வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சித்திரை வருஷப்பிறப்பு.
ஸ்ரீராம பஜனைமடத்தில் பஞ்சாங்கபடனம் வெகு சிறப்பாக முடிந்தது.
"பஞ்சாங்க படன பலன் என்ன மாமா?"
கிண்டலாகக் கேட்டான் மகேஷ்.
"பலாச்சுளை...!" என்றார் சுந்தர பாகவதர்.
பஞ்சாங்கம் வாசித்தக் காஸ்யப கனபாடிகள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
*** *** *** -
பரிஹாசமாப் பேசினது, சிரிச்சதெல்லாம் போறும். யதார்த்தத்தை உள்ளபடி தெரிஞ்சிக்கணும் மகேஷ்.”
“சொல்லுங்கோ மாமா தெரிஞ்சிக்கறேன்.”
பஞ்சாங்கத்தின் முக்கியத்துவத்தை முதலில் சொன்னார்.
பஞ்சாங்க படனத்தின் பலாபலன்களை விளக்கமாக சொன்னார் கனபாடிகள்.
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு, வருடம் எப்படியெப்படிப் போகும்...;
லாபமா, நட்டமா, சமமா;
அதாவது வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்குமா...?
இப்படியாகத் தொடர்ந்தது படனம்.
ஆஸ்திகர்கள் ரசனையோடு ஸ்ரவணம் செய்தார்கள்.
தங்கள் ராசி, குடும்பத்தினர் ராசிக்கானப் பலனை மனதில் வாங்கிக் ‘லாப-நட்ட-சமக்’ கணக்குப் போட்டார்கள்.
“ஆஹா...!”
“அடடே...!”
“ஹா...!”
“ஓஹோ...ஹொ... ...!”
வியப்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி ரசித்தார்கள்.
மகேஷ் போன்றோர் கதைப் போலக் காதில் வாங்கினார்கள்.
“தேசத்தின் கால நேரம், மழையளவு, விளைச்சல், பஞ்சம், வெயிலின் வீர்யம்... சூர்ய, சந்த்ர கிருஹணங்கள், இப்படி எத்தனையோ விஷயங்களை ஆராய்ச்சிப் பண்ணி, விஞ்ஞான ரீதியாச் சொல்ல ஒரு டிபார்ட்மெண்டே இருக்கு இங்கே... அப்படித்தானே, மகேஷ்...?”
“ம்...!”
“டாக்ட்ரேட்’ பண்ணின நிபுணாள் ராப்பகலா, ஆராய்ச்சிப் பண்ணி, அப்பப்போ விஞ்ஞானப் பூர்வமாச் சொல்றதுதான் அவா வேலை....?”
“சரியாச் சொன்னேள்...!”
“ஒண்ணு யோசிச்சுப்பாரு...”
“... ... ... ... ... ... ... ... ...”
சின்னதாய் ஒரு இடைவெளி விட்டார்.
மகேஷ் காதைத் தீட்டிக்கொண்டான்.
“வருஷம் பொறந்த மொத நாளே, நாம எல்லாத்தையும் தெரிஞ்சிக்கற அளவுக்குத் துல்லியமா கணிச்சுடறாளே பஞ்சாங்கம் கணிக்கறவா, அது எப்படி?”
“... ... ... ... ... ... ... ... ...”
“நக்ஷத்ரம், ராசி, அதி தேவதை, ப்ரத்யதி தேவதை... இதையெல்லாம் விடு. ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லு.”
“... ... ... ... ... ... ... ... ...”
'இந்த நாள்ல, இத்தனை மணிக்குக் கிரகணம் பிடிக்கும்;
இத்தனை நாழிகை நீடிக்கும்;
இத்தனை மணிக்கு விடும்’னு கணிச்சபடி, இம்மி பிசகாமல் நடக்கறதோன்னோ..!
நீயேப் பாத்துருக்கயோன்னோ...!
மகேஷ் ஆழ்ந்து யோசித்தான்.
*** *** *** -
கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு முன், பஞ்சாங்கக் கணிப்பின்படி, மழையேப் பெய்யாமல், ஏரி,குளம்,குட்டை,கிணறு எல்லாம் வரண்டு, விவசாயம் பொய்த்துப், பசியும் பஞ்சமும் பட்டிணிச் சாவுமாய் ஊர் உலகமேப் பட்டப் பாடு, அவள் கண்முன்னே நிழலாடியது.
இந்த வருஷம் பொழியப்போகிறக் கடுமையான மழை வெள்ளத்தைப் பற்றிக் கனபாடிகள் சொன்னது குந்தலாம்பாளின் மனத்தில் அழுத்தமாய் உறுத்திக்கொண்டே இருந்தது.
‘அன்றுப் பெய்யாமல் பழி வாங்கிய வானம், இடி மின்னலுடன் பேய் மழையாய்ப் பெய்து பழிவாங்குமோ..?
நினைக்கும்போதேப் பயத்தில் படபடத்தது.
உடம்புப் தூக்கிப் போட்டது குந்தலாம்பாளுக்கு.
*** *** *** -
மாதய்யா இருந்தவரை, நஞ்சைக் கொல்லையில் வருஷத்துக்கு இரண்டு பாட்டம் கொத்து நடக்கும்.
கொத்தாட்கள் பளாரென்றுக் காலை ஆறு மணிக்கெல்லாம் மண்ணில் மண்வெட்டியை பாய்ச்சிவிடுவார்கள்.
தலையில் முண்டாசுடன், வரிசையாகக் கொல்லை அகலத்துக்கு இருபது இருபத்திரெண்டு ஆட்கள், சீராய்ப் பரவி நிற்பார்கள்;
மண்வெட்டியை ஒரு போலத் தூக்கிச் ‘ச்சொத்...ச்சொத்...” எனப் போடுவது, ஏகத் தாளகதியில் சீராய் ஒலிக்கும்.
பாளம் பாளமாய்ச் செக்குப் புண்ணாக்குப் பத்தையைப் போல, மண்வெட்டி இலையில் தங்கிய மண்ணைப் புரட்டிப் போடுவதே கண் கொள்ளாக் காட்சி..
துப்பாக்கியை ஒன்றுப் போலத் தூக்கி இறக்கும், ராணுவ அணுவகுப்பை ஒத்திருக்கும் அந்தக் கொத்தல்.

‘பொசபொச’வெனப் பசுமையாய் வளர்ந்து நிற்கும் புற்களும் பூண்டுகளும் புரண்டுப் பூமிக்குள் போகும்.
வெட்டுவாய்த் தழும்போடு, புரண்டு கிடக்கும் மெழுகுப் பதமான நிலத்துண்டு, வானம் பார்த்து மினுக்கும்.
முன் கொல்லைத் தொடங்கிப் பின் கொல்லைக்குக் கொத்து நகரும்.
காலங்காலமாக இப்படிக் கொத்திக் கொத்திப் பிரட்டிப் பிரட்டித்தான், முன் கொல்லைத் தூக்கலாயும், பின் கொல்லைத் தாழ்ந்தும், ஏற்ற-நீர்ப் பாசனத்துக்கு வாட்டமாகக் கிடக்கிறது புஞ்சை.
முன் கொல்லைக் கிணற்றில் ஏற்றம் இறைத்துக் கொட்டினால், பத்துப் பதினைந்துச் சால் தண்ணீர்க் கவிழும் முன் எல்லை நனைந்துவிடும்.
நாளுக்கு இரண்டுப் பாத்தி முறை.
ஐந்து நாளுக்குப் பத்துப் பாத்திகள் வாட்டமாய்க் கிடக்கும்.
மாதய்யாக் காலமான ஒண்றரை வருடங்களாய் நஞ்சை அளவுக்கு புஞ்சையைப் கவனிக்கவில்லை.
மாதய்யாப்போல் எட்டுக்கண் விட்டெறிய எல்லோராலும் முடியுமா என்ன...?
அருகம்புல், அம்மான் பச்சரிசி, தும்பை, மூக்கரட்டை, விசுவாமித்திரைப் புல், காஞ்சான் கோரை, நாயுருவி, துத்தி, ..............
புல்லும் பூண்டும் செடியும் கொடியும் வளர்ந்து, முதிர்ந்து, பூத்துத், காய்த்துப், பழுத்துக், காய்ந்து, வெடித்து, விதை வீசி, வம்சம் பல்கிப் பெருகிக் கால் வைத்துச் செல்ல இடமில்லாது காடாய் வளர்ந்துவிட்டது.
*** *** *** -
“கலியா...!”
“சொல்லுங்க அய்யாம்மா...!”
“கொல்லைக் கொத்தி வருஷம் ஒண்ணரை ஆச்சு. கொத்திட்டாத் தேவலை...”
“சரிம்மா...”
“கொத்துக்கு முன்னால, காய்ப்பு நின்னத் தென்ன மரம் சிலது இருக்கல்ல, அதை வெட்டி, விறகு பொளந்துரலாம்.”
“... ... ... ... ... ... ... ...”
“பூவரசு, தேக்கு, வேம்பு, மா, பலா, நாவல்............, எல்லா மரமும் ஓங்குத் தாங்கா உயர்ந்துக், கப்புங் கிளையுமாப் பரவித் தழைஞ்சி இருளோனு கிடக்குதே கொல்லை. கழிச்சாத்தானே வெய்யில் உள்ற வரும்.. பாட்டையன் ஊர்ல இருக்கானா...?”
“இருக்கான்...................”
இழுத்தான் கலியன்,.
“என்ன இழுவை... தயங்காமச் சொல்லு, கலியா..”
“தென்ன மரத்துக்கு நல்ல கிராக்கியிருக்கும்மா. வித்துரலாமே....!”
“விக்கெவேணாம் கலியா...! வெறகுதான் பிளக்கணும். வரச்சொல்லு பாட்டையனை...!”
“... ... ... ... ... ... ... ...”
*** *** *** -
வெட்ட வேண்டிய மரங்களை வெட்டியாயிற்று.
கழிக்கவேண்டிய மரங்களைக் கழித்து, அடுப்பெறிக்க வசதியாகத் துண்டாடியாயிற்று.
விறகு பிளந்தாயிற்று.
ஒரு வாரம் பத்து நாட்கள், வெய்யிலில் கிடந்தன.
சுக்காய்க் காய்ந்தன.
அல்லூர் சடையன் வந்தான்.
அடைசல்களாய் இருந்தப் பொய்ப் பாளை, கூராஞ்சி, பண்ணாடைகளை அறுத்தெடுத்தான்.
பாளம்பாளமாய் வீசிய மட்டைகளின் அடி ஓலைகளை கொத்தாய் இழுத்து நீக்கினான்.
அறுபத்து மூவருக்கும் அபிஷேகமாகி, புது வஸ்த்ர அலங்காரத்துடன் நின்று பக்தர்களை ஈர்ப்பதுபோல,
தென்னை மரங்கள் அனைத்தும் துடைத்து வைத்தாற்போல பளிச்சென நின்றன.
“வைகாசி வெட்டுக்கு ரெண்டு சுமை ஏத்தமா வுளும்.” ஆரூடமும் சொல்லிப் போனான் சடையன்.
மூங்கில் கொத்துக்கள் ‘சீத்துபோத்தாய்’ மதாளித்திருந்தன.
ஆணி ஆணியாய், அலகு ஊசியாய் முறுக்காய்ப் புடைத்த முள்ளுடன் பரவி நின்ற கொத்துக்களில் லாகவமாய் முள் அறுத்தான் செல்லதுரை.
கயிராய்க் தரையில் கிடத்தியப் படர்ந்த இள முள்ளை வாங்கி, இறுகக் கட்டி நேர்த்தியாய் அடுக்கினான்.
இலை வதங்கி உதிர ஒரு வாரம் கிடந்தபின் படல் போட்டனர் மாணிக்கமும், மருதையும்.
கிளுவை, கிளேரியா, ஆமணக்கு, உதியம் போத்துக்களை உயிர் வேலிக்கால்களாய் நட்டான் வீரமுத்துவும், தங்கையனும்.
தேவையான பாளைகளைக் கிழித்தான் பரமசிவம்.
பூர்வாங்க வேலைகள் எல்லாம் ஆனதும், படல் அணைத்து, வரிச்சி வைத்து, எதிர் வசத்தான், கவைக்குச்சியால் நெறுக்கித்தரப், பாளைத் திருகி இறுக்கி, வேலிக்கட்டை நேர்த்தியாக முடித்துக் கொடுத்தது பஞ்சவர்ணம் கோஷ்டி.
*** *** *** -
அனைத்துத் தென்னை மட்டைகளையும் அள்ளிப்போய்ச் சமுதாயக் குட்டையில் அமுக்கிப் பாறாங்கல் வைத்து ஊறப்போட்டு எடுத்துக், கீற்று முடைந்தார்கள் பஞ்சவர்ணம் குடும்பத்தார்.

அவ்வப்போதுச் சொருகுக் கீத்து மட்டும் வைத்துச் சமாளித்துக் கொண்டேக் கிடந்தப் பின்-கட்டுச் சார்ப்பு இந்த ஒண்ணரை வருடங்களில் சுத்தமாக மடித்துக் கொட்டிவிட்டது.
முழுசாகப் பிரித்துவிட்டுப் புது மூங்கில் மாற்றிப் புதிதாகக் கூரை வேய்ந்தான் பந்தல் சரவணன்.
புதுக் கொட்டகையில் புதிதாய் முளையடித்துப் பரண் கட்டினான்.
அடிமட்டை, கூராஞ்சி, பாளை, பன்னாடை, விறகுகள், சுள்ளிகள், உறிமட்டைகள், கொட்டாங்கச்சிகள் என எரிபொருட்களை வகைத்தொகையாகப் பிரித்துப் பாங்காக அடுக்கி வைத்தாயிற்று.
*** *** *** -
“உங்க ஒருத்தருக்கு இவ்ளோ எதுக்கும்மா...?”
கலியன் கேட்டான் இயல்பாக.
“இந்த வருஷம் மழையோனு கொட்டப்போவுதுன்னு பண்டிதர் பஞ்சாங்கம் படிச்சாரு.
அடுப்பெறிக்க விறகுத் தேடி அலையுற நாலு பேருக்குக் உபயோகமாகுமே...!”
‘... ... ... ... ... ... ... ...’
‘மாதய்யாவைத் தாண்டித் தயாள குணமிருக்கே…!’
கலியன் வியந்து நின்றான்.
முள்ளறுப்பு, கிளைக் கழிப்பு, மரம் வெட்டு, விறகுப் பிளப்பு, ஓடு மாற்று, பாளைக் கிழி, வேலிக் கட்டு...
மேல் வேலைகளெல்லாம் முடித்தன.
கொத்து கோஷ்டி, வேலை தொடங்கித் தொடர்ந்தார்கள்.
கொத்தி வாங்கிப், பாத்தியை முறையாகக் கிழித்தாயிற்று.
மாதையாவின் கொல்லைக்கே உரிய கம்பீரம் வந்துவிட்டது.
மழைக் காலம் நெருங்கும் முன் எதற்கும் இருக்கட்டும் என்று நான்கைந்து கலம் நெல் புழுக்கிக் காயவைத்து, அறைத்துப் புடைத்துப் பீப்பாயில் கொட்டி வைத்தாள் குந்தலாம்பாள்.
“... ... ... ... ... ... ... ...”
*** *** *** -
‘பிரளயம் என்பது இதுதானோ...?’

‘கலி முற்றிவிட்டது, கலி முற்றிவிட்டது என்றுப் பரவலாகச் சொல்லப்படும் கலி, முற்றிப் பழுத்துக் கனிந்து வெடித்துச் சிதறுகிறதோ?’
இடிச் சத்தம் காது கிழிகிறது.
வானத்தில் கிளைகள் விரித்ததைப் போலப் பளிச்சிடும் அழுத்தமான மின்னல், கண்களைக் குருடாக்குகிறது.
வாரக்கணக்கில், ஓயாத அடை மழை.
“உய்... உய்ய்ய்...!”
சுழன்றடிக்கும் காற்றில் காளியாட்டமாய் மரங்கள்.
பூமி, சூரியனைக் கண்டுப் பல நாட்களாகிவிட்டது.
ஈரத்துணிகளின் துர்நாற்றம் எங்கெங்கும்.
பகல் முழுதும் கையெழுத்து மறையும் நேரமாகவேக் கடந்தது.
‘வெள்ளை இருட்டைப் பார்ப்போமா…!?’
எதிர்பார்ப்பிலும் ஏக்கத்திலும் மக்கள்.
தவிட்டுத் தூற்றல்...;
மித மழை...;
கன மழை...;
இடி, மின்னலுடன் மிகக் கன மழை...;
அடை மழை...;
காற்று...;
சூரைக் காற்று...;
புயல்....
மாறி மாறி … பாட்டம் பாட்டமாய்...
மரங்கள், பயிர்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள்...
எல்லாரும், எல்லாமும் பட்டன வதை.
மரங்களை வேரோடுச் சாய்த்தது.
வீடுகளை இடித்துத் தள்ளியது.
தண்ணீர்...! தண்ணீர்...! தண்ணீர்...!

எங்கெங்கும் தண்ணீர்...!
காடு மேடெல்லாம் வெள்ளக்காடு.
*** *** *** -
“கம்பரசம் பேட்டைத் தாண்டி வாட்டர் ஹவுஸ்க்கும் , குடமுருட்டி ஆத்துக்கும் நடுப்புற காவிரியாறு உடைச்சிக்கிட்டுதாம்...”
வைரலாய்ப் பரவியதுச் செய்தி.
உண்மையா, வதந்தியா எனத் தெரியவில்லை.
"அதையெல்லாம் யாரும் யோசிக்கவுமில்லை.
எந்தச் செய்திக்கும் ‘டக்’ கென்று எதிர்வினைப் புரிந்தார்கள்.
"அய்யோயோ...!"
“ஆண்டவா... இதென்னச் சோதனை...!”
“அனத்தக் காலம் வந்துருச்சே...!”
"அழிவுக் காலம் தொடங்கிருச்சே ...! "
புலம்பினார்கள்...!
முணுமுணுத்தார்கள்...!
கேவினார்கள்...!
அழுதார்கள்...!
தொழுதார்கள்...!
படபடப்பாய் இருந்தார்கள்.
பரபரப்பாய் ஓடினார்கள்.
ஆத்திரப்பட்டார்கள்.
சண்டைப் போட்டார்கள்.
சமாதானம் ஆனார்கள்.
வரட்டு வேதாந்தம் பேசினார்கள்.
மரண பயம் அப்பட்டமாய்ப் பலர் முகத்தில்.
உயிருக்காய்ப் பரிதவித்தார்கள்.
"காவிரியாத்து உடைப்பால... மல்லாச்சிபுரம் மொத்தமா முளுகிருச்சாம்...! "
"அய்யோ கடவுளே...!”
“அப்பக் கம்பரசம்பேட்டை...?"
கூட்டாய் புலம்பினார்கள்.
கும்பல் கும்பலாய்க் குமுறினார்கள்.
படித்தவர்கள் சான்றிதழ்களோடும், அவசியத் தேவைகளோடும் முகாமில் அகதிகளானார்கள்.
"பாதி முளுகிடுச்சாம் கம்பரசம்பேட்டை.!"
"ஒளிஞ்சிது போ. அநத்தம்தான்....! "
“உறையூரைக் காப்பாத்திக்க கோணக்கரையை இடிச்சிட்டாங்களாம். திருச்சி டவுனுக்குப் பேராபத்து... ஸ்ரீரங்கம் முழுகப்போவுது...”
“கல்லணை உடைச்சிக்கட்டுதாம்....!
"மேட்டூர் புட்டுக்கிட்டதாம்....! "
வாய்க்கு வந்தபடி வதந்தி பரப்பினார்கள்.
திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு குடைச்சல் கொடுத்தார்கள்.
விழித்தெழுந்த நிர்வாகம் அரசாங்க ஆபீசர்களை குழுக்குழுவாய் பிரித்தது.
எல்லாத் திக்கிற்கும் அனுப்பியது.
'வதந்திகளை நம்ப வேண்டாம்...!”
எச்சரித்தார்கள்.
ஆனால், எது வதந்தி எது உண்மை என்பதை அவர்களாலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
*** *** *** -
“பட்டாணித் தெரு, சேக்காளி-சாயபு வீடு வுளுந்துருச்சாம்.”
யாரோச் சொன்னார்கள்.
வேடிக்கைப் பார்க்க ஓடியது கூட்டம்.
அங்கேப் போனால், சேக்காளி வீட்டுத் திண்ணையில் ஏழெட்டுக் குடும்பங்கள் குஞ்சுக் குளுவான்களோடு அடைக்கலமாகி ஒண்டிக்கொண்டிருந்தது.
சேக்காளிப் பட்டாணியார், தன் வீட்டில் அடைக்கலமான குடும்பங்கள் எப்படி தனக்கு இடைஞ்சலின்றி இருக்கவேண்டும் என்ற விதிமுறைகளை உரத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.
அகதி முகாம் தலைவர் போல இருந்தது அவரது அதட்டல்கள்.
பாதிப்படைந்தோர் தங்குவதற்குத் தன் வீட்டுத் திண்ணை, மாட்டுத் தொழுவம், பின்-கட்டுச் சார்ப்பு என இடம் மட்டும் கொடுக்கவில்லை குந்தலாம்பாள்.
விறகு , அரிசி, புளி, வீட்டில் ஆட்டியத் தேங்காய் எண்ணை, போர்வைகள், மறைப்புக் கட்டக் கோணிச் சாக்குகள், வேட்டித் துண்டுகள், ஜமுக்காளம், பாய்கள், தண்ணீர் குடம்...பெரும்படிச் சமையல் பாத்திரங்கள் எனத் தந்தாள்.
புயல் ஆரம்பித்த அன்று பின் கட்டில் மூட்டிய கோட்டை அடுப்பு கரை கடக்கும் வரை அடங்கவே இல்லை.
ஒவ்வொரு வேளையும் முறை போட்டுக் கொண்டு சமையல் செய்வதும் சாப்பிடுவதுமாக சுற்றுலாவைப்போல் அனுபவித்தார்கள் அகதிகள்.
காசு பணம் ஏகமாய்க் கொட்டிக் கிடக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற மனமும் இருக்கவேண்டுமே...!
சாயபு வீட்டின் இடிபாடுகளை வேடிக்கைப் பார்க்க ஓடியவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.
புரளி கிளப்பியவனை வசைபாடினார்கள்.
*** *** *** -
அந்தனூரில், பட்டாணித் தெரு, பெரியத் தெருவிற்குப் பின் மேட்டுப் பகுதி அக்கிரஹாரத் தெருதான்.
அங்கேதான் கூட்டங்கூட்டமாய் ஓடினார்கள்.
ஆபத்துக்கு ஒண்டிக்கொள்ளத்தான் வந்தார்கள்.
ஒண்ட இடம் கிடைத்ததும், மூங்கில் கால், சவுக்குக் கம்பம் என நட்டுத் தார்ப்பாய்

வலியோர் ஆக்ரமித்தார்கள்.
எளியோர் முனகினார்கள்.
மென்மையாய் ஞாயம் கேட்டார்கள்.
வன்மையாக மறுத்தனர் வலியோர்.
மறுத்ததோடு நிற்கவில்லை
சுள்ளென்று விரட்டினார்கள்.
துக்கிரியாய்ப் பேசினார்கள்.
துடுக்காய்க் கடிந்தார்கள்.
ஓடுகிற நாயாய் விரட்டினார்கள்.
புழுமாதிரி நசுக்கினார்கள்.
ஆடு, மாடு, நாய்,... என வளர்ப்புப் பிராணிகளையும் கொண்டு வந்து வைத்துக்கொண்டார்கள்.
“மனிசன் இருக்கவே இடமில்லையாம். இதுல ஆடு மாடுங்களைக் கட்டிக்கிட்டு...!”
ஆத்திரமாகக் கத்தியபடி ஆடுமாடுகளைக் கட்டவிழ்த்துவிட வீரத்துடன் போனான் ஒருவன்.
“அதுங்க மேலே கை வெச்சியோ.. வகுந்து கூறு போட்ருவேன்...ஆமா...!”
வலியவன் மிரட்டினான்.
எளியவன் அடங்கினான்.
*** *** *** -
‘அகதிகளாய் இப்படி அடைந்துக் கிடக்கிறோமே...!’
ஆதங்கத்தில் எழுந்த வார்த்தைத் தடிப்புகள்.
காதில் விழும் சோகச் செய்திகளுக்கேற்பப் புலம்பல்கள்.
பரிதாபப் பட்டு, விநியோகிக்கும் சோற்றுப் பொட்டலங்களுக்கு அடித்துக் கொண்டார்கள்.
விருந்திருக்க உண்ணாதானும் , பசிக்குப் போட்டி போட்டான்.
பொட்டலங்கள் கிழிந்தன.
சோறு சிதறியது.
குரல், செயல்பாடுகள் அனைத்திலும தேவைக்கு அதிகமாகக் கடினம் இருந்தது.
கைகலப்பும் அறங்கேறியது.
‘ஒரு சாண் வயிலு இல்லாட்டா...’
தத்துவம் நிதர்சனமானது.
*** *** *** -
இன்னொரு புறம் சூழல் வேறுமாதிரி இருந்தது.
சிறு வயதில் பார்த்த பல்வேறு இயற்கைச் சீற்றங்களை நினைவு கூர்ந்தனர் வயசாளிகள்;
பாதிப்புகளை விளக்கினர்;
மீண்டு வந்ததைச் சாகசங்களாய்க் கதைத்தனர்;
‘இதுவும் கடந்து போகும்..’
ஆறுதல் தந்தது அவர்களின் பேச்சு.
உலகப் போர் பற்றிக் கூட வார்த்தையாடினார்கள்.
அதுவும் பேரிடர்தானே...!
*** *** *** -
எண்ணைக் காணாப் பரட்டைத் தலை, அழுக்கு வேட்டி, மழிக்கப்படாத தாடை, ஈரம் காயாத உடுப்புகளுடன் ஆண்கள்...
பஞ்சையாய்ப் பரிதேசிகளாய் அங்குமிங்கும் அலைந்தார்கள்.
தங்கள் தெரு சென்று, நிலமை அறிந்து வந்தார்கள்.
“உருலாசு வீடு முளுக்க முளுகிடுச்சி...!”
“பாட்டையன் வூடு இடிஞ்சி தரையோட தரையாயிட்டுது.”
“விநாயகர் கோயில் தென்னண்ட சுவர் சாஞ்சிருச்சு..
செய்திகளைத் திரட்டுவதும், கைச்சரக்கைச் சேர்த்துத் தருவதுமாக இருந்தார்கள்.
ஈரம் காயாத கசங்கின புடவை - ரவிக்கையும், சிடுக்கும் - சீலைப் பேனுமாய், கோடாலி முடிச்சோடு, கண்களில் சோர்வும் சோற்றுக்குத் தவிப்பும்-ஏக்கமுமாய் பரிதவித்தனர் பெண்கள்.
‘பள்ளிக்கூடம் இப்போதைக்குத் திறக்கவேக் கூடாது...!’
குழந்தைகளின் ஆசைக் கண்களில் ஒளிர்ந்தது.
‘இந்தப் புயல் நிற்கவேக் கூடாது. தொடரணும் தொடரணும்’
குழந்தைகள் கூட்டுப் பிரார்த்தனை செய்தன.
கவலை அறியாக் குழந்தைகளின் குறும்புகள், விஷமங்கள், பிடிவாதங்கள், அடங்காத்தனங்கள்...
அனைத்தும் அறங்கேறிக்கொண்டுதான் இருந்தன.
*** *** *** -
கூச்சலும், கத்தலும், பேச்சுக்களும், சாபங்களும், வைராக்ய வார்த்தைகளும், சண்டைகளுமாக அக்கிரகஹாரம் தெரு அல்லோல-கல்லோலப்பட்டது.
எதுவும் இதயத்திலிருந்து வரவில்லை.
இயலாமையின் வெளிப்பாடுகள் அவை.
உதட்டளவில் வந்ததுதான்.
கடந்து போனதும் காணாமல் போய்விடும்.
*** *** *** -
அன்றைய வெகுஜென மீடியாக்கள், செய்தித் தாளும், ரேடியோவும்தான்.
காற்று-வெள்ளத்தால், எங்கெங்கும் மரங்கள் சாய்ந்துக் கிடந்தன.
மின்தடை ரேடியோவின் வாயை பொத்திவிட்டது.
நியூஸ் பேப்பர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, மூன்று நாட்கள் கழித்தோ வந்தன.
இறுக்கமானச் சூழலில் ‘லைவ் நியூஸ்’ கொடுத்த்து ‘டிரான்சிஸ்டர் மட்டும்தான்.’
‘டிரான்ஸிஸ்டர்வாலா’க்களில், சிலரே புத்திசாலிகள்.
வெற்றுப் பொழுதுபோக்கைத் தவிர்த்து, புயல் வெள்ளச் செய்தியறிய மட்டுமே பயன்படுத்துபவர்கள்.
சிலர் வானொலிச் செய்தியை பரப்பும்போது, தங்கள் கைச்சரக்கையும் சேர்த்துக்கொண்டார்கள்.
அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைத்தார்கள்.
-********-
காவிரி தெளும்பியது.
அங்குலம்-அங்குலமாகப் இல்லாமல் அடி-அடியாகப் பெருக்கெடுத்தது.
“பெட்டவாத்தலை பக்கம் காவிரி உடைப்பாம்...!”
‘உண்மையா, புரளியா...?’
கலங்கினார்கள்.
மரண பயத்தில் மக்கள்.
காவிரி நீரின் எதிர்ப் பாய்ச்சலைத் தாங்க வலுவின்றி கோணக்கரை அருகே குடமுருட்டி உடைப்பெடுத்தது.
குடமுருட்டி தெற்கிலிருந்தும், காவிரி கிழக்கிலிருந்தும் இரு முனைத் தாக்குதல் நடத்தியது.
கம்பரசம்பேட்டை, மல்லாச்சிபுரம், முருங்கப்பேட்டை, முத்தனூர், கனமனூர், கக்குடி, பழூர்... எல்லாம் ஆக்ரமித்துவிட்டது வெள்ளம்.
*** *** *** -
ரயில் வழி, சாலை வழி முற்றிலும் முடங்கிவிட்டன.
முத்தனூர்வாசிகள் ரயிலடி, பள்ளிக்கூடம், கோவில், எனத் தற்சமயம் நீர் புகாப் கட்டடங்களில் தஞ்சமடைந்தனர்.
அந்தனூர் அக்ரஹாரம் தெருவில், கிடைத்த இடத்திலெல்லாம் கூடாரம் போட்டுக்கொண்டுக், குடித்தனம் நடத்தினார்கள்.
தெரு வாசலில் நடப்பதற்குப் பாதையற்று, அடைத்தாற்போல் ஆக்ரமித்திருந்தனர்.
மனிதர்கள் குரல் மட்டுல்லை.
ஆடுகளின் ‘ம்...மே...!’
மாடுகளின் ‘ம்...மா...!’,
கோழி, சேவல்களின் ‘கொக்கரக்கோ...’
நாய்களின் ‘லொள்...’
பூனைகளின் ‘மியாவ்...’
முராரி பாடிப் பாடி முகம் வீங்கிக் கிடந்தன அனைத்தும்.
தொண்டை தீனமாகிவிட்டது.
அந்தனூரையும் ஆக்ரமித்தது வெள்ளம்.
*** *** *** -
மூச்சு முட்டுகிறபோது ‘மூச்சுக் காற்றுக்கு ஏங்குகிறான் மனிதன்.
கிடைத்ததும் மற்ற மற்றத் தேவைகளுக்கு அலைகிறான்.
தன்முனைப்பால் தன்னிலைத் தாழ்கிறான்.
நீயா?நானா?
சவால் விடுகிறான்.
வீட்டுக்குள் இருப்போர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.
தன் வீடே சிறையானது அவர்களுக்கு.
அவ்வப்போது வரும் செய்திகள் திகில் கொள்ள வைத்தன.
“அக்கிரஹாரத் தெருவுலயும் தண்ணி பூருதுண்ணே...!”
மண்வெட்டிகள், அன்னக்கூடைகளுடன் ஓடினர்.
மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி, கீழக்கோடி பள்ளிக்கூடத்துக்கு அருகில் அணை போட்டனர்.
கொல்லைப் புறத்தில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது.
“கொல்லை வழியாக வீட்டுக்குள் தண்ணீர்ப் புகாதவாறு சாளரத்தை அடைத்தார்கள்.
*** *** *** -
கரையைத் தொட்டுக்கொண்டு ஓடும் காவிரிப் படிக்கட்டில், கவலையோடும், பரபரப்போடும், திகிலோடும் நின்றது மக்கள் கூட்டம்.
வேடிக்கைப் பார்க்கும் ஆவலோடு நிற்கும் ஜனங்களும் இல்லாமலில்லை.
காவிரியோடு அடித்துச் செல்லப்படும் கூரை வீடுகள்.
ஆட்டு மந்தைகள்.
மாடுகள்.
மேசை நாற்காலிகள்.
மரக் கட்டில்கள்.
மெத்தைகள்...
மர பீரோக்கள்.
பாத்திரம் பண்டங்கள்…
தாரோடு வாழைமரங்கள்
வேரோடு வரும் மரங்கள்.
மரங்களில் தலைதூக்கி நின்று தப்பிக்க ஆயத்தமாய் நிற்கும் பாம்புகள்.
இன்னதுதான் என்றில்லை...
அவ்வப்போது சற்றேத் தலைக் காட்டும் சூரிய ஒளியில் கவிழ்ந்தபடி மின்னிக்கொண்டே மிதந்து செல்லும் பித்தளை, எவர்சில்வர் குடங்கள்.
மனிதப் பிரேதங்கள்.

*** *** *** -
திருச்சிக் காவிரிப் பாலத்தின் மேல்-விளிம்பைத் தொட்டபடிச் சென்றது வெள்ளம்.
மனிதப் பிரேதங்களைக் கரையேற்றிப் பாலத்தில் கிடத்தினார்கள், பேரிடர் மேலண்மையினர்.
பாத்தியமுடையோர், அடையாளம் சொல்லிப் பிரேதம் பெற்றுச் சென்றனர்.
திருச்சிக் காவிரிப் பாலமும், கொள்ளிடம் பாலமும் ‘மார்ச்சுவரி’ வார்டாய் மாறியிருந்தது.

உள்ளத்தை உரைய வைக்கும் காட்சிகளுக்கு நடுவே சில மனிதர்களின் விந்தையான, வக்ரமான செயல்பாடுகளுக்கும் குறைவில்லை.
*** *** *** -
அடித்துச் செல்லும் வெள்ளத்தில் , அடைந்த வரை ஆதாயம்..’
உயிரைப் பணயம் வைத்து பலவிதப் பொருட்களையும் இழுத்துப் போட்டுக்கொண்ட மனிதப் பதர்கள்.
கட்டையின் ஊறிய அங்கங்களில் இறுகியும் இறுக்கப்பட்டுமிருந்த, மோதிரம், சங்கிலி, பேசரி, கம்மல், கொலுசுகள் எல்லாவற்றையும் பிய்த்துப் பிய்த்துக் களவாடும் அருவருப்பான, மூர்க்கமான மனித மிருகங்கள்.
வாழைத்தாருக்கு ஆசைப்பட்டு இழுக்கப்போய், பாம்புகடித்து மரணித்தான் ஒருவன் என்று செய்தியும் வந்தது.
*** *** *** -
‘கொர... கொர... கொர...
“வுஷ்..........ஷ்............”;
“உய்.........”;
“கூ.......”;
மாறி மாறிக் கத்தியது முதலில்.
பிறகு புயல் வெள்ள நிலையைப் பதிவு செய்தது டிரான்ஸிஸ்டர்.
கேட்டவர் வயிறு “சொர... சொர...த்தது.
“அய்யோ..! மவளுக்கு ஜுரம் அனலாக் கொதிக்குதே...!”
“ ஏய்...! மல்லிகா...! என் மவனை எங்கனாப் பாத்தியாடீ...?”
“ ஐயோ...! இப்படி ஒரு மளைய என் வயசுக்குப் இப்பத்தான் பாக்கேன். உலகம் அளியப்போற அறிகுறியோ இது...”
“இதுக்கு மேலத் தாங்காது கடவுளே...!”
“அம்மாப்...பசிக்குதும்மா...!”
“ஒரு குந்துமணி அரிசி இல்லியே...! என்னாச் செய்வேன். ஏதுச் செய்வேன்.”
“புள்ளைங்கத் துடிக்குதேப் பசியால...!”
“... ... ... ... ... ... ... ... ...”
அழுகைகள், குமுறல்கள், முனகல்கள், புலம்பல்கள், பிரார்த்தனைகள், சாபங்கள், திட்டுக்கள், கெஞ்சல்கள், மிரட்டல்கள், ஆடல்கள், அடங்கல்கள்.............
மனிதத்தின் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்பட்டன.
விடாத அடை மழை;
சுழன்று சுழன்று அடிக்கும் புயல் காற்று;
மின்னலும், இடியும், காற்றுமாய் சேர்ந்து அடித்த பேய் மழை.
சாலையெங்கும் குறுக்கும் நெடுக்குமாய், விகாரமாகச் சாயும் பல்வேறு மரங்கள்;
நொடிக்கு நொடி இறுக்கமானது சூழ்நிலை.
ஜனங்கள் பலஹீனமானார்கள்.
திடீரென்று வானம் வெளுத்துச் சூரிய ஒளித் தலைக் காட்டி மறைந்தது.
*** *** *** -
இரவு இருண்டு வந்து, பூமிச் சுழற்சியை உறுதிப்படுத்தியது.
தவறு செய்யும் துணிவைத் தருகிறது இருள்.
கிடைத்ததைத் தின்று பசியாறியதும், அகதியாய் இருந்ததை மறந்தார்கள்.
அக்கிரஹாரத்தெரு வாசிகள் வீட்டினுள் சுகவாசியாக இருப்பதாக நினைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் வேறுவிதமாகத் தவிப்பதை நினைத்துப் பார்க்கவில்லை.
வீட்டுக் கதவுகளைப் பலம் கொண்ட மட்டும் தட்டினார்கள்.
இம்சித்தார்கள்.
திறக்காகத் கதவுகளை உடைத்து உள்ளேச் செல்லும் மூர்க்கம் மூண்டது.
*** *** *** -
தெருவின் இரண்டு கோடிகளிலும் அணையை உயர்த்தியபடியே இருந்தார்கள்.
அணை உயர உயர, நீரின் மட்டமும் உயர்ந்தது.
நம்பிக்கை அற்றுப் போயிற்று.
பிரார்த்தித்தார்கள்.
மனோபலமுள்ளோர், ‘சூழ்நிலையோடு’ நேர்த்தியாகப் பொருத்திக் கொண்டார்கள்.
நெஞ்சுரமும், நேர்மைத்திறமும் அற்றோர், ‘உயிர் பிரியும் முன் அனுபவிப்போம்...!’ என்று மூர்க்கம் காட்டினார்கள்.
பசியாறத் திருடினார்கள்.
பிடுங்கித் தின்றார்கள்.
உடற்பசிக்கு தீனித் தேடினார்கள்.
சூழலை மேலும் மோசக்கமாக்கினார்கள்.
*** *** *** -
வழக்கமாக அக்கிரஹாரத் தெருவின் அறுபது வீட்டு வாரித் தண்ணீரும், வடிகால் குழாய் வழியாகத் தெருவில் கொட்டும் மொட்டை மாடித் தண்ணீரும் ஓடிக், கீழண்டை வாய்காலில் தான் வடியும்.
வெள்ள நீர் உள் வராமல் அணை போட்டதால் நீர் வடிய வழியில்லை.
விடிய விடியக் கொட்டிய மழைநீர் தெருவில் குளம் கட்டி நின்றது.
குளத்தில் மிதந்தன கூடாரங்கள்.
கூடாரவாசிகள், வீட்டுத் திண்ணைகளில் தஞ்சமடைந்தார்கள்.
கோண சமுத்திரம் பசவய்யா வீட்டு வாசல் திண்ணையில் பல பேர் ‘திமுதிமு’வென்று நெறிந்தார்கள்.
வலிவற்ற தூண்கள் கூட்டத்தின் மூர்கத்தால் சாய்ந்தன.
ஓட்டுச் சார்ப்பு கவிழ்த்துக்கொண்டது.
மரண ஓலம்.
மூஞ்சி, கை கால்கள், மண்டை, என மானாவாரியாக உடைந்துக், குறுதிக் கொட்டியது.
கரைக் கடக்கும் தருணத்தில் இயற்கைக் காட்டும் மூர்கத்தை அலட்சியம் செய்தார் கங்கய்யா.
ஒட்டு மாங்காய் பொறுக்க மாந்தோப்புக்குச் சென்றார்.
மாங்கிளை முறிந்துத் தலையில் விழுந்து ஸ்தலத்திலேயே மாண்டார்.
நாற்பத்தைந்து வயது கங்கய்யாவின் அகால மரணம் ஊரையே உலுக்கிப் போட்டது.
உலகமே அழியப்போவது போல் இயற்கை சீறிச் சீறியடித்தது.
கரைக் கடக்கும் முன் ஆராட்டம் செய்தது வானம்.
*** *** *** -
பொழுது விடிந்தது.
பொலபொலவென ஒளிக்கதிர்களை வீசியது சூரியன்.
புயல் கரை கடந்ததாக அறிவித்தது டிரான்சிஸ்டர்.
கரை கடந்துவிட்டாலும், வெள்ளம் வடிய இரண்டு மூன்று நாட்களாவது ஆகும் என்பதால், அவசரத்திற்குப் போடப்பட்ட கூடாரங்களைச் சற்றே செப்பனிட்டுக் கட்டிக் கொண்டார்கள் அகதிகள்.
பட்டாணித் தெரு, பெரியத் தெருவெல்லாம், மறு நாளே வடிந்துவிட்டதால், அந்தத் தெருவாசிகள் கூடாரத்தைக் காலி செய்துக் கொண்டுச் சென்றுவிட்டார்கள்.
ஒருவரைப் பார்த்து மற்ற சிலரும் இடத்தைக் காலிச் செய்தார்கள்.
காலிச் செய்தவர்களைக் காட்டி, காலிச் செய்யச் செய்தார்கள்.
‘தெருவிற்குப் போய், உங்கள் வீட்டில் இருந்தால்தான் அரசாங்கம் தரும் நிவாரணங்களை வாங்க முடியும்..’
இப்படியெல்லாம் சொல்லி சொல்லி இரண்டு நாட்களிலேயே அக்ரஹாரம் தெருவிலிருந்து அனைவரையும் கிளப்பிவிட்டார்கள்.
*** *** *** -
கணக்கபிள்ளை, பட்டாமணியம் இவர்களையெல்லாம் தண்ணைக் கட்டிக்கொண்டு, எந்தப் பாதிப்பும் இல்லாத விவசாயிகள் கூட நிவாரணம் வாங்கினார்கள்.
இடியாதச் சுவற்றைத் தட்டிவிட்டு, நிவாரணம் பெற்றார்கள்.
நிறைய இழப்புக்களைச் சந்தித்தும், சாமர்த்தியமில்லாத விவசாயிகளை, நிவாரணம் தராமல் ஏமாற்றினார்கள்.
நிவாரணப் பொருட்களைப் பதுக்கினார்கள்.
நிவாரணத்தை வைத்து விளம்பரம் தேடினார்கள்.
*** *** *** -
“எல்லா வயலும் முழுகிப்போச்சு... குந்துமணி நெல்லுத் தேராது...!”
“ஏகப்பட்டப் பஞ்சம்தான் வரப்போவுது... சந்தேகமே இல்ல...!”
“ரெண்டு நாள்ல வெள்ளம் வடிஞ்சா, படிக்குப் பாதித் தேத்தலாம்...!”
இளநீர், தேங்காய், மாங்காய், நாரத்தங்காய், வாழைக் கச்சல், வாழைப்பூ ...
புயலில் சாய்ந்ததைப் பொறுக்கி வைத்துக் கொண்டனர்.
மதியம் 3 மணி சுமாருக்கு காவிரியில் வெள்ளம் வடிவதற்கான அறிகுறி தெரிந்தது.
பதினெட்டு படிகள் இறங்கிக் குளிக்கும் காவிரியில், ஒரு படி கூடத் தெரியாத அளவுக்கு கரையைத் தொட்டுக்கொண்டு ஓடிய தண்ணீர், இப்போது இரண்டாவது படிக்கட்டைத் தொட்டு ஓடியது.
“மொதப் படிக்கட்டு தெரியுது பாரு, வெள்ளம் வேகமா வடியுதுண்ணே...!”
*** *** *** -
“நீங்க நல்லா இருக்கோணும்...”
குந்தலாம்பாள் வீட்டு பிரும்மாண்டமான மாட்டுத் தொழுவத்தில், வசதியாகத் தங்கிய ஜனங்கள் வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.
குந்தலாம்பாள் பார்த்துப் பார்த்துச் செய்த உதவிகளைச் சிலாகித்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
இப்படி ஒரு நிலை வருமென்று முன்பே அறிந்து, விறகு முதல், அரிசி வரை தயாராக வைத்தும், தொழுவம், பின்கட்டுக் கூறைகளை செப்பனிட்டும், கோட்டை அடுப்பை திறந்து போனது வந்தது குத்துக்கல்களை பரத்தியும், அண்டாகுண்டாக்களுக்கு ஈயம் பூசியும் தயாராக வைத்த அய்யாம்மாவின் முன் யோசனையை எண்ணி எண்ணி வியந்தான் கலியன்.
பின் கட்டின் வெம்மை உணர்ந்தபோது, தொடர்ந்து எரிந்த கோட்டை அடுப்பின் சூடு முற்றிலும் குறைய எப்படியும் பதினைந்து நாட்களாவது ஆகும் என்று தோன்றியது.
*** *** *** -
வெள்ளம் வடிந்த கையோடு, கலியன் தன் குடிசையையோ, தெருவையோ பார்க்கப் போகவில்லை.
மாதய்யாவின் புஞ்சையைப் பார்த்து வந்தான்.
“அய்யா ஆசையா வளத்த செவ்விளநி மரம் சாஞ்சிருச்சும்மா...”
கவலைப்பட்டான்.
“கவலைப் படாதே. நாத்து சாத்தி நட்டு வம்சத்தை விருத்தி பண்ணிட்டியே...!”
ஆறுதல் கூறினாள் குந்தலாம்பாள்.
கங்கய்யாவின் இழப்பைச் சொல்லிச் சொல்லிக் கண்கலங்கினாள்.
*** *** *** -
வெள்ள பாதிப்புகளை பார்வையிட நிபுணர் குழு வந்தது.

ஆப்பக்கார அரும்பாவின் குடிசை அருகில் கூடி நின்றார்கள் குழுவினர்.
“க்ரேட் லாஸ்...!”
“பேத்தடிக்...!”
ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள்.
“ஹூ...ம்...”
“ப்...ச்...!”
“த்...ஸெள..த்...ஸ்ஸெள...!”
ஒலி எழுப்பி ஆதங்கித்தார்கள்.
குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த சப்பாணிப் பேச்சி முத்து ஒரு ஆபீசரிடம் சொன்னான்.
“அய்யா...! தெருவுக்குள்ற நெறைய வூடு இடிஞ்சிட்டு...!”
தெருவில் தேங்கி நிற்கும் வெள்ளத்தைப் பார்வையிட்டார்கள்.
அதில் நடந்து சென்றவர்களைப் பார்த்தார்கள்.
நெஞ்சளவுத் தண்ணீர் கிடந்தது.
‘வயல் வாய்க்கால் தண்ணீரெல்லாம் வடிந்த பிறகுதான் தெருத்தண்ணீர் வடியும்...!’
‘குறைந்த பட்சம் எப்படியும் இரண்டு நாட்களாவது ஆகும் வடிய...!’
குழுவினர் பேசிக்கொண்டார்கள்.
*** *** *** -
அரும்பா.
ஆப்பக்கார அரும்பா என்பதுதான் அந்தனூர் மேட்டுத்தெருவில் பிரசித்தம்.
ஊர் எல்லை மேட்டில் உள்ள குடிசை அவளுடையது.
உள்ளே ஓர் ஆட்டுக் கல், அம்மிக் குழுவி, தோசைக்கல், ஒரு கடாய், சில கரண்டிகள், இரும்புக்குடங்கள். சாம்பார் வைக்கும் டேக்சா, சோறு வடிக்கும் குண்டா… பிளாஸ்டிக் டம்ளர்கள், அலுமினியத் தட்டுக்கள்.
இவ்வளவுதான் அவள் உடமைகள்.
மேட்டுத் தெரு வாசிகள் மட்டுமல்லாது மற்றத்தெருவாசிகளும் அவளிடம்தான் ஆப்பம் வாங்கித் தின்னுவார்கள்.
அப்படி ஒரு கைப் பக்குவம் அவளுக்கு. கைப் பக்குவம் மட்டுமில்லை வாயும் நீளம் அவளுக்கு.
எஸ்டேட்டில் வேலை பார்த்திருந்தால் வாயாடி வித்யாவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவளை விடப் பன்மடங்கு அதிக நீளம் அரும்பாவின் நாக்கு.
“ஆபீசருங்க நீங்க. தண்ணிய காலால மிதிக்கவே மாட்டீங்க. இடுப்பளவுத் தண்ணிய கண்ணாலயாவது பாக்குறீகளே...?” குதர்க்கமாகப் பேசினாள்.
நிபுணர் குழுவில் இருந்த இளங்கோவுக்குச் ‘சுருக்’கென்றது.
“பாட்டீம்மா...’’
“சொல்லுங்க பேராண்டீ...”
“கிராமத்துல பொறந்து வளந்த நாங்கதான். பேண்ட்டு சூட்டு போட்டதால சீமைகாரங்கனு நெனைக்காதே...!”
“நான் என்னா நெனைச்சா என்னா ஆவப் போவுது. தெருவுக்குள்ற அவனவன் தவியாத் தவிக்கறான். நீங்க கொளாய மாட்டிக்கிட்டு எட்ட நின்னு பாக்க வந்துட்டீங்க..!”
“... ... ... ... ... ... ... ... ...”
“நான் தெரியாமத்தான் கேக்கேன். உங்களுக்கு எலிகாப்டர் ஏதும் இல்லீங்களா..?”
“தண்ணீல இறங்கி ஊருக்குள்ளே போய்ப் பாக்கணும். அதானே உன் ஆசை. பாக்கறோம்...”
சிரித்தாள் அரும்பா.
“வாயால வடசுடுறீங்களேடா...!” என்று பரிகசிப்பது போல இருந்தது அரும்பாவின் சிரிப்பு.
*** *** *** -
தடாலடியாய் தண்ணீரில் இறங்கிவிட்டார் இளங்கோ சார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
சூப்ரண்டே இறங்கிவிட மற்றவர்கள் சும்மா இருக்கமுடியுமா மற்றவர்களும் இறங்கி மார்பளவுத் தண்ணீரில் நடந்தனர்.
பேண்ட் சட்டையோடு தண்ணீரில் நடக்கும் ஆபீசர்களை வியப்புடன் பார்த்தாள் அரும்பா.

இப்போது போல பொக்ளைக்களும், ஜேசீபிக்களும், மிஷின் ரம்பமும் அப்போது பிரபலமில்லை.
மனிதச் சக்தியையே நம்பியக் காலக்கட்டம்.
போக்குவரத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சீராகியது.
செய்தித்தாள்கள் வரத் தொடங்கின.
புயல் வெள்ள பாதிப்புகள், கருப்பு வெள்ளைப் புகைபடமாக வெளியானது.
பள்ளிகள் காலவரையற்ற விடுமுறைச் செய்திக் குழந்தைகளை குதூகலப்படுத்தியது.

குடமுருட்டிக்கு அருகே ரயில்வேத் தண்டவாளங்கள் பாலம் போலத் தொங்கின.
கூட்ஸ் கூட்ஸாகக் கொட்டப்பட்ட சரளைக் கற்கள், எங்கே போனதென்று தெரியாமல் அரித்துக் கொண்டு போய்விட்டது.
“டிராக் சரியாக ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடும்…!” என்றார் ரயில்வேயில் பணிபுரிந்த மணி மாமா.
‘பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஒரு மாசம் ஆயிடும்...” என்று ஹேஸ்யமாகச் சொன்னார் பிச்சுமணி சார்.
‘ஹை...! ஜாலி...!’
மகிழ்ந்தனர் திருச்சியில் படிக்கும் சிறுசுகள்.
*** *** *** -
மத்திய மந்திரி வெள்ளச் சேதத்தை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
குழந்தைகள் வேடிக்கைப் பார்த்தார்கள்.

“தரைல இறங்காம பாத்துட்டுப் போயிடுவாங்க... பிச்சை போடறமாதிரி நிவாரணம் கொடுப்பாங்க. நம்ம பொழப்புதான் மானங்கெட்ட பொழப்பு.”
நொந்துகொண்டனர் விவசாயிகள்.
கணக்குப்பிள்ளைக்கு வேண்டிய மேட்டுக்குடி வாசிகள், எந்த சேதாரமும் இல்லாமலே உடனடி நிவாரணம் பெற்றார்கள்.
மாதய்யாவின் பண்ணையாள் என்பதாலேயே வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் கலியனுக்கும் தெரு வாசிகளுக்கும் வெள்ள நிவாரணம் வருவதில் தாமதம் ஆயிற்று.
எருதின் ரண வலி காக்கைக்கு என்றுதான் தெரிந்தது.
கணக்குப்பிள்ளையின் அலட்சியத்தை குந்தலாம்பாளிடம் முறையிட்டனர்.
“அய்யா இருந்திருந்தா எங்களை இப்படி விட்டிருக்கமாட்டாரும்மா...!”
“கவர்மெண்ட் தரம்போது தரட்டும். நான் கொடுக்கறதை வாங்கிக்கோங்க.”
தேவையானவற்றைக் கொடுத்து ஒத்தாசை செய்தாள்,.
தென்னந்தோப்பில் விழுந்த மட்டைகள் எல்லாம் கீற்றாக உருமாறி கலியன் தெருக் குடிசைகளைப் புதுப்பித்தன.
*** *** *** -
காளவாய்ப் போடுக் கட்டுக் கட்டாய் கரன்ஸி எண்ண ஆசைப்பட்டு அறுத்து அடுக்கப்பட்ட பச்சை வெட்டுக் கல் ஆசுகள், புயல் மழையால் கரைந்து மண்மலையாய் நின்றது.
வலுவான கல் கட்டடங்களையே அஸ்திவாரத்துடன் சாய்த்துவிட்ட புயலுக்கு , கீற்று மறைப்புக்கள் எம்மாத்திரம்.
கல்லறுப்புக்கு மண்ணெடுக்கத் தோண்டப்பட்டப் பிரம்மாண்டமான குழி, குளமாய்த் தளும்பி நின்றது.
குந்தலாம்பாள் இதுகளைக் கண்டு கிஞ்சித்தும் கவலைப் படவே இல்லை.
மாறாக ஒரு வித நிம்மதியே அடைந்தாள் அவள்.
சம்பாக் காணியின் நிலையைச் சொன்னான் கலியன்.
“வயித்தெரிசலா இருக்கும்மா...!” என்றான்.
“எனக்கு வயிறு எரியலை கலியா. வயித்துல பால் வாத்தா மாதிரி இருக்கு...”
“ஏம்மா, சவால் விட்ட பிள்ளை தோத்ததுக்காக சந்தோசப்படறீங்களா...?”
“என்னையா அப்படி நினைக்கறே...? என்னதான் கொடுமைக்காரனா இருந்தாலும் , பெத்த புள்ளை தோத்துட்டான்னு எந்தத் தாயும் சந்தோசப்படமாட்டா கலியா.”
“... ... ... ... ... ... ... ... ...”
“நம்ம குடும்பத்துல யாருக்குமே காளவா ராசியில்லாதப்போ இவன் கல்லு அறுத்து வெச்சிட்டானே, பாதிப்பில்லாம பத்த வெச்சிப் பிரிக்கணுமே’னு மனசுப்பூரா கவலையா இருந்துச்சு. பெத்த மகனுக்கு பாதிப்பில்லாம பணங்காசு நட்டத்தோட போச்சேனுதான் சந்தோசம்.”
“... ... ... ... ... ... ... ... ...”
அய்யாம்மாவை தவறாகப் பேசிவிட்ட கழிவிரக்கத்தில் கலங்கினான் கலியன்.
“நான் கும்பிடற எல்லையம்மா என் வயித்துல பால் வாத்துட்டா. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சே...”
சொல்லியபடியே கோவில் இருந்த திக்கு நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள் குந்தலாம்பாள்.
*** *** *** -
‘காளவாய்க்கு கல்லறுத்துக் கிடக்கே... என் ஆச்சோ... ஏது ஆச்சோ…”
கவலையில் கலங்கினான் துரைராமன்.
எப்போதும் டிரான்ஸிஸ்டரும் கையுமாக இருந்தான்.
காவிரி உடைப்பு, குடமுருட்டி உடைப்பு, என்றெல்லாம் திருச்சி வானொலியில் கேட்கும் போது துரையின் மனசு பதறியது.
தபால், தந்திப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்ததால், கிராமத்துச் செய்திகள் ஏதும் அவனுக்கு எட்டவில்லை.
‘எப்போது போக்குவரத்துச் சீராகும், கிராமத்துக்கு போகலாம்…’
ஒரே சிந்தனைதான் துரைராமனுக்கு.
*** *** *** -
அம்மாவிடம் சவால் விட்டான்.
ஆபீசில் லோன் போட்டான்.
மாதப்பிடித்தம் போக மீதிப் பணத்தில் காலட்சேபம் செய்தான்.
ஆபீசுக்கு அடிக்கடி லீவு போட்டு, கெட்ட பெயர் சம்பாதித்தான்.
ஒரு முறைக்குப் பல முறை மெட்ராசுக்கும், அந்தனூருக்கும் வந்து போனான்.
கரன்ஸிக் கனவுளிலேயே எப்போதும் மிதந்தான்.
‘கல்லறுத்து’ அடுக்கியாகிவிட்டது.
சொந்தப் புஞ்சைகளில் நின்ற மரங்களை வெட்டித் துண்டாடி அடுக்கியாகிவிட்டது.
காளவாய் அடுக்கி அடுப்பில் தீயிடவேண்டியதுதான் பாக்கி.
கல் அறுத்த நேரத்துக்கு, கொளுத்தியிருந்தால், மண் கல்லாகி, கரன்ஸிகளாகி மூன்று மாதங்கள் முடிந்திருக்கும்.
கரன்ஸிகளை கை எண்ண வேண்டிய நாளில், கல் வடிவக் களிமண்ணைப் பற்றிக் கவலைப்பட்டான்.
ஒவ்வொன்றையும் தள்ளித் தள்ளிப் போட்ட கிட்டா கிட்டாவய்யாமேல் வெறுப்பு வந்தது.
தொழில் அனுபவம் இல்லாத துரை கிட்டாவையே பூரணமாய் நம்பினான்.
“ஆயிரம் கொடு, ஐநூறு குடு...”
பணம் கறந்துகொண்டே இருந்தார்
கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு அவர் சொன்ன நாளில் வந்து பார்த்தான்.
ஒரு துரும்பு கூட நகர்ந்திருக்கவில்லை.
கிட்டாவய்யா ஊரிலேயே இல்லை.
அடுத்த வாரம் மீண்டும் வந்தான்.
“என் மச்சினன் பேரனுக்கு முடியிரக்கணும்னு வரச்சொன்னான். போனேன். ரெண்டு வாரம் அங்கேயே தங்கவேண்டியதாப் போச்சு. ஆகட்டும் வர வாரம் முடிச்சிப்பிடறேனே…”
அதிராமல் சொன்னார் கிட்டாவய்யா.
“அப்போ அடுத்த வாரம் வந்துடறேன் மாமா..”
“நான் தபால் போடறேன். தபால் கிடைச்சதும் வந்தாப் போதும்.”
“நீங்க சொல்றதை வெச்சிப் பாத்தா, அடுத்தவாரமும் நடக்காது போல இருக்கே..”
“தொரை, நீ மெட்ராஸ் சிடில இருக்கே. கிராமத்துச் சமாச்சாரம் தெரியாம பேசறே நீ.”
“நீங்க ஒரு வாரம் சொன்னேளேனு….”
“வாஸ்தவம்தான் தொரை. ஒருவாரம்னு சொன்னேனோல்லியோ... இன்னும் ரெண்டு நாள்’லயே முடிஞ்சாலும் முடிஞ்சதுதான்.”
“சரி மாமா... புரியறது...!”
ச்சே இவனெல்லாம் ஒரு மனுஷனா என்று ஆத்திரம் வந்தாலும் பொறுத்துக்கொண்டான்.
“இன்னும் ஒரு ரெண்டாயிரம் குடு. விறகு போறாதுன்னு படறது. சூளையை அடுக்கிட்டு விறகுக்கு அலையப்படாது பாரு...”
“என்ன மாமா.. வாய்க்கு வந்தபடி பேசறேள்...”
தன்னை மீறி கடுப்படித்துவிட்டான் துரை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.
“அப்படி என்ன பேசினேன் தொரை உன்கிட்டே... கடுப்படிக்கறே…?”
“மரம் எதேஷ்டமா இருக்கு. காளவாப் போட்டதுப் போக மீறும்னு போன வாரம் சொன்னேள். இப்போ இப்படிப் பேச்சு மாத்திப் பேசறேளே...”
“ஏண்டாப்பா... தொரை. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். என் வேலையெல்லாம் விட்டுட்டு ஒத்தாசை பண்ணினதுக்கு இப்படி எடுத்து எறிஞ்சிப் பேசறியே...!”
துரைக்கு என்ன பேசுவது , எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.
கிட்டாவய்யாவே தொடர்ந்தார்.
“காளவா போட எனக்கு ஒத்தாசை பண்ணுங்கோ மாமான்னு கேட்டே நீ. நானும் சரி கேக்கறியேனு என் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு நீ சம்பாதிக்கறதுக்கு நான் அலையா அலைஞ்சிருக்கேன். அலைச்சலை விடு. என் கைக்காசு ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே போட்டிருக்கேன். அதைக் குடுத்துட்டு ஆளை விடுப்பா சாமி..”
கழட்டிக் கொண்டார் கிட்டாவய்யா.
ஆரம்பத்திலிருந்து கிட்டாவய்யாவின் நடவடிக்கைகளையெல்லாம் நினைத்துப் பார்த்தான் துரை.
சுயரூபம் தெரிந்து கொண்டான்.
அப்பாவும் அம்மாவும் கிட்டாவைப் பற்றி அடிக்கடி சொல்லும் அபிப்ராயம் உண்மை எனத் தெரிந்தது.
அடுத்த பாட்டம் வந்து கலியனைக் கலந்து கொண்டு முடித்துவிடலாம் என்று திட்டம் போட்டான் துரை.
ஆபீஸ் வேலை...
புயல்...
வெள்ளம்... என முடக்கிவிட்டது.
*** *** *** -
புயல் வெள்ளத்துக்குப் பின் போக்குவரத்து சீராக பதினைந்து நாட்களாகிவிட்டது.
துரைராமன் வந்தான்.
மண் மலையைப் பார்தான்.
மடுவாய்க் குளத்தைப் பார்த்தான்.
காளவாய்க்கு வெட்டிய பள்ளம் என்று யாரேனும் சொன்னால்தான் தெரியும்.
தூர் எடுத்து சீர் படுத்திய குளம் போல இருந்தது அது.
கலங்கினான். மருகினான்.
கிட்டாவின் துரோகத்தை நினைக்க நினைக்க நெஞ்சு பதறியது.
அம்மாவும் கலியனும் ஆறுதல் சொன்னார்கள்.
துரைராமன் கண் கலங்கியது.
அவமானத்தால் தலை குனிந்தான்.
“துரை, நீ ஏன் தலை குனியணும். ஏன் கண் கலங்கணும்னேன்.”
“... ... ... ... ... ... ... ... ...”
பெற்ற தாயை பாசத்துடன் நோக்கினான் துரை.
“துரை. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சேனு விடு. அடுத்த வேலையைப் பாரு.” ஆறுதல் சொன்னாள் குந்தலாம்பாள்.
*** *** *** -
தோல்வி என்பது வாழ்வின் ஓர் அங்கம்.
தோற்றுவிட்டோம் என்பதை விட, தோல்வி மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதையே அவமானமாகக் கருதியது துரையின் உள்ளம்.
கலியன் ஆறுதல் சொன்னதை துரைராமன் கிஞ்சித்தும் விரும்பவில்லை.
இந்த இடத்தில் கலியனை எதிர்த்துப் பேசினால் , அம்மா அதை விரும்ப மாட்டாள்.
அமைதியாக இருந்தான்.
துரைராமனின் உள்ளம் அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாகத் திட்டம் தீட்டியது.
தொடரும்...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.