Published:Updated:

கலியன் மதவு |சமூக நாவல் |அத்தியாயம் – 26 | My Vikatan

Representational Image

சாயாதேவி சமேதராக சூரிய பகவான் பிம்பத்தை மனைப் பலகையிலோ, தரையிலோப் போட்டுச் செம்மண் இட்டு ஆவாகனம் செய்வார்கள்.

Published:Updated:

கலியன் மதவு |சமூக நாவல் |அத்தியாயம் – 26 | My Vikatan

சாயாதேவி சமேதராக சூரிய பகவான் பிம்பத்தை மனைப் பலகையிலோ, தரையிலோப் போட்டுச் செம்மண் இட்டு ஆவாகனம் செய்வார்கள்.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“தமிழர் திருநாள்...!”

உலகெங்ககும் விரவிப் பரவியுள்ளத் தமிழ் நெஞ்சங்களின் பொன்னான்.

நன்றியுணர்வு, தோழமை, களிப்பு, மகிழ்ச்சி...

அனைத்து நல்லுணர்வுகளும் நுண்ணுணர்வுகளும் எங்கெங்கும் வீசிப் பரவி நிறைக்கும் நன்னாள்.

அசந்து-மறந்த நேரம், பால் பொங்கி வழிந்து விட்டால், சுணங்குவார்கள் இல்லத்தரசிகள்.

அதே மகளிர் இந்த நன்னாளில் வலிந்து எரியூட்டிப் பாலைப் பொங்கி வழியவிட்டுச், சுற்றமும் நட்பும் சூழ மகிழ்வதும், அனைவரையும் மகிழ்விப்பதுமான ஒரே நந்நாள், இந்தத் தமிழர் திருநாள்.

மாக்கோலத்தால் அலங்கரித்தப் புதுப்பானையின் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் கொத்துக்களை ஆரமாய் அணிவித்து, இல்லத்தின் முகப்பில் கட்டப்பட்ட அலங்கார மரைப்பில் ஆனந்தமாய்க் கொண்டாடும் அற்புதப் பண்டிகை.

அனைத்து ஜீவராசிகளுக்கும் முதல் உணவு, பால்தானே.

பண்டிகையின் முதல் நிகழ்வாகப், புனிதமான அந்தப் பாலைப் பக்தியுடன் அலங்கரிக்கப்பட்டப் புதுப் பானையில் இட்டுக் காய்ச்சிப் பொங்கி வழியவிட்டு, அக்னிதேவனுக்கு ஆகுதியாக்கப்படுகிறது.

தைத்திங்கள், அக்னி தேவன் ஆனந்தப் பரவசம் அடையும் நாள்.

சந்தோஷமாய்த் தனக்குப் பால் வார்க்கும் மகளிர் முன்னே, அடுப்பிலிருந்து எழும்பி எழும்பித் ஆனந்த நர்த்தனம் புரிகிறான்...

தீ...!

தன் நாக்கை நாற்புறமும் சுழற்றி, எகிறி, உயர்ந்து, ஆவிரி ஆவிரியாகப் பறந்துப் பறந்துப் பானையிலிருந்துப் பொங்கி வழியும் பாலைச் சுவைத்து மகிழ்கிறான்.

Representational Image
Representational Image

‘பொங்கலோப் பொங்கல்...’

எங்கெங்கும் எகிறி ஒலிக்கிறது மகிழ்ச்சிக் கூவல்கள்.

தட்டுக்கள், தாளங்கள், வெண்கலப் பானை, உருளி...

பாத்திரங்களின் உள்ளும் புறமுமாய், கரண்டிகளால் தட்டி எழுப்பும் ஒலி பக்க வாத்தியமாய் ஒலிக்கிறது.

எகிறி எகிறி நாக்கை நீட்டிச் சப்புக் கொட்டிக் கொண்டு பால் ‘பொங்கலை’ ருசிக்கும் தீ நாக்குகளின் (அக்னிதேவனின்) ஆசீர்வாதத்தைப் பெறப் பெண்டிர் கைக் கூப்பி வணங்கி, நமஸ்கரித்துப் பிரார்த்தனைகள் செய்தல், தமிழினத்தின் தலையாய சாங்கியம் ஆயிற்றே.

முதன் முதலில் தோன்றிய வேதமான ‘ரிக்’ வேதமே அக்னியைத் போற்றித் தானேத் தொடங்குகிறது.

அக்னிமீடே புரோஹிதம்

யஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்

ஹோதாரம் ரத்னதாதமம்

கண்கண்ட தெய்வமான அக்னி பகவானை வணங்குகிறேன்.

Representational Image
Representational Image

அக்ன ஆயாஹி வீதயே

க்ருணானோ ஹவ்யதாதயே

நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி

அழகிய அங்கங்களை உடைய அக்னி தேவனே

இங்கே எழுந்தருள்வீராக. வேள்வியில் சமர்ப்பிக்கும் பொருட்களைப் ஏற்றுக் கொள்வீராக!

பானையில் பசும்பால் ஊற்றிப் பொங்கச் செய்து, வேள்வித் தீக்குச் சமர்ப்பித்து, அக்னி பகவானைத் திருப்தி செய்தாகி விட்டது.

அடுத்து, அக்னியின் மூலாதாரமான சூரிய தேவனுக்குப் நிவேதனம் தயாராகும்.

வெண்மைப் புரட்சியின் அடையாளமல்லவாப் ‘பால்’.

பால் பொங்கி வழியும்போது, பசுமைப் புரட்சியின் குறியீடான ‘பச்சரிசி’யைக் களைந்து, அதில் இடும் தமிழனின் தத்துவம் கண்டு உலகமே வியந்துப் போற்றுகிறது.

உயிரினங்களின் வாழ்வாதாரமான வெண்மை மற்றும் பசுமைப் புரட்சிகளின் இணைப்புப் பாலமாய் மிளிர்கிறதுப் பொங்கல் பண்டிகை.

கற்கண்டு, வெள்ளைச் சர்க்கரை, கரும்பு வெல்லம்... எனக் , குடும்ப வழக்கப்படிக் கிண்டும் பொங்கல் மணம் காற்றில் கலந்து நறுமணம் பரப்பும்.

நெய், முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா... என அவரவர் வசதிக்குத் தக்கபடிப் போட்டுக் கிண்டி இறக்கப்படும்.

Representational Image
Representational Image

சூரியன் நேரடியாகப் படும் முற்றத்தில்தான் பெரும்பாலும் சூரிய பூஜை செய்வது வழக்கம்.

சாயாதேவி சமேதராக சூரிய பகவான் பிம்பத்தை மனைப் பலகையிலோ, தரையிலோப் போட்டுச் செம்மண் இட்டு ஆவாகனம் செய்வார்கள்.

Representational Image
Representational Image

ஊர் உலகம் பூராவும் அன்புடன் அளித்த பொங்கலைச் சூரிய-பகவான் வயிறு புடைக்க உண்டு வழக்கம் போல் பிரபஞ்சத்தை ஆசீர்வதித்தான்.

உச்சிக்கு வந்துவிட்டான் சூரியன்.

*****-

கலியன் வந்து நின்றான்.

“... ... ... ... ... ... ... ... ...”

நேருக்கு நேர் கலியனைப் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தினான் துரை.

முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

கலியனை வெறுப்பேற்றினான்.

“... ... ... ... ... ... ... ... ...”

கலியன் எந்த எதிரிவினையும் காட்டாமல் நின்றான்.

‘ஊர் பொது நன்மைக்காக சில அவமானங்களைத் தாங்கவேண்டியிருக்கும் கலியா...!’;

ஊர் நன்மையை உத்தேசித்து, சொந்த சாகுபடி செய்துவந்த மாதய்யா, குத்தகைப் பத்திரம் ஒன்று தயார் செய்து, கலியன் கையில் கொடுத்த நாளில் சொன்னது;

‘பசுமரத்தாணிப் போல..’ பதிந்திருந்தது.

மாதய்யாவின் அடையாளமாய்க் கழுத்தில் தொங்கும் தாயத்தைத் தொட்டுக்கொண்டான்.

உணர்ச்சி வசப்படாமல் அவமானத்தை ஜீரணித்தான் கலியன்.

*****-

“விசுவாசம்னா வீசை என்ன விலை?’ னு கேக்கறக் காலமா இருக்கு...!”

உரத்து முணுமுணுத்தான் துரை.

துரைராமனின் குத்தல் பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டே வந்தாள் குந்தலாம்பாள்.

“கலியனா...! வா..!”

வாய் நிறைய அழைத்தாள்.

“பொங்க நல்லாப் போச்சா...?”

மனசு நிறைய விசாரித்தாள்.

“போச்சும்மா...!”

“அய்யா இருந்தாக்க, இந்நேரம் வீட்ல பண்டிகை தொடங்கியாவது இருக்குமா...?”

மாதய்யாவின் நினைவை முன்னிறுத்திப் பேச்சைத் தொடங்கினாள்.

“இப்பத்தான் கொடாப்புக் கொட்டாயில ஒக்காந்து, மூட்டம் கலைச்சி வாழைப்பழம் எடுப்பாங்க;

நான் வூடு வூடாக் கொண்டுகோய்க் கொடுத்துட்டு ஓடியாருவேன்;

அய்யா ரொம்பவேப் பெரும்போக்கும்மா...!”

நெஞ்சின் மேல் கிடந்தத், தாயத்தைத் தொட்டபடி நினைவுக் கூர்ந்தான் கலியன்.

“கடைசியா அய்யா இருந்து கொண்டாடினப் பொங்கப் பண்டிகை நெனப்பிருக்காக் கலியா...?”

“அதை மறக்கத்தான் முடியுமாம்மா...!” கலியனின் கண்கள் பனித்தன.

“... ... ... ... ... ... ... ... ...”

*****-

Representational Image
Representational Image

‘அம்மா ஏன் இப்படிக் கலியன்கிட்டே சம்பந்தாச் சம்பந்தமில்லாமப் பேசறா...?’

துரைராமனுக்குள் எழுந்தக் கேள்வியை, அவன் கண்கள் பிரதிபலித்தன.

“... ... ... ... ... ... ... ... ...”

‘அம்மாவுக்கு அனுபவம் ஜாஸ்தி. ஏதோக் காரணத்தோடதான் இப்படிப் பேசறா...!’

கண்களையும் காதுகளையும் விரியத் திறந்துகொண்டு வாயை அழுத்தமாய் மூடியபடி உரையாடல்களின் போக்கைக் கூர்ந்துக் கவனித்தான் துரை.

*****-

“ஏதோ விசயம் பேசணும்னு வரச் சொன்னீங்களேம்மா. அதுக்குத்தான் வந்தேன்...!”

இயந்திரகதியில், காரியார்த்தமாய் இருந்தது கலியனின் தொனி.

“... ... ... ... ... ... ... ... ...”

ஒரு கணம் அமைதியானாள் குந்தலாம்பாள்.

தற்போதையச் சூழலைச் சமாளிக்கத் தக்க வழி முறைகளை யோசிப்பதைப் போல இருந்தது; சிந்தனை வயப்பட்ட அவள் முகம்.

“நீங்க ஏதோப் பழையக் கதையப் பேசறீங்க...!” கலியனின் குரலில் கசப்பு தூக்கலாய்த் தெரிந்தது.

“ஓ...! ஆமாம்ல...! நான் ஏதோ சகஜமா நெனைச்சுப் பேசிட்டேன்... தப்புதான்...!”

குந்தலாம்பாளின் குரல் உடைந்து ஒலித்தது.

“எதுக்காக என்னை அளைச்சீங்களோ, அந்த விசயத்தை வெரசாச் சொல்லுங்க. ஏகப்பட்ட வேல கெடக்கு எனக்கு. நான் போவணும்.”

“... ... ... ... ... ... ... ... ...”

அமைதியாக இருந்தாள் குந்தலாம்பாள்.

மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டான் கலியன்.

“அப்ப நான் பொறப்படறேம்மா...!”

திரும்பினான்.

ஒரு அடி பின்னே எடுத்து வைத்தான்.

இந்தக் காட்சிகைளை எல்லாம் பார்த்துக்கொண்டே நின்றான் துரை.

*****-

“கலியா...!”

குந்தலாம்பாளின் அழைப்பில் அழுத்தம் தெரிந்தது.

அழுத்தமானக் குரலுக்குக் கொஞ்சமும் குறையாமல் கலியன் பார்வையும் அழுந்தமாய் வீசியது.

“கலியா, நீ முந்தி போல இல்லே...!;

ரொம்பத்தான் மாறிட்டே...!”

“எதைக் கண்டு அப்படிச் சொல்றீங்கம்மா...?”

‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு’ன்னு, கறாராப் பேசறே...!”

“நான் எப்பேயும் போலத்தான் இருக்கேன். எதுக்கும் வாயத் திறக்காம இருந்தது ஒரு காலம். என்னைக் கறாராப் பேச வெச்சதே நீங்கதானே...!”

கலியனின் குரலில் உறுதி இருந்தது.

*****-

‘வழக்கமா அம்மாக்கிட்டேப் பணிவாப் பேசுவானே...?;

இன்னிக்குத் தெனாவெட்டாப் பேசுறானே?’

யோசித்தான் துரை.

“... ... ... ... ... ... ... ... ...”

‘அம்மாகிட்டேயே இப்படிப் பேசறவன், என்கிட்டே எப்படிப் பேசுவானோ...?’

தனக்குத் தானேக் கேட்டுக்கொண்டான்.

உள்ளூர ஒரு நெருடல் வந்தது துரைக்கு.

*****-

“கலியா...! நீ மனசுல என்னதான் நினைச்சிருக்கே...?”

அதட்டலாய்க் கேட்டாள் குந்தலாம்பாள்.

சில நேரங்களில் அதட்டலாய் கேட்பது, உரிமையாய்க் கேட்பது போல உருமாறும்.

இணக்கமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.

கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் ஒரு வழி முறை.

மனித உறவுகளில், தவிர்க்க முடியாத கட்டங்களில் இவையெல்லாம் தேவையாகத்தான் இருக்கின்றன.

கலியன் குந்தலாம்பாளின் அதட்டலை, சகஜமாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான் ஒண்ணும் நெனைக்கலைம்மா...!”

ஆக்ரோஷமாக வந்தது பதில்.

அதோடு நிறுத்தவில்லைக் கலியன்.

“சொன்னா வருத்தப் படாதீங்கம்மா... “நீங்க என்னை வெட்டிவிடத் திட்டம் போடுறீங்க;

என் குடி கெடுக்க நினைக்கறீங்க;

என்னைச் சந்தீல நிறுத்தப் பாக்கறீங்க...!”

“... ... ... ... ... ... ... ... ...”

“அபாண்டமாப் பேசாதே கலியா...!

கலியனைத் தொடர்ந்துப் பேசவிடாமல் குறுக்கேப் புகுந்தாள் குந்தலாம்பாள்.

“... ... ... ... ... ... ... ... ...”

அமைதியாய் நின்றான் கலியன்.

“வேண்டாம்னு முடிவு பண்ணிப்பிட்டா என்னவேணாலும் பேசிடப்படாது கலியா...!;

நான் இப்ப வரைக்கும் உன்னை ஏதாவது தப்பாப் பேசியிருப்பேனா...;

நெஞ்சைத் தொட்டுச் சொல்லு...?”

“ஒங்களையோ, அய்யாவையோ அப்படி நினைச்சா வாய் வெந்து போயிரும் தாயி. நீங்க என்மேலே வெச்சிருந்த பாசமும், அக்கரையும், சின்ன அய்யாவுக்கு துளிக்கூட இல்லீங்களே...!”

துரைராமன் பேச வாயெடுத்தான்.

“... ... ... ... ... ... ... ... ...”

‘பேசத் தெரியாமல் எதையாவதுப் பேசிச் சூழ்நிலையை மேலும் இறுக்கமாக்கிவிடுவான் துரை’

என்பதை உணர்ந்தாள் குந்தலாம்பாள்.

‘எதுவும் பேச வேண்டாம்.’

துரைக்கு ஜாடை காட்டினாள்.

“என் மகனைப் பத்தி என்கிட்டேயேக் குறை சொல்றியோ...?”

“அம்மா... அது வந்து...!”

பேசத் தொடங்கியக் கலியனை அடக்கினாள் குந்தலாம்பாள்.

“கலியா, நீ நல்லது கெட்டதுத் தெரியாம எதுவும் பேசாதே;

ஒண்ணு மட்டும் நல்லாத் தெரிஞ்சிக்கோ...!

என்னையும் அய்யாவையும் விடத் துரை உன்பேர்ல எவ்ளோ பிரியம் வெச்சிருக்கான்னு தெரிஞ்சா நீ இப்படிப் பேச மாட்டே...!”

பூசி மெழுகினாள் குந்தலாம்பாள்.

“... ... ... ... ... ... ... ... ...”

கலியன் இதற்கு பதிலேதும் சொல்லவில்லை.

*****-

“துரை காளவாப் போட்டானே, அப்போ நான் என்ன சொன்னேன் தெரியுமா...?”

“... ... ... ... ... ... ... ... ...”

கல்லறுக்கறப் பொறுப்பைக் கலியனண்ட விடுன்னேன்;

அப்போ அவன் என்ன சொன்னான் தெரியுமா...?”

“... ... ... ... ... ... ... ... ...”

துரைராமனுக்கு அம்மாவின் பேச்சுக் குழப்பமாக இருந்தது.

‘அம்மா ஏதோக் குட்டையக் குழப்பறாளே...?;

என்ன சொல்வாளோ, ஏது சொல்வாளோ... தெரியலையே...!’

தவிப்பாய் தவித்தான் துரை.

‘துரை என்ன சொல்லியிருப்பான்...?’

குந்தலாம்பாள் வாயிலிருந்து வருவதை அறிவதற்காக காத்திருப்பதுப் போல் நடித்தன, கலியனின் காதுகள்.

கூடவேத், துரையின் முக விகாரத்தையும் நோட்டமிட்டன அவன் கண்கள்.

“பாவம்மா கலியன். நாள் பூரா வயல் வரப்புன்னு அலையறவனுக்கு மேலே மேலே சிரமம் தரக்கூடாது’ ன்னு உன் மேல இரக்கப்பட்டுக் கரிசனத்தோடத்தான் சொன்னான்;

சொன்னதோட இல்லை. வேற ஆளுங்களை ஏற்பாடுப் பண்ணித்தானே கல்லும் அறுத்தான். அது உனக்கேத் தெரியுமில்ல...!”

“... ... ... ... ... ... ... ... ...”

பதிலேதும் சொல்லாமல் நின்றான் கலியன்.

“இவ்வளவு கரிசனம் உன்மேல் வெச்சிப் பேசின துரைராமனைப் புரிஞ்சிக்காம நீ இப்படிப் பேசறதுதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு கலியா...!”

“அது... வந்து...!”

“பேச வேண்டாம் நீ;

உனக்குப் பேராசை வந்துடுத்து;

ஆண்டவன் புண்ணியத்துல, என் மகன் மெட்ராஸ்ல உத்யோகம் பார்த்துச் சம்பாதிக்கறான்;

பகவான் சாப்பாட்டுக்குக் குறைவைக்கலை.”

“... ... ... ... ... ... ... ... ...”

குனிந்தத் தலை நிமிரவில்லை கலியன்.

“இதோ எதிர்லதான் நிக்கறான் துரை. அவனைக் கையெழுத்துப் போடச்சொல்றேன். சொத்துப்-பத்து எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ...!”

குந்தலாம்பாளுக்கு மூச்சு வாங்கியது.

“அம்மா அப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா...!”

கெஞ்சுவது போல இருந்தது கலியனின் குரல்.

“வேற எப்படிச் சொல்ல;

அடுத்தப் போகம் சாகுபடிலக் குறைச்சித்தான் அளப்பேன்னுச் சொன்னியே, அப்படிச் சொல்லலாமா நீ...?;

குறைச்சி அளக்கறதென்ன...!;

குந்துமணி நெல்லுக் கூட அளக்க வேண்டாம்...;

இப்பச் சந்தோஷம்தானே...?”

“அம்மா, என்னை அவ்வளவுக் கேவலமா நினைக்காதீங்க;

உங்க வயவெளிய மட்டுமே நம்பி இருக்கற என்னை நட்டாத்துல விட்டுடாதீங்கனுதானே கேட்டேன்;

என் சீவனத்துக்கு ஏதாவது கொடுத்து என்னைக் காபந்து பண்ணுங்கன்னு கேட்கறேன்;

இது தப்புங்களா...?”

“... ... ... ... ... ... ... ... ...”

குந்தலாம்பாள் அமைதியாக ஓரக்கண்ணால் துரையின் எதிர்வினையைப் பார்த்தாள்.

“... ... ... ... ... ... ... ... ...”

துரைராமனோ, தலைக் குனிந்து, தரையைப் பார்த்தான்.

கிராமத்து விவகாரங்களை அணுகத் தெரியாதது இருக்கட்டும்; அதை உள்வாங்கக்கூடத் திராணியில்லாதத் துரையின் அறியாமையைக் கண்ட பெற்றத் தாய்க்கு மனசுத் தாங்கலாக இருந்தது;

துரையின் மேல், கோபத்திற்குப் பதில் அனுதாபமே விஞ்சி நின்றது.

*****-

“... ... ... ... ... ... ... ... ...”

நீதி மன்றத்தில் ஒரு தரப்பு வாதம் முடிந்ததும், அடுத்த தரப்பு வாதம் தொடங்குவதற்கு முன் ஒரு சிறு இடைவெளி இருக்குமே...

அப்படிச் சிறிது நேரம் கடந்தது.

“நீ எக்கேடு கெட்டும் போடா’னு சொல்லிருங்க;

எல்லாத்தையும் உங்ககிட்டே ஒப்படைச்சிடறேன்;

அரளி விதையை அரைச்சித் தின்னுட்டு செத்துடறேன்...!”

தன் வாதத்தைச் சீராக எடுத்துரைக்காமல், எடுத்த எடுப்பிலேயே உச்சம் தொட்டு, எதிர்த்தரப்பைக் கதிகலங்க அடிக்கும் அனுபவமிக்கக் கிரிமினல் லாயரைப் போல இருந்தது கலியனின் பேச்சு.”

Representational Image
Representational Image

“இந்தக் குடும்பத்துக்குக் கொலை பாதகம் வேற வரணும்னு நினைக்கறியா...?;

ஈவு இரக்கம் இல்லாத ராட்சசக் கூட்டம்னு எங்களை நினைக்கறியா...?”

‘ஜூனியர் வக்கீலான உனக்கே இவ்வளவுன்னா, சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீலான எனக்கு எவ்வளவு தெரியும்...!’

என்பதுபோல இருந்தது குந்தலாம்பாளின் பதில்.

“... ... ... ... ... ... ... ... ...”

கலியன் தலை குனிந்து நின்றான்.

தன் கட்சிக்காரரின் ஒருப் பக்க வாதத்தை மட்டும் சிறப்பாக வாதிட்டுப் பல வழக்குகளில் ஜெயித்து, மாஜிஸ்ட்ரேட்டாக பதவி உயர்வு பெற்ற பின் முதல் முதலில் ஒரு சிக்கலான வழக்கின் இரு பக்க வாதங்களையும் கேட்கும் நீதிபதியின் நிலையில் இருந்தான் துரைராமன்.

*****-

“கலியா...! நீ ஒண்ணு புரிஞ்சிக்கணும்;

எங்க வயல்வெளிகளை மட்டுமே நம்பி இருக்கற உன்னை அம்போன்னு நட்டாத்துல விட்டுட்டு நாங்க மட்டும் நல்லா இருக்கற பரம்பரை இல்லே எங்களுது;

இத்தனை வருஷம் எங்கக் குடுப்பத்தோட பழகியிருக்கே;

யாரு... எப்படி... ன்னு எடைப் போடத் தெரியல்ல உனக்கு.”

“உங்க மனசு தொட்டுச் சொல்லுங்கம்மா. இது வரைக்கும் ஒரு குந்துமணி நெல்லாவது குறைவா அளந்திருப்பேனா...? ;

சட்டம் பேசியதுண்டா...?;

தப்பு தண்டாவா நடந்திருப்பேனா...?;

இப்போ மட்டும் ஏன் இப்படிப் பேசறேன் இதுபோல நடந்துக்கறேன்...?”

“... ... ... ... ... ... ... ... ...”

சற்றே நிறுத்தினான் கலியன்.

“ஏன் பேசறியாம் அதையும் சொல்லிப்புடு...!”

“வயித்தெரிச்சம்மா...! வயித்தெரிச்ச...!”

“நீ வயிறு எறியறமாதிரி நாங்க அப்படி என்னத்தான் தீங்கு பண்ணிட்டோம் உனக்கு...?;

அபாண்டமாப் பேசாதே கலியா...”

*****-

“கோயிலு சம்பாக் காணீல காளவாப் போட்டது யாரும்மா...?”

வெள்ளந்தியான குரலில் கேட்டான் கலியன்.

“என் மகன் துரைதான் . அதுல என்ன சந்தேகம்...?”

“... ... ... ... ... ... ... ... ...”

“அவனோட கெட்ட நேரம், புயல் மழைல கரைஞ்சி நட்டமாயிருச்சு;

கையச் சுட்டுக்கிட்டு நிக்கறான்...!”

“காளவாப் போட்டதுல எனக்கு எதும் சம்பந்தம் உண்டுங்களாம்மா...?”

“இல்ல...! அதுக்கென்ன இப்ப. நீ சம்பந்தப்பட்டதா இங்கே யாரும் சொல்லலியே...!”

யதார்த்தமாகச் சொல்வதுபோல் சொன்னாள் குந்தலாம்பாள். அவ்வப்போது துரையின் முகக் குறிப்பையும் கவனிக்கத் தவறவில்லை அவள்.

“என்கிட்டே குத்தகைக்கு இருக்கற வயதானேம்மா அது.”

“ஆமாம்.. யாரு இல்லேன்னது...!”

“என் குத்தகைல இருந்தாலும் உடையவங்களை மதிச்சி காளவா போட்டுக்க விட்டுக் கொடுத்ததுக்கு , எனக்கு இப்படி தண்டனைங்களாம்மா..!.”

“தண்டணை தண்டணைனு எதை சொல்றேனு புரியலை... விவரமாத்தான் சொல்லேன் கலியா...!”

“விட்டுக் கொடுத்தவன் கெட்டதில்லைனு சொல்லுவாங்க;

ஆனா விட்டுக் கொடுத்துட்டு நான் கெட்டு நிக்கறேன்...”

“... ... ... ... ... ... ... ... ...”

ஒன்றும் புரியாதது போல முகம் வைத்திருந்தாள் குந்தலாம்பாள்.

குற்ற உணர்வால் விகாரமானது துரைராமனின் முகம்.

“எதுவா இருந்தாலும் மனசு விட்டுச் சொல்லு கலியா...!”

அதை எப்படிம்மா என் வாயால உங்களுக்குச் சொல்வேன்;

சின்னய்யா இவ்வளவு கிராதகத்தனமா நடந்துக்குவாருன்னு நான் கனவுல கூட நினைக்கலைம்மா...!”

“... ... ... ... ... ... ... ... ...”

*****-

எனக்கு எதுவுமே பேசப் பிடிக்கலைம்மா. என்னை விடுங்க. நான் போறேன்...!”

கலியன் வருத்தத்துடன் கிளம்பினான்.

“கலியா, பேச்சை இப்படிப் பாதீல விட்டுட்டுட்டுப் போறதுதான் முறையா...?;

சொல்ல வந்ததை முழுக்கச் சொல்லு...!;

பேச்சு வார்த்தைல தீராத பிரச்சனையும் உண்டா இந்த உலகத்துல.”

குந்தலாம்பாள் பொதுவாகப் பேசினாள்.

ஒருப் பிரச்சனைப் பற்றிப் பேசிப் பேசிச் சலித்துப் போன நேரத்தில் இப்படி ஏதாவது ஒரு பொது விஷயம் பேசி மடை மாற்றிய பின் பிரச்சனைக்குள் வருவது கூட ஒரு நடை முறைதான்.

தயங்கித் தயங்கிச் சொல்வதைப் போலச் சொன்னான் கலியன்.

“சாகுபடிக்குன்னு குத்தகைக்கு எடுத்த வயல்ல காளவாப் போட்டு வயலை மலையும் மடுவுமா ஆக்கி விணடிச்சிட்டேனாம்.”

“யாருடா அப்படிச் சொன்னா...?”

சற்றே தயங்கி “சின்னய்யாத்தான்மா... என் பேர்ல கேஸ் ஜோடிச்சி, செயில்ல தள்ளப்போறதா திட்டம் போட்டிருக்காரும்மா...!”

அதிர்ச்சியோடு பார்ப்பதைப் போல துரையைப் பார்த்தாள் குந்தலாம்பாள்.

உத்தமமான ஒரு தகப்பனுக்கு இப்படி ஒரு மகனா... மனம் நொந்தாள்.

“... ... ... ... ... ... ... ... ...”

“உங்க வீட்டுக்கு உண்மையா உழைச்ச எனக்கு செயில் தண்டணைதான் தகும்’னு நீங்க நினைச்சா அதையே செய்யுங்க...!”

“... ... ... ... ... ... ... ... ...”

“அபாண்டமா என் மேல பழி சுமத்தறாங்கனு தெரிஞ்சதும், கோபத்துல நானும் கொஞ்சம் எக்குத் தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்கம்மா...!”

“... ... ... ... ... ... ... ... ...”

குந்தலாம்பாளிடம் தொடர்ந்த அமைதி, துரையை அமைதியிழக்கச் செய்தது.

குற்ற உணர்வில் குமைந்தான்.

முகம் வெளிறியது.

துரையினுள் ஏற்படும் எல்லா ரசாயன மாற்றங்களையும் துல்லியமாகப் பார்த்தாள் குந்தலாம்பாள்.

*****-

“அம்மா, நீங்க அமைதியா இருக்கறதப் பாத்தா...;

சின்னய்யாச் செஞ்சது சரி’னு சொல்ற மாதிரியில்ல இருக்கு...!”

“இதோப் பாருக் கலியா. என் புள்ளை அப்படிச் சொல்லியிருந்தாத் தப்புதான்.. சொல்லிட்டான். வாய் வார்த்தை வாயில இருக்கும்போது நீ எகிரிப் பேசுறதுத் தப்பு.!”

பூசி மெழுகினாள்.

சின்னய்யா இப்படிப் பேசுதுன்னு என்கிட்டே வந்து சொல்லியிருந்தா, அதை எப்படிச் சமாளிக்கணுமோ அப்படிச் சமாளிச்சிருப்பேன்...!”

மென்று விழுங்கினாற்போல் பேசினாள். தர்ம சங்கடமான உணர்வை முகத்தால் உணர்த்தினாள்.

“... ... ... ... ... ... ... ... ...”

“சொல்லியிருக்கலாம்தான். தப்புதான்மா...!”

*****-

“கலியா..”

“சொல்லுங்கம்மா...!”

“நான் சொல்றேன். இதுவரைக்கும் நடந்தது எதையும் மனசுல வெச்சிக்காதே...;

எனக்கும் வயசாச்சு. எப்போவேணாலும் போய்ச் சேந்துருவேன்;

எனக்குப் பிறகு நிலம் நீச்செல்லாம் பாத்துக்கப்போறது சின்னய்யாதான்.”

“நாளுங் கிளமையுமா அச்சானியமாப் பேசாதீங்க தாயி...!”

“நெருப்புன்னா வாய் வெந்துடாது கலியா;

எனக்குப் பிறகும் நீ பொறுப்பா இருந்து நிலத்தை விக்காம கொள்ளாம விவசாயம் பார்த்துக்குவேனு நினைச்சேன்;

நான் இருக்கும்பேதே நீ இப்படி நடந்துக்கறதைப் பார்த்தா...!”

“திரும்பத் திரும்ப அபசகுனமாப் பேசாதீங்கம்மா...!;

என் உசுரு உள்ள வரைக்கும் உங்க வயலை நான் சாகுபடி பண்ணித் தரேன்மா... போதுமா...?”

“போதுண்டாப்பா... போதும்!”

கையெடுத்துக் கும்பிட்டாள்.

“நீ இந்தக் குடும்பத்துக்கு ரொம்ப விசுவாசமாயிருந்தா, என் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கறவனாயிருந்தா நான் சொல்றபடி கேளு..”

“... ... ... ... ... ... ... ... ...”

மூச்சிரைத்தது குந்தலாம்பாளுக்கு.

“என் பேச்சுக்கு எதிரா எதாவது திட்டம் உன்கிட்டே இருந்தா, இப்போ என்னண்ட சொல்லவே வேண்டாம். என்ன வேணாலும் செஞ்சிக்கோ. நாங்க எதுக்கும் தயார்.”

*****-

அம்மாவின் தீர்ப்புக்காக கலியன் நிதானமாகவும். துரை பரபரப்பாகவும் காத்திருந்தனர்.

“கோவில் சம்பாக் காணியை நீ எடுத்துக்கோ கலியா.”

“... ... ... ... ... ... ... ... ...”

“அந்த மூணு ஏக்கர் நிலத்தையும் சீர் பண்ணிச் சாகுபடி பண்ணிக்கோ. மத்ததை விட்டுக்கொடுத்துடு...!”

“... ... ... ... ... ... ... ... ...”

கலியன் எந்த பதிலும் சொல்லவில்லை.

குந்தலாம்பாளே தொடர்ந்தாள்.

“விட்டுக் கொடுத்தாலும் சின்னய்யா இந்த கிராமத்துல வந்து உட்காந்து விவசாயம் பண்ணப் போறதில்லை;

நஞ்சை புஞ்சைங்களை, நல்ல கிராக்கியா வந்தா ஊர்ல குழி என்ன விலை விக்குதோ அந்த விலைக்கு வித்துப் கொடுத்துடணும். செய்வியா ? ”

குந்தலாம்பாளின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது.

“விக்கப்போறது தெரிஞ்சா, வாங்க நிறைய பேர் இருக்காங்கம்மா. கையில காசு வாயில தோசைனு வித்துக் கொடுத்துடலாம். ஒரு விசயம் சொல்லலாமுங்களா...?”

“சொல்லு...”

“... ... ... ... ... ... ... ... ...”

கலியன் என்னதான் சொல்லப் போகிறான் என்பதை அறியக் காதைத் தீட்டினான் துரை.

துரையின் முகக் குறிப்பைப் படிக்கத் தன்னை தயார் செய்து கொண்டாள் குந்தலாம்பாள்.

*****-

“கோவில் சம்பாக் காணியை என் பேருக்குச் பட்டாப் பண்ணிக் கொடுக்கறதாச் சொல்றீங்க, சரி;

ஒண்ணு யோசிச்சீங்களா அம்மணி...! அந்தக் காணி இப்போ உடனடியா விவசாயம் செய்யற மாதிரியா இருக்கு?”

“... ... ... ... ... ... ... ... ...”

“கல்லறுப்புக்கு நோண்டின பள்ளம், அல்லியும் ஆகாயத் தாமரையுமா மண்டிக் குளமாய்க் கிடக்கு;

கொளத்துல மீன் பிடிச்சிப் பொழைச்சிக்கடாக் கலியானு சொல்றீங்களாம்மா...?”

“இதோ பாரு கலியா, என் மனசுலப் பட்டதைச் சொல்லிட்டேன். வேற என்னதான் எதிர்பார்க்கறே நீ...?”

“சம்பாக் காணியை நான் சீர் பண்ணிக்கறேம்மா;

கூலி ஆளு படைகளை விட்டு சரி பண்ற அளவுக்கு என்கிட்டே பணம் காசு கிடையாது, உங்களுக்கேத் தெரியும்;

சல்லிக் காசு சேமிச்சி வெச்சிக்கலை நான்.”

“காணியை நிரவித் தரச்சொல்றியா..? இல்லே, அதை நிரவ காசு பணம் எதிர்பார்க்கறியா...?”

“பணம் காசு வேண்டாம்மா. இன்னும் ஒரு வருசம்;

ஒரே ஒரு வருசம்..., அடுத்த பொங்க வரைக்கும் எல்லாக் காணீலயும் நானே நட்டு சாகுபடி பண்ணிக்க அனுமதி கொடுங்கம்மா;

அதுல வர்ற வருமானத்தை வெச்சி இதை துத்துக்கறேம்மா...!”

“... ... ... ... ... ... ... ... ...”

குந்தலாம்பாள் சற்று நேரம் அமைதி காத்தாள்.

துரை அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.

“என்னடா துரை. அவன் கேக்கறது எனக்கு ஞாயமாப் படறது. என்ன செய்யலாம்னு நீதான் சொல்லணும்...!”

“டெனண்ட்கிட்டே, காம்ப்ரமைஸ் பேசும்போது வீட்டு மூத்தவங்கள வெச்சிக்கிட்டு வீட்டுக்குள்ளேயே வெச்சிப் பேசி முடிக்கப் பாருங்க;

விஷயம் பொதுவெளிக்கு வந்து பஞ்சாயத்துனு வந்துட்டா சிக்கலாயிரும்...!”

அட்வகேட் வாதிராஜன் சொன்ன அட்வைஸ் துரைராமன் மனதில் பளிச்சிட்டது.

“சரிம்மா... உன் இஷ்டம்...” என்றான் துரைராமன்.

*****-

துரைராமன் இப்போது நேருக்கு நேர் கலியனோடு பேச வந்து நின்றான்.

“கலியா, சம்பாக் காணியை உன் பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணிக் கொடுத்தபிறகு அய்யா எழுதிக் கொடுத்த குத்தகைச் சீட்டை என் கைல கொடுத்துடணும் சரியா...!”

கோவில் திருவிழாவிற்குத் தர்மம் செய்யும் பண்ணையார்கள், பணம் கொடுக்கும் முன் கண்டிஷன் போடுவார்களல்லவா

அப்படி இருந்தது துரைராமனின் அணுகுமுறை.

“அடுத்த வருஷம் போகியல் நாள்ல, அதுங்களை உங்க கண்ல காட்டிட்டு, உங்க கண் எதிர்லயே போகித் தீயில போட்டு எரிச்சிருவேன் சின்னய்யா...!”

“கலியா நீ வார்த்தை மாறிடமாட்டேன்னு நம்பறேன் ...!”-

நடுவில் வலிந்துத் தன் கருத்தைத் திணித்தாள் குந்தலாம்பாள்.

“உங்க நம்பிக்கை வீண்போகாதும்மா...!”

என்றான் கலியன்.

சொல்லும்போது அவன் வலது கை தாயத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது.

*****-

கலியன் புறப்பட்டுச் சென்றபிறகு, துரைராமன் குந்தலாம்பாளிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

“ஏம்மா... நாம இந்த மூணு ஏக்கரை விட்டுக் கொடுத்தா அடங்கிடுவான் கலியன்னு நினைக்கறியா...?”

“தொரை...! எல்லாமே நம்பிக்கைலதான் ஓடறது. எனக்குத் தெரிஞ்சி, ஒருத்தரை அழிக்க, பொய் வழக்கு போடறது, நம்பிக்கைத் துரோகம் பண்ணறது இதெல்லாம் கலியன் கிட்டே கிடையாதுன்னு தோணறது...”

தன் விரலையே எடுத்துத் தன் கண்ணில் குத்திய அம்மாவிடம் ஏதும் எதிர் வாதம் செய்ய முடியவில்லை துரைராமனால்.

இதற்கு மேல் பேசினால் ரசாபாசமாகிவிடும் என்பதால் எழுந்துக் காமரா உள்ளுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான் துரைராமன்.

*****-

“மாமி... பொங்கல் ஆச்சா...!”

கம்பீரமாய் வந்தது குரல்

‘யாரது...?’

மனசு கேட்க, வலது கையை புருவத்துக்கு மேல் உயர்த்தி உபரி வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு, பார்த்தாள் குந்தலாம்பாள்.

கேள்விக் குறிகளால் குந்தலாம்பாளின் முகத்தில் உருவான மடிப்புகள், சந்தோஷ ரேகைகளாக உறுமாறின.

“திருநா...! வாம்மா... எவ்ளோ நாளாச்சு உன்னைப் பார்த்து...!’

சந்தோஷமாக வரவேற்றாள்.

வாங்கி வந்த பழங்களை மஞ்சள் பையுடன் குந்தலாம்பாள் கையில் கொடுத்தார் திருநாவுக்கரசு.

“மாமி... உங்க ஆசீர்வாதம் வேணும்...!”

குனிந்து நமஸ்கரித்தார்.

“என் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு உனக்கு. அவர் இருந்த வரைக்கும், நீ எல்லையம்மன் கோவில் பிரகாரத்துக்கு கருங்கல் தளவரிசை போட்டுத் தந்த அழகை மெச்சிண்டே இருப்பார். எல்லையம்மா அருளால நீ அமோகமா இருப்பேடா கொழந்தே...!”

ஒக்காரு...!

ஊஞ்சலைக் காட்டினாள்.

சமையற்கட்டுக்குள் சென்ற குந்தலாம்பாள் டிபன் தட்டில் பால் பொங்கலும், இரண்டு வடைகளும் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

*****-

குந்தலாம்பாள் வீட்டிலிருந்து கிளம்பிய கலியன் நேரே வீட்டுக்குச் செல்லவில்லை.

எல்லையம்மன் கோவிலுக்குச் சென்றான்.

‘காளவாய் போடுகிறேன் பேர்வழி’ என்று துரைராமன் காணியில் காலெடுத்து வைத்த நாள் அந்தத் திக்கில் கூடத் தலை வைத்துப் படுக்கவில்லை கலியன்.

இன்று அந்தக் காணியை அவனுக்கு விட்டுத்தருவதாய் மகனுக்கு முன்னால் அய்யாம்மா வாக்குக் கொடுத்த பிறகு, அனிச்சையாய்க் அவன் கால்கள் சம்பாக் காணிக்கு அழைத்து வந்தன.

என்னதான் நடிப்பாக இருந்தாலும்... தாறுமாறாக அய்யாம்மாவைப் பேசுவது மனதில் உறுத்திலாகத்தான் இருந்தது கலியனுக்கு.

கோவில் வளாகத்திலிருந்து அந்தக் காணியையே பார்த்தபடி நின்றான் கலியன்.

‘இந்தக் காணி அய்யா நினைச்சது போல ஊர் ஜனங்களுக்கு உபயோகமா ஆவணும் எல்லையம்மா...!’

மனமுருகி வேண்டிக்கொண்டான்.

Representational Image
Representational Image

கோவில் பிரகாரத்துக் கருங்கல் களத்தில் துண்டு விரித்துப் படுத்தான் கலியன்.

*****-

“மாமி, எங்க தாத்தா வீட்டை நான் வாங்கிட்டேன்...!”

“அடடே...! ரெண்டு நா முன்னேதான் யாரோச் சொன்னா, ‘வாஞ்சியாம் கிரயம் ஆயிடுத்துன்னு.’ நீதான் வாங்கியிருக்கியா...? ரொம்ப சந்தோஷம் திருநா...!”

‘கூடத்தில் அம்மா யாருடன் பேசுகிறாள்...!’

அறியும் ஆர்வத்தில் காமரா உள் கதவை துரை லேசாகத் திறந்தான் துரை.

காமரா உள்ளுக்கு எதிர் திசையைப் பார்த்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார் திருநா.

திருநாவைப் பார்த்தபடி நின்ற குந்தலாம்பாள் ,காமரா உள் கதவைத் திறத்த துரையைப் பார்த்தாள்.

“பூர்வீகமா கிராமத்துல இருக்கற ப்ராபர்டியை வித்துட்டு சிட்டீல போய் செட்டில் ஆகணும்னு நினைக்கறவா நடுவுல, தாத்தா வித்த வீட்டை வாங்கிப் புதுப்பிக்கணும்னு நினைக்கறையே திருநா...! ஒசந்த மனசு ஒனக்கு. உன் மனசு போலவே ஒசந்தே இருப்பே நீ...!”

துரைக்கு, அம்மாவின் அடுத்தக் குத்து...

மீண்டும் காமரா உள்ளுக்குள்ளேயே பதுங்கிவிட்டான் துரை.

“நான் உங்க குடும்பத்துக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கேன் மாமி...”

இஞ்சினியர் திருநாவுக்கரசின் குரலில் நன்றி இருந்தது.

Representational Image
Representational Image

“எதுக்கு திருநா...! நாங்க என்ன செஞ்சோம் உனக்கு...?”

“சுப்பாமணி மாமாத்தான் ஆரம்பத்துலேந்து பேசி இந்த இடத்தை எனக்கு முடிச்சிக் கொடுத்தார் மாமி...!”

“அப்படியா... சுப்பாமணி சொல்லவே இல்லையே...! எப்படியோ, விட்ட கொரை தொட்ட கொரைனு சொல்றாப்ல திருப்பவும் அந்தனூர் வாசியாயிட்டே...! க்ஷேமமா இரு...!”

வாய்நிறைய திருநாவை வாழ்த்தி அனுப்பினாள் குந்தலாம்பாள்.

*****-

சுப்பாமணி மாமா பஸ் இறங்கி வந்து கொண்டிருந்தார்.

எல்லையம்மன் கோவில் அருகில் கலியனைப் பார்த்தார்.

“கலியா... இந்த நேரத்துல இங்க...?’

Representational Image
Representational Image

காலை முதல் நடந்த அனைத்தையும் விவரமாகச் சுப்பாமணியிடம் சொன்னான் கலியன்.

“அய்யா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குங்கய்யா...?”

“எதுக்கு...?”

“இன்னிக்கு வரைக்கும், பெரியய்யாப் போனபிறகும் சொந்த சாகுபடிதான் நடக்குது நம்ம வீட்ல. ஆனா, எங்க அப்பாக் காலத்துலேந்து குத்தகைக்கு இருக்கறதா ஒரு பேச்சு ஊரு முச்சூடும் பரவிடுச்சுங்கய்யா...!”

நல்ல நிர்வாகி அதிகம் பேசமாட்டான். பிறர் சொல்வதற்கு முழுமையாகக் காது கொடுப்பான்.

கலெக்டர் பி ஏ அல்லவா.

மாவட்ட நிர்வாகமே பார்ப்பவர் அல்லவா சுப்பாமணி.

அமைதியாய்க் கலியன் சொல்வதற்குக் காது கொடுத்தார்.

அவன் பிரச்சனை என்ன என்பதைக் காதில் வாங்கினார் சுப்பாமணி.

மலையும் மடுவுமாகக் கிடக்கும் கோவில் சம்பாக் காணியைக் கைக் காட்டினான் கலியன்.

இந்தக் காணீல ஊர்ப் பொதுப் பாதைப் போடணும்னு பெரிய்யாவுக்குத் தீராத ஆசை;

அந்த ஆசையை என் மூலமாத் தீத்துக்கத்தான் ஒரே நாள்ல நிறைய குத்தகைப் பத்தரங்களா எளுதி எளுதிக் தள்ளினாரு;

ஒரு சில கடுதாசிங்கள்ல என்னை விட்டு ‘தொப்ளான்’னு என் அப்பாப் பேரை எளுதச் சொன்னாரு;

என் பேரை எளுதச் சொன்னாரு சில கடுதாசிங்கள்ல...!;

ஆனா இதெல்லாம் ஊரானுங்களுக்குத் தெரியாதுங்களே...”

“ஊரானுக்கு எல்லாம் தெரியணும்னு என்ன இருக்கு...?”

சுப்பாமணி அதிராமல் கேட்டார்.

“இது வரைக்கும் ரெண்டு மூணு முறை கணக்குப் பிள்ளை வூடு தேடி வந்துட்டாரு. குத்தகைச் சீட்டுங்களைக் குடு.. ஆர் டி ஆர் ல உன் பேர் பதிஞ்சி தரேன்...” னு நச்சுப் பிடிக்கறாரு;

சமயத்துல உண்மையை ஒடைச்சிச் சொல்லிரணும்னு தோணுது. ஆனா பெரியய்யாவோட ஆசைய நிறைவேத்தணும்னு பல்லக் கடிச்சிக்கிட்டு இருக்கேன்.”

தன் கழுத்தில் தொங்கிய தாயத்தைத் தொட்டுக் காட்டினான்.

கலியனின் விசுவாசமும், உண்மையும், நேர்மையும், பாசமும், கடமை உணர்ச்சியும் சுப்பாமணியை நெகிழ வைத்தன.

“வேற யாரும் எதுனா சொன்னாங்களா...?”

“கிட்டாவய்யா ரெண்டு மூணு முறை என்னை அளைச்சி “ ஏமாந்துராதே கலியா...!” னு எச்சரிச்சாரு. அந்த கடுதாசிங்களை கொண்டாந்து கொடுன்னு கேட்டாரு...!”

இப்போது சுப்பாமணி கலியனுக்குப் பதில் சொன்னார்.

“கலியா... உன்னை அழைச்சி யாரு எது சொன்னாலும், சரி அப்பிடியே செஞ்சிடறேன்னு சொல்லிரு. பேப்பர் கேட்டாங்கன்னா, என் கிட்டே கொடுத்து வெச்சிருக்கறதாச் சொல்லு.”

குழப்பத்தில் இருந்த கலியனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

*****-

“ஏண்டா சுப்பாமணி, வாஞ்சி’ வீட்டைத், திருநாவுக்கு முடிச்சிக் கொடுத்தியாமே...! சொல்லவே இல்லியே நீ...! அந்தப் புள்ளாண்டான் வந்தான். சத்தான பிள்ளை அது...!”

சாப்பாடு போட்டுக் கொண்டே, தம்பி சுப்பாமணியிடம் செய்தி வைத்தாள் குந்தலாம்பாள்.

Representational Image
Representational Image

“சொல்லக்கூடாதுனு இல்லே கொந்தலா... ஏதோ மறந்து போச்சு...!”

“வாங்கோ மாமா...!”

காமரா உள் கதவைத் திறந்து கொண்டு வந்தான் துரை.

“கலியன் வந்தான் மாமா...!”

துரை தொடங்க குந்தலாம்பளும் துரையுமாக அனைத்தையும் சொன்னார்கள்.

கோவிலில் கலியன் சொன்ன விஷயங்களை மீண்டும் ஒரு முறை குந்தலாம்பாள் மூலம் அறிந்து தெளிந்தார் சுப்பாமணி.

*****-

அமாவாசை.

நிறைந்த நாள்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாகப் பதியப்பட்டது.

விலைக் கொடுத்துக் கலியன் வாங்கியதாகக் கிரய சாசனம் செய்துப் பதியப்பட்டது.

கலெக்டர் பி ஏ சுப்பாமணியே நேரில் வந்ததால், நேரம் காலம் வளர்த்தாமல் சீக்கிரமாகவேப் பதிவு முடிந்தது.

இஞ்சினியர் திருநாவுக்கரசை வரச்சொல்லி, சாட்சிக் கையொப்பம் இடச் சொன்னார் சுப்பாமணி.

“கலியா... நான் ஒரு யோசனை சொன்னா செய்வியா?”

“சொல்லுங்கய்யா...?”

“இவரைத் தெரியுமில்லே...”

திருநாவுக்கரசைக் காட்டிக் கேட்டார் சுப்பாமணி.

“நல்லாவேத் தெரியும்யா...!”

“இவரு கிட்டே இப்ப பதிஞ்ச பத்திரத்தையும், பழைய கடுதாசிங்களையும் கொடுத்து வை. பத்திரமா வெச்சிப்பாரு...!”

“சரிங்கய்யா...!”

“இந்த இஞ்சினியர் கிட்டே சிலது சொல்லியிருக்கேன். அந்தக் காணீல என்னல்லாம் செய்யணுமோ எல்லாம் செய்து தருவாரு;

அவர் கிட்டே எல்லாத்தையும் சொல்லு. எல்லாத்துக்கும் அவர் ஏற்பாடு பண்ணுவாரு...”

நன்றியுடன் இருவரையும் பார்த்தான் கலியன்.

*****-

கிராமங்களில் எதையும் மறைத்துச் செய்ய முடியாது.

எது செய்தாலும் எப்படியாவது யாருக்காவதுத் தெரிந்துவிடும்.

அந்த வகையில் கலியனுக்கு மூன்று ஏக்கர் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கும் செய்தி, ஊர் முழுதும் பரவிவிட்டது.

“விவசாயக் கூலியா இருந்தவன் இப்போ மூணு ஏக்கருக்கு அதிபதியா...?”

“அன்னாடக் காச்சியாஅலைஞ்சவனுக்கு அதிர்ஷ்டம் பாருடா...”

மூணு வேளை சோத்துக்குக் காஞ்சவனுக்கு மூணு ஏக்கர் நெலம் ரொம்ப அதிகம்டா...”

இப்படியெல்லாம் ஒரு புறம் பேசினார்கள்.

*****-

“நாய்க்கு எலும்புத் துண்டுப் போட்டாப்ல போட்ருக்கான் அந்த பட்டணத்துத் துரை. இந்தக் கலியனும் ஏமாளியா நிக்கிறான்...”

இந்தக் கருத்தை அங்கங்கே பரவவிட்டுக் கொண்டே இருந்தார் கிட்டாவய்யா.

பத்திரப் பதிவு முடித்துக் கொண்டு தஸ்தாவேஜூகளோடு வந்த கலியன் எல்லையம்மன் சந்நிதிப் படிக்கட்டில் வைத்தான்.

Representational Image
Representational Image

மனப்பூர்வமாய் வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்.

“கலியா...! நீ புத்திசாலினு நினைச்சேன். சரியான ஏமாளியா இருக்கியே...?”

திடீரெனக் குரல் வரத் திரும்பினான் கலியன்.

எதிரே நின்றார் கிட்டாவய்யா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.