Published:Updated:

கலியன் மதவு|சமூக நாவல்|அத்தியாயம் 4

Representational Image ( ஓவியம் : அமரர் தேஜ் )

‘பிச்சுமணியின் தாத்தா உள்ளங் கையில் ரோமம் வளர வைப்பேன்’ எனச் சவால் விட்டுச் செய்து காட்டிய சிறந்த சித்த வைத்தியர். அவர் காலத்தில் இந்த வீட்டு வாசலில், நோயாளிகளை ஏற்றி வந்த, ரேக்ளா வண்டி, வில் வண்டி, கூண்டு வண்டி, பிளஷர் கார்... என்று எப்போதும் நின்றிருக்கும்.

Published:Updated:

கலியன் மதவு|சமூக நாவல்|அத்தியாயம் 4

‘பிச்சுமணியின் தாத்தா உள்ளங் கையில் ரோமம் வளர வைப்பேன்’ எனச் சவால் விட்டுச் செய்து காட்டிய சிறந்த சித்த வைத்தியர். அவர் காலத்தில் இந்த வீட்டு வாசலில், நோயாளிகளை ஏற்றி வந்த, ரேக்ளா வண்டி, வில் வண்டி, கூண்டு வண்டி, பிளஷர் கார்... என்று எப்போதும் நின்றிருக்கும்.

Representational Image ( ஓவியம் : அமரர் தேஜ் )

‘இடது பக்கம் சிவன் கோவில் மதில். மதிலை ஒட்டி வந்து வலக்கைப் புறம் திரும்பினால் அக்கிரகாரம் தெரு.

மேலக் கோடியில் கிழக்குப் பார்த்தபடி பெருமாள் கோவில். கோவில் மணி அடித்து பெருமாளுக்கு தீபாராதனை காட்டும்போது தன் வீட்டு முன் நடு வாசலில் வந்து நின்று பெருமாளே...! வரதராஜா...வரதராஜா.....! என்று, கன்னத்தில் போட்டுகொண்டு தலைக்கு மேல் கை தூக்கிக் கும்பிடுவார்கள்.

கிட்டத்தட்ட இருநூறு வீடுகள் இருந்த பெரிய தெரு. நீளமாகப் பரந்து விரிந்து கிடக்கும் தேரோடும் வீதி. கீழக் கோடியில் தெற்குப் பார்த்தபடி ஈஸ்வரன் கோவில்.

நடுவில் வடக்குப் பார்த்தபடி ராம பஜனை மடம்.

தெற்குப் பார்த்த மனைக்காரர்கள் மீது, வடக்குப் பார்த்த மனைக்காரர்கள் பொறாமைப் படுவார்கள்.

காரணம் தெற்குப் பார்த்த மனைக்கு வால் வீச்சு அதிகம். கிட்டத்தட்ட ஒரு ஃபர்லாங்கு இருக்கும். பட்டா எல்லை முடிந்தவுடன் தார் ரோடு.

ஈஸ்வரன் கோவிலுக்கு நேர் எதிரில் நந்தவனம். தாண்டி தெற்குப் பார்த்திருப்பது பசுபதி சிவாச்சாரியாரின் வீடு.

நந்தவனம் இருப்பதால் பெருமாள், வசந்த உற்சவத்தின் பத்தாம் நாள் ரதம், சிவாச்சாரியார் வீட்டு முகப்புக்குப் போகாது.

சந்து திரும்பும்போது முதலில் இருக்கும் தெரு முனை ‘கார்னர்’ வீடான வைத்தியர் கோபாலன் வீட்டு முன் ரதம் நிற்கும். அங்கே கொண்டு வந்துதான் அர்ச்சனைத் தட்டு கொடுப்பார் குருக்கள்.

குருக்கள் வீட்டுக்குப் அடுத்த வீடு சிவன் கோவில் ட்ரஸ்டியுடையது. வீர சைவரான அவர் பெருமாள் தேர் வீட்டின் முன் வராமைக்கு சந்தோஷமே பட்டார்.

பெருமாள் கோவிலைச் சுற்றி மட விளாகம். அதுவும் குறுகலானதுதான் என்றாலும், அங்கே கோவில் ட்ரஸ்டி குடியிருப்பதை அனுசரித்து, அப்படி இப்படி, அகட விகடம் செய்து எப்படியோ ரதத்தை கொண்டு போவார் கம்மூடி அய்யா.

இருநூறு வீடுகள் இருந்த அந்தத் தெருவில் நடு நடுவே இடிந்து சிதிலமாகிக் கிடக்கும் பாழ்மனைகளின் எண்ணிக்கைதான் இன்று அதிகம்.

கூட்டி மெழுகி விளக்கேற்றும் நிலையில் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது வீடுகள் இருந்தாலும், நல்ல பராமரிப்புகளோடு ஆரோக்கியமாக இருக்கும் வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இருக்கும் வீடுகளில்; வாரிசுகள் இல்லாத, இருந்தும்கூட தலையெழுத்தை நொந்து; தனியாகக் காலம் கழிக்கும் முண்டகப் பாட்டிகள் இருபது வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

மாதா மாதம் தபால்காரர் தரும் மணியார்டர் தேதியாகச் சுருங்கிப் போனவர் சிலர்.

அவர்களாலெல்லாம், சத்திரம் போன்ற ஹோ’வென்ற பெரிய்ய்ய்ய... வீடுகளை எப்படிப் பராமரிக்க முடியும்...?’

Representational Image
Representational Image
ஓவியம் : அமரர் தேஜ்

காரை பெயர்ந்து பல்லிளித்தாலும்; ஓடுகள் புரண்டு வீட்டினுள் மழை வெள்ளம் நிறைந்தாலும்; தேள், பாம்பு என விஷ ஜந்துக்கள் வீட்டினுள் புகுந்தாலும்; அரச மரம் சுவர்களை சிதைத்தாலும்..., எதையும் தாங்கும் இதையம் உள்ளவர்களாக வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்தத் தெருவிலேயே நிலபுலங்களை கட்டிக்காத்து, மாடும் மனையுமாக, சொந்த சாகுபடி செய்துகொண்டு, எட்டுக்கண் விட்டெறியும் ஒரே ஒருவர் மாதய்யா மட்டும்தான்.

சந்து திரும்பும்போது வைத்தியர் பேரன் பிச்சுமணி சதாசிவத்தோடு வெட்டியாக வெகண்டைப் பேச்சுப் பேசிப் பொழுது போக்கொண்டிருந்தான்.

மாட்டு வண்டியைப் பார்த்ததும் நக்கலாகச் சிரித்துக்கொண்டே தொண்டையைச் செருமிக்கொண்டு, வார்த்தைகளால், அவரைத் தாங்கத் தயாரானான்.

‘பிச்சுமணியின் தாத்தா உள்ளங் கையில் ரோமம் வளர வைப்பேன்’ எனச் சவால் விட்டுச் செய்து காட்டிய சிறந்த சித்த வைத்தியர்.

அவர் காலத்தில் இந்த வீட்டு வாசலில், நோயாளிகளை ஏற்றி வந்த, ரேக்ளா வண்டி, வில் வண்டி, கூண்டு வண்டி, பிளஷர் கார்... என்று எப்போதும் நின்றிருக்கும்.

அவரின் வைத்தியத் திறமையைக் கேள்விப்பட்டு வெளியூர்களிலிருந்தெல்லாம் கூட்டம் அலை மோதும்...

பிச்சுமணியின் அப்பா காலத்தில் பெருங்காயம் வைத்த பாண்டமாய் ஓடிக்கொண்டிருந்தது...

கலுவத்தில் மூலிகைகள் அரைபடும் ஓசையும், உரலில் மருந்துச் சரக்குகள் இடிபடும் சத்தமும், இரும்புக் கடாயில் லேகியம் கிண்டும் ஓசையும், கேட்டுக்கொண்டிருந்த வீட்டில், பிச்சுமணியின் தலைமுறையில் இன்று இப்படி வெட்டி அரட்டைச் சத்தம் கேட்கிறதே...!’ என நினைத்துக்கொண்டார் மாதய்யா.

“அய்....யா.......... காலனித் தெருவுல போயி, மக்கள்சேவை செஞ்சிட்டு வராப்ல இருக்கு...?” என்று சதாசிவத்திடம் சொன்னான் பிச்சுமணி.

ஜூனியர் தேஜ்
ஜூனியர் தேஜ்

“தொப்ளான் செத்துட்டானோன்னோ...! துக்கம் கேட்க வேண்டாமோ...?” என்றார் சதாசிவம் பதிலுக்கு.

“என்னங்காணும்...! பண்ணையாள் செத்ததுக்கு துக்கம் கேட்க்ப போறதுல என்ன தப்புன்னேன். தாயா புள்ளையா பழகரவன் யாராத்தான் இருந்தா என்னன்னேன்...!” கொம்பு சீவினார் பிச்சுமணி.

இவர்களின் வெட்டிப் பேச்சை காது கொடுத்து கேட்கப் பிடிக்கவில்லை மாதய்யாவுக்கு.

அந்த நேரத்தில் இரண்டு தெரு நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் அர்த்தமில்லாமல் குலைத்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.

வண்டியை அவிழ்த்துவிட்டு, மாதய்யா தோட்டத்துச் சந்து வழியாகச் சென்றார்.

Representational Image
Representational Image
ஓவியம் : அமரர் தேஜ்

வாளியோடு தலையில் தண்ணீரைக் கவிழ்த்துக் கொண்டபோது தொப்ளானுக்காக அவர் வடித்த கண்ணீரும் அதில் கலந்து கரைந்தது.

வாசல் திண்ணையில் இருந்த ‘சாரமனை’யில் குந்தலாம்பாள் தயாராக வைத்திருந்த வைத்திருந்த சொம்புத் தண்ணீரை எடுத்துச் சென்று, தெருவில் இறங்கி நின்று கால் கழுவி, வாய் கொப்பளித்து விட்டு வீட்டுக்குள் வந்தார்.

சாப்பாடு பிடிக்கவில்லை. பெயருக்கு ஏதோ கொரிந்தார்.

“புள்ளையப் பெத்து என்ன சுகத்தைக் கண்டே குந்தலாம்பா... உனக்கு நீயே பரிமாரிண்டு திங்கறதுதான், நீ வாங்கி வந்த வரம் போல...”

“ஏன் அவனைக் கரிக்கறேள். எங்கேயோ பெத்த புள்ள சவுரியமா இருந்தா சரிதான்... உத்யோக நிமித்தம் எங்கியோ எட்டக்க இருக்கான்.”

“ஆமாண்டீ... நீ வக்காலத்து வாங்கு அந்தப் பயலுக்கு...” என்று தொடங்கிய அவரை மேலே பேச விடவில்லை குந்தலாம்பாள்.

அதோ அந்த வெத்தலைச் செல்லத்தை ரேழி மாடத்துல வெச்சிருக்கேன். சித்தே போய் விஸ்ராந்தி எடுங்கோ...!”என்று மடை மாற்றினாள்.

“மடை மாறும் முன்... “ இந்த மண்ணை மதிக்காதவன் உருப்படவே மாட்டான்...” என்று சீறிப்பாய்ந்துவிட்டு, வெற்றிலைச் செல்லத்தோடு சென்றவர் தோள் துண்டால் ‘பட்...பட்...பட்...’டென தூசித் தட்டிவிட்டு வாசல் சாரமனையில் சாய்ந்துகொண்டார்.

வெற்றிலை போடக்கூடத் தோன்றவில்லை. தொப்ளானின் இழப்பைக் கூட மனது ஒருவாறாக ஜீரணித்துக்கொண்டுவிட்டாலும், அந்தப் புடலங்கொல்லையில் கேட்ட அசரீரி மீண்டும் மீண்டும் மனதை அலைக்கழித்தது.

தெருவாசிகள் ஒவ்வொருவரையும் மனதிற்குக் கொண்டு வந்தார். ‘இவனாக இருக்குமோ...? அவனாக இருக்குமோ...?’ என்று அசைபோட்டுச் சோர்ந்து போனார்.

இன்னார் என்று உறுதியாக எதுவும் பிடிபடவில்லை. ‘ஏதோ விபரீதம் நடப்பதாக’ மட்டும் மனதிற்குப் பட்டது. ‘அதைத் தடுத்து நிறுத்த முடியாது...’ என்றது மாதய்யாவின் உள்ளுணர்வு.

புடல் கொல்லை சம்பவம் ‘காதல் இல்லை, காமம்...’ என்றது அவர் மனம்.

சாப்பிட்ட இலையை தெருவில் வீச வந்தாள் குந்தலாம்பாள். ‘இந்த எச்சில் இலையைத் தூக்கி வீசுவது போல அந்தப் பெண்ணையும் தூக்கி வீசிவிடுவான் அந்தக் காமுகன் என்று யோசித்தார் மாதய்யா.

‘அந்தனூர் அக்ரகாரத் தெருவையே கொளுத்திப்புடும் எங்க அண்ணன்...! என்றாளே அந்தப் பெண்...! அப்படியானால் பெண் முத்தனூரைச் சேர்தவள்தான். முத்தனூர் பெண்ணை... சுத்துற அந்தனூர் ஆண் யாரா இருக்கும்....?’

“என்ன ஓய் பலமான யோசனை...” என்று கேட்டுக்கொண்டே வெற்றிலைச் செல்லத்தில் கை வைத்தபடி எதிரில் உட்கார்ந்தார் பசுபதி குருக்கள்....

மாதய்யா ஏதும் பேசவில்லை.

Representational Image
Representational Image
ஓவியம் : அமரர் தேஜ்

“தொப்ளான் போய் சேந்துட்டானே , எப்படி தொடர்ந்து விவசாயத்தைப் பார்க்கறதுன்னு யோஜனையோ...? சரீ... தொப்ளானுக்கு என்ன செஞ்சிதாம்...?”

குருக்களின் முதல் கேள்வியை தவிர்த்துவிட்டு, “ராத்திரி படுத்தவன் தூக்கத்துலயே போய்ச் சேர்ந்துட்டான்.

“...............”

“நம்ம வயசுதான் இருக்கும் அவனுக்கு. கொடுத்து வெச்ச ஆத்மா...!” என்று இரண்டாம் கேள்விக்கு பதில் சொன்னார்.

சின்னக் குழந்தைகள் சாப்பிடுவதுபோல, நெஞ்சில் பாதி விழ மீதி வாயில் விழுமாறு சீவலை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டார் குருக்கள். போதாமைக்கு மீண்டும் சீவல் அள்ளினார். வெற்றிலை மேல் சுண்ணாம்பை அப்பிக் கசக்கி வாயில் திணித்தார் குருக்கள்.

வாயில் போட்டு மென்று துப்புவதுதான் என்றாலும் மாதய்யா தாம்பூலம் தரிப்பதே தனி அழகு.

தலை நிற்காத பச்சைக் குழந்தைபோல, கவனமாக வெற்றிலைச் செல்லத்தை எடுத்து மடியில் வைத்துக் வைத்துக் கொள்வார்.

வலது கையால் செல்லத்தின் அடிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு இடது கையால் மூடியை விரியத் திறப்பார்.

தேவையான வெற்றிலைகளை ஒவ்வொன்றாக நிதானமாக எடுத்து மடியில் வைத்துக் கொள்வார்.

தேர்ந்த ஓவியன் தூரிகையால் வண்ணம் எடுப்பதைப் போல் டப்பிவிலிருந்து ஆள்காட்டி விரலில் சுண்ணாம்பை எடுப்பார்.

வெற்றிலையின் பின்புறத்தை மெதுவாய்த் தன் யோக வேஷ்டியில் தடவித் துடைப்பார்.

கான்வாஸில் வண்ணம் தீட்டுவதைப் போல் கலை நயத்துடன் வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவி, அழகாய் மடித்து இடது கை விரலிடுக்கில் செருகிக் கொள்வார்.

அடுத்து, ஆள்காட்டி விரல், நடு விரல், கட்டை விரல் மூன்றும் சேர்ந்து அளவாய் எடுப்பார் சீவலை.

அன்னாந்த நிலையில் , ஒரு துணுக்குக் கூட சிதறாதவாறு எடுத்த சீவல் மொத்தமும் வாய்க்குள் செல்லும்.

இடது கைவிரலிடுக்கில் தயாராயிருக்கும் வெற்றிலைப் பட்டியை ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் போட்டு நளினமாய் மெல்வார்.

“அப்பறம் என்ன விசேஷம் குருக்கள்வாள்...?” என்று கேட்டுக் கொண்டே மாதய்யா வெற்றிலைப் போட ஆயத்தமானார்.

“என் புள்ளாண்டான் வந்திருக்கான். உங்களை வந்து பார்க்கணும்னு சொல்லிண்டிருக்கான் ...”

“அப்படியா... இப்ப என்ன விசேஷம்னேன்...?”

“உமக்குச் சேதியே தெரியாது போல இருக்கு... வாரா வாரம் சனி ஞாயிறு லீவுக்குத் தவறாம அவன் வரானாக்கும்...”

“அப்படியா...? நேக்குத் தெரியாதே...”

“ஏண்டா அனாவசிய செலவுன்னு கேட்டதுக்கு, அப்பா அம்மாவோட ரெண்டு நாள் இருந்துட்டுப் போலாம்னுதான்’னு சொல்லி வாயடிக்கறான்...”

உன் புள்ளாண்டான் ராமுவுக்கு வயசு முப்பது இருக்காது...?”

“ஏன்...! முப்பத்தொண்ணாறது. கல்யாணப் பேச்செடுத்தாலே பிடி கொடுக்க மாட்டேங்கறான். இங்கே வரும்போது அவனுக்கு நீர் எடுத்துச் சொல்லும் ஓய்...!”

“ஓ...! சொல்றேனே...! வீட்லதான் இருக்கானா...?”

“அதையேன் கேட்கறீர்... சொல்றதுதான் அப்பாம்மாவோட இருக்க வரேன்னு, ஒரு மணி நேரம் கூட முழுசா வீட்ல தங்கறதேயில்ல.”

“..................”

“ரெண்டு நாளும் எங்கியோ சுத்தறான். தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை. என்னத்தை கேட்கறது சொல்லு...?”

“அப்படி எங்கதான் சுத்துவானாம்...?”

Representational Image
Representational Image
ஓவியம் : அமரர் தேஜ்

“நீரே கேளும்... அவன் வந்தா... அப்படியே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியும் ப்ரஷர் கொடும்... என் ஆம்படையாளோட மாமா பேத்தி இருக்கா. ராமுவுக்குக் கொடுக்கணும்னு ரொம்ப பிரியப்படறா... இவனானா பிடி கொடுக்க மாட்டேங்கறான்...” என்று சொல்லிவிட்டு “அப்ப... நான் புறப்படறேன்...” கிளம்பிவிட்டார் குருக்கள்.

தெருவில் இறங்கிய குருக்கள் சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி உள்ளே வந்தார்.

“ராமு, கீழக்கோடீல வரான்... நான் உம்ம கிட்டே எதுவும் சொன்னதா காட்டிக்க வேண்டாம்...!” என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திருக்காமல் அவசரமாய் சென்றுவிட்டார் பசுபதிக் குருக்கள்.

“மாமா...சௌக்யமா இருக்கேளா...?” கேட்டுக்கொண்டே வந்தான் ராமு.

“ம்... நல்ல சௌக்யம்தான்...ஒக்காரு...” சொல்லிவிட்டு எழுந்து போய் வெற்றிலைச் சாறு துப்பிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தார் மாதய்யா.

“வாரா வாரம் ஊருக்கு வரயாமே... கேள்விப்பட்டேன். கண்லயே படறதில்லையே...”

“வந்தா... ஜோலி சரியா இருக்கு. ரெண்டு நாள் ரெண்டு நிமிஷமாப் போயிடறது மாமா... ஊருக்குக் புறப்படத்தான் சரியா இருக்கு...”

ராமு சொல்லிக்கொண்டிருந்தபோதே, மூச்சை ஆழ்ந்து இழுத்து ஏதோ மோப்பமிட்டார் மாதய்யா...

புடலங்காய் வாசம் வருவதை உணர்ந்தார்.

‘ஒரு வேளை பிரமையோ...?’ என்று தோன்றியது.

“தொரைராமனைப் பாத்தேன் மாமா... அவன்...” என்று தொடங்கிய ராமுவை மேலே பேசவிடவில்லை மாதய்யா...

“அவன் சேதி என்கிட்டே சொல்லாதே, உள்ளே மாமி இருக்கா... ஏகபுத்ரனைப் பத்தி அவள்கிட்டே போய் சொல்லு.”

ராமு வீட்டுக்குள் செல்வதற்காக திண்ணையிலிருந்து எழுந்தான். அவன் காலில் பூசியிருந்த சேறு... கால் சட்டையில் அப்பியிருந்த களிமண்... கண்ணில் பட்டது.

வீட்டுக்குள் சென்றபோது பின்புறமாய் அவன் சட்டையில் பார்த்தார், ஒட்டிக்கொண்டிருந்தது ஒரு புடல் சருகுத் துணுக்கு.

மாதய்யாவுக்கு உஷ்ணம் தலைக்கேறியது.

புடல் கொல்லையில் கேட்ட சிரிப்புச் சத்தம், அங்கு கேட்ட அசரீரி... ‘இவனாக இருக்குமோ...? அவனாக இருக்குமோ...? என்று யார் யாரையோ சந்தேகப்பட்ட நான் இவனை மட்டும் எப்படிவிட்டேன்...?’ மனசு கிலேசமாயிற்று.

“ஏண்டா ராமு...”

“ஏன் மாமா...?” உள்ளே செல்ல நான்கு அடி எடுத்து வைத்தவன் திரும்பி வெளியே வந்தான்.

அதென்னடா பேண்ட், சட்டையெல்லாம் சேறு அப்பிண்டு... வயக்காட்டுல வேலை பார்த்தா மாதிரி...”

“அது வந்து...”

“நீ பக்கத்துல வந்தாதே புடலங்கா வாசம் வீசறது...! சட்டை காலர் பக்கமெல்லாம் பொடல் சருகு ஒட்டிண்டிருக்கு...! பொடலங்கொல்லைல வேலை செஞ்சிட்டு வரயோனு கேட்டேன்.”

“நான் மாமியைப் பார்த்து சொல்லிட்டு வரேனே...” என்று பேச்சு மாற்றினான் ராமு.

“வாடா ராமு... தொரை நன்னா இருக்கானா...?” என்று விசாரித்துக்கொண்டே குந்தலாம்பாள் வர... இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்த ராமு தப்பித்தோம் பிழைத்தோம் என்று மாமிக்கு செய்தி சொல்ல ஓடிவிட்டான்.

மாதய்யாவுக்கு அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுத் தொழுவத்துக்குச் சென்றார்.

-தொடரும்...

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.