Published:Updated:

கலியன் மதவு | சமூக நாவல் |அத்தியாயம் – 10

Representational Image

காப்பிக்குப் பின் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மாதய்யாவோடு பேசிக்கொண்டிருந்தார் கணேசன். ஊர் நிலவரம் கேட்டறிந்தார். உறவினர் குசலம் விசாரித்தார். தன் உத்யோக காண்டத்தில் கடந்து வந்த கரடு முரடான பாதைகளைப் பற்றி நிறைய நிறையப் பேசிக்கொண்டிருந்தார்.

Published:Updated:

கலியன் மதவு | சமூக நாவல் |அத்தியாயம் – 10

காப்பிக்குப் பின் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மாதய்யாவோடு பேசிக்கொண்டிருந்தார் கணேசன். ஊர் நிலவரம் கேட்டறிந்தார். உறவினர் குசலம் விசாரித்தார். தன் உத்யோக காண்டத்தில் கடந்து வந்த கரடு முரடான பாதைகளைப் பற்றி நிறைய நிறையப் பேசிக்கொண்டிருந்தார்.

Representational Image

“காலில் மாவுக்கட்டு போட்டிருப்பதால், அவசியமானபோது மட்டும், அக்குளில் கவைத் தாங்கியபடி வீட்டுக்குள்ளேயே நடந்து பழகினார் மாதய்யா.

மற்ற நேரங்களில் கட்டுப் போட்டக் காலை நீட்டிக்கொண்டுப் படுக்கையில் உட்கார்கிறார்.

விளையாட்டாக இரண்டரை மாதங்கள் ஓடிவிட்டது.

கட்டிப்போட்டாற் போல இருக்கிறது அவருக்கு...

ஓடும் பிள்ளையாக எதையேனும் செய்துகொண்டே இருப்பவருக்கு இதைவிட வேறு தண்டணை வேண்டுமா என்ன...?

“மாது...! இன்னும் ஒரு மாசகாலம் ஆகும் கட்டவிழ்க்க...”

“குதிகால் எலும்பு அவ்வளவு சீக்கிரம் முறியவே முறியாது. அப்படி ஒரு அமைப்பு அதுக்கு.”

“முறிந்தாலோ அவ்வளவு சீக்கிரம் சேரவும் சேராது.”

ஜீவபுரம் அருணகிரி டாக்டர் நேற்று கட்டு மாற்றும்போது சொன்னதும் தீராதக் கவலையைக் கொடுத்தது மாதய்யாவுக்கு.

******************

கணேசப்பிள்ளை மாதய்யாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தார்

ரெவின்யூ டிபார்ட்மெண்ட்டில் டிஸ்ட்ரிக்ட் ‘ப்ரொக்யூர்மெண்ட்’ ஆபீசர் கணேசன்.

இரண்டு ஆப்பிள், இரண்டு சாத்துக்குடி எடுத்து மாதய்யா கையில் கொடுத்தார்.

“மாமி... மாமி...” என்று அழைத்தார்.

“சௌக்கியமா...? என்று கேட்டவாறே கையில் தண்ணீர் சொம்பு, டம்ளருடன் வந்தாள் குந்தலாம்பாள்.

“நல்ல சௌக்யம் மாமி.”

நேத்து ஒரு காரியமா திருச்சி, காந்தி மார்க்கட் போனேனா...”

‘மாஹாளிக் கிழங்கு, அப்பதான் வந்து சரக்கு இறங்கறது…”

“நல்லா தளதளப்பா, தொடச்சி வெச்சாப்ல புத்தம்புதுசா இருந்துதா.”

“உங்களுக்குப் ரொம்ப இஷ்டமாச்சேன்னு ஒரு கட்டு வாங்கிண்டு வந்தேன்...”

தாமரை இலையில் கட்டிய மல்லிகைச் சரத்தையும், மாகாளிக் கட்டையும் மாமி கையில் கொடுத்தார்.

குந்தலாம்பாளுக்கு ஏக சந்தோஷம்.

மாகாளிக் கட்டை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தாள்.

மாகாளியை முகர்ந்தாள்.

கண்கள் செருகச் செருக நறுமணத்தை அனுபவித்தாள்.

வாசனை என்றால் அப்படி ஒரு வாசனை.

புது விளையாட்டுச் சாமான் வாங்கிக் தந்ததும் குழந்தைகள் ஆசையாய், இப்படியும் அப்படியும், திருப்பித் திருப்பிப் பார்த்து சந்தோஷப்படுமே...!

அதுபோல, நினைத்து நினைத்து...

அதை எடுத்து எடுத்துப் பார்த்தாள்...

முகர்ந்தாள்... முறுவலித்தாள்...

முகம் மலர்ந்தாள்...

மகிழ்ந்தாள்... மயங்கினாள்...

மகிழ்ந்து மலர்ந்தாள்...

மலர்ந்து... மயங்கி... மகிழ்ந்தாள்...

******************

‘க...ஷ்..ஷ்...........ஷ்.........ஷ்’ ஷென்று கை மிஷினில் காப்பிக்கொட்டை அரைக்கும் ஓசைத் தொடங்கித் தொடர்ந்தது.

டப்’ பென்று அறைத்து முடித்ததும் மிஷின் வாயை உள்ளங்கையால் தட்டும் ஓசையோடு முடிந்தது.

கூடவே ‘ஃபீப்ரி’ (முதல் தரம்) காப்பிப் பொடியின் மணம் நாசியைத் தாக்கியது.

Representational Image
Representational Image

சில நிமிஷங்களில் ‘கம்……!’ மென்ற மணத்துடன், நுரைத் ததும்பும் பசும்பால் காப்பிக் கொண்டு வந்தாள் குந்தலாம்பாள்.

சிதம்பரம் மாலைக் கட்டித் தெருவில் கால் ரூபாய்க்கு கள்ளிச் சொட்டுப் போல் காபி தரும் ‘மாமி காபிக் கடை’

காரைக்கால் பஸ் நிலையம் அருகே ‘வடிவேல் காபி பார்...’

ஆடுதுறை ‘சீதாராம விலாஸ்’

மாயவரம் ‘காளியாக்குடி’

கும்பகோணம் கும்பேஸ்வரன் மொட்டை கோபுர வாசலில் ‘பஞ்சாமி ஐயரின் லக்‌ஷ்மி விலால் காபி கிளப்...’

இவையெல்லாம் மனதில் வந்து போனது கணேசனுக்கு.

இங்கே மாமி பாசத்தோடு தருகிறாள்.

அங்கே கால் ரூபாய் வாங்கிக்கொண்டு இதே பாசத்தோடு தருவார்கள் அதுதான் வித்தியாசம்.

******************

காப்பிக்குப் பின் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மாதய்யாவோடு பேசிக்கொண்டிருந்தார் கணேசன்.

ஊர் நிலவரம் கேட்டறிந்தார்.

உறவினர் குசலம் விசாரித்தார்.

தன் உத்யோக காண்டத்தில் கடந்து வந்த கரடு முரடான பாதைகளைப் பற்றி நிறைய நிறையப் பேசிக்கொண்டிருந்தார்.

******************

மதியம் ஒரு மணி முதல் “சாப்டுண்டே பேசலாமே ... என்று தொடங்கி பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வந்து குந்தலாம்பாள் காது கடிப்பாள்.

பேச்சு சுவாரசியத்தில் “ஆகட்டும்... இப்ப என்ன அவசரம்...” எனத் தள்ளிப் போய் இரண்டு மணிக்கு இலை முன் உட்கார்ந்தார் கணேசன்.

அப்பளம், வடை, பாயசம் என மதிய சாப்பாட்டை அமர்க்களப்படுத்திவிட்டாள் குந்தலாம்பாள்.

தலைவாழையிலையில் திருப்தியாகச் சாப்பிட்டார்.

தன் தாயார் பரிமாறி சாப்பிட்டாற்போல ஒரு திருப்தி அவருக்கு.

வயிறு முட்ட முட்ட திணித்துவிட்டாள் குந்தலாம்பாள்.

“கும்பகோணம் வெத்தலைபோடும்...” வெத்தலைச் செல்லத்தை ஸ்டூலில் நகர்த்தி வைத்தார் மாதய்யா.

தாம்பூலம் தரித்தபின் புறப்பட ஆயத்தமானார் கணேசன்.

Representational Image
Representational Image

கணேசப்பிள்ளை, ஒரு நல்ல கேரக்டர்.

பழமை மறக்காத, மனிதர்களை மதிக்கும் தன்மை அவரிடமிருந்து எல்லாரும் கற்க வேண்டும்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்களாக அவருக்கு மாதய்யா குடும்பத்தோடு பழக்கம்.

‘டென் ஏ ஒன்’ என்ற நிலையில் தற்காலிகமாக உத்யோகத்தில் நுழைந்தவர் கணேசன்.

அப்போதிருந்த, ‘ப்ர்க்யூர்மெண்ட் ஆபீசர்’ கூத்தபிரானோடு எடுபிடிபோல கூட வருவான்.

எறும்பைப் போலச் சுறுசுறுப்பும்,

தேனீயைப் போல உழைப்பும்,

சிலந்தியைப்போல விடாமுயற்சியும்,

குதிரையைப்போன்ற வேகமும்,

துறவியைப் போன்ற விவேகமும் உடைய கேரக்டர் கணேசனுக்கு.

ஜூனியர் அஸிஸ்டென்ட் ஆனார்.

தொடர்ந்து உழைத்துப் படித்து, டிபார்ட்மெண்டல் தேர்வுகள் எழுதினார்.

முயற்சி மெய்வருத்தக் கூலி தந்தது.

ஹெட் க்ளாராக்...

சூப்பரண்ட்...

துணை மண்டல அலுவலர்... என்று உயர்ந்துகொண்டே போனார்.

இப்படியாக பதவி உயர்வு பெற்றுப் பெற்று இன்று ஜில்லாவுக்கே தலைமை ப்ரொக்யூர்மெண்ட் ஆபீசராக ஆகியிருக்கிறார்.

இன்று ஆபீசரானாலும், அன்று எப்படிப் பழகினாரோ அதே பழக்கம் நீடிக்கிறது.

ஒரு சின்னப் ப்ரமோஷன் வந்து, கேடர் மாறி, சம்பளத்தில் 10 ரூபாய் ஏறிவிட்டால் போதும்...

முன்பு இருந்த கேடரைப் பற்றித் துச்சமாகப் பேசுவதும்,

நொடிக்கு நூறு சலாம் போட்ட அந்தக் கேடரின் உயர் அதிகாரியை சிறுமைப்படுத்துவதும்,

அந்தக் கேடரில் உள்ளவர்களையப், புழுமாதிரி பார்ப்பதும், அலட்சியப்படுத்துவதுமான, சின்னத்தனமான மாக்களுக்கிடையில் கணேசன் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம்.

******************

இறுதியாகக் கணேசன், தன் உத்யோக நிமித்தம் பசலி விவரங்களைக் குறிப்பாகச் சொன்னார்.

சமீபத்திய தண்டல் விவரங்களை கோடிட்டுக் காட்டினார்.

புறப்படும்முன் “மாமி; மாமா பக்கத்துல நில்லுங்கோ…” என்றார்.

சாஷ்டாங்கமாக விழுந்து நமர்ஸ்கரித்தார்.

மாதய்யாவும் குந்தலாம்பாளும் மஞ்சள் அரிசி தூவி ஆசீர்வதித்தார்கள்.

“கலியன்கிட்டே சொல்லி நாளை மதியத்துக்குள்ள இந்த பசலிக்கான தண்டலுக்கு நெல் அளந்து அனுப்பச் சொல்றேன்...” என்றார் மாதய்யா.

“அப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன்...” சந்தோஷமாகத் திரும்பிப் போனார்.

******************

அறுவடையெல்லாம் பூர்த்தியாகிவிட்டது.

கீழே விழுந்து காலை முறித்துக்கொண்ட நாளுக்குப் பிறகு நடைபெற்ற அறுவடை பூராவும், கலியனே பொறுப்பாகப் பார்த்துக்கொண்டான்.

தினமும் சாயங்காலம் வந்து கண்டுமுதல் அறுப்பாட்களுக்கு அளந்த கூலி நெல் போக மிச்சக் கணக்குகளை ஒப்புவிப்பான்.

************************

வளர்பிறையில், நல்ல நாள் பார்த்து, ராசி பார்த்து, குதிர், பத்தாயம், விதைக்கோட்டை அடுக்கும் தாழ்வாரம் போன்ற தானியக் களஞ்சியங்களையெல்லாம் நன்கு சுத்தமாகக் கூட்டி, அலசிவிட்டுத், துடைத்தாகிவிட்டது.

மஞ்சள் பூச்சுப் பூசி, குங்குமப் பொட்டிட்டு, புஷ்பம் சார்த்தி, தான்ய லெக்ஷ்மி அஷ்டோத்தரம் சொல்லி பூஜை செய்தாள் குந்தலாம்பாள்.

வடை பாயஸம் செய்து நைவேத்யம் செய்தாள்.

பாடசாலை வித்யார்த்தியை வரச்சொல்லி பிரசாதம் கொடுத்தாள்.

வழக்கம்போல் ஸ்டூல் பலகைமேல் எறி, பத்தாயத்தில் நெல் கொட்டினாள்.

நெல் நிரப்பலைத் தொடங்கி வைத்தாள்.

பானை பிடித்தவளின் பாக்கியத்தால் குதிர், பத்தாயம் எல்லாம் வழக்கப்படி இந்த ஆண்டும் நிறைத்தாயிற்று.

******************

‘குதிர்’- என்பது தானியக் களஞ்சியம்.

களிமண், ‘வரகு வைக்கோல்’ இரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் பிசைந்துசெய்யும் கொள்கலன் இது.

கல் கட்டிகள் நீக்கி, குறிப்பிட்ட நேரம் புளித்தபின் கோணிச் சாக்கில் போட்டு நன்கு மிதித்துப் பதப்படுத்தப்படும்.

மெழுகு பதத்தில் இருக்கும் நன்கு பிசைந்து, ‘கருவடகத்துக்கு’ மாவு பிசைவது போல் சிரத்தையாகப் பிசிந்து பிசிந்து தரையில் அடித்துச் பதப்படுத்துதல் முடியும் .

தரையில் ‘ஆசு வட்டம்’ போட்டிருக்கும்.

அந்த வட்டத்துக்கு உள் ஒழுங்கில் வருமாறு களிமண்ணை பிசைந்து வைக்க வைக்க உறை எழும்பும்.

மண் அடுப்பு கட்டுவதைப் போல நிதானமாகவும், சிரத்தையாகவும், பானை வனைவதைப் போல கவனமாகவும் இருக்கும்.

அவ்வப்போது, தண்ணீரில் கை நனைத்து, உபரிச் சரக்கை வழித்தெடுப்பதும், தேவையான இடத்தில் இட்டு நிரப்பலுமாக படிப்படியாக வேலை நடக்கும்.

குதிர் உயரம் ஆறடி.

ஒரு அடி அளவில் ஐந்து உறைகள் .

ஒன்றன் மேல் ஐந்தும் அடுக்கப்படும்.

தலையில் வைக்கும் ஆறாவது உறை சீசாவின் மூடிப் போல மேலே குறுகலாய் இருக்கும்.

குதிரின் மேல் மூடியும் கூடக் களிமண்ணால் செய்த தட்டுதான்.

எல்லா உறைகளையும் அடுக்கியபின், மேல் திறப்பு வழியாகத்தான் நெல் கொட்ட வேண்டும்.

சுலபமாக இருக்குமே என்று முதல் உறையை நிரப்பிவிட்டு அதன்பின் இரண்டாவது உறை வைத்து நிரப்புவதெல்லாம் சரியான முறை அல்ல...

அப்படியெல்லாம் முறையற்று நெல் நிரப்பினால் தரித்திர லட்சுமிதான் வீட்டுக்குள் வருவாள் என்பது நம்பிக்கை.

குதிரின் அடிப்பாகத்தில் உள்ள ஓட்டை வழியாகத்தான் தேவையானபோது நெல் எடுக்க வேண்டும்.

தேவைக்கான நெல் எடுத்தபின், துவாரத்தை தேங்காய்ச் சிரட்டையை களிமண்ணோடு பிசைந்து அடைக்கவேண்டும்.

அவ்வப்போது சாணிப்பாலால் மெழுகியும், செவ்வாய் வெள்ளி சாம்பிராணிப் புகை போட்டும் ‘குதிரை’ தெய்வமாய் வணங்கிய காலமது.

Representational Image
Representational Image

இப்போது குதிரை பார்ப்பதே ‘குதிரைக்கொம்பாக’ இருக்கிறதே.!

******************

பத்தாயம் என்பதும் ஒரு வகை தானியக்களஞ்சியம்தான்.

பெரும்பாலும் மாம்பலகையில் செய்வார்கள்.

வசதிப்பட்டவர்கள் பலாப்பலகையிலும் செய்வதுண்டு.

சதுரம் செவ்வகம் என இரண்டு வடிவங்களிலும் இருக்கும்.

தனித்தனிப் பெட்டிகளாகச் செய்து, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கினால் அது பத்தாயம்.

தரையில் நிற்கும் அடிப் பெட்டியில் ஆறு கால்கள் பொறுத்தப்பட்டிருக்கும்.

அந்த கால்களின் கோர்வை, கோவில் படிச்சட்டத்தின் நான்கு ஓரக்கால்களின் கோர்வையை ஒத்திருக்கும்.

பத்தாயத்தின் மேல் மூடி திட்டி வாசலோடுக் கூடியக் கோவில் கதவை, படுக்கை வசத்தில் வைத்தாற்போல் இருக்கும்.

அதன் வழிதான் நெல்லை உள்ளே கொட்ட வேண்டும்.

வாயை மூடவும், பூட்டிக்கொள்ள ஏதுவாகவும் நாதாங்கி பொறுத்தப்பட்ட சிறு கதவும் அந்த மூடியில் இருக்கும்.

அடிப்பகுதியில் சதுரமாக ஒரு சிறியத் துவாரம் இருக்கும்.

அதற்குப் பேட்லாக் பொருத்திய ஒரு சின்னக் கதவும் இருக்கும்.

தேவையான நெல் எடுத்தபிறகு, வைக்கோலை பந்து போல அமுக்கி அடைத்தபின், சின்னக் கதவைச் சாத்திப் பூட்டு போட்டுப் பூட்டிவிடலாம்.

***********************

பெரும்பாலும் பத்தாயத்தின் மேல் ‘தார்’தான் பூசுவார்கள்.

தார் விலை மலிவு என்பது ஒரு காரணம்.

இன்னொரு காரணமும் உண்டு.

அதில் கை வைத்தாலோ, சாய்ந்தாலோ தார் ஒட்டிக்கொள்ளும்.

தானியக் களஞ்சியம் புனிதமானது.

எனவே, யாரும் அதை தாங்கிப் பிடித்தபடி நிற்பதோ, அதன் மேல் சாய்ந்து உட்கார்வதோ செய்ய செய்யமாட்டார்கள்.

பத்தாயத்தின் புனிதம் காப்பாற்றப்படும்.

சேரு – இதுவும் தானியக் களஞ்சியத்தின் ஒரு வகைதான்.

வைக்கோல் மற்றும் வைக்கோல்பிரி இவைகள்தான் இதற்கு மூலதனம்.

வீட்டிற்குள் வைப்பதில்லை இதை.

தெரு வாசலில்தான் இதற்கு இடம்.

கிராமத்தில் குடிசை வீடுகள் கட்டும்முன் ‘சேரு மோடை’க்கென இடம் ஒதுக்குவார்கள்.

சேரு மோடையை தேவையான அளவுக்கு உயர்த்தியபின், நெல்லைக் கையால் கசக்கி எடுத்தத் தாள் (வைக்கோலை) நீளவாக்கில் குத்துக்கு நிறுத்தவேண்டும்.

தேவையான உயரம் வரும் வரை, பிரியை சுற்றிக்கொண்டே வருதல் வேண்டும்.

தரைபாகத்தில் கதுமையாக (அடர்த்தியாக) வைக்கோலைப் பரப்பிவிட்டு நெல் கொட்ட வேண்டியதுதான்.

வைக்கோலை தெருவில் அலைகிற மாடுகள் இழுத்து விடுமல்லவா...

அப்படி ஆகாமல் இருக்க ‘சேரு’ மேல் சாணிச் சாந்து போட்டு மெழுக வேண்டும்.

பனை ஓலையால் ‘தாழங்குடை’ போல முடைந்து, சேரு மேல் மூடுதல் வழக்கம்.

Representational Image
Representational Image

நாலு அல்லது ஆறு கால்களில் நிற்கும் அந்த பனை ஓலை மூடி; காற்று, மழை, புயல், வெள்ளம் என்ற எல்லா இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் நெல்மணிகளைக் காக்கும் அளவுக்குக் காத்திரமாய் இருக்கும்.

ஒவ்வொரு முறையும் லாகவமாக மேல் மூடியைத் துக்கிவிட்டுத்தான் நெல் எடுக்க வேண்டும்.

உடலுழைப்புக்கு அஞ்சாத காலமது.

அந்தக் கிராமத்திலேயே, கலியன் (தொப்ளான்) வீட்டில் மட்டும்தான் சேரு உண்டு.

கலியனின் சேரும் நிரம்பியது.

Representational Image
Representational Image

******************

விதை நெல் கோட்டை கட்ட நாள் நட்சத்திரம் பார்த்தாயிற்று.

முதல் நாளே, சொன்னபடி கலியன் வீரமுத்து பேரன் வானமாமலையோடு வந்தான்.

“அய்யா, தம்பி விவசாயம் படிச்சிருக்கு.

“எனக்குப் பளக்கமில்லியா, அதான் கோட்டை கட்ட இந்தத் தம்பியை கூட்டியாந்தேன்.”

“சரி.. கட்டச் சொல்லு...” என்றார் மாதய்யா.

சீராகப் பிரி விடப்பட்ட வைக்கோல் கயறுகளை எண்கோண வடிவில் கீழே நேர்த்தியாய்ப் போட்டான் அந்த இளைஞன்.

நன்கு சுக்காய்க் காய்ந்த வைக்கோலை அதன்மேல் பரப்பினான்.

அந்த இளைஞன் இப்போது விதை நெல்லை நடுவில் கொட்டச் சொன்னான்.

அறுவடையின்போதே சிறப்பு கவனம் செலுத்தி, தனியே காயவைத்துப் பக்குவப் படுத்தப்பட்ட நெல்லைக் கொண்டுவந்து கலியன் அதில் கொட்டினான்.

லாகவமாக இரு கைகளாலும் கட்டியணைத்தபடி, பிரிகளைக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் அழுத்தமாகக் கட்டினான் அந்த இளைஞன்.

“அட இவ்வளவு நேர்த்தியா கட்டறியே...! எங்கே கத்துக்கிட்டே...”ஆச்சரியப்பட்டார் மாதய்யா.

என்னோட விவசாய சார், செந்தில்குமார்னு பேரு, அவரே உட்கார்ந்து கோட்டை கட்டற கலையை கத்துக் கொடுத்தாருங்க...”

விதைக் கோட்டைகள் தயார் செய்து முடித்த பிறகு சாணச்சாந்தால் விதைக் கோட்டைகள் மீது அந்த இளைஞன் மெழுகுவதைப் பார்த்து, கலியனும் மெழுகி வெயிலில் உலரவைத்தான்.

6 மாத காலம் பாதுகாக்கப்படும் இந்த விதைக் கோட்டையை விதைப்புக்கு முதல் நாள் தண்ணீர் குட்டையில் தள்ளிவிடுவார்கள்.

ஒரு நாள் ஊறியதும் கரையேற்றிவிடுவார்கள்.

சீராக முளை விட்டு நாற்றங்கால் விடுவதற்குத் தயாராகி விடும் கோட்டை.

“நீங்க கொடுக்கற சம்பளத்துல (சம்பா என்றால் நெல், அளம் என்றால் உப்பு) நான் என்ன கோட்டையா கட்டப் போறேன்..”

இந்தச் சொலவடைக் கூட இந்த விதை நெல் கோட்டை’யைத்தான் குறிப்பிடுகிறது.

Representational Image
Representational Image

விதைக் கோட்டை கட்டி அடுக்கியாகிவிட்டது.

போடவேண்டிய நெல்லை போட்டாகிவிட்டது.

ஒரு வழியாக அந்த போகத்துக்கான வேலைகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டது.

அடுத்த போகத்திற்கு, எருவடி, கிடை மறிப்பு, எலி பிடித்தல், அண்டை வெட்டு, ஏர் உழுதல், பரம்படிப்பு, நாற்றுவிடல்... என வரிசையாக எல்லாம் மாதய்யா வயல்பக்கம் போகமலே நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது.

ஒரு கதவு அடைக்கும்போது இன்னொரு கதவு திறப்பதாகப் பட்டது மாதய்யாவுக்கு.

***************

இன்று நடவு ஆரம்பம்.

வயல்காட்டுக்குச் செல்ல முடியாவிட்டாலும், மனசு முழுதும் அங்கேதான் இருக்கிறது.

ஒரு உந்துதலில் கையில் கோல் இல்லாமல் நடந்து பழகினார்.

நடக்க முடிந்தது.

கால், அப்படி இப்படிப் புரட்ட முடிந்தது.

வலியில்லை.

எலும்பு நன்கு சேர்ந்துவிட்டது.

‘இவன் இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருக்கட்டுமே...’ என்ற எண்ணத்தில் அருணகிரி டாக்டர் ஒப்புக்குக் கட்டு போட்டுள்ள யுக்தி புரிந்தது மாதய்யாவுக்கு.

வாசல் திண்ணைச் சாரணையில் வந்து உட்கார்ந்தார்.

ரொம்ப நாளாக முடங்கிக் கிடந்த கால் கொஞ்சதூரம் நடந்த உடனேயே லேசாக வலித்தது.

‘எப்படியாவது ‘ஒரு எட்டு...’ வயலுக்குப் போய்வந்தால் தேவலை...’ போல் இருந்தது.

***************

வாசல் மூங்கில் பிளாச்சு கேட்டு நகரும் ஓசை கேட்டுத் திரும்பிய மாதய்யாவுக்கு அதிர்ச்சி.

மகன் துரைராமனும், மருமகள் மோகனா, பேத்தி ரஞ்சனி எல்லோரும் வீட்டுக்குள் வந்தார்கள்.

‘ சொல்லாம கொள்ளாம திடீர்னு, இவா என்னத்துக்கு இப்போ வரா...?’

மாதய்யா முகத்தில் கேள்விக்குறி.

முன்பே தெரிந்திருந்தால் வயல்காட்டைப் பார்க்கப் பறந்து போயிருப்பார்...

அவ்வளவு பொருத்தம் அவர்களுக்குள்.

Representational Image
Representational Image

******************

அப்பா மகனுக்குள் ஆரம்பத்திலிருந்தே ஒட்டவில்லை.

தலைமுறை இடைவெளி...

வீட்டுக்கு வீடு வாசப்படி.

மாதய்யாவின் வாதம் கேட்டால் அவர் சொல்வது சரியெனத் தோன்றும்.

அதே துரைராமன் சொல்வதைப் பார்த்தால் அவனிடம்தான் ஞாயம் இருப்பதாகப் படும்.

இந்த இருவருக்கும் இடையிலிருந்து விரிசலை ஒட்டச் செய்யத்தான் ஒருத்தருமில்லை.

ஒட்டவில்லை என்றாலும், விரிசல் அதிகமாகி உடைந்துவிடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டு நிற்குமளவுக்கு, ஏதேதோ யுக்தி செய்து, பூசி மெழுகி, ஒருக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது குந்தலாம்பாள்தான்.

அப்பாவையும் பிள்ளையையும் நேரடியாக மோத விடாமல், குறுக்கே நின்று சமாளிப்பதில் குந்தலாம்பாள் கெட்டிக்காரிதான்.

இருந்தாலும், சமயத்தில் உரசல் ஏற்பட்டு, வீடு அமளி துமளிப் பட்டுவிடும்.

“எனக்கு சாப்பாடு வாண்டாம்...” அவர் முறுக்குவார்.

நான் வெளீல போய் கடைல கொட்டிக்கறேன்...” துரைராமன் முரண்டு செய்வான்.

இவர்களைத் தனித்தனியாகச் சமாதானப்படுத்தி, இருவரையும் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும் குந்தலாம்பாளுக்கு.

******************

பதினேழு வயதில் அந்த வீட்டுக்கு மருமகளாய் வந்தவள்.

தனக்குப் பிறந்த வீடு, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை மாமா, மாமி என்று தன் பக்க உறவுகள் இருப்பதை நினைப்பதற்குக் கூட நேரம் இருந்ததில்லை அவளுக்கு.

பிறந்த வீட்டுச் சார்பாய் நல்லது கெட்டது எதற்கும் சென்றதுமில்லை அவள்.

குந்தலாம்பாளுக்குச் சொந்த ஊர் சிவகங்கை.

பிதுரார்ஜித சொத்தாக, முன்னோர்கள் விட்டுச் சென்ற வானம் பார்த்த பூமியை குந்தலாம்பாளின் அப்பா நிர்வாகம் பண்ணிக்கொண்டுவந்தார்.

வானம் பார்த்த பூமியில், மழையைக் கண்டுவிட்டால் மக்களுக்குக் கொண்டாட்டம்தானே...!

*****************

மாதய்யா, குந்தலாம்பாளை பெண் பார்க்கப் போன நாளில் அடைப்புப் பிடித்துக்கொண்டு கொட்டினாற்போல அப்படியொரு மழை.

குதிரைவண்டியில் சென்று குடும்பத்தோடு இறங்கினார் மாதய்யா. மழை நீர் கூட வீட்டு வாசலில் பள்ளம் கண்ட இடத்தில் தேங்கி நின்றது.

அரைகுறையாய்ப் பெய்து சூட்டைக் கிளம்பி விடாமல், நன்றாகப் பெய்து காற்றை குளிர்வித்திருந்தது.

கலியன் மதவு | சமூக நாவல் |அத்தியாயம் – 10

“குந்தலாம்பாவும் அவ அப்பாவும் வயக்காட்டுக்குப் போயிருக்கா...”

தகவல் வர, மாதய்யா மகிழ்ந்தார்.

மாதய்யாவின் அம்மா முகம் சுழித்தார்.

“இன்னிக்கு நாங்க வர்றதா தபால் போட்டோமே...!”

கேட்டது மாதய்யாவின் அம்மா.

“தபால் ஏதும் வல்லியே...!”

கை விரித்தாள் குந்தலாம்பாளின் அம்மா.

“இருங்கோ காபி கலக்கறேன்...”

குந்தலாம்பாளின் அம்மா அடுப்படிக்குச் சென்ற நேரத்தில், மாதவன் கொல்லைக்கட்டுக்குப் போய் ‘எத்தனை பசுக்கள் உள்ளன எப்படிப் பராமரிக்கிறார்கள்..” என்று நோட்டம்விடச் சென்றுவிட்டார்.

மாதவனின் அம்மா, உட்கார்ந்து உட்கார்ந்து வழ வழவென்று தேய்ந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு தன் பிறந்தகத்து இரண்டேமுக்காலடி ஊஞ்சலில் ஆடுவதுபோல் கற்பனை உலகில் சஞ்சரித்தாள்.

Representational Image
Representational Image

“சாப்பிடுங்கோ...”

கடலை உருண்டைகள் கொஞ்சம் தட்டில் வைத்துக் கொடுத்தாள்.

அம்மாவும் மகனுமாய், கடலை உருண்டை தின்றார்கள்.

காப்பி குடித்து முடிக்கும் வரை வரவே இல்லை வயலுக்குச் சென்றவர்கள்.

திரும்பு சவாரிக்காக்க் காத்திருந்த வண்டிக்காரனிடம் சொல்லி வயலுக்கே சென்று குந்தலாம்பாளை, பெண் பார்த்தார் மாதய்யா.

விஷயம் கேள்விப்பட்டதும், வரப்பைத் தாண்டித் தாண்டி ஓடிவந்தாள் குந்தலாம்பாள்.

அவளைப் பார்த்த அம்மா “இந்த ‘வரப்புத்தாண்டி’ வேண்டாண்டா மாது”

மாதய்யா காதருகே சொன்னாள்..

“இந்தப் பொண்ணுதான்ம்மா நம்ம குடும்பத்துக்குச் சரியா வரும்...”

முடிவாகச் சொல்லிவிட்டார் மாதய்யா.

Representational Image
Representational Image

ஒரு சுப முகூர்த்த நாளில் கொடுமுடி வீரநாராயணர் சந்நிதியில் வைத்து மாதவன், குந்தலா திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

கல்யாணமான கையோடு புது தம்பதியருக்கு ஷேத்ராடனம் போக ஏற்பாடு செய்துதந்தார் குந்தலாம்பாளின் அப்பா.

இப்போது ஊட்டி, கொடைக்கானல் போல, ஷேத்ராடனம்தான் ஹனிமூன் ட்ரிப்பாக இருந்த காலம் அது.

Representational Image
Representational Image

******************

கல்யாணமாகி கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது.

படிதாண்டாப் பத்தினியாகவே காலத்தைக் கழித்துவிட்டாள் குந்தலாம்பாள்.

‘நல்லது – கெட்டது’, ‘நாள்-கிழமை’, ‘கல்யாணம்-கார்த்தி’... ‘அது-இது...’, ‘லொட்டு – லொசுக்கு..’ என்று எதற்கும் எங்கும் எப்போதும் போனதே இல்லை.

கல்யாணமாகி, வந்த மூன்றாம் மாதம் மாமனார் இறந்துவிட்டார்.

அதன் பிறகு பதினைந்து வருஷகாலம் மாமியார் திடமாக இருந்தார்.

**************************

மாமனார் ஒரு வாயில்லாப் பூச்சி.

என்றாலும் கோபத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

அசட்டுக்கு அகங்காரம் வந்ததைப் போல எதையாவது தூக்கி எறியும்...

அசட்டு பிசட்டு என்று நடந்து கொள்ளும்.

செய்வது எதுவும் சகிக்காது.

மாமியாரின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடினாள் குந்தலாம்பாள்.

மாமியாரின் அதிகாரம், மாதய்யாவின் கோபம், மகனின் கோணங்கித்தனம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, ஒரு பக்குவத்துக்கு வந்துவிட்டவள் அவள்.

சென்றால், உண்டால் கொண்டால் கொடுத்தால் தானே உறவு.

உறவுகள் எட்டிப் போயிற்று.

போகாது கெட்டன உறவுகள்.

******************

காலம் எப்போதும் ஒரே மாதிரி இருந்துவிடுமா என்ன?

சமீப காலமாகக் குந்தலாம்பாளின் அண்ணன், தம்பி என்று எப்போதாவது, இந்தப் பக்கம் வரும்போது வந்து பார்த்துப் போகிறார்கள்.

“அத்திம்பேர்..., சௌக்யமா...” என்று ஆசையாகவும் பாசமாகவும் கேட்டு, ஏதாவது பழத்தைக் கையில் கொடுத்துக் நமஸ்கரிக்கிறார்கள்.

வயதான காலத்தில், இப்படி அனுசரணையாகப் பேச யாராவது வந்தால் குந்தலாம்பாளுக்குச் சந்தோஷமாக இருக்கிறது.

குந்தலாம்பாளின் தம்பி சுப்பாமணிதான் அடிக்கடி வருகிறான். குடும்பத்தில் புகுந்து நல்லதுகெட்டது செய்கிறான்.

******************

வெளியூர்தான் என்றில்லை. வீட்டு வாசற்படித் தாண்டி கடை, கன்னி, கன்மாய், காய்கறிக்கடை, காவேரி என்று கூட எங்கும் போனதில்லை.

அவள் வயதொத்த, காமேஸ்வரியோ, நிர்மலாவோ, வாலாம்பாளோ... தினமும் விடிகாலை காவிரி ஸ்நானத்துக்குச் செல்கிறார்கள்...

ஊம்ஹூம்... அவள் போனதேயில்லை.

அவள் வாங்கி வந்த வரம் அப்படி

காவிரி ஆற்றை நினைத்தாலே குலை நடுங்கும் குந்தலாம்பாளுக்கு.

“ஐயோ... என்று ஒரு குரல் கத்தி அழ வேண்டும்’ போல் தோன்றும். அவ்வளவு கசப்பான அனுபவம் அவளுக்கு...!

******************

“காவிரிக் குளியல் எவ்ளோ சுகம் தெரியுமோ...!

அதுவும் விடிகாலைல அகண்டகாவேரீல குளிக்கறவாளுக்கு எந்த வியாதியும் அண்டாது தெரியுமோ...”

“உஷத் காலத்துல, நன்னா காவேரீல அமுங்கி ஸ்நானம் பண்ணிப்பிட்டு, பித்தளைக் குடத்தை பளிச்சுனு தேய்ச்சி, இடுப்புல காவேரி தீர்தம் சுமந்துண்டு வர்றதுல உள்ள சுகமே அலாதிதான்...

நாள் பூரா சோம்பேரித்தனமே இல்லாம ஒரு சுறுசுறுப்பு உடம்போட ஒட்டிண்டுன்டேன்னா இருக்கும் ...!”

“காவேரீல சல சலன்னு ஓடற ஜலத்தைப் பாத்துண்டே இருந்தா அது ஒரு சொகம்.

அதுவும் அகண்ட காவேரீல பட்டுப்பாய் விரிச்சா மாதிரி... இப்படி ஒரு அழகு, ரம்யம்... வேற நதிகளுக்கு உண்டோ தெரியலை...”

படிக்கட்டுல நின்னு கரைல வந்து வந்து மோதிப் போற சுழலைப் பார்க்கணுமே…

“உடம்புல உள்ள உஷ்ணத்தையெல்லாம், நான் எடுத்துக்கறேன் வாடீ’’னு அழைக்கறமாதிரியே இருக்கும்.”

“அப்படிப்பட்ட தாயார்ன்னா காவேரி...”

“அதுவும், நம்ம படித்துறை...அடடா அப்படி ஒரு அகலம், அப்படி ஒரு சொரசொரப்பு...!

ஒரு சோப்பு வாண்டாம், சவக்காரம் வாண்டாம்... கருங்கல் படித்துறைல ரெண்டு நசுக்கு நசுக்கி... சல சலன்னு ஓடுற ஜலத்துல பிரிச்சி ரெண்டு அலசு அலசினாப் போறுமே... துணி தும்பப் பூவாய் வெளுத்துடுமே...”

“காவேரி ஜலம் குடிச்ச வாய் வேற ஜலம் குடிக்குமோ...?”

“தல வலியோ, காச்சலோ... காவேரீல போய் ரெண்டு முங்கு முங்கினா சிட்டாப் பறந்து போயிடும்னேன்.”

“காவேரி ஸ்நாநம் ஆன கையோட சந்தியா வந்தனம் பண்ணி, தாராளமா அர்க்யம் விட்டு,

காயத்ரி ஜபம் சாதிச்சா, காயத்ரி தேவி பிரச்னமாகி கண் முன்னால காட்சி தருவாளாக்கும்...”

Representational Image
Representational Image

இப்படி வருவோர் போவோரிடம் தன் மாமியார் காவேரி மகாத்மியத்தைச் சொல்லும்போது குந்தலாம்பாள் அதை காதில் வாங்கிக்கொள்வாள்.

இப்படி ‘தீர்த்தக்கரை பாவியாக இருக்கிறோமே...’ என்று நொந்துகொள்வாள். தானும் அப்படிக் காவேரியில் குளிக்க வேண்டும் என்று தோன்றும் அவளுக்கு.

மாமனார் இறந்தபோது, காவிரியில் குளிக்க வாய்ப்புக் கிடைத்தது குந்தலாம்பாளுக்கு.

கண்மூடாமல் ராப்பிணம் காத்த தூக்கக் கலக்கம்.

காரியம் செய்யும் மாதய்யாவுக்கு அருகில் மணிக்கணக்காய் நின்றது.

வீட்டு மருமகளாய் வந்தவர்களை கவனிக்கப் பம்பரமாய்ச் சுற்றியது.

இப்படி ஆய்ந்து ஓய்ந்த கட்டையாய், காவிரியில் இரண்டு மூன்று முறை முக்கி எழுந்தாள்.

மாமியார் சொல்லும் மகாத்மியம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

***********************

ஆடிப்பெருக்கு நாளில் மாதய்யாவின் குடும்பம் தவிர ஊரே காவிரிக்கரையில்தான் இருக்கும்.

‘கட...கட...கட....கட...கட...’வென சிறுசுகள் சப்பரம் இழுத்துக்கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சி.

பெண்கள் சாப்பாட்டுத் தூக்குடனும், கூடையுடனும் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் காவிரிக்குச் செல்லும் அழகே அழகு.

Representational Image
Representational Image

தூக்குகளிலும், வாளிகளிலும்... கொண்டு வந்த சித்ரான்னங்களைக் காவிரிப் படிக்கட்டில் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துக்கொண்டே, தானும் தின்னுவ அலாதி சுகம்.

மிளகாயைக் கடித்துவிட்டு ‘ஆ...! உஸ்...ஸ்...! என்றெல்லாம் அலறித் துப்பி காவிரி நீரை அள்ளிக் குடிப்பது... ஆனந்த அனுபவம்.

காவிரித் தண்ணீரை அள்ளி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்ள்.

உடைகளை நனைத்துக்கொள்வார்கள்...

இப்படி தினுசு தினுசாகக் குதூகலிப்பார்கள் ஜனங்கள்.

குந்தலாம்பாளுக்கும் குழந்தை துரைராமனை அழைத்துக்கொண்டு சித்ரான்னங்களுடன் காவிரிக்குப் போய் வர ஆசைதான்.

மாமியாரிடம் கேட்க பயம்.

மாமியாரிடம் கேட்கச் சொல்லி மாதய்யரிடம் சொன்னாலோ அது விபரீதமாகிவிடும்.

***********************

துரைராமனுக்கு மூன்று வயது இருக்கும்.

அம்மா “தப்பரம்…. தப்பரம்... என்று நச்சரித்துக்கொண்டே இருந்தான்.

“தப்ப’ரமுமாச்சு, ரைட்’டரமுமாச்சு... பாட்டிக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்...”

குந்தலாம்பாள் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டார் மாதய்யா.

“கொழந்தைய அழைச்சிண்டு காவேரிக்குத்தான் போயிட்டு வாயேன் கொந்தலா...” என்றார்.

இதைக் கேட்டதும் குந்தலாம்பாளுக்கு உடம்பெல்லாம் ஒரு முறை தூக்கிப்போட்டது.

‘நிஜம்தானா..? கனவா...?.’ கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்.

நிஜம்தான் என்று தெரிந்தபோது மகிழ்ச்சி ‘ஆடி மாதத்து அகண்ட காவிரி’யைப் போலக் கரை புரண்டு ஓடியது.

இந்த மகிழ்ச்சி ஒரிரு நிமிடங்களுக்குத்தான் நீடித்தது.

***********************

“ஏண்டா மாது... உனக்கு புத்தி கித்தி கெட்டுப்போச்சா...”

“காவேரிக்கு அவளைப் போகச் சொல்லி உத்தரவு கொடுக்கறாப்ல இருக்கு...”

தொடங்கிவிட்டாள் மாமியார்.

“இல்லம்மா...! குழந்தை ஆசைப் படறான்... அதான்...!”

மாதய்யா மழுப்பினார்...

“எப்படா மழை வரும்னு, காத்திருந்து குளிச்சவாளுக்கெல்லாம் காவேரீல குளிக்கற ஆசை வந்துடுத்து....”

மருமகளின் பிறந்தகமான வானம்பார்த்த பூமியை ஒரு முறை குத்திக் குட்டினாள்.

“வாண்டாண்டாப்பா... நான் ஏ...து...ம்....சொல்ல....ல...அவ தா...ரா...ள...மா....காவேரி என்ன....... கொள்ளிடத்துக்கும் போகச்சொல்லு...”

“.................................”

நீ ஆம்படையான் உத்தரவு கொடுக்கறே, நான் குறுக்க பூந்து தடுப்பானேன்...”

“..................................”

“வாசல் கால் வந்துடுத்து... அதுக்கு இடமும் கொடுத்தாறது...

இந்தக் கூத்தையெல்லாம் பார்க்கத்தான் பகவான் என்னை இன்னும் உசுரோட வெச்சிருக்கான் போல்ருக்கு...”

“உன் அப்பா உத்தமமா போய்ச் சேர்ந்துட்டார்... ஈஸ்வரா... என்னையும் சீக்கிரம் கொண்டு போப்பா....”

சம்பந்தா சம்பந்தமில்லாமல் , தகரக் கொட்டகையில் விட்டு விட்டு, ஆலங்கட்டி மழை பெய்கிறார்ப்போல் பேசத் தொடங்கிவிட்டாள்.

பாட்டம் பாட்டமாய்ப் பேசிக்கொண்டே இருந்தாள்.

நிறுத்துகிற வழியாகத் தெரியவில்லை.

*********************** “

ஏம்மா... நாளும் கிழமையுமா இப்படி அபசகுனம் பிடிச்சாப்ல பேசறே...

“நான் அவளை போகச் சொன்னேன். வாஸ்தவம்தான்...”

“போகட்டும்னு சொல்லு போகாதேனு சொல்லு. உன்னை மீறி அவ போயிடப் போறாளா..?.”

“ஏன் இப்படிப் புலம்பறேம்மா...”

அந்தாதி போல முடித்த இடத்தைப் பிடித்துக்கொண்டாள்...

“புலம்பறேண்டா நான் புலம்பறேன்..”.

“என்னோட தலையெழுத்துடா...”

“உன் அப்பா இருந்தா இப்படி என் வாயை அடக்குவியா...”

“பெண்டாட்டி சொல் கேட்டுண்டு எதிர்த்துப் பேசுவியா…?”

என்னை... “

“உன் தோப்பனார் புண்யம் பண்ணினவர் போய்ச் சேர்ந்துட்டார்.

நான்... கண்டவாகிட்டேயெல்லாம் வாங்கிக் கட்டிக்கணும்னு விதி..”

“இவ்வளவையும் கேட்டுண்டு நான் இன்னும் உசிரோட இருக்கேன் பாரு... “

“டேய் மாதவா... ‘சாலோட சாய்ச்சி தண்ணி குடிச்சாலும், பெத்த தாய் வார்க்கற தண்ணிதான் தாகம் தணிக்கும்...’ சொல்லிட்டேன்...”

இவ்வளவையும் பேசிவிட்டு, டக் கென்று, ஜபமாலையை எடுத்துக்கொண்டு ராமபஜனை மடத்தை நோக்கிச் சென்றுவிட்டாள்.

***********************

புயலடித்து ஓய்ந்தாற்போல இருந்தது வீடு.

மூணு வயது துரைராமன் ‘திருக்... முருக்...’ கென முழித்தான்.

மாதய்யா தலை தாழ்ந்திருந்தது.

குந்தலாம்பாள் கண்களில் தாரையாய்க் கண்ணீர்.

“தீர்த்தக் கரை பாவி’யைப் போல இருந்த குந்தலாம்பாள் , மாமியார் இறந்தபோதும், காவிரியில் குளிக்கவில்லை.

“காவேரீல இழுப்பு அதிகமா இருக்கு. பெண்டுகள் பெரிய வாய்க்காலில் முழுகிடுங்கோ...” என்று சொல்லிவிட்டார்கள்.

‘மாமியார் ஆத்மா சாந்தியடைந்திருக்கும்...’ என்று நினைத்துக்கொண்டாள் குந்தலாம்பாள்.

***********************

***********************

பாட்டி செத்துப்போனபோது துரைராமனுக்கு பத்து வயசு.

பள்ளிக்கூடத்தில் அவனைப் போட்டாகிவிட்டது.

பிச்சல் பிடுங்கல் இல்லை. என்றாலும் மாமியார் இல்லாத குறை இப்போது பூதாகாரமாகத் தெரிந்தது குந்தலாம்பாளுக்கு.

மாதய்யாவின் கோபத்தை அடக்கும் சக்தியையும், தகுதியையும் மாமியார் மட்டுமே பெற்றிருந்ததை இப்போது உணர்ந்தாள் அவள்.

இருக்கும்போதுதான் நமக்கு எதன் மதிப்பும் தெரிவிதில்லையே...

கலியன் மதவு | சமூக நாவல் |அத்தியாயம் – 10

நஞ்சையும் புஞ்சையுமாக, ஏகப்பட்ட நிலபுலங்களைக் கட்டிக்காத்து, எட்டுக் கண்ணும் விட்டெரிந்து நிர்வாகம் செய்யும் மாதய்யாவுக்கு எப்போது பார்த்தாலும் கோபம்... கோபம்...கோபம்...

இரண்டு தினுசாய் கோபத்தைக் காண்பிப்பார் மாதய்யா.

ஒன்று கத்துவது.

இன்னொன்று அம்மிக் குழவிக் கோபம். கையில் அகப்பட்டதைப் போடு அம்மிக்கல்லால் அடித்து நசுக்குவது...

கத்தல் என்றால்...

A.K. Ramanujan என்ற இந்திய ஆங்கிலக் கவிஞர் தன் Obituary என்ற கவிதையில் Being a Burning Type என்று சொல்வதைப்போல

வாயிலிருந்து சரமாரியாக நெருப்பைப் போல வார்த்தைகள் வந்து விழும்.

குபீர் குபீர் என்று பற்றி எரியும்.

சிறிது நேரம் கழித்து தானே சமனமாகிவிடும்.

கிராம சேவகராகவும் இருப்பதால், வீட்டுப் பிரச்சனைகளோடு பொதுப் பிரச்சனைகளையும் தலையில் போட்டுக் கொள்வார் அவர்.

‘பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளியமரம் ஏறித்தானே ஆக வேண்டும்.

நாய் வேஷம் போட்டால் குலைத்துத்தானே ஆக வேண்டும்.’

இந்த சித்தாந்தத்தில் வாழ்ந்த மாதய்யா, நேர்த்தியாய்ப் புளிய மரமும் ஏறினார்,

இன்னிசையாய்க் குலைத்ததார்.

ஊரில் நல்ல பெயர் அவருக்கு.

***********************

நாலு மனுஷாளை திருப்திப்படுத்தவேண்டும் என்று இறங்கிவிட்டால், குடும்பம் சீர் குலைகிறது.

குடும்பத்தை மட்டும் சீராகவும் சிறப்பாகவும் வைத்திருப்பவன் பொதுவிவகாரத்தில் தலையிடுவதில்லை.

பொது வாழ்விலும் சாதித்து, சொந்தக் காரியத்தையும் குறையில்லாமல் வைத்திருப்பது குதிரைக்குக் கொம்பு முளைக்கிற கதைதான்.

ஊர் விவகாரத்தில் தலையைக் கொடுத்துவிட்டுத் தவிப்பது ஒரு புறம்.

விவசாயம் பிடிபடாமல் ஆள் படைகள் போக்குக் காட்டி வயிற்றெரிச்சல் கொட்டியது ஒரு புறம்.

இப்படி ஊரையும், சொந்த விவசாயத்தையும் புரிந்துகொள்ளவே தன் முழு கவனத்தையும் செலவிட்டதால், அதையெல்லாம் விட பெரிய சொத்தான மழலைச் செல்வமான துரைராமனை முறையாக கவனிக்க முடியவில்லை.

தன்னை முறையாக கவனிக்காத மாதய்யாவிடமிருந்து மகன் துரைராமனை வெகுதூரம் விலக்கிவிட்டார் வில்லங்கம் கிட்டாவய்யா.

துரைராமனும் மாதய்யாவின் மாற்று துருவமாய் விலகிப்போய்விட்டான்.

இனி இந்த நிலை மாறப்போவதில்லை.

இப்போது என்ன செய்வது...

கால்கள் விண்... விண்... என்று வலித்தது.

இங்கே தொடர்ந்து இருந்தால் மனசு வலியும் சேர்ந்துகொள்ளும் என்று பட்டது.

ஒரு முடிவுக்கு வந்தார் மாதய்யா.

-தொடரும்...

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.