வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
காலையில் வழக்கம் போல எழுந்து, குளித்துக் காப்பி குடித்து சாமி கும்பிட்டுவிட்டுப் பேப்பர் பார்க்க உட்கார்கையில் வந்தது அந்த ஃபோன்.
எடுத்து ‘ஹலோ…?’ என்றதும்.
தன் பெயரைச் சொல்லிவிட்டு, நீங்கள்தானா?’ என்றது.
‘ஆமாம்! நான்தான்’ என்றதும்,
‘என்னைத் தெரியுதா?’ என்றது…!
நம்பர் சேவ் பண்ணி வைக்காத்தாலும், நபர் புதிதாகப் பேசுவதாலும் யார்னு தெரியலை..! இருந்தாலும், ஒருவிஷயம்.
எல்லாரும் செய்யற ஒரே தப்பு இதுதான். ‘என்னைத் தெரியுதான்னா?’ அதுவொன்னும் வீடியோ காலுமில்லை! பேசறவர் குரல் ஃபெமிலியரான குரலுமில்லை! என்னைத் தெரியுதான்னு என்ன கேள்வி?! அப்புறம் சில மேதாவிகள் போன் பண்ணி, ‘ ஹாலோ.., நான்தான் பேசறேன்னு சொல்றது! நீதான் பேசறே.?!.
ஆனா, நீ ….யாரு…?! இன்னார் பேசறேன்னு சொல்லணுமில்லே?! சொல்றது கிடையாது! கேக்கறவன் மண்டையை உடைச்சுக்கணும்!. இதெல்லாம், ஒரு பக்கம் இருக்கட்டும். ஃபோன் நபர் சொன்னதைச் சொல்றேன்.

‘நீங்க எழுதறதைத் தொடர்ந்து படிக்கிறேன்…!’
‘ம்ம்.. மனுஷன் என்ன சொல்லப் போறாரோ…?! கேட்போம். ஆர்வம் பீரிட ‘சொல்லுங்க சார்…?’ என்றதும்,
‘என்ன சார், ஒரே சுய புராணம் மாதிரி இருக்கு?! நீங்க, என்ன பெரிய மேதையா அட்வைசெல்லாம் பண்றீங்க?!’
‘ஓ! ஆளு, நம்ம கதையை முடிக்கக் கிளம்பினவருனு தெரிஞ்சது.
‘நீங்க எதைச் சொல்றீங்க? தெரியலையே ?’ என்றேன்.
‘இல்லை … உங்க சொந்தக் கதையைக் கேக்கவா நாங்க இருக்கோம்?! உருப்படியா எதாவது சொல்லலாம்ல…?! என்ன சுய சரிதையா எழுதிறீங்க?! பேரை மாத்தி எழுதினா.. அது, பண்ணினது நீங்கதான்னு அப்பட்டமா தெரியாதா?’
‘சரி எல்லா உண்மையும் வரட்டும்னுதான் படிச்சிட்டிருக்கேன். வரும்ல..? என்றார்.

‘அவர் எதிர்பார்ப்பு புரிஞ்சது!’ எனக்கு.
சரி, இவரை விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி…
‘நான், கலாம் சாரோ, காந்திஜியாரோ இல்லைதான். சுய சரிதம் எழுத, நானும் சரி, என் பேனாவும் சரி உள்ளதைச் சொல்லும் உண்மையைச் சொல்லும் வர்கம்! கதையில் யாருக்கோ நடந்ததாச் சொன்னாலும், நாட்டுக்கு நல்லதைச் சொல்லுவோம்.
கவியரசு கண்ண தாசன் சொன்ன மாதிரி, ‘நான் வாழ்ந்தபடி வாழாதீங்க!, நான் சொன்னபடி வாழுங்கன்னு சொல்றதுதானே வனவாசமும்?! மனவாசமும்?! அது மாதிரிதான் என் படைப்பும்.
‘நீங்க என்ன பெரிய கண்ணதாசனா? ஞானியா? இல்லை குருவா?’
‘எந்த ஞானியும், குருவும் தான் ஞானி, குருன்னு சொல்ல மாட்டாங்க!
அவங்க செயல்களின் உண்மைத்தன்மை சொல்லும்.
ஒரு உதாரணம் சொல்றனே..!
காலைல எல்லாத்துக்கும் ‘வாட்ஸாப் மெசேஜ்’ அனுப்புவேன். இனிய காலை வணக்கம்னுதான் நான் டைப் பண்ணுவேன்! ஆனால், என் செல் ஃபோன் உள்ளத்திலிருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் என்னைக் கேட்காமலேயே காலை வணக்கத்தைக் கூலை வணக்கம்னு அது அனுப்பும். அதுக்குத் தெரியுது, நான் கூழைக்கும்பிடுதான் போடறேன்னு..! நானும் என் எழுத்தும் பொய் சொல்வது கிடையாதுங்கறதுக்கு இது ஒண்ணே உதாரணம். இன்னும் நெறைய இருக்கு!
‘உள்ளதை சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் உள்ளதை வார்த்தையில் மறைக்கும் கபடம் கிடையாது, எனக்கும், என் செல்போனுக்கும்!.
அனேகமா நான் சொல்றதுல நீங்க சந்தோஷப்படறீங்களோ இல்லையோ என் செல்போன் சந்தோஷப்படும்!

பெயரை மாத்தி எழுதறேன். எல்லாம் வரும்கறீங்க… எதை எழுதணும்னு தெரியாதா?!?!
நிசப்தம் … !!!
‘ஹலோ பேசறது கேட்குதா?’
உண்மையைச் சொல்ல ஆரம்பிச்சாலே டவர் கிடைக்கலைனு ‘கட்’ பண்ணிடுவீங்களே…?! அதான் கேட்கறேன்!
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதுதானே அறிவு?! சொல்றவனை பார்க்காதீங்க. சொல்றதைப் பாருங்க!
நீயூட்டன் பத்தி, ஒரு கதை கேள்விப் பட்டிருப்பீங்க…!
அவர் ஒருநாள் ஆப்பிள் மரத்துக்குக் கீழ போய் உட்கார்ந்தாராம். ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு பழம் கீழே விழ, எழுந்து உட்கார்ந்தவர்…
‘இந்த ஆப்பிள் ஏன் கீழ வருது? மேலே போகலைனு? யோசிச்சு புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடிச்சார்னு. அதேமாதிரி சம்பவம் ஒண்ணு, இங்கயும் நம்ம நாட்டுலயும் நடந்தது. அங்க ஆப்பிள் மரம். ஆனா, இங்க ஆல மரம். களைச்சுப் போன ஒருத்தன், ஒரு ஆலமரத்தடியில படுத்தானாம். படுக்கும்போதே, ஆண்டவன் பிரமிப்பை எண்ணி அதிசயிச்சிருக்கான்.

வர்ற வழியில தரையில, ஒரு பூசணிக் கொடியைப் பார்த்தோம்.. அதில பூசணிக்காய் எவ்வளவு பெரிசா இருந்துச்சு?! இந்த ஆல மரம் எவ்வளவு பெருசா ‘அடையார் ஆலமர’மாட்டம் இருக்குது? இதுல காய், சுண்டக்காய் தண்டிதானே இருக்கு?! ஆண்டவனுக்கு அறிவே இல்லை. அந்த பூசணிக்காயை இந்த ஆல மரத்துலயும் இந்த துளியூண்டிருக்கிற ஆலங்காயை பூசணிக் கொடியிலயுமில்ல வைச்சிருக்கணும்னு நெனைச்சுட்டுத் தூங்கிப் போனானாம்.
காத்தடிச்சது…
பொத்துனு அவன் நெத்தில ஒரு ஆலங்காய் மேலே ஆலமரத்திலிருந்து விழுந்ததாம். பதறி எழுந்தவன்,
‘ஆண்டவனே உன் படைப்பைத் தப்பா நெனைச்சுட்டேன். என்னை மன்னிச்சுடு! இந்த ஆல மரத்துல, பூசணிக் காய் இருக்கணும்னு நெனைச்சனே?! இது பூசணிக்காயா இருந்து, இப்ப விழுந்தா மாதிரி அது என் நெத்தியில விழுந்திருந்தா நான் செத்துப் போயிருப்பேனே?! ‘ என்னை மன்னிச்சுடு! ஆண்டவனேனாம்.
ஆலங்காய் ஏன் கீழ வரதுன்னு அவன் யோசிக்கலை. ஆண்டவன் படைப்பைத் தப்பா நெனைச்சிட்ட்துக்கு வருத்தப் பட்டான்.

மேல் நாட்டுக்காரன், ஆப்பிள் ஏன் கீழ வருதுன்னு யோசிச்சான். மேதையானான். நாம ஆண்டவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தப்பில்லை, ஆனால், அதே சமயம் அறிவியலுக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
ஆக, என்ன சொல்ல வரேன்னா… படைப்பாளியைப் பார்க்காதீங்க படைப்பைப் பாருங்க..
ஆக, இருக்கும்போதே, நாலு பேருக்குப் பயன்படற எதையாவது சொல்லிட்டுப் போகணும்! செஞ்சுட்டுப் போகணும்! . அதுதான் பிறந்ததுக்கு பலன்.’
ஹலோ கேட்குதா…??? ‘ என்றேன்.
அவர் எப்ப போனை வச்சார்னு தெரியலை. பழைய லேண்ட் லைனா இருந்தாக்கூட ‘குர்ர்ர்னு’ ஒரு குட்டிக் குறட்டை விடும்., இது நவீன காலமாச்சே செல்… சிவனேன்னு இருந்தது!
எனக்கும் உருப்படியா ஏதோ செஞ்சுட்ட நிம்மதி கிடைத்தது!
-வளர்கவி, கோவை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.