வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டிக்கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். “கலெக்டர் ஆபிஸ்” என்று நடத்துனர் விசிலடிக்க பேருந்து அங்கு நின்றது. அந்தப் பேருந்தின் கடைசி இருக்கை ஜன்னலோரம் அமர்ந்திருந்த பத்து வயது கருப்பு நிற சிறுவன் கரிகாலன், நெற்றியில் நாணயம் ஒட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்கள் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களுடைய கைகளிலிருந்த வெள்ளைத்துணிகளில் “சாதி வேறுபாடுகளற்ற மயானம் வேண்டும்” என்று ரத்தத்தில் எழுதி இருந்தது. சிலர் புதிய வெள்ளைநிற துணிகளில் தங்களது கோரிக்கையை விரலில் குண்டூசி குத்தி வந்த ரத்தத்தில் எழுதிக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சிகள் கரிகாலனின் மனதுக்குள் ஆழமாகப் பதிந்தது.
கரிகாலனின் அப்பா மாயி வண்டித்தேர் எனப்படும் கைகளால் இழுத்துச் செல்லக்கூடிய சொர்க்கரதம் இழுப்பவர். துக்க வீட்டின் தூரத்தைப் பொறுத்து சொர்க்க ரதத்திற்கான வாடகை பணம் வாங்குவார். ஒரு உடலுக்கு அவர் தேர் கட்ட சென்றால் அந்த நாள் முழுவதும் அங்கேயே கழிந்துவிடும். துக்க நிகழ்வின்போது தேரில் கட்டப்படும் செயற்கை அலங்கார பூக்களை ஒரு வேட்டித்துணியில் சுருட்டிக் கட்டி அதன்மீது மூன்றுமுறை லேசாக தண்ணி தெளித்து அந்த ஒற்றை அறை வீட்டின் மூலையில் வைப்பது வழக்கம். வெளியே வைத்தால் மழையில் நனைந்து செயற்கை அலங்கார பூக்களின் சாயம் கரைந்துவிடும் என்பதால் வீட்டிற்குள் வைத்துவிடுகிறார் மாயி. பள்ளி விடுமுறை தினங்களில் கரிகாலனும் அப்பாவோடு சேர்ந்து தேர் இழுக்கச் செல்வான். அப்படி பலநாட்கள் அப்பாவோடு சென்றுள்ளதால் அலங்காரம் செய்யும் நுணுக்கங்களை நன்கு பழகியிருந்தான். ஒருநாள் அப்பாவோடு சென்றபோது அன்றிரவு முழுக்க சுடுகாடு முன்பு அமர்ந்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது உண்டு. இப்படி இறுதி ஊர்வலத்தோடு அவனது வாழ்க்கைமுறை நெருங்கிய தொடர்புடையது என்பதால் தான் கலெக்டர் ஆபிஸ்முன் நடந்த அந்தப் போராட்டத்தை கண்கள் சிமிட்டாமல் பார்த்தான்.

சிறுவயதில் பேருந்தில் பயணிக்கும்போது பார்த்த காட்சி என்றாலும் இருபத்தோறு வயது இளைஞனாக வளர்ந்து நிற்கும் காலாவுக்கு அதுமட்டும் மறக்கவே இல்லை. இதற்கிடையில் ஊருக்கே சோறுபோட்ட மதுரை குஞ்சரத்தாம்மாளின் ரசிகர் அன்னதான பாட்டி ஆராயி, மழை பெய்யாத ஊருக்கெல்லாம் சென்று இலவசமாக கூத்துக்கட்டி மழைபெற செய்த கூத்துக்கலைஞர் அமாவாசை ஆகியோருக்கு இலவசமாக சொர்க்க ரதம் இழுத்துள்ளான். அப்போது முதலே தன்னுடைய இறுதிப்பயணமும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தான் இருக்கிறான்.
"ஏலே ஊருக்கே தேர் இழுக்குற... நாளைக்கு நீ செத்தா உன் இறுதிப்பயணம் எப்படி இருக்கனும்டா நெனைக்குற..." என்று நண்பன் ஒருவன் யதர்ச்சையாக கேட்க...
"என் இறுதிப்பயணம் எப்படி இருக்கணும் தெரியுமா?... கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி கலாம் இறந்துபோனாரு இல்லயா... அப்ப அவருடைய இறுதிப்பயணம் எப்படி இருக்குன்னு தனியா பார்க்க போயிருந்தேன்... அவரு இறந்துபோன ரெண்டாவது நாளு விடியகாத்தால இராமேஸ்வரம் போனேன்... ஏகப்பட்ட கூட்டம்... ஊரே பரபரப்பா இருந்துச்சு... கூட்டத்தோட கூட்டமா அவரு உடம்பு வச்சுருக்கற இடத்துக்கு போனேன்...
"அப்துல்கலாம் வீடு"னு போர்டு இருந்தது. அந்தப் பாதைய அப்ப போலீஸ்காரங்க அடச்சு வச்சுருந்தாங்க... சைலேந்திர பாபு ஐபிஎஸ் அங்க வந்து நெருக்கிக்கிட்டு இருந்த பொதுமக்கள கட்டுப்படுத்திட்டு இருந்தாரு... அப்துல்கலாம் வீடு தெரு வழியா அனுமதி இல்லன்னுதும் அங்கிருந்து நடந்து ரயில்வே பீடர் ரோடு வழியா போயி அவரோட உடல வச்சுருக்கற மசூதி கிட்ட போனேன்... பிறவு அங்கிருந்து முஸ்லீம் தெரு வழியா நடந்து, முஸ்லீம் தெரு, ரயில்வே பீடர் ரோடு, வண்ணா தெரு மூனும் ஒன்னுசேர்ற முச்சந்தில கும்பலோட கும்பலா நானும் நின்னேன்... ரயில்வே பீடர் ரோடுல இருந்த வயசுப்பசங்கள்ல பாதி பேரு அங்கிருந்த தண்ணி டேங்க் மேல ஏற பாக்க, சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா சுருட்ட முடிய விரிச்சு போட்டுகிட்டு வந்து அந்த பசங்ககிட்ட கீழறங்க சொல்லி அட்வைஸ் பண்ணிட்டுருந்தாரு... போலீஸ்காரங்க ஆர்மிகாரங்கன்னு அந்த இடமே அன்னிக்கு பரபரப்பா இருந்துச்சு...

முஸ்லீம் தெரு பக்கத்துல இருக்குற மசூதில கலாமோட உடம்ப வச்சு அவருக்காக இறுதி பிரார்த்தனை செஞ்சாங்க... மசூதில இருந்து அவரு உடம்ப வச்சுருக்குற பெட்டிய அந்த முச்சந்தில நின்ன ஆர்மி வண்டில வைக்க தூக்கிட்டு வந்தாங்க... எல்லோரும் அந்தப் பெட்டிய தொட்டு வணங்கனும்னு ஆசப்பட்டு நெருக்கிட்டு இருந்தாங்க... பாதிபேரு ஆர்மி வண்டிகிட்ட நெருங்கி வர ஆர்மிகாரங்க கூட்டத்த பின்னாடி தள்ளுனாங்க... அதுல ஒரு ஆர்மிகாரரு முத வரிசைல நின்னுட்டுருந்த என் நெஞ்சுல கைவச்சு தள்ளுனாரு... நான் அவரையெல்லாம் மீறி ஆர்மி வண்டில வச்சிருந்த அந்தப் பெட்டிய தொட்டு வணங்குனேன்... அடிக்க கை ஓங்குன ஆர்மிகாரரு நான் தொட்டு வணங்குனத பாத்து அமைதியாயிட்டாரு... அங்கருந்து நேரா மேக்க போற வண்ணா தெரு வழியா அந்த ஆர்மி வண்டி போச்சு... எல்லாரும் வண்டி பின்னாடி ஓட நானும் வெறுங்காலோட ஓடுனேன்... வண்ணா தெருவுலருந்து திரும்பி இராமதீர்த்தம் தெற்கு சாலையில கூட்டத்தோடு கூட்டமா நடந்தேன்... இராமதீர்த்தம் தெற்கு சாலையிலிருந்து வெளியே வந்து மேற்கு நோக்கி இராமேஸ்வரம் மெயின் ரோட்டில் நடந்தேன்... ஆர்மி வண்டி அங்கருந்து திரும்பி அவர புதைக்கற இடம் வர எங்கயும் நிக்காம நேரா போயிட்டு இருந்துச்சு... நான் அந்த வண்டி பின்னாடி ஓடுறத நிப்பாட்டல..." என்று சொன்ன கரிகாலனை, மேலும் கீழுமாக பார்த்த நண்பன் கொஞ்சம் கேலியாக...
"இந்த மாதிரி உன் உடம்பு சுமந்துட்டு போற வண்டி பின்னாடி எல்லாரும் ஓடி வரனும்னு நினைக்குறியா?" என்றான் நக்கல் தொனியில்...
"ஏன் அப்டிலாம் நடக்க கூடாதுன்னு நெனைக்குறியா நீ... அது மட்டுமில்ல... கலாமுக்கு எப்படி வானதிர துப்பாக்கி குண்டுகள் முழங்குச்சோ அந்த மாதிரி எனக்கும் முழங்கனும்டா..." என்று அவன் சொல்ல... நண்பன் விழுந்து விழுந்து சிரித்தான். "பேராசை கூடாதுடா..." என்று நண்பன் சொல்ல, "எதுடா பேராச... உயர்ந்த லட்சியத்துக்கும் பேராசைக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குற உங்கட்ட சொன்னேன் பாரு... ஏன் வண்டி இழுக்கறவன் கடைசி வரைக்கும் வண்டி இழுக்கறவனாவே இருக்கணுமா?" என்று கரிகாலன் கோவித்துக்கொள்ள, நண்பனின் முகம் சுருங்கியது.
"சாரிடா மாப்ள... உங்கப்பா செய்ற தொழில வச்சு ரொம்ப தரக்குறைவா நெனச்சுட்டேன்... உன் லட்சியத்த நெசமாக்க என்னடா செய்யணும்... " என்று நண்பன் சொல்ல...
"இந்த சமூகத்த உண்மையா நேசிக்கனும்... எல்லாத்தையும் கடந்து எப்படியாவது மேல வரனும்... ஆனா இந்த சாதிப்பெரும பேசுறனுவங்க நமக்கு முட்டுக்கட்டையா இருக்கானுங்க... 2021 நவம்பர் 23ம் தேதி சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள நூறு சிற்றூர்களுக்கு தலா பத்து லட்சம் பரிசு வழங்கப்படும்னு தமிழக அரசு அறிவிச்சுது... இப்ப நவம்பர் 2022ல இருக்கோம்... இதுவரைக்கும் வெறும் அஞ்சு கிராமந்தான் பரிசு வாங்கிருக்கு... எவ்வளவு பெரிய அசிங்கம் இது..." என்று சொன்ன கரிகாலன் நீண்ட பெருமூச்சுவிட்டு "எல்லாத்தையும் கடந்து மேல வரனும்... அப்ப தான் நம்ம லட்சியம் நோக்கி பயணிக்க முடியும்..." என்று அன்றிரவு தன் நண்பனிடம் உரையாடிய பொழுது...
அதேநேரம் அந்த ஊர் கிணற்றுக்குள் இறங்க முற்பட்டார் ஊர் பெரியவர்களில் ஒருவரான ராமச்சந்திரன். ராமச்சந்திரன் தீவிர சாதிப்பற்றாளர். ஆனால் அந்தப் பற்று அவருக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. கடும் வயிற்று வலிக்கு ஆளாகி இப்போது கிணற்றுக்குள் இறங்கி அந்தக் கிணற்றில் ஊர்ந்து கொண்டிருக்கும் நாகப்பாம்புகளில் ஏதோ ஒன்றிடம் கொத்து வாங்கி சாக வேண்டும் என்பதற்காக தான் கிணற்றுக்குள் இறங்கிக் கொண்டிருந்தார்.

ராமச்சந்திரன் நாக கிணற்றுக்குள் இறங்கியதை அந்த வழியாக நடந்தவரும்போது சற்றுத் தொலைவிலிருந்து பார்த்த எட்டு துப்புரவு தொழிலாளர்கள் "அடக்கடவுளே... வாங்கையா காப்பத்துவோம்..." என்று வேகமாக ஓடிவந்து தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கிணற்றுக்குள் குதித்தனர்.
அடுத்தநாள் காலை. நாக கிணற்றில் ராமனின் உடல், எட்டு துப்புரவு தொழிலாளிகளின் உடலென்று மொத்தம் ஒன்பது உடல்கள் மிதந்துகொண்டிருந்தன. அந்த உடல்கள் மீது சிட்டுக்குருவிகள் வரிசை வரிசையாய் அமர்ந்திருந்தன. இரவு முழுவதும் வீட்டிற்கு வராத துப்புரவு தொழிலாளிகளின் உறவினர்கள் ஊர் முழுவதும் தேட ஆரம்பிக்க அதிலொருவன் நாக கிணற்றை எட்டிப் பார்த்தான். மிதந்த சடலங்களை பார்த்து ஓவென கதறி அழுதான். சிட்டுக்குருவிகள் விசுக்கென்று பறந்து சென்றன.
அடுத்த சில மணிநேரங்களுக்குள் கிணறு முன்பு ஊர் கூடி நிற்க கரிகாலனும் நண்பனும் அங்கு வந்தனர். யாருக்கும் கிணற்றுக்குள் இறங்கி சடலங்களை தூக்கும் தைரியம் வரவில்லை. எல்லோரும் கரிகாலனையே மலங்க மலங்க பார்த்தனர். கரிகாலன் எந்தப் பயமும் இல்லாமல் கிணற்றின் படிக்கட்டில் இறங்க இறங்க நாகம் மெல்ல மெல்ல புதருக்குள்ளிருந்து வெளியே வந்தது. கரிகாலன் அதை பொருட்படுத்தாமல் துப்புரவு தொழிலாளிகளின் உடல்களை ஒவ்வொன்றாக தோளில் சுமந்து மேட்டுக்கு கொண்டு வந்தான். கடைசியாக ராமச்சந்திரனின் உடல் மட்டும் தனியாக மிதந்து கொண்டிருந்தது. ராமனின் சாதியை சேர்ந்தவர்களிடம் "உங்காளு பொணத்த நீங்களே இறங்கி எடுங்க..." என்று சொன்னான். அதைக் கேட்டதும் அவர்கள் முகம் வெளுத்துப் போனது. சிலரது முகம் பயத்தில் சிவந்திருந்தது. திருதிருவென விழித்தார்கள். கரிகாலன் அவர்களை பார்த்து பற்களை நெறித்துவிட்டு கிணற்றுக்குள் இறங்கி ராமனின் உடலை மேட்டுக்கு எடுத்து வந்தான்.

ராமனின் உடலை அவனது சாதிக்கார ஆட்கள் தூக்கிச் செல்ல... துப்புரவு தொழிலாளிகளின் உடல்களை அவரது ஆட்கள் தூக்கிச் சென்றனர். இருதரப்பினரது சடலங்களுக்கும் தனித்தனி சாதிக்கென்று உள்ள சுடுகாட்டில் இறுதிக்காரியம் நடக்க ஏற்பாடானது. கரிகாலனும் நண்பனும் தங்களது வீட்டை நோக்கி நடந்தனர். கரிகாலன் தன் வீட்டு உண்டியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான்.
ராமனின் வீட்டை நோக்கி நடந்தான். ராமனின் வீட்டு வாசலை சென்றடைந்தான். வெள்ளைத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ராமனின் நெற்றியில் இன்னமும் ஒரு ரூபாய் ஒட்டாமல் இருந்தது. கரிகாலன் தன் பாக்கெட்டிலிருந்த ஒரு ரூபாயை எடுத்து அதன்மீது சந்தனத்தை தடவி ராமனின் நெற்றியில் ஒட்டினான். அது ஒரு காலத்தில் கலெக்டர் ஆபிஸ் முன்பு "சாதி வேறுபாடுகளற்ற மயானம் வேண்டும்" என்று போராடிய ஒருவரின் நெற்றியிலிருந்த ஒரு ரூபாய்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.