப்பனார்...”
“அப்பாதான் பேசினாரா...? அவர் பேசும்போது...”
“பதட்டமாத்தான் இருந்துது அவர் குரல்...! என்ன சேதின்னு, கேட்டேன்... எதுவும் கேட்காதீங்கோ...! அவனை உடனே வரச்சொல்லுங்கோ, புண்ணியமாப் போகும்னு சொல்லிட்டு ஃபோன் கட் பண்ணிட்டாரு...”
‘இன்று வரை அப்பா இந்த நம்பருக்கு போன் செய்ததே இல்லை. உடனடியாக வரச்சொல்கிறார்... அப்பாவே டவுனுக்கு வந்து ஃபோன் செய்கிறார்...! என்னவாக இருக்கும்...?’
‘ஒரு வேளை பாட்டி...? அப்படியே பாட்டிக்கு ஏதாவதுன்னா ஃபோன்ல சொல்லியிருக்கலாமே...!’
யோசித்துப் பார்த்ததில் எதுவும் பிடிபடவில்லை ராமுவுக்கு.
உடனடியாக ‘போன மச்சான் திரும்பி வந்த கதையாயாய்’ கிடைத்த பஸ்ஸில் ஏறிப் பயணப்பட்டான்.
*******************
பக்கிரி சொன்னதை நம்பாத வீரமுத்து, கையும் களவுமாக அகப்பட்ட சாவித்திரியின் முடியைப் பிடித்து மொத்திவிட்டு, அரிவாளோடு கிளம்பிச் சென்றதும், சாவித்திரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
ஒரு வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், ‘எங்கு செல்வது..?, என்ன செய்வது..?, எப்படி ராமுவின் தலையைக் காப்பது...?’ புரியவில்லை,
‘அடுத்த பஸ்ஸில், டவுனுக்குப் போனாள்.
உடனே வரச் சொல்லி ராமுவுக்குத் தந்தி கொடுத்தாள்...’
டவுனிலிருந்து திரும்பியவள் வீட்டுக்குப் போகவில்லை.
அந்தனூருக்கு வந்தாள்.
எல்லையம்மன் கோவில் பிரகாரத்தில் வந்து அமர்ந்தாள். அங்கேயே தலைமறைவாக இருக்கத் தீர்மானித்தாள்.
‘இரவோடு இரவாகப் புறப்பட்டு வருவான் ராமு. அவனை இங்கேயே மடக்கி இழுத்துக்கொண்டு ,கண்காணாமல் ஓடிவிடலாம்…’ என்ற திட்டம் அவளுக்கு.
அன்று முழுவதும் ஏதும் பிரச்சனையில்லை.
‘இது மெல்ல மெல்ல அடங்கிவிடும்...’ என்றுதான் மாதய்யாவும் நினைத்தார்.
இரவு மணி எட்டு இருக்கும். கலியன் அவசரமாக வந்தான். “அய்யா...! வீரமுத்து தங்கச்சி வூட்டை விட்டு ஓடிருச்சாம்... ஆளு படைங்க அங்கங்கே வலைபோட்டுத் தேடுறாங்க...”
இந்தச் செய்தி பரவியதும், அந்தனூர் அக்ரகாரத் தெருவில் அன்றிரவு யாரும் தூங்கவில்லை.
“களுதை...! எங்கே போயிரப் போவுது... எங்கனா... பங்காளிங்க வூட்டுக்குப் போயிருக்கும்... களுதைய காலைல போய் தேடிக்கலாம்... வுடுங்க...!” என்று சொல்லிவிட்டான் வீரமுத்து.
***********************
எல்லையம்மன் கோவில் பிரகாரத்திற்குள் முதன் முதலாக நுழைந்தாள் சாவித்திரி.
இரவு கோவிலில் தங்கவிட முடிவெடுத்தாள்.
தான் கொடுத்த தந்தியை கண்டதும் உடனே கிளம்பி வந்துவிடுவான் ராமு, அவனை வழியிலேயே மடக்கிவிடலாம் என்று திட்டமிட்டாள்.
இரவை இங்கே எப்படிக் கழிப்பது என அச்சமாகவும் சவாலாகவும் உணர்ந்தாள்.

ஏழைகளின் பாதுகாக்கும் குடிசைகளை இடித்துச் சாய்துவிட்டு, பலமாடிக் கட்டடங்களைக் கட்டும் பணக்கார வர்க்கத்தினரைப் போல, கோவிலைப் பாதுகாக்கும், காம்பவுண்டுச் சுவரைச் சாய்த்துவிட்டு, மரஞ்செடிகொடிகளைச் செழிப்பாய் வளர்ந்திருந்தது இயற்கை.
பிரகாரத்தில் காடாய் வளர்ந்துகிடக்கும் எருக்கு, துத்தி, தும்பை, வேம்பு, முடக்கத்தான், தூதுவளை, ஓணாங்கொடி, பாதாள மூலி (பிரண்டை), கண்டங்கத்திரி, வேளை, குப்பைமேனி, ஆனைநெருஞ்சி, கருநொச்சி, நன்னாரி, அம்மான் பச்சரிசி... இன்னும் பெயர் தெரியாத என்னென்னவோ செழித்து வளர்ந்திருந்தன
செடி-கொடிகள், புல்-பூண்டுகள், மரம்-மட்டைகள்.... எனக் காடாய் காட்சியளித்த அந்த வளாகம் அச்சத்தைத் தந்தன.
பள்ளிக்கூடத்தில், ஆங்கில ஆசிரியர் முருகுபாண்டி சார் நடத்திய As You Like It என்கிற Shakespeare நாடகத்தில் வந்த ஒரு காட்சி சாவித்திரியின் கண்முன் காட்சியானது.
Under the Greenwood Tree.
Come hither, come hither, come hither:
Here shall he see. No enemy
But winter and rough weather.
சகோதரனின் வஞ்சகத்தை விட இந்தக் காடு பாதுகாப்பானது என உணர்ந்து Duke Senior கானகத்தில் தஞ்சமடைந்ததைப் போல சாவித்திரியின் இந்தச் சூழலில் தன்னை இணைத்துக் கொண்டாள்.
‘எந்த நேரத்தில் பாசத்தைக் கக்குவான்... எந்த நேரத்தில் விஷத்தைக் கக்குவான் எனத் தெரியாத அண்ணனுடன் இருப்பதை விடக், காடுபோல் வளர்ந்த அடைசலில், பாம்பு... தேள்... பூரான்... அட்டை... ஜலமண்டலி... இத்யாதிகளிளோடு எச்சரிக்கையாக இருந்துவிடலாம்...’ என்று தீர்மானித்தாள்.
தெளிவான முடிவால், மரண பயம் நீங்கி, பயம் அற்றுப் போனது சாவித்திரிக்கு.
எல்லையம்மன் சந்நிதியில் ஒடுங்கி உட்கார்ந்தாள்.
எதற்கும் துணிந்துவிட்டதால், இரவின் அடர்ந்து கருத்த அமைதியோ, அந்த அமைதியைக் கீறும் சுவர்க் கோழியின் ‘கூ...................’ என்ற இடைவிடாத கூக்குரலோ, தவளைகளின் க்வாக்க்... க்வாக்க்...க்கோ, ஆந்தைகளின “ப்ப்வே... ப்ப்வே... ப்ப்வே...” அலறலோ...
ஏதோ ஊர்ந்து செல்கையில் ஏற்படும் தாவரங்களின் அசைவோ...
குறுக்கும் நெடுக்குமாகப் பறக்கும் ஃப்ப்ஃப்... ஃப்ப்ஃப்...ப்… ஃப்ப்ஃப்..., என்ற ஓசையோ…
தலைகீழாய்த் தொங்கியும் இரவை அனுபவிக்கும் வவ்லால்களோ...
எதுவும் பாதிக்கவில்லை அவளை.
அவள் பள்ளியில் படித்தபோது தமிழ் புலவேந்திரன் அய்யா, சீவகசிந்தாமணியில் சீவகன் பிறப்பை
"வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயர்அரங்கில் நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னற் கியல்வேந்தே"
உயிர்ப்போடு நடத்திய அந்தப் பாடல் சாவித்திரியின் நினைவில் வந்தது.
தன்னையும் சீவகனின் தாயாராய் உருவகப்படுத்திக் கொண்டாள்.
நிலவு உமிழும் ஒளியையும், அவ்வப்போது மேகத்தின் மறைப்பால் வரும் வெள்ளை இருளையும் மாறி மாறிப் பார்த்தபடி கண்ணிமைக்காமல், கண் மூடாமல் அமர்ந்திருந்தாள் சாவித்திரி.
பாட்டுக் குரல் சன்னமாகக் கேட்க ஆரம்பித்து...
கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்ததை கவனித்தாள் சாவித்திரி...
‘கடைசீ பஸ்ல இறங்கி, இருட்டு பயத்தைப் போக்கப் பாடிக்கிட்டே போறாக போல..’ என்று நினைத்துக்கொண்டாள்.
அதன் பிறகு அந்தவழியில் ஆள் நடமாட்டமே இல்லை.
**************
‘மதியம் 3 மணிக்குத் தந்தி கொடுத்திருக்கிறோம்... தந்தியைப் பார்த்துட்டுப் புறப்பட்டாக்கூட... விடிகாலை ‘முதல் பஸ்’ல அவசியம் வந்துடுவான் ராமு...’ நினைத்துக் கொண்டாள் சாவித்திரி.
‘ஒருவேளை தந்தி சரியான நேரத்துக்குப் போய்ச் சேரவில்லையென்றால்...?’ ஒரு கணம் யோசனை வந்தது.
“எப்பவும் நெகட்டிவ் திங்கிங் கூடாது சாவி…!” அடிக்கடி ராமு சொல்வதை நினைத்துக்கொண்டாள்.
எப்போது தன்னை அறியாமல் அண் அயர்ந்தாளோ தெரியாது
கண் விழித்தபோது ‘பொல......பொல......’ வென வைகரை அவளைத் தழுவியது. ‘மணி ஐந்து - ஐந்தரை இருக்கலாம்…!’ எனத் தோன்றியது.
‘ஐந்து மணிக்கு எடுக்கும் முதல் டவுன் பஸ் பிடித்து இதோ இப்போது வந்துவிடுவான் ராமு...’ நினைவே மகிழ்சியைத் தந்தது.
விடிகாலை அமைதியை அற்புதமாக்கும், வைகரைப் புள்ளினங்களின் கூவல்களின் கூட்டு ஒலியையும் மீறி ‘கிரி...ச்ச்...ச்ச்..கீ…கீ…கீ…ச்ச்ச்...’ என்ற பிரேக் சத்தத்துடன் வந்து நின்ற பஸ் சத்தம் தெளிவாகக் கேட்டது.
கோவிலுக்கு வெளியே வந்து ஸ்தலவிருட்சத்தின் பின்னே மறைந்து நின்றுப் பார்த்தாள்.
‘அதோ அவசர அவசரமாக வருவது யார்...?’
‘ராமுவேதான்...!’ தெளிவாகத் தெரிந்தவுடன் ஓட்டமாய் ஓடி ஆரத்தழுவினாள்.
“சாவி... நீ.....! இந்த நேரத்துல இங்க...?”
“அப்படியே திரும்புங்க...! போயிக்கிட்டே பேசுவோம். விவரமாச் சொல்றேன்...”
“எதுக்கு பயப்படறே சாவி. வா கோவிலுக்கு உள்ளே போய் பேசுவோம்...”
**************
கோவில் தலவிருட்சத்தில் ஜனங்கள் நேர்ந்துகொண்டு கட்டிய தாலிக்கயிறுகள், முடிகயிறுகள், தொட்டில்கள், கலர்க்கலராய் வளையல்கள், தேங்காய் நெற்றுக்கள், என்று தொங்கிக் கொண்டிருந்தன.
மேடையில் ஆங்காங்கே இருந்த அகல்கள், தேங்காய்மூடிகள், எலுமிச்சம்பழங்கள்,...இத்யாதிகள்
நேர்ந்துகொண்டு பொங்கல் வைத்ததன் அறிகுறியாய், கரிப் பிடித்த செங்கல்கள், எரிந்தும் எரியாத கொள்ளிக் கட்டைகள், நிர்மால்ய மாலைகள்… குங்குமம், மஞ்சள் தூள் பொட்டணங்கள்...
பிசுக்குப் பிடித்த அகல்விளக்குகள், சிக்குவாடையில் கிடந்த அரைகுறையாய் எரிந்த பஞ்சுத் திரிகள். பாகற்காய், பூசணிக்காய், தேங்காய் மூடிகள், எலுமிச்சைத் தோல் என பரிகாரத்திற்குத் தகுந்தாற்போல் விளக்கெறிந்த மிச்சச் சொச்சங்கள், உடைக்கும் முன், உடைத்த பின் பிய்த்துப்போட்ட தேங்காய் நார்கள்..
நசுங்கின தீப்பெட்டிகள், எரிந்தும் எரியாத ஊதுவர்திகள், காய்ந்த வெற்றிலைகள், பிரசாதம் சாப்பிட்டு வீசிய பாக்கு மட்டைகள், புரசு, வாழைச் சருகு தொன்னைகள், மரம் உதிர்த்த பழுப்பு இலைகள், காய்ந்து உதிர்ந்த சமித்துகள் (குச்சிகள்), துடைத்துப் போட்ட பிசுக்கு பிடித்த வஸ்திரங்கள்..
இப்படி என்னென்னவோ... மர மேடைக்குக் கீழ் கிடந்தன.
பல்வேறு உருவங்களிலும், வடிவங்களிலும், உயரங்களிலும்... பிரதிஷ்டை செய்யப்பட்ட, நாகர் சிலைகளும், நிறுத்தப்பட்ட உருவாரங்களும், மரத்தைச் சுற்றிலும் காவலர்களாய் நின்றன.
**************
சாவித்திரி சொன்ன விபரங்கள் அனைத்தையும் கவனமாகக் காதில் வாங்கினான் ராமு.
“எங்காவது கண்காணாம ஓடிப்போயிரலாம்... நேரம் வளத்தாம புறப்படுங்க... ராமு” அவசரப்படுத்தினாள் அவள்.
“சாவி...! நாம கோழைகள் இல்லே...!” சொல்லிவிட்டு மேடைமேல் ஏறினான்.

மஞ்சள் கிழங்கோடு கட்டப்பட்ட தாலிசரடுகள், மரம் பூராவும் விழுகளாய் தொங்கின.
கைக்கெட்டிய தூரத்தில், வெகு சமீபத்தில் கட்டிய, புத்தம் புதிய தாலிச் சரடு கழற்றி எடுத்தான்.
வைகரைச் ஆதவன் தீபமாய் ஒளிர...
“டுப்... டுப்... டுப்... டுப்...” என ஓசையெழுப்பிக்கொண்டே பிரதான சாலையில் சென்ற ஏதோ வாகனத்தின் சத்தம் மேளமாய் முழங்க
விடிகாலைப் புள்ளினங்களின், ஓசைகள் நாயனமாய் ஒலிக்க...
தென்றலாய் வீசிய வைகரைக் காற்று அவர்களை தழுவ...
கோபுர பொம்மைகள், சுவர் ஓவிய உருவங்கள், உருவாரங்கள், சூலங்கள், வேல்கள், எல்லாம் திருமணத்தைக் கண்ட களிக்க...
மரஞ்செடிகொடிகள்…காற்றில் ஆடி, மணமக்களை மகிழ்வுடன் வாழ்த்த.
பல்வேறு உயரங்களில், பின்னிப் பிணைந்து நின்ற நாகர்களெல்லாம் ஆசீர்வதிக்க...
தாலியை சாவித்திரியின் கழுத்தில் கட்டினான் ராமு.
தாலிகட்டும்போது, மங்கல இசையாய், மாட்டின் சலங்கைச் ஓசை அவர்களை வாழ்த்துவதுபோல், அருகாமையில் கேட்டது.
********************
மாதய்யா வழக்கம்போல் வீரனை ஓட்டிக்கொண்டு காவிரி ஸ்னானத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்.
“புறப்படலாமா...?” என்றாள் சாவித்திரி.
“நீ இப்போ என் பொண்டாட்டியாயிட்டே சாவி. அம்மன் சாட்சியா நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாச்சு...”
“.................”
‘இப்ப வா ஊருக்குள்ள போயி நாம ஞாயம் கேட்போம்.”
“ஞாயமா…? எடுபாடுதுங்க... வெறிபிடிச்சு அலையற என் அண்ணன் முன்னால நிச்சயமா எடுபடவே படாதுங்க...”
“ஏன் வீணா பயப்படறே. ரிலாக்ஸா இரு சாவி...” என்று உரிமையோடு அவளை அங்குமிங்கும் தொட்டுக் கிளர்ச்சியூட்டினான் ராமு.,
தன்னை இழந்த சாவித்திரி கலகலவெனச் சிரித்தாள்.
************
வீரன் காளையை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்த மாதய்யா எல்லையம்மன் கோவில் முகப்புக்கு வரும்போது தொப்ளான் இறந்த அன்று புடலங்கொல்லையில் கேட்ட அதே சிரிப்பு...ச் சத்தம் கேட்டது அவருக்கு.
‘பிரமையோ…?’ என்று சந்தேகம் வந்த்து.,
‘எதற்கும் உள்ளே சென்று பார்ப்போமே...!’ எனத் தோன்ற வீரனை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார்.
தலவிருட்ச மேடையில் ராமுவும் சாவித்திரியும்... ஒருவரை ஒருவர் அணைத்தபடி..இருக்க, அவள் கழுத்தில் தொங்கிய புத்தம்புதுத் தாலி.
*************************
“நீங்கதான் எங்களுக்கு வழிகாட்டணும்...” என்று ராமு மாதய்யா காலில் விழுந்தான்... அவனைத் தொடர்ந்து சாவித்திரியும் விழுந்தாள்.

“என் ஆசீர்தம் எண்ணிக்கும் உண்டுன்னேன்... உடனே தப்பிச்சு ஓடுங்கோ... என் மகன் துரையாத்துல போய் தங்கிக்கோங்கோ... சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணுங்கோ... இங்கே இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் உங்க ரெண்டு பேர் தலைக்குமே ஆபத்து…”
************************
மாதய்யாவின் எச்சரிக்கையை அடுத்து இருவரும், தம்பதியர்களாக, பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினார்கள்.
“எல்லையம்மா...! இந்த இளம் ஜோடிகளைக் காப்பாத்து...” என்று மனமுருகப் பிரார்த்தித்துக்கொண்டு வீரனோடு ‘பெரிய வாய்க்காலை’ அடைந்தார் மாதய்யா.
பஸ் ஸ்டாண்டை இருவரும் நெருங்கியபோது, “டேய் நம்ம வீரமுத்தண்ணன் மவளை டவுனுக்கெல்லாம் போய் தேடவேண்டாண்டா... அதோ பாரு அந்தப் பய கூட...” என்று பஸ்ஸ்டாண்ட் டீக்கடையில் நின்ற பலரில் ஒருவன் கை காட்டியபடி துரத்திவந்தான்.
****************
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது...
A K Ramanujan என்ற இந்திய ஆங்கில கவிஞரின் River என்கிற கவிதையில், வைகை நதியின் வெள்ளப் பெருக்கை........
Floods…
People everywhere talked
of the inches rising,
of the precise number of cobbled steps
run over by the water, rising
on the bathing places,
and the way it carried off three village houses,
one pregnant woman and a couple of cows
named Gopi and Brinda as usual என்று சொன்னதைப் போல
தண்ணீர் பெருகிக் கொண்டேயிருந்தது.
சாவித்திரியின் கையை கோர்த்தபடி ராமு, சாலையில் ஓட, வீரமுத்துவின் ஆட்கள் துரத்தியபடி ஓடிவந்தனர்.
ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை சாவித்திரியால்...
சாலையை ஒட்டி கரைபுரண்டு சுழித்து ஓடிக்கொண்டிருந்த காவிரியில் ‘தொபீர்...!’ எனக் குதித்தாள்.
“சாவீ...! இப்படிப் பண்ணிட்டியே என அவளைத் தொடர்ந்து அவளைக் காப்பாற்ற ராமுவும் குதித்தான்.
கோபியும் ப்ருந்தாவும் வைகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைப்போல,
இங்கே ராமுவும் சாவித்திரியும் காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
Death closes all: but something ere the end, Some work of noble note, may yet be done, என்று Alfred Lord Tennyson சொல்வதைப்போல்…
அனைத்துப் பகைகளையும் ஓரங்கட்டிவிட்டு, முத்தனூர்காரர்களும், அந்தனூர்க்காரர்களும் ஒன்றிணைந்து அகண்ட காவிரியில் சடலம் தேட ஆரம்பித்தார்கள்.

‘Death is a great Leveler!’ என்பதற்கு உதாரணமாய் அமைந்திருந்தது இந்த சடலத் தேடல்.
தொடரும்...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.