Published:Updated:

கலியன் மதவு |சமூக நாவல்| அத்தியாயம் 5

Representational Image

சந்தியாவந்தனம் செய்யும்போது அவ்வப்போது ‘டிங்...டிங்...’ என, உத்தரணி பஞ்சபாத்திரத்தில் பட்டு, இருக்கும் நீருக்குத் தகுந்தாற்போல் ஜலதரங்க இசையும் சேர்ந்து ஒலித்து கச்சேரிக்கு மேலும் சோபை சேர்க்கும்.

Published:Updated:

கலியன் மதவு |சமூக நாவல்| அத்தியாயம் 5

சந்தியாவந்தனம் செய்யும்போது அவ்வப்போது ‘டிங்...டிங்...’ என, உத்தரணி பஞ்சபாத்திரத்தில் பட்டு, இருக்கும் நீருக்குத் தகுந்தாற்போல் ஜலதரங்க இசையும் சேர்ந்து ஒலித்து கச்சேரிக்கு மேலும் சோபை சேர்க்கும்.

Representational Image

“மாதய்யாவை விட குந்தலாம்பாள் அரை அடி உயரக் குறைவு... உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு. மாநிறம். மஞ்சள் பூசிப் பூசிக் கலை பொருந்திய முகம்.

நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் அளவாக இட்டுக் கொண்டிருக்கும் அரக்குக் கலர் குங்குமம். காதுகளில் கச்சிதமாக ஜொலிக்கும் கல் தோடு. மூக்கில் மின்னும் எட்டுக் கல் பேசரி.

உழைத்து உழைத்து உரமேறிய புஜங்கள். பேச்சில் பிசிர் இல்லாத தெளிவான உச்சரிப்பு.

மரச்சாமான்களின் பொக்கை போரைகளை மட்கு வைத்து அடைத்துப் ‘பூசி மெழுகி’ மறைப்பது போல், கை நகங்களும், கால் நகங்களும் அங்கங்கே சொத்தைவிழுந்து கருத்துவிட்டாலும் வாரம் தவறாமல் மருதாணித் தழையை கல்லுரலில் அரைத்துப் போட்டுக் கொண்டு மேலோட்டமான பார்வைக்கு அந்தச் சொத்தைகளை மறைத்திருப்பாள்.

நேர்த்தியாகக் கட்டிக்கொண்டிருக்கும் மடிசார் புடவையில், அவளைப் பாக்கும்போது, கும்பேஸ்வரர் கோவில் மங்களாம்பிகையே எதிரில் நிற்பது போல் இருக்கும்.

கையெடுத்துக் கும்பிடவேண்டும் போல் தோன்றும்...

அப்படி ஒரு தேஜஸ்... அப்படி ஒரு தெய்வீகம்... பவிஷூ...

ராமனை “உள்ளே வா ராமு...” என்று வாய் நிறைய அழைத்துவிட்டு, குந்தலாம்பாள் சமையல்கட்டுக்குச் சென்றாள். தொங்கிக் கொண்டிருந்த உரியின் வளையத்தை மேலேற்றி, மோர்ப் பானை எடுத்தாள்.

பாத்திரத்தில் தேவையான மோர் சாய்த்தபின் பானையை மீண்டும் உரியில் வைத்து வளையத்தை இறக்கிவிட்டாள்.

Representational Image
Representational Image

உப்புக்கல்,மல்லித்தழை, கறிவேற்பிலை, எல்லாவற்றையும் சேர்த்து நறநறவென நசுக்கி மோரில் கலந்தாள்.

பெருங்காயச் சிப்பியில் இருந்த தெளிந்த நீரை ஆள்காட்டி விரலால் கலக்கிக் குழப்பி, பால் பெருங்காயக் கரைசலையும் மோரோடு சேர்த்தாள்

கடுகு வெடிக்கவிட்டு ‘சொய்.....ய்....’ என ஊற்றினாள்.

இரண்டு மூன்று முறை ஆற்றினாள்.

வீட்டில் புறைகுற்றி, விடிகாலையில் வெயிலுக்கு முன் கடைந்து வெண்ணையெடுப்பாள் குந்தலாம்பாள்.

ஃப்ர்..... ஃப்ர்ர்... ஃப்ர்ர்... ஃப்ர்ர்...ப்ர்ர்ர்.....ரென்று விடிகாலையில் தயிர்ப்பானையில் உள்ள தயிர் சிலுப்பப்படும்போது, அந்த ஓசை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட இசையாய், சர்வ வல்லமை கொண்ட இசைக்கருவிகளின் கூட்டு ஒலியாய் ஒலிக்கும்.

அந்த நேரத்தில் “கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா,விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா, சங்கர்ஷணா, வாசுதேவா அநிருத்தா, புருஷோத்தமா, அதோக்ஷ்யா, நாரசிம்மா, அச்சுதா,ஜனார்தனா, உபேந்ரா, ஹரே ஸ்ரீக்ருஷ்ணா....” என்று மாதய்யா சந்தியா வந்தனம் செய்வது பக்க வாத்திய இசைக்கு ஏற்றார்போல் கார்வை சேர்த்தது போல இருக்கும்.

சந்தியாவந்தனம் செய்யும்போது அவ்வப்போது ‘டிங்...டிங்...’ என, உத்தரணி பஞ்சபாத்திரத்தில் பட்டு, இருக்கும் நீருக்குத் தகுந்தாற்போல் ஜலதரங்க இசையும் சேர்ந்து ஒலித்து கச்சேரிக்கு மேலும் சோபை சேர்க்கும்.

அந்த வீடு, ஒரு வீடாய்த் தெரியாமல், ஒரு சங்கீத மஹால் போலவும். விடிகாலையில் இன்னிசைக் கச்சேரி நடைபெறுவது போலவும் இருக்கும்.

வெண்ணை விழுங்கி வெறுங்கலத்தை

வெற்பிடையிட்டு அதனோ சைக் கேட்கும்

கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்

காக்கில்லோம் உன் மகனைக் காவாய்...

புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை

புரைபுரையால் இவை செய்ய வல்ல

அண்ணற் கண்ணனோர் மகனைப் பெற்ற

அசோதைத் தங்காய்! உன்மகனைக் காவாய்...

என்கிற ஒன்பதாம் திருமொழி சாதிப்பதைப் போன்று இருக்கும் அந்த கடையல்.

கீழே பானை, மத்தின் உயரம் ஐந்தடி. சமையலறைத் தூணில் மேலும், கீழும் கட்டிய பனைநாரினுள் செருகப்பட்ட மத்தை நூல்கயிறு சுற்றி இழுந்து இழுத்து தயிர்கடையும்போது சர்வ அங்கங்களும் இயங்கும் குந்தலாம்பாளுக்கு.

ஒன்றரை மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க நாட்டியம் ஆடியதைபோல இருக்கும்.

இவள் நாட்டியத்திற்கு தயிர் கடையல் இசையா, அல்லது இசைக்கு ஏற்றபடி இவள் நாட்டியமா...! என்று வியக்கும்படி இருக்கும்.

இப்படி உழைத்து உழைத்து உரமேறிய உடம்பு குந்தலாம்பாளுக்கு.

இன்று வரை தலைவலி காய்ச்சல் என்று படுத்தவளில்லை .

‘சர்ர்ர்....கிர்ர்ர்...’ரென்ற சிலுப்பலின் வேகத்தில், தயிர் கலங்கிச், சிலும்பி, உடைந்து, நுரைத்து, பிரிந்து, உருண்டு, வெண்ணையாய்த் திரள்வது ஒருபுறமிருக்க, சமையலறை முழுதும் பரவும் சுகந்தமான தயிரின் மனம்.

திருச்சிக் கோட்டை ரயில் நிலையத்தின் பார்சல் ஆபீஸ் முன் ‘+’ (ப்ளஸ்) போல; தூக்கி இறக்க வசதியாக. அசட்டுச் சிகப்புச் சாயம் தோய்த்த கப்பாணிக் கயிரால் கட்டப்பட்ட ‘அழுக்குத் தயிர் டின்’களை இறக்கி அடுக்கியிருப்பார்கள்.

அதிலிருந்து புறப்பட்டு அந்த வளாகம் முழுவதையும் ஆக்ரமிக்கும் புளித்துப்போன தயிர் வாடையை நுகர்ந்து முகம் சுளித்தவர்களுக்குத்தான் இந்த ரம்யமான மணம் புரியும்.

மோர் சொம்புடன் பட்டகசாலைக்கு வந்தபோது, ராமு ஒரு விதப் படபடப்புடன், சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த பழைய புகைப்படங்களையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வழக்கமாக மாதய்யா வீட்டுப் பட்டகசாலையில் சட்டமிட்டப்பட்ட பல புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருந்தாலும் ,நேரு, காமராஜர் இவர்களுடன் இருக்கும் மாதய்யாவின் மாமா போட்டோவைத்தான்

Representational Image
Representational Image

குறிப்பாக கர்ம வீரர் காமராஜரின் நடு வயதுத் தோற்றத்தை ரசித்துப் பார்ப்பான். தலைமுடியோடு இளமை ததும்ப நிற்கும் நாற்பது நாற்பத்தைந்து, வயது காமராஜரைப் பார்க்கும்போது ராமுவுக்கு இனம் புரியாத சந்தோஷம் உண்டாகும். கர்ம வீரர்மீது அப்படி ஒரு மோகம் அவனுக்கு.

“காமாராஜ நாடாரைப் பார்த்து ரசிக்கிறாயாக்கும்...” என்று கேட்டுக்கொண்டே மோர் சொம்புடன் வந்தாள் குந்தலாம்பாள்.

‘புடல்கொல்லை ரகசியம் மாதய்யாக்குத் தெரிந்திருக்குமோ? அவரை எப்படிச் சமாளிப்பது...? அவரிடமிருந்து தப்பித்துச் சென்றுவிடவேண்டுமே... !’ எண்ணங்கள் சுற்றி சுழன்றடிக்க, புகைப்படங்களை வழக்கமான உற்சாகத்துடன் பார்க்காதபோதும், குந்தலாம்பாள் கேள்விக்கு... “ஆமாம் மாமி...!” என்று பதில் செல்லிவிட்டு, சொம்பை வாங்கி மோர் பருகினான்.

‘யாராவது குச்சியோடு விரட்ட வருகிறார்களா... என்று பார்ப்பதும், பால்குடிப்பதுமாக ஏமாற்றும் திருட்டுப் பூனையைப் போல, மோர் குடித்துக்கொண்டே வாசல் சாரமனையை ஓரக்கண்ணால பார்த்தான் ராமு.

சார மனை காலியாக இருந்தது. யாரோ ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.


மாதய்யா வருவதற்குள் நழுவிவிடவேண்டும் என்ற பரபரப்பில் குந்தலாம்பாள் சொன்ன எதுவுமே மூளையில் ஏறவில்லை. “சரி மாமி...! சரி மாமி...!” என்று இயந்திரத்தனமாகச் சொன்னான்.

ராமுவின் பரபரப்பும், நடத்தையும் குந்தலாம்பாளுக்கு வித்தியாசமாகப் பட்டாலும், அதைப் பெரிதாக எடுத்துக்காள்ள வில்லை அவள்.

“ஏண்டா ராமு... தொர்ராமனுக்கு நேரமில்லாட்டாலும், ஆம்படையாளை விட்டாவது ஒரு தபால் கார்டு எழுதிப் போடச் சொல்லு.”

“சொல்றேன் மாமி, வரட்டுமா...! நேரமாச்சு...!”

கண்கள் வாசல் திண்ணைப்புறம் அலை பாய்ந்தது. கால்கள் அவசரமாகக் வாசலை நோக்கி அடி வைத்தன.

“மாமா மாட்டுத் தொழுவத்துக்குப் போயிருக்கார் போல்ருக்கு... நான் சொல்லிக்கறேன் நீ போ...”

விட்டால் போதுமென்று ஓட்டமும் நடையுமாக வீட்டை விட்டு வெளியே வந்தான் ராமு. மனதில் பீதியுடன் வீடு நோக்கிப் போனான்.

கோபாலய்யா வீட்டின் முன் நட்ட நடு வாசலில் கப்பும் கிளையுமாக நிற்கும் பிரும்மாண்டமான வேப்ப மரத்தடியில் சில வாண்டுகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

கண்ணிமைக்காமல், அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ராமு.

Representational Image
Representational Image

வேப்பமரத்தின் வயது குறைந்துகொண்டே வந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த மரமாகச் சுருங்கியது.

“பூப்பறிக்க வருகிறோம்...! வருகிறோம்...!! இந்தக் காலத்தில்....” என்று ஓர் அணி பாடிக் கொண்டே முன்னேறியது.

எதிரணி பின்னே நகர்ந்தபடியே “ எந்த மாசம் வருகிறீர்...! வருகிறீர்...!!” எனக் கோரஸாய்க் கேட்டது.

“சித்திரை மாதம் வருகிறோம்...! வருகிறோம்...!! வருகிறோம்...!!!”- முதல் அணி

“யார் பூவைப் பறிக்க வருகிறீர்...! வருகிறீர்...!! வருகிறீர்...!!!”- இரண்டாவது அணி.

“உமாப் பூவைப் பறிக்க வருகிறோம்...! வருகிறோம்...!! வருகிறோம்...!!!” பெருங்கத்தலோடு மொத்தக் குழுவும் உமாவைத் துரத்திக் கொண்டு அவளைத் தொட... ஓடியது.

“டேய்...! நீ அபீட் எடுக்கலை...!” என்று மிரட்டினான் ராமு.

“நான் அபீட் எடுத்துட்டேண்டா...” என்று பயந்து நடுங்கிக் கொண்டே சொன்னான் பிரபு.

“அவன் செத்துப்போன அபீட் எடுத்தாண்டா...!” என்று சீனு பிரபுவைக் காட்டிக் கொடுத்தான்.

“செத்த அபீட்தான் கிடையாதுனு சொல்லியிருக்கில்ல... கட்டையெ வட்டத்துல வைடா...!” ராமு எகிற, சீனு வாதம் செய்யாமல் பம்பரத்தை வட்டத்துக்குள் வைத்தான்.

பம்பரத்தை சுழலச் செய்யாமல், தரையில் கிடத்தி, சாட்டையை வாகாய் பம்பரத்தில் சிக்கவைத்துத் தூக்கிப் பிடித்து ‘செத்த அபீட்’ எடுப்பதில் சீனு கில்லாடி.

தன் பம்பரம் வட்டத்துக்குள் சென்றுவிட்டதால், சீனு கருவிக்கொண்டே இருந்தான். அடுத்த குத்தில் சீனுவின் பம்பரம் வெளிக்கிளம்பிவிட்டது. மொட்டை போட்ட ராமுவின் பம்பரம் வட்டத்துக்குள்ளே போனது.

அடுத்து சாமிநாதன் குத்திய பம்பரம் வட்டத்தை விட்டு வெளிக்குத்து விழ, ராமு அதை அமுக்கி உள்ளே போட்டான்.

தட்சிணா மூர்த்தி குத்திய பம்பரம் வட்டத்துக்குள்ளேயே உறங்கிச் சுழன்றுகொண்டிருக்க, சீனு அதை அமுக்கிப் போட்டான்.

“அமுக்குக் கட்டை கிடையாது, சீறு கட்டைனுதானே பேச்சு...! ஏண்டா கட்டைய அமுக்கினே...!” என்று சீனுவிடம் சண்டைக்குப் போனான் ராமு.

பம்பர ஆட்டத்தில் தகராறு வந்துவிட்டதால் உடனே ஆட்டத்தை நிறுத்த முடிவெடுத்தான் ராமு. கடைசீயாக வெளியே இருந்த சிங்கபெருமாளும் அதை ஒத்துக்கொண்டான்.

அமுக்குக் கட்டை என்றால் எவர் பம்பரம் குத்தியதும் வட்டத்துக்குள்ளே நின்று சுழன்றால் அதை யாராவது அழுக்கி உள்ளே போடுதல்.

சீறு கட்டை என்றால் சுற்றி முடித்து பம்பரம் சீறி வெளியே வரவும் வாய்ப்பு உண்டு. விளையாடும் போது பெரும்பாலும் சீறுகட்டைக்குத்தான் எல்லாரும் ஆதரவு தருவார்கள்.

“கட்டைக்கு 50 ஆக்கு ஆட்டத்தை முடிச்சுக்குவோமா...?” என்று கேட்டான் ராமு

“ஆக்கு பீஸ்...” என்றான் சிங்கபெருமாள்.

‘ஆக்கு பீஸ்’ என்றால் ஆக்கு போடாமல் சாதாரணமாக ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என்று பொருள். வட்டத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கு மட்டும்தான் ஆக்கு பீஸ் விட உரிமை உண்டு.

பம்பர ஆட்டம் கலைந்ததும் ‘பாண்டி’ ஆடுவோமாடா...?” என்று கேட்டான் இளங்கோவன்.

“அது பொப்பளை ஆட்டம்டா... வேற சொல்லு...!” என்றான் மனோகர்.

“கபடி...!” என்றான் ஆர்பாக்கம் முரளி.

“கபடின்னா ஆத்தங்கரை திடலுக்குத்தான் போகணும்... நான் அங்கே வரலை...” என்று கழன்றனர் மார்க்கண்டேயனும், சக்தியும்.

ஒரு வழியாக ‘கில்லி’ விளையாட முடிவு செய்தார்கள். ‘கில்லி’ ‘தாண்டு’ கொண்டு வர வீட்டுக்குச் சென்றான் ராமு.

அவன் வருவதற்குள், மற்றவர்கள் ஒரு ரவுண்டு பச்சைக் குதிரைத் தாண்டி விடையாடினார்கள்.

Representational Image
Representational Image

“செட்’டா, தனி ஆட்டமா...!” கேட்டுக் கொண்டே கில்லித் தாண்டுடன் வந்தான் ராமு.

“செட்...” என்றும் “தனி...” என்றும் கோஷங்கள் கிளம்ப....

எச்சில்பக்கம் மேலே தெரிந்தால் செட், இல்லையேல் தனி ஆட்டம் என்ற விதியை அறிவித்துவிட்டு, ‘புளிச்’சென்று ஓட்டாம்பாளத்தில் எச்சில் துப்பி ‘டாஸ்’ தூக்கிப் போட்டான் ராமு.

எச்சில் பக்கம் தரையைத் தொட்டது.

விதிமுறைப்படி தனி ஆட்டம் என முடிவாயிற்று.

தனி ஆட்டத்தில், யார் முதலில் என்று வரிசைக் கிரமம் பார்க்க...

‘ ஆட்டக்க... மாட்டக்க...” என்று தொடங்கினான். சிங்கபெருமாள்.

“அது சரி வராது “சாட்....பூட்....த்ரீ...”தான் சரியா வரும் என்றான் தமிழரசன்.

முதலில் பழுத்தவன் ராமு.

குழியில் கில்லியை அம்புபோல வைத்து “ராஜா கில்லி... மந்திரி கில்லி....” என்று இரண்டு முறை அபீஸ் விட்டுவிட்டு, மூன்றாவது முறை கெந்தினான் ராமு. ஏரோப்பிளேன் மாதிரி கில்லி தூரத்தில் போய் விழுந்தது.

“ஏராப்ளேன் கில்லி கூடாது...” என்று ஏகமனதாக எல்லோரும் முடிவெடுக்க...” ராமு கடுப்பானான். “போங்கடா...!” என்று திட்ட வந்த திட்டுக்களை முழுங்கிவிட்டு சாதாகில்லி என்ற முறையில் கில்லியைப் பாலம் போல வைத்துக் கெந்தினான். அது ஏரோப்பிளேன் கில்லியை விட அதி தூரம் சென்று விழுந்தது.

தட்சிணாமூர்த்திதான் கில்லியை பொறுக்கி எடுத்து தாண்டு பார்த்து வீசினான். குழிக்கு பதினைந்தடி முன்பாகவே விழுந்துவிட்டது அவன் வீசிய கில்லி. அவ்வளவுதான் தெம்பு தட்சிணாமூர்த்திக்கு.

படுக்கவைத்த தாண்டை எடுத்துக்கொண்டு கில்லி கிடந்த இடத்துக்கு வந்தான் ராமு.

“கை கில்லியா...? அடி கில்லியா...?” என்று கேட்டான்.

அந்த இடத்தில் ராமுத் தவிர யார் இருந்திருந்தாலும் கைகில்லிதான் சொல்லியிருப்பார்கள்.

‘அடிகில்லி’ எனில், கில்லி தரையிலேயே கிடக்க தாண்டுகொண்டு கில்லியின் கூர் பார்த்து லாகவமாய்த் தட்டிக் கில்லி, துள்ளி எழும்போது அடிப்பது.

‘கை கில்லி’ என்றால் கில்லியைக் கையால் தூக்கிப்போட்டு தாண்டால் அடித்தல்.

கை கில்லி என்றால் மூன்று அடிகளும் பழுத்துவிடும். எண்ணிக்கை ‘ஸ்கோர்’ ஒரே ஆட்டத்தில் எகிறிவிடும்.

ராமு அடிகில்லியிலும் சூரன். முதல் இரண்டு அடிகளை அடிக்காமல் ‘புஸ்க்’ (அடிக்காமல்) விட்டான்.

மூன்றாவது அடியில் கில்லி அளவாய் எகிற, தாண்டின் அடிபட்ட கில்லி 300 தாண்டு தூரம் சென்று விழுந்தது.

கடித்த ‘சாம்பார் முருக்கைக்காய்’ தோல் போல நைந்த கில்லியைக் காட்டிக்கொண்டே...

“கில்லி டார் விட்ருச்சுடா...” என்றான் தட்சிணாமூர்த்தி..

கில்லி ஆட்டம் அத்தோடு முடிய ‘பேய் பந்து’ விளையாடத் தீர்மானித்தது நண்பர்கள் குழு.

சிங்கபெருமாள் வீட்டுக்குச் சிட்டாய்ப் பறந்து ஓடி, பந்தோடு வந்தான்.

பிள்ளையார் கல் நிறுத்தினார்கள்.

இந்த ஆட்டத்திலும் ராமுவே முதல்வனாக வந்து பேயை அடித்து விரட்டும் பூசாரியானான்.

முதல் பந்திலேயே பிள்ளையார் கல்லை சாய்த்த ராமு; பந்தை கையில் வைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தான்..

“பேய்... பேய்...!”

“என்னாப் பேய்...?”

“பந்துப் பேய்...!”

“என்னாப் பந்து...?”

“ரப்பர் பந்து...!”

“என்னா ரப்பர்...?”

“இந்தியா ரப்பர்...!”

“என்னா இந்தியா...?”

“வட இந்தியா...!”

“என்னா வடை...?”

“ஆம வடை...!”

“என்னா ஆமை...?”

“குளத்து ஆமை...!”

“என்னா குளம்...?”

“திரி குளம்...!”

“என்னா திரி...?”

“விளக்குத் திரி...!”

“என்னா விளக்கு...?”

“குத்து விளக்கு...!”

“என்னா குத்து...?” – என்று கேட்டுக்கொண்டே அவரவர் ஓடி ஆங்காங்கே ஒளிந்துகொண்டுவிட, கையில் பந்துடன் கண்களில் தேடலுடன் கிளம்பிபிட்டான் ராமு.

கண்ணில் பட்டவனை “திம்மாங்....குத்து...” என்று சொல்லி அடிக்கவேண்டும். பூசாரி கையால் அடிவாங்காமல் தப்பிக்கும் கடைசீ பேய் பூசாரி ஆகிவிடும்.

Representational Image
Representational Image

பெண் பிள்ளைகள் ‘பூப்பறிக்க வருகிறோம்’ விளையாடிக்கொண்டிருந்தார்கள் அல்லவா...! அது அலுத்துவிட்டது அவர்களுக்கு.

கண்ணாமூச்சி விளையாடத் தொடங்கினார்கள்.

சாவித்திரி கண் பொத்திக் கொண்டு பலமாகப் பாடினாள்.

“கண்ணாமூசி ரே...! ரே...!”

“காதடைச்சான் ரே...!ரே...!”

“சின்ன முட்டைய வித்துப்புட்டு...!”

“பெரிய முட்டைய தின்னுட்டு வா...!”

என்று வழக்கமான பாடலைப் பாடும்போது அவரவர் வெவ்வேறு இடங்களில் ஒளிந்துகொண்டுவிட்டார்கள்.

சாவித்திரி பொத்திய கண்களைக் கசக்கிவிட்டபடி ஒளிந்தவர்களைத் தேடிப் போனாள்.

கண்டதும் அடிக்கத் தயாராய் கையில் பந்துடன் ஒளிந்தவர்களைத் தேடிச் சென்ற ராமுவுக்கு, ஒருவனின் முதுகு தெரிந்தது.

அர்ச்சுனனுக்கு பறவையின் நெற்றி மட்டுமே தெரிந்தாற்போல் இலக்கை நோக்கிய கூர்மையான பார்வை அவனுக்கு.

“விர்..ர்...ர்...ர்...ர்...ர்...!!!’ என்று முதுகைப் பதம்பார்க்குமளவிற்கு பலம் கொண்ட மட்டும் பந்தை வீசினான்.

“அ...ய்...யோ....!!” என்ற அலறல்.

“கதறலைத் தொடர்ந்து எல்லோரும் கூடிவிட ராமு அடித்த அடி முகத்தில் பலமாகத் தாக்கி, பல் உடைந்து ரத்தம் கசிய, அடி வாங்கிய சாவித்திரியின் முகம் புசு...புசு... வென வீங்கத் தொடங்கியது.

ஒளிந்தவனைத் தேடிப் பந்தால் அடித்தபோது சாவித்திரி வந்து இப்படி அடிபடுவாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

சிறுவர்கள் விளையாட்டு பெரியவர்கள் சண்டையாக உருமாறியது.

ராமு தண்டிக்கப்பட்டான்.

இதோ கப்பும் கிளையுமாக எதிரே நிற்கும் இதே வேப்பமரம் அப்போது இன்னும் உயரம் குறைவாய், பருமன் குறைவாய் இருந்தபோது அந்த மரத்தில்தான் அவனைக் கட்டி வைத்து அடித்து தண்டித்தார் பசுபதி குருக்கள்.

‘அந்த நிகழ்வுதான் என்னையும் சாவித்திரியையும் இணைத்துக் காதலர்களாக்கியதோ...!’ என்று தோன்றியது ராமுவுக்கு.

கல்லூரி நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்த காதல் இப்போது இந்த வேப்ப மரத்தைப் போல் கப்பும் கிளையுமாய் பரந்து விரிந்து வளர்ந்து நிற்கிறது.

படிப்பு முடிந்ததும் அவனும் சாவித்திரியும் திருச்சி மைய நூலகத்தில் வாரம் ஒரு முறையோ, இரண்டு முறையோ சந்திப்பது வழக்கமாகிப்போனது.

மலைக்கோட்டை தாயுமானவர் சந்நிதி அரை இருட்டில் கை கோர்த்துக்கொண்டு நடந்தார்கள்.


நிறையப் படித்தார்கள்... நிறையக் கதைத்தார்கள்... நிறைய சிந்தித்தார்கள்...நிறையப் விவாதித்தார்கள்... பேசப் பேச தெளிந்தார்கள்...

என்னதான் தெளிந்தாலும் யதார்த்தத்தை எண்ணி அச்சம் கொண்டார்கள்.

‘கடைசீவரை காதலர்களாகவே இருந்துவிடுவோம்...’ என்று முடிவு செய்துகொண்டார்கள் ராமுவும், சாவித்திரியும்.

சர்வீஸ் கமிஷன் மூலம் ராமுவுக்குச் சென்னை செக்ரடேரியட்டில் வேலை வர, காதல் பிரிவு இருவரையும் வாட்டியது.

ராமு இப்போது வாரா வாரம் கிராமத்துக்கு வந்து போகிறான்.

நூலகத்திலும், மலைக்கோட்டையிலும் வழக்கமான சந்திப்பும் தொடர்ந்தது.

‘இன்று ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என கிராமத்தின் புடல் கொல்லையில் அவளைச் சந்தித்தது தப்பாகிவிட்டது. மாதய்யாவுக்குத் தெரிந்துவிட்டது. இன்னும் எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை...’

பதினைந்து வருடங்களுக்கு முன் அடிவாங்கிய அதோ வேப்பமரத்தில் கட்டி வைத்து ‘இப்படிச் செய்வியா...?’ என்று அப்பா கண்டிப்பதாகக் கற்பனை நீண்டது.

“ஏண்டா… ராமு… ஊருக்குக் கிளம்ப நேரமாச்சுனு பறந்துண்டு வந்தியாம்.. இங்கே நின்னு என்னத்தப் பார்த்துண்டிருக்கே..?” அப்பாவின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தான் ராமு.

“பதினைஞ்சு வயசுல இந்த மரத்துல கட்டி வெச்சி என்னை அடிச்சியே… அது நினைவுக்கு வந்துதுப்பா…”

Representational Image
Representational Image

“போடா பைத்தியம்… ஊருக்குக் கிளம்ப நேரமாயிடுத்து.. போ… போய் கிளம்பற வேலையப் பாரு…” என்று சொல்லவிட்டுப் பசுபதி குருக்கள் மேலக்கோடிவரைச் சென்றார் ஏதோ காரியமாக.

“சரிப்பா...!” என்று சொன்னானே தவிர உடனே அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அந்த வேப்ப மரத்தையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான்

‘இந்த மரத்தை இனிமேல் பார்க்கமாட்டோம்...!’ என்றது அவன் உள்ளுணர்வு.

அப்போது மரத்தில் தலை முட்டியபடி கண் பொத்திக்கொண்டு 1..2..3.. எண்ணினான் ஒரு சிறுவன்.

ஒளிந்துகொள்ளச் செல்லும் சிறுவர்கள் “பார்கக் கூடாது… பார்கக் கூடாது…” என்று கண்பொத்தியவனை எச்சரித்துக் கொண்டே பல்வேறு திக்குகளிலும் ஒளிந்து கொள்ள ஓடினார்கள்.

“வேப்பமரத்தைப் பார்த்தது போதும்... போடா சீக்கிரம்... என்று மேற்கே சென்ற அப்பா திரும்பி வரும்போதும் சொல்ல, அந்த மரத்தை விழுங்கிவிடுவது போலப் பார்த்துவிட்டு பிரிய மனமில்லாம் வீடு திரும்பினான் ராமு.

வழியில் ராம பஜனை மடத்தருகே உட்கார்ந்திருந்த நாயைப் பார்த்தான். அது எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல் இருந்தது. ஏனோ அதன் மேல் கரிசனம் வந்தது அவகுக்கு

திடீரென்று ஒருவன் ஓடிவந்து குச்சியால் அந்த நாயை பலங்கொண்ட மட்டும் அடித்தான்.

அடிபட்ட நாய், கத்திக்கொண்டும் கால் தாங்கிக்கொண்டும் ஓடியது...

“ஏன் அந்த நாயை இப்படிப் போட்டு அடிச்சீங்க…?” கோபத்துடன் கேட்டான் ராமு.

“அது நம்மத் தெரு நாயில்ல தம்பி... முத்தனூரு நாயி. இங்க வந்து தொல்ல கொடுக்குது...!”

இப்படி ஒரு பதிலை எதிர்பாராத ராமு அதிர்ச்சியில் உறைந்தான்.

-தொடரும்...

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.