Published:Updated:

கலியன் மதவு | சமூக நாவல் | அத்தியாயம் – 22 | My Vikatan

Representational Image

நிலம் தயாராவதற்கு முன்பே, நடுவதற்குக் வாழைக்கட்டை தேர்வு செய்து நேர்த்திசெய்து வைத்தலே நடைமுறை. அந்தப் பணி ஒரு யக்ஞம் போல நடக்கும் அந்தனூரில். கட்டை தேர்வு ஒரு கலை.

Published:Updated:

கலியன் மதவு | சமூக நாவல் | அத்தியாயம் – 22 | My Vikatan

நிலம் தயாராவதற்கு முன்பே, நடுவதற்குக் வாழைக்கட்டை தேர்வு செய்து நேர்த்திசெய்து வைத்தலே நடைமுறை. அந்தப் பணி ஒரு யக்ஞம் போல நடக்கும் அந்தனூரில். கட்டை தேர்வு ஒரு கலை.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“அந்தனூர் அக்ரஹாரத் தெருமுனைத் திரும்பியதும், கண்ணில் படுவது நாயக்கர் ரைஸ்மில்.

மில்லை ஒட்டி ‘ராஜம்மா-தென்னந்தோப்பு.’

என்றென்றும், இது ‘சத்தரம் பஸ் ஸ்டாண்ட்’...தானே...!

Representational Image
Representational Image

அதுப் போலக் காரணப் பெயர்தான் ராஜம்மாத் தென்னந்தோப்பும்.

பலப்பலக் கைகள் மாறி மாறி, அந்தத் தோப்பு இப்போது மருதவாண உடையாரிடம் இருக்கிறது.

ஆனால் எல்லாரும் சொல்லுவதென்னவோ, ‘ராஜம்மாத்-தென்னந்தோப்பு.’

தோப்பு எல்லையில் முனியன் வாய்க்கால்.

கால்வாயின் குறுக்கேக் கருங்கல் பத்தைகள் பரத்திய வாய்க்கால் பாலம்.

பாலம் கடந்ததும், நஞ்சையும் புஞ்சையுமாக ஏகப்பட்டது இருக்கிறது மாதய்யாவுக்கு.

*****-

மலையும்-மடுவுமாக காட்சியளித்தது, எல்லையம்மன் கோவிலுக்குப் பின்புறம் உள்ள மாதய்யாவின் சம்பாக்-காணி.

Representational Image
Representational Image

“பொணம் போன வயங்க; அதான் விருத்திக்கே வரலை...!”

“அண்ணிக்கேச் சொன்னேன் நான்; நீங்க நம்பல...!”

“வெளையற காணீல தூக்கிட்டுப் போனது தப்பு; விவசாயத்துக்கே லாயக்கில்லாம மேடு-பள்ளமா. கரடு-முரடா. பொரம்போக்கா ஆயிருச்சுப் பாரு...!”

“எப்படி வௌஞ்ச வய; கொளமும் கரையுமாயிருச்சே...!”

“மாடுங்க மேய்க்கறதும், நாயி காலு தூக்கறதும் காண வயிறு எரியுது...!”

“ஊர்ச் சனங்க ஒதுங்க வாட்டமாயிருச்சேச் சம்பாக் காணி...!”

“காலக் கொடுமைங்கறது இதுதான் போல...!”

சம்பாக் காணியை வாய்க்கு வந்தபடிக்குப் பேசினார்கள்.

அந்தக் காணிக்கு கீழண்டைக் கையில், எல்லையம்மன் கோவிலுக்கு முன்னே செல்கிறது ஊர்ப்பாதை.

காவிரியில் குளித்து திரும்புவோர், பஸ் இறங்கி வருபவர்கள், போகிற வருகிற ஜனங்கள்...

நின்று எல்லையம்மனுக்குக் கும்பிடு போட்டுவிட்டுத்தான் செல்வார்கள்.

*****-

சாலைக்குக் கீழண்டை பூராவும், பெரிய வாய்க்கால் வரைக்கும் வாழைக் கொல்லை.

பூவன், ரஸ்தாலி, மொந்தன், பச்சை, பேயன், நேந்திரன், செவ்வாழை என, வாழைத்தார்களை வெட்டிக் கொண்டுவந்து, தரம் பிரித்து அடுக்குவது எல்லையம்மன் கோவில் முன்னே கிடக்கும் திடலில்தான்.

Representational Image
Representational Image

அங்கேதான் வாழை-லாரி தாராளமாக நிறுத்தி லோடு ஏற்ற வசதி இருந்தது.

லாரியை வாகாய் நிறுத்தி, இஞ்சினை ஆஃப் செய்துவிட்டு, டிரைவர் மரத்தடியில் கிடக்கும் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கண்மூடுவான்.

இதுபோல நேரங்களில்தான் டிரைவர்கள் கண் அசர முடியும்.

*****-

க்ளீனர்.

வண்டியை ஒரு முறைத் துடைப்பான்.

தேவையான இடங்களில் கிரீஸ் பிஸ்டலை ‘புஸ்க் புஸ்க்’ என அழுத்தி, குமிழ்க் குமிழாய் வைப்பான்.

“டொக்..டொக்’ எனத் தட்டித் தட்டி, மிருதங்கத்துக்கு ரவை கூட்டுவதும் குறைப்பதும்போல…

கட்டையால் எட்டுட் டயர்களையும் ‘டும்...டும்...’ என ஓசையெழ அடிப்பான்.

எழும் ஒசையை வைத்தே எந்தச் சக்கரத்தில் காற்றுபிடிக்கவேண்டும் என்று மனதில் குறித்துக் கொள்வான்.

‘தினமும் என்னைக் கவனி...!’

என்ற வாக்கியத்தை மதிப்பான்.

அது கிளீனருக்கான வாசகம் அல்லவா...!

அடுத்து, ஆயில் கரைப் பிடித்த இரும்புப் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைப்பான்.

தண்ணீர் பாட்டில்களில் நீர் நிரப்பி உரிய இடத்தில் வைப்பாப்.

அதோடு முடியும் அவன் வேலை.

அதற்குப் பிறகு லோடு ஏற்றிய பின், வண்டிக் கிளம்பும்வரை லாரிக்கு அடியில் தார்பாய் விரித்துத் தூங்க வேண்டியதுதான்.

Representational Image
Representational Image

அடுத்த வேலை வண்டியை எடுக்கும் முன்புதான்.

*****-

அந்தனூர் மண்ணுக்கு அப்படி ஒரு வளம்.

காலத்தில், கிடை மறித்தும், தொழு-உரம் அடித்தும் புழுதி அடித்துப் புரட்டியும் விடுவதால் நீடிக்கும் மங்காத மண்வளம்.

உப்புப் பூத்த அலர் மண்ணுக்கு அந்தனூரில் இடமே இல்லை.

******-

நிலம் தயாராவதற்கு முன்பே, நடுவதற்குக் வாழைக்கட்டை தேர்வு செய்து நேர்த்திசெய்து வைத்தலே நடைமுறை.

அந்தப் பணி ஒரு யக்ஞம் போல நடக்கும் அந்தனூரில்.

கட்டை தேர்வு ஒரு கலை.

‘கட்டைக்குத் தக்கபடிதானே காய் சுரப்பு...!’

பதமாய்க் காயவைத்து, நீரில் நனைத்த நயமான வாழை நார்ப் பட்டைகளைக் கட்டிக் கையில் எடுத்துக்கொண்டு முதலாளியும் கங்காணியும் கொல்லைக்குள் போவார்கள்.

Representational Image
Representational Image

ஈட்டி இலை, சீக்கு வாழை நீக்கி, ரயில்தார் ஈன்ற முறையான குத்துக்களை வாழை நார்க் கட்டி அடையாளம் வைப்பார்கள்.

ஏறியத் தென்னைமரம் கணக்கிடத் தென்னை ஓலைக் கட்டுவார்களே அது மாதிரி.

‘எத்தனைச் சிங்கங்கள் பெயர்க்கலாம்...?’

மனசுக்குள் கணக்கு ஓடும்.

*****-

அடையாளம் வைத்த குத்துக்களில் தேவையான கட்டைகள் தலையறியப்படும்.

அடுத்த வேலை கட்டைப் பெயர்த்தல்.

நடவுக்கான கட்டைகளில் ஒட்ட ஒட்ட வேர் நீக்கிப் பஞ்சகவ்யக் கரைசலில் நனைத்தெடுப்பார்கள்.

ஏற்கெனவே ஏழு சுற்று, எட்டுச் சுற்றுப்பட்டையோடு வீரியமாயிருக்கும் முரட்டுக் கட்டைக்கு மேலும் வீரியம் கூட்டுவார்கள்.

வாழைக் கொல்லைக்கு, ஐந்து உழவு ஓட்டுவார்கள் அனுபவஸ்தர்கள்;

‘மூணு போதும்...!’ என்பது சிலர் கணக்கு.

உழவுக்குத் தக்கபடி எகிறும் மகசூல்.

இப்பொழுதுபோல ‘வீல்பரோ’வை டிராக்டரில் பொருத்தி ஓட்டும் மேம்போக்கான உழவு போல் இருக்காது

முழுக்கலப்பையும் மூழ்குமளவுக்கு புழுதி பறக்கும் உழவு.

பூவன் வாழையா...7 க்கு 7;

செவ்வாழையா 8 க்கு 8.

ரகத்துக்குத் தக்க இடைவெளி விட்டு வாங்கிய குழியில் மண்புழு உரம், வேப்பங்கொட்டை கரைசலென ஆர்கானிக் உரமிட்டு, ஓரிறு நாட்கள் குழி ஆறும்.

எரு, மண்சூடு தணியும்.

மீண்டும் குழிக் கிளறி, கட்டை புதைத்து-மூடி நன்குக் குத்தி மிதித்துவிட, ஒரு மாதத்தில் குருத்துக்கள் கிளிப் பச்சையாய் சுருண்டு, நீண்டு, வாளிப்பாய் விரியும்.

முற்றி முதிர்ந்து கெட்டிப் பச்சையாய் ஆவதற்குள், அடுத்தக் குறுத்துக் குழலாய் நிமிர்ந்து நீளும்.

ஜீவானந்தக் கரைசல், முட்டைக் கரைசல் என முறையாய்த் தெளித்தும்;

ஒடிந்தும், காய்ந்தும் தொங்கும் சருகுகளை அவ்வப்போது அறுத்து நீக்கியும் வர, காலத்தில் கண்ணாடி இலைச் சுருண்டு நீண்டு, விரிந்துக் குலை தள்ளும்.

Representational Image
Representational Image

கிடேரியின் அரைவழியேக் கும்பிடு போட்டபடி கன்று கழல்வதைப் போல் பலன் எட்டிப் பார்க்கும்.

மடல்களை ஒவ்வொன்றாய் உதிர்த்து, உதிர்த்துத் தன்னை வளர்த்த பூமியை அர்ச்சிக்கும்.

அடுத்த ஈடுப் பலனுக்கு நிற்கும் ‘பயிற்கன்றை’ மட்டும் வளரவிட்டு, சீத்து போத்தாய் ஆங்காங்கே வளரும் வாழையடிச் சிங்கங்களைத் தலையறியத் தலையறியத் தாய்மரத்தில் வாழைத்தார் ஊட்டமாய், உரமாய்ப், விண்’ணெனச் சுரக்கும்.

பயிற்கன்றும் ‘நெகுநெகு’வென வாளிப்பாய் உயரும்.

மடல் உதிர உதிரப், பூ முதிரும்.

கச்சலாகும்...

காயாகும்...

மலட்டுப் பூ பல்லிளிக்கும் மடல்தான், எல்லை.

‘வாழைப்பூ’ ஒடிக்க அதுவே அடையாளம்.

பூ ஒடிந்த தார், வலுவாய்ச், சீராய், முற்றிச் சுரந்து விண்ணென்று நிற்கும்போதுதான் லாரிக்காரர்களோடு விலை படியும்.

*****-

மூன்று உழவோடு நிறுத்திப், பராமறிப்பிலும் குறை வைத்து, பயறு, மல்லி என ஊடுபயிறுக்கும் ஆசைப்பட்ட விவசாயிகள், அறுவடை நேரத்தில் லாரியில் ஏற்றும் விவசாயியைப் பார்த்துப் பொறுமுவார்கள்.

கரளையும், பங்கரையுமாகச் சூம்பிப்போய் நிற்கும் குலை வாங்க எந்த லாரிக்காரன் வருவான்.

ஐந்து உழவுக்காரன் தயவை நாடுவார்கள் மூன்று உழவுக்காரர்கள்.

பத்து பேர் உள்ள பராரியின் வீட்டில்கூட ரெண்டொருவர் இயற்கையாகவே ‘கொழுக் மொழுக்’ என்று இருப்பார்களில்லையா...?

அதுபோல மூணு உழவுக்காரர்கள் கொல்லையிலும் ஒரு சில ரயில்தார்கள் இருக்கும்.

அதுகளை வெட்டி வந்து லாரி விலைக்குச் சேர்க்கச் சொல்லிக் பல்லிளிப்பார்கள்.

‘வயத்தெரிச்சல் தணியட்டும்...!’ என்று இந்த உபகாரத்தைச் செய்து கொடுப்பார்கள் ஐந்து உழவுக்காரர்கள்.

*****-

மாதய்யாவை அணுகாத விவசாய ஆபீசர்கள் இல்லை.

வாழை போடச் சொல்லி நச்சரித்தார்கள்.

மானியம் தருவோம் என்றார்கள்.

பணப்பயிரான வாழைப் போடக் கடைசீ வரைப் பிடி கொடுக்கவே இல்லை மாதய்யா.

“நெல்லுதான்.” என்று உறுதியாக நின்றார்.

அதெல்லாம் பழைய கதை.

*****-

எங்கு லோடு ஏற்றினாலும், என்ன லோடு ஏற்றினாலும் லாரிக் கிளீனருக்கு எனச் சாங்கியங்கள் உண்டு.

டிரைவர் ஏறிச், சாவித் திருகி இஞ்சினை உருமவைக்கும் முன், கிளீனர் ஏறிவிடவேண்டும்.

கேபினில் மாட்டியிருக்கும் வினாயகர், லட்சுமி, வெங்கடாசலபதி, என ஏழெட்டுச் சாமிகளை வரிசையாக வைத்து நீளமான செவ்வக வடிவத்தில் சட்டமிட்ட படத்துக்கு ஒரு கிள்ளோ, ஒரு முழமோ... கிடைக்கும் பூவைப் போடவேண்டும்.

பத்திக் கொளுத்தி வைக்க வேண்டும்.

‘அடடே, கிளீனர் பிழைப்பு இவ்வளவு சுலபமா இருக்கே..’

இப்படி யாராவது நினைத்தால் அது அறியாமையே.

கிளீனர் பலியாடு மாதிரி.

குடி போதையிலோ, கண்ட இடங்களில் படுத்து எழுந்த களைப்பிலோ, தூக்கக்கலக்கத்திலோ, பிரேக் பழுதாலோ... என்ன காரத்தால் விபத்து என்றாலும், கிளீனர்தான் கம்பி எண்ண அனுப்பப்படுவான்.

*****-

லோடுமேன்.

லாரியின் பின்புறம் ஏறுவான்.

ஏற்கெனவே கீழேப் படிந்திருக்கும் நமுத்துப் போன வாழைச் சருகுகளைக் குவித்துக் கீழேத் தள்ளுவான்.

புது வாழைச் சருகுகளை வாங்கி லாரியின் அடிப்பாகத்தில் மெத்தைப் போலச் சீராய்ப் பரத்துவான்.

அங்கும் இங்கும் நடந்துப் பார்ப்பான்.

அவன் கால்களில் இருக்கும் கண்கள் பார்த்துப் பார்த்துச் சொல்லும் இடங்களில் மேலும் கொஞ்சம் சருகைப் போட்டு மிதித்துவிடுவான்.

சருகு-பரத்தல்’ மட்டும் சரியானபடி அமையவில்லை என்றால் வாழை வியாபாரிகள் நிறைய நட்டம் பார்க்கவேண்டியதுதான்.

அடிப் பலகையில் உரசி உரசி வாழைத்தாரின் முகம் நசுங்கிவிடும்.

பார்வை போன வாழைத்தார் விலை போகாது.

அடித்தட்டு நசுங்க நசுங்க கட்டுக் குலையும். மேலே மேலே அடுக்கப்பட்ட தார்கள் இளகி நழுவும்.

லாரி போகும் வேகத்தில், தார் நொடித்துக், காம்பு ஒடிந்து தொங்கும்.

ஒடிந்து தொங்கிய தாருக்கு மவுசு கிடையாது.

*****-

வாழை லோடு ஏற்றும்போது மிகவும் கவனம் தேவை.

காரணம், பல நேரங்களில் ஏஜெண்டுகள் லாரியை விட்டுச் சரக்கை இறக்காமலேக் கை மாற்றி விட்டுவிடுவார்கள்.

சமயத்தில், ஏற்றிய வாழைத்தார்களை லாரியிலிருந்து இறக்கப் பத்துத் பதினைந்து நாட்கள் கூட ஆகிவிடும்.

அதுவரைத் தார்பாலின் கட்டுக்குள் குடாப்புப் போட்டாற்போல் கிடக்கும் வாழைத்தார்கள்.

இப்படிப் பல நாட்கள் கழித்து இறக்கும்போது, மஞ்சள் பூத்துப், பழமாய்ப், பார்க்கத் தங்க ரேக்குகளாய்ப் பளிச்சிடும்.

காம்பொடிசலோ, நுனி சீப்பு நசுங்கலோ இருந்தால் போச்சு...

கெட்டப் பழத்தோடு சேர்ந்த நல்லப் பழத்தின் கதிதான்.

லோடு இறக்கும்போதே சில்லறை வியாபாரிகளின் வாயில் புகுந்து புறப்படும் சரக்கின் தன்மை.

“என்னாது... வாளைத்தாரா, கம்போஸ்ட்டா...!”

“எலே முருகா...! சாராய ஊரலுக்குப் போவேண்டிய ராலி, மார்க்கட்டுக்கு வந்துருச்சுடா...!”

“தோலி இறங்குதுடா; பஞ்சாமிர்தம் அடீல படிஞ்சி கிடக்கு போல...!”

“இது கதைக்கு ஆவாது...!”

Representational Image
Representational Image

“படிக்குப் பாதி கூடத் தேறாது போல இருக்கே...!

“அடுத்த லோடுல சரக்கெடுக்கலாம்ணே...!”

சரக்குத் தேவையில்லை என்று, திரும்புவது போலப் பாவ்லாக் காட்டுவார்கள்.

“ப்...ச்...!”

“ஹூ..ம்...!”

“அய்யய்யே...!”

சலிப்பு , அருவருப்பு ஒலி எழுப்பிக் காட்டுவார்கள்.

தலையில் தட்டிக்கொண்டும், கன்னத்தில் கை வைத்தும், கைகளை விரித்தும், அபிநயம் பிடிப்பார்கள்.

பாதி விலைக்கும் கீழேக் குறைத்துக் கேட்பார்கள்.

*****-

தனியாளாய் இருந்தால் மேக்கரித்துவிடலாம்.

சில்லரை வியாபாரிகள் மொத்தமாய்ச் சேரும்போது, ஏஜண்டுகள் சமாளிக்க முடியாமல் திணறிப் போவார்கள்.

சில நேரங்களில் மரண அடி வாங்கவேண்டியிருக்கும் ஏஜெண்டுகள்.

பாதிக்கப்பட்டுவிட்டோமே என லோடு மேனையோ, டிரைவரையோ எவரையுமோ கடிந்துகொண்டுவிடவும் முடியாது.

தொடர்ந்து ஊறல் சரக்கு ஏற்றிப் பழி வாங்கிவிடுவார்கள்.

நட்டத்தை ஜீரணிக்க வேண்டும்.

சரக்கு பவுன் போல வரும்போது, இழந்த நட்டத்தை ஈடு கட்ட வேண்டும்.

கும்பலில் குறைத்துக் கேட்ட சில்லறை வியாபாரி தனியாக வரும்போது முறுக்குக் காட்ட வேண்டும்.

“சங்கத்தலைவனா கடன் தாரான். நான்தானே தாரேன் உனக்கு...”

சொல்லிக்காட்டவேண்டும்.

அப்படி-இப்படி ,அகா-சுகாக் காட்டவேண்டும்.

உதட்டில் புன்னகையும் உள்ளத்தில் கள்ளமுமாய் உலவ வேண்டும்.

இரண்டுநாள் தாங்குமென்றால் கிராக்கி காட்ட வேண்டும்.

இன்றைக்கே தாங்காது என்றால் வந்த விலைக்குத் தள்ளிவிடவேண்டும்.

கத்திமேல் நடக்கிற சமாச்சாரம் வாழைத்தார் வியாபாரம்.

*****-

தார் ஏற்றும்போது மிகவும் கவனம் வேண்டும்.

தவறினால் இறக்குகிற இடத்தில் சிக்கல்.

சருகு பரத்தும் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு சரக்கு ஏற்ற கங்காணி வருவான்.

“அய்யா.. நேந்தரம்தாரு” என்பான்.

கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் முதலாளி சிலேட்டுப் பலகையில் ‘உ’ எனப் பிள்ளையார் சுழி போடுவார்.

அடிக்கோடிடுவார்.

‘நெந்தரம்’ என்று பால் குச்சியால் எழுதுவார்.

அந்த நேரத்தில், அறிவாளை பூமியில் வைத்துக் கண்மூடிப் பிரார்த்திப்பான் கங்காணி.

வரிசையாக நிறுத்தப்பட்ட வாழைத்தார்களில் ஒன்றைக் ‘சரக்’கெனச் சீவுவான்.

“லாபம்...!”

வாய் உரத்துக் சொல்லும்.

“ரெண்டேய்... மூணேய்...” என்று அடுத்தடுத்து சீவக்கொண்டே செல்வான் கங்காணி.

சீவச் சீவ , ஒருவன் தூக்கிவிடுவான்.

வாழைச் சருகால் செய்து தலையில் கட்டிக் கொண்ட சும்மாட்டில் வாழைத்தார் வாகாய் உட்காரும்.

தலையிலிருக்கும் வாழைத்தாரை, லாரிமேல் நிற்கும் லோடுமேன் லாகவமாய் வாங்கி வசம்பார்த்து அடுக்குவான்..

பிலேடு கணக்காகத் தீட்டப்பட்டப் பித்தளைப் பூண் போட்ட வாழைக்கொல்லை அறிவாளால் ‘சரக்... சரக்...’ எனச் சீவுவதைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.

சீவும்போதே முதலாளி சிலேட்டுப் பலகையில் கோடு போட்டு கணக்கு செய்துவிடுவார்.

தகரத்தில் தலைகீழாய் இனிஷியல் போட்ட மோல்டு அச்சு வைத்திருப்பார்கள் சில முதலாளிகள்.

சீவியதும் தார்க் கட்டையில் அந்த அச்சைப் பதிப்பான் ஒருவன்.

பால் உறைந்ததும் வயலட் வண்ணத்தில் இனிஷியல் தெரியும்.

சமயத்தில் சந்தேகம் வந்தால் சீவிச்சாய்த்த வாழைக்கட்டைகளை மீண்டும் எடுத்து எண்ணிச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வார்கள்.

கோஹினூர் காபியிங் பென்சிலால் கட்டையில் இனிஷியல் எழுதும் எஜமானர்களும் உண்டு.

சில நேரங்களில், வாழைத்தார் ஏற்றியதும் சருகுகள் பரப்பித், தார்பாய் மூடிக் கட்டும்போது உதவிச் செய்வான் டிரைவர்.

Representational Image
Representational Image

*****-

வாழைத்தார் ஏற்றும் நாட்களில் குழந்தைகள் குதுகலமாய் இருக்கும்.

கும்பலாக அங்கு வரும் குழந்தைகள் சீவிப் போட்ட வாழைக்கட்டைகளை வாழைத்தாராக பாவித்து அடுக்கி வைப்பார்கள்.

சைக்கிளை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு வாயால் “பூ..ம்... பூம்...” என்பான் ஒருவன்.

‘ராலி’ வந்துருச்சுண்ணே!” என்பான் மற்றவன்.

கேட்டுக் கொண்டிருக்கும் சிறுவன் அங்கே பாதி தரையில் பதிந்த ஒரு பாறாங்கல்மேல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு மீசையை முறுக்குகிறார்போல் பாவனையுடன் பார்ப்பான்.

“சருவு போட்ரா மொத”

அதட்டும் குரலில் சொல்வான்.

“சரிங்க முதலாளி”

சொல்லியபடியே சருகுகள் சிலவற்றை சைக்கிள் கேரியரில் வைப்பான் அவன்.

“ராலியேத்து ...”

முதலாளியிடமிருந்து உத்தரவு வரும்.

சீவுவதைப் போல ஒருவன் நடிப்பான்.

மற்றவன் கட்டையைத் தூக்கிக் கேரியரில் வைப்பான்.

“எழுபது மொந்தன், முப்பது ரஸ்தாலி...!” என்று லாரிக்காரனாய் நடிப்பவன் கணக்கு ஒப்பிப்பான்.

பையில் இருந்து தட்டிச் சமமாக்கப்பட்ட வட்டமான சோடாமூடிகள் சில்லறையாகவும், சிகரெட் அட்டையைக் கிழித்து எழுதப்பட்டவை ரூபாய் நோட்டுகளாகவும் டிரான்ஸாக்‌ஷன் நடக்கும்.

பணத்தை எண்ணிக் கல்லாவில் போட்டதும், லாரி போக அனுமதிப்பார் முதலாளி..

“அடுத்த ராலி வரச்சொல்லு...!”

வேறு ஒருவன் சைக்கிள் தள்ளிக்கொண்டு வருவான்.

முதலாளி மாறுவான்.

குறிப்பாக விடுமுறை நாள்களில் வாழைத்தார் ஏற்றி விட்டால் கிட்டத்தட்ட இருபது முப்பது ராலி விளையாட்டுக்கள் விளையாடிவிடுவார்கள் சிறுவர்கள்.

******-

மனித உறவுகள் அற்புதமானவை. ஆழமானவை.

அதன் சூட்சுமம் ஒரு ரசவாதம்.

எப்போது, எதற்காக, யாருக்கு, யார்மேல் அன்பும் காதலும் மரியாதையும் பாசமும் படரும் என்பது எவரும் அறியா பிரும்ம ரகசியம்.

ஒருவரைப் பிடித்துவிட்டால், ஒருவரோடு மனதால் இணைந்துவிட்டால், செய்யும் தவறுகள் கூடச் சரியாகத் தெரிகின்றன.

பிடிக்காதவர் எனில், முழுக்க முழுக்க சரியேச் செய்தாலும் மனம் ஒப்புவதில்லை.

தேடித் தேடித் தவறு சுட்டுகின்றன.

அல்லூர்ச் சந்தைக்குச் சென்று சுமையோடு திரும்பினார்கள் விவசாயக்கூலி சின்னப்பொண்ணு, தவசமுத்து, தனவேலு, கொளஞ்சி நால்வரும்.

அந்தனூர் ரயில்வே கேட் தாண்டி, பெரியவாய்க்காலுக்கும் எல்லையம்மன் கோவிலுக்கும் இடையே கீழண்டை நிற்கும் புளியமரத்தடியில் நின்றார்கள்.

கைச்சுமையையும், தலைச் சுமையையும் இறக்கி முண்டு முண்டாய் எழும்பி நிற்கும் வேரடியில் வைத்தார்கள்.

குதறிப்போட்டாற்போலக் கிடக்கும் கோவில் சம்பாக் காணியைப் பார்த்தார்கள்.

உள்ளத்தில் ஏறியது சுமை.

சின்னப்பொண்ணுவுக்குத் துக்கம் எகிறிக்கொண்டு வந்தது.

‘எப்படிப் பொன்போல விளைந்த நிலம்...! இப்படிக் கிடக்கிறதே...!’

ஆதங்கம் வந்தது.

குமுறியது மனசு.

கன்னிவாய்க்கால் மூலையில் உயர்ந்து நிற்கும் பனைமரத்தடியில்தான் நிற்பார் மாதய்யா...

பாட்டுக் கட்டுவார்.

பகடி பேசுவார்.

சின்னப்பொண்ணுவை இன்னதுதான் என்றில்லை. எதுவும் சொல்லிக் கலாய்ப்பார்.

காரியவாதமாய்ப் பழகும் மனிதர்களிடம் சகமனிதன் ஒட்டுவதில்லை.

பாசமாய்ப் பழகும் மனிதர்களோடு விலகாமல் பலமாய் ஒட்டிக்கொண்டுவிடுகிறது மனித மனசு.

இந்தக் காணியில்தான் எத்தனையெத்தனை எதிர்ப்பாட்டுக் கட்டியிருப்பாள் சின்னப்பொண்ணு.

மாதய்யாவைக் கண்டுவிட்டால் அவளுக்குக் கொட்டாட்டம்தான்.

கடைசீயாக அந்த வயலில் நடைபெற்ற நடவு நினைவில் வந்தது அவளுக்கு.

பனைமரத்தடியில் கிடந்த சிமிட்டிக் கட்டையில் உட்கார்ந்திருந்த மாதய்யாவின் கணீர்க் குரல்.

“எவடீ அவ சின்னப் பொண்ணு...”

“சின்னப் பொண்ணுக்கு என்னா வெச்சிருக்காம் இப்போ...?”

“எலே மருதை...!”

“சொல்லுங்கய்யா...!”

“சம்பாக் காணீல நடவுதானே நடக்குது...!”

“ஆமாங்கய்யா...!”

“சபாநாயகர் சந்நிதீல நட்டுவம் ஆடுறாப்ல இருக்கேனு கேட்டேன்...!”

“ஆட்டம் போட்டு நட்டாலும் அதிகக் குத்து நட்டது நான்தேன்; ‘ஹு..க்.. கூம்...!’ என்று கழுத்து திருப்பி, உதடு கோணி நொடித்தாள்.

யாரும் எதுவும் பேசவில்லை; அவளேத் தொடர்ந்தாள்.

“கண்மூடி நிக்கிறாகளா,

கண் பார்வை மங்கிப்போச்சா

கேட்டுச் சொல்லு மருதண்ணே...!”

“தன் வாயாலயே மாட்டுது பாரு மருதை…!” என்று சொல்லிப் பலமாய்ச் சிரித்தார் மாதய்யா.

சிரிப்பு அடங்கியதும் சொன்னார்.

“ஒரு நாத்து நடுற இடத்துல, நாலு நாத்து சேத்து வெச்சி நடுறதைப் பாத்துத்தான் கேட்டேன். அதுவே ஒத்துக்கிடுச்சி.”

“ ... ... ... ... ... ... ... ...”

“சின்னப்பொண்ணு கணக்கா நாத்து நட்டா, பாதி வயலுக்குதானே நாத்து வரும். மீதி இடத்துல மேடை போட்டு நாட்டியம் ஆடுவளோ...?”

கேட்டுச் சொல்லு மருதை.

மருதை தவிப்பான். குனிந்து சிரிப்பான்.

அடிக்கடி மாதய்யாவுக்கும் சின்னப்பொண்ணுக்கும் ஏற்படும் வாக்கு வாதத்தை எல்லோரும் ரசிப்பார்கள்.

சில நேரங்களில் தாத்தா, பேத்தியிடம் பாசத்தோடு விளையாடுவதுபோல இருக்கும்.

பெற்ற மகளிடம் பொய்க்கோபம் காட்டுவதாய் இருக்கும்.

நண்பனாய்,

மந்திரியாய்

நல்லாசிரியனாய்

பண்பிலே தெய்வமாய்

பார்வையிலே சேகவனாய்..

மாதய்யா இருப்பது அவரிடம் பழகியவர்களுக்குத்தான் தெரியும்.

பெற்ற மகளாய்த் தன்னைப் பார்த்த, மாதய்யாவின் நினைவு மனதை அழுத்தியது.

சம்பாக் காணி இப்படி நாசக்காடாவதற்குக் காரணமான கிட்டாவய்யாவின் மீது வெறுப்பும் ஆத்திரமும் வந்தது.

கைச்சுமை, தலைச்சுமையோடு, மனச்சுமையும் ஏறியது.

மேலே நடந்தார்கள்.

*****-

வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்றதற்குச் சாட்சியாக எல்லையம்மன் கோவில் முன் பின்னிப் பிணைந்துக் கிடந்த வாழைத்தார்க் கட்டைகள், பச்சை வாழைக் கிழிசல்கள், சருகால் சுற்றிய சும்மாடுகள், புகையிலை, சீவல் கவர்கள், குழந்தைகளின் விரல்மேடுபோல் கிடக்கும் பிய்த்தெறிந்த நுனி சீப்புகள்...

கடந்து சென்றபோது எதிரே வந்தார் கிட்டாவய்யா.

*****-

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.

அது சுயநலமாக ஆத்திரப்படுபவனுக்கு மட்டுமே பொருந்தும் சொலவடை.

சமுதாயக் கோபமும் ஆத்திரமும் பொங்கும்போது புத்தி விழித்துக்கொள்ளும்.

ஊருக்கெல்லாம் தெரிந்த உண்மையான குற்றவாளியின் மீது சினம் ஏறும்போது, ஆத்திரக்காரனுக்குப் புத்திக் கூர்மையாகிறது.

‘குற்றவாளியை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும்...’ என்ற வெறி உந்துகிறது.

‘எப்படிப் பிடிக்கலாம்…’

மனம் சிந்திக்க,

‘எப்படிப் பொறி வைக்கலாம்...’

என புத்தி யோசிக்கிறது.

‘பசுந்தோல் போர்த்திக்கொண்டு அலைகிற இந்த ஓநாயை ஊர்சிரிக்கச் செய்யவேண்டும்...!’

மூர்க்கமான உந்துதலால் தனியாக மாட்டியக் கிட்டாவய்யாவைப் பழிவாங்கத் துணிந்தாள் சின்னப்பொண்ணு.

“ ... ... ... ... ... ... ... ...”

பாழ்ப்பட்ட வயலையும், கிட்டாவய்யாவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

‘திடீரென்று ஒருவரை எப்படித் தாக்க முடியும்...?’

வழி முறைகளை யோசித்தாள்.

அவர் கவனத்தைத் தன் வசம் திருப்ப ஒரு யுக்த செய்தாள்.

‘க்...ஹ்.........த்... தூ...” என்று காரித் துப்பினாள்.

“எதுக்க ஆளு வருதுல்ல... கவனிச்சுத் துப்பவேண்டியதானே…!”

சுள்’ளென்று முகம் காட்டி எரிந்து விழுந்தார் கிட்டா.

“நான் துப்புறது தெரியுதுதானே...! கவனிச்சி வரவேண்டியதுதானே...!”

அதே அளவு சுள்ளாப்புடன் கடிந்தாள் சின்னப்பொண்ணு.

ஆத்திரப்பாட்டார் கிட்டா.

‘தன்னை இப்படிப் பேசிவிட்டாளே. தன் கௌரவம் போயிற்றே...’ என்றெல்லாம் சுயம் எழ எழ மாதய்யாவுக்கு ஆத்திரம் வந்த்து.

அவர் புத்தி மட்டாயிற்று.

“எவடீ அவ...! நான் யார்னு தெரியாம என் கிட்டே வாலாட்டுறே...?”

“யோவ்... உன்னை யாருன்னா தெரியாது...! ஊருக்கே உன்னை தெரியும்வே...! சம்பாக் காணிய மந்தக்கரையாக்கி குடி கெடுத்தவன்தானே நீ...! ”

“என்னாடீ மரியாதை மட்டில்லாம பேசுறே நீ...?”

“நீ மட்டும் என்னவாம். ஒரு பொம்பளையப் பாத்து வாடீ போடீன்றியே இது எந்த ஊரு ஞாயண்டா...?”

படிப்படியாக வார்த்தைகளில் மரியாதைக் குறைத்தாள்.

கிட்டாவய்யாவின் ஆத்திரத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றாள்.

அடிக்கக் கை ஓங்கிவிட்டார் கிட்டாவய்யா.

“பொம்பிளைய அடிக்கறது என்னா பளக்கம்...”

தனவேலு கேட்டான்.

“பொம்பளையப் போட்டு இந்த அடி அடிக்கறியே...” என்றான் தவசமுத்து.

“செய்யாத குத்தத்தை ஜோடிச்சிப் பழிவாங்கறதும் குத்தம் செய்வதற்குச் சமம்தான்.”

ஒரு முறை மாதய்யா ஒரு பஞ்சாயத்தின்போது சொன்னது மனதில் வந்து உறுத்தியது.

உலுக்கிப் போட்டவாறு தலையைச் சிலுப்பினாள் சின்னப்பொண்ணு.

“ச்சீ...! நாம ஏன் இவ்வளவு கேவலமா நினைக்கறோம்...?”

“என்னாச்சு என்னாச்சு என்று கொளங்சீ...?” பரபரத்தாள். சின்னப்பொண்ணுவின் முதுகு தடவி விட்டாள்.

திடீரென்று அவள் முகத்தில் கண்ட உணர்வுப் பிரதிபலிப்பைக் கண்ட, தனவேலுவும், தவசமுத்துவும் என்னேவோ ஏதோ என்று பயந்துவிட்டனர்.

“ஒண்ணுமில்லாக்கா. ஒரு மாதிரி கேரியா இருந்துச்சு...!” என்று சமாளித்துவிட்டாள்.

சுற்றுமுற்றும் பார்த்தாள்.

கிட்டாவய்யாவை எங்கும் காணோம்.

எல்லாமே மனப்பிராந்தி என்று தெரிந்தது.

“அதர்மத்தை யாரும் அழிக்கவே வேண்டாம். அது தன்னைத்தானே அழிச்சிக்கும்...!”

மாதய்யா அடிக்கடி சொல்வது இப்போது சின்னப்பொண்ணுவின் மனதில் பிரதிபலித்தது.

******-

புயல் வெள்ளத்துக்குப் பிறகு, கட்டுமானத் தொழில் செய்வோருக்கு ஏக கிராக்கி.

எங்கு பார்த்தாலும் ஓடு மாற்றுதலும், கீத்து பரப்புதலும், கட்டடம் கட்டுதலுமாக வேலைகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தன.

Representational Image
Representational Image

ஊரில் இருந்த கீத்து சரவணன் கோஷ்டியும், முத்து கோஷ்டியும் எப்போதும், பிஸியாகவே இருந்தனர்.

சிலர் கலகலத்துவிட்ட ஓட்டுக் கட்டிடங்களை மொத்தமாகவோ, ஒரு சில பகுதிகளையோ ஒட்டுக்கட்டிடங்களாக மாற்ற முடிவெடுத்தனர்.

ஓட்டு வீடாக மாற்ற எண்ணம் கொண்ட கூரைக்கட்டுக்காரர்கள் வீடு பிரித்த இடத்திலிருந்து, பழைய ஓடுகள், உத்தரம், குத்துக்கால், கட்டைக்கால், அனந்தரம், வளை, சரம் எல்லாவற்றையும் செட்டாக நம்பர் போட்டு அப்படியே கொண்டு வந்து இறக்கிக்கொண்டனர்.

கொத்தனார்களின் கரணைகளுக்கும், ஆசாரிகளின் இழைப்புளிகளுக்கும் ஓய்வே இல்லை.

விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயக் கூலிகள் மற்ற மற்றக் கூலி வேலைகளுக்குச் சென்றார்கள்.

கீற்று முடைந்தார்கள், சித்தாளாகிக் கட்டு வேலைக்குச் சேறு குழைத்தார்கள், சாந்து சுமந்தார்கள், கல் தூக்கினார்கள். கலவை போட்டார்கள்...

கலியன் தெருவில் புஷ்பவனம், கூரை வீட்டை ஓட்டு வீடாய் மாற்றினான்.

“கூரையப் பிச்சி எறிஞ்சிட்டு, ஓடு போட்டு மூடேன்..!”.

குந்தலாம்பாள் உட்பட பலபேர் கலியனிடம் யோசனைச் சொன்னார்கள்.

“ஒண்டிக்கட்டைக்கு இது போதும். ஒளுவாத இருந்தாப் போதும். மோட்டுல இருக்கறதால வூட்டுக்கு ஏதும் பாதிப்பில்ல. அடிச்ச காத்துல உச்சி மோடு பிச்சிக்கிட்டுப் போயிருச்சு. அங்கங்கே சொருகு கீத்து மட்டும் வெச்சி, உச்சி மோடு குத்திட்டாப் போதும்...!”

சொல்லிவிட்டான் கலியன்.

“ உச்சி குத்தவாண்ணே...?”

இரண்டு மூன்று முறை கலியனைப் பார்த்தபோதெல்லாம் கேட்டான் பந்தல் சரவணன்.

“எனக்கென்னா அவுசரம். செமந்த வேலையெல்லாம் முடிச்சிட்டுவா. சம்சாரிங்க வேலைங்களெல்லாம் முடியட்டும். கடேசியா நம்ம வேலை பாத்துக்கலாம்.”

தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தான் கலியன்.

*****-

கேட்டால் “அப்புறம் ஆகட்டும்” என்பான் கலியன்.

பந்தல் சரவணன் கலியனைக் கேட்காமலே கொட்டகைக்கு வேண்டிய கீற்று, பாளை, தேங்காய் நார்க் கயறு, மூங்கில்கள் என எல்லாவற்றையும் இரட்டைமாட்டு வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டான்.

Representational Image
Representational Image

கலியனால் இந்த முறை ஒத்திப்போட முடியவில்லை.

வேலை ஆரம்பித்தார்கள்.

மரத்தடியில் திரிசங்கு கட்டிலைக் கொண்டு வந்து போட்டான்.

நிம்மதியாக உட்கார்ந்தான் கலியன்.

கடந்த ஒரு வார காலமாக அப்படி ஒரு கடுமையான வேலை கலியனுக்கு.

உட்கார்ந்து கீத்து பிரிப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் லேசாகச் சாய்ந்தான்.

உடம்பு அலுப்பில் அறியாமல் கண் அசந்துவிட்டான் கலியன்.

*****-

“ஏலப் பொடி மணக்கும் – நீங்க

நின்ன இடம் பூ மணக்கும்.

கதம்பப் பொடி மணக்கும் – நீங்க

கெடந்த இடம் பூ மணக்கும்

ஏலப் பொடி வாசனைய

ஏனய்யா விட்டுப் போனீர்.

கதம்பப் பொடி வாசனைய

ஏனய்யாக் கடந்துபோனீர்...!”

தாரை தப்பட்டைகளில் பின்னணியில் ஒப்பாரி ஒலிக்க, ஆடி அசைந்துச் சென்றது யாத்திரை.

பஞ்சமுக வாகனத்துக்கு முன்னால்

ஒருத்தன் பூக்களை அள்ளி அள்ளி வீசினான்.

ஒருவன் பொறி கடலை இறைத்தான்.

சில்லறைக் காசுகளை இறைத்தபடி வந்தான் ஒரு ஆசாமி.

பொறிகடலைக்காரன் அவ்வப்போது வாயில் போட்டுக் கொறித்தான்.

சில்லறைக்காரன், சில்லறையை இக்கில் சொருகிக் கொண்டான்.

பூத்தூவி, வாயில் போட்டுக் கொள்ளவும் முடியாமல், இக்கில் செருகவும் முடியாமல் வாடினான்.

மலர் தூவுகிறவன் முகத்தில் வாட்டம்.

“பொன்னு உரு வட்டாவுல

பாயாசம் கொண்டுவந்தேன்…

பாயாசம் வேண்டாமுன்னு

பொன்னு ரதம் போறீகளே...

தங்க உரு வட்டாவுல

தல பாகம் கொண்டுவந்தேன்.

தல பாகம் வேண்டாமுன்னு

தங்கரதம் போறீகளே...!”

வைர உரு வட்டாவுல

வாய்க்கு ருசியாக் கொண்டாந்தேன்.

வா ருசிக்கு வேண்டாமுன்னு

வைர ரதம் போறீகளே...!”

மயானத்தை நெருங்கிவிட்டது வாகனம்.

திடீரென்று எழுந்தது பூத உடல்.

தலைமுழுதும் முடி பிடுங்கப்பட்டு, பிடுங்கப்பட்ட இடத்தில் ரத்தம் உரைந்து, முருக்கமரத்தில் திரண்டு நிற்கும் பிசின் போல் பல்வேறு அளவுள்ள கட்டிகளாகப் பளிச்சிட்டது.

நகம் இருக்க வேண்டிய இடத்தில் நகம் பிடுங்கப்பட்டு, ரத்தம் உறைந்து பொறுக்குத் தட்டியிருந்தது.

இடுப்பில் அரணாக்கொடி அறுத்து ரணகளமாகித் தொங்கியது.

ராட்சத உருவம்.

அருகில் போய் முகத்தை உற்று நோக்குகிறான் கலியன்.

மாதய்யா.

“அய்யா...”

கதறுகிறான் கலியன்.

கதறலுடன் சடாலென்று எழுகையில் கயிற்றுக் கட்டில் “க..ர்..ரெ..க்...” என ஒலி எழுப்பிற்று.

எழுந்து உட்கார்ந்த கலியனின் உடலில் நடுக்கம்.

கீத்துக் கட்டியாகிவிட்டது.

மோடு குத்தியாகிவிட்டது.

எல்லா வேலையும் முடித்துவிட்டு, குப்பைக் கூளங்களைக் கூட்டி எட்டக் கொண்டுபோய்க் கொட்டி எரித்தார்கள் ஆட்கள்.

*****-

நெருப்பில் கொட்டக் குப்பைகளை எடுத்துப் போனவன், கலியன் அதிர்ந்து எழுந்த சத்தம் கேட்டுக் குப்பைக் கூடையோடு அவசரமாய் அவன் முன் வந்தான்.

“என்னாச்சுண்ணே...?”

ஆதரவாய்க் கேட்டன்.

அதிர்ந்தான் கலியன்.

கவண் விட்டுக் கிளம்பும் கல்லாய், விருட்டென எழுந்து, அந்தக் குப்பைக் கூடையில் கிடந்த மஞ்சள் பையை டக் கென்று கையில் எடுத்தான்.

மாதய்யாவின் கடைசீ ஆசையை நிறைவேற்ற, சிதையைக் கலைத்து, அவருடைய நகம், முடி, அரணாக்கொடியையெல்லாம் வைத்திருந்த அந்த மஞ்சள் பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் கலியன்.

Representational Image
Representational Image

*****-

‘இந்தக் கனா மட்டும் வரலேன்னா...?’

நினைக்க நினைக்க மிரட்சியாக இருந்தது கலியனுக்கு.

இப்படி பையில் வைப்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை என்பதை உணர்ந்தான் கலியன்.

உடனடியாக அயிலாண்டக் கிழவியைச் சந்தித்தான்.

நீண்ட நேரம் அவளோடு பேசினான்.

இறுதியாகக் கிழவி சொன்ன யோசனைதான் சரியெனப் பட்டது கலியனுக்கு.

-தொடரும்...

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.