“வெண்கலப்பானையிலிருந்து அன்னவெட்டியின் முனையில் சாதம் எடுத்துத் தட்டில் வைத்தாள் குந்தலாம்பாள்.
அதன் மேல் நன்கு மலந்து வெந்த ஒரு ஸ்பூன் பருப்பு, அரை ஸ்பூன் நெய் வார்த்தாள்.
சூடான அன்னத்தில் பருப்பும் நெய்யும் கலந்து கலவையான நறுமணத்தை பரப்பியது.
இரண்டு மூன்று முறை அன்னவெட்டியால், சூடு குறையும் வரை கிளறிவிட்டாள்.
வலது கையை மடக்கிச் சற்றே மேலே தூக்கி கிலுகிலுப்பை ஆட்டுவது போல் ஆட்டியபோது, கை வளையல்கள் சிணுங்கியபடி மேலேறின.
இடது கையால் வலது கை மணிக்கட்டிலிருந்து உருவி விடுவதுபோல் இறக்கி குலுக்கலில் மேலேறிய வளையல்களை மீண்டும் இறங்கவிடாமல் இறுக்கிவிட்டாள்.
கொசுவத்தை ஏற்றிச் செருகிக்கொண்டாள்
கை பொறுக்கும் சூடு வரும் வரை, வலது விரல்கள் அனைத்தையும் குவித்துக்கொண்டு பிரட்டுவதுபோல் தொடங்கி, தொடர்ந்து பிசைந்தாள்.
கையில் ஒட்டிக் கொண்டிருந்த பருப்புச் சாதத் துகள்களை கட்டைவிரலால் முன்னும் பின்னுமாய்த் தள்ளிக் குதித்து, தட்டின் விளிம்பில் கைகளை உரசினாள்.
ஆள்காட்டி விரலால் விளிம்பில் உரசிய விழுதை எடுத்து நடுவில் போட்டாள்.
பொறியல் வாட்டிய வானலியில் தண்ணீர் விழுமாறு கை அலம்பிக்கொண்டாள்.
தண்ணீர் சிக்கனத்தோடு, பொறுக்குகளும், தீசல்களும் நன்கு ஊறி சுலபமாகப் பாத்திரம் தேய்க்க மாமியார் சொல்லிக்கொடுத்த உத்தி இது.
பிடி துணியால் அழுத்தமாக விரல் விரலாய் விட்டுத் துடைத்துக்கொண்டாள்.
இடது கையில் பஞ்சபாத்ரத்தில் தீர்த்தமும், வலது கையில் அன்னத் தட்டு நிவேதனத்துடனும் சென்றாள்.
துளசிமாடத்தின் முன் நீர் தெளித்துத் துடைத்தாள்.
அருகில் இருக்கும் முக்கோண மாடப் பிரையில் தயாராக இருந்த, கோலமாவு எடுத்துக் கோலமிட்டுச், செம்மண் தீற்றினாள்.
திரியை அளவாய்ப் போட்டு, முத்துப் போல் தீபத்தை ஒளிரச் செய்தாள்.
மாடத்தின் முன் வழக்கம்போல் நெளியமுதை வைத்துக் குனிந்து பாங்காய், பவ்யமாய், பக்தியாய்... நிவேதனம் செய்த அந்த விநயம்,

‘வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்னோய் இது தெய்வத் தன்னந்துழாய்த்
தாராயினும் தழையாயினும் தண்கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே..’
என்ற நம்மாழ்வாரின் முதல் ப்ரபந்தத் திருவிருத்தத்தின் 53 வது பாடல் போற்றும் துளசி (திருத்துழாயின்) மகிமைக்கு மேலும் மகிமை கூட்டியது.
படைத்த அன்னத்தை வழக்கமான இடத்தில் வைத்து, இரண்டு கைகளாலும் வாய்க்கு ‘லகான் போட்டவாறு’ “கா...! கா...! கா...!” என்று வானத்தை நோக்கிக் குரல் கொடுத்தாள்.
தும்பைப்பூப்போல வெண்மையான, பஞ்சு போல் மிருதுவான, பழகிய பழைய பச்சரிசிச் சோறு... ‘கம்...’மென்ற அதன் நறுமணத்தை மேலும் சோபிக்கச் செய்யும் சூடான சாம்பார், ரசம், துவையல்... என தலை வாழையிலையை அலங்கரித்தன.
The Importance of Being Earnest என்ற Oscar wild ன் நாடகத்தில் Algernon என்ற கதாபாத்திரம் Aunt Augusta என்ற கதாபாத்திரத்திற்குப் பிடித்தமான Cucumber Sandwitches ஐ தயார் செய்வதைப்போல...
வெள்ளரிப் பிஞ்சை வறுவல் கட்டையில் வட்ட வட்டமாய்ச் சீவி, உப்பு மிளகுத்தூள் தூவி, பார்த்துப் பார்த்து, வெகு சிரத்தையாக, கவனமாக, அன்பாக, ஆசையாக.... குந்தலாம்பாள் மாதய்யாவுக்காகத் தயார் செய்த வெள்ளரிக்காய் விள்ளல்களைப் பார்த்தபோது...

ஆடி அமாவாசையன்று கடலாடி தர்ப்பணம் கொடுத்த கர்த்தாக்கள் எள்ளும் தண்ணீரும் விட்டு மணலில் போட்ட பல்வேறு மதிப்புள்ள சில்லரைக் காசுகளை கிண்ணத்தில் போட்டாற்போல இருந்தது.
‘ஆவி அன்ன அவிர் நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் உடீஇ,
கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை
வல்லோன் அட்ட பல்ஊன் கொழுங்குறை,
அரிசெத்து உணங்கிய பெருங்செந் நெல்லின்
தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுங்கல்
அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும்...’
என்ற பெரும்பாணாற்றுப்படை 469 – 495 வரை ஆவி பரக்கும் அன்னத்தின் அழகைப் பற்றிய வர்ணணைக்கு ஒப்ப...
நட்ட நடுவில் கம்பீரமாக ஆவி எழுப்பியபடி அமர்ந்திருக்கும் பழகின பழைய பச்சரிசிச் சாதம், பிரதானப் பாடகரைப் போன்றும்,
அதைச் சுற்றி, பக்க வாத்தியங்களாய் காய், கூட்டு, பொறியல், வறுவல், சாண்ட்விட்ச் என விதவிதமான வெஞ்ஜனங்கள் (சைடு டிஷ்ஷஸ்).
தளிகை என்பது, பண்டங்களையும், பதார்த்தங்களையும், பக்குவத்தையும் பொறுத்து மட்டும் அமைவதில்லை. சமையல் செய்வோரின் கைமணத்தைப் பொறுத்தும் அமைகிறது.
குந்தலாம்பாளுக்கு கை மணம் நிரம்ப உண்டு. அவள் சமையல் மட்டும் அல்ல, சமையல்கட்டும் கூடப் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும். துடைத்து வைத்தாற்போல அத்தனை சுத்தம், அத்தனை பாங்கு... அத்தனை நறுவிசு.
இத்தனைக்கும் மாமியார் இருந்தவரை குந்தலாம்பாளை சமையல் வேலைக்கு அனுமதித்ததே இல்லை.
‘பெண்டாட்டி சமையலைச் சாப்பிட்டு, அதன் ருசியில் மயங்கி அம்மாவை ஓரம்கட்டிவிட்டு, பெற்ற மகன், பெண்டாட்டிதாசன் ஆகிவிடுவானோ...?’ என்ற மாமியார் சமூகத்திற்கே இருக்கும் குணம் குந்தலாம்பாளின் மாமியாருக்கும் இருந்தது.
குந்தலாம்பாளை சுற்று வேலைகளுக்கு மட்டும்தான் அனுமதிப்பாள். இன்னும் சொல்லப் போனால் சமையல் செய்யும்போது பார்க்கக் கூட விடமாட்டாள்.
அது மட்டுமா...? குந்தலாம்பாள் எவ்வளவு நேர்த்தியாக சமையற்கட்டை கண்ணாடி போல சுத்தமாக வைத்திருந்தாலும் ‘இது சொட்டை, இது சொள்ளை...’ என்று ஏதேனும் குறை கண்டுபிடித்துக்கொண்டேதான் இருப்பார் அவர்.
மாமியார் காலமான பின்னர்தான் தளிகை செய்ய அடுப்படிக்கே வந்தாள் குந்தலாம்பாள்.
எத்தனை வருடங்கள்தான் தொடாமல் இருந்தாலும் ஒரு தேர்ந்த கலைஞன் வாத்தியத்தை தொட்டு வாசிக்க ஆரம்பித்துவிட்டால் ஒரு சில மீட்டல்களிலேயே கலையானது புதுப்பொலிவுடன் துலங்க ஆரம்பித்துவிடுமல்லவா...!
குந்தலாம்பாளின் பிறந்தகம் ஒரு பெரிய சம்சாரக் குடும்பம். இவள் தமக்கைகளின் சம்பந்திமார்கள் அடிக்கடி வருவதும், ஓரிரு நாட்கள் தங்குவதுமாக அமர்க்களப்படும் வீடு. வருஷத்தில் பாதி நாளுக்கு மேல் வீட்டில் தேர் கூட்டம் திருவிழாக் கூட்டம்தான்.
குறிப்பாக தசரா விடுமுறையில் நவராத்திரி ஒன்பது நாட்களும் வீடு நிறைந்து, கோலாகலமாக இருக்கும்.

மானம் பார்த்த சிவகங்கைச் சீமையில் ஏகப்பட்ட நிலைபுலங்களோடு மிராசாய் நிர்வாகம் செய்துகொண்டிருந்த அப்பாவுக்கு உதவியாக வயல்வெளிகளையும் கவனித்துக்கொண்டு, வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாய் சமையலையும் கவனித்துக் கொண்டு பம்பரமாய்ச் சுழன்றுச் சுழன்று நிர்வாகம் பண்ணினவள்தான் இந்தக் குந்தலாம்பாள்.
“பவதி பிட்சாந்தேஹி...!” என்று வந்து நின்றான் வேதபாடசாலை வித்யார்த்தி சுப்ரணியன்.
முப்பது நாற்பது பேர் படித்த வேத பாடசாலை. இப்போது பாழ் மனையாய்க் கிடக்கிறது.
வேதம் ஓதுதல் ஓதுவித்தலை, வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, வேத வேதாங்களின் சிறப்புக்கு மதிப்பளித்துத் தன்னை நாடி வரும் வித்யார்த்திகளுக்கு தன் வீட்டிலேயே வைத்து வேதம் ஓதுவிக்கிறார் வேதவித்து மாதவ கனபாடிகள்.
பாடசாலைக்கு ஏகப்பட்ட நிலபுலங்கள் இருந்தாலும் ஒரு குந்துமணி நெல் கூட குத்தகை என வருவதில்லை அதற்கு.
தன்வீட்டில் சாப்பாடு போட்டு வேதம் கற்றுத் தருமளவிற்கு வசதியும் இல்லை கனபாடிகளுக்கு...
பிரும்மச்சாரிகள் மாதூரம் (பிக்ஷை) எடுத்துத்தான் சாப்பிடவேண்டும் என்று சொல்கிறது தர்ம சாஸ்த்ரம்.
பிரம்மோபதேசத்தின் போதே, பிச்சைப் பாத்திரம் கொடுக்கப்பட்டு, ஆசீர்வாதம் செய்ய வருவோர் பிச்சை அரிசி கொண்டு வருவார்கள். இதெல்லாம் இப்போது சாங்கியமாய் மட்டும் பார்க்கப்படுகிறது.
‘பதவி பிக்ஷாம்தேஹி’ என்ற பாடசாலை வித்யார்த்தி சுப்ரமணியன் குரல் கொடுத்தான்.
முதல் குரலுக்கே குந்தலாம்பாள், சுடச்சுட ஆவி பறக்கும் அன்னத்தோடு பட்டகசாலைக்கு விரைந்தாள்.
இன்னொரு தூக்கில், பூசனிக்காய் சாம்பார் ஊற்றினாள்.
மாதூர பிக்ஷையோடு திரும்பிச் சென்றான் சுப்ரமணியன்..
வாசல் சாரமனையில் அமர்ந்திருந்த மாதய்யாவுக்கு மனசு வெறுமையாய் அலைபாய்ந்தது.
‘ரெண்டு வேலி விளைச்சல் அருப்பு, போரடி எல்லாம் முடிந்து கண்டுமுதல் வீட்டுக்கு வந்தாச்சு. சொச்ச அறுவடைக்கு ஆள் சொல்லி வைத்திருந்தான் தொப்ளான். அவனும் போய்ச் சேர்ந்துட்டான். அடுத்தப் பாட்டம் அறுவடை நல்லபடியா முடிஞ்சாகணும். தன்னால அப்பனுக்கு கடுகத்தனை ஒத்தாசையில்லைன்னாலும், கழுதைக்கு மூக்குல வேர்க்கறமாதிரி, பணம் கேட்டு ஆள் அனுப்பறான்...!’ என்று துரையின் போக்கைப் பற்றி தனக்குத் தானே நொந்து கொண்டார்.
‘என்னமோ... நெல்லு ஆகாசத்துலேர்ந்து நேரிடையா கொட்டறதா நினைப்பு அவனுக்கு. வயக்காட்டுக்கும் களத்து மேட்டுக்கும் வெய்யல், மழை, காத்து, குளிர்னு பார்க்காம அலைஞ்சி உடம்பை வருத்திண்டு உழைச்சா வலி தெரியும். வருத்தம் தெரியும்...

பொறுப்பத்தப் பிள்ளை. இங்கிதம் தெரியாத பிள்ளை... ம்...! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்... நாம வாங்கி வந்த வரம் இதுதான் போல...!’ என்று மனசு கனத்து காய்ந்துகொண்டிருக்கும் நேரத்தில்...
“அய்யா...!” என்ற குரல் கேட்டு தலைநிமிர்ந்து பார்த்தார்..
கனவா...! நனவா...! எனத் தெரியவில்லை. கண்ணை நன்றாக விரித்துக்கொண்டு பார்த்தார். ஆம்... எதிரில் கலியன் மொட்டைத் தலையுடன் நின்றிருந்தான்.
“கலியா....”
“கும்பிடறேனுங்கய்யா...!”
“இன்னிக்கு.....த்தானே அப்ப....னுக்குப் பால்......தெளி.......?”
“ஆமாங்கய்யா...! அது முடிச்சிதான் கிளம்பியாரேன்...”
“............”
“பால் தெளியும் அதுவுமா, ஏண்டா வந்தேன்னு கேக்க நினைக்கறீங்களாய்யா...?”
“அதான்.... நெனச்சேன்....ஏதாவது காசு...! பணம்....!”
“காசு பணத்துக்காக வரலைங்க... அடுத்த பாட்டம் அறுப்புக்கு நாளு பாத்து வெச்சது..., நாளைக்குத்தானே...! அதான், அறுவடைய தொடங்கிரலாமானு கேக்க வந்தேன்...!” என்றான் கலியன் சர்வ சாதாரணமாக.
“அதுக்கென்னடா இப்ப..., கருமாதி கழிச்சி வெச்சிக்கிட்டாப் போச்சு...”
“ஏன்..? இப்போ நான் வந்தா ஆச்சாரம் கொறையுங்களா...?” கலியனின் குரலில் அறியாமை இருந்தது.
“ஏண்டா... நானா ஆச்சாரம் பார்க்கறவன்...! அப்பன் செத்த துக்கத்துல இருக்கியே... ன்னு சொன்னா.... ஆச்சாரம் பூச்சாரம்னு சொல்றியே...!” உரத்த குரலில் அதட்டினார் மாதய்யா.
இப்படிப்பட்ட அதட்டலை எதிரில் நின்று கேட்பது இதுதான் முதல் அனுபவம் கலியனுக்கு. அப்பாவிடம் இப்படித்தான் சத்தம் போடுவார். அப்பாவும் தலைகுனிந்தபடி அமைதியாக நிற்பார்.
கலியனும் அமைதியாகத் நின்றான்.
‘அப்பன் செத்த மறுநாள், பால் தெளியன்றே பொறுப்பாக வந்து நிற்கும் கலியனின் கடமை உணர்வைப் புரிந்துகொள்ளாமல்., இப்படித் தாறுமாறாகப் பேசிவிட்டோமே...!’ என்று கழிவிரக்கத்தில் கலங்கினார் மாதய்யா.
“கலியா... காரியத்துக்கு எவ்ளோ செலவாச்சுது...?”- பேச்சை திசை திருப்பினார்.
“பானைல அப்பாரு போட்டு வெச்சிருந்த பணம் நீங்கலா ‘பங்காளிவ...மொறை’க்கு போட்டடிச்சுக் செஞ்சிட்டானுவ... கைப்பிடிப்போ கடனோ இல்லீங்க...”
“ஒப்பனைப் போலவே இருக்கியே நீயும். அவனும் இப்படித்தான். பணம் காசு வேணுமான்னு கேட்டா வேண்டாம்கற மாதிரிதான் பதில் சொல்லுவான். பாவம் இன்னும் கொஞ்ச காலம் உசிரோட இருந்திருக்கலாம்...” மாதய்யாவின் கண்கள் பனித்தன.
“நாளைக்கு அறுப்புக்கு ஆளு விட்றலாமுங்களா...?”
“கருமாதி வரைக்கும் வீட்டுலயே இரு... அப்பறம் பாத்துக்கலாம்...”
“வூட்ல மோட்டுவளையப் பாத்துக்கிட்டு குந்திக் கிடக்கப் போறேன். அதுக்கு பதிலா வேலைல கவனத்தைச் செலுத்தினா வேலையும் ஆவும், பொளுதும் நல்லாப் போவும்....”
கலியன் சொல்வதில் நியாயம் இருப்பதாகப் பட்டது மாதய்யாவுக்கு.
“சரி...! செய்யி...!” என்று உத்தரவு கொடுத்துவிட்டார்.
மாட்டுத் தொழுவம் சென்று, போரிலிருந்து வைக்கோல் இழுத்து கவணைக்குள் அடைத்துவிட்டு வந்த கலியன். “அப்ப... நான் போட்டுங்களாய்யா...?” என்று கேட்டான்.
தலையசைத்தார் மாதய்யா.
“விடிகருக்கல்ல ஆளு படைகளோட காணிக்கு வந்துடறேன்யா...!
“................”
எந்தக் காணீல தொடங்கலாம்...? எத்தினி ஆளுங்க...? ன்னு சொல்லுங்கய்யா...?”
கலியனின் விநயம் மாதய்யாவுக்குப் பிடித்திருந்தது... புன்முறுவல் பூத்தார்.
“எங்கப்பாரு மாதிரியே நானும் செய்யப் பார்க்கறேன்...! எனக்கு அனுபவம் குறைச்ச...! எதுனா தப்புன்னா... இது... இப்படீன்னு கத்துக்கொடுங்க ‘கப்’புனு புடிச்சிக்கறேன்...!”
வார்த்தைக்கு வார்த்தை அப்பாவைச் சொல்லும் கலியனை நினைத்தபோது சற்றுப் பொறாமையாகக் கூட இருந்தது மாதய்யாவுக்கு.
பொறுப்பற்ற தன் மகனைப் பற்றிய நினைவுகள் வர அதை வலுக்கட்டாயமாக நினைவிலிருந்து அழித்துத் துடைத்து அப்பால் வீசினார்...
“வா...! கலியா...!! அப்பா காரியம் ஆயிட்டு...!” துக்கம் விசாரித்தபடியே வந்தாள் குந்தலாம்பாள்.
“.....................”
“ஒனக்கொரு கல்யாணம் கட்டிப் பேரன் பேத்திப் பார்த்துட்டுப் போயிருக்கலாம்...!”
“....................”
மாதய்யா மனசில் கணக்குப் போட்டு ஆள் தேவை சொன்னார்.
“சரிங்கய்யா... அறுப்பாளுவளைத் தோது பண்ணிப்பிட்டு அந்தீல வந்து சொல்றேனுங்க...!”
“ம்......”
கலியன் நேரே பிச்சைக்கண்ணு வீட்டுக்குச் சென்றான். வீட்டில் அவன் இல்லை.
“அவுரு பொடலங்காட்டுக்குப் போயிருக்காரு...! வந்தா எதுனாச்சும் சேதி சொல்லணுங்களா...?” கேட்டுக்கொண்டாள் பிச்சைக்கண்ணுவின் சம்சாரம்.
“போவுற வளிதானே, நானே கொல்லைல, நேர்ல பாத்துக்கிடறேன் அண்ணி...”
கலியன் புடலங்கொல்லையில் நுழைந்தபோது, பிச்சைக்கண்ணு ஏதோ ஒரு அட்டையை கையில் வைத்துக் கொண்டு எழுத்துக் கூட்டிக் கொண்டிருந்தான்.
“அண்ணே... உன்னைத்தான் தேடி வந்தேன்...”
“என்ன கலியா...? என்ன சேதி...?”
“நாளைக்கு அய்யாவுக்கு அறுப்பு தொடங்கலாம்னு.... ஆளு படைங்க வேணும். மொத மொத நான் பொறுப்புக் கட்டிக்கிணு செய்யுற வேலை...; அவசியம் நீங்களும் வரணும்ணே...!.”
“வந்துட்டாப் போச்சு... கலியா... நீ அய்யா வூட்டுக்கு எப்போ போவே...?”
“அறுப்பாளுங்க வர்றத முடிவு பண்ணிப்பிட்டு, தகவல் சொல்றேன்னேன்... நீதான் ஒத்துக்கிட்டியே...! இப்பவே போய் தகவல் சொல்லிட்டு...”
“சரி... இந்த அட்டையை அய்யாகிட்டே காட்டி என்ன ஏதுன்னு கேளு. நம்ம பொடலங்கொல்லைல கிடந்துச்சு…”
“...............”
“விவசாய இலாக்காலேந்து யாராவது வந்துக்கிட்டே இருக்காங்களா...! யாரோ இதைப் விட்டுட்டுப் போயிருப்பாங்க போல... யாருதுன்னு தெரிஞ்சா ஆபீஸ்ல கொண்டு போயி கொடுத்துடலாம்பாரு...”
அட்டையை வாங்கி தன் தலை முண்டாசில் செருகிக் கொண்டான்.
கலியன் கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தார் மாதய்யா.
ராமுவின் கார்டு. அட்டையின் பின்புறம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘சாவித்திரி’ என்ற பெயர்.
ராமுவின் காதல், காம லீலைகள் ஊர்ஜிதமாகிவிட்டது அவருக்கு.

“இது ஒண்ணும் அவ்வளவு முக்கிய அட்டையில்லை... வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்காங்க யாரோ...” என்று சொல்லி, அதை சுக்கல் சுக்கலாகக் கிழித்து வீசினார்.
சாவித்திரி, யார் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது அவருக்கு.
ராஜசிங்கத்தின் இளையதாரத்திற்குப் பிறந்தவள் அவள். இப்போது அவளுக்கு ஒரே உறவாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது முத்தனூர் சாராயக்கடை வீரமுத்துதான்.
வீரமுத்து ராஜசிங்கத்தின் இளையதாரத்திற்குப் பிறந்தவன்.
வீரமுத்து மிகவும் முரடன். ஏற்கெனவே அந்தனூரில் இருந்தவன்தான், இப்போது அங்கே இடம் வாங்கிக்கொண்டு முத்தனூர்வாசியாகிவிட்டான்.
இந்தக் காதல் கைகூடும் என்று தோன்றவில்லை. மாறாக ‘ஏதேனும் விபரீதம் ஏற்படலாம்...’ என்று மாதய்யாவின் உள்ளுனர்வு கூறியது.
சாராயம் காய்ச்ச, வழக்கமாகச் சரக்கு சப்ளை செய்யும் பக்கிரிசாமி “அண்ணே, நம்ம தங்கச்சிய அடிக்கடி டவுன் லைப்ரரிப் பக்கம் பார்க்கறேண்ணே...!” என்றபோது...
“அது காலேஜ் படிப்பு படிச்சிருக்குடா...லைப்ரரீல போய் ஏதாவது படிச்சிட்டு வரும்டா...” என்றான் பெருமையுடன் வீரமுத்து.
“அதில்லேண்ணே...! சனிக்கிழமை ஞாயித்துக் கிளமைங்கள்ல மட்டும்தான் வருது... அது கூட ஒரு பையனும்...” என்றபோது வீரமுத்து பக்கிரியை அடிக்காத குறைதான்.
“என் தங்கச்சியைப் பத்தி எனக்குத் தெரியும்டா... நாரப் பயலே வாயக் களுவு...” ஏகமாய்த் திட்டினான்.
வீரமுத்துவின் திட்டலைப் பொறுத்துக்கொண்டாலும் சாவித்திரியின் வேஷத்தைக் கலைக்க வேண்டும் என்று முழு மூச்சாக இறங்கிவிட்டான் பக்கிரி.
“அண்ணே... உன் தக்கச்சி கூடவர்றது, அந்தனூர் குருக்களய்யா மவன்தான். நீ வேணா அடுத்த சனிக்கிளமை வந்து பாரு புரிஞ்சிக்குவே...!”
ஆதார பூர்வமாகச் சொல்ல; சனி, ஞாயிரான நேற்றும், இன்றும் வீரமுத்துவே பக்கிரியுடன் சேர்ந்து நோட்டம் விட்டான்.
அப்படி ஏதும் நடக்கவில்லை.
காரணம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் அவர்கள் புடலங்கொல்லையில் சல்லாபித்தார்கள்... தற்காலிகமாகத் தப்பியும் விட்டார்கள்.

வீரமுத்துவுக்குக் கோபம் தலைக்கேறியது “நீ சொன்னபடி எதுவும் இல்லியே பக்கிரி... நீயும்தானே பாக்கறே...!”
“..................”
இந்த முறை ‘பிளைச்சிப் போ’னு வுடுறேன். இனிமே தங்கச்சி பத்தி அவதூறு சொன்னியோ..; நான் மனுசனா இருக்கமாட்டேன்... வெட்டிப் பொலி போட்ருவேன்.”
பக்கிரிக்கு அவமானமாகிவிட்டது.
“.................” ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்...’ என்ற முடிவுக்கு வந்தான்.
அடங்கினான்... அமைதியாக நின்றான்... அடுத்த நகர்வு பற்றி சிந்தித்தான்... அலைந்தான், திரிந்தான், துப்பு துலக்கினான், உண்மைக் கண்டான், கையும் களவுமாய் காதல் ஜோடியைப் பிடிக்கக் காய்களை கச்சிதமாக நகர்த்தினான்.
ஊருக்குப் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தவனின் மசமசப்பைப் பார்த்து “ஏண்டா ராமு... உடம்பு சாதாரணமா இருக்கியோல்லியோ...?” குருக்களும், அவர் சம்சாரமும் ராமுவை பலமுறை கேட்டுவிட்டார்கள்.
“உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு, எத்தனை தடவை சொல்றது...” கடுப்படித்தான்.
“ஒரு நாள் லீவு*+ போட்டு, ரெஸ்ட் எடுத்துண்டு போயேன் ராமு...” அப்பா கேட்டார் பாசத்தோடு..
“இல்லப்பா...! ஆபீஸ்ல நிறைய வேலை பெண்டிங் இருக்கு.”
ரயிலேறும்வரை இங்கும் அங்கும் அலைந்தானே தவிர பசுபதி குருக்கள் கேட்ட ஒரு சில கேள்விகளுக்குக் கூட பதிலில்லை... மழுப்பி மழுப்பிப் பேசினான்.
‘ஒரு வேளை மாதய்யா ‘சுருக்’ னு பேசி மகன் மனசை நோகச் செய்திருப்பாரோ...?’ என்று ஒரு கணம் நினைத்தார்... “சேச்...சே... அப்படிப்பட்ட மனுஷனில்லை மாதய்யா....” தனக்குள் சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
“ஹெல்த் பாத்துக்கோடா ராமு...” ரயில் நகர்ந்து செல்லச் செல்ல சொல்லிக் கொண்டே ஒரு சில அடிகள் நடந்து சென்றார் பசுபதி குருக்கள்.
ரயில் போனதும் பிளாட்பாரமே ஹோ..... என வெறிச்சோடியது. ஆங்காங்கே கிடந்த சாப்பாட்டுச் சருகுகள், ரயில் வரும் வரை தரையில் விரிந்துப் படுத்திருந்த செய்தித்தாள்கள். ஆரஞ்சு, சாத்துக்குடித் தோலி, சுண்டல் இருந்த தொன்னை, பிஸ்கெட் பாக்கெட் சுற்றியிருந்த கடிதாசுகள், சாக்லேட் சுற்றிய பேப்பர்கள், நிலக்கடலை, பட்டாணி கட்டிய வார இதழ்ப் பக்கங்கள், கைக்குழந்தைகளுக்குத் துடைத்துப் போட்ட துணி, கடலைத் தோலி, காலி ஊறுகாய் பாக்கெட், பிரிந்து கிடந்த தீர்ந்து போன பொடிமட்டை, பந்தாய்ப் பறந்த தலைமுடி, தலையில் இருந்து பெண்கள் கழட்டிப் போட்ட காய்ந்த சரங்கள், குழந்தைகளுக்கு ஊட்டும்போது, குழந்தைகளே எடுத்துச் சாப்பிடும்போது தரையில் சிந்திய பருக்கைகள், மிளகாய் துண்டுகள், கருவேற்பிலைகள்...... என ரயில் பயணிகள் விட்டுச் சென்றதை இரண்டு ஸ்வீப்பர்கள் கூட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர்.
ஸ்டேஷன் மாஸ்டர் அடுத்த ரயில் வரும் வரை பெஞ்சில் தலையை நட்டுக்கொண்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
போர்டர்கள், தண்ணீர் ட்ரம் தள்ளுபவர், நியூஸ்பேப்பர் தள்ளுவண்டி, டீ வடை வியாபாரி... இவர்களைத் தவிர ஒருசில ஆங்காங்கே பிரயாணிகளும் இருந்தனர்...
இன்று ஏனோ உடனே வீட்டுக்குச் செல்லப் பிடிக்கவில்லை பசுபதி குருக்களுக்கு . ‘கையில்தான் பிளாட்ஃபாரம் டிக்கெட்தான் இருக்கிறதே...!’ என்று ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்.
ஆங்காங்கே உட்கார்ந்திருந்த சில பயணிகளைப் பார்த்தார். ‘இன்னும் ஒண்ணரை மணி நேரம் கழித்து வரக்கூடிய வண்டிக்கு இப்போதே வந்து உட்கார்ந்திருக்கும் அசடுகள்.’ என்று நினைத்துக் கொண்டார்.

‘நீ மட்டும் என்னவாம்... மகனை ரயிலேற்றி அனுப்பிவிட்டு மணிக்கணக்காக பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருக்கியே...! நீயும் அசடுதான்...’ என்றது உள் மனம்.
இன்று ஏனோ மனசு பாரமாக உணர்ந்தார் பசுபதி.
‘எத்தனை நாழிதான் இப்படி பிளாட்பாரத்துல உட்கார்றது...’ அலுப்புத் தட்ட, எழுந்து துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்.
சாராயக்கடையின் ரெகுலர் கஸ்டமரும், மிகைமதுப்பிரியருமான பொய்யாமணி, தயங்கித் தயங்கி நின்றான்.
“என்னடா பொய்யாமொழி...ஏதாவது சேதி உண்டா...?”
“ம்...” என்றவன் தயங்கி நின்றான்.
“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு பொய்யாமொழி...”
“அண்ணே, இதை நான் எப்படி என்வாயால சொல்லுவேன்...”
“விஷயத்தைச் சொல்றா மொத....”
அண்ணே ரெண்டு நாளா நான் பாக்கறேன்...., உங்க தங்கச்சி அந்தனூர்ல நம்ம பொடலங்கொல்லைல ...பாத்தே...ண்…ணே.... அதுவும் அந்த குருக்க...ளய்யா மவனோட...!” என்றான்.
இந்த முறை வீரமுத்துவால் இந்தச் செய்தியை, குடிகாரன் பேச்சு என்று அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. சாவித்திரியிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.
சாவித்திரி எதையும் மறைக்காமல், விவரமாய்ச் சொல்லச் சொல்ல பச்சை நரம்புகள் புடைக்க வெறியானான் வீரமுத்து.
சாவித்திரியின் முடியைக் கொத்தாய்ப் பிடித்து முகத்தில் அரைந்தான்.
கலியன், திரும்பிச் சென்றதும், இந்த சிக்கல் எதில் போய் முடியப் போகிறதோ...!’ என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் மாதய்யா. இயந்திரத்தனமாக எழுந்து வீட்டுக்குள் செல்ல நினைத்தபோது...
திமு திமு வென்று கிழக்கு நோக்கி, ஜனங்கள் ஓடினர். என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை மாதய்யாவுக்கு.
“குருக்களய்யா வீட்ல ஏதோ பிரச்சனையாம்...!”
“பக்கத்து ஊரான் அரிவாளோட குருக்கள் வீட்ல நின்னு ஒரே ரகளையாம்...!”
“குருக்கள் மகன் ராமுவை வெட்டுவேன்னு அலையாங்களாம் ...!”
“சாராயக்கடை வீரமுத்து, குருக்கள் வீட்ல வந்து பிரச்சனை பண்றானாம்...!”
தகவல் மேல் தகவலாகக் கிடைக்க, இத்தனை சீக்கிரத்தில் இப்படி ஒரு பிரச்சனையை எதிர்பார்க்காத மாதய்யா ‘இதை எப்படிச் சமாளிப்பது...!’ என்று எண்ணமிட்டபடியே ஓடினார்.
குருக்கள் வீட்டின் முன் ஏகமாய்க் கூட்டம் கூடியிருந்தது

ரயிலில் பயணித்த, ராமுவுக்கு ‘அப்பாகிட்டே சாவித்திரி மேட்டரை சொல்லியிருக்கலாமோ…?’ என்ற எண்ணமும், ‘ம்ஹூம்... இது நேரமில்லை...’ என்ற சுய சமாதானமுமாய்...ஏதேதோ எண்ணங்கள்.
ஞாயிற்றுக் கிழமை காலை முத்தனூர் வினாயகர் கோவில் தோட்டத்தில் செம்பருத்தி மலரைக் கொய்துகொண்டே பேசிய சாவித்திரியின் முகம் கண் முன் வந்தது.
மனது ஒரு நிலையில் இல்லை ராமுவுக்கு. சற்றே கண்மூடினால் என்னென்னவோ வேண்டாத காட்சிகள் கனவாய் உருவெடுத்து பயமுறுத்தின.
கையில் வீச்சரிவாளுடன் கிளம்பி, அடியாட்கள் புடை சூழ பசுபதி குருக்கள் வீட்டு வாசலில் நின்றான் வீரமுத்து. வீட்டில் இருந்த பெண்களை விரட்டினான். ஏகமாய்க் கத்தினான்.
“அவன் ஊருக்குப் புறப்பட்டுப் போயிட்டானே...! அவனை எதுக்குத் தேடறேள்...? அவனை எதுக்கு வெட்டுவேன்... குத்துவேன்’னு அலையறேள்..? அவன் என்ன பாவம் பண்ணினான்.?”
“...................”
குருக்களின் அம்மாவும், குருக்களின் மனைவியும் அழுகைக்கு நடுவே கதறிக் கதறிக் கேட்டார்கள். ஆத்திரம் கண்களை மட்டுமல்ல காதையும் மறைத்துவிட எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வீட்டுக்குள் புகுந்தான் வீரமுத்து.
“அவன் ஊருக்குப் போவலை... எனக்குத் தெரியும்.” வீடே அதிரக் கத்தினான்.
ஸ்ரீருத்ரமும், சிவபுராணமும், சிவ அஷ்டோத்திரமும்... திருவெம்பாவையும் கேட்டுக் கேட்டுப் பழகிப் போன காதுகளுக்கு வீரமுத்துவின் கத்தலை தாங்கும் திராணியில்லை.
“ஈஸ்வரா... என்னப்பா சோதனை இது...!” என்று கத்தியபடி தலையைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தாள்…
“மாமீ... என்ன பண்றது...!” என்று கேட்டபடி கைத்தாங்கலாய்ப் பிடித்துச் சுவற்றோரமாய்த் சாய்த்துத் தரையில் உட்கார வைத்தாள் பசுபதியின் மனைவி.
“ஏய் இட்லரு, நீ கோவிலுக்கு உள்ளே பூந்து தேட்றா...!”
“………………..”
“ரோட்டுப் பக்கம் ரெண்டு ஆளுவ போங்கடா.. அவனத் தப்ப விட்றக் கூடாது.”
“………………..”
“அவனை... அடிச்சி, ஒதச்சி பட்டய உரிச்சி எனக்கு முன்னால நிறுத்துங்கடா...!”
உத்தரவு பிறப்பித்துவிட்டு, வீட்டிற்குள் புகுந்து இண்டு இடுக்கு விடாமல் தேடிவிட்டு ஆத்திரத்தோடு கதவை படார் என்று அடித்து மூடிக்கொண்டு வெளியே வந்தபோது........
மாதய்யா கண்கள் சிவக்க ரெளத்ரமாய் எதிரே நின்றார்.
“ஏண்டா வீரமுத்து... உன் மனசுல என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கே... ம்...!” என்ற கர்ஜனையில் மொத்தக் கூட்டமும் சப்த நாடியும் ஒடுங்கி அமைதியானது.

“அய்யா, நீங்க இதுல தலையிடாதீங்க...!”
“ஏண்டா...! எங்க தெருவுல பூந்து, எங்க ஊர் பையனை அடியாள் வெச்சி வெட்ட வருவே...! நாங்க தலையிடாம, வாயையும் இன்னொண்ணையும் பொத்திக்கிட்டு இருக்கணுமோ...!?” ஆக்ரோஷமான அவர் கத்தலில் வீரமுத்துவே ஒரு கணம் ஆடிப்போனான்.
-தொடரும்...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.