Published:Updated:

சுடாத சூரியன் - பாகம் 1| Science Fiction சிறுகதை | My Vikatan

Representational Image

"டேய், டிவில சொல்றது நெசமோ பொய்யோ, ஒரு நாளு நமக்கெல்லாம் அது தெரியத்தான் போகுது. நாமெல்லாம் மொத்தமா செத்தா என்னடா? நம்ம ஊரு பேரச் சொல்ல கதிரு இருப்பான்டா, உசுரோட.''

Published:Updated:

சுடாத சூரியன் - பாகம் 1| Science Fiction சிறுகதை | My Vikatan

"டேய், டிவில சொல்றது நெசமோ பொய்யோ, ஒரு நாளு நமக்கெல்லாம் அது தெரியத்தான் போகுது. நாமெல்லாம் மொத்தமா செத்தா என்னடா? நம்ம ஊரு பேரச் சொல்ல கதிரு இருப்பான்டா, உசுரோட.''

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"எலேய்! மேள தாளத்துக்கு சொல்லியாச்சா?"

"சொல்லி எல்லாம் பஸ் ஸ்டாப்புக்குப் போய்ட்டாங்கய்யா".

"மாலை?"

"அதுவும் போயாச்சு".

"ஆரத்தி எடுக்க யாரு ஏற்பாடாயிருக்கு?"

"பஸ் ஸ்டாப்புல எடுக்க ரமா அத்தை நாலு பேரக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. கதிரு வீட்டுல எடுக்க அவங்க அம்மா, சொந்தக்காரங்க எல்லாம் ரெடியா இருக்காங்க".

"மேளச் சத்தம் கேக்குதுடா. நீங்க ஏன் இன்னும் இங்க இருக்கீங்க? போங்க, போங்க… போயி உங்கக் கூட்டாளிய மாலை மரியாதையோடக் கூட்டிட்டு வாங்க. மறக்காம அப்பிடியே பொழுது சாய ஊர்க் கூட்டத்துக்கு அவனக் கூட்டிட்டு வந்துடுங்க".

"சரிங்கய்யா".

-------

"வாங்கடா, வாங்கடா, சீக்கிரம்… நாம இல்லாம எப்பிடிடா கதிருக்கு வரவேற்பு? ஊர் மானத்தக் கொடி பிடிச்சுக் காப்பாத்துன மாதிரிக் காப்பாத்திட்டு வந்திருக்கான்".

Representational Image
Representational Image
Unsplash

"ஏன் மாப்ள, நெஜமாவே ரொம்பப் பெரிய விஷயமோ? எல்லாரும் அவன் இப்பிடித் தலைலத் தூக்கி வச்சு ஆடுறாங்க?"

"டேய், இந்தியாவுல இருந்து பூராவும் இதுவரைக்கும் மொத்தம் தொள்ளாயிரத்து ஐஞ்சு பேர் தான் செலக்ட் ஆகியிருக்காங்க. ஆயிரம் பேர் கூட செலக்ட் ஆகலை. தமிழ்நாட்டுல இருந்து நூத்தி இருபத்திநாலு பேர் தான். நம்ம மாவட்டத்துல இருந்து கதிரோட சேத்து ரெண்டு பேர் தான் செலக்ட் ஆகியிருக்காங்க. பின்ன ஆடமாட்டாங்களா?"

"அப்ப, டிவில சொல்றதெல்லாம் நெசம்தானாடா, மாப்ள?"

"நாமெல்லாம் மொத்தமா சாவப்போறமாடா?"

"டேய், டிவில சொல்றது நெசமோ பொய்யோ, ஒரு நாளு நமக்கெல்லாம் அது தெரியத்தான் போகுது. நாமெல்லாம் மொத்தமா செத்தா என்னடா? நம்ம ஊரு பேரச் சொல்ல கதிரு இருப்பான்டா, உசுரோட. அவன் முன்னாடி மூஞ்சத் தொங்கப்போட்டுகிட்டு நடமாடாதீங்க. அவன் இருக்கற வரைக்கும் அவன சந்தோசமா வச்சிருந்து வழியனுப்பணும்".

"எடேய், பேரனுகளா, என்னடா மேளமும் தாளமும் ஒரே ஆர்ப்பாட்டமா இருக்கு? திருவிழா கூட இல்லியேடா. ஊர்ல எந்த நல்லது கெட்டதுடா இருக்கு இந்தக் கெழவிக்குத் தெரியாம?"

"அது ஒண்ணும் இல்ல, அப்பத்தா. நம்ப கதிரு ஊர்ல இருந்து வர்றான். அவனுக்குத் தான் இதெல்லாம்".

"கதிரா? ஆரு?"

"நம்ப வேலய்யாரு மகன்".

"வெடவெடன்னு ஒசத்தியா, தலை நெறைய மயிரும் புசுபுசுன்னு மீசையும் வச்சிருப்பானே, அவனா?"

"ஆமா, அப்பத்தா, அவனேதான்".

"அடியாத்தி… அவனுக்கென்னாத்துக்கு இந்தக் கூத்து? அப்பிடி எந்தச் சீமைக்குப் போய்ட்டு வாராரு தொரை?"

"சீமைக்கிப் போய்ட்டு வரல, அப்பத்தா. இனிமே தான் போகப் போறான். அதுவும் வெறும் சீமைக்கு இல்ல… வேற ஒலகத்துக்கே போகப் போறான்".

"எடேய், என்னடா? அப்பத்தாவக் கேலி சீண்டுறீகளா? வேற ஒலகமா? அது எங்கன இருக்கு? அங்க ஏன்டா இவன் போறான் நம்மூரு மண்ண விட்டுட்டு?"

"அப்பத்தா, டிவில செய்தி எல்லாம் பாக்கறதில்லையா?"

"நான் என்னத்த அதப் பாத்தேன்? நீதான் சொல்றது அப்பத்தாக்கு அப்பிடி என்ன சேதின்னு".

Representational Image
Representational Image

"நம்ம சூரியன் இருக்குல்ல, அப்பத்தா, சூரியன், அது இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள செத்துடுமாம். அது செத்துடுச்சுன்னா நமக்கு வெளிச்சம் எதுவும் வராதாம். ஒலகமெல்லாம் ஒரே இருட்டாயிடுமாம். எப்பவுமே ராத்திரியாத்தான் இருக்குமாம். பொழுது விடியவே விடியாதாம். பயங்கரமாக் குளிரா இருக்குமாம். செடி கொடியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செத்துடுமாம் சூரிய வெளிச்சம் இல்லாம. நம்மகிட்ட அரிசியும் பருப்பும் இருக்கற வரைக்கும் நாமெல்லாம் அத சாப்பிட்டுக்கிடலாமாம். அதெல்லாம் காலியாகிடுச்சுன்னா எல்லாரும் பட்டினி கெடந்து சாகவேண்டியதுதானாம்".

"போங்கடா, போங்கடா, போக்கத்தப் பயலுவளா… சூரியன் சாகுதாம்…! சூரியன் சாமிடா! சாமிக்கு ஏதுடா சாவு? இன்னொரு தடவ இது மாதிரி எதாவது சொல்லிகிட்டு என் முன்னாடி வந்தீகளோ… ஒலக்கைய எடுத்து சாத்திடுவேன். போங்கடா!"

------

"ஏம்ப்பா கதிரு, என்னதான்பா நடக்குது? ஆளாளுக்கு ஏதேதோ சொல்லுறாங்க. டிவில வேற எதை எதையோ படம் போட்டுக் காட்டுறான். சாதி சனமெல்லாம் மெரண்டு போய்க் கெடக்காகப்பா. நீயாச்சும் கொஞ்சம் தைரியம் சொல்லுய்யா".

"பெரியவங்களுக்கும் பஞ்சாயத்துக்கும் சபைக்கும் ஊருக்கும் வணக்கம். நான் தைரியம் சொல்லணும்னா சொல்றதுக்கு எதாச்சும் இருக்கணுங்கய்யா. டிவில காட்டுறது செய்தில சொல்றது எல்லாம் நெசந்தான். இப்பப் போட்டுருக்கற கணக்குப் படி இன்னும் எழுநூத்தி முப்பத்தியேழு நாள்ல சூரியன் சாகப்போகுதுன்னு விஞ்ஞானிங்க எல்லாம் கணிச்சு இருக்காங்க. நியாயப்படி பார்த்தா இது இன்னும் பல நூறாயிரம் வருஷத்துக்கப்புறம் தான் நடக்கணும். ஏன் இப்பவே நடக்குதுன்னு யாருக்கும் தெரியல".

Representational Image
Representational Image
Vikatan Photo Library

"யப்பா கதிரு, கொஞ்சம் நிறுத்துப்பா. சூரியன் சாகப்போவுதா? ஏம்ப்பா, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?"

"அண்ணே, தப்பா நெனச்சுக்காதீங்க. நீங்க யாரும் நம்புனாலும் நம்பலைன்னாலும் இது நடக்கத்தான் போகுது".

"ஏ வீராச்சாமி! எகண மொகணையாப் பேசுறதே ஒனக்கு வேலையாப் போச்சு. அதான் அவன் சொல்லிகிட்டு வரான்ல. பேசாமக் கேக்குறதுன்னா கேளு, இல்லன்னா ஊர்க்கூட்டத்துல இருந்துக் கெளம்பி வீட்டுக்குப் போ".

"அதெப்பிடி என்னய வீட்டுக்குப் போகச் சொல்லுவீங்க? தலைக்கட்டு கட்டுறானாக்கும். எல்லா உரிமையும் இருக்கு எனக்கு இங்க உக்கார".

"வீராச்சாமிண்ணே, நீங்க கேக்கறது சரி தான். சூரியன் எப்பிடி சாகும்? அதத்தான் சொல்ல வந்தேன். நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்தா எனக்குத் தெரிஞ்சத எடுத்துச் சொல்லுறேன்".

"ஹாங்… இது பேச்சு. பட்டணத்துப் படிப்பு பேச்சுல தெரியுதுல்ல… இத விட்டுட்டு வீட்டுக்குப் போ அது இதுன்னு… நீ சொல்லு தம்பி, கதிரு".

Representational Image
Representational Image

"வீராச்சாமி அண்ணேன் கேட்டது நியாயமானக் கேள்வி. சூரியன் எப்பிடி சாகும்? நமக்கெல்லாம் சூரியன்னா சாமி. ஒழவுக்கும், வயலுக்கும், மாட்டுக்கும், மழைக்கும், மனுசனுக்கும் உசுரு குடுக்குற சாமி. சாமியா நினைச்சு நாம சூரியனுக்குப் பொங்க வச்சுக் கும்புடுறதுனால சூரியன் ஒரு நட்சத்திரங்கறத மறந்துட்டோம். எல்லா நட்சத்திரத்தப் போலதான் அதுவுங்கறது நம்ம நெனவுலயே நிக்காமப் போயிடுச்சி. சூரியனுல இருந்து நமக்குக் கிடைக்கற வெளிச்சம், சூடு எல்லாமே அதுல இருக்கற ஹைட்ரஜனாலதான். இந்த ஹைட்ரஜன் காலியாகிடுச்சுன்னா சூரியன்ல எரியறதுக்கு எதுவும் இருக்காது. நம்ம அடுப்புல கரி காலியாகிடுச்சுன்னா அடுப்பு அணைஞ்சிடும்ல…? அது போலத்தான் சூரியன்லயும். ஹைட்ரஜன் காலியாகிடுச்சுன்னா அதுவும் அணைஞ்சிடும்".

"அப்படின்னா அதுக்கப்புறம் ஒலகம் மொத்தமும் இருட்டாயிடுமா?"

"ஆமா. ஆனா அதையெல்லாம் பாக்க ஒரு புழு பூச்சி கூட இருக்காது. டிவில வீடியோ போட்டுக் காட்டிருப்பானே… ஹைட்ரஜன் காலியானதும் சூரியன் ஒண்ணும் அப்பிடியே அமந்து போயிடாது, லைட் சூட்சை ஆஃப் பண்ண மாதிரி. அது விளக்கு மாதிரி. அணையறதுக்கு முன்னால விளக்கு ஒரு செகண்டு ரொம்பப் பிரகாசமா எரியும் பாருங்க, அது மாதிரி. அப்பிடிப் பிரகாசமா எரியறப்ப சூரியன் அப்பிடியே பலூன் மாதிரி பெரிசாகும். அப்பிடிப் பெரிசாகுறப்போ அது கிட்டக்க இருக்கற மொதல் ரெண்டு கோள்கள் புதனும் வெள்ளியும் பஸ்பமாயிடும். நாம மூணாவதா இருக்கோம். நாமளும் மொத்தமா பஸ்பமாகுறமா இல்லையாங்கறது சூரியன் எவ்வளவு பெரிய பலூனா ஆகுதுங்கறதப் பொறுத்துதான்.

அப்பிடி பஸ்பமாகலைன்னாலும் ஒலகம் மொத்தமா ஒரே நொடில எரிஞ்சு போயிடும். மரம், மட்டை, மனுஷன், வயக்காடு, வீடு, கோயில், மாளிகை, குடிசைன்னு அவ்வளவும் நிமிசத்துல சாம்பலாயிடும். ஆறு, குளம், ஏரி, வாய்க்கால், கெணறு, குட்டை, கடல், சமுத்திரம் - அத்தனையும் ஆவியாகி பாளம் வெடிச்சக் கட்டாந்தரை ஆயிடும். மொதல்ல இப்பிடி ஊதுன பலூன் போலப் பெருசாகுற சூரியன் அடுத்துக் காத்துப் புடுங்கிவிட்ட பலூன் போல சுருங்கிடும், சில நூறாயிரம் வருஷத்தக்கப்புறம். அப்பிடி சுருங்கறப்போதான் ஒலகம் ஒரே இருட்டாவும் குளிராவும் வெறும் கல்லாவும் அந்தரத்துலத் தொங்கிகிட்டு இருக்கும்".

“…”

“…”

“…”

“…”

"ஈரக்கொலை நடுங்குதப்பா. நெசந்தானா கதிரு இதெல்லாம்?"

"நம்ம மண்ணு மேல சாத்தியமா இதெல்லாம் நெசம்".

"ஒன்னய எதுக்கோ ஆள் எடுத்துருக்காங்களாமே, அது எதுக்குய்யா?"

"வேற ஒலகத்துக்குப் போறதுக்கு".

"என்னது…? வேற ஒலகமா?"

"அது எங்கன இருக்கு?"

"யப்பா, ஒன்னய மட்டுமாக் கூட்டிகிட்டுப் போறாங்க? ஊர்ல இத்தனை மனுஷ மக்கா இருக்கமேய்யா".

"ஒலகம் மொத்தமும் எரிஞ்சு சாம்பலாகுறப்ப நாமெல்லாம் மட்டும் மிஞ்சுவமா? மனுச குலம் அம்புட்டும் எரிஞ்சு சாம்பலாயிடுவோம்ல…? பேருக்குக் கூட ஒத்த மனுசன் மிஞ்சமாட்டான். அதான் ஏதோ கொஞ்ச பேரையாவது காப்பாத்தலாம்னு ஒலகத்துல இருக்கற எல்லா நாட்டுத் தலைவர்களும் முடிவு பண்ணியிருக்காங்க. மனுஷன் வாழத் தகுதியான கிரகமா இருக்கலாம்ன்னு விஞ்ஞானிங்க ரெண்டு கிரகங்கள அனுமானிச்சு அடையாளம் கண்டு வச்சிருக்காங்க. ஆனா அங்க நேரடியா போகமுடியாது. மொதல்ல செவ்வாய் கிரகத்துக்குத்தான் போகணும். அங்கேயிருந்து தான் அடுத்து என்ன செய்யறதுன்னு பாக்கமுடியும். அப்பிடி செவ்வாய் கிரகத்துக்குப் போறதுக்குத் தான் ஆள் எடுத்திருக்காங்க".

Representational Image
Representational Image

"ஏ கதிரு! அதென்ன நீ மட்டும் போறது? இம்புட்டு பேர்ல ஒன்னய மட்டும் கூப்புட்டானாக்கும்?"

"இல்லீங்க, என்னய மட்டும் கூப்புடலை. ஒலகத்துல இருக்கற மனுசங்க பதினாறு வயசுல இருந்து முப்பத்தியஞ்சு வயசு வரைக்கும் இருக்கற எல்லாரையும் தான் கூப்புட்டாங்க. அப்பிடி வர்றவங்கள விதவிதமா சோதனை செய்றாங்க - ஒடம்பு ஆரோக்கியமா நோய் நொடி இல்லாம இருக்காங்கறதுல இருந்து, போற எடத்துல வர்ற எல்லாப் பிரச்னைகளையும் சந்திக்க ஒடம்புல தெம்பும் மனசுல துணிச்சலும் மண்டைல அறிவும் இருக்கான்னு ஒரு வாரமா சோதனை பண்ணி அதுல தேர்வாகுறவங்கள மட்டும் தான் இதுக்கு எடுக்குறாங்க. நாடு, மொழி, மதம், சாதின்னு எந்த வித்தியாசமும் கிடையாது. சோதனைல ஜெயிக்கணும், அது ஒண்ணுதான். இதுல எல்லாம் நீங்க எல்லாரும் ஜெயிச்சா ஒங்களையும் கூட்டிட்டுப் போவாங்க".

"ஏம்ப்பா, இதெல்லாம் எங்களுக்கு முன்னமேத் தெரிஞ்சிருந்தா நாங்களும் வந்திருப்பம்ல அப்பிடி என்னதான் சோதனைன்னு பாக்க…"

"டிவிலயும் பேப்பர்லயும் தெனம் போட்டுக்கிட்டேதான இருக்காங்க".

"ஏன் கதிரு, இம்புட்டு வெவரத்தையும் இப்ப சொல்ற தொரை நீ போக முன்னாடி சொல்லிருந்தா நம்மூரு இளசுங்க கூட நாலு வந்திருக்கும்ல?"

"நான் சும்மா வெளயாட்டாதாங்கய்யா போனேன். இது ஏதோ ஏமாத்து வேலை, போயி என்ன ஏதுன்னு பாத்துட்டு ப்ராடு வேலையா இருந்தா போலீசுல புகார் குடுக்கலாம்ன்னு தான் போனேன். அங்க போயி ரெண்டு நாள் வரைக்கும் நானும் ஒங்கள போலத்தான், எதையும் நம்பலை. போகப் போகத்தான் தெரிஞ்சது அம்புட்டும் நெசம்ன்னு".

"சோதனையெல்லாம் முடிஞ்சிருச்சா? இன்னும் நடந்துகிட்டு இருக்கா?"

"இன்னும் கிட்டத்தட்ட ரெண்டு வாரம் வரைக்கும் நடக்கும்ன்னு நினைக்கறேன். இப்பவும் ஒண்ணும் மோசமில்ல. போறவுங்கப் போகலாம்".

"அது எங்கன, எப்பிடிப் போறதுன்னு கொஞ்சம் விவரமா சொல்லு, தம்பி".

"நான் எந்த வெவரமும் சொல்லத் தேவையில்லைக்கா. பேப்பர்லயும் டிவிலயும் பாருங்க. ஒரு போன் நம்பர் இருக்கும் இந்த வெவரங்களுக்கு அடியில. அதுக்கு போன் பண்ணா போதும். அவங்களே எல்லா வெவரமும் தெளிவா சொல்லிடுவாங்க".

"ஏன் பேராண்டி, அதான் இன்னும் சுமார் ரெண்டு வருசம் இருக்குங்கற இதெல்லாம் நடக்க. அப்புறம் ஏன் ரெண்டு வாரத்துக்குள்ள ஆள் எடுக்கறத நிறுத்துறாங்க?"

"தாத்தா, நீங்க நாலு நாளு பேரன் பேத்தியப் பாக்க மக வீட்டுக்கு அதக் குடுத்துருக்கற ஊருக்குப் போகணும்னா நெனச்சாப்ல கெளம்பிடுவீங்களா?"

"அதெப்பிடிப்பா? எம்புட்டு ஏற்பாடு இருக்கு? வயக்காட்டு வேலையெல்லாம் ஒழியவைக்கணும், மாடு கன்னுக்கு தீனி தண்ணிக்கு ஏற்பாடு பண்ணனும், பேரப் புள்ளைகளுக்குப் பலகாரம் செய்யணும், ரயிலுக்கு டிக்கெட்டுப் போடணும்… நெனச்சாப்ல எப்பிடிக் கெளம்பமுடியும்?"

Representational Image
Representational Image

"ஏன் தாத்தா, மக வீட்டுக்கு நாலு நாள் போறதுக்கே இம்புட்டு ஏற்பாடு ஆகவேண்டி இருக்கே… வேற ஏதோ கிரகத்துக்குப் போறதுக்கு, அதுவும் திரும்பி வர முடியாத ஒரு எடத்துக்குப் போறதுக்கு எம்புட்டு ஏற்பாடு பண்ணனும்?"

"வாஸ்த்தவந்தான், பேராண்டி".

"பஸ்ல ஏறி ஒக்காந்தோம், டிரைவர் ஓட்டுனாருன்னு எல்லாம் போகமுடியாது. விண்வெளில போற ராக்கெட்டுங்கறது கப்பல் மாதிரி. காப்டன்னு ஒருத்தரு இருப்பாரு. அவருக்குக் கீழ தான் அதுல இருக்கற எல்லாரும். ஆனாலும் சும்மா சாப்புட்டுத் தூங்கி எந்திரிச்சு பொழுதை போக்குனோம்ன்னு இருக்க முடியாது. ஆளாளுக்கு ஒரு வேலை இருக்கும். முறை மாத்தி மாத்தி அந்தந்த வேலைங்கள செய்யணும்".

"எல்லாராலையும் எப்பிடி எல்லா வேலையும் செய்யமுடியும்? எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியுமா?"

"ஆங்… அப்பிடிக் கேளுங்க. எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியாது, தெரிஞ்சுக்கவும் முடியாது. அதுனால தான் தேர்ந்தெடுத்தவங்க எல்லாரையும் இப்பவே வரவைச்சு அவங்களுக்கு ட்ரெய்னிங் குடுக்குறாங்க. வழக்கமா இந்த மாதிரி ராக்கெட்டுல போறதுக்கெல்லாம் வருஷக்கணக்கா ட்ரெய்னிங் எடுப்பாங்க. ஆனா இப்ப அதுக்கெல்லாம் நேரமில்லை. அதுனால இருக்கற சமயத்துல முடிஞ்ச அளவு கத்துக்க வேண்டியதுதான்".

"அப்ப ஒனக்கும் இந்த பயிற்சியெல்லாம் குடுப்பாங்களா?"

"செலக்ட் ஆகுற எல்லாருக்கும் குடுப்பாங்க. அப்பிடி ட்ரெயினிங் எடுக்க டைம் வேணுமில்ல…? அதுனால தான் கடைசி வரைக்கும் ஆள் எடுக்கலை".

"அப்ப நீ போகணுமா இந்த ட்ரெயினிங்குக்கு?"

"ஆமா".

"எப்போ?"

"இன்னும் எட்டு நாள்ல".

"எல்லாம் முடிஞ்சு ஒரு எட்டு வந்து இந்த மாதிரி எங்களையெல்லாம் பாத்துட்டுப்போ, சாமி".

"இல்ல, பெரியாத்தா. இப்பப் போறது தான். அப்புறமெல்லாம் வர முடியாது. நான் மட்டுமில்ல. செலக்ட் ஆகுற யாரும் எங்கயும் போக முடியாது. இப்பவே ரொம்பக் கண்டிஷனோட தான் அனுப்பியிருக்காங்க".

"அடப்பாவி மக்கா! மனுசனுக்கு ஏஞ்சாமி இப்புடியெல்லாம் சோதனை வருது?"

"ஏய்! எல்லாரும் நிறுத்துங்கப்பா. போதும். கதிரு போயி அவன் குடும்பத்தோட இருக்கட்டும். ஒத்த புள்ள! பெத்தவக மனசு என்ன பாடு படும்!"

"ஆமா, கதிரு! நீ கெளம்பு. இந்தா உங்க அப்பனும் ஆத்தாவும் வச்ச கண்ணு வாங்காம ஒம் மொகத்ததேன் பாத்துகிட்டு ஒக்காந்திருக்காக".

"வேலய்யா குடும்பம் மொத்தமும் ஊர்க்கூட்டத்துல இருந்து கெளம்ப உத்தரவு குடுத்தாச்சு. கெளம்புங்கப்பா".

------

தொடரும் …

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.