வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
“மாதய்யாவின் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு, மூச்சுக் காற்றில் ஏறி இறங்கும் அவரின் மார்புக்கூடு ஒன்றே சாட்சியாக இருந்தது.
நாளின் பாதி நேரம், சில நாட்களில் முக்கால்வாசி நேரம் மாதய்யா வீட்டிலேயேதான் இருந்தார், டாக்டர் அருணகிரி.
தினம் தினம் விடியற் காலையில் அந்தனூர் வந்துவிடுவார்.
பகல் பத்து மணி அளவில் ஜீவபுரம் புறப்படுவார்.
கலியன் அவரை வண்டியில் அழைத்துச் செல்வான்.
க்னீனிக்கில் அவருடைய வாடிக்கை நோயாளிகளை கவனிப்பார்.
மதிய ஆகாரம் முடித்துக்கொண்டு ஒரு மணிக்கு வந்தாரானால் ஆறு மணி வரை மாதய்யா வீட்டில்.
அடுத்த ரவுண்டு ஜீவபுரம் செல்வார்.
பேஷண்டுகளுக்குக், கன்ஸல்டேஷன், சிகிச்சைகள் எல்லாம் முடிந்து இரவு ஒரு விசிட் அந்தனூர் வருவார்.
அபூர்வமான தோழனல்லவா மாதய்யா...
******************************************
நாலாவது ஃபாரம் படிக்கும்போது தமிழ்ப் பண்டிதர் தருமை சிவா அவர்கள், ‘கண்ணன் என் தோழன்’ என்ற பாரதியின் கவிதையை நடத்தினார்.
‘புன்னாக வராளியில், திஸ்ர ஜாதி ஏக தாளம் போட்டபடி இசையுடன் பாட்டுப் பாடி அசத்தினார்.
மாதவனையும் அருணகிரியையும் எழுப்பி நிற்க வைத்தார்.
தோழமைக்கு உதாரணமாகச் தங்கள் இருவரையும் பெருமையுடன் வகுப்பின் சொன்ன அந்த நிகழ்வுக் கண் முன் நின்றது டாக்டருக்கு.

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடு வான்; - மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான்; - பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான்; - சுடர்த்
தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்
தீமைகள் கொன்றிடு வான். ... 7
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான்; - அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப் பான்; - நல்ல
பெண்மைக் குணமுடை யான்; - சில நேரத்தில்
பித்தர் குணமுடை யான்; - மிகத்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
தழலின் குணமுடை யான். ... 8
தன் உயிர்த் தோழனும், பரோபகாரியுமான மாதய்யாவுக்குச் செய்யும் சேவையை, உள்ளன்போடும் மனப்பூர்வமாகவும் செய்தார் டாக்டர் அருணகிரி.
******************************************
“ஒத்த உள்ளம் கொண்ட இரண்டு உடல்களாய் இருப்பதே நட்பு.’ என்று சொல்வார்கள் அல்லவா...!”
அதற்கு இவர்கள் நட்பே சாட்சி.
“உதவி வரைத்தன்று...”
என்கிற உலகத் திருமறைக்குச் சாட்சியாக இருந்தது, டாக்டர் அருணகிரி மாதய்யாவுக்குச் செய்துக் கொண்டிருக்கும் சிகிச்சையும், பணிவடைகளும்.
‘எப்படியாவது நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும்’ என்கிற டாக்டரின் செயல்பாட்டில் வைராக்யம் தெரிந்தது.
மருத்துவ விஞ்ஞானம் சொல்லும் அனைத்து வழி முறைகளையும் துருவி ஆய்கிறார்.
முழு முயற்சி செய்கிறார்.
******************************************
நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லோரும் நிச்சயமாக நண்பர்கள் அல்ல.
99 சதவிகிதம், சந்தர்ப்பவாதிகளே...!
கள்ளக் கரன்ஸிகளே.!
பட்டு அனுபவித்தவர்களுக்கு இதுத் தெரியும்.
கோடிக்கணக்காகப் பெருகிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தில் கலந்துள்ள ஒரு சில விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும், ஞானியர்களையும் பிரித்தெடுப்பதற்காகத் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை பல்லாயிரம் கோடிக் கணக்கில் செலவு செய்கிறதே அரசாங்கம்...
அது போலத்தான்;
மகா கவியின், ‘கண்ணன் என் தோழன்’ போல;
சேவை மனப்பான்னைக் கொண்ட உண்மையான உயிர் நண்பன் அருணகிரிபோல;
கள்ளக் கரன்ஸிக் குவியலில் நல்லக் கரன்ஸியும் வரும் என்கிற நம்பிக்கையில்தானேத் தொடர்ந்து நண்பர்களைச் சேகரித்து வருகிறோம்.
******************************************
ரேழியிலும், தாழ்வாரத்திலும் நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள்;
அந்த மூட்டைகளின் மேல் அந்துப் பூச்சி வராமல் இருக்கப் பரத்தப் பட்ட காஞ்சான் துளசி, நொச்சி போன்ற இலைச் சருகுகள்;
சட்டமிட்டு மாட்டப்பட்ட ஸ்வாமிப் படங்களுக்கெல்லாம் கோர்த்துப் போட்டப் பவழமல்லி;
நெருக்கத் தொடுத்து, ஹாரமாய்த் தொங்கவிட்டச் சந்தன முல்லை, கொடி மல்லிகை; ஜாதி மல்லி;
‘படம் தொங்குகிற’ ஆணிக்கும் வளையத்துக்கும் இடையேச் சிக்க வைத்த மனோரஞ்சிதம், செம்பருத்தி, நாகலிங்கப் பூ;
நாள் தவறாமல் ராமர் பட்டாபிஷேகப் படத்திற்கு போடப்படும் துளசிமாலை;
ஸ்வாமி மாடத்தில் ஏற்றி வைக்கும் ஊதுபத்தி;
வெள்ளி, செவ்வாய் நாளில் புகையும் சாம்பிராணி;
வழக்கமாய், மேற்சொன்ன எல்லாம் கலந்து தெய்வீக மணம் பரவிப் பரவசப்படுத்தும் அந்தப் பட்டகசாலை;
மாதய்யா படுத்த நாள்முதல், டெட்டாலின் வாடையும், பினாயிலின் வேகமும் பரவத் தொடங்கியது.
இப்போது கூடம் முழுவதும் அதுமட்டுமே ஆக்ரமித்திருந்தன.
******************************************
மாதய்யாவின் உடம்பு மருந்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
செலைன் மட்டும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.
வெஜிடபிள் போல நினைவற்றுக் கிடக்கும் மாதய்யாவின் நிலையைத் தனியாளாய் அனுமானித்து எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
குழப்பமாய் இருந்தது அருணகிரிக்கு.
திருச்சியிலிருந்து டாக்டர் ‘கே சி கண்ணனை’ வரவழைத்தார்.

இருவரும் நீண்ட நேரம் கலந்து ஆலோசித்தார்கள்..
******************************************
“மகன் துரைராமனை வரச் சொல்லிடுங்கோ...!” தீர்மானமாய்ச் சொல்லி விட்டார் டாக்டர்.
‘ஃபாதர் சீரியஸ்’
தந்தி கொடுத்தார்கள்.
தந்தி கிடைத்ததும் புறப்பட்டு வந்து சேர்ந்தான் துரைராமன்.
வந்ததும் பரபரப்போடு வந்து அப்பாவைப் பார்க்கவில்லை.
காமரா உள்ளுக்குச் சென்றான்.
உடை மாற்றிக் கொண்டான்.
டாக்டர் புறப்படத் தயாரானார்.
அதை கவனித்த மோகனா காமராவுள் அருகே நின்று குரல் கொடுத்தாள்.
“ஏந்நா... அவர் போயிடுவார்... சீக்கிரம் வாங்கோ...” அவசரப்படுத்தினாள்.
மோகனா சொன்னது பட்டகசாலையில் மாதய்யாவின் அருகில் ஸ்டூலில் அமர்ந்திருந்த அருணகிரியின் காதில் விழுந்தது.
கவலையோடு கணவர் அருகில் நின்றுகொண்டிருந்த குந்தலாம்பாள் காதிலும் தெளிவாக விழுந்தது.
‘அவர் போயிடுவார்...!’ என்று சொன்னது டாக்டர் புறப்படுவதைத்தான் என்றாலும்,
மோகனாவின் வார்த்தை அச்சானியமாகப் பட்டது குந்தலாம்பாளுக்கு.
எத்தனையோ ஜீரணித்தவள். இதையும் ஜீரணித்துக்கொண்டாள்...
அவள் அறியாமலே முட்டிக்கொண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் ஒத்தி உறிஞ்சினாள்.
இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாள்.
******************************************
சலவைக்குச் சென்று வந்த எட்டு முழம் வண்ணான் மடியைக் எடுத்துக் கட்டிக்கொண்டான் துரை.
தோளில் அங்கவஸ்திரத்தை யோக வேஷ்டியாய்ப் போர்த்திக் கொண்டான்.
நிதானமாக காமரா உள்ளிலிருந்து வெளியே வந்தான்.
தலை தீபாவளியன்று எண்ணை ஸ்நாநம் ஆனபின், மாப்பிள்ளையாகப்பட்டவர், மாமனார் வீட்டுக் காமரா உள்ளுக்குப் போய், புது வஸ்திரம் அணிந்துகொண்டு பளிச் சென்று பட்டகசாலைக்கு வருவாரே, அதைப்போல இருந்தது அவன் வருகை.
பெற்றவரின் நிலை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை அவன் முகத்தில்.
மாதய்யா படுத்துள்ள இடம், காமராவுள் முகப்பிலிருந்து பத்து அடிகள்தான்.
அதைக் கடப்பதற்குள் ஒரு தேர்ந்த நடிகனைப் போல, முகத்தில் சோகத்தைப் போர்த்திக்கொண்டான்.
******************************************
அமெரிக்க உளவியலாளர் அப்ரஹாம் மாஸ்லோவின் தேவைப்படிக் கோட்பாட்டின் (ULTIMATE) மிக உயர்ந்த படியான Self Actualization என்ற நிலையில் உள்ளொளிப் பெறுகிப் பரிபக்குவமடைந்தவர் மாதய்யா

அடிக்கடி ஆன்மீக மார்க்கமாய் அவர் உச்சரிக்கும் சில ஸ்லோகங்களை நினைத்துப் பார்த்தாள் குந்தலாம்பாள்.
‘இன்மையிலிருந்து உண்மைக்கு,
இருளிலிருந்து ஒளிக்கு,
மரணத்திலிருந்து அமுதத்திற்கு எம்மை
இட்டுச் செல்க...!’
என்ற உட்பொருளுடைய
‘அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
ஓம் ஸாந்தி: ! ஸாந்தி: !! ஸாந்தி: !!! ’
என்ற உபநிஷத் வாக்யமும்
‘ஊனாகி உயிராகி உண்மையுமாய், இன்மையுமாய்...!’ என்றத் திருவாசக தெளிவும்,
‘காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்...!’
என்றத் திருவாய்மொழித் தத்துவமும்
அவர் வாய் எப்போதும் முணுமுணுக்கும் வாசகங்கள்.
அவரின் உச்சரிப்பில் ஆன்மீகம் அலை வீசும். தைத்ரீயம் தவழும்.
மாதய்யாச் சொல்லும் ஸ்லோகங்களைக் குந்தலாம்பாள் இப்போது முணுமுணுத்துச் சொன்னாள்.
அவள் சொன்னது ‘பள்ளி மாணவன் தேர்வுக்குச் செய்யுள் ஒப்பித்துப் பார்ப்பதைப் போல இருந்தது.
******************************************
துரையைக் கூர்ந்துக் கவனித்தாள் குந்தலாம்பாள்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில், அடிமட்டத் தொண்டர் எவரேனும் சிகிச்சையில் இருக்கும்போது அரசியல் ஸ்டண்ட் அடிக்க கட்சித் தலைவர் வந்துப் பார்ப்பதைப் போல இருந்தது துரை வந்த விதம்.
“எப்படி இருக்கர்...?”
டாக்டரிடம் கேட்டான் துரை.
கேள்வியில் அப்பா என்ற பாசம் இல்லை.
இருந்திருந்தால், வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமல் ஓடிவந்து, ‘அப்பாவுக்கு எப்படி இருக்கு...?’ என்று துடித்துப் போயிருக்கமாட்டானா...?
யாரோ ஒரு மூன்றாம் மனிதரின் உடல் நலம் பற்றிச் சம்பிரதாயத்துக்கு விசாரிப்பார்கள் அல்லவா...! அது போல இயந்திரத் தன்மையே இருந்தது அவன் விசாரிப்பில்.
டாக்டர் அவன் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.
“.......................................”
ஒரு முறை துரையைத் தீர்க்கமாய்ப் பார்த்தார்.
தலைக் குனிந்து கொண்டார்.
“ப்ரஸண்ட் ஸ்டேட்டஸ் என்ன டாக்டர்...?
“.......................................”
அமைதியாக இருந்தார்.
“தேவலையாயிடுமா டாக்டர்...?”
“.......................................”
மௌனம் காத்தார்.
‘வெளியே ஒழுங்கும் உள்ளே ஓக்காளமுமாக’ இருந்தது துரையின் நடவடிக்கைகள்.
******************************************
விளையாட்டுப் போல் மாதய்யா ஜடமாய்ப் படுத்து ஆறு நாட்கள் ஓடிவிட்டன.
காலைநேர விசிட் முடிந்து, வழக்கம்போல டாக்டர் அருணகிரி ஜீவபுரம் புறப்பட்டார்.
வழியனுப்ப வாசலுக்கு வந்தாள் குந்தலாம்பாள்.
வைக்கோல் பரப்பி, அதன் மேல் சுருக்கமில்லாமல் ஜமக்காளம் விரித்துச் சிரத்தையாக, கவனமாகத் தயார் செய்தக் கூண்டு வண்டியோடு தயாராய் நின்றிருந்தான் கலியன்.

தெற்குப் பார்த்த வீடு மாதய்யாவுடையது.
வீட்டுக்கு முன் கிழக்கு மேற்காக இருபது அடி நீளத்துக்கு, எதிரும்புதிருமாய், இருபுறமும் பாம்பு படமெடுத்து நிற்கிறார்போல இருக்கும் சாரமணைகளோடுக் கூடிய திண்ணை.
உயிர் சிநேகிதனுக்கு அருகில் பாசத்துடனும் நேசத்துடனும் ஒட்டிக்கொள்ளும் பள்ளி மாணவன் போல, சாரமணைத் திண்ணைக்கு அருகில் ஆர்வத்துடன் வருவார் மாதய்யா.
போர்த்தியிருக்கும் அங்க வஸ்த்திரத்தை வலது கை அனிச்சையாக உருவி எடுக்கும்;
நண்பனின் முதுகில் ‘டப் டப் டப்’ என ஷொட்டு கொடுப்பதைப்போல,
‘ ஃபட்... ஃபடீர்... ஃபட்.... ’ என்று திண்ணையில் புழுதி தட்டுவார்;
இடது கையில் இருக்கும் வெற்றிலைச் செல்லத்தை கால் தட்டாத தூரத்தில் வைப்பார்;
சாரமனையின் மேல் அங்கவஸ்திரத்தைப் போடுவார்;
திண்ணையில் உட்கார்வார்.
கால்களை நீட்டி மடக்கியவாறு திண்ணை விளிம்பில் உள்ளங்காலைப் பதித்துக்காள்வார்.
இரண்டு உள்ளங்கைகளையும் ஊன்றி அழுத்தம் கொடுத்துச் சாரமணையில் சாய்வார்.
******************************************
கிழக்குப் பக்கச் சாரமனைதான் அவருக்கு ஆகிவந்த இடம்.
அங்கே உட்கார்ந்துப் பார்த்தால் மேலக்கோடிப் பெருமாள் கோவில் வரை நன்றாகத் தெரியும்.
மேலண்டை இரண்டு மனைக்கட்டுகள் மாதய்யாவுடையது.
அதற்கு அடுத்த வீடு முத்துசுப்பராமனுடையது.
கீழண்டை வீடு பில்லட்லா சந்திர மொலியின் பூர்வீகச் சொத்து.
பில்லட்லா, நன்றாக முன்னே இழுத்து வீட்டைக் கட்டிவிட்டதால், எதிர்ச் சாரமனையில் உட்கார்ந்தால் அந்த வீட்டுத் தாய்ச் சுவர்தான் தெரியும். தெருவே கண்ணுக்குத் தெரியாது.
மாதய்யாவுக்கோ வெகு ஜனத் தொடர்பு அதிகம்...
ஆனால் அவர் மகன் துரைராமனோ... ஒரு வட்டத்துக்குள் வளைய வருபவன்.
இவர்கள் இருவரின் போக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால்
Greek hero Odysseus போல மாதய்யா Extrovert ஆகவும்;
Odysseus ன் மகன் Telemachus போல மாதய்யாவின் மகன் துரை Introvert ஆகவும் இருப்பதை உணர முடியும்.
******************************************
மாதய்யாச் சாய்ந்துச் சாய்ந்து;
முதுகு உராய்ந்து உராய்ந்து;
களிம்பு ஏறி, வழவழப்பாகிப்போன ஒரு கெட்டிக் கருமை சாரமனையில் படிந்திருக்கும்.
ஊர்ப் பஞ்சாயத்து முழுதும் அந்தச் சாரமனையில் உட்கார்ந்தே தீர்த்து வைத்துவிடுவார்.

காப்புக் கட்டிக்கொண்டு, திருவிழாவின் முழுப் பொறுப்பும் ஏற்றுக்கொண்டதால், ஓய்வு நேரம் என்பதே அவருக்கு மிக மிகக் குறைவாகத்தான் கிடைத்தது.
கிடைத்தச் சில மணி நேரத்தைக் கூட... இந்தச் சாரமனையில் சாய்ந்தபடித்தான் கழித்தார்.
******************************************
காப்புக் கட்டிய நாள் முதல், விடையாற்றி விழா முடிய...
காலையில் எல்லையம்மன் மண்டகப்படி அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்வது;
தெருக்களின் முக்கியஸ்தர்களை வரவழைப்பது;
சாங்கிய ஏற்பாடுகளைத் துரிதப்படுத்துவது;
அன்றைய புறப்பாட்டுக்கு சுற்றுக் கோவில்களில் கேட்டுத் தன் பொறுப்பில் வாகனத்தைக் கொண்டுவருவது;
வாங்கிய இடத்தில் திரும்பப் தலைப் பொறுப்பாய்க் கொண்டு போய் ஒப்படைப்பது;
ஆர்டர் செய்த புஷ்பம், மாலை வகையறாக்கள் வரத் தாமதமானால் உடனே ஆள் அனுப்பி விரைந்து வர ஏற்பாடு செய்வது;
‘எப்போது வரும்...?’
எதிர்பார்த்துப் பரபரப்பது;
‘சீக்கிரம் வரவேண்டுமே...!’
ஓயாமல் கவலைப்படுவது;
இப்படிப் பம்பரமாகச் சுழன்றுகொண்டே இருந்தார் மாதய்யா.
இந்தச் சாரமனையில் ஒரு சில மணி நேரங்கள், சாய்ந்துக் கண்மூடி இருப்பதைப் பார்த்தால், அன்றையக் காரியங்களைச் சிறப்பாக முடித்துத் தந்த எல்லையம்மனுக்கு நன்றி கூறுவது போலவே இருக்கும்.
******************************************
“அது வந்துதா...?”
“இது போச்சா...?”
“அப்படிச் செய்யலாமோ...?”
“இப்படிச் செய்யவேண்டாமே...?”
“அவர் வருவரா? வரமாட்டாரா...?”
“இவரை உடனே வரச் சொல்லுன்னேன்...!”
“ஒத்துமையா இருக்கணுமாக்கும். சண்டை சச்சரவு கூடாது ஓய்..”
“நான் சொன்னதாச் சொல்லும், போய்...!”
“அவரை நேரே நீயே போய் அழைச்சிண்டு வரதுதான் முறையாக்கும்....!”
“நீங்களே இப்படி லேட்டா வரலாமான்னேன்...?..”
“வாங்கோ...வாங்கோ... ரொம்ப சந்தோஷம்...”
“பணத்தை எண்ணிப் பாத்துனுட்டேளா...?”
“.............................................”
ஏக காலத்தில் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு;
தேவையான இடங்களில் பேசிக்கொண்டு;
எல்லாவற்றிலும் கவனம் வைத்துக்கொண்டு;
எப்போதும் கண்கொத்திப் பாம்பாக விழித்துக்கொண்டு;
அஷ்டாவதானியாய்...
சில நேரங்களில் சதாவதானியாய்ச் செயல்படுவார்.
எட்டுக் கண் விட்டெறிவார்...
அப்படிப்பட்ட மாதய்யாவின் சர்வ அங்கங்களுக்கும் இந்தச் சாரமனைதான் சற்றே ஓய்வு கொடுக்கும்.
)______________( ....
இரண்டு பக்கமும் இறக்கை வீசிப் பறப்பதைப் போல இருக்கும் அந்தச் சாரமனைத் திண்ணை.

‘மாதய்யாவை பூரணமாய் குணப்படுத்தி என் மேல் மீண்டும் உட்கார வை...!’
இரு கைகளையும் விரித்தபடி சாரமணை இறைவனைப் பிரார்த்திப்பதைப் போலத் தோன்றியது குந்தலாம்பாளுக்கு.
******************************************
டாக்டர் புறப்பட்டுச் சென்றபின், வாசல் திண்ணையிலிருந்து உள்ளே திரும்பினாள் குந்தலாம்பாள்.
வாசல் ரேழியில் கால் வைத்தாள்.
மிகவும் பிரசித்தமான ரேழி அது.
அம்பாள் குதிரை வாகனமாகட்டும்...
பெருமாள் பல்லக்காகட்டும்...
சிவன் கோவில் தேராகட்டும்,

அந்தனூர் ஸ்வாமிப் புறப்பாடு என்றால் அது விடிய விடிய நடக்கும்.
‘திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி வெள்ளி ரதம் புஷ்ய மண்டபத்திலிருந்து இரவு பனினோரு மணிக்குப் புறப்படும்;
மகாதானத் தெருவில் ஆங்காங்கே மணிக்கணக்கில் தவில், நாயனம், க்ளாரினெட் என பிரபல வித்வான்களின் கச்சேரிகள் அமர்க்களப்படும்;
மறு நாள் காலை 7 மணிக்கு கோவிலுக்குள்ளே போகுமல்லவா...!’
அது போலத்தான் தடபுடலாக இருக்கும் அந்தனூர் ஸ்வாமிப் புறப்பாடும்.
******************************************
இரவுப் பத்து மணிக்குமேல்தான் புறப்பாடுத் தொடங்கும்.
ஒவ்வொரு இடத்திலும் மணிக்கணக்கில் நிற்கும்.
வீதி உலா முடிந்து மீண்டும் கோவிலுக்குப் போகும்போது பொலபொலவென விடிந்துவிடும்.
இந்த நாட்களில் அந்த ரேழி பிஸியாக இருக்கும்.
வீதி உலாவோடு கூட்டமாய் வருவார்களல்லவா ஜனங்கள்;
ஏ. கே. சி கிளாரினெட்;
வலங்கைமான் சண்முகசுந்தரம், நீடாமங்கலம் மீனாஷிசுந்தரம் தவில்;
காருக்குறிச்சி அருணாச்சலம், திருவாடுதுறை ராஜரத்தினம், திருவிசநல்லூர் ஜெயராமன்... நாதஸ்வரம்...
இப்படிப்பட்டப் பெரியப் பெரிய மாமேதைகளின் கச்சேரிகள் களைகட்டும்.

இசை மேதைகளின் வாசிப்பைக் கேட்டு மனம் குளிர்வார்கள் ரசிகர்கள்.
ரசிகர்களுக்கு விநியோகிப்பதற்காக, ஏலக்காய், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா, கல்கண்டு எல்லாம் தட்டிப் போட்டுக் காய்ச்சிய பசும்பால் தயாராக இருக்கும் இந்த ரேழியில்;
அதுவும் எப்படி? சூடு ஆறாமல் இருக்கக் குமுட்டி அடுப்பின் மேல் வைக்கப்பட்டிருக்கும்.
அந்தப் பாலை அருந்திக்கொண்டே, கச்சேரி கேட்கும்போது சொர்க்கத்தில் மிதப்பது போல உணர்வார்கள் ரசிகர்கள்.
விடிய விடிய எப்போது வந்து குடித்தாலும் பாலின் சூடும், தரமும் சிறிதும் குறையாமல் ஒரே மாதிரி இருக்குமாறு பராமரிப்பார் மாதய்யா.
அது மட்டுமில்லை. பச்சைக் கல்பூரம், விளாமிச்சி வேர் போட்டக் கமகமக்கும் குடிநீரும் பெரிய அடுக்கில் வைத்திருப்பார்.

இது மாதய்யாவின் அப்பா காலத்திலிருந்து வரும் பழக்கம்.
மாதய்யா வீட்டுத் தண்ணீரையும், பாலையும் குடிப்பதற்காகவே பலர் ஸ்வாமியோடு வருவார்கள்.
குந்தலாம்பாள் உள்ளே போக ரேழி கடந்தாள்.
பால் குமுட்டியும், விளாமிச்சை வேர் ஊறும் தண்ணீரும் மணக்கும் ரேழியில், இப்போது துடைத்துப் போட்ட ஈரத் துணிகளின் வேகம் வந்தது.
பினாயில் வாடையும் கலந்து வீசியது.
******************************************
ரேழித் தாண்டிப் பட்டகசாலைக்கு வந்தாள்.
அந்தனூரில் திருவிழாக்களுக்குக் குறைவே கிடையாது.
வருஷத்துக்குப் பத்துநாள் ராம பஜனை மடத்தில் வசந்த உத்ஸவம் நடைபெறும்;
சீதா கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும்;
பத்து நாட்களும் பூப்பந்தல் போட்டு அசத்துவார்கள்;
மூன்று நாட்கள் ராதாகல்யாண வைபமும் பஜனை மடத்தில் விசேஷமாக இருக்கும்;
ராதாகல்யாணத்தன்று பூப்பந்தல் அமர்க்களப்படும்.
வரதராஜப் பெருமாள் கோவிலில் வசந்தோத்ஸவ வைபவம் மிகவும் பிரசித்தம்.
கூடாரவல்லிக்காக பூப்பந்தல் போடுவார்கள்.
அந்தனூரில் போடும் எல்லாப் பூப்பந்தலுக்கும் ஸ்ரீரங்கத்திலிருந்து மல்லிகை அரும்புச் சப்ளைச் செய்வது திருவடித் தெரு கலியமூர்த்திதான்.

கலியமூர்த்தி நாலாவது தலைமுறை புஷ்ப வியாபாரி.
புஷ்ப வியாபாரத்தில் நிபுணர்.
மற்ற சில வியாபாரிகளைப் போலக் காய் அரும்புகளைக் கலந்தோ, காம்புகளைக் கலந்துவிட்டோ, அதிகமாய்த் தண்ணீர்த் தெளித்தோ... அகடவிகடம் செய்து எடைக் கட்டி விற்கும் அற்பத்தனம் இவரிடம் கிடையாது.
ரங்கநாதர்கோவிலுக்கு நான்கு தலைமுறையாக புஷ்பசேவை செய்யும் குடும்பம் இவருடையது.
மார்லோ எழுதிய Doctor Faustus என்ற துன்பியல் நாடகத்தில் வரும் ஒரு காட்சி;
ஜனவரி மாதம் திராட்சைப் பழத்துக்கு Off Session என்றாலும், நிறைமாதக் கர்பிணியான வான்ஹோல்ட் அரசி கேட்டாள் என்பதற்காக, நன்கு கனிந்த சுவையுள்ள திராட்சைகளை டாக்டர் ஃபாஸ்டஸ் வரவழைத்துக் கொடுப்பார்.

At the court of the duke of Vanholt, Faustus asks the duchess, who is with child, if she has a desire for any special dainties. Although it is January, she desires to have a dish of ripe grapes.
நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மல்லிகைக்கு ஆஃப் சீசன்.
ஆஃப் சீசனிலும் கலியமூர்த்தி கடையில் மல்லிகை மணக்கும்.
‘மொத வேலை முத்து வேலை’
இது மல்லிகைக் சாகுபடி செய்யும் விவசாயிகளின் தாரக மந்திரம்.
அப்படி ஒவ்வொரு நொடியையும் மதித்துப் போற்றுவதால்தான் அரும்புகளை அயல்நாடுகளுக்கும் அதன் தரம் மாறாமல் அனுப்ப முடிகிறது.
ஸ்ரீரங்கத்தில் வெடித்த மல்லி அரும்பை உள்ளூர்வாசிகள் பயன்படுத்தும் அதே தரத்தில் சிங்கப்பூரிலும் பயன்படுத்தும் அளவுக்குத் அவர்களின் தேர்ந்த தொழில் நுட்பம் வியக்கவைக்கும்.
மல்லிகைத் தோட்டத்திலிருந்தே நேரடியாக அரும்பு ஏற்றி அனுப்பவார் கலியமூர்த்தி.
அந்த அளவுக்குச் செல்வாக்கும் உண்டு, செயலும் உண்டு கலியமூர்த்திக்கு.
******************************************
அக்ரகாரத்தெருவில் இருக்கும் பேதை, பெதும்மை, அறிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என அனைத்து வயதினரும் மல்லி அரும்பின் வருகைக்காக குழுமிவிடுவார்கள்;
மூட்டை அவிழ்த்து தரையில் விரித்துப்போட்டத் துணியில் கொட்டிக் குவித்த அடுத்த கனம்
கூடி வட்டமாக அமர்வார்கள்;
குப்பென்று கிளம்பும் கதகதப்பும், வீசும் வாசனையும் முகத்தில் அடிக்கும்.
அதன் சுகத்தை அனுபவிப்பார்கள்.
அடுத்த இரண்டு மணி நேரம் பேச்சும், சிரிப்பும், நகைப்பும், பக்தியுமாகத் தொடுத்துத் தொடுத்துப் பந்து சுற்றுவார்கள்;
கட்டப்படும் பூப்பந்துக்களை அவ்வப்போது சந்நதிக்குக் கொண்டுபோய் போய்க்கொண்டே இருப்பார்கள்;
பந்தலில்தான் மல்லிகைப் பூக்க வேண்டும் என்று தொடுப்பவர்களும், பூப்பந்தல் போடுபவர்களும் வைராக்யத்தோடு செயல்படுவார்கள்.
கடைசீ ஈடு பூப்பந்துகள் போனதும், பெண்களும் ஒவ்வொருத்தராக விடைபெற்றுச் செல்வார்கள்.

சிறிது நேரம் குந்தலாம்பாள் முற்றத்தில் கால் தொங்கவிட்டுக்கொண்டு உட்கார்வாள்.
கண்ணை மூடிக்கொண்டு மல்லி அரும்புகள் விட்டுச் சென்ற நறுமணத்தை ஆழ்ந்து சுவாசிப்பாள்;
பூத்தொடுக்கும்போது, நைப்பாக இருக்கப் பெண்கள் தண்ணீர் தொட்டுத் தொட்டு நார் நனைப்பார்கள் அல்லவா;
அப்போதுச் சொட்டுச் சொட்டாய்ச் சிதறியத் தண்ணீர் ஆங்கங்கேத் திட்டுத் திட்டாய் நிற்கும்;
அந்தத் திட்டுகளில் பச்சைப் பச்சையாக மூக்குத்திகள் போல் மல்லிகைக் காம்புகள், அமுங்கிக் குளிக்கும் அழகை ரசிப்பாள்;
சொதசொதவென தண்ணீரோடு அந்த மல்லிகைக் காம்புகளின் குவியல்களை வாசனையோடு அள்ளி அப்புறப்படுத்துவாள் குந்தலாம்பாள்.

கால மாற்றம்.
காட்சிகள் மாற்றம்.
அதே பட்டகசாலையில் இப்போது ரப்பர் ஷீட்டோடு போகும் கழிவுகளைச் சுத்தம் செய்து, எடுத்து வெளியேற்றுகிறாள் குந்தலாம்பாள்.
******************************************
“உடம்புக்கு என்ன பண்ணித்து...?”
“திடீர்னு என்ன சேஞ்சுது...? திடமாத்தேனே இருந்தேர்...?”
“இரும்பாட்டம் இருப்பரே... இப்படி ஆனாரே...!”
“இப்படித்தான் என் பெரிய மச்சினர் சினேகிதனுக்கு கோமா வந்து படுத்த படுக்கையாயிட்டார்.... மெட்ராஸ்ல எல்லா டாக்டரும் கைவிட்டுட்டா...”
“திருக்கடையூர்ல கால சம்ஹார மூர்த்திக்கு காசு முடிஞ்சி வையுங்கோ மாமி...”
“மாமி...! வைத்தீஸ்வரன் சந்நிதீல முடி கயறு வாங்கிண்டு வரச்சொல்லி மாமா கைல கட்டுங்கோ... ரெண்டு நாள்ல டிங்குன்னு எழுந்து உட்கார்ந்துடுவர்...”
மாதய்யா அருகேயே உட்கார்ந்து சேவை செய்துகொண்டிருந்த ‘எம்பிபிஎஸ்’ ஐந்தாண்டுகள் படித்த டாக்டர் அருணகிரிக்கு இவர்கள் பேச்செல்லாம் வேடிக்கையாய் இருக்கும்.
வேறு ஒருத்தர் வருவார்...
“இதுக்கெல்லாம் அலோபதி உதவாது... சித்தா ட்ரை பண்ணுங்கோ...”
ஆலோசனை சொல்வார்.
வெளியே போவார்.
“இது தேராத கேஸ்...” என்று ரகசியமாகக் குசுகுசுப்பார்.
“கோமாவுல படுத்தவங்க முடிவு எப்படீனு சொல்லமுடியாது. ஒரே நாள்ல தீந்தாலும் தீரும்... வருஷக் கணக்குல இழுத்தாலும் இழுக்கும்... பாவம் குந்தலாம்பாளுக்குத்தான் சிரமம்...”
சொல்லிவிட்டுப் போவாள் ஒருத்தி.
“டாக்டர் சார்...! நான் கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதேள். இவர் பிழைப்பார்னு நீங்க நம்பறேளா...?” கேட்டார் ஒரு அறிவு ஜீவி.
இப்படியாக மாதய்யாவின் வியாதிக் காண்டம் ஏழு நாட்களைக் கடந்துவிட்டன.
பாடசாலை வித்யார்த்தி சுப்ரமணியன் சாயரக்ஷை விளக்கு வைக்கும் நேரம் வருவான்;
மாதய்யாவின் தலைமாட்டில் அமர்ந்து ‘விஷ்ணு சகஸ்ரநாமத்தை அரைமணி நேரம் சொல்லுவான்;
அது ஒன்றுதான் ஆறுதலான விஷயமாய் இருந்தது குந்தலாம்பாளுக்கு.
******************************************
“அம்மா...!”
“ம்...”
“எனக்கு...”
“உனக்கு...?”
“லீவு....இல்லம்மா...”
“ம்...”
“..................”
“ஊருக்குப் போணுமா தொரை...?”
“ம்...”
“நீ மட்டுமா...! இல்ல....?”
“மோகனா இங்க இருக்கட்டும்மா...!”
“சரி... போயிட்டு வா...!”
“நாளைக்குப் புறப்படலாம்னு...!”
“..........................”
குந்தலாம்பாள் டாக்டரிடம் வந்தாள்.
“துரைக்கு லீவில்லையாம். நாளைக்கு ஊருக்குப் பேறேன்னான்... சரீன்னுட்டேன்...”
“இன்னிக்கு டாக்டர் கே சி கண்ணனை திருச்சீலேந்து வரச் சொல்லியிருக்கேன். ரெண்டு நாள்ல நினைவு திரும்புமோன்னு தோணறது... இருந்துட்டுப் போலாமே...!”
அபிப்ராயம் சொன்னார் டாக்டர் அருணகிரி.
முள்ளின் மீது கிடப்பது போல இருந்தான் துரைராமன்.
டாக்டர் கே சி கண்ணனும், டாக்டர் அருணகிரியுமாக ஆலோசனை செய்தார்கள்.
ஊசிகளும் மருந்துகளுமாக நரம்பின் மூலம் செலுத்திக்கொண்டே இருந்தார்கள்.
இப்போ கொடுத்த ட்ரீட்மெண்ட்டுக்கு சுய நினைவு திரும்பிடணும். அது இல்லேன்னா இல்லேதான்...”
விரல் விரிய கையை அகல விரித்துக் மேலே காட்டியவாறு உறுதியாகச் சொல்லிவிட்டார் அருணகிரி.
******************************************
இரண்டு டாக்டர்களும் சேர்ந்துக் கொடுத்தச் சிகிச்சையின் சக்தியோ;
வெளிநாட்டிலிருந்து வருவித்துக் கொடுத்த சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளின் பலனோ;
கிரக நிலைகளின் சாதகங்களோ;
குந்தலாம்பாளின் மாங்கல்ய தீர்க்கமோ;
வீட்டில் அவ்வப்போது செய்யும் விசேஷ பூஜைகளின் சக்தியோ...

அணையப் போகும் முன் தீபம் பிரகாசம் கூட்டுவது போலவோ....;
மாதய்யா கண்விழித்துப் பார்த்தார்.
அருணகிரியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.
குந்தலாம்பாளை ஜாடைக் காட்டி அழைத்தார்.
துரைராமனை அருகே வரச்சொன்னார்.
சூழ்ந்திருந்த அனைவரையும் ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்தார்.
துரைராமனிடம் நேருக்கு நேர்ப் பார்த்துப் பேசுவதை மாதய்யா அறவே நிறுத்திப் பலவருடங்கள் ஆகிவிட்டது.
இன்று நேருக்கு நேர்ப் பார்க்கிறார்...!
பேச முடியவில்லை.
ஏதோ சொல்ல நினைக்கிறார்...
வாய் அசையவில்லை.
‘ஏண்டா துரை, எங்கியோ போய் எவனுக்கோ உழைச்சிக் கொட்டயே. இங்கே இருந்து விவசாயத்தைப் பாரேன்.!’
சொல்ல நினைத்திருக்கலாம்...
‘நான் காலமான பிறகு என்னை கோவில் சம்பா காணிவழியாத்தான் எடுத்துண்டு போகணும்...!’
அறிவிக்க எண்ணியிருக்கலாம்.
‘கலியனை வரச்சொல்லு...;’
என்றிருக்கலாம்.
‘உனக்கு சென்னை திருவல்லிக்கேணில ஒரு வீடு வாங்கி ரிஜிஸ்தர் பண்ணி வெச்சிருக்கேண்டா துரை...;’
ரகசியத்தை உடைத்திருக்கலாம்...
‘அந்தக் கிட்டாவோட ஸ்நேகம் வேண்டாம்டா. அவன் குடி கெடுத்துடுவான்...’
எச்சரித்திருக்கலாம்...
என்ன நினைத்தாரோ... ஏது நினைத்தாரோ... பகவானுக்குத்தான் வெளிச்சம்.
குந்தலாம்பாளை நோக்கிக் கையை நீட்ட, அவள் ஆதரவாய்ப் பிடித்துக்கொண்டாள்.
******************************************
கண்கள் ஒரு கணம் மின்னல் போல் பிரகாசமாய் ஒளிர்ந்தது.
‘டக்’ கென மூடிக்கொண்டன.
“ஏந்நா....ஏந்நா....!”
மாதய்யாவின் நெஞ்சை உலுக்கினாள் குந்தலாம்பாள்.
டாக்டர் அருணகிரியும் நெஞ்சைப் பிசைந்துவிட்டார்.
அவர் உதடுகள் “மாது... மாது...” என்று பால்ய சினேகிதன் பெயரைப் பாசத்தோடு அரற்றியது.
‘நாடி’ பிடித்துப் பார்த்தார்.
ஸ்டெத் வைத்து எடுத்தார்.
கண்ணின் கீழ் இழுத்து விழியைச் சோதித்தார்.
உதடு பிதுக்கினார்.
பால்ய ஸ்நேகிதன் மாதய்யாவுக்காக கண்ணீர் சிந்தினார் டாக்டர்.
“மாமா...! மாமா....!”
அழுதாள் மோகனா. துரைராமனின் மனைவி.
அம்மாவின் அழுகுரல் கேட்டுத் திண்ணையில் சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்த ரஞ்சனி உள்ளே வந்து ஆச்சர்யத்தோடும் பயத்தோடும் விழிகளை அகல விரித்து விழித்தாள்.
“அம்மா எதுக்கு அழறாங்க பாட்டி...”
“....................”
“ஏன் பாட்டி பேச மாட்டேங்கறீங்க...?”
கேட்டுக் கொண்டே அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டாள்..
“அழாதம்மா...!” என்றாள்.
உறவினர்களுக்கு தந்தி கொடுக்கச் சொல்லி கிட்டாவிடம் விலாசமும், பணமும் கொடுத்தான் துரை.
பதினாறு நாட்களுக்கு லீவு கேட்டு ஆபீசுக்கும் தகவல் தரச்சொன்னான்.
******************************************
கலியன் தேம்பித் தேம்பி அழுதான்.
கனத்த இதயத்துடனும், ஆறாய்ப் பெருகும் கண்ணீருடனும், இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான் கலியன்.
அவன் கண்களில் கண்ணீர் அடங்கவே இல்லை.
தந்திக் கிடைத்ததும் அவசரமாய்ப் புறப்பட்டு வந்துவிட்டார் சுப்பாமணி.
‘அத்திம்பேர்...!.அத்திம்பேர்...!’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார்.
“குந்தலா...! முன்னமே எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா...?”
அழுகைக்கு நடுவில் அக்காவின் கையைப் பற்றியபடி அரற்றினார் சுப்பாமணி.
ஐந்து பத்து நிமிஷங்களுக்கெல்லாம் இயல்பாக வெளியில் நடமாடினார்.
அடுத்தடுத்துக் காரியங்கள் ஆக வேண்டுமே...
******************************************
புரோகிதர் வந்தாயிற்று.
சட்டி, பானை, மடக்கு, கலயம், எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனான் குயவன் விருத்தாச்சலம்.
“கதறிக் கதறி அழுதாலும் மாண்டவங்க திரும்பி வரவாப் போறாங்க.. அடுத்து ஆகவேண்டியதைப் பாரு.”
பின்கட்டிலிருந்து அரிவாள் கொண்டு வந்து கலியன் முன் வைத்தார் சுப்பாமணி.
‘கலியா... நான் செத்ததும், என்னை நம்ப சம்பாக்காணி வழியாத்தான் தூக்கிப் போவணும்.’
மாதய்யாவின் ஆசையை, அவரின் கடைசீ விருப்பத்தை யாரிடம் எப்படிச் சொல்லி நிறைவேற்றுவது...?’
மனசு முழுதும் அது ஒன்றுதான் நிறைந்திருந்தது கலியனுக்கு.
******************************************
அன்னாந்துப் பார்த்தபடி விரக்தியாய் தோட்டத்தில் வந்து நின்றான் கலியன்.
தஞ்சைப் பெரிய கோவில் கோபுரத்தை அண்ணாந்துப் பார்த்து 'எப்படித்தான் இவ்வளவு பெரிய கோவிலையும் கோபுரங்களையும் திட்டமிட்டுக் கட்டினானோ! ராஜராஜ சோழன்...!'
ஆயாசத்தோடும் ஆச்சரியத்தோடும் பார்க்கும் சுற்றுலாப் பயணியைப் போலவும்…
தோட்டத்தை இன்றுதான் புதிதாகப் பார்ப்பவன் போல ஒரு பார்வைப் பார்த்தான் கலியன்.
கொத்துதலும், முள் அறுப்பதும்... காலம் தவறாது செய்வதால், வாளிப்பாய் உயர்ந்து, ஓங்குதாங்காய் நல்லப் பராமறிப்பில் நிற்கும் மூங்கில் குத்துக்கள்;
புளி, மா, பலா, கொய்யா, தென்னை இப்படிப் பெரு மர வகைகள் ;
கொளஞ்சி நார்தங்காய், கிடாரங்காய், பப்பாளி, அகத்தி, முருங்கை, கறிவேப்பிலையெனச் சிறு மர வகைகள் ;
பூவன், பேயன், மொந்தன், ரஸ்தாளி, நேந்திரங்காய் ... வகைவகையாய் வாழை ரகங்கள் ;

சுண்டை, வெண்டை, கொத்தவரை, கத்தரி, செடியா அவரை, பச்சை மிளகாய் - காய்கறிகள் ;
புதினா, மல்லி, புளிச்சக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை எனக் கீரை வகைகள் ;
பல வண்ணச் செம்பருத்தி , பன்னீர் ரோஜா, பவளமல்லி, பாரிஜாதம், இட்லிப்பூ, இருவாட்சி, கல்கண்டு ரோஜா போன்ற பூ மரங்கள் ;
அவரை, பட்டாணி, பூசணி, பறங்கி, பீர்க்கை, புடல் , பாகல் போன்ற கொடிகள் ;

பல்வேறு வண்ணங்களில் பூக்கும் காசித்தும்பைச் செடிகள் ;
மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி, சங்கு புஷ்பம் போன்றக் கொடி வகைகள் ;
நொச்சி, மருள், கத்தாழை, சித்தரத்தை, கிழாநெல்லி குப்பைமேனி போன்ற மருந்துச் செடிகள் ;
புதுடெல்லி குடியரசு தின அணிவகுப்பின்போது பல்வேறு படைக் குழுக்களையும், சாதனைக் காட்சிகளையும் வரிசையாகவும் நேர்த்தியாகவும் பிரித்துப் பிரித்துப் பாங்காய் வடிவமைத்து வைத்திருப்பார்களே அது போல…

நூலக அறிவியல் படித்தவர் நூல்களைத் தரம்பிரிந்து அடுக்கி வைத்த சிறந்த நூலகத்தைப் போல...
பல்வேறு தாவர இனங்களையும், ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல், சிறிது கூட ஒழுங்கு குறையாமல் தேர்ந்த தோட்டக்காரனாய் பராமரித்து வந்த மாதையா இப்போது இல்லை என்பதை நினைத்தபோது கலியன் கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்டியது.
(Multiple personality disorder ) பல்வகை ஆளுமை நோய் என்கிற மனநோயில் பாதிக்கப்பட்டவனைப் போல கலியன் மனம் பாழ்ப்பட்டு நின்றது .
மனம் தடுமாறியது.
பேரிழப்பைச் சந்திக்கும்போதும், மனம் தடுமாறும் பொழுதும், ஏற்படும் பிடிப்பற்ற ஒரு நிலையில் தோன்றும் வெற்றிடத்தை நிரப்ப, மனிதன் தன் உள்ளே நோக்குகிறான்.
துக்கம் உள்ளொளியை உருவாக்குகிறது.
பல்கிப் பெருகுகிறது.
மாதய்யாவோடு அவன் உறவின் வலிமையை ஸ்திதப் பிரக்ஞ தரிசனம் செய்கிறான்.
அந்தத் தோட்டத்தில் மாதையாவோடு அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கண் முன் நிழலாடின.
இறந்த காலம் என்னும் பெரும் குழியில் தன் தலையைப் புதைத்துக் கொள்வது மட்டுமே அவனுக்கு ஆறுதலைத் தந்தது.
******************************************
மூங்கில் கொத்தருகே சென்றான்.
அரிவாள் அலக்கால் முள்ளைக் கழித்துப் பாங்காய் அடுக்கினான்.
மூங்கிலை வெட்டிச் சாய்த்தான்.
கணுவடித்துத் துண்டு போட்டான்.
பிளாச்சுப் பிளந்தான்.
தொப்புளடித்துச் சீவிசி சிலாம்புகள் அகற்றினான்.
அங்கங்கள் மட்டுமே அசைந்து, அலைந்து அனிச்சையாய் வேலை செய்தது...
‘மனசு மட்டும் மாதய்யாவின் கடைசீ ஆசையை எப்படிப் பூர்த்தி செய்யலாம்...’ என்பதைப் பற்றியேச் சுற்றிச் சுழன்றது.
‘மாதய்யாவின் விருப்பம் நிறைவேறுமா...?’
கேள்வி வந்தது.
‘யாரிடமாவது சொல்லப்போய், எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட்டால்...?’
அச்சம் வந்தது.
போகிற வழிப் படுக்கைக்கு பச்சை மட்டை வெட்டவும்;
போகிற வழி தாகத்துக்கு செவ்விளநீர் பறிக்கவும்;
தென்னை மரத்தடியில் வந்து நின்ற கலியனுக்கு அடக்க முடியாமல் அழுகைப் பீரிட்டுக்கொண்டு வந்தது.
******************************************
காலக் காற்றில் கரைந்து போன பல்வேறு நறுமணங்களாய் முன்னே வந்து நின்றன பழைய நினைவுகள்.
செவ்விளநீர் மரத்தையே வெறித்தபடி, பிரமை பிடித்தாற்போல் நின்றான்.
காப்புக் கட்டுக்கு முதல் நாள், இதே மரத்துக்கு முன்னால், மாதையாவுக்கும் அவனுக்கும் இடையே நடந்த உரையாடல் இப்போதுப் போலச் செவியில் ஒலித்தன.
"மரத்துல ஆறு குலை இருக்குதா கலியா...?"
"ஆமாங்கய்யா...!"
"இன்னைக்கு ஒரு கொலை இறக்கு ;
“ம்...”
“எளனிக் கொலைய கிணத்துல போட்டு வெச்சி, தினமும் ரெண்டா அபிசேகத்துக்கு அனுப்பணும்னேன். எல்லையம்மன் மனசு குளிரணும்னேன்.”
“செரிங்கய்யா…”
ஒரு குலை, அஞ்சு நாளைக்கு எல்லையம்மன் அபிஷேகத்துக்கு வரும்;
“வர்ற வாரம் இன்னொரு கொலை எறக்கிக்கலாம்."
"எறக்கிக்கலாங்கய்யா.."
"கலியா... இப்ப சொல்றேன் கேட்டுக்க;
“என் தலை விழுந்தா 16 நாள் காரியத்திற்கும் இந்த செவ்விளநீர் தான் வெட்டி கொடுக்கணும்!"
'அன்றுப் பேசியப் பேச்சுப் பின்னால் வரப்போகும் அமங்கலத்துக்கு முன்னறிவிப்போ ...!'
இப்போதுத் தோன்றியது அவனுக்கு
******************************************
கலியனுக்குப் பத்து வயது இருக்கும்.
“கலியா இதை உன் கையால வெய்யி...” தென்னம்பிள்ளையைக் கையில் கொடுத்தார் மாதய்யா.
தன் கையால் வைக்கப்பட்டத் தென்னை அது.
“கலியா... மேலக்கோவில்ல அபிஷேகத்துக்கு ஒரு குலை எளநீ அறுடா...”
அய்யாச் சொல்லி அறுத்திருக்கிறான்.
“சாம்பிராணித்தைலம் தடவி, காராம் பசுப் பால் ஊற்றி, செவ்விளநீர் வார்த்து ஆண்டவனுக்கு அபிஷேகம் பண்ணினா, சொர்க்கம் நிச்சயம்டா...!” என்பார் மாதய்யா அடிக்கடி.
யார் வீட்டில் தலை விழுந்தாலும் இந்த மரத்துச் செவ்விளநீரைத்தான் அனுப்புவார் மாதய்யா.
‘சுற்றுப்பத்துக் கோவில்களுக்கெல்லாம் அபிஷேகத்துக்கு ஏகமாய் இளநீர் தந்த அய்யாவுக்கு நிச்சயமாய் சொர்க்கம்தான்...!’
மாதய்யாவின் இறுதியாத்திரைக்காக இளநீர் வெட்டுவதை நினைத்தபோது, மரம் ஏறவே ஆயாசமாக இருந்தது கலியனுக்கு.
மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுத் தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து, மரம் ஏறத் தலைக்கயிறாக முறுக்கிக் கட்டினான்.

மரம் ஏறி வாகாய் மட்டைச் சந்தில் அமர்ந்தான் கலியன்.
நூல்கயிற்றை இடுப்பிலிருந்து விடுவித்தான்.
ஒரு காம்பு இளநீர் குலையைக் கட்டினான்.
கருக்கான அரிவாளால் ‘சரக்’ என அடிக்காம்பை அறுத்துவிட்டான்.
மட்டை இடுக்கின் வழியாக லாகவமாய்க் கயிற்றை விட்டுக் குலை இறக்கினான்.
இளநீர்க்குலைத் தரையைத் தொட்டதும் கயிற்றைத் தளர்த்தினான்.
மட்டைகளின் நடுக்காலில் வீசி நின்ற, அகலமும், வாளிப்புமான ஒரு மட்டையை வெட்டிச் சாய்த்தான்.
‘எலே கலியா...! இந்த மரம் நல்லா ஓங்கு தாங்கா வளந்துப் பலன் தரும்போது நானும் உன் அப்பனும் இருப்பமோ, மாட்டமோ...! இந்த மரத்துல நெத்து சாத்தி இந்த வம்சத்தை விருத்தி பண்ணணும்டா கலியா...!’
கலியனது பத்தாவது வயதில் மாதய்யா சொன்னது இப்போது போலக் காதில் ஒலித்தது.
‘அடுத்த காம்பை நெற்றுக்கு நிறுத்த வேண்டும்’
தீர்மானித்துக் கொண்டான் கலியன்.
“உயர்ந்த மர மேறிச், சிவந்த குலை யிரக்கி,
பரந்து விரிந்த ஒத்தைப், பச்சை மட்டை வெட்டி,
தேங்காய் நார் கயிராலேக், கடைசீ படுக்கைக் கட்டி
அய்யாவை அனுப்ப... ஆயத்தம் ஆவுறேனே...!.
மனசு அழ அழப் பச்சை மட்டையின் இரண்டு பாகத்தையும் தனித்தனியாகக் கிழித்துப் போட்டான்.
பச்சைப் படுக்கை முடைய வாகாய் ஒரு செங்கல்லைப் போட்டுக்கொண்டுக் குந்தி உட்கார்ந்தான் கலியன்.
******************************************
இரும்பு ஆணியும், விரளிமஞ்சளும் புடவைத்தலைப்பில் முடிந்துக் கொண்டு பெண்கள் துக்கம் கேட்கத் திரண்டுவிட்டனர்.
புடவைத் தலைப்பால் வாய் பொத்தியும், கன்னத்தில் கை நட்டும், தலை குனிந்தும், குந்தியும், ஒரு சாய்த்தும் அமர்ந்திருந்தனர் பெண்கள்.
அவ்வப்போது ஒப்பாரி ஓசை எழுப்பிச் சூழ்நிலையை இறுக்கமாக்கினர்.
புதிதாக வருவோர்கும் துக்கமூட்டினர்.
“சொல்லிக்கப் படாது..!”
என்று சொல்லித் திரும்பினர் சிலர்.
உள்ளே, வெளியே, திண்ணை, சாரமனை, வராண்டா, நடு வீதி, என எங்கெங்கும் ‘எப்போது எடுப்பார்கள்’ என்ற எதிர்பார்ப்பில் நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டும் இருந்தது உறவுகளும் நட்பும்.
நிமிர்த்திய கட்டை விரலை நெற்றிக்கு நேரே இடதும் வலதுமலாய் நகர்த்தி, ‘தலையெழுத்து..” என சமிக்ஞை செய்தார் ஒரு தாத்தா.
ஆகாசத்தைக் காட்டி ‘இறைவன் கட்டளை’ என்று ஆறுதல் சொன்னார் மற்றொருவர்.
“சாஸ்திரிகளே எவ்ளோ சாவாசம் ஆகும்ன்னா...?” கேட்டார் சாம்பசிவம். புகையிலையைக் கிள்ளிக்கொண்டே.
“ இன்னும் அரை மணி நேரத்துல தயாராயிருமா...?” சும்மா கேட்டு வைத்தார் கோதண்டம், வாகனம் தயார் செய்யும் கலியனிடம்

“தருப்பைப் புல் போதாது நிறைய வை கலியா... ” தர்ப்பைக் கட்டை நான்கு விரலால் அழுத்தியபடி சொன்னார் சவண்டி சாமாளி.
“இவ்வளவு மெல்லீசா இருக்கே கயறு.. அந்தக் காலத்துல...” பழைய புராணம் பாடினார் ‘நானோஜெனேரியன்’ நாகராஜன்.
பிச்சை அதை வழி மொழித்தார்.
“ஏகப்பட்ட ட்ராஃபிக் லேட்டாயிடுத்து!” யாரும் கேட்காமல் தாமாகவே சொன்னார் கோவிந்து.
அழுகை, புலம்பல், ஒப்பாரி, எல்லாம் வெவ்வேறு டெசிபல்களில் வருவதும் அடங்குவதுமாக இருந்தது.
******************************************
புண்யாக கும்பத்தில் ‘கூர்ச்சம், மாவிலை, தேங்காயெல்லாம் வைத்தார் சாஸ்திரிகள்..
துரை,“பவித்ரம் அணிந்து, தர்ப்பையை இடுக்கியபின் “சுக்லாம் பரதரம்….” வாங்கிச் சொன்னான்
‘வருண பகவானை’ கும்பத்தில் ஆவாஹனித்தார் சாஸ்திரி.
“அசேஷே.. ஹே பரிஷத்...”
“...ஸர்வேஷாம் பாபானாம்.. ஸர்வப் ப்ராயச்சித்தம் கரிஷ்யே.”
துரை அப்பாவின் வாயில் கங்கை சொம்பு நீரைச் சாய்த்தான்.
“கர்ண மந்த்ர படனகாலே ‘கோ’, ‘தில’, ‘தீப’, ‘உதகும்ப’ தஸ’ தானங்களும் கிரமமாக முடிந்தன.
ப்ராயச்சித்தம் ஆயாச்சு… என்கிறார் சாஸ்திரி.
ஒரு முறை பெண்டுகளின் ஊளைச் சத்தம் உச்சம் தொட்டு அடங்கியது.
“அழப்படாது..! ஆன்மா சாந்தி அடைய எல்லாரும் பகவான் நாமம் சொல்லணும்..” என்றார் சாஸ்திரி
பந்துக்கள் வீதியில் தெற்கு முகமாக நமஸ்காரம் ஆயிற்று.
“ஸரீர சுத்தார்த்தம், ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் அகண்ட காவேரீ ஸ்நாநம் கர்த்தும்”
‘பின்கட்டு’க் குளியலறையில் தலைமுழுகி , ஈரவஸ்திரத்துடன், வந்த மோகனா குடத்து நீரை மாமனார்மீது ஊற்றினாள்.
புரோகிதர் நீட்டிய ‘மடக்கிலிருந்து’ விபூதியைக் கிள்ளிக் குழைத்து மாதய்யா நெற்றியில் பூசினான் துரை.
விரட்டி, சிராத்தூள் , உமி, மண்பாண்டங்கள், சோம்பு, இளநீர், மட்டைத் தேங்காய், கிராத்தூள், தொன்னைகள், காடாத்துணி, தீக்ஷா வஸ்த்ரம், நக்ன வஸ்த்ரம்.. எல்லாம் தயாராக இருந்தது.
துரை புது வஸ்திரம் கட்டிக்கொண்டான்.
‘ஷண்நிமித்த ப்ராயச்சித்தம்’ முடிந்தான்.
‘ப்ரேத ஔபாஸன அக்னி ஸந்தானம்’ ஆயிற்று.
இடது கை அத்தி சமித்தை வலது கைக்கு மாற்றி அக்னியில் வைத்துப் புனிதமாக்கி ‘அக்னி கரணம்’ செய்தான்.
தொடர்ந்து.. ‘அயாச்ய ஹோமம்’, ‘உத்தபனாக்ந சந்தான ஹோம’மும் முடிந்தது
‘மரண சாந்தி ஹோமம்’ முடித்து சவத்தின்மேல் தண்ணீர் தெளித்துவிட்டு (‘அப்பிரதஷிண)’இடமாகச் சுற்றி வந்தான்.
‘பிரேத அன்வாரப்தம்’ தொடங்கிற்று.
பிரேதத்தின் கையில் நீளமான கயிற்றின் ஒரு நுனியைக் பாவனையாகக் கட்டி, ஹோமம் நடக்கும் இடத்தில் கர்த்தாவின் தொடைவரை நீட்டினார்கள்.
“கயிறை தாண்டப்படாது. தோஷம் வரும். குறுக்கே நெடுக்கே போயிட வாண்டாம்!”
யோகவேஷ்யணிந்த தொப்பை பிச்சுமணி கத்தினார்.”
‘இனியும் தாமதம் செய்யக்கூடாது. என்றது கலியனின் உள்ளுணர்வு.
யாரிடமாவது அய்யாவின் கடைசீ ஆசையைச் சொல்லிவிடவேண்டும்..’
துடித்தான் கலியன்.
******************************************
“அய்யா உங்க கிட்டே அவசரமா ஒண்ணு சொல்லணும்.
“சொல்லு...” என்றார் சுப்பாமணி.
உங்க கிட்ட சொன்னாத்தான் நடக்கும்…” என்ற பூர்வ பீடிகையுடன் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னான் கலியன்.
“மொதல்லயே சொல்ல வேண்டாமா கலியா...! சரி சரி.. முயற்சி பண்ணிப் பாக்கறேன்...”என்றார்.
புரோகிதர் அருகில் வந்தார் சுப்பாமணி.
அதே நேரம், “சாஸ்திரிகளே... பிரேதம் பக்கத்து ஊர் வழியாத்தோனே போகணும்...?”
பலமாய்க் கேட்டார் கிட்டாவய்யா.
சுப்பாமணிக் கேட்க நினைத்ததை அவர் கேட்டுவிட்டதால் சுப்பாமணி அமைதியாக இருந்துவிட்டார்.
“ஏன்...கிட்டா... அதுதானே நடமுறை... புதுசா கேக்கறேள்...?” என்றார் குப்புராமன்.
“கடைசீயா நம்ம ஊர்ல காலமான குருக்களாத்து ராமுவை தூக்கிண்டு போக விடாம மறிச்சாளே முத்தனூர்காரா... அதனால கேட்டேன்...”
கிட்டாவய்யாவின் இந்தக் கேள்வி, உறவினர்கள் முதல், பாடை தூக்கிகள் உட்பட எல்லோரையும் அதிர வைத்தது.
******************************************
ரேழியில் ஒரு மூலையில் உட்கார்ந்தபடி, மாதய்யாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த குந்தலாம்பாள் காதில் வாசலில் நடந்த உரையாடல் விழுந்தது.
ரௌத்ரமானாள்.
ஒரு முடிவுடன் எழுந்தாள்.
வாசல்படி தாண்டி வாசலுக்கு வந்தாள்.

குந்தலாம்பாளைத் தொடர்ந்து அவள் வயதொத்த பெண்கள் அவளைத் தொடர்ந்து வந்தனர்.
தெருவில் கோலம் போடும் இடத்தில் அமர்ந்து காரியம் செய்து கொண்டிருந்த இடத்துக்கு வந்தாள்.
மகன் துரைராமன் பின்னால் வந்து நின்றாள்.
“சாஸ்திரிகளே...!”
பலமாக அழைத்தாள் குந்தலாம்பாள்.
“என்ன பேச்சு நடக்கறது இங்கே...ம்...!” சிங்கம் போல் கர்ஜித்தாள்.
குந்தலாம்பாளிடம் இப்படி ஒரு கர்ஜனையை எதிர்பார்க்காத அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்.
கிட்டாவய்யா இடத்தை விட்டு நழுவினார்.
சூழ்நிலை மேலும் இறுக்கமானது.
தொடரும்...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.