Published:Updated:

கலியன் மதவு |சமூக நாவல்| அத்தியாயம் – 9

Representational Image

அமைதியாக இருந்ததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தரக்குறைவாகப் பேசினார்கள் இளவட்டங்கள்..இவர்களுடன் பேசக்கூடாது. காரியம் கெட்டுவிடும் என்பதை உணர்ந்தார் மாதய்யா. அந்தக் கூட்டத்துக்கு தலைவன் போல் இருந்த இளைஞன் அருகில் சென்றார்.

Published:Updated:

கலியன் மதவு |சமூக நாவல்| அத்தியாயம் – 9

அமைதியாக இருந்ததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தரக்குறைவாகப் பேசினார்கள் இளவட்டங்கள்..இவர்களுடன் பேசக்கூடாது. காரியம் கெட்டுவிடும் என்பதை உணர்ந்தார் மாதய்யா. அந்தக் கூட்டத்துக்கு தலைவன் போல் இருந்த இளைஞன் அருகில் சென்றார்.

Representational Image

“குடலைப் பிரட்டும் துர்நாற்றம்.

பொறுத்துக் கொள்ள முடியாமல் மூக்கை துணியால் மூடிக்கொண்டு பிரேதம் சுமந்தனர்.

வழக்கமான திக்கில்தான் இறுதியாத்திரை நகர்ந்தது.

கண்ணில் விளக்கெண்ணை கொட்டிக்கொண்டு கூர்ந்து கவனித்துக்கொண்டே முன்னே போனார் மாதய்யா.

முத்தனூர் எல்லையில் ஜனக்கூட்டம் சற்றே அதிகமாய் இருப்பதாக உணர்ந்தார் மாதய்யா.

பிரேதத்தை முன்னே விட்டுப் பின்னே சென்றார்.

அந்தனூர் எல்லை முடிந்து , முத்தனூர் எல்லைத் தொடக்கத்தில் பிரேதம் மறிக்கப்பட்டது.

"எங்கள் ஊர் வழியா போக விடமாட்டோம்..." வழியை அடைத்து நின்றனர் இளவட்டங்கள்.

இது தானே கூடிய கூட்டமல்ல. வீரமுத்துவால் கூட்டப்பட்ட கூட்டம்.

கூட்டினாலும் கூட்டப்பட்டாலும்... கூட்டத்துக்கு சக்தி அதிகமல்லவா...!

மாதய்யா முன்னே வந்தார்.

“…………….” அமைதியாக நின்றார்.

அமைதியாக இருந்ததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தரக்குறைவாகப் பேசினார்கள் இளவட்டங்கள்..

இவர்களுடன் பேசக்கூடாது. காரியம் கெட்டுவிடும் என்பதை உணர்ந்தார் மாதய்யா.

அந்தக் கூட்டத்துக்கு தலைவன் போல் இருந்த இளைஞன் அருகில் சென்றார்.

*** *** *** *** *** ***

"தம்பீ... ஊரு நாட்டாமை பரந்தாமனை வர சொல்லு. நான் அவருகிட்ட பேசிக்கிறேன்...".

"யாரும் வர மட்டாங்க. நான் சொன்னா சொன்னதுதான்.”

Representational Image
Representational Image

“ அண்ணன் பேச்சை மீறி எங்க வளீல வந்தா நல்லா இருக்காது சொல்லிப்போட்டேன்..." என்றது ஒரு முறுக்கு மீசை இளசு.

"இனிமேல எங்க ஊர் வழியாக உங்க ஊர் பிரேதங்கள் போகக்கூடாது. அதுதான் எங்க ஊர் பஞ்சாயத்து முடிவு..." என்றான் ஒரு ஹிட்லர் மீசை இளைஞன்.

"எங்க ஊருக்குள்ளே வரக்கூடாது...! வரக்கூடாது...! வரக்கூடாது...!!!" கோஷம் போட்டுக்கொண்டு பாதையை அடைத்து உட்கார்ந்து தர்ணா பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

*** *** *** *** *** ***

இனிமேல் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார் மாதய்யா...

"பாடைய திருப்பி ஊருக்குள்ளே கொண்டு போங்க...!"

உத்தரவு போட்டார்.

பிணம் தூக்கி வருபவர்களும், பின்னால் வருபவர்களும், எப்படி வழி என்று புரியாமலும், மாதய்யாவின் கோபம் உணர்ந்து எதுவும் கேட்காமலும் அனிச்சையாய்த் திரும்பினர்.

*** *** *** *** *** ***

"முத்தனூர்ப் பாதை வழியாத்தானே காலங்காலமா போய்க்கிட்டிருக்கு…!”

“வருஷக்கணக்குல வழக்கமாப் போறதை திடீர்னு தடுத்துற முடியுமா... கேக்கறேன்..!.”

“நேத்துப் பேஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் கணக்கா. எவனோ நாலு விடலைங்க போகப்படாதுன்னு மறிச்சதும்... இப்பிடி ஊருக்குள்ளே பொணத்தைக் திருப்பிக் கொண்டு வரானே. ஊரு வௌங்குமா...!”

காலையிலேயே ‘ஒரு காரியம் ஆச்சு’ என்ற கடமைக்காக, குருக்கள் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துவிட்டு, ஏதோ வேலையாக டவுனுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் கிச்சாமி.

“நரிக்கு நாட்டாமை கொடுத்தாப்லன்னா இருக்கு... இந்த மாது செய்யறது...”

கிச்சாமி கைத்தடியை ஊன்றிக்கொண்டு, வீட்டுக்குள்ளே நிற்கும் யாரிடமோ சொன்னது மாதய்யாவின் காதில் தெளிவாக விழுந்தது.

மாதய்யா ரௌத்ரமானார்.

“ஸ்வாமி... கிச்சாமி ஸ்வாமி... என்ன சொன்னேள்...? இன்னொருவாட்டி சொல்லுங்கோ...”

“........................” எதிர்பாராத தாக்குதலால்,புலிக்கு முன் ஆடாய் ஒடுங்கினார் கிச்சாமி.

“நான் நரிக்கு நாட்டமை கொடுத்தாப்ல ஆடறதை நீர் என்னத்துக்கு பார்க்கணும்னேன்.”

குபீர் பாய்ச்சலாய்ப் பாய்ந்தார்.

அதோடு விடவில்லை.

“வாகனத்தைத் தூக்கிண்டு கிச்சாமி பின்னாலயே போங்கோ... அவர் வழி சொல்லுவார்...!”

சொல்லிவிட்டு விரு விருவென்று விலகிக்போவதுபோல பாவனை செய்தார் மாதய்யா.

எதிர்பாராத திடீர்த் தாக்குதலால், கிச்சாமிக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது.

மாதய்யாவை விட ஏழெட்டு வயது அதிகமான கிச்சாமிக்கே இந்த கதி என்றால் வேறு யார் மாதய்யாவைக் கேட்கமுடியும்…?

Representational Image
Representational Image

“பாதி வழி போன கட்டை, திரும்பி வருதே, ஊரு வெளங்குமா…?”

“ஊருக்கு ஏதோ கேடுகாலம்தான் வந்துருக்குடீ...! பிரேதம் இப்படி அலையறதே...!!”

மேலச் சந்தில் நுழைந்தபோது, “அச்சச்சோ…!!! எல்லைக் கோவில் இருக்கே… அது வழியாவா தூக்கிண்டு போப்போறா...? அது ஆகாதாச்சே...!”

“பல வருஷங்களுக்கு முன்னால எல்லையம்மன் கோவிலுக்கு முன்னால தூக்கிண்டு போனப்போ, தூக்கின நாலுபேருக்கும் கை கால் விளங்காம போயிடுத்தாமே...!” பிரேதத்தின் பின்னால் வந்தவர்களில் ஒருவர் நாலுபேர் கேட்கும் அளவுக்கு சத்தமாக ரகசியம் பேசினார்.

மாதய்யாவுக்கு ஏன் இந்த வீண் வேலை, வாழுகிற வீட்டின் வளர்ந்து நிற்கும் பேயத்தியைக் கூட வெட்ட யோக்யதை இல்லாத சோம்பேறிகள், வீட்டின் சாத்திய ஜன்னல் பின்னாலிருந்து கதைத்தார்கள்.

IMAGE - 3

முக்கால்வாசி மூடிய வாசல் கதவின் பின்புறத்திலிருந்தபடி வாய்க்கு வந்தபடி வம்பு பேசினார்கள்.

மொட்டை மாடியில் மறைவாக நின்றுகொண்டு பழுது சொன்னார்கள்.

தமக்குத் தெரிந்ததையும், தாம் நினைத்ததையும், தங்கள் அபிப்ராயங்களையும், ஒளிந்து மறைந்து புறம் பேசினார்களே தவிர நேரே வந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள எவரும் வரவில்லை.

மேலச்சந்து திரும்பியதும், நாய்க்கர் ரைஸ் மில் தாண்டிப் போனபோது பிணம் தூக்கிகளுக்கு உதறல் கண்டது.

எல்லையம்மன் கோவில் திருப்பத்தில் கலியன் காத்திருந்தான்.

கோவிலுக்குப் பின்புறம், மாதய்யா காணியில் ஆள் படைகளைக் கொண்டு விடிகாலை முதல் ஆட்களை வைத்து நன்கு செப்பனிட்டு வைத்திருந்தானல்லவா, அந்தப் பாதையில் பிரேதம் சென்றது.

Representational Image
Representational Image

“இன்னிக்கு ரோசப் பட்டுக்கிட்டு தன்னேட பொன் விளையற பூமீல பிரேதத்தை தூக்கிப் போயிட்டாரே... விளையற பூமிக்குக் காட்டுற மரியாதையா இது...”

“ஏன்...? வெளையற பூமில பாடை போனா அச்சானியமானு கேக்கறேன்...”

“இதுக்கப்பறம் இந்த ஊர்ல தலை வுளுந்தா இந்த வளியாப் போவ அனுமதிப்பாரா அவுரு…?”

“இப்போத் தரிசாக் கெடக்கு... கொண்டு போயிட்டாரு... விளையற காலத்துல இப்படி அபரகாரியம் நடந்தா நட்ட வயல்ல போக விட்ருவாரா... கேக்கறேன்...?”

“ஆத்தரத்துல கூடாது’ன்னு பக்கத்து ஊரானுங்க சொன்னதும், அப்படியே ரோஷம் பொத்துக்கிட்டு வருதாக்கும்...”

“அதானே…! நம்ம சரக்கு சரியில்லங்கும்போது, நாமதான் கொஞ்சம் தழைஞ்சிக், குழைஞ்சிக், தணிஞ்சிக் குனிஞ்சிக் குழையடிச்சிக் கூழக்கும்புடு போட்டு, அய்யா அம்மானு அனுசரிச்சிக் கெஞ்சிக் கூத்தாடி, சரிக்கட்டிக்கிட்டுல்ல போவணும்... ரோசப்பட்டா ஆவுமா...?”

“ஊரு நல்லா இருக்க வேணாமோ...? எல்லைதாண்டி உசுரு போனா ஊருக்குள்ளயே கொண்டுவராதேங்கறது தர்ம சாஸ்த்ரம்.”

“பில்லட்லா பத்மநாபய்யா உசுரு டவுன் பெரியாஸ்பத்திரிலதானே போச்சு...”

“அவரை ஊருக்குள்ளே கொண்டு வரலையே… அவருக்கு இல்லாத செல்வாக்கா...”

“பாடியை ஊருக்குள்ளே கொண்டு வந்ததே தப்பு.”

“ஒரு தப்பு நடந்துதேனு பார்த்தா முதல் கோணல் முற்றும் கோணலாயிடுத்தே...”

“பெரிய புரட்சி பண்ணிப்பிட்டதா நினைப்பு...”

“அகால மரணம்னாலே, செத்தவன் மனசுல என்னென்ன ஆசைங்க இருந்ததோ அதைத் தீத்துக்கறவரைக்கும் ஆவியாச் சுத்தும்னு சொல்லுவா.”

“இந்த மரணத்துல பிரேதமாவே ஏகமாச் சுத்தியிருக்கே...”

“ஊருக்கு என்னென்ன கேடுகாலம் வரப்போறதோ...”

இன்னும் என்னென்ன கன்றாவியெல்லாம் பாக்க இருக்கோ...!”

“நாளைக்கு தோப்பனார் சிரார்த்தம்... அதனால அபர காரியத்துல கலந்துக்கக் கூடாது” என்று வீட்டில் இருந்தவர்கள்...

“அடுத்த மாசம் பொண்ணு கல்யாணம் வெச்சிருக்கேன். சாவு வீட்டுக்குப் போகப்படாது…” என்று துக்கத்துக்கு வராமல் இருந்தவர்கள.

“என் வீட்டு நல்லது கெட்டதுக்கு அவாத்துலேந்து, யாரும் வரலை… நாம மட்டும் போகணுமோ…?” என்று துஷ்டியைத் தவிர்த்தவர்கள்.

“அவசரமா ஊருக்குப் போற வேலை...” என்று பொய் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு வராமல் ஏமாற்றியவர்கள்.

கிச்சாமி போல ஒரு ஃபார்மாலிட்டிக்காக விடிந்தும் விடியாம வந்து

“இப்படி ஆயிடுத்தே..!.”

“இப்படியா ஆகணும்...?”

“இப்படி ஒண்ணு ஆகும்னு கனவுல கூட நினைக்கமுடியுமா...?”

என்று பொத்தாம் பொதுவாக விசாரித்துவிட்டு வீட்டில் முடங்கியவர்கள்.

இப்படியாக ஏதாவது காரணம் காட்டி வராமல் இருந்வர்கள் ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ...’ என்று பேசிய பேச்சுக்களை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை மாதய்யா.

*** *** *** *** *** ***

‘இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

தேடிச் சோறு நிதம் தின்று

சின்னஞ்சிறு கதைகள் பேசி,

மனம் வாடித் துன்பமிக உழன்று,

பிறர் வாடப் பல செயல்கள் செய்து.

நரை கூடிக் கிழப் பருவமெய்தி,

கொடுங்கூற்றுக்கெனப் பின் மாயும் வேடிக்கை மனிதர்கள் இவர்கள்.

நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை பேசும் வாய்ச்சொல் வீரர்கள் ’

அவர்களை அலட்சியப்படுத்தினார்.

*** *** *** *** *** ***

இரண்டு எதிர்பாரா மரணங்கள், மாதய்யாவின் அறுவடை வேலையை காலதாமதம் செய்துவிட்டது.

ஆயிற்று... இன்று மாதய்யாவின் வயல்களில் இரண்டாம் பாட்டம் அறுப்பு தொடங்கியாயிற்று...

பிச்சைக்கண்ணுவின் தலைமையில் அருப்பு கோஷ்டி வேலையைத் தொடங்கிவிட்டது.

கலியன் மேற்பார்வை செய்வதாகப் பேர்தான்... அவனும் அருப்பறிவாளோடு வயலில் இறங்கிவிட்டான்.

வேலை தொடங்கிய விதமே நேர்த்தியாக இருந்தது.

பலமுறை ஒத்திகைப் பார்த்துப் பார்த்து நிபுணத்துவம் அடைந்துவிட்ட நாடகக் கதாபாத்திரம்போல், அளவாக, கச்சிதமாக, நறுக்குத் தெரித்தாற்போல், பளிச் என்று துடைத்து வைத்தாற்போல், பிசிர் இல்லாமல், கச்சிதமாகத் தொடங்கித், சிறப்பாகத் தொடர்ந்தது அறுவடை.

இருபது அறுப்பாட்கள்.

சுறுசுறுப்பாக அறுவடை செய்தார்கள்.

ராணுவத்தில் கமாண்ட் கேட்டவுடன், படை முழுவதும் ஒரே மாதிரி கால் தூக்கி அடித்து ஓசை எழுப்பி, கைத் தூக்கிச் சல்யூட் பண்ணுவது போல அப்படி ஒரு கச்சிதம்.

ஒரு ஆள் முன்னே, ஒருத்தன் பின்னே என்று இல்லாமல் அறுப்பாட்கள் ராணுவத்தினர் அணிவகுப்புப் போல முன்னேறினர்.

எல்லா அறுப்புக் தாளும் அடியறுப்பாக, ஒருத்தரே வயல் பூராவும் அறுத்தாற்போல் அப்படி ஒரு கச்சிதம்.

Representational Image
Representational Image

தாள் அடி இத்தனைதான் விடவேண்டும் என்று அளவெடுத்து கதிர்களின் அடிப்பாகத்தில் மார்க் செய்து அறுத்தாற்போல் அப்படி ஒரு நேர்த்தி, பர்பெஃக்ஷன்.

ஊரில் காளிமுத்து கோஷ்டி, முனியன் கோஷ்டி, தனபால் கோஷ்டி… என மேஸ்திரிகளின் தலைமையில் பெரும்பாலான விவசாயக் கூலிகள் செயல்பட்டார்கள்.

நிலக்காரர்கள், நிலச் சுவான்தார்கள் எல்லோரும் மேஸ்திரியிடம்தான் பேசுவார்கள்.

கூலி நிர்ணயம், வரும், போகும் நேரம், என எல்லாவற்றையும் பேசி மேஸ்திரிக்குத் திருப்திப்பட்டால் கோஷ்டியை அழைத்துச் செல்வார்.

ஒரு கோஷ்டி பேசி, வேண்டாம் என்று மறுத்துவிட்டால் அநேகமாக அந்த முதலாளிக்கு ‘கோஷ்டி அறுப்பு’ அமையாது. ‘தனியாள் அறுப்பு’தான் அமையும்.

‘தனியாள் அறுப்பு’ என்றால்,

‘நாம உழைக்கறோம் எதுக்கு மேஸ்திரிக்கு கமிஷன் கொடுக்கணும்...’ என்று கொள்கைப் பிடிப்போடு உள்ள கூலிகள்.

‘இவன் சங்கம் சேத்துடுவான்...’ என்று எல்லா மேஸ்திரிகளாலும் ஒதுக்கப்பட்ட கூலிகள்.

மேஸ்திரியின் கண்டிப்புக்கு பயந்து ‘இது நமக்கு ஒத்து வராது’ என்று, கோஷ்டியிலிருந்து விலகி வந்த கூலிகள்.

இப்போதுதான் வேலை கற்றுக்கொள்ளும் கத்துக்குட்டிக் கூலிகள்.

வயதாகிவிட்டதால் வேகம் குறைந்துவிட்ட கூலிகள்

‘இயல்பாகவே யாரோடும் ஒத்துப் போகாத கூலிகள்.

இப்படியாக ஏதோ ஒரு காரணத்தாலோ, எதோ ஒரு நிலையாலோ, எந்தக் கோஷ்டியிலும் சேராமல் தனித்து நிற்கும் விவசாயக்கூலிகள்.

அரசியலில் சுயேச்சை வேட்பாளர்கள் மாதிரி, அறுப்பறிவாளை தீட்டிக்கொண்டு, வயல் பக்கம் வருவார்கள்.

இது அறுப்புக்கு மட்டுமில்லை. விதைப்பு, நாற்று பறித்தல், நடவு, களையெடுப்பு என அனைத்து விவசாய வேலைகளுக்கும் பொருந்தும்.

ஆள் தட்டுப்பாடு ஏற்படும்போது அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

*** *** *** *** *** ***

தனியாள் அறுப்புக்கு இன்னார் ஆள் தேடுகிறார்கள் என்று அவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிடும்.

இப்படி உள்ள சுயேச்சைக் கூலிகள் எல்லோரும் ஒரு வயலில் இறங்கி வேலை செய்வார்கள்.

ஊரில் எல்லோரும் வாங்குகிற கூலியை வாங்கிக் கொள்வார்கள்.

வேலை முடிந்ததும், அன்றைய கூலியை ‘மேஸ்திரி கமிஷன்’ இல்லாமல் கறாராக வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

மறுநாள் வருவார்களா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

“வேலை இருக்குங்களா…?” என்று கேட்டுக்கொண்டு வந்து நிற்கும் கூலிகளிடம், கறாராகப் பேசிக்கொண்டு வயலில் இறக்க வேண்டும்.

இல்லாவிட்டால் முதலாளிகளுக்குக் கடுக்காய் கொடுத்துவிடுவார்கள்.

சுலபமாக மூணுபிடித்து எண்ணி, முதலாளித் தலையில் முக்காடு போட்டுவிடுவார்கள்.

சுதாரிப்பாக இல்லையென்றால், குப்புறத் தள்ளி, முதலாளி முதுகில் கரிக்கோடு கிழித்து ஆடுபுலியாட்டம் ஆடிவிடுவார்கள்.

தனியாள் வைத்து அறுப்பதால் ஒரு விதத்தில் முதலாளிகளுக்கு லாபம்தான் என்றாலும், அன்றன்றைய வேலை சிறப்பாய் முடியும் வரை வயிற்றில் நெருப்புக் கட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

சரியான சமயத்தில் ஈரத்துண்டைச் சுற்றி கழுத்தை நெறித்து விடுவார்கள்.

தனியாள் செய்த வேலையை கோஷ்டிகள் தொடமாட்டார்கள். எழுதப்படாத கிராமத்துச் சட்டங்களில் இதுவும் ஒன்று.

*** *** *** *** *** ***

தொப்ளானை வைத்து விவசாயம் செய்தபோதெல்லாம் “கோஷ்டி சரிப்படாது… கூலி கொடுக்கற நாம சொல்றதை காதுலயே போட்டுக்கமாட்டானுங்க. மேஸ்திரி சொன்னதைத்தான் சென்வானுக...! தனி ஆளுவளையே கூப்புடு...” என்பார் மாதய்யா.

ஊரில் தரும் கூலியை விட எப்போதுமே அதிகமாகத் தரும் தாரளமான கை மாதய்யாவுடையது.

எனவே, ‘மாதய்யா எப்போது நடவு தொடங்குவார்... எப்போது அறுப்பு தொடங்குவார்...’ என்று காத்திருந்து வந்து ஒட்டிக்கொள்வார்கள் கூலிகள்.

*** *** *** *** *** ***

“பிச்சைக்கண்ணு கோஷ்டிக்கு சொல்லிப்புடறேன்க... வேலை நறுவிசா இருக்கும்… இந்த முறை பாருங்க மனசுக்குப் பிடிக்கலேன்னா மொதநாளோட கணக்கு தீத்துப்புடுவோம்...”

கலியன் எடுத்த எடுப்பில் சொல்லிவிட்டதால் ‘அதையும்தான் பார்ப்போமே...!’ என்று தலையாட்டிவிட்டார்.

இப்போது நேரில் பார்க்கும்போது மனசுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

அறுப்பறுக்கும் தினுசு, அழகு, வேகம், கணக்கு, சுத்தம், பாங்கு, என எல்லாமே திருப்திகரமாக இருந்தது மாதய்யாவுக்கு.

*** *** *** *** *** ***

அறுப்பு முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது.

‘அரி’காச்சலுங்களா...? கட்டு கட்டிப்பிடலாங்களா...?” கேட்டான் பிச்சக்கண்ணு.

அரிக் காச்சல் என்றால் (அறுப்பறுத்த பின் ஒரு நாளைக்கு வயலிலேயே கதிர்களை வெய்யிலில் காய விடுவது. மறுநாள் விடிகாலையில் கட்டு கட்டுவது.

“அரிகாச்ச வேண்டாங்கய்யா...! கருது பொலப்பொலன்னு நெல்லுக் கொட்டுது பாருங்க...”

ஒரு ‘நெற்கதிர்’ எடுத்து ஆட்டிக் காட்டினான் கலியன்.

“சரி... கட்டு கட்டிப்புடச்சொல்லு...”

“கலியன் சொல்றதுதான் சரிங்கய்யா... பத்து நாளுக்கு முன்னே அறுக்கவேண்டிய கருது... அரி காச்சத் தாங்காதுங்க...” என்றான் மாணிக்கமும்.

“அதான் கட்டச் சொல்லிட்டனே...!”

“அய்யா...! நீங்க போயி பூசர (பூவரசு) களத்துல போயி இருங்க. கட்டு ஏத்தி விடுறேன்.” என்றான் கலியன்.

*** *** *** *** *** ***

களத்து மேட்டில் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் வேப்பமரத்தின் அடியில் போடப்பட்டிருந்தக் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தார் மாதய்யா.

மருந்துக்கு, ஒரு பூவரசு மரம்கூட இல்லாத இந்தக் களத்துக்கு ‘பூசர களம்’ என்று காரணம் தெரியாமலே எல்லோரும் அழைப்பதை நினைத்து சிரிப்பு வந்தது அவருக்கு.

அந்தப் பெயர் வந்த வரலாற்றை நினைத்துக் கொண்டே எதிரே அறுப்பாட்கள் தங்கள் சாப்பாட்டுகூடைகளை வைத்துள்ள ‘வப்பாட்டிக் கட்டை’ என்று அழைக்கப்படும் அந்த மேடையைப் பார்த்தார். பழைய நினைவுகளில் மூழ்கினார்.

*** *** *** *** *** ***

கட்டுக்கள் வரத்தொடங்கவில்லை.

மாதய்யா நீண்ட நேரம் கட்டிலில் உட்காருகிற ரகம் இல்லை. இன்று ஏனோ தெரியவில்லை அப்படி உட்கார்ந்திருந்தார்.

வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து, வெற்றிலையில் சுண்ணாம்புத் தடவி, மடித்து, விரலிடுக்கில் வைத்துக்கொண்டு, வாயில் சீவல் போடும் வரை உட்காருவார்.

விரலிடுக்கிலிருக்கும் வெற்றிலைப் பட்டியை வாயில் போடும் நேரம், எழுந்துவிடுவார்.

நெல் அறுவடை
நெல் அறுவடை

“ஒரு பத்து நிமிசம்தான் ஒக்காருங்களேன்... அங்கியும் இங்கியும் திரிஞ்சிக்கிட்டே இருக்கீங்களே... வயசு என்ன கொஞ்சமாவா ஆவுது...”

இதற்கு முந்தைய அறுப்பில் தொப்ளான் கேட்டதும்,

“அட போடா... இப்படி ஓடியாடித் திரியறதுனாலதான் வயசானாலும் கட்டுக் குலையாம இருக்கேன்...”

அவனுக்குச் சொன்ன பதிலும் நினைவில் வந்து போயிற்று.

இன்று கட்டிலில் உட்கார்ந்த மாதய்யாவுக்கு வெற்றிலை போட்டுக்கொள்ளக் கூடத் தோன்றவில்லை. மேல் துண்டை சுருட்டி தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தார்.

*** *** *** *** *** ***

கட்டு வரத் தொடங்கிவிட்டது.

மாதய்யாவும் எழுந்து உட்கார்ந்துவிட்டார்/

ஆள் படை அதிகம் என்பதாலும், களமும் அருகே இருந்ததாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் கட்டுகள் வந்து குவிந்துவிட்டன.

கடைசீ நடையில் மூன்று பேர் கட்டு சுமந்து வந்தார்கள். மற்றவர் ‘ஐலஸா…’ போட்டுக்கொண்டு பெரிய மரத்துண்டு ஒன்றைத் தூக்கி வந்தார்கள்.

‘அடடே... கருவைமரத் துண்டு..., ரெண்டு வருஷமா இப்போ வெட்டலாம் அப்போ வெட்டலாம்னு தள்ளிக்கிட்டே வந்த வேலையைத் தோது தெரிஞ்சி, கட்டு அடிக்க வாகாய் வெட்டிக் கொண்டு வந்துட்டானே...! கலியன்... சிங்கக் குட்டிதான்.’ வியப்போடும் பாசத்தோடும் அவனைப் பார்த்தார் மாதய்யா.

மரம் தூக்கிகள் எல்லாரும் சொல்லி வைத்து ஒரு பக்கத் தோளுக்கு மாற்றிக்கொண்டார்கள்.

“விட்ரலாமா... விடலாமா...” “வி..ட்..டோ...ம்......”

ஒரு சேரச் சொல்லி மரத்தை ‘தொப்’ பென கீழே விட்டார்கள்.

*** *** *** *** *** ***

கட்டு அடிக்க வாகாய் மரத்தைத் தள்ளி வைத்தார்கள்.

எல்லையம்மனை வேண்டிக்கொண்டு, கலியன் ஒரு கட்டை உடைத்தான்.

ஒரு ‘அள்ளு’ தாள் எடுத்தான்.

அடிக்க வாகாய் பிரி சுற்றினான்.

‘அடி’மரத்தில் சாய்த்து வைத்தான்.

“அய்யா....வந்து மொத தெரைய அடிச்சித் தொடங்கி வைங்க...”

மாதய்யா, பிரியை இட வலமாய் இறுக்கி லாகவமாய் அழுத்தினார்.

கண்மூடிப் பிரார்த்தித்தார்.

திரையைச் திருகித் தூக்கினார்.

இரண்டு கைகளால் உயர்ந்த திரையை ஒரு சுழற்று சுழற்றி, வலதுபுறமாய் கொண்டுபோய் தலைக்கு மேல் உயர்த்தி ‘ச்ச...ஸ்...க்...க்..." என அடிகட்டையில் பலமாய் அடித்தார்.

தாலி கட்டியவுடன் வயதில் பெரியவர்கள் எல்லாம் மணமக்களை ஆசீர்வதிப்பதுபோல

தாள் நெல் கழன்று, நெல் நாலா பக்கமும் மஞ்சள் மஞ்சளாய்ச் சிதறித் தெரித்தது.

Representational Image
Representational Image

ஒருவர் திரை எடுத்துப் போட, கட்டடிப்பவன் திரையைப் பிரியுள் வாங்கி இறுக்கி ‘தொ..ப...க்... தொபக்...” என அடித்து வைக்கோலை வீசினான்.

வீசப்பட்ட வைக்காலை உதறி உதறி போராய்க் குவித்தனர் ஒருபுறம்.

அவ்வப்போது சுழற்சி முறையில் ஆட்கள் மாறிக்கொண்டனர். எந்த இடத்திலும் இடறல் இல்லாத ஒரு ஒத்திசைவு. (Coordination)

சர்க்கஸில் இயல்பாக காட்சி மாறுவது போல ஒரு மாற்றம்.

அறுப்பறுத்தலில் இருந்த அதே நேர்ந்தி இதிலும்.

ஏகப்பட்ட பக்க வாத்யங்கள் ஒரே நேரத்தில் பிசிர் இன்றி ஒலிப்பதுபோல, உயரம், நடுத்தரம், குள்ளம், பெருந்தலை, இரட்டை மண்டை, ரெட்டை நாடி, நோஞ்சான், சோகை... என்று பல்வேறு உயர-பருமன்களில் இருந்தாலும், கட்டு பிரித்தலும், தாள் போடலும் பிடித்து அடித்தலும், வைக்கோல் வீசலும், தலைக் கொட்டலும், கொட்டுவாயில் சரிந்ததை அள்ளி அணைத்தலுமாக... ஒரு அருமையான தாளவாத்தியக் கச்சேரியைப் போல இனிமையாக, ரசனைக்குறியதாக இருந்தது.

கச்சேரி கேட்கும்போது நம்மை அறியாமல் கண்கள் செருகி தூங்கி விழுவோமே, அதுபோல ஒரு சிறு தூக்கம் போட்டார் மாதய்யா.

“மூணுக்கு நாலு அடி போடு...”

“ஏய் உருலாசு... அடி பலமா போட்றா...”

“முடியலேன்னா நீ தெர போடு பவித்ரன் பயலை கட்டடிக்கக் சொல்லு...”

“போரடீல நெல்லு தங்கப்படாது... ஆமாம்...”

“வைக்கோலை நல்லாப் பிரிச்சிவிட்டுப் ஆத்து...”

“மொத்தை மொத்தையாப் போட்டா சரிஞ்சிரும்...”

மேஸ்திரி பிச்சக்கண்ணு நாட்டாமை பண்ணிக்கொண்டிருந்தான்.

கண்டுமுதல் ‘குன்றாய்க்’ குவிந்துகொண்டிருந்தது.

வைக்கோல் ‘மலையாய்’ உயர்ந்துகொண்டிருந்தது.

Representational Image
Representational Image

“அய்யா...! அய்யா...”

கலியன் கூப்பிட “விருட்”டென எழுந்தார் மாதய்யா.

எதிரில் நெல் குவிக்கப்பட்டிருந்தது பட்டரையாய்.

குவியலில் சாணிப்பாலால் போடப்பட்ட திருகல் குறி.

கச்சிதமாய் தலைக் கொட்டப்பட்ட வைக்கோல் போர்.

நேர்த்தியாய்க் கூட்டிச் சுத்தம்செய்யப்பட்ட களம்... எல்லாவற்றையும் பார்த்தார்.

‘தொடர்ந்து ஐந்து நிமிஷம் கூட கட்டிலில் படுக்காத நான் ஐந்து மணிநேரம் இப்படித் தூங்கியிருக்கேனே..!.’என்று நொந்துகொண்டார்.

“நீங்க தூங்கிக்கிட்டிருந்தீங்களா.. அதான் எளுப்பலை.”

“பட்டரைல திருகல் குறி போட்டுட்டேன்.”

“ஆளு படைங்களை அனுப்பிட்டேன்.”

“இன்னும் ஒரே வேலைதான் பாக்கி. பட்டரையை மூடுணும்.”

“நீங்க கண்டுமொதலைப் பாக்காம மூடப்படாதுன்னு வெச்சிருக்கேன்...”

கலியனின் அணுகுமுறையும், அவன் செய்திருந்த நேர்த்தியான வேலைகளையும் பார்த்தபோது, மாதய்யாவின் மனசு நெகிழ்ந்தது.

*** *** *** *** *** ***

“வண்டி பூட்டட்டுங்களா... புறப்படறீங்களா...? நானே வண்டி ஓட்டியாரட்டுங்களா...?”

“ நீ சிரமப்படவேண்டாம் கலியா... வண்டிய பூட்டிக் குடு. நானே ஓட்டிக்கிட்டுப் போயிடறேன்...” என்றார் மாதய்யா.

வண்டியைப் பூட்டி வாகாய் நிறுத்தினான் கலியன்.

“கலியா... நாளைக்கு ஓடைக் காணீலதானே அறுப்பு...”

“ஆமாங்க...”

“ஓடக்காணி ஓரக்கால்ல கெடக்கற கல்லு முட்டுல நட்டுவாக்களி கிளம்பிச்சுன்னு நடவு நட்ட உன் அப்பன் சொன்னான்.”

“பாம்பு கூட கெடக்குன்னான். ஆளு படைங்களை கொஞ்சம் நிகாவா இருக்கச் சொல்லு...”

“அப்ப ஒண்ணு செய்யிறேன்... வெய்ய கௌம்பற வரைக்கும் பட்டரையை ஒடைச்சி களத்துல திராவச் சொல்றேங்கய்யா... சொச்ச ஆளுங்க கருவ மிளாரு கழிக்கட்டும்.”

“கழிச்சி அவங்களையே அடுப்புக்குக் கொண்டு போயிரச் சொல்லு..”

சொல்லிவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பினார்.


மாதய்யாவின் மனசு குளிர்ந்திருந்தது.

மனசு குளிர்ந்திருக்கும்போது, உடம்பு நெகிழ்ந்துவிடுகிறது.

உடம்பு நெகிழ்ந்துவிட்டால், ஓட்டம் குறைகிறது.

இதத்தால் குறைந்த ஓட்டம் மிகைப்படுவதில்லை.

தன்னைப் புரிந்துகொண்டு இதமாய் சேவகம் செய்யும் சேவகன் கிடைத்துவிட்டால், எஜமானன் தன்னை இழந்துவிடுகிறான்.

பாரதிக்குக் கிடைத்த சேவகன்போல...,

தனக்குக் கிடைத்த கலியனை, நினைக்க நினைக்க மனசு நிறைந்து காற்றில் பறப்பதைப் போல உணர்ந்தார்.

பழகிய வழியில் வீரன் வண்டியை இழுத்துச் சென்றான்.

கர்ணகொல்லை வாய்க்கால் பாலத்தில் கல் விலகியிருந்த்து.

விலகிய இடுக்கத்தில் ஒரு சக்கரம் மாட்டியது.

சக்கரம் மாட்டியது தெரியாமல் முரண்டு பிடித்தான் வீரன்.

இழுத்த இழுப்பில் மாதய்யா தடுமாறி விழுந்தார்.

நிலைமை அறியாத வீரன்காளை முன்னே பாய்ந்தது.

மாதய்யாவின் காலில் எக்குத்தப்பாய் சக்கரம் ஏறி இறங்கியது.”

வண்டி நின்றது.

“அய்யோ...! என்ற மாதய்யாவின் குரல் கேட்டு, பாலக்கட்டை பிள்ளையார் கோவிலில் ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டிருந்த தனவேலு மகன் மாரிமுத்து ஓடிவந்தான்.

மாதய்யாவைத் தூக்கி நிறுத்தி வண்டியில் அமர்த்தி, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான்.

புசு...புசு வென கால் வீங்கிவிட்டதால், ஒரு புறம் குந்தலாம்பாளும், மறுபுறம் மாரிமுத்துவும் கைத்தாங்கலாகப் பிடித்தபடி உள்ளே கொண்டுபோய் கட்டிலில் படுக்கவைத்தனர்.


தொடரும்..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.