வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
"நேத்து நீ கூட்டத்துல சொன்னதெல்லாம் நெசமாவே நெசமாடா, கதிரு?"
"ஊர்க்கூட்டத்துல போயி யாராச்சும் பொய் சொல்லுவாங்களா, காவேரி? அதுவும் இப்பிடி ஒரு விஷயத்துல?"
"அப்ப இன்னும் ஒரு வாரத்துல நீ போனா அப்புறம் ஒன்னய மறுபடியும் பாக்கவே முடியாதா?"
"போன்ல பாத்துக்கலாம்".
"அவ்வளவுதானா?"
"அவ்வளவுதான்".
"அப்ப ஒண்ணு பண்ணு. இன்னும் ரெண்டு நாள்ல என்னயக் கல்யாணம் பண்ணிக்கோ. மூணு நாள் என்கூட குடும்பம் நடத்திட்டு அப்புறம் கெளம்பிப் போ".
"ஏய்! என்ன வெளயாடுறியா?"
"இல்ல, ரொம்ப சீரியஸாத் தான் சொல்றேன்".
"இது எதுக்கு, காவேரி, இப்ப? தேவையில்லாத வேலை?"
"என்னது…? தேவையில்லாத வேலையா? நாலு வருஷமா மாஞ்சு மாஞ்சு லவ் பண்ணிட்டு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா, அது ஒனக்கு தேவையில்லாத வேலையா? என்னடா நெனச்சுட்டு இருக்க ஒன் மனசுல?"

"கொறஞ்சது இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு, காவேரி. வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணா நீ அந்த ரெண்டு வருஷமாவது சந்தோஷமா இருக்கலாம்ல".
"என்ன… சாரு போன எடத்துல வேற யாரையாச்சும் பாத்து மயங்கிபுட்டாரோ?"
"சே! என்ன காவேரி நீ, என்ன பேசுற?"
"இல்ல, வெள்ளக்காரக் குஞ்சு எதாவது மாட்டும்னு நெனப்பா?"
"ஏய்! அடிச்சுடுவேன். வாய மூடு".
"கோவம் வருதோ? இந்தத் தொரை தான என்னய வேற கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது?"
"நீ நல்லா இருக்கணும்னு தான, காவேரி".
"ஏய்… உன்ன விட்டுட்டு நான் எங்கடா நல்லா இருக்கறது? நீதானடா எனக்கு எல்லாம்? வாழ்நாள் பூரா உன் கூட இருந்து, பேரன், பேத்தி எடுத்து, தொண்டுக் கெழமா சாகணும்னு ஆசப்பட்டேன். அதுதான் இப்ப இல்லன்னு ஆகிடுச்சு. ரெண்டு நாளாவது ஒங்கூட ஒனக்குன்னு நான் இருந்தாப் போதும். அந்த சந்தோஷத்திலயே மிச்சமிருக்கற ரெண்டு வருஷத்த ஓட்டிட்டு நிம்மதியா சாம்பலாயிடுவேன்".
"காவேரி…!"
"இங்கப் பாரு, கதிரு…, எனக்குத் தெரியும், நீ இந்த ஒலகத்தைவிட்டுப் போகப்போற… ஹூம்… இன்ன வரைக்கும் ஒலகத்தைவிட்டுப் போறதுன்னா சாகுறதுங்கறது மட்டும் தான் அர்த்தமாயிருந்துச்சு… இப்ப… ஹூம்…! அப்பிடி நீ வேற ஒலகத்துக்குப் போறப்போ அங்கப் போயி நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணித்தான் ஆகணும், புள்ளைங்களப் பெத்துத் தான் ஆகணும். மனுசங்க மிஞ்சிப் பொழைக்கணும்ல… நீ அங்கப் போயி, எங்கப் போவியோ…! அங்கப் போயி யாரை வேணா கல்யாணம் பண்ணிக்க… எத்தனப் புள்ளைங்கள வேணா பெத்துப் போட்டுக்க… ஆனா ஒனக்கு மொதல் பொண்டாட்டி நாந்தான்… எனக்கு ஒரே புருசன் நீ தான். இதுக்கு சம்மதிச்சா நாளன்னிக்கு என் கழுத்துல நீ கயித்தக் கட்டு, இல்லன்னா அதுக்கு மறுநாள் என் கழுத்துல நானே கயித்தக் கட்டிக்கிறேன். ரெண்டு வருஷத்துல போற உசுரு ரெண்டு நாள்ல போகட்டுமே… ஒண்ணும் நட்டமில்ல".
“…”
“…”
“…”
“…”
"சரி காவேரி, ஒன் நெனப்புப்படி நடக்கட்டும். ஆனா ஒண்ணு - நான் கேக்குற சத்தியத்தை நீ எனக்கு செஞ்சுக் குடுத்தாதான் இந்தக் காரியம் நடக்கும்".
"என்னது? என்ன சத்தியம்?"
"நம்ம புள்ளய பெத்துக்கமாட்டேன், பெத்துக்கணும்னு கேக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு".
"ஒம்மேல சத்தியம்".
------

D-501
"காவேரி…"
"அம்மா, அப்பா… வாங்க, வாங்க".
"வாங்க சம்பந்தி!"
"மாப்ள இன்னிக்குதான ராக்கெட்டுல போறாரு? டிவில காட்டுவாங்கன்னு காவேரி சொன்னா. ஆளுக்கொரு எடமா ஒக்காந்துட்டு இல்லாம எல்லாரும் ஒண்ணா ஒக்காந்துப் பாக்கலாம்ன்னுதான் இங்க வந்தோம்".
"வாங்க, வாங்க… நல்லதாப் போச்சு".
"அம்மாடி காவேரி, போயி இலை போடுமா அம்மாக்கும் அப்பாக்கும் சாப்பாட்டுக்கு".
"அதெல்லாம் வேண்டாம் காவேரி, சாப்புட்டுதான் வந்தோம்".
"அப்ப மோராவது எடுத்துட்டு வாம்மா".
"இந்தா கொண்டு வரேன், மாமா".
"நீ இரும்மா, காவேரி. நான் எடுத்தாறேன். நீ சேரை எடுத்துப் போடு அப்பாக்கும் அம்மாக்கும்".
"எத்தனை மணிக்கு, காவேரி, ராக்கெட் கெளம்புது?"
"நம்ம ஊர் டைம் படி மூணரை மணி, மாமா. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு ராக்கெட் கெளம்புது, இப்போ ஒண்ணேகால் மணிக்கு. அதத்தான் மொதல்ல காட்டுறாங்க".
"..."
"..."
க்ளிக்
"..."
"..."
"இது எந்த ஊரும்மா? பாத்தா நம்ம நாட்டு ஆளுங்க யாரையுமேக் காணோம்?"
"இந்த ஊரு பேரு பைக்கானூர். கசகிஸ்தான்ல இருக்கு. ரஷ்யா தனித் தனி நாடா பிரியறதுக்கு முன்னால இங்கேயிருந்து தான் ரஷ்யாவோட எல்லா ராக்கெட்டையும் அனுப்புவாங்க".
"நம்ம நாட்டுல இதெல்லாம் இல்லியா?"
"இருக்கும்மா. ஆந்திராவுல ஸ்ரீஹரிகோட்டாங்கற எடத்துல. அங்கேயிருந்தும் அனுப்புவாங்க. ஆனா இப்ப பைக்கனூர்ல இருந்துதான் கெளம்புறாங்க".
"மாப்ள எந்த ராக்கெட்டுலமா இருக்காரு?"
"ரெண்டாவது ராக்கெட்டுலமா. மொதல் ராக்கெட்டுலயும் நம்ம நாட்டு ஆளுங்க இருக்காங்க".
"ஏற்கனவே ரெண்டு ராக்கெட் போயிடுச்சுல்ல? பேப்பர்ல பாத்தேன்".
"ஆமாப்பா. அமெரிக்காவுல இருந்து. வரிசையா அனுப்பிட்டே தான் இருப்பாங்க".
"எதுக்கு இப்பமே அனுப்புறாங்க?" கொஞ்ச நாளாச்சும் குடும்பத்தோட இருந்துட்டுப் போகலாம்ல?"
""ஏய் வடிவு, இது என்ன பக்கத்து ஊருக்குப் போற சமாச்சாரமா? என்னமோ விருந்தாளு வீட்டுக்குப் போறமாதிரி பேசிட்டு இருக்க?"
"அத்தை, இப்ப இந்த ராக்கெட்டெல்லாம் போறது செவ்வாய் கிரகத்துக்கு. ஒங்க மகன் மொதல்லயே சொன்னாருல்ல. நம்மால இப்பதைக்கு சட்டுன்னு வேற எங்கயும் போக முடியாது. வெள்ளம் வந்தா கெடச்சதத் தூக்கிகிட்டு உசுரு பொழச்சாப் போதும்ன்னு நிவாரண முகாமுக்கு ஓடற மாதிரி தான். இப்பதைக்கு நமக்கு செவ்வாய் கிரகம் தான் நிவாரண முகாம். சூரியன் பெருசா ஆகி அங்க வரைக்கும் வந்தாலும் பூமி அளவுக்கு அங்க பாதிப்பு இருக்காதுன்னு கணிச்சிருக்காங்க. அது மட்டுமில்ல. இங்கேயிருந்து செவ்வாய் கிரகத்துக்குப் போறதுக்கேக் கிட்டத்தட்ட ஒன்பது மாசம் ஆகிடும். இப்பக் கெளம்புனாத் தான் அவங்க நல்லபடியா சேர வேண்டிய எடத்துக்குப் போய்ச் சேந்தாங்களான்னு தெரியும்".

"... வணக்கம். பைக்கனூரிலிருந்து நேரடி ஒளிபரப்பிற்கு உங்களை வரவேற்கிறோம். இன்னும் சற்று நேரத்தில் ககாரின்-I விண்கலம் மொத்தம் நூற்றி அறுபத்தி ஆறு மனிதர்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய் கிரகத்திற்குப் புறப்பட இருக்கிறது. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின். சோவியத் ரஷ்யா சிதறாமல் இருந்த காலத்தில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்த விண்வெளிப் போட்டியில் ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பிய முதல் மனிதர் யூரி ககாரின். அவருடைய நினைவாகவே ரஷ்யா தன்னுடைய இந்த விண்கலத்திற்கு ககாரின்-I என்றும் இதையடுத்து செல்லும் விண்கலத்திற்கு ககாரின்-II என்றும் பெயரிட்டுள்ளது. மனித குலத்தின் வருங்காலத்தை சுமந்து செல்லும் இந்த இரண்டு ராக்கெட்டுகளிலும் இந்தியர்கள் பலர் இருக்கிறார்கள்".
"அதுதான் ராக்கெட்டா? அடேங்கப்பா… எம்பூட்டு ஒசரமா இருக்கு!"
"பின்ன இருக்காதா? இத்தன மனுஷங்கள எம்புட்டு தூரம் எத்தனை மாசம் கொண்டுட்டுப் போகணும்!"
"... கிரகத்திற்கு செல்வதற்கான சரியான காலம் என்பது இருபத்தியாறு மாதங்களுக்கு ஒரு முறை தான் அமையும். பூமியின் சுற்றுப்பாதையும் செவ்வாயின் சுற்றுப்பாதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் இந்தப் பயணத்திற்கு ஏற்றதாக அமையும். இது வரையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஆராய்ச்சிக்கான செயற்கைக் கோள்கள் இப்படிப்பட்ட சரியான நேரத்தில் அனுப்பப்பட்டவை. ஆனால் தற்போது இருக்கும் சூழலில் அப்படிக் காத்திருப்பதற்கான காலம் மனிதகுலத்திடம் இல்லை. உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும், அரசாங்கங்களும், மற்றும் எண்ணற்றவர்களும் கைகோர்த்து ஒத்துழைத்து இதற்கான தீர்வுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கான பலன் தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருப்பது".
"கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது".
“…10…”
“…9…”
“…8…”
“…7…”
“…6…”
“…5…”
“…4…”
“…3…”
“…2…”
“…1…”
"இக்னிஷன்".

"என்னது இது? சத்தமே கேக்கல?"
"ரொம்ப சத்தம் கேக்கும்ப்பா. நமக்கு டிவில காட்டுறது தூரத்துல இருந்துப் படத்த மட்டும் காட்டுறாங்க".
"அதுக்குள்ளே எவ்ளோ… ஒசரம் போயிடுச்சு!
"... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ககா… ஆஆ …! …! …!"
"ஐயோ…! கடவுளே …!"
"ஐயோ…! கதிரு …! கதிரு …!"
"அத்தை, அத்தை, கதிரு இந்த ராக்கெட்டுல இல்ல…!"
"ஐயோ! எம்மவன் கதிரு … !
"வடிவு ... ஏ வடிவு ...! இங்க பாரு ... கதிரு இந்த ராக்கெட்டுல போகலை. அவனுக்கு ஒண்ணும் இல்ல. நீ பதறாம இரு".
"ஏம்மா காவேரி ... நல்லாத் தெரியுமா? மாப்ள இதுல போகலைல?"
"இல்லப்பா, அடுத்ததுல தான் அவரு போறாரு".
"கடவுளே! நல்லபடியாக் கொண்டு சேத்துருப்பா! கடா வெட்டி பூசை போடுறேம்மா... எம்மவன நல்லபடியாக் கொண்டு சேத்துரு, ஆத்தா!"
"அம்மாடி … எம்பூட்டு நெருப்பு … ராக்கெட்டு அடில…!"
"என்னது இது? சத்தமே கேக்கல?"
"ரொம்ப சத்தம் கேக்கும்ப்பா. நமக்கு டிவில காட்டுறது தூரத்துல இருந்துப் படத்த மட்டும் காட்டுறாங்க".
"அதுக்குள்ளே எவ்ளோ… ஒசரம் போயிடுச்சு!
"... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ககா… ஆஆ …! …! …!"
"ஐயோ…! கடவுளே …!"
"ஐயோ…! கதிரு …! கதிரு …!"
"அத்தை, அத்தை, கதிரு இந்த ராக்கெட்டுல இல்ல…!"
"ஐயோ! எம்மவன் கதிரு … !
"வடிவு ... ஏ வடிவு ...! இங்க பாரு ... கதிரு இந்த ராக்கெட்டுல போகலை. அவனுக்கு ஒண்ணும் இல்ல. நீ பதறாம இரு".
"ஏம்மா காவேரி ... நல்லாத் தெரியுமா? மாப்ள இதுல போகலைல?"
"இல்லப்பா, அடுத்ததுல தான் அவரு போறாரு".
"கடவுளே! நல்லபடியாக் கொண்டு சேத்துருப்பா! கடா வெட்டி பூசை போடுறேம்மா... எம்மவன நல்லபடியாக் கொண்டு சேத்துரு, ஆத்தா!"
“... ககாரின்-I விண்கலம் ஏன் வெடித்துச் சிதறியது என்பதற்கானத் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அநேகமாய் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம். மனித குலம் பிழைக்க எடுத்திருக்கும் முயற்சியில் இது ஒரு பெரிய பின்னடைவாக இருக்கக்கூடும் ... "
"ஏன் காவேரி, அடுத்த ராக்கெட்டை அனுப்புவாங்களா?"
"தெரியல, மாமா. அனுப்புவாங்கன்னுதான் நெனக்கறேன். வேற வழியில்லையே ... !"
"எம்புள்ள கிட்ட ஒரு வார்த்த பேசுனா எம்மனசு ஆறுமே ... காவேரி அவனுக்கு ஒரு போனப் போடேம்மா ...”.
"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, அத்தை. காலைல நம்மகிட்ட பேசுனதுதான் கடைசி. அதோட போனை எல்லாம் ஒப்படைச்சிடணும்னு சொன்னாரு. யாருக்கு போனப் போட்டு எங்க பேசறது?"
"ஏன் வடிவு, நீ வேற ... சும்மா இரும்மா. பேசுனா மட்டும் என்ன மறு பஸ்ஸ பிடிச்சி இங்க வந்து ஒம்பக்கத்துல இருக்கப் போறானா ஒம்மவன்? சும்மா இருப்பியா ... மனசத் தேத்திட்டு போயி வேலையப் பாரு".
“... ககாரின் – II எந்த மாற்றமும் இல்லாமல் தன் பயணத்தைத் தொடங்கும் தொடரும் என்று விண்வெளி மையத்திலிருந்து கிடைக்கப்பெற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று நேரத்தில் அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன".
"அம்மா காவேரி! டிவிய ஆஃப் பண்ணும்மா. இதப் பாக்குறதுக்கு எனக்குத் தைரியமில்ல".
"சரிங்க, அத்தை. நீங்க யாரும் பாக்கவேண்டாம். டிவியைப் போடல. நான் ரூம்ல போன்ல பாத்துட்டு உங்களுக்குச் சொல்றேன்".
------

D-42
"வீட்ல எத்தன பேருங்க?"
"மூணு".
"மாடு, கன்னு, ஆடு, கோழி எல்லாம் எத்தனைன்னு தனித் தனியா சொல்லுங்க".
"காளை ரெண்டு, பசு மாடு ஒண்ணு, கோழி நாலு, ஆடு எதுவும் இல்லைங்க. எதுக்கு சார், இதெல்லாம் கேக்குறீங்க?"
"சொல்றேன். வீட்ல வேற யாரும் இல்லையா?"
"மாமா வயலுக்குப் போயிருக்காங்க. அத்தை பக்கத்துல போயிருக்காங்க".
"ஒங்க வீட்டுக்காரர்?"
"அவரு செவ்வாய் கிரகத்துக்குப் போயிட்டாரு".
"ஏம்மா, உங்க வீடா அது? சொன்னாங்க, இந்த ஊர்ல போனவர் வீடு இருக்குன்னு. தகவல் பாக்குறீங்கள்ல்ல தெனமும் டிவில? நல்லா இருக்காராம்மா உம்புருஷன்?"
"நல்லா இருக்கறதாத்தான் தகவல் போடுறாங்க தெனமும். போற வழில எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லபடியாப் போய்ச் சேந்துட்டாரு".
"நல்லதும்மா. ஒங்க மூணு பேரு ஆதார் நம்பரையும் சொல்லுமா. போன்ல வச்சிருந்தாப் பாத்து சொல்லு. குறிச்சிக்கிறேன். ஹூம்… இதையெல்லாம் வாங்கி வச்சு இனிமே என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியலை. ஆனாலும் எங்களுக்கு இதான் வேலைன்னு உத்தரவு … செய்யிறோம்".
"எதுக்குங்க இதெல்லாம் கேக்குறீங்க?"
"சொல்றேம்மா. அதுக்குத்தான வந்திருக்கேன். போட்டுருக்கற கணக்குப் படி இன்னும் நாப்பத்தி ரெண்டு நாள் தான் இருக்கில்லையா? விஞ்ஞானிங்க எல்லாம் சொல்றத வச்சிப் பாத்தா நாமெல்லாம் ஒரு செகண்டுல எரிஞ்சுப் பொகையாப் போயிடுவோம். நமக்கு எதுவும் தெரியக்கூடச் செய்யாதுன்னும் சொல்றாங்க. ஆனா நெறைய பேருக்கு இதெல்லாம் நெனச்சா பயமா இருக்கும். இன்னும் நெறய பேருக்கு செத்தப்புறம் செய்ய வேண்டிய சடங்கெல்லாம் செய்யணுங்கற ஆசையும் நம்பிக்கையும் இருக்கும். எல்லாருக்கும் இன்னும் ஏதேதோ காரணம் இருக்கும் கடைசி நிமிஷம் வரைக்கும் இருக்கக்கூடாதுன்னு நெனைக்கறதுக்கு. அதனால அதுக்கு ஒரு ஏற்பாடா அரசாங்கம் எல்லா வீட்டுக்கும் இதக் குடுக்கச் சொல்லியிருக்காங்க".
"என்ன சார், இது? பாக்கெட் பாக்கெட்டா குடுக்குறீங்க, குடும்பம், மாடு, கோழின்னு எழுதி?"
"ஒவ்வொண்ணும் மாத்திரை, மா. குடும்பம்ன்னு இருக்கறது ஒங்களுக்கு. மாடு, கோழின்னு இருக்கறது அதுஅதுக்கு. இதையெல்லாம் இருந்து பாக்கவேண்டாம்ன்னு நெனச்சா ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி ரெண்டு மாத்திரையை சாப்பிட்டுத் தூங்குங்க. காலைல எந்திரிக்க மாட்டீங்க".
"என்ன சார், இது? அநியாயமா இருக்கு? நாமளா சாகறதுக்கு அரசாங்கமே மாத்திரை தருதா?"
"வேற என்னம்மா செய்ய முடியும்? ஒரு எடத்துல கஷ்டம்னா இன்னொரு எடத்துக்குப் போகலாம். ஒலகமே இல்லைன்னா எங்க போறது? ஏதோ இந்த மட்டும் செவ்வாய் கிரகத்துக்கு இந்த மட்டும் மனுஷங்களாவது போய்ச் சேந்தாங்க, மனுஷ குலம்ன்னு ஒண்ணு இருந்துச்சுன்னு பேர் சொல்றதுக்கு".
"சார், ஆனாலும் இது சரியாப் படலை, சார்".
"எந்தக் கட்டாயமும் இல்லைம்மா, இதை உபயோகப்படுத்தணும்னு. தேவையில்லைன்னாத் தூக்கிக் குப்பையில போட்டுட்டுப் போங்க. அது ஒங்க இஷ்டம். குடுக்கவேண்டியது என் கடமை, குடுத்துட்டேன்".
"..."
"எல்லா வீட்டுக்கும் குடுத்தாச்சுன்னுக் காட்டறதுக்குத் தான் ஆதார் கார்டு நம்பர். வேற எதுக்கும் இல்ல".
"..."
"உங்க அத்தை, மாமாகிட்ட கலந்து பேசி ஒரு முடிவு எடுங்க. நான் வரேன்".
"..."
------
D-1
"மாமா, அம்மாவும் அப்பாவும் நேரா வயலுக்கு வந்துடறோம்னு சொன்னாங்க".
"இங்க வந்துட்டா எல்லாரும் சேந்தேப் போயிடலாம்ல, காவேரி?"
"அதுவும் சரிதான், அத்தை. நான் சொல்லிடறேன் அவங்ககிட்ட".
"அப்போ மாத்திரை வேண்டாம்ல, மாமா?"
"அது இன்னும் எதுக்கு, காவேரி? இத்தனை நாள் அதத் தொடல. இப்பப் போய் அது எதுக்கும்மா? உசுரு குடுத்தது அந்தச் சூரியன். அவன் பாத்து உசிர எடுக்கணும்னு நெனச்சா எடுக்கட்டும். அவன் பாத்துக் குடுத்தது, எடுக்கறதுக்கு அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு".
"பொறந்ததுல இருந்து நமக்குத் தெரிஞ்சது இந்த மண்ணையும் வயலையும் தவிர வேற என்னங்க இருக்கு? அம்மா மடில கெடந்தத விட இந்த மண்ணு மடில தானங்க உருண்டு பெரண்டிருக்கோம்? போற உசுரு அந்தத் தாயி மடியிலேயேப் போவட்டும்".
"..."
"..."
"..."
"..."
"டிவில முதலமைச்சர் கடைசியாப் பேசறதா சொன்னாங்க. எத்தனை மணிக்கு, காவேரி?"
"இப்ப தான், மாமா. ஆன் பண்றேன் இருங்க".
"..."
"..."
"..."
"..."
"வணக்கம். நாளை நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ள சம்பவத்தை முன்னிட்டு முதலமைச்சர் இன்று நேரடி உரையாற்றுகிறார். அவருடைய உரையே இந்தச் சேனலின் கடைசி ஒளிபரப்பாக இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறோம். இத்தனை வருடங்களாக உங்களோடு இணைந்தும் உங்களுக்காகவும் இந்தப் பயணம் மேற்கொண்டதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். எங்களை உங்கள் இல்லங்களில் அனுமதித்து இதயங்களில் ஏற்றி வைத்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறோம். நன்றி! வணக்கம்!"
"..."
"..."
"..."

"உலகெங்கும் இருக்கும் என் தமிழ் மக்களுக்கு, வணக்கம்! நான்காண்டுகளுக்கு முன் உங்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற போது கற்பனையிலும் கூட நினைக்கவில்லை இப்படி ஒரு நாள் வருமென்று! விஞ்ஞானமும் அறிவியலும் எவ்வளவோ மனித அறிவினால் வளர்ந்த போதும், இயற்கையின், வான்வெளியின், அண்டசராசரத்தின் ஆடல்களுக்கு முன் அவையெல்லாம் தோற்றுவிடுகின்றன. எத்தனையோ போர்களையும் இடர்களையும் இன்னல்களையும் படையெடுப்புகளையும் இயற்கை பேரழிவுகளையும் சந்தித்த போதும் தளர்வில்லாமல் வளர்ந்தோங்கிய நம் தமிழ் மொழியும் தமிழர் கலாச்சாரமும் நாளைய பொழுதிலிருந்து சிறு துகள் கூட எஞ்சியில்லாமல் போய்விடுமென்ற நினைவை எந்தத் தமிழராலும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.
'மனித குலத்தின் ஆற்றலும் சக்தியும் எல்லையில்லாதவை' என்பதை வெற்றுக் கூற்றாக இல்லாமல் அதை நிரூபிக்கும் வகையில் இப்பூவுலகின் எல்லைகள் தாண்டி இன்று செவ்வாய் கிரகத்தில் காலூன்றி விட்டான் மனிதன். அவனுடனே சென்றுள்ளது நம் தமிழும் தமிழர் வாழ்வியலும். நூற்றாண்டுகள், ஆயிரமாயிரமாண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது நம் தமிழ் என்று மார்தட்டிய காலம் போய் ஒளிஆண்டுகள் கடந்து தமிழர் கொடி பறக்கும் காலம் ஆரம்பமாகின்றது. அந்த நம்பிக்கையும் அந்த நினைவும் நம் அனைவரின் இறுதித் தருணங்களை சற்றே சாந்தியடையச் செய்யட்டும். இருப்பதற்கு நாம் இல்லையெனினும் இருப்பதற்குத் தமிழ் இருக்கும்.
"அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது "
என்று இத்தனை அரியவைகளையும் விட அரிதினும் அரிதாய் தமிழராய் பிறந்து வாழ்ந்தது நம் பாக்கியம். இத்தனை வருடங்கள் உங்களுக்குச் சேவை செய்ய எனக்கு அளித்த வாய்ப்புக்கு என் உளமார்ந்த நன்றியை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
நம் இறுதித் தருணங்கள் அச்சங்கள் அகற்றி அன்பால் நிரம்பட்டும்!
மனிதகுலம் பிழைக்கட்டும்!
மனிதம் தழைக்கட்டும்!
வாழ்க தமிழ்!
வணக்கம்!"
_____
முற்றும்
கா. தாஸ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.