வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
"இது என்னவென்றுத் தெரியுமா?"
மேஜை மேல் இருந்த அந்த பளபளக்கும் பொருளைப் பார்த்துவிட்டுத் தன் நண்பனைக் கேட்டான் ஜே என்று அழைக்கப்படும் Jeremiah.
"வாங்கும் போது தெரியாது. இப்போதுத் தெரியும், கூகுளின் தயவால், ஆரரி[சூரியக் குடும்பத்தின் இயந்திர மாதிரி] (Orrery)", என்றான் ரஃபிக்.
"என்னவென்றேத் தெரியாமல் எப்படி வாங்கினாய்?"
"அதுதான் எனக்கும் தெரியவில்லை. உனக்குத் தெரியுமல்லவா - விடுமுறை நாட்களில் நான் கால் போன போக்கில் ஊருக்குள் நடந்து வருவேன் என்று? ஒரு புதிய இடத்தைப் பழகிக் கொள்ள அதைவிட சிறந்த வழியில்லை. அப்படித்தான் இன்று காலையும் கிளம்பினேன். கால்கள் என்னை 'Grand Manor' என்னும் மாளிகை இருக்கும் தெருவிற்கு அழைத்துச் சென்றன. வாசலில் 'Estate Sale' என்று ஒரு போர்டு இருந்தது. நிறைய பேர் உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரிடம் விசாரித்தேன், 'Estate Sale' என்றால் என்னவென்று. அவர்தான் சொன்னார் அது அந்த வீட்டின் பொருட்களை விற்பது என்று. இதுவரை இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதில்லையா… உள்ளே சென்றேன். இதைப் பார்த்ததும் ஏனோ வாங்கவேண்டும் என்றுத் தோன்றியது".

"'Grand Manor' லா வாங்கினாய் இதை?" என்றுக் கேட்ட ஜே சற்று நேரம் அந்த ஆரரியையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஏன், ஜே? என்ன விஷயம்? 'Grand Manor' என்று ரொம்பத் தெரிந்தவன் போல் பேசுகிறாய்?"
"நீ இந்த நாட்டுக்கேப் புதிதல்லவா? இந்த நாட்டுக்கும் இந்த ஊருக்கும் நீ வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதனால் உனக்கு 'Grand Manor'ஐப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை".
"Naturally, எனக்கு எப்படித் தெரியும் உங்கள் ஊர் மனிதர்களும் வரலாறும்? நீ தான் சொல்லேன். யாருடைய வீடு அது? அதை வீடு என்று சொல்வதற்குக் கூட எனக்கு வாய் வரவில்லை. எங்கள் நாட்டிலெல்லாம் இதை அரண்மனைக் கணக்கில் சேர்த்து விடுவோம்".

"Dude, அமெரிக்காவில் ஏது ராஜாக்களும் அரண்மனைகளும்? ஆனால் அவர்களுக்கு நிகராக செல்வத்திலும் சமுதாயத்திலும் கோலோச்சியவர்கள் இருக்கிறாரார்கள். அப்படிப்பட்ட ஒரு குடும்பம் தான் இந்த 'Grand' குடும்பம்".
"அப்படியென்றால் அவர்கள் மிகப் பழம்பெரும் குடும்பமாக இருந்திருக்கவேண்டும்".
"ஆம். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துத் தொடங்குகிறது அவர்களின் சரித்திரம். இந்தக் குடும்பத்தின் முதல் Mr. Grand-ன் செல்வம் எங்கிருந்து எப்படி எதன் மூலம் வந்தது என்பதற்கான ஆதாரப் பூர்வத் தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் கதைகள் உண்டு. கடல் கொள்ளையில் கிடைத்த பெருஞ்செல்வம், தங்கச் சுரங்கத்தில் கிடைத்தக் காசு, ஆப்பிரிக்காவில் அடிமைகளை வாங்கி விற்ற பணம் என்று உலவாதக் கதைகள் இல்லை. செல்வத்தை Mr. Grand எப்படி சேர்ந்திருந்தாலும், அவர் இங்கு வந்து தான் செட்டில் ஆகி இருக்கிறார். அப்போதிருந்த மிகப் பெரிய ஆர்க்கிடெக்ட்டுகளையும் கட்டிடக்கலை நிபுணர்களையும் வைத்து அவர் 'Grand Manor' ஐ உருவாக்கியதாகக் குறிப்புகள் இருக்கின்றன".
"இப்படிப்பட்ட காசு உள்ள கனவான்களிடம் ரசனைகள் கொஞ்சம் மட்டுப்பட்டு இருப்பதுதான் வழக்கம். ஆனால் இதை அவர் வைத்திருந்தார் என்றால் Mr. Grand இந்த வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்திருக்க வேண்டும்", என்றபடி தான் வாங்கி வந்திருந்த ஆரரியைப் பார்த்தான் ரஃபிக். பித்தளையின் பளபளப்புடன் வெவ்வேறு அளவிலான பித்தளை உருளைகளைக் கொண்டு அவன் மேஜை மீது உரிமையோடு அமர்ந்திருந்தது அது.
"அவருடைய இரசனைகள் எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால் அவருடைய மனைவியாக வந்த Sophie Grand -ன் இரசனைகள் மிக உயர்வானவை. 'Grand Manor' ன் உட்புறம் நீ பார்த்த அலங்காரம் முழுவதும் அவர் மேற்பார்வையில் அவர் இஷ்டத்திற்கு நடந்தது தான். Mrs. Grand ற்கு கலைகளில் மட்டுமல்ல, அறிவியலிலும் இலக்கியத்திலும் கூட மிகுந்த ஈடுபாடு உண்டு", என்றான் ஜே.
"அந்தக் காலத்தின் மிக அதிசயமானப் பெண்ணாக அவர் இருந்திருக்க வேண்டும்".
"ஆம். அதனாலேயே பலருக்கும் ஆச்சர்யம், எப்படி இப்பேற்பட்ட பெண் Grand போன்ற ஒரு மனிதரைத் திருமணம் செய்தார் என்று".

"அப்படியென்றால் Mrs. Grand தான் இந்த ஆரரியைக் கமிஷன் செய்திருக்கவேண்டும்", என்றான் ரஃபிக்.
"ஹே! இது எப்படி உனக்குத் தெரியும்?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் ஜே.
"என்னவென்றேத் தெரியாமல் வாங்கிவிட்டேனா… கூகுளின் தயவால் இந்த உலோகக் கன்டராப்ஷன் ஆராரி (Orrery) என்று மட்டும் தெரிந்தது. ஆனால் பிரத்யேகமாக இந்த ஆரரியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு புராதனப் பொருட்கள் விற்கும் கடைக்கு இதை எடுத்துக்கொண்டு போனேன். ரோஸலின் விட்மோர் என்ற அந்தக் கடையின் வயதான உரிமையாளர் தான் இதைப் பற்றியத் தகவல்களை எனக்குக் கூறினார்", என்றவன் அவனேத் தொடர்ந்தான்.
"1704-ஆம் ஆண்டு தான் இது போன்ற இயங்கும் மாதிரி முதன் முதலில் வடிவமைக்கப்பட்டு Charles Boyle என்ற நான்காம் Earl of Orrery யிடம் கொடுக்கப்பட்டதாம். அதனாலேயே இது போன்ற மாதிரிகளுக்கு 'orrery' என்று அவர் நினைவாகப் பெயரிடப்பட்டதாம். இதைத் தூக்கிக்கொண்டு கடைக்குள் நுழைந்ததும் ரோஸலின் விட்மோர் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார். இந்த ஆரரி அவருக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று போல. என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி இது எப்படி என் கைகளில் வந்ததென்று. 'Grand Manor' ன் எஸ்டேட் சேலில் வாங்கினேன் என்று கூறியதும் ஒரு கணம் அவர் முகம் இருளடைந்ததை நான் கவனித்தேன். அதைப் பற்றி அவரிடம் கேட்பதற்குள் அவர் சுதாரித்துக் கொண்டார்.
ஆரரியை லேசாக சாய்க்கச்சொல்லி அதன் அடிப்பாகத்தில் இருந்த முத்திரையைப் பார்த்து அவர் யூகத்தை உறுதி செய்துகொண்டார். அப்புறம் தான் என்னிடம் இது 'Grand' குடும்பத்தில் நூற்றாண்டுகளாக இருந்து வரும் சொத்து என்றும், கலைஞர்களையும் அறிவியலாளர்களையும் ஊக்குவிப்பதற்காக அவர்கள் பல கலைப்பொருட்களையும் இது போன்ற அறிவியல் மாதிரிகளையும் கமிஷன் செய்ததாகவும், அப்படிக் கமிஷன் செய்யப்பட்ட ஒன்று தான் இந்த ஆரரி என்றும் கூறினார்", என்று சொல்லி நிறுத்தினான்.

ஒரு நிமிடம் மௌனமாய் அந்த ஆரரியையே பார்த்துக்கொண்டிருந்த ஜே, "வேறு ஏதாவது சொன்னார்களா?" என்று கேட்டான்.
"இதை விற்பதற்கு விருப்பமா என்று கேட்டார்கள்".
"நீ இல்லை என்று சொல்லிவிட்டு இதை வீட்டிற்குக் கொண்டுவந்துவிட்டாய்", என்று முடித்தான் ஜே.
"பின்னே? 'எஸ்டேட் சேலில் வாங்கி இன்னும் வீட்டிற்குக் கூடப் போகவில்லை... அதற்குள் இதை விற்பதற்குக் கேட்கிறீர்களே?' என்று கொஞ்சம் கோபித்துக்கொண்டு வந்துவிட்டேன். அப்படி வேண்டுமென்றால் அவர்கள் போய் இதை வாங்கியிருக்கலாமே. இந்த ஊரில் நடக்கும் எஸ்டேட் சேல் அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?"
சற்று நேரம் அந்த ஆரரியையேப் பார்த்துக்கொண்டிருந்த ஜே, "இது இயங்குகிறதா?" என்று கேட்டான்.
"ஹா! அங்கே தான் கொஞ்சம் இடிக்கிறது,ஜே. நீயே பாரேன்", என்றவன் அந்த ஆரரியை இயக்கும் கைப்பிடியைப் பிடித்து சுற்றினான். தற்போதைய மாதிரிகள் போல் பாட்டரியும் மோட்டாரும் இல்லாதப் புராதன மாதிரி அது. கையால் சுற்றிவிடும் விசையும் அதன் இயக்கத்தில் சுற்றும் பற்சக்கரங்களாலும் ஆனது. கைப்பிடி சுற்ற ஆரம்பித்ததும் அந்த விசையால் பற்சக்கரங்கள் மெதுவே சுழல ஆரம்பித்து, ஒவ்வொரு கோளாக அதனதன் பாதையில் சுற்ற ஆரம்பித்தது, சனி கிரக உருண்டையைத் தவிர.
சுழலும் கோள்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வந்த ஜே, சனி கிரகம் சுற்றாமல் சுழலாமல் நிற்பதை பார்த்து நெற்றியைச் சுருக்கினான். அதன் அடுத்து இருக்கும் யுரேனஸும் நெப்ட்யூனும் அதனதன் பாதைகளில் தடையில்லாமல் நகருவதை பார்த்து, அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்து வந்து அந்த ஆரரியைப் பார்த்தான். சுற்றிவிட்ட வேகம் குறைந்து நிற்கும் நிலைக்கு வருவதை போல் இருந்த ஆரரியை அவனே ஒருமுறை நன்றாகக் கைப்பிடியை சுற்றி இயக்கிவிட்டான். எல்லாக் கோள்களும் தடையின்றி இயங்க, சனி மட்டும் அதன் இடத்தை விட்டு அசையாமல் இருந்தது, குதூகலித்து விளையாடும் பிள்ளைகளுடன் சேராமல் ஒதுங்கி நிற்கும் வீம்புக் குழந்தை போல்.
"ஏதேனும் இடிக்கிறதா என்ன?" என்றான் ஜே, ஆரரியை விட்டுப் பார்வையை அகற்றாமலேயே.
"அதையும் பார்த்துவிட்டேன். என் என்ஜினியர் கைகள் சும்மா இருக்குமா? ஆனால் எதிலும் எந்தப் பிரச்னையும் இருப்பதாகப் படவில்லை எனக்கு. ரோஸலின் விட்மோரும் கூட இதை ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை", என்றான் ரஃபிக் ஜேயின் கேள்விக்குப் பதிலாக.
"ம்… ", என்றான் ஜே, ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனாய். "ரோஸலின் அம்மையார் வேறு எதுவும் சொன்னார்களா?" என்று கேட்டான் திரும்பிச் சென்று சோபாவில் அமர்ந்தபடி.
"இதேக் கேள்வியை நீ இரண்டாம் முறையாகக் கேட்கிறாய். என்ன விஷயம், ஜே? ரோஸலின் விட்மோர் ஏதாவது என்னிடம் சொல்லியிருக்க வேண்டுமா? நீ என்னை இப்படிக் கேட்பத்தைப் பார்த்தால் ஏதோ நெருடலாகப் படுகிறது எனக்கு".
"அவர்கள் உண்மையிலேயே வேறு எதுவும் சொல்லவில்லையா?"
"இல்லை. ஒரு வேளை இன்னும் கொஞ்சம் நேரம் அவர்களிடம் பேசியிருந்தால் சொல்லியிருக்கலாம். நான் தான் கோபித்துக்கொண்டு வந்துவிட்டேனே!"
"சரி, அதை விடு. 'Grand Manor' க்குள் போனாயே… உனக்கு என்ன தோன்றியது அதைப் பார்த்தபோது?"
"எங்கள் ஊரில் ஒரு சொல் வழக்கம் உண்டு - "வாழ்ந்து கெட்டவர்' என்று. ஒரு காலத்தில் ஓஹோவென்று வாழ்ந்து ஊருக்கேப் படியளந்தவர் ஏதோ காரணத்தால் சீரும் செல்வமும் இழந்து நொடித்துப் போனவரை சொல்லும் சொல். 'Grand Manor' க்குள் நுழைந்த பின் அல்ல, நுழையும் முன்னேயே 'எஸ்டேட் சேல்' என்ற போர்டைப் பார்த்த உடனேயே அந்த வார்த்தைதான் எனக்குத் தோன்றியது".

"என்ன சொல் அது? 'வாலந்து ...?"
"அடப்பாவி! கொல்லாதே தமிழை! 'வாழ்ந்து கெட்டவர்'".
"Whatever... என் வாயில் நுழையவில்லை அது. ஆனாலும் நீ சொன்ன அந்த வார்த்தை தான் 'Grand' குடும்பத்தை விவரிக்க சரியான வார்த்தை.. உனக்கு ஏன் அப்படித் தோன்றியது?"
"அரண்மனைக்கு ஒப்பான ஒரு வீட்டின் முன் 'எஸ்டேட் சேல்' என்று போர்டு இருந்தால் வேறு எப்படித் தோன்றும்?"
"சரிதான்".
"Actually, இதை பற்றி நானே உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். Tell me, dude. ராஜ வம்சத்திற்கு ஈடான செல்வமும் அந்தஸ்தும் கொண்ட ஒரு குடும்பத்துக்கு 'எஸ்டேட் சேல்' போகவேண்டிய அவசியமென்ன? அப்படி என்னக் கஷ்டம் வந்தது அவர்களுக்கு?"
"Mr. Grand வாரிசுகள் ஏதுமின்றிக் காணாமல் போய்விட்டக் கஷ்டம் வந்தது".
"ஹாங்! What do you mean by 'காணாமல் போய்விட்டக் கஷ்டம்'?"
"Exactly what I say. Grand குடும்பத்தின் கடைசி வாரிசான Mr. Gregory Grand காணாமல் போய்விட்டார், ஏழு வருடங்களுக்கு முன்".
"என்ன சொல்லுகிறாய், ஜே? 'காணாமல் போய்விட்டார்' என்றால் என்ன அர்த்தம்?"
"'காணாமல் போய்விட்டார்' என்றால் 'காணாமல் போய்விட்டார்' என்று தான் அர்த்தம்".
"நீ சொல்வது புரிகிறது ஆனால் புரியவில்லை. 'காணாமல் போய்விட்டார்' என்றால் எங்கேயாவது ஓடிப்போய்விட்டாரா?"
"அவர் ஏன் ஓடிப்போகவேண்டும்? இத்தனை சொத்துக்களையும் விட்டுவிட்டு?"
"பின்னே? யாராவது கடத்திக்கொண்டுப் போய்விட்டார்களா அவருடைய சொத்துக்களை எழுதி வாங்க?"
"அப்படியென்றால் இந்நேரம் அந்த சொத்துக்களெல்லாம் கைமாறியிருக்கவேண்டும் அல்லவா?" அதுவும் இல்லை".
அப்புறம் என்னதான் அர்த்தம் 'காணாமல் போய்விட்டார்' என்பதற்கு?"
"ம்ம்ம்… மாயமாய் மறைந்துவிட்டார் என்று அர்த்தம்", என்றான் ஜே, தன் நண்பனின் முகத்தில் தோன்றும் குழப்பத்தை இரசித்துக் கொண்டே.
"விளையாடாதே, ஜே! சொல்வதை முழுதாய் புரியும்படி சொல். தலை சுற்றுகிறது".
"சரி, மொத்தக் கதையையும் சொன்னால் இரவு பியர் உன் உபயம். சம்மதமா?"
"பியர் மட்டுமல்ல. டின்னரும் என் உபயம். சொல்".
"Mr. Gregory Grand திருமணம் செய்துகொள்ளாத நாற்பத்தி ஏழு வயது most eligible bachelor of the town. எத்தனையோ பெண்கள் அவருக்கு வலை விரித்தும் அவர் எதிலும் சிக்கவில்லை. எத்தனையோ பெண்களை அவர் டேட்டிங் செய்தும் திருமணம் வரை செல்லும் அளவு எந்தப் பெண்ணும் அவரை ஈர்க்கவில்லை என்று கேட்பவருக்குக் கேட்கும்போதெல்லாம் சளைக்காமல் பதில் கூறுவார்.
வாரிசுகள் இல்லாமல் போனால் இருக்கும் பில்லியன்ஸ் கணக்கான சொத்துக்கள் என்ன ஆவது என்ற எல்லோர் மனதிலும் இருந்த கேள்விக்கு கூடிய விரைவில் விடையளிக்கிறேன் என்று சொல்லியிருந்த அவரை, one fine day, காணவில்லை. முந்தைய நாள் இரவில் அவருடைய மிக நெருங்கிய நண்பர்களுக்கு அவர் வீட்டில் அவருடைய பிறந்தநாளுக்காக அவர் கொடுத்த பார்ட்டி தான் கடைசி. மறுநாள் காலை அவரைக் காணவில்லை. காலை வெகுநேரமாகியும் தன் படுக்கை அறையைவிட்டு அவர் வெளியே வராமல் இருக்கவே, அவருடைய பர்சனல் அசிஸ்டண்ட் தாழிடப்படாமல் சாத்தியிருந்த அவருடைய அறைக்கதவைத் திறந்து பார்த்ததில் அறை காலியாகவும் படுக்கை விரிப்புகள் கலையாமலும் அப்படியே இருந்தன. அப்போதுத் தொடங்கிய தேடுதல் வேட்டை கிட்டத்தட்ட ஒரு வருடம் நீடித்தது. ம்ஹூம்… ஒரு பிரயோஜனமும் இல்லை.

உலகம் முழுவதும் அவருடைய வழக்கறிஞர் தலைசிறந்த டிடெக்டிவ்களையும் தேடுதல் நிபுணர்களையும் வைத்துத் தேடி சலித்தது தான் மிச்சம். ம்ச்...Gregory Grand ன் வெட்டிப்போட்ட நகத்தைக் கூட யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. Gregory Grand இறந்துவிட்டார் என்றும் முடிவு கட்ட முடியவில்லை அவருடைய சடலமோ அல்லது வேறு ஏதேனும் உடல் பாகங்களோ கிடைக்காததால். தேடித் தேடி சலித்து இறுதியில் வேறு வழியில்லாமல் அவரை 'Missing Person' 'காணாமல் போனவர்' என்று அறிவிக்கும்படி ஆனது. Gregory Grand தன் வழக்கறிஞர்களிடம் ஏற்கனவே விட்டுச் சென்ற உயிலை சட்டப்படி தற்போது பிரித்துப் பார்த்திருக்கிறார்கள். அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் அவரின் காலத்திற்குப் பின் என்ன செய்யவேண்டும் என்று விலாவாரியாக உத்தரவுகள் கொடுத்திருக்கிறார் அதில். அதன்படி இப்போது அவருடைய வழக்கறிஞர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த எஸ்டேட் சேலும் கூட அவர் ஆணைப்படிதான் நடத்தப்பட்டிருக்கவேண்டும்".
இடைமறிப்புகள் இன்றி பேசிமுடித்தான் ஜே.
"Phew! சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது ஜே, உங்கள் ஊர்", என்றான் ரஃபிக் நீண்டதொரு பெருமூச்சை வெளிப்படுத்தி.
"இது ஒற்றை சுவாரஸ்யம் அல்ல, நண்பா. இது நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் சுவாரஸ்யங்களின் தொடர்ச்சி", என்றான் ஜே.
"சுவாரஸ்யங்களின் தொடர்ச்சியா? என்ன சொல்லுகிறாய் நீ? இது போன்ற 'காணாமல் போதல்' ஏற்கனவே நடந்திருக்கிறதா?" என்றான் ரஃபிக் ஆச்சர்யம் பொங்க.
"'காணாமல் போதல்' என்று ஒருமையில் அல்ல. 'காணாமல் போதல்கள்' என்று பன்மையில்", என்று தொடர்ந்தான் ஜே, ஒரு சிறு புன்னகையுடன்.
"Gregory Grand காணாமல் போனதும் அதைப் பற்றி எழுதாதப் பத்திரிகைகள் இல்லை. ஒரே விஷயத்தைப் பற்றி எத்தனைக் கோணங்களில் தான் எழுதமுடியும்? ஆனாலும் விடாமல் தோண்டித் துருவிய ரிப்போர்ட்டர் ஒருவருக்கு ஒரு சிறிய தகவல் கிடைத்தது - Grand குடும்பத்தில் இதற்கு முன் இது போன்ற காணாமல் போனவர்கள் வேறு சிலரும் உண்டு என்று. இப்படி ஒரு துணுக்குக் கிடைத்தால் போதாதா? பழைய செய்தித்தாள்கள், நாட்குறிப்புகள், வரலாற்று ஏடுகள், அருங்காட்சியகப் புத்தகங்கள் என்று ஒன்று விடாமல் ஆராய்ந்து கிடைத்தத் தகவல்களை வைத்து அந்த ரிப்போர்ட்டர் ஒரு கட்டுரை எழுதினார். Gregory Grand போல், எந்தத் தகவலும் இல்லாமல், எந்தத் தடயமும் இல்லாமல், எந்தத் துப்பும் கிடைக்காமல் மாயமாய் மறைந்தவர்கள் Grand குடும்பத்தில் நான்கு பேர் என்று. வேட்டைக்குச் சென்ற இடத்தில், போட்டிங் போன சொகுசுப் படகில், வாக்கிங் போன காட்டு வழியில், Gregory Grand போல் படுக்கை அறையில் என்று ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவர் காணாமல் போயிருக்கிறார்கள்.
இரவு தூங்கச் செல்லும் முன் உடன் இருந்தவர்களுடன் பேசி, சிரித்து, குட் நைட் சொல்லித் தூங்கச் சென்றவர்கள், காலையில் மாயமாய் போய்விட்டார்கள். இன்று போல் அன்று இத்தனை தொழில் நுட்பங்கள் இல்லாது போனாலும், அன்றைய நாளில் இருந்த லேட்டஸ்ட் விஷயங்களையும் முறைகளையும் ஆட்களையும் வைத்து அவர்களைத் தேடியும், இப்போது போல்தான் அப்போதும், எந்தப் பயனும் இல்லை. காணாமல் போனவர்கள் காணாமலே தான் போய்விட்டார்கள். இதற்கு முன் யாரும் இப்படி ஒரு கட்டுரையை எழுதவில்லை என்பதால் இந்த விஷயங்கள் எதுவும் யாருக்கும் தெரியாமலேயேப் போய்விட்டது என்றும் Grand குடும்பத்தில் காணாமல் போனவர்களை பற்றியத் தகவல்களை ஒட்டுமொத்தமாகத் திரட்டும் போது சில ஒற்றுமைகள் புலப்படுகின்றன என்றும் அந்தக் கட்டுரையில் அதன் எழுத்தாளர் குறிப்பிட்டிருந்தார்.
காணாமல் போன அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்; காணாமல் போவதற்கு முந்தய தினம் அவர்களுடைய பிறந்தநாள்; அந்தப் பிறந்தநாளின் அன்று 'Blue Moon' என்று அழைக்கப்படும் ஒரே மாதத்தில் வரும் இரண்டாம் பௌர்ணமி; காணாமல் போனவர்கள் அனைவரும் இதை வைத்திருந்தார்கள்", என்று நிறுத்திய ஜேயின் பார்வை மேஜையின் மீது இருந்த ஆரரியின் மீது குத்திட்டு நின்றது.

காதில் விழுந்தவற்றை ரஃபிக்கின் மூளை கிரகித்துக் கொண்டிருக்க, ஜேயின் கண்கள் போன திசையில் அவன் கண்களும் சென்றன. பொல்லாத சேட்டை செய்துவிட்டு அப்பாவி போல் அமர்ந்திருக்கும் குழந்தையாய் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதாக, சமர்த்தாய் அமர்ந்திருந்தது ஆரரி.
மூளைக்கு எட்டிய சேதி உள்வாங்கப்பட்டு அந்தக் கணம் சடாரென்று உறைக்க, இருண்ட முகத்தோடு ஜேயை நோக்கித் திரும்பினான் ரஃபிக்.
"பழைய Grand குடும்பக் குறிப்புகளிலிருந்து இந்தக் கட்டுரையின் பத்திரிக்கையாளர் கவனித்த மற்றுமொரு விஷயம் உண்டு. Gregory Grand ற்கு முன் இப்படி மாயமாய் போனவர் அவருடைய great grandfatherன் தம்பி. அவர் எழுதி வைத்தக் குறிப்பு ஒன்றில், ஆரரியின் சனி கிரகம் சுற்றாமல் எங்கோ சிக்குகிறது என்றும் அதை சரி செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஆரரியைப் பற்றிய பிந்தயக் குறிப்புகள் அவருக்குக் கிடைத்ததில் ஆரரி இயங்கவில்லை என்பதாக எதுவும் இல்லை என்றும் அவர் கட்டுரையில் எழுதியிருக்கிறார்".
தலையைக் கைகளில் பிடித்துக்கொண்டு அமர்ந்தான் ரஃபிக். அவன் நண்பனின் வார்த்தைகள் அவனுள் கலவரமான உணர்ச்சிக் கலவையை உண்டுபண்ணியது. 'எஸ்டேட் சேல்' போர்டும் 'Grand Manor'ம் கண்ணில் பட்டத் தருணத்தை சபித்தான். உள்ளே நுழைந்தவன் அங்கிருந்தப் பொருட்களை அதிசயத்துடன் பார்த்துக்கொண்டுதான் சென்றானே தவிர, எதையும் வாங்கும் எண்ணமோ வாங்கும் அளவு பணமோ அவனிடம் கொஞ்சம் கூட இல்லை என்பதை உணர்ந்தே தான் இருந்தான், அந்த ஆரரியைப் பார்க்கும் வரை. அதைப் பார்த்தவுடன் அதைக் கையில் எடுத்துக்கொள்ளும் அவசரம் ஒன்று அவனைத் தொற்றிக்கொண்டது. அதன் அருகே வைக்கப்பட்டிருந்த விலைப் பதாகை அவனுக்குக் கொஞ்சம் ஆச்சர்யமூட்டத்தான் செய்தது. 'இப்படி ஒரு பொருளுக்கு இவ்வளவு குறைந்த விலையா?' என்று. அருகில் நின்றிருந்தவரிடம் கேட்டான் அந்தப் பொருளை வாங்குவதற்கான வழிமுறை என்னவென்று. விலைப் பதாகையை எடுத்துக்கொண்டு ரிசப்ஷனில் கொடுங்கள் என்று அவர் சொன்னதற்கேற்ப அவன் கொடுத்து, அதற்குரிய விலையை டெபிட் கார்டில் இருந்து கொடுக்க, அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆரரியைத் தூக்கிக்கொண்டு டாக்சியில் ஏறியிருந்தான்.

இப்போது என்ன செய்வது என்றுத் தெரியவில்லை. ரோஸலின் விட்மோர் கேட்டது போல் அவர்களுக்கு விற்றுவிடலாமா என்று யோசித்தான். ஆனால் அதற்கும் அவனுக்கு மனம் வரவில்லை. எந்த முடிவும் எடுப்பதற்கு முன் இதை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.
"இந்தக் கட்டுரை எந்தப் பத்திரிகையில் வந்ததென்று உனக்கு நினைவிருக்கிறதா, ஜே? அது ஆன்லைனில் இருக்குமல்லவா?" என்றான் ரஃபிக் தலையைத் தூக்கித் தன் நண்பனைப் பார்த்து.
"ஆன்லைனில் என்ன தான் இல்லை?" என்ற ஜே தன் போனை எடுத்து ஏதோ டைப் செய்துத் தட்டினான்.
"லிங்க்கை உனக்கு அனுப்பியிருக்கிறேன், எடுத்துப் பார்", என்றான் ரஃபிக்கிடம்.
குப்புற வைத்திருந்த தன் போனை எடுத்துப் பார்த்த ரஃபிக்கின் முகம் குழப்பமாய் சுருங்கியது. திரையில் கொட்டை எழுத்தில் பளிச்சிட்டது ஒற்றை வார்த்தை.
“GOTCHA!!!”
இதுவரைக் கேட்ட வார்த்தைகளுக்கும் இப்போது பார்க்கும் வார்த்தைக்கும் இருக்கும் தொடர்பை மனம் உணர மறுக்க, இயங்க மறுத்து ஸ்தம்பித்த அவன் மூளைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஜேயின் வெடிச் சிரிப்பு. போனிலிருந்துத் தலையைத் தூக்கியவனின் பார்வையில் பட்டது அவன் நண்பன் கண்களில் நீர் வடிய வயிற்றைப் பிடித்துக் கொண்டு சோபாவில் கிடந்து சிரிக்கும் காட்சி. கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் நண்பனையும் போனையும் மாறி மாறிப் பார்த்தவனின் நியூரான்கள் இரண்டுக்குமான இணைப்பை சட்டென மின்சாரமாகப் பாய்ச்ச, "அடப்பாவி!" என்று பாய்ந்தான் ஜேயின் மீது. ரஃபிக்கின் கைகளிலிருந்து விழுந்த சரமாரிக் குத்துகளும் வாயிலிருந்து உதிர்ந்தத் தமிழின் ஆகச் சிறந்த ஜேக்குப் புரியாத வசவுகளும் அவனின் சிரிப்பைக் கொஞ்சமும் மட்டுப்படுத்தவில்லை.
"உன் முகத்தை போட்டோ எடுக்காமல் விட்டேன். எடுத்திருந்தால் அருமையான GIF ஆக்கியிருக்கலாம்", என்றவனின் தலையில் பறந்து வந்து விழுந்தது சோபா குஷன் ஒன்று.
"உன்னை ஏமாற்றுவது இவ்வளவு சுலபம் என்றது தெரியாமல் போய்விட்டது", என்றவனின் முகத்தை நோக்கிப் பறந்து வந்தது மற்றுமொரு குஷன்.
தூக்கி ஏறிய குஷன்களை சுற்று முற்றும் தேடிய ரஃபிக், எல்லாவற்றையும் ஜேயின் மீது எறிந்துவிட்டதை உணர்ந்து சரிந்து அமர்ந்தான் சோபாவில். தான் ஏமாந்ததை நினைத்து அவனுக்கே சிரிப்பு வந்தது.
"உனக்கு பியரும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது", என்றான் ஜேயைப் பார்த்து.
"உன்னுடன் பியர் குடிப்பது, no fun, dude. எனக்கு வாங்கிக்கொடுத்துவிட்டு நீ வேடிக்கை பார்ப்பாய். Relax, my friend. இன்று உனக்கு டின்னர் என் உபயம், பிராயச்சித்தமாய்".
"உனக்கு இவ்வளவு கற்பனை வளம் இருக்குமென்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. அத்தனையும் கட்டுக்கதையா, ஜே?"
"Gregory Grand காணாமல் போனது உண்மைதான். அதில் எந்தக் கட்டுக்கதையும் இல்லை. மற்றவைகள் எல்லாம் என் கற்பனையிலிருந்து வந்தது என்று என்னாலேயே நம்பமுடியவில்லை. சுற்றாமல் நிற்கும் சனி கிரகத்தைப் பார்த்தவுடன் என் கற்பனை ஊற்றெடுத்துவிட்டது", என்றான் ஜே.
"இதற்காகத்தான் என்னிடம் மறுபடி மறுபடி கேட்டாயா, ரோஸலின் விட்மோர் ஏதாவது சொன்னார்களா என்று?"
"அவர்கள் ஏதேனும் சொல்லியிருந்தால் என் கதை என்னாவது? அதனால் தான் உன்னிடம் அத்தனை முறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்".
"இத்தோடு உன் கற்பனையை மூட்டைக் கட்டி வைத்துவிடு, நண்பா. இன்னொரு கதையைக் கேட்கும் சக்தி என்னிடம் இல்லை", என்றபடி ஆரரியைத் தூக்கிச் சென்று அவன் படுக்கை அறையில் வைத்துவிட்டு வந்த ரஃபிக் வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு ஜேயுடன் வெளியேறினான், அவனின் பிராயச்சித்த டின்னருக்கு.

இளமையின் உச்சத்தில் இருந்த அந்த இரண்டு இளைஞர்களின் வாழும் வேட்கையில், இந்தச் செல்ல ஏமாற்றம் சில மாதங்களில் மொத்தமாய் மறக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கழித்து ஆபிஸுக்கு வராத நண்பனுக்குப் போன் செய்த ஜே, அடித்த கால்கள் அத்தனைக்கும் பதில் இல்லாமல் போகவே, உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறானோ என்ற சந்தேகத்துடன் நேரே ரஃபிக்கின் அபார்ட்மெண்டிற்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தியும் பதில் இல்லாததால், அபார்ட்மெண்டின் சூப்பர்வைசரிடம் நிலைமையைக் கூறி, அவரிடம் இருந்த சாவியைக் கொண்டுக் கதவைத் திறந்து இருவரும் உள்நுழைந்து பார்க்க, காலியாயிருந்தது ரஃபிக்கின் வீடு. 'நேற்றிரவு தானே பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தான்', என்ற எண்ணத்துடன் வரவேற்பறையை நோட்டம் விட்ட ஜேவிற்கு அடிவயிற்றில் சிலீரென்று ஏதோ பிசைய, அவசரமாகத் தன் போனை எடுத்து கூகுளில் முந்தய இரவின் சந்திர நிலையைத் தேடினான். கூகுள் நேற்றிரவு 'Blue Moon' பௌர்ணமி என்றது. சுளீரென்று பின் மண்டையில் நினைவு ஒன்று குடைய, அவசரமாய் படுக்கையறையில் நுழைந்தவன் கண்ணில் பட்டது படுக்கைக்கு அருகில் இருந்த மேஜையில் கம்பீரமாய் அமர்ந்திருந்த ஆரரி. தடதடக்கும் இதயத்துடனும் நடுங்கும் கைகளுடனும் ஒற்றை உருண்டையின் மேல் பார்வையைப் பதித்து கைப்பிடி சுழற்றி அதை இயக்க, நீள்வட்ட சுற்றுப் பாதையில் சுழன்று சுற்றியது சனி.
___________________
கா. தாஸ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.