வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இதற்குமுன்பு வரை "ஜோஜோ ரேப்பிட்" படத்தில் வரும் ஹிட்லரை சின்ன பையன் எட்டி உதைத்து பறக்கவிடும் காட்சியை மட்டுமே சிலாகித்துக்கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவன் முகிலனின் நடவடிக்கைகளில் "லால் சிங் சத்தா" படம் பார்த்ததிலிருந்தே சிறுசிறு மாற்றங்கள் தெரிகிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் விடியலிலும் யாரோ ஒருவர் "ஓடு லால் ஓடு" என்று அவனை தட்டியெழுப்ப... தினமும் அதிகாலையில் ஐந்து கிலோமீட்டர் தூரம் தனியாக ரன்னிங் செல்கிறான். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெறும் கார்கில் போர்க்காட்சியும்... எதிரி நாட்டுக்காரர் ஒருவரை காப்பாற்றி அவருக்கு லால் சிங் வாழ்வளித்த காட்சியும்... குடியரசுத்தலைவர் கையால் லால் சிங் விருது வாங்கும் காட்சியும்... திரும்ப திரும்ப அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
அப்போது முதலே அவன் கடவுளிடம் "இறைவா... எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கு பயனுள்ள வகையில் வாழ வேண்டும்... பிறருடைய துன்பநிலையை கண்டு மனம் மகிழ கூடாது... பிறருடைய இன்பநிலையை கண்டு பொறாமை படக்கூடாது... பரிசுத்த மனதுடன் இவ்வாழ்வை சிறப்பாக வாழ வேண்டும்..." என்று தான் பிரார்த்தனை செய்கிறான்.

அன்று அவனுக்கு பத்தாவது பிறந்தநாள் வர, அதிகாலையில் அரசமரத்தடி பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிந்துவிட்டு மண்டியிட்டு கண்களை மூடி எப்போதும் போல பரிசுத்த மனதுடன் பிரார்த்தனை செய்தான். அவனுடைய பிரார்த்தனையை சற்றுத் தொலைவிலிருந்து கவனித்தார் டெடியம்மா.
டெடியம்மாவின் உண்மையான பெயர் சாந்தி தேவி. வயது நூறை கடந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் இயற்கை எய்திவிட இப்போது அவர் ஒருவராக சாலையோரம் டெடிபியர் கடை அமைத்து வியாபாரம் செய்து பிழைத்து வருகிறார். டாம்பாய் கட்டிங், பேண்ட் சட்டை என்று அவர் குழந்தைகளுக்கு பிடித்தமான உருவமாக தன்னை மாற்றிக்கொண்டதால் அவரை குழந்தைகள் எல்லோரும் டெடியம்மா என்று அழைக்க அதுவே அவருடைய பெயராக மாறிவிட்டது.
முகிலனின் பிரார்த்தனையை கவனித்தபடி நின்றார் டெடியம்மா. பிரார்த்தனை முடிந்து கண்களை திறந்து பார்த்தான். பிள்ளையாரின் மேல் உள்ள அருகம்புல் மாலையை ஆட்டுக்குட்டி ஒன்று தின்றுகொண்டிருக்க... அருகே நின்ற டெடியம்மாவை பார்த்தான். டெடியம்மா புன்னகைத்தார்.
"உன் பிரார்த்தனைகளை நான் கேட்டேன் முகில்..." என்று அவன் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்ய, கடவுளே நேரில் வந்து ஆசிர்வாதம் செய்ததை போல உணர்ந்தான் முகிலன்.
பிள்ளையாருக்கு சாக்லேட் வைத்துவிட்டு, டெடியம்மாவிற்கு ஒரு சாக்லேட் கொடுத்தான். "தங்கமே... நீ என் வீட்டுக்கு வா... நான் உனக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன்..." என்று டெடியம்மா அவனை அழைக்க... டெடியம்மாவுடன் அவர் வீட்டுக்குச் சென்றான்.

டெடியம்மாவின் வீடு முழுவதும் வண்ண வண்ண டெடிபியர்கள் நிரம்பியிருந்தன. அதற்கிடையே "லால் சிங் சத்தா" படத்தின் சின்ன போஸ்டர் ஒன்று சுவற்றில் ஒட்டியிருந்தது. அந்தப் போஸ்டரை பார்த்து மகிழ்ந்தவன்,
"டெடியம்மா... உங்களுக்கும் இந்தப் படம் பிடிக்குமா..." என்று கேட்க,
"எனக்கும் இந்தப் படம் ரொம்ப பிடிக்கும்... அழகான படம்..." என்று சொல்ல...
"எனக்கும் இந்தப் படம் ரொம்ப பிடிக்கும் டெடியம்மா... நான் ஒருநாள் லால் சிங் சத்தா மாதிரி குடியரசுத்தலைவர்ட்ட விருது வாங்குவேன்..." என்று சொல்ல,
பத்து வயது சிறுவனுக்குள் இப்படியொரு ஆசையா என்று டெடியம்மா ஒருகணம் அவனை வியந்து பார்த்தார்.
"நான் உனக்கொரு சம்பவத்தை சொல்றேன் கேளு..." என்று தன் கடந்தகால வாழ்க்கை சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தார் டெடியம்மா.
***
1919 அமிர்தசரஸ்... ஜாலியன் வாலாபாக்...
இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென பெரிய பெரிய துப்பாக்கிகளோடு மைதானத்திற்குள்ளே நுழைந்தனர் ஆங்கில படை வீரர்கள். மேலதிகாரியின் உத்தரவு வந்த அடுத்தநொடி கொஞ்சம் கூட மனிநேயமே இல்லாமல் படைவீரர்கள் படபடபடவென துப்பாக்கியால் சுட்டுத்தள்ள... மிரண்டு போன மக்கள் எங்கே ஓடுவதென தெரியாமல் அங்குமிங்கும் அலைபாய... பாதிபேர் சுற்றுச்சுவரில் தாவி ஏற முயல... பாதிபேர் கிணற்றுக்குள் ஒருவர்மேல் ஒருவராக குதிக்க... ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் தொடர்ந்து மனிதர்களை சுட்டுத்தள்ளி கீழே வீழ்த்தியது... ஓலம் நிறைந்த அந்தக் கூட்டத்திற்குள் ஏகப்பட்ட சிறுவர் சிறுமிகள் தடுமாற அதில் ஒருவராய் இருந்த சிறுமி தான் டெடியம்மா.

கண்முன்னே அம்மா அப்பா குண்டடிபட்டு வீழ்ந்துகிடக்க... அவர்களது சடலத்தை உலுக்கி உலுக்கி அழுதுகொண்டிருந்தார் சிறுமியாக இருந்த டெடியம்மா. அப்போது ஒரு தோட்டா டெடியம்மாவின் இடது தோள்பட்டையில் பாய கண்களில் இருள்சூழ, சுருண்டு விழுந்தார். சடலங்களுக்கு மத்தியில் மயக்கநிலையில் இருந்த டெடியம்மாவை... துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் பார்த்த உத்தம்சிங் உட்பட எல்லோரும் இறந்துவிட்டதாகவே நினைத்தனர். சடலங்களை சுமக்கும் பணியிலிருந்து ஒருத்தர் டெடியம்மாவின் உடலை பிணம் என்று நினைத்து தூக்க... அவ்வளவு வேதனையிலும் பரபரப்புக்கிடையிலும் டெடியம்மாவின் இதயடித்துடிப்பை கூர்ந்து கவனித்தார். இந்தச் சிறுமி இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்த சடலம் தூக்குபவர் டெடியம்மாவை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல டெடியம்மாவுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது.
***
டெடியம்மா கண் விழித்து பார்த்தபோது ஒரு தமிழர் எதிரே நின்றுகொண்டிருந்தார். அம்மா, அப்பா, உறவினர் எல்லோரும் குண்டடிபட்டு இறந்துவிட்டார்கள் என்று தெரிந்ததும் "எனக்கு இந்த ஊர் வேண்டாம்... நான் உங்க கூடவே வந்திடுறேன்..." என்று அந்த தமிழருடன் தமிழகம் வந்தவர் டெடியம்மா. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் டெடியம்மாவின் விஷயத்தில் மட்டும் முரணாய் இருந்தது. பல இன்னல்களை சந்தித்த போது கூட தன்னை ஜாலியன் வாலாபாக் தியாகி என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை டெடியம்மா.
டெடியம்மாவை அதிசயித்து பார்த்தான் முகிலன். சட்டையை அவிழ்த்து மார்புக்கு மேல் இருந்த தோட்டா தழும்பை சிறுவன் முகிலனிடம் காட்டினார்.

வயதிற்கு தகுந்ததுபோல் வற்றிப்போன அவரது மாருக்கு சற்று மேலே தோட்டா தழும்பு அப்படியே இருந்தது. அந்த தழும்பை தடவி பார்த்தவன் டெடியம்மாவின் மார்புக்குள் முகம் பதித்துக் கொண்டான். டெடியம்மாவின் இதயத்துடிப்புடன் சேர்த்து நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளின் சத்தம் அவன் காதில் கேட்க... அவனையறியாமல் கண்ணீர் வடிய, டெடியம்மாவின் மார்பில் முகிலனின் கண்ணீர் சிந்தி வடிந்தது.
அழுதுகொண்டிருந்தவனின் தலையை செல்லமாய் பிடித்து தூக்கி அவனது நெற்றியில் முத்தமிட்டார் டெடியம்மா. தன் வீட்டில் உள்ள நூற்றுக்கணக்கான டெடிபியர்களில் அடர்சிவப்புநிற டெடிபியர் ஒன்றை அவனுக்கு பரிசளித்து, அதை வாங்கிய முகிலனை பார்த்து "ஓடு முகில் ஓடு" என்று டெடியம்மா கூற, டெடிபியரை தூக்கிக்கொண்டு கண்ணீர் வடிய தன் வீட்டிற்கு ஓடினான் சிறுவன் முகிலன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.