Published:Updated:

கலியன் மதவு | சமூக நாவல் | அத்தியாயம் – 12

Representational Image

John Milton எழுதிய Paradise Lost எனும் காப்பியத்தின் ஒன்பதாம் காண்டத்தில் Satan எப்படி Eve விடம் நைச்சியமாகப் பேசி, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நடுவே நிரந்தரப் பிளவை ஏற்படுத்துவானோ… அதுபோலப் பல குடும்பங்களில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்திய மகான்தான் கிட்டா.

Published:Updated:

கலியன் மதவு | சமூக நாவல் | அத்தியாயம் – 12

John Milton எழுதிய Paradise Lost எனும் காப்பியத்தின் ஒன்பதாம் காண்டத்தில் Satan எப்படி Eve விடம் நைச்சியமாகப் பேசி, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நடுவே நிரந்தரப் பிளவை ஏற்படுத்துவானோ… அதுபோலப் பல குடும்பங்களில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்திய மகான்தான் கிட்டா.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

துரைராமனை பூர்வீகச் சொத்து மோகம் பிடித்து உலுக்கியது.

மோப்பம் பிடித்த நாய் குணமும், மோகம் பிடித்த மனுசன் குணமும் அமைதியாக இருந்ததாய் சரித்திரமில்லையே...

மாதய்யா ஆத்திரத்தோடு, வண்டியைக் கட்டிக்கொண்டு, வயலுக்குப் புறப்பட்டுப் போனதும், துரைராமன் குந்தலாம்பாளிடன் வந்து ஏகமாய்த் தர்க்கித்தான்.

Representational Image
Representational Image

“என் அனுமதி இல்லாமல் வயல்வெளிகளை எப்படி விற்கலாம்...?” வாதிட்டான்.

“மேலுக்கும் கீழுக்குமாய்’ ‘தையாத்-தக்கடி’ யெனக் குதித்தான்.

குமைந்துக் குமைந்துப் பேசினான்.

ஆத்திரத்தில் அனல் கட்டிகளாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

‘குபீர் குபீர்’ எனப் பற்றி எறிந்தன.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாகச் செல்வதைப் போல, இருந்தது துரைராமனின் பேச்சு.

‘இன்னதுதான் பேசுகிறோம்’ என்ற வரையறை இல்லாமல் பேசினான்.

“அப்பா பண்ணினது ‘ஃபோர்ஜரி” – என்றான்.

‘ஃபோர்ஜரி’ என்றால், பொருள் தெரியவில்லை குந்தலாம்பாளுக்கு.

“அப்படீன்னா...?”

பாடம் புரியாத மாணவன் வாத்தியாரிடம் கேட்பது போல அப்பாவியாகக் கேட்டாள்.

Representational Image
Representational Image

“ சப் ரிஜிஷ்ட்ரார் ஆபீஸ்ல, திருட்டுத்தனமா என் கையெழுத்தை போட்டுட்டிருக்கார்..”

“.............................”

காதில் ஈயம் காய்ச்சி ஊற்றினார்ப்போல நடுங்கினாள்.

‘பெற்றத் தகப்பனை எப்படி இவ்வளவு கேவலமாய் நினைக்க முடிகிறது...?’

விடை காணமுடியாத கேள்வித் துளைத்தது குந்தலாம்பாளை.

**************************

“அப்பாவே, கிரயம் பண்ணியிருக்கார்ன்னா, ஏதாவது காரணம் இருக்கும் தொரை...!”

“.............................”

‘அவரும் அவர் காரணமும் யாருக்கு வேணும்...!’ என்பதைப் போல அலட்சியமாகப் பார்த்தான்.

“என்னதான் பெத்த மகன் அறுத்துக் கட்டினாலும், பெத்த மனம் என்றைக்குமே பித்துதான் தொரை.

“.............................”

குழந்தைகளுக்கு நல்லது செய்யத்தான் தோணும் பெத்தவாளுக்கு... கெடுதல் செய்ய கிஞ்சித்தும் நினைக்கமாட்டாடா...”

“.............................”

எவ்வளவு உருக்கமாகக் கதறியும் ‘பிள்ளை மனம் கல்’லாக அழுத்தமாக, அமைதியாக நின்றான் துரை.

“நாக்குல நரம்பில்லாமப் பேசி, பாவத்தை மூட்டை கட்டாதே...!”

“.............................”

அம்மாவின் பேச்சை அலட்சியப்படுத்தினான்.

அமைதியாய் உச்சி முகட்டை வெறித்தபடி நின்றான்.

“மாட்டு வண்டி குடையடிச்சி, கால்’ல சக்கரம் ஏறி, எலும்பு முறிஞ்சி, மாவுக்கட்டோட, கிட்டத்தட்ட மூணுமாசமா வீட்டோடத்தான் இருக்கார் தெரியுமோ...?”

“தெரியும்...! அதுவும் தெரியும்... எந்தெந்த நிலம் யார் யார் யாருக்கு ரிஜிஸ்தர் ஆயிருக்குன்னும் தெரியும்...”

“அப்பாவுக்கு கால் எப்படி இருக்கு...? ன்னு பார்க்க வரலேன்னாலும், நிலம் நீச்சு ஏன் வித்தார்..? எதுக்கு வித்தார்..? னு தெரிஞ்சிக்கவாவது வந்தியே...!”

குந்தலாம்பாளின் கண்களில் அனிச்சையாக வழிந்தது கண்ணீர்.

“.............................”

‘அம்மா, கண்ணீர்க் காட்டி, சென்டிமெண்ட் பேசுகிறாள். காம்ப்ரமைஸ் பேசிக் காரியத்தைக் கெடுத்துக்கொண்டுவிடக் கூடாது...’

துரையின் மனம் தந்திரமாகச் சுயநலக் கணக்குப் போட்டது.

அம்மாவின் கண்பார்வையைத் தவிர்க்க, முற்றத்து துளசி மாடத்தைப் பார்த்தபடி விறைப்பாக நின்றான்.

***************************

“நீ உன் மனசுல உள்ளதைக் கொட்டிட்டே. இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ...!”

“.............................”

குந்தலாம்பாளின் உறுதியான, தெளிவான, அழுத்தமான எதிர்த் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை துரை.

அவன் பார்வையில் சுதாரிப்புத் தெரிந்தது.

‘என்னதான் சொல்கிறாள் பார்ப்போமே...!’

அலட்சியமாய் காதில் வாங்குபவன் போல் காட்டிக் கொண்டான்.

“அப்பா வித்ததெல்லாம் அவரே வியர்வை சிந்தி உழைச்சிச் சம்பாதிச்ச சொத்து. அதுக்கு உரிமை கொண்டாடவோ, நியாயம் கேட்கவோ உனக்கு எந்தத் தகுதியும், உரிமையும் கிடையாது...”

“.............................”

சுயத்தைத் தொடும், எதிர்பாராத தாக்குதல்.

தொட்டவுடன் சுருக்கிக்கொள்ளும் தொட்டால் சிணுங்கியைப் போல சட்டெனச் சுருங்கிப் போனான் துரை.

குந்தலாம்பாளே தொடர்ந்தாள்...

“ரகசியத் தகவல் கொடுத்தவாளுக்கு இந்தச் சூட்சுமம் தெரியலை போல இருக்கு... நீயாவது அவாகிட்டே விவரமா எடுத்துச் சொல்லு, தெரிஞ்சிக்கட்டும்...”

குரலில் ஏளனத்துடன் கூடிய உறுதி இருந்தது.

“............................”

துரைராமன் உதட்டைக் கடித்துக்கொண்டான்.

‘அவசரப்பட்டு பேசிவிட்டோமே!’ உணர்ந்தான்.

******************************

“பணத்தேவை’ன்னா என்னைக் கேட்கலாமே...! நான் ஏற்பாடு பண்ணித் தந்திருப்பனே... எதுக்கு நிலம் விக்கணும்கறேன்...?” பூசி மெழுகிப் பேசினான்.

“.............................”

மகனின் ‘அகட, விகட, தந்திர, பேச்சுமாத்து’ ரசவாதம் கண்டு குந்தலாம்பாள் ஸ்தம்பித்து நின்றாள்.

‘பொய் கையெழுத்துப் போட்டதா வாய்க் கூசாமச் சொன்னவன், இப்போ இப்படிப் பசப்பறானே...! கொலைபாதகன்...!’

பொருமியது பெற்ற வயிறு.

‘தவறாகப் பேசிவிட்டோம்!’ என்று எள் முனையளவு உறுத்தியிருக்கிறது.

‘பேச்சை மாற்றுகிறான்...! பசப்புகிறான்...! நடிக்கிறான்...!’

‘மனசு பூராவும் கபடு...’

“.............................”

‘எதிர்வாதம் செய்தால், அப்பாவை அறுத்துக்கட்டியதைப் போல என்னையும் அறுத்துக் கட்டுவான்.’

‘அதனால் ஒன்றும் நஷ்டமில்லை என்றாலும், குடும்பத்தின் மூத்தத் தலைவிக்கு அது அழகல்லவே!’

‘ஊசியை ஊசியால்தான் எடுக்கவேண்டும்...’

‘அவன் கவுட்டுத்தனத்தை அவன் போக்கிலேயே அடித்துத் தூக்க வேண்டும்...’

தீர்மானித்தாள்.

“............................”

‘அம்மாவின் அமைதிக்குப் பின் இருப்பதென்ன..?’

குழப்பத்தில், மௌனமாக நின்றான் துரை.

************************

“ஏண்டா துரை... அப்பா குணம் தெரியாதா நோக்கு...? அவர் உன்னண்ட பணம் கேட்டு வாங்குவாரா...?”

“அ...”

ஏதோ பேச வாயெடுத்தவனைப் பேசவே விடவில்லை. முதலெழுத்தோடு முடக்கினாள்.

“உன் கோபம் புரியறது... அப்பா உசுருக்கு உசுரா வெச்சிருந்த நிலங்களை வித்துட்டாரேனு உன் மனசு கடந்து துடிக்கறது. நீ பேசறே...!”

“.............................”

“பேசி எதுவும் ஆகப்போறதில்லே...”

“.............................”

‘அம்மா என்ன சொல்ல வருகிறாள்...?’ புரியவில்லை. கவனமாகக் காது கொடுத்தான்.

“பூர்வீக சொத்தைத்தான், உன் கையெழுத்து இல்லாம சுதந்திரமா கிரயம் பண்ண முடியாது.

“.............................”

“இன்னொண்ணும் புரிஞ்சிக்கா, கோவில், மடம், நூலகம், சமுதாயக்கூடம், னு பொது ஸ்தாபனத்துக்கு உயில் எழுதி வைக்க உங்கப்பாவுக்கு, பூர்ண பாத்யதை உண்டு... உன்னைக் கலந்துக்கவேண்டிய அவசியமே இல்லே.”

“.............................”

‘அம்மாவா இப்படியெல்லாம் பேசறா...?’ அதிர்ச்சியில் உறைந்தான்.

“ஒம்மேல உள்ள வருத்தத்துல அப்படி எதுவும் செஞ்சுட்டா, உன்னால என்ன பண்ணமுடியும்... அதையும் ஞாபகத்துல வெச்சுக்கோ...”

“.............................”

‘அம்மா செய்தி சொல்லவில்லை..! எச்சரிக்கிறாள்...!’

புரிந்தது துரைராமனுக்கு.

“அப்பாவோட கோபத்தைக் கிளறாம இருந்தா எல்லாருக்கும், எல்லாத்துக்கும் நல்லது...”

சொல்லி முடித்து முகத்தைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.

‘எப்படித் தன்னால் இவ்வளவு கோர்வையாய்க், கபடமாகப் பேசமுடிகிறது...?’

குந்தலாம்பாளுக்கே வியப்பாக இருந்தது.

‘பொது நிறுவனத்துக்கோ, சமூக சேவைக்காகவோ அப்பா உயில் எழுதிவிடுவாரோ...!’

‘பூர்வீக சொத்துக்கள் கைவிட்டுப் போய்விடுமோ...?’

பயத்தில், துரைராமன் உள்ளூர உதறலெடுத்து நிற்பதைப் பார்த்தாள் பெற்ற தாய்.

******************************

அம்மாவின் அன்பு எப்போதுமே, கண்மூடித்தனமானதல்லவா. காட்டாறல்லவா...

“பேண்ட் சூட்டெல்லாம் கழட்டிப் போட்டுட்டு, குளிச்சி, ஆகாரம் பண்ணு... வா... ராத்திரி எப்போ சாப்டதோ என்னமோ...!”

எதுவுமே நடக்காததைப் போல இயல்பாகச் சொன்னாள் குந்தலாம்பாள்.

“சரிம்மா...!”

‘காமரா உள்’ளுக்குச் சென்றான்.

“மோகனா... கொழந்தைய நான் குளிப்பாட்றேன், போ... நீ ரெண்டு சொம்பு ஜலத்தை கொட்டிண்டு சீக்கிரமா வா...”

“.............................”

“சரி...!” தலையசைத்தாள் மோகனா.

அவள் அப்படித்தான். மோகனா வாய்திறப்பது கொட்டாவி விடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும்தான்...

அவளுக்கும் சேர்த்து வைத்துத்தான் துரை பேசுகிறானே...

துரையும், மோகனாவும் சாப்பிட வரும்முன், ஸ்வாமி அறையில் வந்து உட்கார்ந்தாள். தன் மாமனார் வரைந்து பூஜையில் வைத்திருக்கும் ‘அம்பாள்’ படத்தின் முன் கண்மூடி அமர்ந்தாள்.

Representational Image
Representational Image

அந்த அம்பாள்தான் அவளுக்கு எல்லாம்.

எப்படிப்பட்ட பிரச்சனைகள் மலைபோல வந்தாலும் பனி போல நீக்கிவிடும் சக்தி நிறைந்த தெய்வம்.

இதுவரை அவள் நம்பிக்கை வீண்போனதே இல்லை.

நம்பிக்கைதானே வாழ்க்கை.

********************************

“மனசு சரியில்லையா... மாட்டுத் தொழுவத்துக்குப் போ. பசுமாட்டுக்கிட்டே உன் குறையைச் சொல்லி பிரார்த்தனை செய். அது நடமாடும் அம்பாள். காமதேனு உன் குறையைப் போக்குவாள்... இது சத்தியம்...!” மாமியார் அடிக்கடி தீர்மானமாகச் சொல்வாள். அதையும் செய்தாள்.

Representational Image
Representational Image

***************************

மோகனாவுக்கு மாநிறம்.

துரையை விட அரை அங்குலம் உயரம் குறைச்சல்.

குடும்பப் பாங்கான முகவெட்டு.

‘ம்...!’ ‘ஓ!...’ ‘சரி...!’ ‘ம்ஹூம்...!’

அதிகபட்டமாக மூன்று வார்த்தைகளிலோ, அல்லது வார்த்தைகளே இல்லாத தலையாட்டல், கைஜாடை... இவைகளே அவள் பாஷை.

‘இரண்டு மூன்று வார்த்தைகளில் கூட அவளுக்குப் பேசத்தெரியாதோ...?’

சமயத்தில் தோன்றும் குந்தலாம்பாளுக்கு.

‘ஒரு வேளை இங்கே இப்படி அழுத்தக்காரியாய் நடித்துவிட்டு, சென்னையில் துரையுடன் கலகலப்பாய்ப் பேசுவாளோ என்னமோ...’

சந்தேகப்படுவாள் குந்தலாம்பாள்.

‘எந்தப் புத்துல எந்தப் பாம்போ...!’ சில நேரம் நினைப்பாள்.

குளித்துவிட்டு வந்து அம்மா தயாராய் போட்டிருந்த இலை முன் அமர்ந்தான்.

Representational Image
Representational Image

துரையால் இயல்பாக இருக்க முடியவில்லை.

அம்மாவிடம் தாறுமாறாகப் பேசி வாங்கிக்கட்டிக்கொண்ட குற்ற உணர்வும் உறுத்தியது.

அம்மா பரிமாறியதில் ஒரு வித இயந்திரத் தன்மை இருந்ததாகப் பட்டது.

வழக்கமாகப் பேசிக்கொண்டே ருசித்துச் சாப்பிடும் துரை இன்று பேசாமல், பசிக்கு வயிற்றை நிரப்பினான்.

சாப்பாடானதும், கிளம்பிப் போய்விட்டான்.

வேறு எங்கே போக்கிடம் அவனுக்கு.

‘குடிகேடி’ கிட்டாவைத்தான் தேடிப் போவான்.

கிட்டா என்று அழைக்கப்படும் அவருக்கு கிருஷ்ணசாமி என்பது நாமதேயம்.

அது மருவி கிட்டாவய்யாவாகி, கிட்டப்பா எனக் குறைந்தது.

காலப்போக்கல், கிட்டப்பா என்பதும் சுருங்கி, கிட்டா என்றாகிவிட்டது.

போஸ்டல் அட்ரஸில் கூட கிட்டா என்கிற கிருஷ்ணசாமி என்று எழுதினால்தான் போஸ்டல் கவர் உடையாமல் அவரிடம் போய்ச்சேரும்.

இல்லையேல் அதே இனிஷியல் உள்ள மற்ற இரண்டு கிருஷ்ணய்யாவிடமோ, கிருஷ்ணமூர்த்தியுடமோ டெலிவரி ஆகி, அவர்கள் உடைத்துப் படித்துவிட்டு, “நம்முதுல்ல...!” என்று கொடுத்தனுப்புவார்கள்.

*********************

கிட்டப்பாவின் பூர்வீகம் அந்தனூர்.

பூர்வீக வீடு ஒன்றும் இருக்கிறது.

மேஞ்செலவுக்கு பைசா இல்லாமல் பூர்வீக வீட்டை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்...?’

வீட்டைத் தின்று பசியாற முடியாதே...!

வாரிசுகள் இல்லையென்றாலும், இருக்கிற இரண்டு பேர் இரண்டு வேளையாவது சாப்பிடவேண்டுமே...!

நித்திய கண்டம் பூர்ணாயுசாய் இருக்கும், சீக்காளி மனைவி.

அரசு மருத்துவமனையில், மனைவிக்கு வைத்தியம் பார்த்து, ஓசி மருந்து மாத்திரை வாங்கித் தந்து, ஒப்பேற்றிவிடுவார்.

Representational Image
Representational Image

குடும்பம் நடந்தாக வேண்டுமே...

ஜீவனோபாயத்திற்காகக் கல்யாண தரகு, மாட்டுத் தரகு, வீட்டுத் தரகு, நிலத்தரகு, பத்திரம் எழுதல், பண்ணை வீட்டில் கணக்கு எழுதித் தருவது... என்று எதையும் செய்தார் அவர்.

எதைச் செய்தாலும் அதில் அவர் தன் முத்திரையைப் பதிக்கத் தவற மாட்டார்.

***************************

கிட்டாவய்யாவின் மாட்டுத் தரகு பற்றித் தெரிந்தாலே, அவரின் மற்றத் தரகுப் பித்தலாட்டங்களைப் பற்றி நீங்கள் அனுமானித்துவிடலாம்.

ஒரு கிடேரிக் கன்று பொதுவாக ஒன்னரை முதல் இரண்டு வயதில் பாலியல் முதிர்ச்சியைப் (Sexual Maturity) பெறுகிறது.

அதன் பின் 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவ அறிகுறிகளை (Estrous Signs) வெளிப்படுத்தும்.

அதைக் கண்டபின், காளைக்கு விட ஏற்பாடு நடக்கும். (Allowing Cow to be Mounted)

(Small-scale Reflections on a Great House என்ற இந்திய ஆங்கிலக் கவிஞரின் A K Ramanujan அவர்கள் தன் கவிதையில் இந்த நிகழ்வை ரசனையுடன் குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குறியது.

lame wandering cows from nowhere
have been known to be tethered,
given a name, encouraged


to get pregnant in the broad daylight
of the street under the elders'
supervision, the girls hiding
behind windows with holes in them.

அந்தனூரிலேயே வீரியமிக்க பொலிகாளைகள் (Breeding Bulls) உண்டு. மாடு போடுவதற்கு வசதியாக அடைப்புகள் கட்டி, இதை ஒரு சமுதாயப் பணியாகவே செய்து வருபவர் பண்ணையார் பரமானந்தம்.

Representational Image
Representational Image

போஷாக்குக் குறைவால், பல வருடங்கள் சினைப்படாமல், நாள் பட்டுச் சினைப்பட்டு, ஒரே ஒரு கன்று ஈன்ற மாட்டை. இரண்டாவது ஈத்து என்று சொல்லி விற்றுவிடுவார்.

மலட்டுத் தன்மை உள்ள கிடேரியை கண் முன் காட்டுவார்.

“சினைப் பிடிச்சி வித்தா ரெண்டு மடங்கு வெலைபோகும். இதே கன்னு போட்டதும், அதுவும் கிடேரிக்கன்னு போட்டுதோ... மூணு மடங்கு விலை போகும்...” என்று ஆவலைத் தூண்டுவார்.

“மாட்டின் முதுகில் சுழி காட்டுவார்.

இப்படிச் சுழி உள்ள கிடேரி அபூர்வம்...” என்பார்.

“வேண்டாம்னா சொல்லிடுங்கோ... விலை அதிகமாக் கொடுக்க ரெண்டு மூணு பார்ட்டி இருக்கு...?” சற்றே முறுக்குவார்.

கிட்டாவின் பேச்சு சாதுர்யத்தில் மயங்கி, வாங்கிய கிடேரி ஈத்தடிக்கவில்லையே...? என்று கேட்டால், நாட்டு மருத்துவனிடம் பூட்டி விடுவார்.

“என் அனுபவத்துல சொல்றேன்... இங்கிலீஷ் வைத்தியத்துல சினை பிடிக்க மருந்தே கிடையாது...” அடித்துப் பேசிக் குழப்பிவிடுவார்.”

“யானை நெருஞ்சி இலையோட, கைச்சரக்குப் போட்டு விழுது அறைச்சி ஒரு மண்டலம் கொடுக்கணும்...” என்பான் மாட்டு வைத்தியன்.

ஏகமாய்ப் பணம் கேட்பான். ஒரு மண்டலத்தில் மாடு எலும்பும் தோலுமாக ஆகிவிடுவதும் உண்டு.

பல நூறுகள் நஷ்டப்பட்டபின், “சரியா வர்லீங்க...”, என்று கிட்டாவிடமே வந்து சரணடைந்து விடுவான் மாடு வாங்கியவன்.

“நல்ல சுழி உள்ள கிடேரி. பராமரிக்க முடியலைங்கறேள்...! சரி வித்துத்தரேன்...!” என்று வேறு ஒருவன் தலையில் கட்டிவிடுவார்.

வாங்கின இடத்திலும், விற்றஇடத்திலும் ஏகமாய் கமிஷன் வாங்கிவிடுவார்.

************************

இரண்டரை மூன்று வயதில், கிடேரியின் கொம்பின் அடிப்பாகத்தில் வட்டமாகக் ஒரு வளையம் தோன்றுமல்லவா...?

அதன்பிறகு கொம்பு வளர்ந்து வளர்ந்து வருடத்திற்கு ஒரு வளையம் வீதம் தெரியும். அந்த வளையங்களைக் கண்டு எவருமே மாட்டின் வயதைச் சொல்லிவிடலாம்.

கிட்டாஎன்ன செய்வார் தெரியுமா...? கொம்புகளை நன்கு லாகவமாகச் சீவிவிடுவார். பட்டைச் சீலைப் போட்டுத் தேய்த்துத் தேய்த்து வழுவழுப்பாக்குவார்.

எனாமல் பெயிண்ட் ஒரு இரண்டு கோட் அடித்துவிடுவார்.

The Way Of The World, என்ற William Congreve ன் Restoratoration Drama வில், அரிதாரத்தைப் பூசிக்காண்டு இளைனின் காதல் வலைக்குள் புகும் கிழவிகளைப் போல...

தலைச்சன் ஈத்து, இரண்டாம் ஈத்து என்று ஏமாறுபவர்களின் தரத்திற்குத் தகுந்தாற்போல் கிழட்டு மாட்டை தலையில் கட்டிவிடுவார்.

சமயத்தில் அனுபவமுள்ள தரகனுடன் வந்துவிட்டால், மாட்டுத் தரகன் மாட்டுத்தரகனை விட்டுக்கொடுக்கமாட்டான். கமிஷன் கை மாறும்.

***************************

பிறந்தவுடன் கன்றுக்கு இரண்டு (ஒரு ஜோடி) பால் பற்களே இருக்கும்.

முதல் வார முடிவில் பக்கத்திற்கு ஒன்றாக இன்னும் இரண்டு பற்கள் முளைத்திருக்கும்.

நான்காவது வார முடிவில் மொத்தம் (நாலு ஜோடி) அதாவது எட்டுப் பால் பற்கள் (தற்காலிகப் பற்கள்) இருக்கும்.

மாட்டின் கீழ்த்தாடை உதட்டைச் சற்றே விரித்து, பற்களின் எண்ணிக்கையைச் சுலபமாக எண்ணிவிடலாம்.

இரண்டு ,இரண்டரை வயதில் கிடேரி பருவத்துக்கு வரும் நேரத்தில் பால் பற்கள் ஒவ்வொன்றாக விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும்.

ஆறு மாதத்திற்கு ஒரு பல் என விழுந்து முளைக்கும்.

அறிமுகமில்லாத தரகனோடு வந்தால், பல் பிடிச்சிப் பாத்துடுங்க என்று அழைத்துப்போவார்.

“கையை சுத்தமாகக் கழுவிக்கங்க...” என்று பைப்படிக்கு அழைத்துப் போகும்பேதே அவனை சரி கட்டிவிடுவார். அவனுக்கு இத்தனை கமிஷன் என்று பல்லிடுக்கில் பேரம் பேசிவிடுவார்.

எங்கு எதில், எப்படிப் பணம் கறப்பது என்பதில் கில்லாடி அவர்.

கிட்டா மூலம், ரொட்டேஷனில் மாடு வாங்கிக் கொடுத்து, கர்த்தாவிடம் கோதானம் வாங்கியே சிதம்பர சாஸ்திரிகள், இரண்டே வருடங்களில், பனங்கிளாஸ் போட்டு ஒட்டு வீடு கட்டினார் என்று ஊரில் ஒரு பேச்சு உண்டு.

**************************

கிட்டாவின் கல்யாணத்தரகு கோவில் வளாகங்களில்தான் நடக்கும்.

கொஞ்சம் கூடப் பொருத்தமே இல்லாத ஜாதகங்களைக் கூட, கட்டத்தில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து, சேர்த்து வைத்துவிடுவார்.

Representational Image
Representational Image

கலியாணம் ஆனதும், ‘ஏதோ நம்ம விதி...’ என்று இழுத்துக் கட்டிக்கொண்டு ஓடுகிற தம்பதியர்களையெல்லாம், தன் ‘ரெஃபரென்ஸ்’க்கு வைத்துக்கொள்வார்.

கிட்டாவின் கல்யாணத் தரகு மூலம்,

மணவரையில் நின்ற திருமணங்கள்...

முகூர்த்த நேரத்தில் ஓடிவிட்ட மணப்பெண்...

வாழாவெட்டியாகக் காலந்தள்ளுவபவர்கள்...

அறுத்துக் கட்டியவர்கள்...

கள்ளக் காதலனோடு ஓடியவர்கள்...

.....................................................

இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

இத்தனையும் பார்த்தாலும், கேள்விப்பட்டாலும்கூட கிட்டாவுக்கென ‘க்ளையண்ட்ஸ்’ வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருக்கத்தானே செய்வார்கள்.

************************

அகடவிகடம் செய்து, ஊரை ஏமாற்றுவது ஒரு புறமிருக்க, மித்ரபேதம் பண்ணுவது கை வந்த கலை அவருக்கு.

குடும்பத்துக்குள் கலசல் ஏற்படுத்துவார்.

அங்கு பேசி, இங்குச் சொல்லி, பிரிவினையை ஏற்படுத்தியபிறகு இரண்டு இடத்திலும் கடன், கைமாற்று வாங்கி காலட்ஷேபம் செய்பவர்...

‘இவ்வளவு துர்க் குணங்கள் இருக்கும் இவரிடம் எப்படி எல்லாரும் போய் விழுகிறார்கள்...?’

யாருக்காவது சந்தேகம் வந்தால் அது நியாயமே...

அவரோடு ஒரு முறை பேசிவிட்டால் மறுமுறைபேசத் தோன்றும் அளவுக்கு நாவன்மை.

‘மக்களே போல்வர் கயவர்’ னு திருவள்ளுவர் சொல்றதுக்கு இவர்தான் பொருத்தமான உதாரணம்.

பாரதம், பாகவதம், விஷ்ணுபுராணம், பைபிள், குர்ரான், கீதை இதிலிருந்தெல்லாம் பொருத்தமான உதாரணங்களை எடுத்துக் கையாள்வார்.

கேட்பவரை மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பைப் போல செய்துவிடுவார்.

John Milton எழுதிய Paradise Lost எனும் காப்பியத்தின் ஒன்பதாம் காண்டத்தில் Satan எப்படி Eve விடம் நைச்சியமாகப் பேசி, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நடுவே நிரந்தரப் பிளவை ஏற்படுத்துவானோ…

அதுபோலப் பல குடும்பங்களில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்திய மகான்தான் கிட்டா.

துரைராமனுக்கு கிட்டாவின் பேச்சு பிடித்தது. வலையில் வீழ்ந்து விட்டான்.

‘வினாச காலே விபரீத புத்தி’

அவன் தலையெழுத்தை யார்தான் மாற்ற முடியும்...

**************************

துரை ராமன் கிளம்பிப் போனதும், துவைத்த துணிகளை முற்றத்தில் காய வைத்தாள் குந்தலாம்பாள்.

Representational Image
Representational Image

ஒரு எட்டு, மாட்டுத்தொழுவம் சென்று, பசுக்கள் பரத்திப் போட்ட வைக்கோலைத் திரட்டி கவணைக்குள் போட்டாள்.

சாணத்தை மாடுகளின் குளம்புகளில் மிதிபடாமல் தள்ளிவிட்டாள்.

பின் கட்டு கிணற்றடி முற்றத்தில் உட்கார்ந்து தலையைக் கோதிக்கொண்டிருந்த மோகனாவிடம் வந்தாள்.

“நீ ஒக்காரு. சிக்கலெடுத்துப் பின்னிவிடறேன்.” என்றாள்.

பட்டகசாலைக்குச் சென்று பிளாஸ்ட்டிக் ஸ்டூல் எடுத்து வந்தாள் உயரத்திற்கு.

பொறுமையாகச் சிக்கல் எடுத்து, சீப்பாலும், விரல்களாலும் மாற்றி மாற்றிக் கோதிவிட்டு, அதிக முடி கொட்டிவிடாமல், தலைபின்னிவிட்டாள்.

Representational Image
Representational Image

ராமபிரானை கங்கைக்கரையில் பார்த்ததும் குகன் ஓடோடி வந்தான் என்று ராமாயணச் சொற்பொழிவாளர்கள், சிலாகித்துச் சொல்வார்கள் அல்லவா…?

அதுபோல, வெகு நாள் கழித்து மாதய்யாவை வயக்காட்டில் பார்த்ததும், கையில் இருந்த நாற்றுக் கட்டை அப்படியேப் போட்டுவிட்டு கலியன் ஓடோடி வந்தான்.

Representational Image
Representational Image

நடவாட்கள் நிமிர்ந்து பார்த்தனர்.

அவர்கள் பார்வையில் அய்யாவின் மேலிருந்த மரியாதை வெளிப்பட்டது.

***************************

“கால் நோவோட நீங்களே ஏன் வண்டிய ஓட்டிக்கிட்டு வயலுக்கு வரணும்...? நான் பாத்துக்கிட மாட்டேனா...?’

“..................”

“அளுத்தமா புடிச்சிக்கட்டு உக்காருங்க... மாட்டை அவுத்து வுடறேன்...”

“எத்தினி நாள்தான் வீட்லயே கட்டிப்போட்டாப்ல உட்கார்ந்திருக்கறது. அதான் கௌம்பி வந்துட்டேன்.”

“ சொல்லியிருந்தா நானே வண்டி கட்டி கூட்டியாந்திருப்பனே...” கரிசனத்தோடு சொன்னான் கலியன்.

“அது கெடக்கு வுடு... நமக்கு வழக்கமா வர்ற நடவாளுங்கதானே...?”

“ஆமாங்க...!”

“பாத்தா அப்படித் தெரியலையே...! ஏதோ துக்கத்துக்கு வந்தவங்க மாதிரி ‘உம்முன்னு... உர்...உர்...னு’ மூஞ்சியத் தூக்கி வெச்சிக்கிட்டு... என்னா நடவு நடக்குது இங்கே...! ம்...!”

“.....................”

மாதய்யாவின் கலாய்ப்பை அமைதியாக ரசித்தான் கலியன்.

கலியனிடம் சொல்லிக்கொண்டே வலது கையைக் கவிழ்த்து, கட்டைவிரலை வலப் பொட்டில் ஊன்றி, மீதி நான்கு விரல்கைளைச் சேர்த்துப் புருவத்துக்கு லகான் போட்டார்.

நடவாட்களை நோக்கிப் பார்வையை வீசினார்.

“நடவு மெட்டுக் கட்டி, கொலவ போட்டுகிணு நாத்து நடாம, இது என்ன மவுன நடவுங்கிறேன்....!”

“.....................”

“ஏ வீரப்பம் மொவளே...! ஒம் பாட்டுக் கூத்தெல்லாம் எங்கே போச்சு...?

“.....................”

அமைதியை யார் உடைப்பது...? (break the ice) என்று தெரியாமல் நடவாட்கள் அமைதியாக அய்யாவைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.

“கட்டப் பொவயிலைய திணிச்சி வாய அடச்சிட்டயோ...? வீரம்பம் மொவளே.. ஒன்னத்தான் கேக்கேன்...”

சூழ்நிலையின் இறுக்கத்தை மேலும் தளர்த்தினார்.

மாதய்யாவைப் போலவே கையால் புருவத்திற்கு மேல் லகான் போட்டபடி இடுப்பை ஏற்றி ஒரு சதிர் வெட்டு வெட்டினாள்.

“கூப்பிட்டியளா...?” அபிநயித்தபடியே கேட்டாள் வீரப்பன் மகள் பூலோகம்.

மாதய்யா, கலியன் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

இறுக்கமான சூழல் இயல்பு நிலைக்கு வந்தது.

******************************

“நான் பாட்டுக் கட்டுவேனாம்... நீங்க வாங்கிப் பாடுவீங்களாம்...!”

“.......................”

“கால் நோவோட அய்யாவுக்கு ஏன் சிரமம்...?” என்றான் கலியன்.

“போடாப் போக்கத்தவனே...! வயவெளிக் காத்துப் பட்டதுமே கால் நோவெல்லாம் பறந்தோடிப் போயிருச்சுன்னேன்.”

“.......................”

கலியன் அமைதியாய் முறுவலித்தான்...

“வாங்கிக் பாடுங்கவேய்...” என்றார் மறுபடியும்

“பூலோகமாம் பூலோகம்....”

“பூலோகமாம் பூலோகம்...”

நடவாள் பூலோகத்தை பார்த்தபடி எல்லோரும் வாங்கிக்போட்டுப் பாடினார்கள்.

அடுத்த அடி சொன்னார்

“நாத்தரிசி... நடவரிசி...”

“..................................”

ஒரே அமைதி. யாரும் வாய் திறக்கவில்லை.

“என்னாது...யாரும் வாங்கிப் பாடக் காணோம்...”

“ஆங்....! எங்கள கூறு கெட்டதுங்கனு நினைச்சிப் பாடறீயளா...! நடவு நடக்கு...! நாத்து வுடற பாட்டைப் பாடுவீக...! வாங்கிப் பாடலைனு கொறயும் படுவீக...!”

நீட்டி முழக்கினாள் சின்னப்பொண்ணு, சிரித்துக்கொண்டே...

Representational Image
Representational Image

தன் தவறு உணர்ந்தார் மாதய்யா.

“நீங்க ‘நெகாவா’த்தான் இருக்கீயளா? ன்னு சோதனை பண்ணிப் பாத்தேன்வேய்...!” சமாளித்தார்.

“இப்பப் பாடறேன் கேட்டுக்க...”

“..................................”

நாலு மூல வயலுக் குள்ற...

நாத்து நடும் பெண்டுகளே...

நானும் கொஞ்சம் ஏழை யடி....”

நடவு கொஞ்சம் செருத்துப் போடு...

“அய்யா கொஞ்சம் ஏழை யடி....”

“நடவு செருத்துப் போடுங்கடீ.....”

சின்னப் பொண்ணு கேலியாய்க் கத்தினாள்.

நடவு நங்கைகள் எல்லாருமாய், கண்ணாடி வளையல்களைக் குலுக்கிக் கொண்டு குலவைக் கூவினார்கள்.

பாட்டும், குலவையும், கும்மாளமுமாக நடவு நட்டார்கள்.

பாட்டு தொடர்ந்தார் மாதய்யா.

பெண்டுகளே.... பெண்டுகளே...

தண்டை போட்டப் பெண்டுகளே...

தண்டைச் சத்தம் முந்துதடீ...

உங்க தண்டைச் சத்தம்தான் முந்துதடீ....

நடவு கொஞ்சம் பிந்துதடீ...

“அய்யா வயல்ல நடவு பிந்துதாண்டீ... கரையேறுக்கடீ... முந்திப் போவோம் பசியாற.....”

சின்னப்பொண்ணு மீண்டும் எதிர்ப்பாட்டுப் பாடினாள்...

சினிமாவில் ஹீரோயின் வசனம் பேசி அபிநயம் பிடிக்கும்போது தியேட்டர் முழுதும் கூக்குரலிட்டுக் கத்துமே, அதுபோல நடவாட்கள் எல்லோரும் கத்திக் குலவையிட்டு சந்தோஷமாகச் சிரிப்பும் கும்மாளியுமாய் நாற்று நட்டனர்.

************************

மாதய்யா கவலையெல்லாம் மறந்து மகிழ்ச்சியில் திளைத்தார்.

இப்படி ஆட்டமும் கும்மாளமுமாக, விகல்பமில்லாமல் சிரித்து, மகிழ்ந்து விவசாயம் செய்வதனால்தானோ என்னவோ... மாதய்யா காணிகளில் மாத்திரம், வழக்கமாகப் பயிர் செழித்துத் தானியம் கொழிக்கிறது.

ஊரே பஞ்சத்தில் காய்ந்தாலும், மாதய்யாவுக்கு மட்டும் குறைவின்றி விளைந்தது.

முதல் ஈடு நடவு முடிந்தது.

கரையேறினார்கள்.

கன்னி வாய்க்காலில் கை கால்கள் சுத்தம் செய்துகொண்டார்கள்.

மரத்தடியில் அமர்ந்து பசியாறினார்கள்.

துணிவிரித்து கொஞ்ச நேரம் கட்டைச் சாய்த்து ஓய்வெடுத்தார்கள்.

அடுத்த ஈடு இறங்கி நட ஆரம்பித்தார்கள்.

******************************

நடவாட்கள் பசியாற வந்த நேரம், வண்டிக்குள்ளேயே சரிந்து படுத்தார் மாதய்யா.

அவரை அறியாமல் அப்படியே அசந்துவிட்டார்.

அடித்துப் போட்டாற்போல அப்படி ஒரு தூக்கம் தூங்கினார்.

மாதய்யா கண் விழித்தபோது, “அய்யா புறப்படலாங்களா...?” என்று கேட்டான் கலியன்.

நடவாட்கள் சென்றுவிட்டிருந்தனர்.

********************

“வண்டி பூட்டவாய்யா...?”

“பொளுதோட வூட்டுக்குப் போவப் பிடிக்கலை கலியா...”

“என்னங்கய்யா சொல்லுதீங்க...?”

“ஆமா கலியா...! மனசு ரொம்ப பெலஹீனமா இருக்கு. ரொம்ப நாளு இருக்கமாட்டேன்னு தோணுது...”

“பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்கய்யா..?” பதறினான் கலியன்.

“இல்ல கலியா... முன்னே மாதிரி ஓடியாட முடியலை. உடம்பு சோந்துச் சோந்து வருது...”

“..........................”

பழுப்பு நிறச் சேற்றுப் படுக்கையில், பாங்காய் பச்சைப் புடவையைக் கட்டிக் கொண்டு, ஒய்யாரமாய்த் தானிய லட்சுமி சயனித்திருப்பது போலிருந்த நடவு முடிந்த வயலில், அவர் கண்கள் நிலைத்திருந்தன.

“இன்னிக்கு நட்ட இந்த வய அறுவடைக்கு வரும்போது நான் இருக்கமாட்டேனோனு தோணுது கலியா...!”

“அய்யா...! உடம்புல நோவு...! மனசு பெலஹீனப்பட்டு ஏதேதோ பேசறீய. வீட்ல போயி நல்லாத் தூங்கி எளுந்தா தெம்பு வந்துரும்யா ...!”

“வீட்டுக்குப் போறதைப் பத்திப் பேசாத...! ” மாதய்யாவின் முகம் இறுகியது.

“..........................”

“திடீர்னு சொல்லாம கொள்ளாம. மவன் குடும்பத்தோட வந்து நிக்கிறான்கறேன்...”

“சின்னய்யாங்களா...?”

“காலடிபட்ட உங்களைப் பாக்க வந்திருக்காங்களோ.?”

“என்னைப் பாக்க வரலை... வயவெளிங்கள ஏன் கிரயம் பண்ணினேன்னு கேக்க வந்துருக்கான்கறேன்...” விரக்தியாகச் சிரித்தார்.

“நீங்க எதுனா கனமா வைசிப்புட்டீகளா...?”

“எதுவும் பேசலை...! அங்கே இருந்தா சரிவராதுன்னு வண்டிய கட்டிக்கிட்டு வந்துட்டேன்...”

“சின்னய்யா அவுராப் பேசலீங்க, கிட்டாய்யா... கிளப்பி விடுராருங்க...”

“அது உனக்குத் தெரியுது... எனக்குத் தெரியுது... அவனுக்குத் தெரியலையே...”

“அனுபவப்பட்டுத் தெரிஞ்சிக்குவாருய்யா...”

“அவனாவது... தெரிஞ்சிக்கறதாவது... நான் வேற ஒரு முடிவோட வந்திருக்கேன்...”

“சொல்லுங்கய்யா...”

“நம்ம கோவில் சம்பாக் காணிய, பொதுவுக்கு உயில் எளுதி வெச்சு அதுவளியா, நம்ம ஊர் பொணம் போறதுக்கு பாதை போட்ரலாமானு யோசிச்சேன். ஆனா அப்படி வேணாம்னு பாக்கறேன்..”

************************

காவிரிக்கரையில் ஓட்டுச் சார்ப்பு இறக்கி, பஸ் ஸ்டாப் போட்டு, அந்தனூரில் பஸ் நிற்க ஏற்பாடு செய்த மாதய்யா...

கூரைக்கட்டில் ஓராசிரியர் பள்ளியாக இருந்ததை ஓட்டுக்கட்டடத்தில் ஐந்தாய் வகுப்பு வரை செயல்பட வழி செய்த மாதய்யா...

கார்ப்பரேட் வங்கியை, அந்தனூர் அக்ரகாரத்துக்குக் கொண்டு வந்த மாதய்யா...

அரசாங்க ஆஸ்பத்திரியை அந்தனூரில் கட்ட ஆவன செய்த மாதய்யா.

உள்ளூரிலேயே விவசாய இலாக்கா, நெல் குடோன் எல்லாவற்றையும் கொண்டுவந்த மாதய்யா.

புளியமரத்தடியில் இருந்த மயான பூமிக்கு ஓட்டுச் சார்ப்புப் போட ஏற்பாடு செய்த மாதய்யா...

கப்பி ரோடு, சிமெண்ட் ரோடு, தெரு விளக்குகள்... தெருவுக்குத் தெருத் தண்ணீர் கிணறுகள், அடி பைப்புகள்….

இப்படி ஊரெங்கும் மாதய்யாவை பறைசாற்றும் அடையாளங்கள்.

எல்லாவற்றையும் யோசித்த கலியன், இப்போது

சுடுகாட்டுக்குப் போக தன் வயலில் பாதை போட நினைக்கும் மாதய்யாவைப் பெருமையோடு பார்த்தான்.

*************************

“ஏண்டா, கலியா... உன் அப்பனுக்குக் கையெளுத்துப் போடத் தெரியுமா... கைநாட்டா...?”

“அப்பாரு, பேரை எளுதுவாருங்க. முதியோர் கல்வீ’ல அது மட்டும் கத்துக்கிட்டாருங்க...”

‘ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறார் அய்யா...?’ காரணம் புரியாமல் விழித்தான் கலியன்.

“நீ...?”

“எனக்கும் என் பேரை எளுதவும் தெரியும்... பெரிய எளுந்துல எதுனா இருந்தா படிக்கவும் செய்வேங்க...”

“அப்படியா...”.

வெள்ளைத்தாளும், பழுத்துப் போன வெள்ளைத்தாளும், கோடு போட்டதும், போடாததுமாக கலப்பாய் செருகி வைத்திருந்த கிளிப் வைத்த பரீட்சை அட்டையை வண்டியின் கூண்டு வளைவுப் பிரம்பிடுக்கிலிருந்து எடுத்தார்.

ஒவ்வொரு தாளாகப் புரட்டி ஒரு தாளை எடுத்து மேலே வைத்துக்கொண்டார்.

உட்காரும் பகுதியில் வைக்கோலுக்கு மேல் விரித்த ஜமக்காளத்தைத் தூக்கினார்.

அங்கே வைத்திருந்த கடுக்காய் இங்கிக் குப்பியைத் திறந்துவைத்துக்கொண்டார்.

ஸ்டீல் கட்டை பேனா முள்ளை கடுக்காய் கவனமாக இங்க்’கில் தோய்த்துத் தோய்த்து எழுதினார்

கலியன் மதவு | சமூக நாவல் | அத்தியாயம் – 12

“எழுதிய தாளில் வலது அடிப்பக்கத்தில் ஒரு இடத்தில் விரல் வைத்துக் காட்டி “இங்கே தொப்ளான்னு எழுது என்றார்.

கலியனும் ஏன்...? எதற்கு...? என்றெல்லாம் கேட்காமல் அய்யா சொன்னபடி செய்தான்.

இப்படியாக நாலு இடங்களில் ‘தொப்ளன்’ என்று எழுதினான்.

ஒரே ஒரு தாளில் ‘கலியன்’ என்றும் எழுதினான் .

எல்லாக் காகிதங்களையும் கத்தையாக மடித்து கலியன் கையில் கொடுத்தார்.

“இதை ஜாக்கிரதையா வீட்டுல வெச்சிக்க... பின்னால உபயோகப்படும்...” என்றார்.

************************

கலியனுக்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை... கொடுத்ததை பணிவோடு வாங்கினான்.

மாதய்யா விவரமாகச் சொன்னார்.

“கலியா... என் நிலபுலங்கள் பூராவும் உன் அப்பன் குத்தகைக்குப் பார்த்துக்கிட்டு இருந்தான்தானே...

‘குத்தகையா?’ ஒரே குழப்பமாக இருந்தது கலியனுக்கு.

‘அய்யா என்ன சொல்றாரு?’ கேள்வியே நிறைந்திருந்தது கலியனின் மௌனத்தில்.

அவன் இருக்கற வரைக்கும் நியாயமா குத்தகை பாக்கி இல்லாம அளந்துட்டான்...”

அவன் செத்த பிறகு அவனைத் தொடர்ந்து நீ பார்த்து, ஒரு போகம் சரியாவும் அளந்துட்டே...” என்றார்.

“அய்யா... என்ன சொல்றீங்க...! காலங்காலமா நீங்கதானே சொந்தமா சாகுபடி பண்றீங்க...” வாய்விட்டுக் கேட்டே விட்டான்.

“நான் சொந்த சாகுபடி செய்ததா நீ சொல்லவேக் கூடாது... உன் அப்பாவுக்குப் பிறகு, நீ என் வயலையெல்லாம் குத்தகை எடுத்துக்கிட்டு எனக்கு நெல் அளக்கறே... அதுபோலத்தான் நீ சொல்லணும்...”

“யாருகிட்டேய்யா... அப்படிச் சொல்லணும்?”

“உடனடியா யாருகிட்டயும் சொல்லவேணாம்... நான் எது செஞ்சாலும் காரணமில்லாம செய்வேனா...? எனக்குப் பின்னால என் மவன் ஏதாவது ரவுசு பண்ணுவான்.”

“கிட்டாய்யா தூண்டுதல்ல கோர்ட்டு கேசுனு ஏதாவது வியாஜ்யம் பண்ணுவான்.”

“அப்போ இந்த கடுதாசிங்களை வக்கீல் ஒருத்தர் கிட்டே கொண்டு போய் கொடுத்தா கேஸ் உன் பக்கம்தான் தீர்ப்பாகும்...”

மண்ணுக்கும் மனிதர்களுக்கும் மாதய்யாக் கொடுக்கும் மரியாதையை நினைக்கையில் சிலிர்த்தது கலியனுக்கு.

“ஒண்ணு மட்டும் சொல்றேன் கலியா... சந்தர்ப்ப சூழ்நிலையால நீ விட்டுக்கொடுக்க வேண்டிய நேரம் வந்துதுன்னு வெச்சிக்க...?

“.....................”

“அதாவது, உனக்குப் பங்கு தந்துடச் சொல்லி கோர்ட்டுல தீர்ப்பாயிடுச்சுன்னு வெச்சிக்க...”

“கோவிலு சம்பாக் காணியச் சேத்து வாங்கி....அந்தக் காணீல....”

சொல்லும்போதே உணர்ச்சிவசப்பட்டார் மாதய்யா.

****************************

அந்தக் காணியில் என்னென்ன எப்படியெப்படிச் செய்யவேண்டும் என்று விளக்கமாகவும் விவரமாகவும் மாதய்யா சொல்லச் சொல்ல கலியன் அதை உள் வாங்கினான்.

“ஊர்ப் பொது நன்மைக்காக நீ ரெண்டொருத்தர்கிட்ட கெட்ட பேரு வாங்குறதுல ஒண்ணும் தப்பில்ல. ஏன்? நீங்களே அதை செய்யலாமேனு நீ கேட்கலாம்... அப்படிச் செய்யாம உன்னைச் செய்யச் சொல்றதுக்குப் பல காரணங்கள் இருக்கு.”

“எது எப்படி இருந்தாலும், நான் செத்ததும் என் பொணம் நம்ப சம்பாக்காணி வழியாத்தான் போவணும். அய்யாவோட ஆசை அதுனு நீ சொல்லிப் பாரு...”

“உன் பேச்சைக் கேக்காம, பக்கத்து ஊர் வளியாத்தான் கொண்டு போவோம்னு நின்னாங்கன்னா நீ ஒண்ணும் கவலைப்படாதே...அவங்க இஷ்டத்துக்கு விட்ரு”

“என் ஆசையை நிறைவேத்த மாத்து வழி சொல்றேன் கேட்டுக்கோ...” சொன்னார்.

கலியன் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாய் வந்தது.

**************************

அந்த நேரத்தில், பூசர களத்தைச் சுற்றி குடியிருக்கும் ஜனங்கள், களத்தை ஒட்டிய காணிக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து, பரபரப்போடு மாதய்யாவைப் பார்க்க அங்கே வந்தார்கள்.

‘இவங்க ஏன் இந்த நேரத்துல என்னைத் தேடி வர்றாங்க…?’ யோசித்தார் மாதய்யா. ஒன்றும் பிடிபடவில்லை.

“அய்யா... அய்யா...” மாதய்யாவைச் சூழ்ந்துகொண்டனர்.

“அய்யா... பூசர களத்தை ஆக்கிரமிக்கராங்கய்யா...”

பதட்டமாய் பேசினர்.

“ யாராவது ஒருத்தர் விவரமாச் சொல்லுங்க. இப்படி எல்லாருமாச் சொன்னா எனக்குப் புரியலைன்னேன்...” என்றார் மாதய்யா.

கருப்புட்டிக்காரத்தெரு சற்குணம் முன்னே வந்து மாதய்யாவிடம் பூசர களத்தில் தற்சமயம் நடப்பதைச் சொன்னார்.

அதோடு, அவர் மனதில் பட்ட கருத்தையும் சற்குணம் தெரிவித்தார்.

சற்குணம் மாதய்யாவைவிடப் பத்து வயது குறைந்தவர்.

அவருடைய நரைத்த முடியும், மீசையும் தாடியும் பார்க்கும்போது மாதய்யாவைவிடப் பத்து வயது அதிகமாகக் காட்டும்.

Representational Image
Representational Image

எதையும் நிதானமாக அணுகும் குணம் அவருக்கு உண்டு.

கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறியவர்.

பதட்டப்படாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வார்.

சற்குணம் சொன்னதைக் காதில் வாங்கிய மாதய்யா.

அவர் அபிப்ராயத்தையும் மனதில் வாங்கி அசைப் போட்டார்.

ஒண்ணும் பிரச்சனையில்லே... கவலைப்படாம போங்க, பின்னாலயே வரேன்...” பதட்டம் தணித்து அனுப்பிவைத்தார்.

கலியன் வண்டியைப் பூட்டினான்

வண்டி பூசர களத்தை நோக்கிச் சென்றது.

“த்வமேவ லங்காம், மனஸா மனஸ்வி...”

வால்மீகி ராமாயணத்தில் ஆஞ்சனேயரைப் பற்றி இப்படிச் சொல்லுவார்கள்.

அதாவது, இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற தீவிர யோசனை வந்ததுமே, அனுமன் மனதால் இலங்கையை அடைந்து விட்டானாம்...

Representational Image
Representational Image

அதுபோல..., பூரச களம் கையகப்படுத்தலைப் பற்றி ஆழ்ந்து யோசித்தபோது, மாதய்யாவின் மனசு நாற்பது வருஷத்துக்கு முன்னால் சென்றது.

தொடரும்...

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.