வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அட்வகேட் வாதிராஜன் அலுவலகத்தில் பார்வையாளர்கள் அமருவதற்கான ‘வெயிட்டிங் ரூம்’ மிகவும் நேர்தியாக இருந்தது.
சுவற்றில் தொங்கிய காலண்டர்.
அதற்குக் கீழே தரையில் குவித்த ஆற்று மணல் மேல் குடிநீர்ப் பானை.
எதிரெதிரேக் கிடந்த இரண்டு குஷன் நாற்காலிகள்.
பக்கவாட்டில் கிடந்த டீப்பாய்.
அறையைச் சுத்தம் செய்யும்போது இழுத்து விட்டாற்போல இருந்தது.
டீப்பாய் மேல் ஒரேப் பத்திரிகை நிறுவனம் வெளியிடும் ஆங்கில மற்றும் தமிழ் தினசரிகள் இருந்தன.
துரை சுத்தமான அந்த அறையை வியப்புடன் பார்த்தான்.
‘இவ்வளவு சுத்தமா இந்த அறையை வெச்சிருக்கற அட்வகேட், ஏன் அவர் புழங்கற ஆபீஸ் ரூமை இப்படி அடைசலா வெச்சிருக்காரு...?”
வாழ்வில் சுவாரசியத்தைக் கூட்டும், இரு துருவங்களின் இன்றியமையாமைப் பற்றியப் புரிதல் இல்லாத துரைக்குள் இப்படிப் பட்டக் கேள்வி எழுவது இயல்புதானே.
*****-
நாற்காலி கிடந்த வாட்டத்திலேயே துரை உட்கார்ந்தான்.
மின் விசிறிக்குக் கீழே டீபாயை மையப்படுத்தி இழுத்து வைத்து, நாற்காலிகளை முறையாய், இருபுறமும் நேர்த்தியாய்ப் போட்டுவிட்டு, உட்கார அது என்ன அவன் சொந்த வீடா என்ன?
சற்றே எட்டத்தில் கிடந்த டீபாயில் இருந்தச் செய்தித்தாள், அவன் கவனத்தை ஈர்க்கவில்லை.
அட்வகேட்டிடம் சொல்ல வேண்டிய விவகாரங்களை மனதில் வரிசைப் படுத்திக் கொண்டான்;
தெரிந்து கொள்ளவேண்டியச் செய்திகளை சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அறைக்குள் மற்றொரு கிளையண்ட் வந்தார்.
புதுமுகம் பாராமல் துரையைப் பார்த்துக் கைக் கூப்பி “வணக்கம்...!” என்றார்.
புன்னகைத்தார்.
பேசினார்.
“மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுல, இன்னிக்குக் ‘ஃபோர்நூன்-சிட்டிங்லதான் தீர்ப்பாச்சு. மதியம் ‘டிக்ரி’ கைல வந்துடும். சாயங்காலமா வாங்கிக்கிடலாம்ன்னார் அட்வகேட். அதான் வந்தேன்.” என்றார்.
“அப்படியா...?”
அசடு வழிந்தான் துரை.
எதிர் நாற்காலியில் உட்கார்ந்தார்.
டீபாயில் கிடந்த செய்தித்தாளை எடுக்க கையை நீட்டினார்.
அப்போது வக்கீல் குமாஸ்தா உள்ளே வந்தார்.
“ஒங்களை வரச் சொன்னாங்க...!”
‘டிக்ரி’ வாங்க வந்தவரைப் பார்த்துச் சொன்னார்.
‘வேற்று முகம் பாராது, கல கலவென்று சகஜமாய்த் தன்னிடம் பேசிய அந்த நபரை எப்படிச் சமாளிப்பது...?’
தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆள் எழுந்து போனது ரிலீஃப் ஆக இருந்தது துரைக்கு.
*****-
“டெனட்டை வெகேட் பண்ண வைக்கணும்;
அதானே...!” நேரடியாகப் பளிச் என்று விஷயத்துக்கு வந்தார் வக்கீல் வாதிராஜன்.
“ஆமாம் சார்...”
“குத்தகை நெல்லு சரியா அளக்காம பிரச்சனை பண்றானா டெனண்ட்...?
“அதுலெல்லாம் குறையே வைச்சதில்லை அவன்...!”
“அளந்ததுக்கு நீங்க அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுப்பீங்கதானே...?”
“உடனே கொடுத்துருவோம்...!”
“... ... ... ... ... ... ... ... ...”
சில கனங்கள் யோசித்தார் அட்வகேட்.
“நீங்கச் சொல்றக் கண்டிஷன்ல, டெனட்டைச் சட்டப் பூர்வமா வெளியேத்தவே முடியாதுங்களே...!”
சிதறு-தேங்காய் உடைத்தாற் போல “படார்...!” ரென்று சொல்லிவிட்டார்.
“... ... ... ... ... ... ... ... ...”
இப்படி ஒரு கருத்தை அட்வகேட்டிடம் எதிரேப் பார்க்காத துரை வாயடைத்துப் போனான்.
வக்கீலேத் தொடர்ந்தார்.
“கேக்கறேனேனு நினைக்காதீங்க...! நீங்க வெவரம் தெரிஞ்ச நாள்லேந்து மெட்ராஸ்லதான் இருக்கீங்களா...?”
“ஆமாம் சார்...! நாளு-கிழமைன்னா கிராமத்துக்குப் போவேன்...!”
“ஓ...! நான் நினைச்சதுச் சரிதான்...! கிராமத்துலக் குப்பைக் கொட்டினவன் எவனும் டெனண்ட்டை வெகேட் பண்ணக் கோர்ட்டுக்கு வரமாட்டான்..;
மேட்டை வெட்டிப் பள்ளத்துலப் போட்டு, எறங்கி ஏறி மேக்கரிச்சி மேஞ்சிச் செஞ்சிடுவான் வெச்சி. ”
“அப்படீன்னா...?”
கிராமத்து அனுபவமே மருந்துக்குக் கூட இல்லாத துரைராமனை நினைத்துப் பரிதாபப் பட்டார் அட்வகேட்.
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல், திரு திரு வென்று முழித்துக் கொண்டிருந்தான் துரை.
“... ... ... ... ... ... ... ... ...”
சிரித்துக் கொண்டார் அட்வகேட்.
கிளையண்ட், தப்பாக நினைத்துவிடக்கூடாது, என்பதற்காக துரையைப் பார்த்துப் பேசினார்.
“கிராமத்துலயேக் கொட்டைப் போட்டவங்க இது போலச் பிரச்சனைங்களை வேற மாதிரி சமாளிப்பாங்க;
ஒரு சில பேர் ஒங்கள மாதிரி கேஸாடுறதும் உண்டு;
ஆனாப் பாருங்க..., வருஷக்கணக்குல வாய்தா வாங்கி வாய்தா வாங்கி ;
அலைஞ்சித் திரிஞ்சிக், காசையும் தண்ணியாச் செலவுப் பண்ணி, நிம்மதியில்லாம அலையுவாங்க;
எவ்ளோக் கேசுப் பாக்கறேன் நான்...!”
இயல்பாகப் பேசினார்.
கேஸ் பிடிக்கவேண்டும் என்று வாய்ச் சவடால் பேசாமல், யதார்த்தத்தைப் பேசினார் வக்கீல்.
*****-
வக்கீல் வாதிராஜன் நடுத்தர உயரமுள்ளவர். பளிச்சென்ற நிறம். நெற்றியில் லேசாகத் தெரியும் குங்குமம், அடிக்கடி வெற்றிலைப் போட்டுக் குதப்பிப் குதப்பிக் கடைவாயில் மைனா-வாய் போல, நிரந்தமாகத் தங்கிவிட்ட பிளவு. நரையும் செம்பட்டையும் சரிவிகிதத்தில் கலந்து கட்டிய கேசம். முன் வழுக்கையை மறைக்க, மேலே ஏற்றி வாரியத் தலைமுடி.
அவருடைய இருக்கைக்கு பின்னால், அலமாரியில் குறிப்பெடுத்துவிட்டோ, எடுப்பதற்காகவோ, ‘புக் மார்க்’ செருகப்பட்டிருந்தச் சட்டப் புத்தகங்கள்.
புத்தக வரிசை கலைந்தும், சிதைந்தும் இருந்தன.
வசதிக்காகப் பீனல் கோடுகளைக் குறித்து வைத்திருக்கும் குறிப்பு டைரிகள்..
சைக்ளோஸ்டைல் மிஷின்.
டிம்மிப் பேப்பரை நெடுக்கு வசத்தில் மடித்தாற்போல் கேஸ் கட்டுக்கள்.
ரப்பர் ஸ்டாம்ப் ஒத்தவும், இடது கை பெருவிரல் ரேகை அழுத்தவும் வசதியாக ஸ்டாம்ப் பேடு.
பல்குத்தும் குச்சி, நெய்ல் கட்டர். காதுக் குரும்பை, இங்க் பாட்டில், கோந்து பாட்டில், பேனாக்கள், ஸ்டாப்ளர், குண்டூசி டப்பா, பேப்பர் வெயிட், கத்தரிக் கோல், ஊசி நூல்... இத்யாதிகள்
கண்ணாடிக் கதவிட்ட பீரோ இருந்த அடுத்த அங்கனம் சற்றே சுத்தமாக இருந்தது.. பீரோவின் அருகில் சன்னல். சன்னலுக்குக் கீழ் ஒரு அரை நாற்காலியில் சதுரவடிவில் இல்லாமல், வட்ட வடிவில் கீ போர்டு வைத்த ‘ஹால்டா’ டைப்ரைட்டர்.

தமிழா ஆங்கிலமா என்று அனுமானிக்க முடியவில்லை.
காரணம், கீ போர்டில் எழுத்துக்கள் எல்லாம் விரல் முனைப் பட்டுப் பட்டுத் தேய்ந்து, அழிந்திருந்தன.
அந்த ஹால்டா உபயோகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
*****-
ஆபீஸ் அறை இருந்த நிலையைப் பார்த்தபோதே
‘பிஸியான அட்வகேட்...’ என்பது தெரிந்தது.
அறையின் கீழக் கோடியில் மூன்றுக்கு இரண்டு சைஸில், சட்டமிட்டு மாட்டப்பட்டப் புகைப்படம்.
பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே வாதிராஜனைப் போலவே இருந்தது.
‘வாதிராஜனின் அப்பாவாகத்தான் இருக்கவேண்டும்...!’
அந்தப் படத்தின் மேல் தொங்கியதுக் காய்ந்த மாலை.
சென்றப் பிறந்தநாளன்றோ, நினைவு நாளன்ளோ போடப்பட்டிருக்கவேண்டும். காய்ந்த மாலையில்ப் படிந்திருந்த தூசுகளும், நூலாம்படைகளும் பார்க்கும்போது, எப்படியும் நான்கு மாதத்திற்கு முன் போடப்பட்ட மாலையாகத் தோன்றியது.
துரையின் மனதில் அப்பாவின் நினைவு வர வலுக்கட்டாயமாக கண்களை வேறுபுறம் நகர்த்தினான்.
அடர்த்தியாய் அகலமாய் சுவற்றின் மூலையில் விரித்திருந்த தன் எச்சில் கூட்டில் விழுந்த ஈசலை பிடித்துக் கொன்றுகொண்டிருந்த சிலந்தி துரையின் கண்ணில் பட்டது.
*****-
வக்கீல் வாதிராஜன் துரைராமனைத் தீர்க்கமாகப் பார்த்தார்.
‘ஹோ...ஹ்...ஹோ... ஹோ...!’
புகையிலைச் சாறுச் சிந்திவிடாமல் கழுத்தை அன்னாந்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தார்.
ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் கலந்து, புரியாதப் பீனல்கோடுகளையும் கலைச் சொற்களையும், சொல்லி விளக்கி, தங்கள் பாண்டித்தியத்தைக் காட்டிக்கொள்ளும் வக்கீல்களைப் இல்லாமல், பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிதாகப் பேசினார் அட்வகேட்.
*****-
வாய்திறந்துப் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த துரையிடம் வெள்ளந்தியாகக் கேட்டார்.
“டெனண்ட்’ முறையா, சரியா அளக்கறான்கறேள். என்னத்துக்கு அவனை காலிபண்றேள்...!;
உடனடியா பொஸஷன் எடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன...?;
சொல்லுங்கோ...?”
‘என்ன பதில் சொல்வது...?’
யோசித்து வைத்திருக்கவில்லை துரை.
வகுப்பறையில், ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரியாத மாணவன், தெரிந்த பதிலைக் கூற யோசிப்பதைப் போல நடிப்பானல்லவா...;
அதுப் போல, ஒன்றும் சொல்லாமல், ஏதோச் சொல்ல வருபவன் போலத் தலையை ஏற்றுவதும் இறக்குவதுமாக நடித்தான் துரை.

‘கிளையண்டிடமிருந்து பதில்வராது...!’
உறுதியாய் அறிந்த வாதிராஜன், சிறு இடைவெளிக்குப் பிறகுக் கேட்டார்.
“சொந்தமா சாகுபடி பண்ற ஐடியாவா?, சேல்ஸ் பண்ண உத்தேசமா...?”
“சேல்ஸ் பண்றதுதான்.”
“உள்ளூர்ல ஒசந்தக் கையா, பிராபல்யமா இருக்கற ஆசாமிக் கிட்டேக் கொடுத்துட்டா, அவா எல்லாத்தையும் மேக்கரிச்சுடுவாளே...!”
“முறைப்படிப் பொஸஷன் எடுத்தப் பிறகு வித்தா விலைப் போகுமேனு...!”
“அதுவும் சரிதான். ஊதி ஊதிப் பெரிசாக்கிப் பிரதிவாதியைச் சுத்தல்ல விடலாம்னா அவன் பக்கம் சின்னச் சறுக்கல் கூட இல்லியே...!”
முகவாய்க் கட்டையில் கை வைத்தபடி யோசனையில் ஆழ்ந்தார் வாதிராஜன்.
*****-
“வக்கீல் சார் எனக்கு ஒரு சந்தேகம்.”
“கேளுங்கோ...!”
“சரியா அளக்காத டெனண்ட்டுன்னா, உடனே வெகேட் பண்ணச் சொல்லி, உத்தரவு போட்ருமா சார் கோர்ட்டு...!”
“ஹ...ஹ...ஹ...ஹ...!”
உலக மகா நகைச்சுவையைக் கேட்டதைப் போலச் சிரித்தார் வக்கீல்.
“மிஸ்டர் துரைராமன்...!,கிணத்துத் தவளையாவே இருக்கீரே...! ஒரு குந்துமணி கூட அளக்கலேன்னாலும், டெனண்ட்டைக் கோர்ட் வெகேட் பண்ணவேச் சொல்லாது...!”
“அய்யய்யோ...! அப்பறம்...?”
அதிர்ந்தான் துரை.
“இனிமே சரியா அளக்கணும்...! ஏற்கெனவே அளக்காததை ஒரு கலம் ரெண்டு கலமாகவாவது அளந்து நாளாவட்டத்துல சரிகட்டிடணும்னு தீர்ப்பு வரும்.”
“அடக் கடவுளே...!”
“இதுக்கே அதிர்ந்தா எப்படி...? இன்னும் எவ்ளோ இருக்கு...!”
சிரித்தார்.
‘பூனைக்கு பிரதம ஆகாரம் , எலிக்குப் பிராண சங்கடம்...’
அட்வகேட்டுக்குத் தொழில்.
துரைக்குப் பிரச்சனை.
துரைக்கு சிரிப்பு வரவில்லை.
துக்கம் வந்தது.
மேலும் சொன்னார் அட்வகேட்.
“குந்துமணி விளைச்சல் கூட இல்லை’னு கோர்ட்டுல வாதாடுவார் டெனண்ட் தரப்பு வக்கீல்;
புயல், வெள்ளம், வரட்சி, வெட்டுக்கிளி, காத்து, கருப்பு, நோய் நொடின்னு காரணமும் சொல்வார்.
டெனண்ட் கூண்டுல ஏறுவான்.
மேஜிஸ்ட்ரேட் முன்னாலப் பிழியப் பிழிய அழுவான்;

“அஞ்சு வருஷமா வயித்துல ஈரத்துணி கட்டிண்டுதான் குடும்பம் முழுக்கச் சமாளிக்கறோம்னு கதறுவான்;
மொத்தக் கோர்ட்டுமேக் கண் கலங்கி நிக்கும்;
நான் என்னத்த உன் பக்கம் பேசறது...?”
நடைமுறையை, அனுபவத்தை ரசமாகச் சொன்னார் வக்கீல் வாதிராஜன்.
“இனிமே நீங்கதான் முடிவெடுக்கணும் மிஸ்டர் துரைராமன்.”
பந்தை துரைராமன் பக்கம் தள்ளிவிட்டார் அட்வகேட்.
*****-
“இப்படிச் செய்யலாமானு ஒரு யோசனை தோண்றது சார்....?”
“சொல்லுங்கோ! ஐடியா எஃப்பெக்டிவா இருந்தா, செயல்படுத்தலாம்...!”
“எல்லாத்தையும் வித்துட்டு, மெட்ராஸோட செட்டில் ஆகணும்னு உண்மையைச் சொல்லி கேஸாடலாமா சார்.”
“நல்ல ஐடியாத்தான். அதுக்குக் கேஸாடுவானேன். அவன் கேக்கறதை விட்டுக் குடுத்துட்டுக் காம்ப்ரமைஸாப் போயிடுமேன்...!”
“ஏன் அப்படிச் சொல்றேள்...?”
“நீங்கச் சொல்றாப்ல உண்மைமையைச் சொல்லிக் கேஸ் ஃபைல் பண்ணினா உடனே வெகேட் பண்ண ஆர்டர் கொடுத்துடுவா...... ஆனா...?”
“ஆனா... என்ன சார்...?”
“சிக்ஸ்டி. ஃபார்ட்டி 60:40 ரேஷியோ போட்டுத் தீர்ப்பாகும்.”
“டெனண்டுக்கு ஆறு பங்கும், ஓனருக்கு நாலு பங்கும் பிரிச்சிக் கொடுக்கும் கோர்ட்டு.”
“... ... ... ... ... ... ... ... ...”
“பார்ட்டி கொஞ்சம் ‘விடேன் கொடேன்’னு இருந்தா ஃபிப்டி ஃபிப்டினு முடிவாகும்.”
“அய்யய்யே....!”
“அதனாலத்தான் சொன்னேன். கிராமத்துல பஞ்சாயத்து வெச்சோ, நைச்சியமாப் பேசியோ, அகடவிகடம் பண்ணியோ, மேக்கரிச்சோ, ட்ரஸ்பாஸ் பண்ணியோ வெகேட் பண்ணினா, ஓரளவுக்கு விட்டுக் கொடுத்துட்டு மத்ததை பத்திக்கலாம்... இதுல கேஸாடற செலவாவது மிச்சமாகும் ஓய்...!”
“... ... ... ... ... ... ... ... ...”
சிறிது நேரம் அமைதியாய் யோசித்து மனதில் வாங்கினான். பிறகு வாய்திறந்தான்.
“நீங்க சொன்ன மாதிரி காம்ப்ரமைஸ்க்கு முயற்சி பண்றேன் சார்....?”
“பண்ணிப் பாருங்கோ... நூத்துக்கு தொண்ணூத்தொம்பது, ஓனருக்குத்தான் சாதகமா முடிஞ்சிருக்கு நான் பார்த்த வரைல..”
“சாட்சிக்காரனுக்கு ஆயிரமாயிரமாப் ஃபீஸ் அழறதைவிட, சண்டைக்காரனுக்கு சந்தோஷமாப் பிரிச்சிக் கொடுங்கோ...!”
*****-
அட்வகேட்டின் அட்வைஸை உடனடியாக நண்பன் ராமனாதனிடம் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் துரைக்கு.
அவன் கொடுத்த விசிட்டிங் கார்ட்டு எடுத்துப் பார்த்தான்.
மீர் பக்ஷி அலி தெருதான். நடந்து போனால் அரைமணி நேரமாகிவிடும்.
பஸ் ஏறினான்.

அட்வகேட்டிடம் பேசிய விஷயங்களையும், அவரின் யோசனையையும் ராமனாதனிடம் சொன்னான்.
காம்ப்ரமைஸ் ஐடியாவில் சிறிதும் சம்மதமில்லை ராமனாதனுக்கு.
“விவரமா நாளைக்குப் பேசுவோம். நாம கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். பிறகு வக்கீலையும் பாப்போம்.”
சொல்லி துரையை அனுப்பினான் ராமனாதன்.
*****-
“இன்னிக்கு இந்தியா ஆஸ்திரேலியா ஒன்டே மேட்ச். ரெண்டு பாஸ் கிடைச்சது எனக்கு.”
துரையைக் கண்டதும் சந்தோஷமாகச் சொன்னான் ராமனாதன்.
“சரி ராமனாதா, நீ போ. நான் நாளைக்கு உன்னைப் பாக்கறேன்...”
“ஏய்... துரை நாம ரெண்டுபேரும்தான் போறோம்.”

ஸ்டேடியத்தில் அதிகக் கூட்டமில்லாத பகுதியில் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.
கைத்தட்டலும், ஆரவாரமும், விசில் சத்தமுமாக கிரிக்கெட் ரசிகர்கள் பிஸியாக இருந்தார்கள்.
ராமனாதனும், துரைராமனும் நிறைய நிறையப் பேசினார்கள்.
மூன்று மணிக்கெல்லாம் ஸ்டேடியத்திலிருந்து வெளியேறி, அட்வகேட் வீட்டுக்கு வந்தார்கள்.
*****-
“கலியன்கிட்டே குத்தகைக்கு இருக்கற நிலத்துல லட்ச ரூபாய் செலவு பண்ணி செங்கல் காளவாப் போட கல்லறுத்து நஷ்டப்பட்டிருக்கான் சார் துரை..”
ராமனாதன் சொல்லும் செய்தி புதியதாக இருந்தது வக்கீல் வாதிராஜனுக்கு.
மிகக் கவனமாகக் காதில் வாங்கினார்.
“அடுப்புக் கட்டி அடுக்கிக் கொளுத்தறதுக்கு முன்னே போன மாசம் வந்த புயல் வெள்ளத்துல மொத்தமாக் கறைஞ்சி...!”
ராமனாதனை கையமர்த்தினார் வக்கீல். துரையிடம் சொன்னார்.
“மிஸ்டர் துரைராமன், நீங்க நடந்ததை நடந்தபடி சொல்லுங்க. ஏதாவது ஜோடிக்க முடியுமா பாப்போம்.”
வாதிராஜன் ஆர்வமானார்.
“அவன் சொன்னாப்பலதான் ஆயிடுச்சு. சுட்டு எடுக்கறதுக்குள்ளே, புயல் மழைல எல்லாம் கரைஞ்சி குண்டும் குழியுமா, மலையும் மடுவுமா கிடக்கு சார் காணி.”
“அடடே. ஸ்ட்ராங் எவிடன்ஸ் ஆச்சே இது.”
நல்ல பாயிண்ட் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி எழுந்தார் வாதிராஜன்.
“நான் கல்லறுத்ததுக்கும் கலியனுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நான் வேற ஆளுங்களை வெச்சித்தான் செஞ்சேன்.”
“நீங்க இல்லை ஓய். அவன்தான் செஞ்சான்...;
கோர்ட்டு கேசுனுன்னு வந்துட்டா, தர்ம ஞாயத்தையெல்லாம் எட்ட ஒதுக்கி வெச்சிரணும்...;
முதல் கட்டமா, குத்தகைதார் கலியன் பேர்ல ‘இன்ஜுரி’ ஜோடிப்போம்;
கிரிமினல் கேஸ் ஃபைல் பண்ணி, நஷ்ட ஈடு கேட்போம்.”
அதைத் தொடர்ந்து...; கிரிமினல் கோர்டுப் ப்ரொசிஜர், டிக்ரி, டைரக்ஷன் எல்லாத்தையும் ஆதாரமா வெச்சி, சிவில் கோர்ட்டுல சூட் ஃபைல் பண்ணிப் பூரா நெலத்தையும் திருப்பிடலாம்.”
கேஸ் ஜெயித்து டிக்ரி வாங்கி விட்டதைப் போல இருந்தது வாதிராஜனின் பேச்சு.
*****-
“இன்ஜூரின்னா...?”
கேட்டான் துரை.
அவன் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை அட்வகேட்.
“குத்தகைக்கு விட்டிருக்கறது சாகுபடி பண்றதுக்குதானே...?”
“ஆமாம்...”
“சாகுபடி பண்ணாம, கொட்டாய் கட்டிண்டு குடியிருக்கறது;
சிமிண்டு பைப்பு, ஜாலி ஒர்க்கு’னு எதாவது தொழில் பண்றது;
வேற ஒருத்தனுக்கு உள் குத்தகை விட்டுச் சம்பாதிக்கறது;
ஓனர் அனுமதி இல்லாம போர் எறக்கிப் பம்ப் செட்டு போடறது;
காளவா போடறது;
கண்காட்சி, பொருட்காட்சினு நடத்திச் சம்பாதிக்கறது;
இப்படி நிறைய காஸ் ஆஃப் இன்ஜூரீஸ் சொல்லியிருக்கா பீனல் கோட்ல...!”
‘லா’ படிக்கும் மாணவனுக்குப் பாடம் நடத்துவதுபோல எளிமையாகச் சட்ட நுணுக்கங்களைப் பேசினார் வாதிராஜன்.
“... ... ... ... ... ... ... ... ...”
தேர்வின்போது, படித்த பாடத்தை ரீகர்ஸல் செய்யும் மாணவன் போல அமைதியாக அனைத்தையும் அசைபோட்டான் துரை.
*****-
“அது சரீ... கலியன்கிட்டே குத்தகைக்கு இருக்கும்போது நீங்க எப்படிக் காளவாப் போட்டீங்க....? இடிக்குதே...!”
“காளவா போடணும்ன்னேன். உங்க வய நீங்க எதுனா செய்யுங்கனுட்டான்.”
“அப்ஜெக்ஷன் எதுவுமே சொல்லாம உடனே செரின்னு சொல்லிட்டானா...?”
“ஆமாம்.! கேட்ட அடுத்த நிமிஷம் சரினுட்டான்...!”
“மிஸ்டர் துரைராமன். உங்க டெனண்ட் ரொம்ப புத்திசாலித்தனமா காயை நகத்தியிருக்கான். காளவாப் போட உங்களை அனுமதிச்சதுக்கு ஏதாவது எழுத்து பூர்வமா ஆவணம் இருக்கா உங்ககிட்ட...?”
“அதெல்லாம் எதுவும் இல்லே. வாய் வார்த்தைதான்.”
“கல்லறுக்க எவ்ளோ செலவாச்சு...?”
“அதையேன் கேக்கறீங்க...! ஏகப்பட்ட நஷ்டம் சார்.”
“நீங்க இப்ப சொன்னதும்தான் தெரியுது. டெனண்ட், ‘சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கற’ திட்டத்தோட ஏதோ செஞ்சதாத் தெரியுது...”
“... ... ... ... ... ... ... ... ...”
சிறிது நேரம் அமைதியாக நகர்ந்தது.
*****-
“கவனமாக் கேட்டுக்கங்க துரை.”
தொடங்கினார் வாதிராஜன்.
“உங்க தகப்பனார் இறந்தபிறகு, நீங்க உங்கம்மாவோட மெட்ராஸ் வந்துடறீங்க.”
“இல்ல சார் அம்மா அங்கதான் இருக்காங்க...!”
குறுக்கிட்டான் துரை.
“குறுக்கப் பேசாம கேளுங்க மிஸ்டர் துரைராமன். நான் ஸ்கெட்ச் போடறேன்...!”
புரிந்தது துரைராமனுக்கு.
“ஓகே...! ஓகே...! சார்...!”
கவனமாகக் கேட்டான்.
“அம்மா மெட்ராஸ்ல உங்களோட செட்டிலாயிடறாங்க;
ஆறு மாசத்துக்கு ஒருமுறை கிராமத்துக்குப் போறீங்க;
வீடு, வாசல், தோப்பு, தொறவு எல்லாம் பாக்கறதும், பராமரிக்கறதும், குத்தகைக் கணக்குத் தீக்கறதும் உங்க ஷெட்யூல்;
அப்படி ஒரு சமயம் ரெகுலர் விசிட் போனப்போதான் உங்க வயல்ல பயிர்ச் சாகுபடி செய்யறதுக்குப் பதிலாக் காளவாய்க்குக் கல் அறுத்து நிலத்தைப் பாழடிச்சிட்டதைப் பாக்கறீங்க...;
அதிர்ச்சி ஆயிடறீங்க...
........................;
இப்படிக் கேஸ் ஜோடிச்சிடுவோம்;
ஊர்ல ரெண்டு பேரை சாட்சி போடச்சொல்லுங்க;
ஃபைல் பண்ணிருவோம்;
விள்ளல் விரிசல் இல்லாம எல்லாத்தையும் திருப்பிருவோம்;
டெனண்ட்டுக்கு ஒரு அங்குலம் விட்டுத் தரவேண்டியதில்லே...!”
துருப்புச் சீட்டு கிடைத்தததைப் போல இருந்தது துரைராமனுக்கு.
*****-
‘யாரைச் சாட்சி போடலாம்...!’
யோசித்தான்.
“மிஸ்டர் துரைராமன், ஒரு விஷயம்...! ரெண்டாம் பேருக்குத் தெரியாமக் கமுக்கமா ஜோடிக்கணும். ஞாபகம் வெச்சிக்கோங்க;
வக்கீல் நோட்டீஸ் அவன் கைக்குப் போய் சேருகிற வரைக்கும் விஷயம் அவனுக்குத் தெரியக்கூடாது;
ஜோடிக்கற விஷயம் அவனுக்குத் தெரிஞ்சிதோ அநத்தம்தான்...!”
“அப்படித் தெரிஞ்சிட்டா...?”
“என்கிட்டேக் குத்தகைக்கு விட்டுட்டு, ட்ரஸ்பாஸ் பண்ணி கல்லறுத்து நஷ்டம் உண்டாக்கிட்டார்’னு உங்க மேலே கேஸை திருப்பிடுவான்;
ட்ரஸ்பாஸ் பண்ணின கிரிமினல் குற்றத்துக்காக. நீங்க கடுமையான அபராதம் கட்டறமாதிரி ஆயிடும்.”
என்ன செய்வது ஏது செய்வது எனக் குழம்பிப் போயிருந்த துரைராமனின் குழப்பத்தை அவன் முகம் பிரதிபலித்தது.
“ரொம்ப கன்ஃபியூஸ் பண்ணிக்காதீங்க துரைராமன். எல்லாம் நல்லா நடக்கும்... வாங்கோ...!”
வழியனுப்பினார் வாதிராஜன்.
“நாயுடுகாரு, பாக உன்னாரா...?”
கேட்டபடியே அடுத்த கிளையண்ட் உள்ளே வந்தார்.
ஃபீஸ் தருவதற்காக பர்ஸை எடுத்தான் துரைராமன்.
“இப்போ எதுவும் தரவேண்டாம். பிற்பாடு பாத்துப்போம். உங்க ஆபீஸ் அக்கவுண்டண்ட் விஜயராகவலுகிட்டே அடுத்த மாச ஹியரிங்ல அநேகமா தள்ளுபடியாயிரும்னு சொல்லுங்க. அவருக்கு விவரம் புரியும்...”
கைக் கூப்பினார்.
*****-
பொங்கலுக்குப் போயிட்டு வரும்போது அத்தையை இங்கே அழைச்சிண்டு வந்துடணும்நா...”
கிராமத்துக்குக் கிளம்புவதற்காக துணிமணிகளையெல்லாம் ‘பேக்’ செய்து கொண்டே சொன்னாள் மோகனா.
“போனமாசமே என்னோட வந்துடுனு கம்பல் பண்ணினேன் அம்மாவை. பொங்கலுக்கு வருவியோன்னோ அப்போ பேசிக்கலாம்னு அப்போதைக்குத் தள்ளிப் போட்டுட்டா அம்மா;
அதைச் சொல்லியே இந்த முறை அம்மாவை அழைச்சிண்டு வந்துடுவோம் மோகனா.”
“அதுதான் சரி. அப்படித்தான் மடக்கி இழுந்துண்டு வந்துடணும்...!”
“போன மாசம் உடம்புக்குச் சரியில்லாம படுத்த படுக்கையாக் கிடந்து பொழைப்பமா’னு அவஸ்தைப் பட்டு மறு ஜன்ம்மா தப்பிச்சப் பிறகும், நம்ம கூட வந்து இருக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறாளே அத்தை...!”
“இந்த முறை விடப்படாது. வலுக்கட்டாயமா இழுந்துண்டு வந்துரணும்...”
துரைராமனின் வார்த்தைகளில் உறுதி இருந்தது.
*****-
சென்றமாதம் அம்மாவுக்கு உடல் நலமில்லை என்று தந்தி வந்தது.
பரபரப்புடன் கிளம்பிப்போனான் துரை.
அம்மா, படுத்தப் படுக்கையாகக் கிடந்தாள்.
துரை போன போது டாக்டர் அருணகிரி குந்தலாம்பாளுக்குச் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

தனியாக டாக்டரிடம் அம்மாவின் நிலையைக் கேட்டான் துரை.
“துரை...! ஏற்கெனவே ஒரு தடவை இப்படி ஸிம்டம்ஸ் இருந்துதுன்னு சொல்றா உங்கம்மா;
அம்மா சொல்றதை வெச்சிப் பார்த்தா இது இரண்டாவது அட்டாக்கா இருக்கும்னு தோணுது;
மருத்து மாத்திரை கொடுத்திருக்கேன். அம்மாவை டென்ஷன் இல்லாமப் பாத்துக்கணும்.”
கரிசனத்தோடு சொன்னார்.
துரைராமன் எவ்வளவு சொன்னபோதும், குந்தலாம்பாள் அவனோடு சென்னைக்குச் செல்ல உறுதியாக மறுத்துவிட்டாள்.
“அம்மா...! இப்படிப் பிடிவாதம் பண்ணினா என்ன பண்றது. இங்கேயே இரு வேண்டாங்கலே. வேளாவேளைக்கு ஏதாவது வயித்துக்குப் போட்டுண்டு ராமா கிருஷ்ணானு இருந்து ரெஸ்ட் எடுத்துண்டாத் தேவலை...!”
நொந்துகொண்டான் துரை.
“... ... ... ... ... ... ... ... ...”
குந்தலாம்பாள் எதுவும் பேசவில்லை.
“குத்தகைக்கு விட்டுட்டு, ஏதோ சொந்த சாகுபடி பண்றமாதிரி வயலுக்கும் வாய்க்காலுக்கும் அலைஞ்சி திரிஞ்சிண்டு உடம்பைப் போட்டு இப்படிப் பாழடிச்சிக்கறியேம்மா..;
அதனாலத்தான் சொல்றேன். என் கூட மெட்ராஸ் வான்னு...!”
“பொங்கலுக்கு வரயோன்னோ...?”
பேச்சை மாற்றினாள் குந்தலாம்பாள்.
‘இப்போது மேலே மேலே வற்புறுத்த வேண்டாம். பொங்கலுக்கு வரும்போது பார்த்துக் கொள்வோம்...!’
முடிவெடுத்தான் துரைராமன்.
*****-
போகிப்பொங்கல்.
அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த போகி ஸ்பெஷல் கதம்ப சாம்பார் வீடு முழுதும் கம்மென்ற மணம் பரப்பியது.
மோகனா சமையலறையில் வளைய வந்து கொண்டிருந்தாள்.
“பொங்கல் முடிஞ்சதும், எங்களோட மெட்ராஸ் வந்துடுங்கோ அத்தை...”
மெதுவாகப் பேச்சுக் கொடுத்தாள் மோகனா.
“அதுக்கென்ன... வந்தாப் போச்சு...!”
“இங்கே ஏன் அத்தே நீங்க ஒண்டியாக் கிடந்து திண்டாடணும்... மெட்ராஸ்ல வந்து எங்களோடயே இருக்கணும் நீங்க...!”
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல துரைராமன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே மனப்பாடச் செய்யுள் போல அடி பிறழாமல் ஒப்பித்தாள் மோகனா.
“மெட்ராஸ் வாசம் எனக்கு ஒவ்வாது. வேணா பத்து நாள் இருந்துட்டு வரலாம். புறாக்கூண்டு மாதிரி ஜாகை எனக்கு சரிவராது மோகனா...!”
அம்மா மோகனாவிடம் பேசியதைக் காதில் வாங்கியபடியே வந்தான் துரை.
“புறாக்கூண்டு போல உள்ள ஜாகையை நாம நினைச்சா மாத்திடலாம்...!”
“... ... ... ... ... ... ... ... ...”
‘துரை என்ன சொல்லவருகிறான்...!’
குழப்பமாய்ப் பார்த்தாள் குந்தலாம்பாள்.
“இங்கே இருக்கற சொத்துப் பத்து எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணிட்டு, மெட்ராஸ்ல ப்ளாட் வாங்கி பங்களா கட்டிண்டு இருக்கலாமே...!”
நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரம் உட்புகுந்து பேசும்போது, அவசியமில்லாத கதா பாத்திரம் ‘ஏதோ அவசர வேலையாய், அந்த இடத்தை விட்டு இயல்பாக நழுவமே’;
அதுபோல, துரை வந்ததும், மோகனா அங்கிருந்து நழுவினாள்.
“... ... ... ... ... ... ... ... ...”
குந்தலாம்பாள் பதில் ஏதும் பேசவில்லை.
‘கலியன் ஏன் இன்னும் வரலை...? போகி பண்டிகை நாள்ல ‘டாண்’னு ஆறு ஆறரைக்கெல்லாம் வந்து நிப்பானே. அவன் உடம்புக்கு ஏதும் சரியில்லாம இருக்கானா...?’
குந்தலாம்பாள் மனசு முழுக்க கலியனைச் சுற்றியே இருந்தது.
துரைராமனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. அம்மா தன் கருத்தை ஆதரித்தும் பேசாமல், எதிர்க்கவும் செய்யாமல், மய்யமாக ஏதேனும் கருத்தும் சொல்லாமல், அமைதி காத்ததால் அடுத்து என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்பது தெரியாமல் தவித்தான் துரைராமன்.
“துரை. சமையல் ரெடி.” என்றாள் குந்தலாம்பாள்.
தொடர்ந்து “கலியன் வரக்காணோமே...? வழக்கமா போகிப் பண்டிகையண்ணிக்கு கருக்கல்லயே வந்து ‘உலுப்பை’ வைப்பான். “மாடு கன்’ குளிப்பாட்டுவான். உடம்புக்கு ஏதும் முடியாம இருக்கானோ...?”
சொல்லிக்கொண்டே சமையல் ஐட்டங்களை பங்கிடாக பட்டகசாலையில் வைத்தாள்.
அந்த நேரத்தில் உள்ளே வந்த மோகனா, இலை போட்டு தண்ணீர் வைத்து சாப்பிடுவதற்காக ஆயத்தம் செய்ய வந்தாள்.
“இதை நான் பாத்துக்கறேன் மோகனா, நீ ரஞ்சனியை ரெடிபண்ணி அழைச்சிண்டு வா, போ.”
“சரி அத்தை..”
கலியனைப் பற்றிப் பேச இதுதான் சரியான சமயமாகத் தோன்றியது துரைராமனுக்கு.
“அம்மா... நான் சொல்றேன்னு நினைக்காதே. கலியனுக்கு நீ ரொம்பத்தான் இடம் தரே. கலியன் உடம்புக்கு எந்த நோவும் இல்லே. நல்லாத்தான் இருக்கான். நேத்துச் சாயந்தரம் கூட அவனை சாலைக்கரை டீக்கடைல பாத்தேனே நான்.”
“நேத்து நல்லா இருந்திருக்கலாம். இன்னிக்கு தலைவலி, வயித்து வலி வந்திருக்கலாமில்லையா...? அப்படியெல்லாம் சொல்லாதே...!”
வெடுக்கென்று சொன்னாள்.
‘கலியனுக்குத் தூது விட்டதையும், தூது போனவனிடம் கலியன் சொன்னவைகளையும், சொன்னால் அம்மா நம்மப்போவதில்லை...’
என்பதை உணர்ந்தான் துரை.
“அம்மா...! நீ நம்பற அளவுக்கு அவன் விசுவாசமானவன் இல்லேம்மா...!” என்றான்.
“அதை விடு. இப்போ சாப்பிட வா. ரஞ்சனி எவ்ளோ சமத்தா சாப்பிட வந்துட்டாப்பாரு...!”
பட்டுப் பாவாடையுடன், கொலுசு கலகலக்க ரஞ்சனியின் குறும்புகளும், மழலையும் சுவை கூட்ட, போகி விருந்துக் களைக் கட்டியது.
சாப்பிட்டு, தாம்பூலம் தரித்து, ஊஞ்சல் பலகையில் வந்து உட்கார்ந்த நேரத்தில் கலியன் வந்து நின்றான்.
*****-
“வாடாப்பா, கலியா. இப்போதான் பொழுது விடிஞ்சிதா உனக்கு...?”
ஈரக் கையைத் இடுப்பில் செருகிய துண்டில் துடைத்தபடியே இயல்பாகவும், உரிமையோடும் கேட்டுக்கொண்டே வந்தாள் குந்தலாம்பாள்.
கலியன் கண் கலங்கினான்.
“ஏண்டா கலியா, உடம்புக்கு ஏதும் சுகமில்லையா... மூஞ்சியே சரியில்லையே உனக்கு...?”
“அம்மா அய்யா என் கனவுல வந்தாரும்மா...!”
தான் கண்ட கனவையும், அதைத் தொடர்ந்து அவன் செய்த காரியத்தையும் சொன்னான்.
சிதை பிரித்து எடுத்த மாதய்யாவின் நகத்துண்டுகள், தலை முடி, அவரது வேட்டியிலிருந்து உருவியெடுத்த நூல் அனைத்தையும் தாயத்துக்குள் வைத்து, அய்யாவின் அரணாக் கொடியைத் தாயத்தில் நுழைத்து, அதைக் கழுத்தில் மாட்டியிருந்த கலியனைப் பார்த்து, குந்தலாம்பாளின் கண்கள் கலங்கின.
மேலும், துரைராமன் தனக்கு தூது விட்ட விபரத்தையும், அதற்கு அவன் சொன்ன பதிலையும் கூடச் சுருக்கமாகச் சொன்னான் கலியன்.
“நீ சொன்னதுதான் சரி கலியா…! நீ இதுப் போலவே கடைசீ வரைக்கும் இரு. கொஞ்சம் கூட இறங்கி வராதே. நான் இருகேன்னு பார்க்காதே...!”
கலியனுக்கு நம்பிக்கையளித்தாள்.
“துரை உன் கிட்டே நேரடியாப் பேசணும்னு சொல்லிண்டிருந்தான். அவனை அழைக்கறேன். கொஞ்சம் கூட பணிவு காட்டாம காட்டமாவேப் பேசு...!”
தைரியம் அளித்தாள்.
“இன்னொண்ணும் சொல்றேன் கலியா. நான் துரைராமனுக்கு சாதகமாத்தான் பேசுவேன். நான் உன்னண்ட எது பேசினாலும் என்னையும் எதிர்த்துப் பேசு. என்னடா அம்மாவை இப்படிப் பேசறோமேனு கவலையேப்படாதே...! சட்டமாப் பேசு...!”
ஊக்கமளித்தாள்.
“அய்யாவோட ஆசைக்காக, அவர் ஆன்மா சாந்தியடைய நான் எது வேணா செய்வேன்மா...!”
கலியன் சொன்னபோது அவன் வலது கை கழுத்தில் தொங்கிய தாயத்தை பக்தியோடு பிடித்துக்கொண்டிருந்தது.
*****-
“கலியா, சாப்பாடு போடறேன் சாப்பிடறயா...?”
பலமாகக் கேட்டாள் குந்தலாம்பாள்.
காமரா உள்ளில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த துரைராமன் காதுகளில் குந்தலாம்பாள் கலியனுக்கு செய்யும் உபசார வார்த்தைகள் காதில் விழுந்தன.
எழுந்து பட்டகசாலைக்கு வந்தான்.
ஊஞ்சலில் அமர்ந்தான்.
அவனாகச் சென்று கலியனிடம் பேசப் பிடிக்கவில்லை துரைக்கு.
‘அம்மா அழைத்தால் போய்ப்பேசலாம்...!’
கலியன் வந்தது தெரியாதது போல இயல்பாக, ஊஞ்சலாடியபடி உட்கார்ந்திருந்தான் துரை.

அவன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
அம்மா அழைத்தாள்.
துரை அங்கேச் சென்றான்.
“கலியனுக்கு உடப்புக்கு சரியில்லையாம்;
பூசாரிக்கிட்டேப் போயி தாயத்து கட்டிக்கிட்டு வந்தானாம்... வாயேன்...”
குழந்தையை ஏற்கனவே கிள்ளி விட்ட குந்தலாம்பாள், இப்போது தொட்டிலையும் ஆட்டினாள்.
கலியனையும் துரையையும் பூட்டிவிட்டுவிட்டு, ஏதோ அவசரமான காரியம் இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு உள்ளே சென்றும் விட்டாள்.
“... ... ... ... ... ... ... ... ...”
கலியனும், துரையும் ஏதும் பேசிக்கொள்ளாமல் ஒரு அமைதி அந்த இடத்தை ஆக்ரமித்திருந்தது.
ஜல்லிக்கட்டுக் காளையாய் கூராய் கொம்பு சீவிக்கொண்டு பாய்ச்சலுக்குத் தயாராய் நின்றான் துரைராமன்.
அதை எப்படி அடக்க வேண்டும் என்று நோக்கம் பார்த்தபடி காளையை அடக்கும் வீரனாய்க் காத்திருந்தான் கலியன்.