Published:Updated:

கலியன் மதவு | சமூக நாவல் | அத்தியாயம் – 13

Representational Image

இத்தனைச் சிறப்புகளைத் தாங்கிய அந்தத் தாமரைக் குளத்தில் கொட்டப்படும் இடிபாடுக் கழிவுகள், தங்கள் கண்களில் கொட்டப்படுவதாக உணர்ந்தார்கள் கூலித் தொழிலாளர்கள்.

Published:Updated:

கலியன் மதவு | சமூக நாவல் | அத்தியாயம் – 13

இத்தனைச் சிறப்புகளைத் தாங்கிய அந்தத் தாமரைக் குளத்தில் கொட்டப்படும் இடிபாடுக் கழிவுகள், தங்கள் கண்களில் கொட்டப்படுவதாக உணர்ந்தார்கள் கூலித் தொழிலாளர்கள்.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அறுவடை நாட்களில் பரபரப்பாய் இருக்கும் ‘பூசரக் களம்’, வழக்கத்துக்கு மாறாக, இன்று நடவு சீசனில் பரபரப்பாய் இருந்தது.

பேண்ட்டும் சூட்டுமாய் வாட்ட சாட்டமான இருவர் காரில் வந்து இறங்கினர்.

அவர்களைத் தொடர்ந்து, பின்னாலேயே டிராக்டரில் காணிக் கற்களும், சிமெண்ட் பில்லர்களும், முள் வேலிக் கம்பிப் சுருள்களும், கடப்பாரை, மண்வெட்டி, ஷஃபல், பிக்காசு, போன்ற தொழிற் கருவிகளோடு, ‘திமு திமு திமு...வென ஆட்கள் வந்து இறங்கினர்.

அங்கும் இங்கும், அப்படியும் இப்படியும் கை காட்டி நான்கெல்லையை அனுமானமாய்க் காட்டிக் கொண்டிருந்தனர்.

என்னென்ன வேலைகளை எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துக்கொண்டிருந்தனர் பேண்ட் சூட் ஆசாமிகள்.

களத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ‘செயின்’ நீட்டி அளந்தனர்.

Representational Image
Representational Image

அளந்ததையே மீண்டும் அளந்தனர். கையில் இருந்த வரைப்படத்தைப் பார்த்தனர். மீண்டும் சற்றே ஒதுக்கி அளந்தனர்.

சரியான எல்லையைக் கண்டுப்பிடித்துக் காட்டியபின், முகத்தில் ஓரளவு திருப்தி தெரிந்தது.

அளந்த ‘செயின்’ லிங்க்கும், வரைபடத்தில்அந்த இடமும் பொருந்துகிறா என்று ஒரு முறைக்கு இரு முறை பார்த்தனர்.

Representational Image
Representational Image

சுட்டுவிரல் மூலம் இடம் சுட்டிக்காட்ட, ஆறடி கடப்பாறை சுமந்த ஒருவன் ஒரு குத்துப் போட்டு மூங்கில் சிம்பு முளையை நட்டான்.

ஏற்கெனவே தவறாக நடப்பட்டதைப் பிடுங்கிப் போட்டான். இப்படி பல முறை வேறு வேறு திக்கிலிருந்தும், எல்லையிலிருந்தும் அளந்து அளந்து ஒழுங்கினார்கள்.

ஆங்காங்கே முளை அடித்து, நான்கெல்லை உறுதி செய்தார்கள்.

கட்டட இடிபாட்டுக் கம்பிகளோடு டிராக்டர் வந்து நின்றது.

‘பேண்ட் சூட்’ கைகாட்டியபின், அதை களத்தின் அங்கமாக இருந்த தாமரைக் குளத்தில் கொட்டியது.

Representational Image
Representational Image

பூசர களத்தில் விவசாய வேலை என்றால் கூலி சற்றே குறைத்துத் தந்தாலும் விவசாயக் கூலிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் வருவார்கள்.

காரணம், களத்தின் அங்கமாய் இருக்கும் குளம்தான்.

தாமரை பூத்துக்குலுங்கும் ரம்யமான குளம். எவ்வளவுதான் வெய்யிலடித்தாலும வெம்மை தெரியாத களம்.

மற்ற களங்களிலெல்லாம் பசியாறச் செல்லும் முன், குடத்திலிருந்து லோட்டாவில் தண்ணீர் சரித்து, முகம், கைகளை சுத்தம் செய்ததாகப் பாவனை செய்துகொண்டு தான் சாப்பிடவேண்டும்.

ஆனால் பூசர களம் அப்படியல்ல.

குளத்திலிருந்து நீரை அள்ளி ஊற்றிச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

வியர்வை அகலக் குளித்துவிட்டேக் கூட, குளிரக் குளிர அமர்ந்து சுகமாய்ச் சாப்பிடலாம்.

அது மட்டுமா..! சோற்றுப் பாத்திரங்களை பளிச்செனத் தேய்த்து வெயிலில் கவிழ்த்து வைத்துவிடும் வசதி அந்தக் களத்தில் மட்டுமே உண்டு.

வேலை முடிந்து குளத்தில் நன்கு மூழ்கி சூடு தீர அமுங்கி அழுந்தக் குளித்துச் சுத்தப் பத்தமாக வீடு திரும்பலாம்.

இத்தனைச் சிறப்புகளைத் தாங்கிய அந்தத் தாமரைக் குளத்தில் கொட்டப்படும் இடிபாடுக் கழிவுகள், தங்கள் கண்களில் கொட்டப்படுவதாக உணர்ந்தார்கள் கூலித் தொழிலாளர்கள்.

மனசு தவித்தது.

பாவம்... ஏழைகள்.

*******************************

“பூசரக் களத்துத் தாமரைக் கொளத்தை துக்கறானுங்களே...!”

“பூத்துக்குலுங்கற குளத்தைத் தூக்க எப்படித்தான் மனசு வருதோ...!”

“பொறம்போக்குல கெடக்கற களத்தையும் குளத்தையும் ஆக்கரமிக்கராங்களே...!”

“யாரு தூண்டிவிட்டு இதெல்லாம் நடக்குது...? கேட்பார் கேள்வியே இல்லியா...?”

“புறம்போக்குதானேன்னு அரசாங்கத்துல எதுனா செய்யறாங்களோ...?”

“வாடீப் போய்க் கேப்போம்...!”

வீராப்புடன் போனாள் அன்னலட்சுமி.

“ஏய்யா...! வீட்ல ஆம்பளைங்கல்லாம், வேலைக்குப் போன இந்த நேரத்துல, ஊர்க்காரவங்க பொதுவாப் பொளங்கறக் களத்தை அடைக்கறதும்..., குளத்தைத் துக்கறதும்...! என்னதான் உங்க மனசுல நினைச்சிட்டிருக்கீங்க... நீங்கல்லாம் யாரு...?”

பில்லர் நடுவதற்குக் குழி பறிப்பவன் அருகில் சென்று குரல் உயர்த்திக் கேட்டாள் அன்னலட்சுமி...”

“...................................”

இவள் பேச்சை காதில் வாங்காமல், தன் வேலையிலேயேக் கருத்தாய் இருந்தான் அவன்.

“நான் ஒருத்தி கேக்குறேனில்ல... செவுடா நீ...?”

“...................................”

‘செவுடு இல்லை’ என்பதுபோல், அவளை அலட்சியமாகப் பார்த்தான்.

“...................................”

“எதுவா இருந்தாலும் அவங்ககிட்ட பேசு...”

வாயால் சொல்லாமல், பேண்ட் சூட் ஆசாமிகளை நோக்கிக் கைக்காட்டினான்.

*********************

இதைப் பார்த்த பேண்ட்சூட் ஆசாமிகள் அவள் அருகில் வந்தார்கள்...

“சாரே...! இது அநியாயம்... அக்கரமம்... ஊர்ல பொதுவாப் பொளங்கற களத்தைக் கட்டறதும், குளத்தை துக்கறதும்... அநியாயம்... இந்த அக்கரமத்தை கேக்க இங்கே யாருமே இல்லியா...?”

அப்போது குப்பாத்தா குறுக்கே புகுந்தாள்.

“ஏளை பாளைவ குடி கெடுக்க வந்தியா சார்...? நீ நல்லாவே இருக்கமாட்டே...!”

சாபம் கொடுத்தாள்.

அவளுக்குப் பேண்ட் சூட் ஆட்கள் ஏதோ பதில் சொல்ல வந்த நேரத்தில், புஷ்பவல்லி புயலாய்ப் புகுந்தாள்.

“யோவ்... ஊர்ல, நாட்டாம, கணக்குப்புள்ள, மணியாரு, முனிசீப்பு, கிராம சேவக்கு... ன்னு எல்லாரும் இருக்கும்போது அவங்களையெல்லாம் கலக்காம நீ ஊருக்குள்ள பூந்துருவியா...?”

தர்ணா செய்ய உட்கார்ந்துவிட்டாள்.

“...................................”

“எங்க குடிசைங்களையெல்லாம் காலி பண்ணப்போறதா சொன்னியாமே...? முடிஞ்சாப் பண்ணிக்க...!”

சவால் விட்டாள் புஷ்பவல்லி...

அடுத்தடுத்து வந்த பெண்டுகள்..., புஷ்பவல்லிக்கு ஆதரவாக உட்கார்ந்தனர்.

மதியம் பசியாற வந்த ஆண்களும் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர எதுவும் பேசவில்லை.

எக்காலத்திலும் ஏழைச் சொல்தான் அம்பலம் ஏறாதே.

**********************************

தெருத்தலையாரி பஞ்சாட்சரம் செய்தி அறிந்து அங்கு வந்தார்.

“அய்யா... நீங்க துணிச்சலாப் பொது எடத்துல பூந்து மேக்கரிக்கறீங்கன்னா, ஏதோ பலமான பின்னணி இருக்கும்னு ஊகிக்க முடியுது.”

என்னக் காரணம்னு தெரிஞ்சிக்க நான் ஆசைப்படல்லே. எது செஞ்சாலும் ஊர் கணக்கப்பிள்ளை, பட்டாமணியம், கிராம சேவகர்... இப்படி யாரையாவது கலந்துக்கிட்டு செய்யறதுதான் முறைனு சொல்ல வந்தேன்...”

“நாங்க யாரையும் பாக்கவேண்டிய அவசியமில்ல... வேணுமின்னா அவங்களை வந்து எங்களைப் பாக்கச் சொல்லு...!”

தெனாவெட்டாக பதில் வந்தது.

*********************************

அன்றாடங்காய்ச்சிகள், தினக் கூலிகள் போன்றவர்களுக்கு இந்தக் களம் ஒரு களன்... அவ்வளவே.

இது இல்லையென்றால் வேறு எங்கு சொல்கிறார்களோ அங்கு சென்று உழைத்துவிட்டுக் கூலி வாங்கிவிடுவார்கள்.

அதே போல மிட்டா மிராசுகளுக்கும், சிறிய பெரிய விவசாயிகளுக்கும் அந்தக் களம் இல்லையென்றால் வேலைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது...

தெருவில் தார்ப்பாய் விரித்து கண்டுமுதல் எடுத்துவிடுவார்கள்.

அந்தக் களம் ஒரு வசதி.

பத்துப் பதினைந்து வருஷங்களாகப் பழகிய இடம்.

அது இல்லாவிட்டால் குடி முழுகிவிடாது என்றாலும், ஊர்ப் பொது இடத்தை எவனோ வந்து தடாலடியாக ஆக்கிரமிப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட முடியுமா என்ன...?

கணக்குப் பிள்ளையும், பட்டாமணியமும் ஊர் பொதுப் பிரச்சனை எதிலும் என்றுமே தலையிட்டதில்லை.

சமயத்தில் இடைஞ்சல் வேண்டுமானாலும் செய்வார்கள்.

ஜனங்கள் வழக்கம்போல கிராம சேவகர் மாதய்யா வீட்டுக்குப் படையெடுத்தார்கள்.

“இன்னிக்கு நடவு. வயலுக்குப் போயிருக்காங்களே...!” என்றாள் குந்தலாம்பாள்.

அவள் சொன்ன, அந்த நடவு வயலுக்கு விரைந்தார்கள்.

***************************

செய்தியைக் கேட்டதும்... “சரி உடனே வரேன்... நீங்க போயிக்கிட்டே இருங்க...” அவர்களை அனுப்பினார் மாதய்யா.

“கலியா பூசர களத்துக்கு ஓட்டு வண்டிய...!”

மாதய்யா, சற்று முன் கொடுத்த குத்தகைச் சீட்டை வண்டியின் கூண்டுப் பிரம்பு இடைவெளியில் செருகினான் கலியன்.

வண்டி பூசரகளம் நோக்கிச் சென்றது...

‘பூவரசக் களமும், தாமரைக்குளமும் சமுதாயப் புறபோக்கு அல்ல’, என்பது மாதய்யாவுக்குத் தெரியும்.

பூமிநாத உடையாருடைய பூர்வீக சொத்து அது...

***************************

பூமிநாத உடையாருக்கு... மதுரை வீரனைப் போல வாட்ட சாட்டமான உடற்கட்டு, இரட்டை நாடி.

Representational Image
Representational Image

கழுத்தில் தொங்கும் தங்கச் சங்கிலியும், அதில் கிடக்கும் புலிப் பல்லும் அந்தக் கம்பீரத்துக்கு மேலும் கம்பீரம் கூட்டும்.

நல்ல எருக்கட்டும், பாசனமும் கொடுத்து, முறையானப் பராமரிப்பில் விளைந்த முரட்டுப் பசளைக் கீரையின் இலை போல, நுனி அகன்ற மீசையோடு ஆஜானுபாகுவாக இருப்பார்.

ஏகப்பட்ட நிலபுலங்களோடு, தாசில் பண்ணையாகக் கொடிகட்டிப் பறந்தவர் அவர்.

வீம்புதான் ரொம்பவே அதிகம் அவருக்கு.

******************

இப்போது பூசரக் களமாக இருக்கும், புஞ்சையில், அவர் வழக்கமாக பயிரிடுவது ‘விரலி மஞ்சள்’தான்.

Representational Image
Representational Image

பொங்கல் சீசனில், அறுவடை செய்த மஞ்சளை சென்னைக்கு, மதுரைக்கு என லாரியில் அனுப்பி விற்று, நிறைய பணம் சம்பாதித்தார்.

ஒரு சமயம் மஞ்சள் விதைக்கிற நாளில், ஆட்கள் அதிக கூலி கேட்டுப் போராடி, வேலைக்கு வராமல் தர்ணா செய்தார்கள்.

உடையார் ரௌத்ரமானார்.

விதை மஞ்சளை வந்த விலைக்கு விற்றார்.

புஞ்சை பூராவும் நெருக்கமாக பூவரசம் போத்துக்களை நட்டுப் பயிர் செய்துவிட்டார்...

****************************

“தொழிலாளர்களுக்குக் கூலி அதிகமாகக் கொடுக்கக் கூடாது என்பதோ, கூலிக்காரர்கள் வயிற்றில் அடிப்பதோ பூமிநாதனின் நோக்கமல்ல.

வேலை தொடங்குவதற்கு முன்பே பேசித் தீர்த்துக்கொண்டிருந்தால் சந்தோஷமாகக் கூலி உயர்வுக்கு ஒத்துக்கொண்டிருப்பார்.

கிடை மறித்து, தொழுஉரமடித்து, அவுரி, கொளுஞ்சி விதைத்து, வெட்டிப் புரட்டி, பாத்திக் கொத்தி, பதப்படுத்தும் வரை ‘கம்’மென்றுக் கவுடாய் இருந்துவிட்டு, விதை விடும் நாளன்று கூலி அதிகம் கேட்டார்கள். பயமுறுத்தப் பார்த்தார்கள்.

எதற்கும் துணிந்த, அவரா பயப்படுவார்...

இரக்க குணமும் உள்ளவர்தான் உடையார். ‘சரி தரலாம்...’ என்றுதான் முடிவெடுத்தார்.

ஆனால், எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லாமலே, வேலை நிறுத்தம் செய்தார்கள் தொழிலாளர்கள்.

பூமிநாதனுக்குக் கோபம் வந்துவிட்டது.

இப்படிச் செய்து விட்டார்.

இப்படி வீம்புக்காக எத்தனையோ காரியங்களைச் செய்திருக்கிறார் அவர்.

‘அவரிஷ்டத்துக்கு வாழ்ந்து மடிந்தவர்’

****************************

அங்கு களம் போடவேண்டும் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.

அவர் ஒருநாள் பூவரசந்தோப்பில் உலாத்திக்கொண்டிருந்தார்.

‘மடக்... மடக்...’ கென்று சுள்ளி முறிக்கும் சத்தம் கேட்டது.

‘தன் தோப்பில் தைரியமாய் நுழைந்து சுள்ளி உடைப்பது யாராக இருக்கும்...?’

சந்தேகம் வரச் சென்றுப் பார்த்தார்.

‘முனியம்மா’.

கொஞ்சம் கறுப்புத்தான்.

கருப்பே அழகு காந்தலே ருசி.

உடையாரைப் பார்த்ததும், கிறங்கிய கண்களுடன், தேர்ந்த நாட்டியக்காரி முத்திரை வைத்தாற்போல் அபிநயத்துடன் அவர் முன்னால் வந்து நின்றாள்.

“‘நம்ம’ கொல்லைனுதானேன்னு உரிமையா ஒடைக்கேன்...’”’

இடுப்பை ஒரு வெட்டி வெட்டிச் சொன்னது கூட அவரைப் பாதிக்கவில்லை.

‘நம்ம...’ கொல்லை என்று உரிமையோடு, அழுத்தம் கொடுத்துச் சொன்ன முனியம்மாவின் கண்களோடு பூமிநாதனின் கண்கள் நோக்கொக்கியது.

ஷேக்ஸ்பியரின், As You Like It என்ற நாடகத்தில்

‘டச் ஸ்டோன்’ என்பவன், கிராமத்து மேனாமினுக்கியான ‘ஆர்ட்ரி’ யிடம் காதல் வயப்பட்டு, அவளே கதி என்று அவள் காலடியிலேயே கிடந்ததைப் போல ஆகிவிட்டார் பூமிநாதன்.

Representational Image
Representational Image

அன்று அந்த பெண்ணின் வலையில் விழுந்தவர்தான்.

பூவரசந்தோப்பும், ஆசை நாயகி முனியம்மாவும்தான் எல்லாமே என்று ஆகிப் போனது.

To His Coy Mistress என்ற Andrew Marvell எழுதிய Carpe diem Poem எனப்படும், நிகழ்காலத்தை அனுபவிக்கவேண்டும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கவிதையில் எவ்வாறெல்லாம் தன் ஆசை நாயகியோடு அனுபவித்தானோ, அதைப் போல அனுபவித்தார் பூமிநாதன்.

Let us roll all our strength and all

Our sweetness up into one ball,

And tear our pleasures with rough strife

Through the iron gates of life:

Thus, though we cannot make our sun

Stand still, yet we will make him run.

‘தொடுத்த பூ வாசத்தையும், தொடுப்பு மேல பாசத்தையும் ரகசியமா வெக்ய முடியுமா?’

ரகசியத் தொடுப்பு அம்பலமானது.

ஊர் சிரித்தது.

நற்றிணை 330ல் தலைவி தலைவனிடம் சொல்வாள் அல்லவா...

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து

மட நடை நாரைப் பல் இனம் இரிய,

நெடு நீர்த் தண் கணம் துடுமெனப் பாய்ந்து,

நாட் தொழில் வருத்தம் வீட. சேண் சினை

இரு புனை மருதின் இன் நிழல் வதியும்

யாணர் ஊர ! நின் மாண் இழை மகளிரை

என் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்

புன் மனத்து உண்மையோ அரிதே; அவரும்,

பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,

நன்றி சான்ற கற்பொடு

எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.

அதைப்போல

“அவள் உறவு வேண்டவே வேண்டாம்...!” என்று தடுத்தாள்.

கவர்ச்சி மோகம் கண்களை மறைத்தது.

குடும்பம் சீர்குலைந்தது.

ராம லட்சுமணர்கள் போல இரண்டு ஆண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஊருக்குள் தலை நிமிர்ந்து, கவுரதையாக இருக்க முடியவில்லை தாலி கட்டிக்கொண்ட மனைவியால்.

குழந்தைகளைகளோடு புதுக்கோட்டைக்குப் போய்த் தன் சகோதரன் வீட்டோடு ஐக்கியமாகிவிட்டாள்.

மாமனின் பராமரிப்பில் வளர்ந்தார்கள் மருமகன்கள்.

**************************

மனைவி குழந்தைகள் எல்லாரும் வீட்டை விட்டுப் போனாலும் அந்த வீட்டில் ஆசை நாயகியை கொண்டு வந்து வைத்துக்கொள்ள மனசு வரவில்லை பூமிநாதக்கு.

பூவரசந் தோப்பில் பத்துக்குப் பதினைந்தடியில் ‘சின்ன ஓட்டு வீடு’ முனியம்மாவுக்காகவே கட்டினார்.

Representational Image
Representational Image

அதிலேயேப் பழியாகக் கிடந்தார்.

தொடுப்புக்கு வீடு கட்டுகையில் செங்கல்லுக்கு அலைந்தபோதுதான்,

‘ நாமே ஏன் காளவாய் போட்டு செங்கல் பிசினஸ் செய்யக்கூடாது...!’ தோன்றியது அவருக்கு.

விவசாயத்தில் வந்ததை, காளவாயில் முதலீடு செய்தார்.

ஓங்கு தாங்காய் உயர்ந்து, பருத்து நின்ற பூவரச மரங்களை வெட்டிச் சாய்த்தார்.

முதல் காளவாய்க்கு சூளைக்கு ஆகுதியாக்கிக் கொளுத்தினார்.

Representational Image
Representational Image

கல்லறுப்புத் தொழில் பிடிபட்டுவிட்டது.

நல்ல லாபமும் பார்த்துவிட்டார்.

அந்தத் திடலிலேயே, ஆழமாய்க் குழி பறித்து மண் எடுத்தார்.

லட்சம் லட்சமாகக் கல்லறுத்தார்.

லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கவும் செய்தார்.

காளவாய்க்காக மண்ணெடுத்து மண்ணெடுத்து, அந்தப் பள்ளம் குளமாய் நின்றுவிட்டது.

முத்தனூர் தாமரைக்குளத்திலிருந்து கிழங்கு வெட்டிவந்து பூசரக் குளத்தில் போட்டவன் குடிகாரன் ராமசாமி.

இன்றும் தாமரைக் குளமாக தகதகக்கிறது..

Representational Image
Representational Image

வந்த வருமானத்தையெல்லாம், உடைகளாகவும், தங்கமாயும், வைரமாயும், மாறியது.

பொன்னாம்மா மேனியில் அனைத்தையும் வைத்து அலங்கரித்து அழகு பார்த்தார்.

Representational Image
Representational Image

“அடியாத்தீ... தொடுப்புக் கட்டைக்குப் பட்டும் பனாரசுமா, உடுப்புப் பாருடீ...!”

“வூட்டுக்காரிக்கு வேட்டு வெச்சவளுக்கு வந்த வாழ்வு பாத்தியா...!”

“ தோப்புல சுள்ளி பொறுக்கின கள்ளிக்கு அசல் வெள்ளி சரிகை மினுமினுக்க சேலைப் பாருடீ...!”

“இப்படி வைரமாயும், வைடூரியமாயும் வீசுறாரே ... அப்படி என்னதான் இருக்கோடி அவகிட்டே...!”

“அது மட்டுமா...! அத்தர் என்ன... புனுகு என்ன... வாசனைத் திரவியங்கள் என்ன... சாம்பிராணிப் புகையென்ன... அவளுக்குச் சேவகம் பண்ண சேடிப் பொண்ணுங்க என்ன…? அதிர்ஷ்டக்காரிடீ அவ...”

Representational Image
Representational Image

பெண்கள், திரை மறைவில் முனியம்மாவைப் பேசினார்கள்.

‘நமக்கு இந்த வாய்ப்புக் கிடைக்காமப் போயிடுச்சே...’ என்கிற தாங்கலால் மருகினார்கள்.

இதெல்லாம் , அவர் பால்யத்தில், முப்பது நாற்பது வயதில் செய்தது.

ஒரு நாள் பொன்னம்மா விஷக் கடியில் இறந்து விட்டாள்.

நிமிஷமாய் போய்ச் சேர்ந்துவிட்டாள்.

அவள் இறந்து கிடந்த அந்தத் திண்ணையில் கருங்கல் பாளங்களைப் போட்டு இழைத்தார்.

அந்தத் திண்ணையே அவருக்குத் தாஜ்மகாலானது.

அவள் நினைவாகவே அன்ன ஆகாரமின்றிக் கிடந்து உயிரை விட்டார்.

இதெல்லாம் பதினைந்து இருபது வருஷங்களுக்கு முந்தைய சேதி.

************************

‘இப்போது, உடையாரின் வாரிசுகள் வந்து தன் சொத்துக்களை மீளக் கட்டுகிறார்களோ...?’ மனதில் பட்டது மாதய்யாவுக்கு.

இந்தப் பதினைந்து வருடங்களில், களத்திலிருந்த முனியம்மா வீடு பராமரிப்பின்றி இடிந்தது, சிதைந்தது.

கரையான் தின்ற மரச்சட்டங்கள் போக, மிச்சம் மீதி அக்கம்பக்க வீடுகளின் அடுப்பில் எரிந்தன.

இப்போது அங்கே இருப்பது கடைசீ காலத்தில் உடையார் கருங்கல் பதித்துக் கட்டிய குட்டித் திண்ணை ஒன்றுதான்...

களத்துக்கு வருவோர் எல்லாம் அந்தத் திண்ணையில்தான் தங்கள் சோற்று மூட்டையை இறக்கி வைப்பார்கள்.

ஆரம்பத்தில் ‘முனியம்மாத் திண்ணை’ என்று இருந்தது, காலப்போக்கில் ‘முனி’ த்திண்ணையாக மருவி, முனீஸ்வரனுக்கு சூலம் நட்டுவிட்டார்கள் ஜனங்கள்.

இன்றும், எல்லாரும் அப்படிச் சொன்னாலும், பெயர்க் காரணம், மாதய்யா வயதொத்த சில பேருக்குத்தான் தெரியும்.

*************************

Natures poet, lakes poet, Romantic poet என்றெல்லாம் வருணிக்கப்படும் ஆங்கில கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஒரு சமயம் பிரான்ஸ் நாட்டிற்கு போகிறார்.

அங்கு ஆனடி வேலன் Annette Vallon என்ற, Wordsworth ஐ விட ஐந்து ஆண்டுகள் மூத்த பெண்ணின் தொடர்பும், காதலும் கிடைத்தன.

காதலுக்கு என்றும் எப்போதும், வயதோ, அழகோ, ஜாதியோ, மதமோ ... எதுவுமே தடையாக இருந்தது இல்லையே.

Representational Image
Representational Image

அவளிடம் வேர்ட்ஸ்வொர்த் பிரெஞ்சு மொழி கற்றார். கூடவே காதல் மொழியும் பறிமாறிக்கொண்டனர்.

‘காதலுக்கு வழி வகுத்துக் கருப்பாதை சாத்திடுவோம்’ என்ற பாரதிதாசனின் வாக்கு அங்கு எடுபடவில்லை.

பருவ வேட்கையில் தங்களை இழந்தனர்.

ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டனர்.

‘பிரெஞ்சுப் புரட்சி’ வந்தது

அவர்களைப் பிரித்தது.

இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டிய நிர்பந்தம் Wordsworthக்கு.

அதற்குப் பின் மறுபடியும் பிரான்ஸ்க்குப் போகவே முடியவில்லை.

காதலியைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு.

தாங்க முடியாத வேட்கை.

போக முடியாத சூழல்.

அந்த வேட்கையின் ஆற்றல் வேற்றுரு (Sublimation) பெற்றது.

ரொமான்டிக் பொயட் அல்லவா..

Lines Written a Few Miles above Tintern Abbey என்ற சிற்றிலக்கியமாக மலர்ந்தது.

மும்தாஜ்க்கு, தாஜ்மகால் போல...

ஆனடி வேலன்’க்கு Tintern Abbey போல...

அந்தனூர் பூசர களத்தில் முனியம்மாவுக்கு முனித் திண்ணை.

*****************************

‘இவ்வளவு துணிச்சலா வேலி கட்றான், கொளம் துக்கறான்னா, உடையாரோட வாரிசுங்களாத்தான் இருக்கணும்...!’ நினைத்தது சரியாகிவிட்டது.

கலியன் வண்டி நிறுத்தினான்.

எதிரில் முப்பது முப்பத்தைந்து வயதுள்ள இரண்டு பூமிநாத உடையார்கள் ஜோடியாக நடந்து வருவது போல இருந்தது.

அப்பனைப் போலவேப் பிள்ளைகள்.

William Shakespeare தன் முதல் Sonnet ல்

From fairest creatures we desire increase,
That thereby beauty's rose might never die,

என்று வர்ணித்ததைப் போல

உருவத்தில் மட்டுமில்லை. செயல்பாடுகளிலும் அப்பனின் வேகம், துணிச்சல்...

இப்போது ஆள் படைகளை வைத்து, முள்வேலி அடைக்கச் சிமிட்டிக் கம்பம் நடும் வேகத்தை வியப்புடன் பார்த்தார் மாதய்யா...

முப்பது வருஷத்துக்கு முன் வீம்பாக பூவரசம் போத்து நட்ட பூமிநாத உடையார் கண்முன் வந்துபோனார்.

*************************

“கிராம சேவகர் வந்திருக்கார்... வந்து பாக்கறீங்களா...?” அருகில் சென்று சேதி சொன்னார் அம்பாகடாட்சம்.

“ஏன் ...! அவுரு இறங்கி வரமாட்டாருங்களா...?”

“தம்பிகளா...! உடையார் வாரிசுங்கதானே நீங்க...! இங்கே என் கிட்டே வாங்க... என்னால இறங்கி வரமுடியாதுன்னேன்... கால் எலும்பு முறிஞ்சி இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தேவலையாவுது. டக்குன்னு இறங்கி வர முடியாது...”

Representational Image
Representational Image

சத்தமாகக் குரல் கொடுத்தார் மாதய்யா.

“.........”

விபரம் அறிந்ததும், அருகில் வந்தார்கள்.

“தாயார் நல்லா இருக்காங்களா...?”

“இருக்காங்கய்யா...”

“உங்கப்பாவோட நல்ல சினேகிதம் உண்டு எனக்கு... பூமிநாதன், தன் இஷ்டத்துக்கு இருந்து போனவன்.”

“.........”

அப்பாவின் சிநேகிதர் என்ன சொல்கிறார் என்பதை அமைதியாகக் கேட்டனர்.

இங்கே இருந்தா, உங்க வளர்ச்சிக்கு நல்லதில்லைனு முடிவெடுத்து, உங்கம்மா உங்க ரெண்டு பேரையும் அவங்க அண்ணனோட பாதுகாப்புல, புதுக்கோட்டைல, தாய்மாமன் வீட்டுல விட்டுப் படிக்க வெச்சாங்க...”

“ஆமாங்கய்யா...” என்றனர் இருவரும் ஒரு சேர.

“அப்பா அனாமத்தா விட்டுப் போனதை பாத்யதை கொண்டாட வந்திருக்கீங்க...! சந்தோஷம்.”

“உங்க அப்பனும் இப்படித்தான். எதையும் படபடன்னு, யாரையும் எதையும் பத்திக் கவலையேப் படாம வேகமாத்தான் செய்வான்...”

“அப்பனுக்குப் பிள்ளை தப்பாம இருக்கீங்க...செரி...செரி... வேலை நடக்கட்டும்...”

அவர்களிடம் சொல்லிவிட்டு வலப்பக்கமாய்த் திரும்பி “இந்த நாலு குடிசைங்களும் யாருது...?” சுற்றி நின்றவர்களைக் கேட்டார்.

“என்னுது...! என்னுது...!” என்று நான்குபேரும் வந்தனர்.

“இந்தனை காலம் அனுபவிச்சீங்க...! சரி...! உடையவங்க வந்துட்ட பிறகு அதை விட்டுக் கொடுத்துடறதுதான் ஞாயம்.”

“.................”

“நீங்க நாலு பேரும் பெரிய வாய்க்காலண்ட இருக்கற என்னோட தெடல்ல கொட்டா கட்டிக்கிட்டு இருங்க.”

“.................”

“உடையார் ஊருக்காக விட்டுப் போனதை அவரோட வாரிசுங்க வந்து பாத்தியதை கொண்டாடறமாதிரி, என் வாரிசும் ஒரு நாள் வந்து உங்களை காலி பண்ணச் சொல்லிருவான்’னு பயம் வேண்டாம்.”

“ஒரு வாரம் ரெண்டு வாரத்துல உங்க பேருக்கு சாசனம் பண்ணி கொடுக்கறேன்...” என்றார்.

சின்ன உடையார்கள் பக்கம் திரும்பினார்.

“தம்பீ... இன்னும் ரெண்டொரு நாள்ல அவங்க காலி பண்ணிக் கொடுத்துருவாங்க...” என்றார்.

“தம்பிங்களா...! எடத்தை மீட்டு வேலி போட்டு கிரயம் பண்றதா திட்டமா...?”

“விக்கற ப்ளான் இல்லீங்க... ஃபாக்டரி கட்டலாம்னு.” என்றார் இருவரில் ஒருவர்.

“செய்யுங்கோ...! செய்யுங்கோ...!! அப்பா வாழ்ந்த மண்ணை மதிச்சி வந்திருக்கீங்களே... அதுவேப் பெருமையா இருக்கு... அம்மாவை ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ...”

விடைபெற்றார் மாதய்யா.

அன்றைய அலைச்சலில் ‘புஸு புஸு’ வென்று நன்கு வீங்கி யானைக்கால் போலச் சுரந்து விட்டது கால்.

துரைராமன் மூலம் ஜீவபுரம் டாக்டருக்குச் செய்தி போய், அவரும் வந்துவிட்டார்.

“மாதவா...எலும்பெல்லாம் நன்னா சேர்ந்துடுத்து... கொஞ்ச நாளைக்கு அதிக அலைச்சல் இல்லாம இரேன்.”

“.................”

“காட்லீவிர் ஆயிலைத் தடவிண்டு வீட்லயே நடமாடி, அப்பப்போ காலை லேசா அமுக்கி விட்டுண்டு, ‘பிசியோ தெரபி’ பண்ணி ஸ்டடி பண்ணிண்டு அப்பறம்தான் வெளீல அலையணும்.”

“.................”

“வலி வரும்போது ரெஸ்ட்... அப்பறம் மெதுவா நடை... ரெஸ்ட்.... இப்படி இரு...”

“ஒரே மூச்சுல மண் எடுக்க ஆசைப்படாதே... விபரீதமாயிடும்...”

எச்சரித்துவிட்டுப் போனார்.

பல்லைக் கடித்துக்கொண்டு அடுத்த பத்து நாட்களும், டாக்டர் அருணகிரி சொன்னதைப்போல், வீட்டிலேயே நடை பயின்றார்.

வீட்டில் தங்கினால் துரைராமனோடு வாக்குவாதம் வந்துவிடுமோ என்று பயந்தார். அப்படி ஏதும் நடக்கவில்லை...

துரைராமன், வீட்டில் தங்கினால்தானே பிரச்சனை வருவதற்கு...

அவன்தான் பொழுதுக்கும் கிராதகன் ‘கிட்டா’வோடு கிடக்கிறானே...!

பத்துப் பன்னெண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு, ஓரளவுக்கு நன்றாக நடக்க முடிந்தது.

வெகு நேரம் நடந்தால் வீக்கமோ, வலியோ இல்லை.

ஒரு முறை காவிரி ஆறு வரைக்கும் நடந்து பார்த்தார்.

வழக்கம்போல வீரனோடு காவிரிக்குச் செல்லவேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.

விடிகாலை எழுந்து பால் கறக்கலாமா...? என்று நினைத்தார்.

குத்துக்காலிட்டு உட்கார முடிகிறதா என்று பார்த்தார்.

‘இன்னம் ஒரு வாரம் சென்று அதைச் செய்யலாம்” என்று தோன்றியது.

விடிகாலை வீரனோடு காவிரிக்குப் போக நினைத்தவருக்கு ஏனோ, ‘இன்று வேண்டாம்..’ என்று தோன்றியது.

விபூதிப் பொட்டலத்தைக் கட்டி மடியில் வைத்துகொண்டு, சின்ன பித்தளைக் குடத்துடன் சென்றார்.

***************************

எல்லையம்மன் கோவில் முகப்பில் கால்கள் அனிச்சையாய் நின்றன.

குடத்தைக் கீழே வைத்தார்.

தலைக்கு மேல் குவித்துக் கும்பிடு போட்டார்.

சிறிது நேரம் அந்தக் கோவில் முன் கிடக்கும் பாறாங்கல்லில் உட்காரவேண்டும் போல இருந்தது.

உட்கார்ந்தார்.

ஒவ்வொரு மழைக்கும் கரைந்துக் கரைந்து விழுந்து, குட்டிச்சுவர் ஆகிப்போன எல்லையம்மன் மதிலைப் பார்த்தார்.

பறவைகளின் எச்சத்திலிருந்தும், காற்றின் உபயத்தாலும், விழுந்த தப்பு முதல்கள்... இடிந்த சுவரின் கல்லிடுக்கில் சிக்கி, மண்ணோடு புணர்ந்து பிறந்த தாவரங்கள்.

அரசு, ஆல், நுனா, வேம்பு, சரகொன்றை, உத்தராசு... போன்ற மரங்கள்

கால் வைக்க முடியாதபடிக்கு வளர்ந்து நிற்கும், பேயத்தி, ஆமணக்கு, எருக்கு, சஸ்பேனியா, குப்பைப் கீரை, காய்ஞ்சான் கீரை, ஊமத்தை, துத்தி, எருக்கு, நாயுருவி, தும்பை, மூக்கரட்டை, தொட்டால் சிணுங்கி, யானை நெருஞ்சி,... இன்னும் பெயர் தெரியாத செடிகள்...

ஓணான் கொடி, சீந்துக்கொடி, கோவை, காஞ்சுருட்டான், வேலிப்பருத்தி, தூதுவளை, முடக்கத்தான் போன்ற கொடிகள்...

பார்க்கப் பார்க்க மனசுப் பிசைந்தது.

இரண்டாண்டுகளாக நின்று போய்விட்ட எல்லையம்மன் காப்புக்கட்டு, தீமிதி இவைகளைப் புதுப்பிக்கவேண்டும்போல் மனசு கிடந்து தவித்தது.

‘பூனைக்கு மணி கட்டுவது யார்...?’

இரண்டாண்டுகளாகப் போட்டிப் போட்டுக்கொண்டு, காப்புக் கட்டை நிறுத்தியதற்கு நீயும்தானே காரணம்...’ என்றது மாதய்யாவின் உள்ளுணர்வு.

‘நாமே முன்னின்று நடத்தாமல் போனோமே...!’ கழிவிரக்கத்தில் கலங்கினார்.

கோபுரத்தில் அப்போதுதான் வேரூன்றி பத்துப் பதினைந்து இலைகளை வெளிக்காட்டி தன் இருப்பைக் காட்டிக்கொண்டிருந்த அரசங்கன்று அவர் கண்ணில் பட்டது,

‘முளையிலேயே கிள்ளினால் தேவலை... கோபுரமாவது தப்பிக்கும்...!’

நினைத்த மாத்திரத்தில், ஓர் உந்துதலில், பிரகாரத்தில் படிப்படியாய் நீட்டப்பட்ட பிறைகளும், நீட்டலுமாய் இருந்த கட்டுமானங்களில் படிப்படியாய் கால் வைத்து, மெது மெதுவாய், விமானத்தை அடைந்துவிட்டார் மாதய்யா...

Representational Image
Representational Image

‘கோபுரத்துல முளைக்கற அரசு நுணா போன்ற மரங்களை முளையியேலே கிள்ளி எறிந்து கோபுரத்தைக் காப்பாத்தறது புதுசா கோவில் கட்றதைவிட சிரேஷ்டமானது’ என்பது மாதய்யாவின் தீவிர சித்தாந்தம்.

தொடரும்...