வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
துரை வந்துவிட்டான் என்ற சேதிக் கேள்விப்பட்டு, மூணு மணி சுமாருக்குச் சாஸ்திரிகள் வந்தார்.
அவர் வந்தபோது தானத்துக்கான சாமான்களை கூடத்தில் பரத்திப் பார்த்துக்கொண்டிருந்தனர் துரையும், மோகனாவும்.
சாஸ்திரிகளும் எல்லாவற்றையும் பார்த்தார்.
ஒவ்வொன்றையும் கையில் எடுத்து அதன் கனம், தரம் எல்லாவற்றையும் கவனித்தார்.
முகம் பிரசன்னமானது அவருக்கு.
“நன்னா காத்தரமா, ஃபர்ஸ்ட் குவாலிட்டியா, நிறைய செலவு பண்ணி சிரத்தையா வாங்கியிருக்கேள் மாமி...”
மனதாரப் பாராட்டினார் .
******
காலம்தான் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது.
நேற்றுதான் நிகழ்ந்த மாதிரி இருக்கிறது.
மாதய்யா காலமாகி ஒரு ஆண்டு ஓடிவிட்டது.
ஓராண்டில் மாஸிகம், ஊனமாஸிகம் என்றெல்லாம் மாதாமாதம் செய்யவேண்டிய, பல்வேறு நீத்தார் கடன்களைச் சென்னையில் பிரபல ட்ரஸ்ட் நடத்தும் சாவடியில் வைத்துச் செய்தான் துரைராமன்.
அப்பா காலமான பத்து நட்களுக்குள் அம்மா துரையின் வீட்டுக்கு வர மறுத்துவிட்டாளல்லவா!
அதனால், சென்னையில் உள்ள தன் வீட்டுக்கு அம்மா வருவது அச்சானியமாகப் பட்டது அவனுக்கு.
******
கிரேக்யம் , சுபஸ்வீகாரம், சுபம் என்றெல்லாம் சொல்லக் கூடிய 13ம் நாள் சம்ப்ரதாயங்களும், சடங்குகளும், பூஜைகளும், புரோட்சணங்களும், நல்லபடியாக நடைபெற்று முடிந்தது.
பதிமூன்று நாட்கள் நீத்தார் கடன்பற்றி கருடபுராணத்தில் உள்ளவற்றைத் தொகுத்துப் பண்டிதர் பிரவசனம் செய்தார்.

‘ஆன்மா’ என்பது ஜீவாத்மாவாகிய சூக்ஷ்ம சரீரம்.
அது குடியிருந்த ஸ்தூல சரீரமாகிய பூத உடலை விட்டு வெளியேறுவதே மரணம்.
ஆத்மாவுக்கு அழிவில்லை.
பல்வேறு பிறவிகளில், வேறு வேறு ரூபங்களில், விதவிதமான சரீரங்களில் வாழவேண்டிய காலம் முடிந்த பிறகு ஆன்மா மீண்டும் இறைவனிடமே சென்றடையும்.
உண்மையில் ஜீவாத்மா பரப்பிரம்ம நாடகத்தின் ஒரு கதா பாத்திரமே ஆகும்.
ஜீவன் உடம்பிலிருந்து சென்றுவிட்டாலும், கண்ணில் சூரியன், வாயில் அக்னி, கையில் இந்திரன்... இப்படி ஒவ்வொரு அங்கத்திலுமிருந்த பலவேறு தெய்வகனங்கள் அனைத்தும் அதனதன் மூலஸ்தானத்துக்கு உடனே போய்ச் சேர்வதில்லை.
மனித உருவத்தை ஆட்கொண்டுள்ள அந்த தேவகணங்களையெல்லாம் முறையாக அதனதன் இடத்திற்கு அனுப்புவதற்காகத்தான், ‘மந்திரங்களை ஓதி, நெய் ஊற்றி,’ அக்னி குண்டத்தில் ஹோமாஹூதி கொடுப்பதுபோல, பிரேதத்தைச் சிதையில் வைத்துத் தேவ கனங்களை சிதை அக்னியின் மூலம் அதனதன் க்ருஹத்துக்கு அனுப்பி வைக்கிறோம்.
பிரேத தஹனத்தை சாஸ்த்திரம் ‘அந்த்யேஷ்டி’, அதாவது ‘இறுதி வேள்வி’ என்கிறது.
இறுதி வேள்வியின் மூலம் சில பல தேவகனங்களை அனுப்பினாலும், அதன் பிறகும் சில, அந்த ஆன்மா வசித்த இடத்தில் இருக்கின்றன.
இரண்டாம் நாள் சஞ்சயனம் (பால் தெளி) என்ற சடங்கின் போது சில விடுதலை பெறுகின்றன.
மற்ற, எஞ்சிய தேவகனங்கள் அதன் பிறகு செய்யும் பனிரெண்டு நாள் காரியங்கள் மூலம் விடுதலை பெறுகின்றன.
பதிமூன்றாம் நாள் ஜபம், ஹோமாதிகளெல்லாம் செய்யப்பட்டு, வீடு முழுதும் மாவிலைக் கொத்தால் புண்ய தீர்த்தம் தெளித்து புனிதப்படுத்துகிறோம்.
இப்படிப் பதிமூன்று நாள் காரியத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசினார் பண்டிதர்.
“ஆ...!”
“ஆஹா...!”
“அடடே...!”
“ராம்...ராம்...ராம்...ராம்...!”
“கிருஷ்ண கிருஷ்ண...”
என்றெல்லாம் அவ்வப்போது அவரவர்களின் அனுபவ வெளிப்பாடு உரத்து வெளிப்பட்டது.
சிலர் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கிக் காட்டி ‘எல்லாம் அவன் செயல்’ என்பதைக் குறியீட்டால் உணர்த்தினார்கள்.
வேதங்கள், சாஸ்த்திரங்கள், புராண, இதிகாசங்கள், உபநிஷத்துக்கள் என்று எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பிரவசனம் செய்து ஓய்ந்தபின் கண்மூடிச் சிறிது நேரம் அமர்ந்தார் பண்டிதர்.
கேட்டுக் கொண்டிருந்தவர்களும் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தனர்.
“ஜானகீ காந்த ஸ்மரணம்...!”
ஓங்கி ஒலித்துத், தன் மௌனம் கலைத்தார் பண்டிதர்.
“ஜெய் ஜெய் ராம ரா.......ம...”
கோரஸாகச் சொன்னார்கள் எதிரில் அமர்ந்திருந்தவர்கள்.
“அப்பா சொர்க்கம் போனார்னா அதுக்கு உங்க மந்த்ரப் ப்ரயோகம்தான் காரணம்... பொன்னு வைக்கற இடத்துல பூ வைக்கற மாதிரி, எங்க சக்திக்கு செஞ்சோம். புரோகிதா எல்லாரும் ரொம்ப நன்னா சிறப்பாச் செஞ்சி வெச்சேள்.”
சொஸ்தி கூறினான். உபச்சார வார்த்தைகள் சொன்னான் துரைராமன்.
“தொரை, தன் தகப்பனாருக்கு ரொம்ப சிரத்தையா தகப்பனாருக்குக் காரியங்கள் எல்லாம் பண்ணியிருக்கான்.
கோ...பூ...சொர்ண, தில, ஆஜ்யாதிகளோட காரியங்கள் ரொம்ப ஒஸத்தியா காரியங்கள் செஞ்சி தகப்பனாரை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டான். சம்பாவனை எதேஷ்டமா இருந்தது. எல்லாருக்கும் பரம திருப்தி”
பதிலுக்கு சாஸ்திரிகள் பதில் மரியாதை வார்த்தைகளைச் சொன்னார்.
‘ஆன்மா’ என்பது ஜீவாத்மாவாகிய சூக்ஷ்ம சரீரம்.
அது குடியிருந்த ஸ்தூல சரீரமாகிய பூத உடலை விட்டு வெளியேறுவதே மரணம்.
ஆத்மாவுக்கு அழிவில்லை.
பல்வேறு பிறவிகளில், வேறு வேறு ரூபங்களில், விதவிதமான சரீரங்களில் வாழவேண்டிய காலம் முடிந்த பிறகு ஆன்மா மீண்டும் இறைவனிடமே சென்றடையும்.
உண்மையில் ஜீவாத்மா பரப்பிரம்ம நாடகத்தின் ஒரு கதா பாத்திரமே ஆகும்.
ஜீவன் உடம்பிலிருந்து சென்றுவிட்டாலும், கண்ணில் சூரியன், வாயில் அக்னி, கையில் இந்திரன்... இப்படி ஒவ்வொரு அங்கத்திலுமிருந்த பலவேறு தெய்வகனங்கள் அனைத்தும் அதனதன் மூலஸ்தானத்துக்கு உடனே போய்ச் சேர்வதில்லை.
மனித உருவத்தை ஆட்கொண்டுள்ள அந்த தேவகணங்களையெல்லாம் முறையாக அதனதன் இடத்திற்கு அனுப்புவதற்காகத்தான், ‘மந்திரங்களை ஓதி, நெய் ஊற்றி,’ அக்னி குண்டத்தில் ஹோமாஹூதி கொடுப்பதுபோல, பிரேதத்தைச் சிதையில் வைத்துத் தேவ கனங்களை சிதை அக்னியின் மூலம் அதனதன் க்ருஹத்துக்கு அனுப்பி வைக்கிறோம்.
பிரேத தஹனத்தை சாஸ்த்திரம் ‘அந்த்யேஷ்டி’, அதாவது ‘இறுதி வேள்வி’ என்கிறது.
இறுதி வேள்வியின் மூலம் சில பல தேவகனங்களை அனுப்பினாலும், அதன் பிறகும் சில, அந்த ஆன்மா வசித்த இடத்தில் இருக்கின்றன.
இரண்டாம் நாள் சஞ்சயனம் (பால் தெளி) என்ற சடங்கின் போது சில விடுதலை பெறுகின்றன.
மற்ற, எஞ்சிய தேவகனங்கள் அதன் பிறகு செய்யும் பனிரெண்டு நாள் காரியங்கள் மூலம் விடுதலை பெறுகின்றன.
பதிமூன்றாம் நாள் ஜபம், ஹோமாதிகளெல்லாம் செய்யப்பட்டு, வீடு முழுதும் மாவிலைக் கொத்தால் புண்ய தீர்த்தம் தெளித்து புனிதப்படுத்துகிறோம்.
இப்படிப் பதிமூன்று நாள் காரியத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசினார் பண்டிதர்.
“ஆ...!”
“ஆஹா...!”
“அடடே...!”
“ராம்...ராம்...ராம்...ராம்...!”
“கிருஷ்ண கிருஷ்ண...”
என்றெல்லாம் அவ்வப்போது அவரவர்களின் அனுபவ வெளிப்பாடு உரத்து வெளிப்பட்டது.
சிலர் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கிக் காட்டி ‘எல்லாம் அவன் செயல்’ என்பதைக் குறியீட்டால் உணர்த்தினார்கள்.
வேதங்கள், சாஸ்த்திரங்கள், புராண, இதிகாசங்கள், உபநிஷத்துக்கள் என்று எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பிரவசனம் செய்து ஓய்ந்தபின் கண்மூடிச் சிறிது நேரம் அமர்ந்தார் பண்டிதர்.
கேட்டுக் கொண்டிருந்தவர்களும் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தனர்.
“ஜானகீ காந்த ஸ்மரணம்...!”
ஓங்கி ஒலித்துத், தன் மௌனம் கலைத்தார் பண்டிதர்.
“ஜெய் ஜெய் ராம ரா.......ம...”
கோரஸாகச் சொன்னார்கள் எதிரில் அமர்ந்திருந்தவர்கள்.
“அப்பா சொர்க்கம் போனார்னா அதுக்கு உங்க மந்த்ரப் ப்ரயோகம்தான் காரணம்... பொன்னு வைக்கற இடத்துல பூ வைக்கற மாதிரி, எங்க சக்திக்கு செஞ்சோம். புரோகிதா எல்லாரும் ரொம்ப நன்னா சிறப்பாச் செஞ்சி வெச்சேள்.”
சொஸ்தி கூறினான். உபச்சார வார்த்தைகள் சொன்னான் துரைராமன்.
“தொரை, தன் தகப்பனாருக்கு ரொம்ப சிரத்தையா தகப்பனாருக்குக் காரியங்கள் எல்லாம் பண்ணியிருக்கான்.
கோ...பூ...சொர்ண, தில, ஆஜ்யாதிகளோட காரியங்கள் ரொம்ப ஒஸத்தியா காரியங்கள் செஞ்சி தகப்பனாரை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டான். சம்பாவனை எதேஷ்டமா இருந்தது. எல்லாருக்கும் பரம திருப்தி”
பதிலுக்கு சாஸ்திரிகள் பதில் மரியாதை வார்த்தைகளைச் சொன்னார்.
“அடுத்தது, பரமபதம் அடைஞ்சிட்ட மாதவய்யாவுக்கு ‘சரம ஸ்லோகம்’ வாசிக்கப் போறேன்.”
கவனமாக் கேளுங்கோ.”
சொல்லிவிட்டுத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார் பண்டிதர்.
கூடியிருந்தோர் காதைத் தீட்டிக்கொண்டார்கள்.
‘சரமஸ்லோகம்’ என்கிற இறங்கற்பா வாசித்தார்.
வடமொழியில் ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார்.
மொழி தெரிந்தவர்கள் தலையாட்டி, ரசித்தார்கள்.
தமிழில் அதன் பொருள் சொன்னார்.
மற்றவர்களும் ரசித்தார்கள்.
பதிமூன்றாம் நாள் காரியம் ஆன இரவே, மெட்ராஸ் கிளம்பிச் சென்றுவிட்டான் துரை.
ஆபீஸ் காரியங்கள் இருக்கிறதே அவனுக்கு.
மோகனாவும், ரஞ்சனியும் அந்தனூரில் இருந்தனர்.
******
27 ம் நாள் குறை (ஊன) மாசிஹம் என்கிற நீத்தார் கடனை முடிக்க மெட்ராஸிலிருந்து வந்தான் துரைராமன்.
நல்லபடியாக முடிந்தது அதுவும்.
அன்று இரவு ரயிலுக்கே, மோகனா ரஞ்சனி உட்பட மூவருக்கும் டிக்கெட் ரிசர்வேஷன் செய்திருந்தான் துரை.
வீட்டில் துரை மிகவும் கவனமாகப் பேசினான்.. நிதானமாகப் பேசினான்.
துரைராமனைப் பொருத்தவரை, இந்த நிதானமும், கவனமும், பொதுவாக, கூடுதல் பொறுப்பு வந்தபிறகு தானே வரும் ஒரு குணமாக இல்லை. கவுட்டுத் தனத்துக்கு அச்சாரம் போடும் நிதானம் அது. குடி கெடுக்கும் மௌனம் அது.
“அம்மா,”
அழைத்தான் துரை. வாய் நிறைய பாசத்தோடு அழைக்கவில்லை. உதட்டளவில் காரியார்த்தமான அழைப்பாக இருந்தது அந்த அழைப்பு.
“ம்…! சொல்லு...!”
“நான் ஏகமா ஆபீசுக்கு லீவு போட்டாச்சு.”
“சரி…”
“குழந்தையும் பள்ளிக்கூடத்துக்கு நிறைய லீவு எடுத்துடுட்டா.!”
“சரி...!”
“அதனால...!”
“அதனால...!”
“மாசா மாசம் இங்கே வந்து அப்பாவுக்கான காரியங்களைச் செய்யறது கஷ்டம்...மா...!”
“செரி. செய்ய வேண்டாம். விட்டுடு...!”
“நான் அப்படிச் சொல்லலைம்மா.”
“... ... ... ... ... ... ... ... ...”
“மெட்ராஸ்ல காயத்ரீ ட்ரஸ்ட்’ னு சாவடி ஒண்ணு இருக்கும்மா. அதுல செஞ்சிக்கறேம்மா...!”
“ஏதோ இத்தமட்டும் அப்பாவுக்கு கிரமப்படி, காரியம் செய்யறேன்னு சொல்றியே. ரொம்ப சந்தோஷம். பேஷா செய். உனக்குத் தோண்றதைச் செய்!”
“... ... ... ... ... ... ... ... ...”
“அம்மா...”
“அதான் சரின்னுட்டேனே...”
“ காரியம் செய்யறபோது நீ இருக்கணுமான்னு, சாஸ்திரிகளைக் கலந்துண்டேன்.”
“... ... ... ... ... ... ... ... ...”
“தாயார் இருந்தா ஸ்ரேஷ்டம். இல்லேன்னா தோஷமில்லைன்னுட்டார். அதனால...”
“நீ வரவேண்டாம்கறே...! சரி, நான் வரலை. நீ பாத்துக்கோ...!”
******
இந்த ஒரு வருஷத்தில் துரைராமன் மூன்று முறை அந்தனூர் வந்தான்.
அப்பாவின் வயல்களிலிருந்து வரும் வருமானத்தில் நீத்தார் கடன் செய்தால்தான் ‘ஸ்ரேஷ்டம்’ என்று சாஸ்திரிகள் சொல்லிவிட்டாரோ என்னவோ...!’
கழுகுக்கு மூக்கில் வியர்த்தாற்போல், குறுவை அறுப்பு முடிந்து, நெல் விற்ற நாளில் வந்தான்.
பணம் வாங்கிக்கொண்டு போனான்.
அதைப்போலவே சம்பா அறுவடை, தாளடி அறுவடையின் போதும் சரியான நாளில் வந்தான்.
பணம் தண்டிக்கொண்டுச் சென்றான்.
******
ஒவ்வொரு முறையும் நேரில் வந்தபோது கூட,
“நீ எப்படி இருக்கே? எப்படி இங்கே தனியாச் சமாளிக்கறே...?”
எதுவும் கேட்டுக்கொண்டதில்லை.
‘ஏதாவது கேட்கப்போய், அம்மா வந்து ஒட்டிக்கொண்டுவிடுவாளோ? தாயாரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள நேர்ந்துவிடுமோ...!’
பயம்.
நகரவாழ்க்கைக் கற்றுக் கொடுத்த பாடம்.
மெட்ராஸ் பழக்கிய சுயநலம்.
“இந்த மாசம் ஏகப்பட்ட செலவு...”
“குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டவே காசு இல்லே...?”
“வீட்டு வாடகை உயர்த்திட்டான். எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலே...?”
“நேரமில்லே, காலமில்லே...!”
“பணம் இல்லே, பவிஷூ இல்லே...!”
“லீவு இல்லே, நிம்மதி இல்லே...!”
“அது இல்லே... இது இல்லே...!”
‘இல்லே’ப் புலம்பல் புலம்புவான்.
அடுத்த வேளை சோற்றுக்கேத் திண்டாடுபவன் போல பஞ்சம் பேசுவான்.
குந்தலாம்பாள் எதற்கும் வாய்திறப்பதில்லை.
“மனிஷாளோட, மனோதிடத்தையும், தைரியத்தையும், பொறுமையையும், நம்பிக்கையையும், விடாமுயற்சியையும் சோதிக்க சமயத்துல கஷ்ட காலம் தேடி வரும். ஜாக்ரதையா அதைக் கடந்து போகணும்” என்று அடிக்கடி மாதய்யா சொல்வார்.
அதை நினைத்துக் கொண்டாள்....!’
அதையெல்லாம் கடந்து போகத் துவங்கிவிட்டாள் குந்தலாம்பாள்.
******
மூன்றாவது முறையாக நெல்லு விற்றக் காசுத் தண்ட வந்தபோது, மாதய்யாவின் தலைத் திவசம் பற்றிப் பேச்செடுத்தான் துரைராமன்.
“அப்பாவோட தலைத் திவசம் ............. க்குதானே வறது...?”
நாள், நட்சத்திரம், கிழமை, ஆங்கில தேதி எல்லாவற்றையும் சொன்னான்.
உள்ளத்துக்குள்ளேயே நீண்ட காலமாக எத்தனையோ விஷயங்களை அடக்கியிருந்ததனால், நாக்கு பேசத் துடித்தது குந்தலாம்பாளுக்கு.
‘புள்ளைப் பூச்சி’ என்று அலட்சியப்படுத்தும் துரைக்கு முன், தேள் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் உந்துதல் வந்தது.
வாய் நமநமத்தது.
உள்ளக் கருத்தை உதடு வீசியது.
“இதையாவது அப்பா வாழ்ந்த க்ரஹத்துல பண்ணலாமா?”
மனசில் அவள் இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த கசப்பெல்லாம் இந்தக் குத்தல் கேள்வியின் மூலம் வெளியே வந்து விட்டதுமாதிரி இருந்தது.
“சரி...!”
‘உடனே சரி சொல்லிவிட்டான் துரைராமன்.’
‘அவன் மனதில் ஏதோ கணக்கு இருந்திருக்க வேண்டும்.’
“அதுக்கான, முன்னேற்பாடுகளை நான் கவனிக்கட்டுமா தொரை..?”
“... ... ... ... ... ... ... ... ...”
துரை ஏதும் வாய்திறந்து பேசவில்லை;
தலையை மட்டும் சம்மதத்தைத் தெரிவிக்கிற வகையில் ஆட்டினான்.
‘பேசும்போது எதிலாவது கமிட் ஆகிவிடக்கூடும்.’ பயந்தான். எதிலும் சிக்கிவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தான்.
வாய்திறந்து பேசுவதை முற்றிலும் தவிர்த்தான்.
‘அந்தனூருக்கு வந்தால் ஏதாவது பேசுப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது...!
பயம் வந்தது.
அந்தனூர் வருவதையேத் தவிர்த்தான்.
“லீவு இல்லைம்மா...!”
“ஆடிட் வர்றது. நான் இருந்தே ஆகணும்...!”
“ரொம்ப டைட் ஷெட்யூல்...!”
“குழந்தைக்கு பரீட்சை நேரம்...”
“ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ்...!”
என்றெல்லாம் அவ்வப்போது ஒரு போஸ்ட் கார்டு எழுதிப் போடுவான்.
சில நேரம் ரிப்ளை கார்டு போடுவான்.
குந்தலாம்பாளும், ‘நீ கவலைப் படாதே, அம்மா நான் பாத்துக்கறேன்...!”
ஆறுதலாக ரிப்ளை கார்டில் எழுதிப் போட்டுவிடுவாள். பதிலுக்கு.
******
அந்தனூர் பக்கம் வராமலே சமாளித்தான் துரை.
‘பரந்து விரிந்ததல்லவா நகர வாழ்க்கை.
நகர வாழ்க்கையினால், அவன் வாழ்க்கை வரம்பு உயர்ந்துவிட்டது.
உள்ளம் குறுகிவிட்டது.
பலஹீனனாகிவிட்டான் துரை.’
மகனின் பதுங்கலுக்குக் காரணமும் உறுத்தலும் நன்கு புரிந்தது குந்தலாம்பாளுக்கு.
மாதய்யாவின் ஒளி நிழலில் இருந்திருந்தால் அவரின் வழிகாட்டலால் ஸ்திதப்ரக்ஞ தரிசனம் பெற்றிருப்பான், குந்தலாம்பாளைப் போல கர்மயோகியாய்ச் சாதிக்கும் பலசாலியாக இருந்திருப்பான்.
ஆனால் அவன் போதாத நேரம், கிட்டாவய்யாவின் கரு நிழலிலேயல்லவா ஒதுங்கிவிட்டான் துரைராமன்.
கபடும் சூதும் வாதுமே வரமாய்ப் பெற்று, மன ரோகியாய், பலஹீனனாகிவிட்டதில் ஆச்சர்யம்தான் என்ன?
பலசாலியான குந்தலாம்பாளுக்கு, பலஹீனனான மகன் துரையின் மேல் அனுதாபமும் அக்கரையும்தான் வந்தது.
‘பெற்ற தாயிடமே கற்ற வித்தையையெல்லாம் போட்டுக் காட்டுகிறானே...? தாயரியாச் சூலும்தான் உண்டோ?’
துரையைக் உச்சி முகர்ந்து...;
கையில் ஏந்தி...;
தோளில் தூக்கிச் சுமந்து...;
அணில் அழைத்து...;
நாய் சுட்டி...;
மாடு காட்டி...;

காக்காய்க் கூவி...;
பால் புகட்டி…!
சோறூட்டி...;
கவி பாடி...;
கதை சொல்லி...;
அறிவு புகட்டி...;
கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்தவள் அல்லவா...?
அதே தாய்ப்பாசத்துடன், அவனிடம் உள்ள குறைகளையெல்லாம் தள்ளி வைத்தாள்.
என்ன இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் அல்லவா.
விட்டுக் கொடுத்துவிடமுடியாதே.
******
எல்லா ஏற்பாடுகளையும் தனி ஒருத்தியாகவேச் செய்தாள்.
ஐந்தாறு முறை, வண்டி கட்டிக்கொண்டு திருச்சிக்குப் போனாள்.
தானத்திற்கான சாமான்கள்...
ஹோமங்களுக்கான பொருட்கள்...
ஜவுளிகள்...
மளிகை சாமான்கள்...
.......................................
எடுத்துக் கட்டிக்கொண்டு, ஒன்று விடாமல் எழுதி வைத்துக்கொண்டு வாங்கி வந்தாள்.
******
அப்படியே பொட்டலம் பொட்டலமாகவோ, மூட்டை மூட்டை மூட்டையாகவோ போட்டும் வைக்கவில்லை அவைகளை.
அததற்குறிய, பானைகளில், டின்களில், சம்புடங்களில், டப்பாக்களில், சீசாக்களில், ஜாடிகளில்... வைத்தும், கொட்டியும், போட்டும், அடுக்கியும், ஊற்றியும், மூடிப் பங்கிடாக வைத்தாள்.
பட்ட மிளகாய் போன்ற சில மளிகை ஐட்டங்களை ஓரிரண்டு நாட்கள் முற்றத்தில் உலர்த்தி எடுத்து வைத்தாள்.
ஆவக்காய், எலுமிச்சை, கிடாரங்காய், ஊறுகாய்களை போட்டுக் கல்ஜாடியில் வைத்தாள்.
ரஞ்சனிக்குப் பிடிக்குமே என நார்த்த இலைப் பொடி இடித்து வைத்தாள்.
உயரப் பீங்கான் ஜாடியில் மாவடு போட்டு வேடு கட்டி மூடினாள்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மடியாக வேடு அவிழ்த்து, மாவடுவை கிளரிப் பதம் பார்த்து அழுகி அமுங்குவதை அப்புறப்படுத்தினாள்.
குழந்தை வந்தவுடன் தின்னக் கொடுக்க, மைசூர் பாக்கு வெட்டி வைத்தாள்..
கொஞ்சமாக எண்ணை வைத்து தேன்குழல், முள்ளு தேன்குழல், முறுக்கு எல்லாம் செய்துவைத்தாள்.
மடியில் பலகையைச் சாய்த்துக்கொண்டு கடுகு உருட்டி, கல் நேம்பினாள்.
திருகைக் கல்லில் போட்டுச் சுற்றி உளுந்து உடைத்தாள்.

உடைத்த உளுந்தை உளுந்துச் சல்லடையில் சலித்துக் காயவைத்துப் , பங்கிடு செய்து பானையில் கொட்டி வைத்தாள்.
திருகையில் உடைக்கும்போது, மைய முளையைச் சுற்றிலும் உடையாமலே கிடக்கும் அல்லவா சில உளுந்துகள்.
அதைக் கூர்ந்து பார்த்தாள்.
‘சுற்றிச் சுற்றி வந்து நசுக்க வந்தாலும் எங்களைப்போல உடையாமல் நிற்கவேண்டும் குந்தலாம்பா...!”
அந்த உளுந்துகள் தன்னிடம் சொல்வது போல இருந்தது அவளுக்கு.
******
ஒரு காலத்தில், சாரதம், மாச்சா, சாவித்திரி, விசாலி, சுந்தி, பட்டு, சின்னப்பொண்ணு, ஜானகம், லட்சுமி, அம்மாக்குட்டி, குஞ்சி....... என்று, அக்கம் பக்க வீட்டிலிருந்து, மாமிகள் எல்லோரும் வந்து உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டே நூற்றுக் கணக்கில் அப்பளம் இடுவார்கள் அந்த வீட்டில்.
அதே பட்டகசாலையில், தனி ஒருத்தியாக உட்கார்ந்து, வைதீக காரியங்களுக்குத் தேவையான அளவுக்கு, உளுந்து அப்பளம், அரிசி அப்பளம் இட்டுக் காயவைத்து எடுத்து வைத்தாள்.
திருச்சி கோபால்தாஸ் கடையில், தானத்திற்குத் தங்கமும், வெள்ளியும், வாங்கி வந்தாகிவிட்டது.
தேங்காய் வியாபாரி வரதுக்குட்டி தேவையான அளவுக்குத் தேங்காய் உரித்துக் கொடுத்துவிட்டு, மீதி காய்களை விலைக்கு எடுத்துக்கொண்டு சென்றான்

கூடையில் வரதுக்குட்டி வைத்துவிட்டுப் போன தேங்காய்களில் நார் நீக்கி, அலம்பி சுவற்றோரம் நிமிர்த்தி நேர்த்தியாய் அடுக்கி வைத்தாள்.
வரதுக்குட்டி சீசனல் வியாபாரி.
எந்த வேலை கிடைத்தாலும் தட்டாமல் செய்வான்.
“என்னடா வரதுக்குட்டி எங்கே கண்லயே காண முடியலே...?”
“தேங்காய் ஆஃப் சீசனோன்னோ... அதான் டவுன்ல போயி ரோடுல கடை போட்டு செருப்பு வியாபாரம் பாத்தேன்.”
“டேய் நான் ரெண்டு வாரத்துக்கு முன்னால திருச்சிக்கு வண்டி கட்டிண்டு வந்திருந்தேன். அன்னதான சமாஜம் பக்கத்துல செருப்புக்கடை போட்டுண்டு உக்காந்திருந்தது உன்னைப் போல இருந்துது. அதான் தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்.”
“ஏன் மாமி செருப்பு வியாபாரம் மட்டமா...?”
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய்,பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!
பாரதியின் பாடல் நினைவுக்கு வந்தது.
வரதுக்குட்டியை நினைத்து பெருமைப்பட்டாள்.
“பொய் சொல்லாம, திருடாம, பிச்சை எடுக்காம எந்தத் தொழில் செய்தாலும் அது ஒசத்திதான் வரதுக்குட்டி. வாய்நிறையப் பாராட்டினாள் குந்தலாம்பாள்.

கொல்லைத்தாவாரத்தில் வெந்நீர் அடுப்புக்குச் சற்றுத் தள்ளிக் குத்துக் கல் போட்டு மூடப்பட்ட கோட்டை அடுப்பின்மீது, பெரும்படிச் சமையலுக்காக, மூன்றடி இடைவெளியில் போடப்பட்டிருந்த மண் அடுப்புகளைப் போனது வந்தது பார்த்து, சேறு பூசி, சாணியால் மெழுகிக் கோலம் போட்டாள்.
அடுப்பெறிக்க விறகு, சிராய்த்தூள், இழைப்புச் சுருள்கள், தேங்காய் மட்டை, அடிமட்டை, கூராஞ்சி, சுள்ளி சிப்பிகள், விராட்டிகள் என எல்லாம், கூடை, தட்டுக்கூடை, தரை, மச்சுப்பரண் என அதனதல் இடத்தில் வைத்தாள்.
ஹோமத்திற்காகத், சமித்துகள், தவிடு, உமி, சிராய்த்தூள், இழைப்புச் சுருள், விராட்டி, ஊதுகுழல், சாமணம், விசிறி மட்டை, புரசு இலை எல்லாம் தயாராக கூடையில் போட்டு கூடத்தில் வைத்தாள்.
நவக்ரஹ ஹோமத்திற்கான நவ தான்யங்கள், கலர் கலராய் ரவிக்கைத் துண்டுகள், நெல், அரிசி என அனைத்தும் காமரா உள்ளில் தனியாக இருந்தது.
ஒவ்வொரு முறை திருச்சிக் கோட்டைக்குச் சென்றுச் சாமான் வாங்கும்போதெல்லாம், சில்லரை நாணயங்களாக மாற்றி மாற்றிப் போட்டு வைத்த சம்புடத்தை எடுத்து ஸ்வாமி மேடையில் தட்சிணைக்காக, வைத்தாள்.
வீட்டுக் கொல்லையில் விளைந்த நீலம் மாங்காய்களையும், பூவன், ரஸ்தாலி வாழைத்தார்களையும் கொடாப்புக் கொட்டகையில்,மூட்டம் போட்டு பழுக்கவைக்க ஏற்பாடு செய்தாள்.

நுனியிலை, ஏடு, தொன்னைக்கு என வகை தொகையாக வாழை மட்டைகளை நறுக்கி முற்றத்து ஓரம் வெய்யில் கானலில் போட்டாள்.
சற்றே வதங்கி முடமுடப்பு நீங்கிய பின் ,கிணற்றடியில் போட்டுத் தண்ணீர் ஊற்றி அலம்பி, ஆறவைத்துத் துடைத்து அடுக்கி அழகாய் அரிசிச் சாக்கில் சுற்றி வைத்தாள்.
******
திருச்சி காந்தி மார்க்கெட் சென்றாள்.
பார்த்துப் பார்த்துக் காற்கறிகள் வாங்கி வந்தாள்.
கங்காளத்தில் நிரப்பிய தண்ணீரில் போட்டு சிறிதுநேரம் ஊறவைத்தாள்.
அலம்பித் துடைத்து காற்றோட்டமாக உக்ராண அறையில் தரம் பிரித்துப் போட்டு மெல்லிய வெள்ளை காட்டன் வேட்டித் துணியால் மூடிவைத்தாள்.
வெண்ணெய் காய்ச்சினாள்.
சாப்பாடுக்கு, ஹோமத்துக்கு என தனித்தனிச் சம்புடங்களில் கொட்டி வைத்தாள்.
******
முதல் நாள் மதியமே சமையல் மாமி செண்பகாவும், நளாயினியும் வந்துவிட்டார்கள்.
அவர்கள் இருவருக்கும் சாமான், சஜ்ஜா எல்லாம், எதெது எங்கெங்கு இருக்கிறது என்பதைக் காட்டினாள்.
“நான் இங்கேதான் இருக்கேன். இருந்தாலும் நான் அங்கே இங்கே போன நேரத்துல அவசரமாச் சமாளிக்கணும்னா உங்களுக்கு தெரிஞ்சிருக்கணு மோன்னோ...!” அதான் காட்டினேன்.
விளக்கம் தந்தாள்.
“செரிதான்...” என்றார்கள் இருவரும்.
தன்னுடையது முதல் ரஞ்சனியுடையது வரை எல்லாருடைய துணிகளையும் நனைத்து கூடத்துக் கொடியில் மடி உலர்த்தினாள்.
******
“பணம் காசை வாரி எறைச்சி, ஏகமா இழுத்து விட்டுக்கறியே குந்தலா...?”
கரிசனத்தோடு கேட்டாள் அலமேலு மாமி.
“அவர் சேமிச்சது. அவர் பொருட்டு செலவு செய்யறதுல நாம ஏன் சிக்கனம் பிடிக்கணும்...?”
“அதுவும் சரிதான்...!”
“அவர் கடைசியா தன்னை, அவரோட கோவில் சம்பாக் காணி வழியா தூக்கிண்டு போகணும்னு ஆசைப்பட்டார். அதை நிறைவேத்த முடியலை. இன்னிக்கு இருக்கற துணிச்சல் அன்னிக்கு எனக்கு இல்லாம போயிடுத்து.”
என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், “செரிதான்...” என்றாள் அலமேலு மாமி.
“அன்னிக்கு மட்டும் இப்படி ஒரு துணிச்சல் வந்திருந்தா நான் தனி ஒருத்தியாவே அவரைத்தூக்கி மாட்டு வண்டீல போட்டுண்டு அவர் ஆசைப்பட்ட அந்தக் காணி வழியாவே கொண்டுபோயிக் கொளுத்தியிருப்பேன்...”
“பழசைக் கிளராதே விடு குந்தலா... அதான் நிறைய தானம் தருமம்னு செய்யறியே...”
“கடைசீ ஆசையை நிறைவேத்த முடியாத கையாலாகாத்தனத்துக்கு தானம் தர்மம்ன்னு எவ்வளவுதான் ப்ராயச்சித்தம் செஞ்சாலும் ஈடாகுமா...?”
******
முதல் நாள் மதிய சாப்பாட்டுக்கே குடும்பத்தோடு வந்து சேர்ந்துவிட்டான் துரை.
துரை வந்த சேதிக் கேள்விப்பட்டு, மூணு மணி சுமாருக்குச் சாஸ்திரிகள் வந்தார்.

அவர் வந்தபோது தானத்துக்கான சாமான்களை கூடத்தில் பரத்திப் பார்த்துக்கொண்டிருந்தனர் துரையும், மோகனாவும்.
சாஸ்திரிகளும் எல்லாவற்றையும் பார்த்தார்.
ஒவ்வொன்றையும் கையில் எடுத்து அதன் கனம், தரம் எல்லாவற்றையும் பார்த்தார்.
முகம் பிரசன்னமானது அவருக்கு.
“நன்னா காத்தரமா, ஃபர்ஸ்ட் குவாலிட்டியா, நிறைய செலவு பண்ணி சிரத்தையா வாங்கியிருக்கேள் மாமி...”
மனதாரப் பாராட்டினார் .
******
ஆப்தீகக் காரியங்களைச் சிரத்தையாகச் செய்து முடித்தான் துரை.
ஒரு வழியாகத் தலைத் திவசம் மிக விமரிசையாக முடிந்துவிட்டது.
கோதானம், பூதானம், ஸ்வர்ணதானம்,வஸ்த்ரதானம் எனத் தாராளமாகவேச் செய்ததில் புரோகிதர்களுக்குப் பரம திருப்தி.
பெற்ற மகனைச் சல்லிக் காசு கேட்கவில்லை.
அதனாலேயே துரைராமன் சிரத்தையாக கர்மாக்களைச் செய்தான்.
மாதய்யா அன்போடு வளர்த்த கோதாவரிப் பசுவை விஸ்வாமித்ர கனபாடிகளுக்கு தானமாகக் கொடுத்தார்கள்.

வடக்கு நோக்கி பசுமாட்டின் வாலை அவர் கையில் கொடுத்து தீர்த்தம் விட்டு கோதானம் செய்தான் துரைராமன்.
******
“மாதய்யா மூச்சுக்கு மூச்சு கோதாவரிப் பசுப் பத்திப் பேசுவார். ‘கண்ணுக்குக் கண்ணாய்’ அவர் வளர்த்த பசுவாச்சே அது.!”
கனபாடிகள் நினைவு கூர்ந்தார்.
போனவாளுக்கு எது ரொம்ப இஷ்டமோ அதை தானம் செய்யறதுதானே ஸ்ரேஷ்டம்...”
என்றாள் குந்தலாம்பாள்.
எல்லாம் முடிந்தபின்னர், தம்பதியர்கள் குனிந்து அங்க வஸ்திரத்தை விரித்துப் பிடித்து ஏந்தியபடி, தலை வணங்கி ஆசி பெற்றார்கள்.

பஞ்சாதி சொல்லி, அட்சதை போட்டு, ஆசீர்வதித்து, ததாஸ்து சொன்னார்கள் புரோகிதர்கள்.
******
வருஷத் திவசத்தை முன்னிட்டு அந்தனூர் வந்த துரை, எதிலும் பட்டுக்கொள்ளவில்லை.
விலகியே இருந்தான்.
வைதீக காரியங்களை சாஸ்திரிகள் சொன்னபடி செய்தான்.
காரியம் முடிந்ததும், சமையல் மாமி பங்கஜா போடும் சாப்பாட்டைச் சாப்பிட்டான்.
சாப்பிட்ட இலை எடுத்து, இடம் துடைப்பதற்குள் கிட்டாவய்யா வீட்டுக்குச் சென்றுவிடுவான்.
ராத்திரி பலகாரத்துக்குத்தான் திரும்புவான்.
காணி, தோப்புகளுக்கெல்லாம் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லை.
வயல் வரப்பெல்லாம் எப்படி இருக்கு? வெவசாயம் எப்படிப் போறது? கண்டுமுதல் என்ன?-
எதுவும் கேட்கவும் இல்லை அம்மாவிடம்.
அவ்வளவு ஏன்... கொல்லைக்கட்டுக்குச் சென்று இருக்கிற ரெண்டே உருப்படிகளான வீரன் காளையும், கோதாவரிப்பசுவும் கூட எப்படி இருக்கிறது என்று பார்த்ததில்லை அவன்.
குந்தலாம்பாளும் அவனிடம் எதுவும் சொல்லவில்லை.
******
“தொரை... வா...!”
அழைத்தார் கிட்டாவய்யா
“ம்...”
இன்னிக்குக் காரியம் நல்லபடியா ஆச்சா...?”
“ஆச்சு மாமா..!”
சிறிது நேரம் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தார் கிட்டாவய்யா.
துரைராமனும் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.
“நான் சொன்னதை யோசிச்சியோ...?”
கிட்டாவய்யா துரையின் முன் கேள்வியைத் தூக்கிப் போட்டார்.
“யோசனைப் பண்ணினேன் மாமா. ரொம்ப மலைப்பாப் படறது..”
“துணிஞ்சவனுக்கு துக்கம் இல்லைனு சொல்லுவா... துணிஞ்சி இறங்கினாத்தான் எதுலயும் ஜெயிக்க முடியும்.”
‘பிறருக்கு நல்லது செய்வது என்பதே தன் அகராதியில் இல்லாத கிட்டாவய்யா உசுப்பேற்றிவிடுகிறார். நிச்சயமாக இது குடி கெடுக்கும் செயல் ..’ என்பதை அறியவில்லை துரை.
சாத்தான் பாம்பின் உடம்பில் புகுந்துகொண்டு ஏவாளிடம் பேசிய பேச்சைப் போல அவ்வளவு அலங்காரமாகப் பேசினார் கிட்டாவய்யா.
பாம்பு வடிவில் பேசுவது சாத்தான் என்பதை அறியாமல், அந்தப் பேச்சின் சாரத்தை மீண்டும் மீண்டும் யோசித்த ஏவாள் புத்தி மழுங்கி... ‘ஈடன் தோட்டத்தில், ஆண்டவனால் தடை செய்யப்பட்ட அந்தப் பழத்தைச் சுவைத்தால்தான் என்ன...?’ என்ற முடிவுக்கு வந்ததைப்போல் ஒரு தவறான முடிவுக்கு வந்தான் துரை.
மீண்டும் மீண்டும் கிட்டாவய்யா சொன்னதையே, யோசித்தான்.
‘செய்துதான் பார்ப்போமே...!’
துணிந்தது அவன் மனசு.
******
கிட்டாவய்யா எப்படியெல்லாம் துரையின் மனசைக் கலைக்கிறார் என்பது அரசல் புரசலாகத் தெரிந்திருந்தது குந்தலாம்பாளுக்கு.
துரையிடம் அதைப் பற்றிக் கேட்கவுமில்லை. வேறு யாரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணமும் அவளுக்கில்லை.
சமயத்தில் தம்பி சுப்பாமணியிடம், எதையாவது பகிர்ந்து கொள்வாள்.
‘அந்தரங்கத்தையும், ஆதங்கத்தையும் பகிர்ந்து கொள்ளுகிற மாதிரியா இருக்கிறான் துரை. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்...!’
மனதைத் தேற்றிக்கொண்டாள்.
என்னதான் பாராமுகமாய் இருந்தாலும், பெற்ற மகனாயிற்றே துரை.
ஒரு தாயாய் அவன் மேல் கரிசனம் இருக்கும்தானே..?
‘பகவானே... நீதான் என் மகனை அந்த அசுரன் கிட்டாவய்யாகிட்டேருந்து காப்பாத்தணும்...’
ஆண்டவனை வேண்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை குந்தலாம்பாளுக்கு.
மனசு முழுவதும் என்னென்னவோ எண்ணங்கள் வந்து அலைக்கழித்தது குந்தலாம்பாளை.
******
‘ஒரு வீம்புல சொத்து பத்தெல்லாம் கட்டிக்காத்துண்டு, ஊர்ல தலை நிமிர்ந்து நடக்கறதாப் பாவ்லாப் பண்ணிண்டு இருந்தாலும், உடம்பு நாளுக்கு நாள் தளர்ந்துதான் போறது. தெம்பு குறையறது.’
எதிர்மறை எண்ணம் வந்தது.
‘நமக்குப் பிறகு இந்த நிலம் நீச்செல்லாம் என்னாகும்...?’
அர்த்தமற்ற கேள்வி மனசைப் பிசைந்தது.
‘தொரையே மனசு மாறி கிராமத்தோட இருந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டாலும் இந்தா கிட்டா அவனை வாழவிடுவானா... சந்தீலன்னா நிறுத்திடுவான்...!’
ஞாயமான சந்தேகம் உதித்தது.
நில - புலம், வீடு - வாசல், தோப்பு – தொரவு, மாடு – கன்னு எல்லாத்தையும் வித்துட்டு பட்டணத்தோட போயி இவனோட கௌரதையா இருந்துடமுடியுமா...?”
அவநம்பிக்கை உதித்தது.
******
“ஏம்மா! சொல்றேனேனு வருத்தப்படாதீங்க. பெத்த தாய் இங்கே ஒண்டிக்கட்டையா நின்னு அய்யா பாத்த நிர்வாகத்தையெல்லாம் பாத்துக்கிட்டிருக்கீங்க. உங்களுக்கு விவரமா ஒரு தபால் போடக்காணோம். அந்த கிட்டாவய்யாவுக்கு வாரம் தவறாம இன்லெண்டு தபால் எழுதறானே உங்க மகன்...”
தபால்காரன் ஒரு முறை சொன்னபோது குறுகித்தான் போனாள் குந்தலாம்பாள்.
‘ஒரு இடத்தில் பாடுபட்டு, அதில் பயனடைந்துப் பழகிய ஆசாமி, அதை விட்டு நிரந்தரமாகக் கிளம்புவதென்றால் மனசு வராதுதான், மனக் கிலேசம்தான், சிரமம்தான், கொடுமைதான் அது.
அதே சமயம், அப்படி நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் மனிதன் என்னதான் செய்ய முடியும்.?’
‘ஆண்டவன் விட்ட வழி...’, ‘நடப்பது நடந்தே தீரும்...’ என்ற வேதாந்தங்களுக்குள் தன்னை முழுவதுமாய் புதைத்துக்கொண்டாள் குந்தலாம்பாள்.
******
பட்டணத்துக்கு ரயிலேற்றிவிடக் கலியன் வண்டியைப் பூட்டித் தயாராக வாசலில் நிறுத்தினான்.
திண்ணையிலிருநது, பிரயாணப் பைகளை கொண்டு போய் வண்டியில் வைத்தான்.
“அத்தை, எங்க கூட பட்ணம் வந்துடுங்களேன்... இங்கே எதுக்கு நீங்க தனியா இருக்கணும்...?”
வந்தது முதல் நூற்றுக்கணக்கான முறை கேட்டுவிட்ட மருமகள் மோகனா இப்போது கிளம்பும் போதும் கேட்டுவிட்டாள்.
வரவே மாட்டேன். என்று வைராக்யமாக இருப்பவர்களை “வா... வா...” என்று வற்புறுத்துவதுதானே இயற்கை.
“பாட்டி எங்ககூட பட்டணம் வந்துடேன்...”
கொஞ்சல் குரலில் விண்ணப்பம் வைத்தாள் பேத்தி ரஞ்சனி.
“வரேன்...! வராம எங்கே போப்போறேன்...!”
வழக்கமான பதிலைச் சொல்லியபடியே ரஞ்சனியின் கன்னத்தை வழித்த விரல்களைக் குவித்து உதட்டில் வைத்து முத்தமிட்டாள்.
“சரிம்மா...!” என்றான் துரைராமன்.
சரிம்மா என்ற ஒரு வார்த்தையில், “நேரமாயிடுத்து, இப்படியே பேசிண்டிருத்தா வண்டியைப் பிடிக்க முடியாது. நாங்க புறப்படறோம்...” என்ற பொருள் பொதிந்திருந்தது வெளிப்படையாகவேத் தெரிந்தது குந்தலாம்பாளுக்கு.
“சரி, போயிட்டு வாங்கோ...!”
விடை கொடுத்தாள் குந்தலாம்பாள்.
கிளம்பி வண்டியை நோக்கி இரண்டடி வைத்தான்.
எதையோ மறந்தவன்போல் சட்டெனத் திரும்பி ஒரு அடி அம்மாவை நோக்கி வந்தான்.
******
“எதையாவது எடுத்துக்க விட்டுட்டியா தொரை...?”
குந்தலாம்பாள் கேட்டாள்..
“ஊம்ஹூம்...!”
“... ... ... ... ... ... ... ... ...”
“உன்னண்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.”
“... ... ... ... ... ... ... ... ...”
‘என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி குந்தலாம்பாளின் கண்களில் தேங்கியிருந்தது.
“அடுத்த வாரம் நான் இங்கே வருவேன்மா...!”
“... ... ... ... ... ... ... ... ...”
குந்தலாம்பாளின் முகக்குறிகளில் அப்பட்டமாய் அப்பியிருந்தது அதிர்ச்சி..
‘அடுத்த வாரம் இவனுக்கு இங்கே என்ன வேலை...?’ மனசுக்குள் கேள்வி எழுந்தது.
“என்ன விசேஷம்...னு?”
மனதில் உள்ளது வாயில் வந்து விட்டது.
“விசேஷம்னாதான் வரணுமா...?
சாதாரணமா வரக்கூடாதா...?”
“அதுக்கில்லேடா தொரை. வீண் அலைச்சல், செலவு, பெண்டாட்டி பிள்ளையை விட்டுட்டு வரணுமேன்னு நீதானே அடிக்கடி அலுத்துப்பே... அதான் கேட்டேன்.”
“... ... ... ... ... ... ... ... ...”
பதில் ஏதும் சொல்லவில்லை அவன்.
குந்தலாம்பாளேத் தொடர்ந்தாள் – “ அடுத்த வாரம் வர்றதென்ன... ஒரு வாராத்துக்கு ஃபோன் பண்ணி ஆபீசுக்கு லீவு சொல்லு. இங்கேயே இருந்துட்டுப் போயேன். நானும் ‘கொட்டுக் கொட்டுன்னு’ தனியா இருக்கறதுக்கு எல்லாரோடையும் ஒரு வாரப் பொழுது போகுமே...!”
“ஒரு முறைக்கு ரெண்டு முறை வந்து போற அலுப்புப் பாத்தா ஆகுமா...! அதுவும் தவிர ரஞ்சனிக்கு பள்ளிக்கூடம் போகணுமே... ஏற்கெனவே பத்து பன்னென்டு நாள் லீவு போட்டாச்சுவேற.”
“சரி.. உன்னிஷ்டம்...”
“நான் வர்றது எதுக்குத் தெரியுமோ...?”
“சொன்னாத்தானே தெரியும்...”
“அம்மா...!; அப்பா பண்ணினது பெரிய தப்பு... நிலங்களையெல்லாம், குத்தகைக்கு எழுதிக் கொடுத்திருக்கவேக் கூடாது...”
குந்தலாம்பாளுக்கு விவரம் புரிந்துவிட்டது. துரையிடம் போட்டு வாங்கத் தீர்மானித்தாள்.
“கலியன்தான் சரியா அளக்கறானேடா...”
“பொழுது போக்குக்காகவும், வெட்டி ஜம்பத்துக்காகவும் குத்தகைக்கு விட்டவயலுக்குப் போயி நின்னுட்டு வந்தாப் பணம் காசு சேருமா...?
“... ... ... ... ... ... ... ... ...”
இப்படி பேருக்கு விவசாயம் செய்யறதெல்லாம் கவைக்காகாதும்மா... நான் ஒரு பெரிய திட்டம் வெச்சிருக்கேன்... அது சம்பந்தமாப் பேசத்தான் அடுத்தவாரம் வரலாம்னு...”
“அப்படி என்னடா தொரை திட்டம்...? சொல்லேன் நானும் தெரிஞ்சிக்கறேன்...”
“நேரம் வரும்போது சொல்றேன்...”
“என்ன செய்யப்போறேன்னு சொன்னா, நான் அதுக்கு ஒத்தாசை பண்ணலாமேனு கேட்டேன்.”
“ சொல்றதப் பத்தி இல்லை. நான் சொன்ன உடனே அதெல்லாம் வேண்டாம்னு அஸ்து பாடப்படாது. இந்த கண்டிஷனுக்கு ஒத்துண்டா சொல்றேன்.”
“சரி, அஸ்து பாடலை. சொல்லு.”
“சொல்றேன் , குறுக்கே பேசாம கேட்டுக்கோ . மொதல்ல நான் கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்லு.
“ம்... கேளு எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.
சம்பா நட்டு ; மூணு மாசம் காத்திருந்து ; உழவு, உரம், பூச்சி மருந்து, கூலி ன்னு செலவழித்து கண்டுமுதல் எடுக்கறே. என்ன மிச்சப்படறது சொல்லு ?
“... ... ... ... ... ... ... ... ...”
“அம்மா, என் யோசனைப்படிச் செஞ்சா...?”
பேச்சாளர் கேட்பாளரின் முகக்குறிப்பைப் பார்த்தபின் பேசுவதுபோல, அம்மாவைப் பார்த்தான்.
“டோக்கு டோக்குன்னு வள்ளிசா பணம் புரளும்மா... பணம் புரளும்...”
“... ... ... ... ... ... ... ... ...”
குந்தலாம்பாள் எதுவும் பேசவில்லை.
“புள்ளைக்கு வயல் வரப்பு மேல அக்கரையில்லை. ஏதோ மெட்ராஸ்ல ஒக்காந்து பொறுக்கறது’ன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாளோன்னோ... அதுக்கு பதில் சொல்றேன் கேட்டுக்கோ...”
“நாங்க மூளைய செலவு பண்றோம்மா. எதை, எங்கே, எப்படிச் செஞ்சாப் பணம் கொழிக்கும்னு, யோசிக்கறோம்.,
“ஒண்ணு போட்டா பத்து எடுக்கணும், அந்தப் பத்தையும் போட்டு நூறு எடுக்கணும். அதுதான்மா புத்திசாலித்தனம்.”
‘அவனாகப் பேசவில்லை.
அவன் உள்ளே கிட்டாவய்யா புகுந்து கொண்டு பேசுகிறார் என்பது நமக்கேத் தெரியும்போது குந்தலாம்பாளுக்குத் தெரியாதா என்ன?
இருந்தாலும் எப்படியோத் தன் மகனுக்கு இந்த ஊர் மண்ணைப் புரட்டிப் போடும் எண்ணம் வந்ததற்காக சந்தோஷமேப் பட்டாள் அவள்.
“என்னம்மா எதுவும் பேசாம இருக்கே..?”
“ விரலுக்குத் தக்கபடிதான் வீங்கணும். பேராசைப் பெருநஷ்டம்னு சொல்லுவா. எவ்வளவுதான் எண்ணையத் தடவிண்டு உருண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும்...”
“அம்மா... நான் சொல்றேனேனு தப்பா நினைக்காதே. நீ வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்கறதால உனக்கு உலகம் தெரியலை. அதான் கிணத்துத் தவளையாட்டம் வேதாந்தம் பேசறே.”
“டேய்... உங்கப்பா என்னை உலகம் தெரியாம வெச்சிருக்கலை. வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதே தொரை. மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு...”
“சரி பேசலை. ஒண்ணு மட்டும் தீர்மானமாச் சொல்றேன். காசுதான் உலகம். நாலு காசு இல்லேன்னா நாய் கூட மதிக்காது. துட்டு சம்பாதிக்க நான் போட்ட திட்டத்தை அடுத்த வாரம் வந்து சொல்றேன். இப்போ ரயிலுக்குநாழியாச்சு...”

அவசரமாக ரயிலுக்குக் கிளம்பினான் துரை.
தொடரும்...
-வரதராஜன் A, @ ஜூனியர்தேஜ்,
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.