வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காகத் தேவாலயம் தயாராகிக் கொண்டிருந்தது.
தச்சர்கள், துணி, காகித அலங்கார நிபுணர்கள், பந்தல் கட்டுவோர், ஓவியர்கள் எலக்ட்ரீஷியன்கள், வண்ணம் தீட்டுவோர் எனப் பல்வேறுக் கலைஞர்களும் குழுமிக் கோல கலமாக இருந்தது வளாகம்.
மறுநாள் புத்தாண்டு என்பதால் அனைத்து வேலைகளும் ஒவ்வொன்றாக முடிவுக்கு வந்துக் கொண்டிருந்தன.
'என்னதான் நடக்கிறது பார்ப்போமே!' என்ற ஆர்வத்தில் தான் உள்ளே வந்தனர் லாரன்ஸும், ப்யூலாவும்.
'ஜஸ்ட் கோ-இன்ஸிடென்ஸ்.
‘விட்ட குறை; தொட்டக் குறை.’
'லாரன்ஸ் மனசு முழுவதும் பரவசமாக உணர்ந்தான்.
எத்தனையோ அழகழகானப் பெண்களையெல்லாம் சாதாரணமாகக் கடந்து வந்திருக்கிறான் லாரன்ஸ்.
ஆனால் இன்று இந்த நிமிடம், இந்தப் பெண்ணைப் பார்த்ததுமேப் பரவசப்பட்டான்.
எதிரே நிற்பவள் பெண் தானா?;

அனைத்து சாமுத்திரிகா லட்சணங்களையும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்த சிற்பியால் வடிக்கப்பட்டச் சிற்பமா?
பேசும் கண்களை வாழ்நாளில் முதன் முறையாகப் பார்க்கிறான் லாரன்ஸ்'
கண்கள் செருகின.
தனக்குள் ஏதேதோ ரசாயன மாற்றங்கள் உருவாவதை உணர்ந்தான் லாரன்ஸ்.
*****
ப்யூலா.
தற்செயலாக அவளின் காந்தப் பார்வை, எதிரே கூப்பிடு தூரத்தில் நிற்கும் லாரன்ஸ் மேல் பரவியது.
இரும்புப் போன்ற உறுதியான தேகக் கட்டுடன் இப்படி ஒரு வாலிபனை இதுவரை சந்தித்ததில்லை போலத் தோன்றியது அவளுக்கு.
கண்கள் அவன் மேல் நிலைக் குத்தி நின்றன.
ஆங்கில இலக்கியம் படித்தவள் ப்யூலா.
ஷேக்ஸ்பியரின் காதல் கோட்பாடான Love at First Sight' என்பதன் பொருள் முழுவதுமாய்ப் புரிந்தது அவளுக்கு.
அவன் அருகில் சென்று நிற்கத் துடித்தது அவள் மனசு.
புத்தி அதற்கானத் திட்டத்தை வகுத்தது.
ப்யூலா புன்சிரித்தாள்.
*****

'காந்தப் புலம் ப்யூலாவின் கண்களில் மட்டுமல்ல, உதடுகளிலும் ஊடுருவி இருந்ததோ!'
ப்யூலாவை நோக்கிச் சென்றான் லாரன்ஸ்.
ப்யூலாவின் உள் நிகழ்ந்த வேதி மாற்றங்களால் அவள் மேனியெங்கும் பசலை படர்ந்தது.
'கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின்!'
‘வள்ளுவத்தின் முப்பரிமாணமாய்’ முன் நின்றது காட்சி.
கண் கலப்பில், பரஸ்பரம் பரிமாற்றமடைந்தன காதல்.
வாய்ச்சொற்கள், அதை உறுதி செய்தன.
******
ப்யூலாவின் உச்சரிப்பால் ஆங்கில மொழி புனிதம் பெற்றது.
"லிட்-ரி.ச்-ச...!'"
‘ர்’ விகுதியின்றிப் ப்யூலா உச்சரித்தது 'இச் ...!இச்...! இச்...!' என ஆங்கில இலக்கியத்தினை அவள் உதடுகள் முத்தமிட்டது போல் இருந்தது.
தன் நாடகங்களின் வசனங்களை பியூலா உச்சரிப்பாள் எனத் தெரிந்திருந்தால் 'ஷேக்ஸ்பியர்' ஆயிரக்கணக்கில் நாடகங்களை எழுதிக் குவித்திருப்பார்.
அப்படி ஒரு உச்சரிப்பு .
'சங்கீத நோட் 'போல அப்படியொரு கார்வை.
இருவருக்கும் பிரியவே மனமில்லை. பிரிய வேண்டிய நேரம்.
"உங்க செல் நம்பர் ப்ளீஸ்.!"
கேட்டான் லாரன்ஸ்.
"வித் ப்ளஷர்!"
எண்ணைச் சொல்லத் தொடங்கினாள்.

இரண்டு எண்களை சொன்னவள்; என்ன நினைத்தாளோத் தெரியவில்லை.
"நாளைக்கு இதே இடத்துல மிட் நைட் மாஸ்ல என் பேரண்ட்ஸ்ஸை இன்ட்ரொடியூஸ் பண்ணிய பிறகு சரியாப் 12 மணிக்கு நம்பர் ரிலீஸ் ஆகும். ஓகேயா?"
சொல்லிவிட்டுக் கண் சிமிட்டினாள் ப்யூலா.
லாரன்ஸ் ஹிக்கின் பாதம்ஸ் சென்றான்.
ஆங்கில இலக்கியப் பிரிவில் ஷேக்ஸ்பியர் புத்தகங்கள் அடுக்கில் நூற்றுக்கணக்கான டைட்டில்களில் எதைத் தேர்ந்தெடுப்தெனச் சந்தோஷமாகக் குழம்பினான்.
தேர்ந்தெடுத்தான்.
தன்னுடைய 'லெட்டர்ஹெட்'டில் ப்யூலாவுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எழுதினான்.
'கிஃப்ட் ஷாப்' சென்று 'கிஃட் பாக்' செய்தான்.
கடிகாரம் மிகவும் மெதுவாக ஓடுவதாகத் தெரிந்தது அவனுக்கு.
மணி ஒன்பதடித்தது.
மனசு முழுக்கப் ப்யூலாக் கனவுடன் புல்லட்டில் புறப்பட்டான் .
இன்னும் மூன்று மணி நேரத்தை ஓட்டியாக வேண்டும்.
வண்ணமயமானக் கடைத் தெருவை ரசித்தான்.
புத்தாண்டின் வரவை எதிர்நோக்கிக் கைகோர்த்து கொண்டு திரியும் காதல் விடலைகள்.
சாய்ந்தபடியும் படுத்தபடியும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிப் பாதசாரிகளைப் பீதியில் உறையவைக்கும் முரட்டு விடலைகள்.
அர்ச்சனைக் கூடைகளுடனும், பரிசுப் பொருட்களுடன் கோவிலுக்கும் தேவாலயத்துக்கும் செல்லும் பக்தி விடலைகள்.
மறைவிடங்களையும் இருளையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டுச் சீரழியும் காமாந்தக விடலைகள்.
இப்படி விதவிதமான நடுவயதுக்காரர்கள்; வயோதிகர்கள்; மங்கையர்; மடந்தையர்; பேரிளம் பெண்கள்; என்று அனைவரின் கேரக்டர்களையும், நடவடிக்கைகளையும், தனித் தன்மைகளையும் ரசித்துக் கொண்டேப் பொழுதைப் போக்கினான்.

நடைபாதை வியாபாரிகள், சுமந்து விற்கும் வியாபாரிகள் என்று மனிதர்களின் வயிற்றுப் பாட்டுக்கான அல்லாடல்களை உள்வாங்கினான்.
மணி பத்து தான் ஆகி இருந்தது. இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது ப்யூலாவைச் சந்திக்க.
மனது சற்று ஆயாசமாக இருந்தது லாரன்ஸ்க்கு.
"க்ராராஷ்ஷ்....!"
டூ வீலரில் அசுர வேகத்தில் சென்ற விடலைப் பையனின் ஹாண்டில் பார் மோதி, நிதானமின்றிச் சரிந்து விழுந்தார் ஒரு நடு வயதுக்காரர்.
விடலைக், கீழே விழாமல் சமாளித்து, தர்ம அடிக்குப் பயந்து நிற்காமல் எஸ்கேப்.
கூட்டம் கூடிவிட்டது.
இளைஞர்களின் பொறுப்பற்ற செயல்களைச் சாடிப் பேசுவதும்;
வயதானவர்களின் கவனக்குறைவை வைத்துக் கமெண்ட் செய்வதுமாக வேடிக்கை பார்த்ததுக் கூட்டம்.
அடிபட்டு விழுந்தவரை கவனிப்பார் யாருமில்லை.
இவர் ஷாப்பிங் செய்த பொருட்கள் , செல்போன், மூக்குக் கண்ணாடி அனைத்தும் சிதறிக் கிடந்தன.
சாலையோரம் கிடந்தச் சரளைக்கல் குத்தி, தலையில் இருந்து பெருகிய ரத்தப்போக்கு.
லாரன்ஸ் விரைந்துச் செயல்பட்டான்.
அடிப்பட்டவரை ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.
நடந்த விவரங்களை எல்லாம் சொல்லி அட்மிஷன் செய்தான்.
"க்ரிட்டிக்கல் கண்டிஷன். ப்ளீடிங் அதிகமாயிருச்சு. ப்ளட் ஏத்தணும்"
பரபரப்புடன் ப்ளட் க்ரூப் சொன்னார் டாக்டர்.
லாரன்ஸ் ரத்த தானம் செய்தான்.
எமர்ஜென்சி எனில் இந்த நம்பருக்கு போன் செய்யவும். என்று அடிபட்டவரின் செல்போனில் காட்டிய நம்பருக்குப் போன் செய்து தகவல் சொன்னான்.
*****

மணி 12 அடித்தது. எங்கெங்கும் ஹேப்பி நியூ இயர் என்ற கோஷம்.
எமர்ஜென்சி வார்டிலிருந்து வந்தார் டாக்டர்
மிஸ்டர் லாரன்ஸ். ஹாப்பி நியூ இயர். பேஷண்ட் இப்போ அவுட் ஆப் டேஞ்சர். சரியான நேரத்தில் நீங்கள் கொண்டு வந்து சேர்த்ததுனால அவர் உயிர் பிழைத்து விட்டார். உடையவங்களுக்கு சொல்லிட்டீங்களா?
"ம்"
ப்யூலாவைச் சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று ஏக்கம் இருந்தாலும், ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றிய திருப்தியில் இருந்தான் லாரன்ஸ்.
அதே நேரத்தில் டாக்டர் முன் வந்து நின்றனர் இரண்டு பெண்கள்.
விபரமறிந்ததும் அப்பா என்று சொல்லிக் கொண்டே எமர்ஜென்சி அவர்களுக்குள் நுழைந்து விட்டாள் மகள்.
"ஒரு நேரத்தில உள்ளே ஒருத்தரருக்குத்தான் அனுமதி. அவங்க வந்ததும் நீங்க போங்க ;
மேடம், உங்க கணவர் இப்போ உயிரோட இருப்பது சாராலத்தான் "
லாரன்ஸைக் காட்டினார் டாக்டர் .
அந்த அம்மாளுக்குக் கும்பிடு போட்டான் லாரன்ஸ்.
"உங்க கணவரை உங்கக்கிட்டே ஒப்படைச்சிட்டேன். இந்தாங்க அவரோட செல்ஃபோன்."
"மிக்க நன்றி சார். உங்க உதவியை வாழ்நாளில் மறக்க முடியாது!"
"ஓ கே ம்மா. எனக்கு விடை கொடுங்க. என் காதலி சர்ச்ல எனக்காக வெய்ட் பண்ணுவாங்க. அவங்களுக்குப் புத்தாண்டு கிஃப்ட் தர அவசரமாப் போகணும்!"
என்று லாரன்ஸ் சொல்லிக்கொண்டிருந்தபோதே எமர்ஜென்ஸி வார்டிலிருந்து வெளியே வந்த பெண் சொன்னாள்.
" நீங்கதான் என் அப்பாவோட உயிரைக் காப்பாத்தி விலை மதிப்பில்லாத புத்தாண்டுப் பரிசு கொடுத்துட்டீங்களே மிஸ்டர் லாரன்ஸ்." என்று
இந்த நேரத்தில் பியூலாவை இப்படி ஒரு நிலையில் எதிர்பார்க்காத லாரன்ஸ் உரைத்து நின்றான்.
******
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.