மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 11

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

மொக்கைமாயத் தேவனின் குரலில் வறட்சி இருந்தது. போதும் போதுமென்ற அளவுக்குத் துக்கப்பட்டுக் கண்ணீர் விட்டுவிட்டதில் அவரால் துயரப்பட முடிவதில்லை.

ஊரின் இருட்டு பிரசவித்த பிஞ்சு வெளிச்சம் ஓலைகள் வேய்ந்திருந்த கோவிலின் முன்மண்டபத்தில் படர்ந்திருந்தது. இருட்டுக்குப் பிரசவம் பார்த்து ஓய்ந்த மருத்துவச்சியின் சோர்வும் பூரிப்புமான பாவனை இருந்தது அப்போது வீசிய காற்றுக்கு.

கோவணத்தை இழுத்துக்கட்டி குத்தங்கால் போட்டு உட்கார்ந்திருந்தார் மொக்கைமாயத் தேவன். அவர் முகத்தில் விழுந்த வெளிச்சத்தில், நிழல் பேருரு கொண்டிருந்தது.

எண்ணெய் பார்க்காத பரட்டைத்தலை. இடுப்பில் கோவணம் கட்டிய சிறுவர்கள் நான்கைந்து பேர். அரைக்கால் ட்ரவுசர் போட்ட சிறுவர்கள் ஒன்றிரண்டு பேர். பிறந்த மேனியாக இருந்த சின்னஞ்சிறுசுகள் ஐந்தாறு. மேல்சட்டை அணியத் தேவையில்லாமல், அரைப்பாவாடையில் மூக்கைத் துடைத்தபடியிருந்த பெண் பிள்ளைகள் ஓரிருவர் என்று தன்முன் உட்கார்ந்து தன்னையே கண் விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகள்முன், அநாதி காலத்திலிருந்து கதைகளை விரித்து வைத்திருக்கும் குலமூப்பனாக அமர்ந்திருந்தார் மொக்கைமாயத் தேவன்.

“மீனாட்சிக்கு அண்ணன் யாருவே?”

“அழகர்சாமி...” குழந்தைகள் சொன்னார்கள்.

நீரதிகாரம் - 11

“ஆமாம், உள்ளே இருக்காரு பாருங்க, இந்தச் சுந்தர பெருமாளேதான் அந்த அழகர்சாமி. அவருக்குத்தான் எத்தனையோ பிறப்பிருக்கே! பஞ்ச காலத்துல சின்னக் கண்ணனா அவர் என்ன செஞ்சாரு தெரியுமா? பசி பசின்னு மண்ணையள்ளித் தின்னாரு. மனுஷனா இருந்தாலும் கடவுளா இருந்தாலும் ஜீவிக்கணுமில்ல? வகுத்துக்குக் கஞ்சியில்லனா வகுறு கிய்யா கிய்யான்னு கத்திரும். கண்ணனுக்கும் கஞ்சி கிடைக்கலை. ஊரே பஞ்சத்துல கெடக்கு. பஞ்சத்தோட கொடும தாங்காம, வெண்ணெயள்ளித் தின்ன கையால சாமி பொறப்பு கண்ணனும் மண்ணள்ளித் தின்னான்னா பாத்துக்கங்க, மனுசப்பய பொழப்பு என்னாயிருக்கும்னு.”

“மண்ண மெல்ல முடியுமா அப்புச்சி?” ஒரு குழந்தை கேட்டது.

“பசின்னு வந்துட்டா மண்ணை மெல்லவும் முடியும். மெண்டதைச் செமிக்கவும் முடியும். கதையைக் கேளு... ஊட பேசுனா கத திச மாறிடும்.”

“ஏய் கருக்காப் பல்லி. வாயப் பொத்து” வயதில் மூத்த பையன் ஒருவன் அதட்டினான்.

“எனக்குன்னா ரெண்டு பல்லுதான். ஒங்க அக்காளுக்கு மொத்தப் பல்லுமே கருக்காப் பல்லுதான்.”

“விடு தாயி, ஒனக்கு மொறக்காரன்தானே, பேசிட்டுப் போறான். ஆ, கதைய எங்க நிறுத்தினே? புள்ளையார் இருக்காரில்ல... நம்ம ஓடக்கரை அரசமரத்து மேட்ல, வயிறு சால்கணக்கா வச்சிக்கிட்டு உக்காந்திருக்காரே...” மொக்கைமாயத் தேவன் கதையைத் தொடர்ந்தார்.

“அந்தப் புள்ளையார்கிட்ட போய் கஞ்சி ஊத்து புள்ளையாரப்பான்னு கேட்டவுடனே அவர் தன்னோட முகத்தை ஆன முகமா மாத்திக்கிட்டாரு. ரெண்டு கையை அஞ்சு கையா மாத்தி, ‘எனக்கும் பஞ்ச கைதான்’ன்னு நையாண்டி பேசுனாரு.”

“பஞ்ச கை... பஞ்ச கை...” பிள்ளைகள் கூச்சலிட்டார்கள்.

“யார் தப்பிச்சாலும் ஆத்தா தப்பிக்க முடியாதே? அவ நம்ம பெத்த தாயில்லையா? முலைப்பால் குடுக்கிறவ இல்லையா? அவதான் தயாபரியா நின்னு ஊரக் காப்பாத்துனா.”

பிள்ளைகள் இமைக்காமல் பார்த்தனர்.

“மதுர மீனாட்சிக்காவது பரவாயில்லை. புருசன் புட்டுக்கு மண்ணு சுமக்கிறவன். திர்நவேலி காந்திமதி ஆத்தாவுக்கு இன்னும் சங்கடம். உன் வீட்டுக்காரன், பேர்ல மட்டும் நெல்லையப்பர்னு வச்சிருக்காரே, என்ன பிரயோஜனம்? எங்களுக்குப் படியளக்கிறதே இல்லன்னு காந்திமதி வீட்டுக்காரனைத் திட்டிட்டு, காந்திமதியைத்தான் சரணடைஞ்சாங்க.”

பிள்ளைகள் சிரித்தார்கள்.

நீரதிகாரம் - 11

“நீ பிராயத்துல இருக்கைல பஞ்சத்த பாத்திருக்கியா சிய்யான்?”

“பாக்காம என்ன? அதுதான் வக்காளி பத்து வருசத்துக்கு ஒருமுறை வந்துருதே பெருசா? ஆனானப்பட்ட பஞ்சத்துல அடிபட்டும் எப்டியோ பிழைச்சோம். இப்ப நெனச்சாலும் நம்ப முடியல. பெரிய நாட்டாமைன்னு நெஞ்ச நிமித்திக்கிட்டுத் திரியறானே, எம் மக, இந்த ஊரு பெரிய தலைக்கட்டு, அவென் ரெண்டு மாசக் கொழந்த. பெத்தவளுக்கு ஒரு சொட்டுப் பாலு வரல. அவெ சரீரத்துல ரத்தம் ஓடுனாத்தானே பாலா வர்றதுக்கு? ஊரே வழிச்சிப்போட்ட மாதிரி நாதியத்துக் கிடந்தது. மண்ணுல கிடக்கிற கிழங்கு, வாய்க்கா வரப்புல திரியுற பூச்சி பொட்டு எல்லாம் தின்னோம். கண்டதத் தின்னு வயித்தால போய்ச் செத்தவங்க ரொம்பப் பேர். மகராசி அவளும் அப்படித்தான் போய்ச் சேந்தா.”

மொக்கைமாயத் தேவனின் குரலில் வறட்சி இருந்தது. போதும் போதுமென்ற அளவுக்குத் துக்கப்பட்டுக் கண்ணீர் விட்டுவிட்டதில் அவரால் துயரப்பட முடிவதில்லை. கண்ணீர் வற்றிப்போய்விட்டது.

பிள்ளைகளின் முகங்கள் வாடிவிட்டன.

“அப்பத்தா செத்துப்போச்சா அப்புச்சி?”

வாயில் ஒரு விரலை வைத்துச் சூப்பிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய பெண் குழந்தையொன்று, கேள்வி கேட்டுவிட்டு, மீண்டும் விரலை வாய்க்குள் வைத்துக்கொண்டது.

“ஆமாத்தா. அன்னிக்குத் தேதிக்கு, யார் வீட்லன்னா ஆளுங்க உயிரோட இருக்காங்கன்னாதான் ஆச்சரியம். ஜனங்க கூடி அந்த வீட்ல போய்ப் பாப்பாங்க. அப்டித்தான் ஒருமுறை உசிலம்பட்டியில இருந்து பஞ்ச நிவாரணம்னு சொல்லிக்கிட்டு, ஒரு ஆளுக்கு ஒரு அணா, வேலை செய்ற அன்னிக்கு ஒரு வேளை கஞ்சின்னு கிராமன்சு* (கிராம முன்சீப்) ஒருத்தரு வந்தாரு. ஜனங்களுக்கு நம்ப முடியல. அவன ஈ மாதிரி சுத்திட்டாங்க. கஞ்சி ஊத்துங்க, என்னா வேலைன்னாலும் செய்றோம்னு கெஞ்சினாங்க.”

“ஒரு வேளைக்குக்கூடவா கஞ்சியில்ல அய்யா?”

“யாத்தா? நீ இன்னும் பஞ்சத்த பாத்ததில்ல. பாத்துடவும் கூடாது. பஞ்சங்கிறது நரகம். அப்போல்லாம் கஞ்சிய கண்ணுல பாக்குறதே கடவுள பாக்குற மாதிரிதான்.”

“சரி அப்புச்சி, என்ன வேலை குடுத்தாங்க?”

“வந்த கிராமன்சு நம்மாளுதான். இருந்தாலும் வெள்ளக்கார தொரை மாதிரி தான் மெரட்டலு, அதட்டலு உருட்டலு எல்லாம்.”

“நம்மாளுன்னா நம்ம சொந்தக்காரங்களா அய்யா.”

“நம்ம பக்கத்து ஆளு. தெக்கத்தி ஆளு.”

“என்ன வேலை குடுத்தாங்கய்யா, சொல்லு. ஏன், கதய இழுக்கிற?”

பொறுமையிழந்த சிறுவ னொருவன் சலித்துக் கொண்டான்.

“அய்யா பெரிய மனுசனே, ஏன்டா ஒன் மாமன் மாதிரி முண்டுற? நான்தான் பொம்பள முடிய வகுடு எடுக்கிற மாரி வரிசையா சொல்லிக்கிட்டு இருக்கேன்ல?”

“நீ சொல்லு சிய்யான்...”

“வீட்ல இருக்க கத்தி, கடப்பாற, மண்வெட்டியெல்லாம் எடுத்துக்கச் சொன்னான். எல்லாம் ஊர் ஓடக்கரைக்கு வாங்கன்னு சொல்லிட்டு முன்னால நடந்தான்.”

“நீதானே சொன்ன, ஊரே அகழ்ந்து போட்டுக் கெடந்ததுன்னு.”

“சொன்னந்தான். அப்படியும் அவென் ஓடக்கரைக்கு வரச் சொன்னவுடனே பின்னாலேயே போனோம். பாதிப் பேருக்கு நடக்கத் தெம்பில்ல. நாங்க ஊர்ல மிஞ்சியிருந்ததே நூறு பேருக்குள்ளதான் இருப்போம். இழுத்துப் பறிச்சி போய்ச் சேந்தோம். ஓடக்கரைக்குப் போனா, பாளம் பாளமா வெடிச்சிப் போயிருந்திச்சி. கிராமன்சு மூனடி, நாலடின்னு குழி எடுக்கச் சொன்னான்.”

“எதுக்காம்?”

“நாங்களும் அதான் கேட்டோம். காஞ்சி கரம்பா இருந்த மண்ணுல கடப்பாரையைத் தூக்கிப் போடுற அளவுக்கு யாருக்கும் தெம்பில்ல. என்னமாரி தெம்பிருந்த நாலஞ்சி எளந்தாரிக ஓங்கித் தூக்கிப் போட்டாலும் டங் டங்குனு கடப்பாறை மண்ணுல மோதி, திரும்பி வந்துச்சி. எங்களால முடியல. கையும் காலும் தனித்தனியா போற மாதிரி வலி. எதுக்கு எதுக்குன்னு எல்லாரும் கேட்டவுடனே, பொறுக்க முடியாத கிராமன்சு எங்களக் கூட்டிக்கிட்டு ஒரு புதருகிட்ட போனான். கிட்ட போகவே முடியல. நாத்தம். வகுத்துப் பசிக்குக் காதுதான் அடைச்சிக்கிடுச்சி. மூக்கு நல்லாத்தான் வேலை செஞ்சுச்சி. மூக்கப் பொத்திக்கிட்டு அவென் காட்டுன எடத்துக்குப் போய்ப்பாத்தா, ‘அய்யோ, பெருமாளே... கொடும... ஒன்னுமேல ஒன்னா அழுகின பொணங்க.”

“அய்யய்யோ....” குழந்தைகள் கூச்சலிட்டார்கள்.

“ஊர்ல நரி அடிச்சுதா, பேய் அடிச்சுதான்னு ஒரு வாரமா நாங்க தேடிக்கிட்டு இருந்தவங்கல்லாம் ஓடக்கரையோரமா செத்துக் கெடந்தாங்க. பொதர்லயும் மேட்டுலயுமா கெடந்தவங்கள அடக்கம் பண்ணத்தான் அரசாங்கம் ஆளனுப்பியிருக்கு. அடுக்கடுக்கா பிரேதங்களப் பாத்ததுல, பாதிப் பிரேதமா இருந்தவனுங்க ரெண்டு பேர் அங்கேயே விழுந்து செத்துப் போனானுங்க. நாங்க நாலஞ்சு பேர், மனசைக் கல்லாக்கிட்டு, ஒரு நா வேலை செஞ்சோம். அன்னிக்குச் சர்க்காரு ஊத்துன கஞ்சியக் குடிச்சிட்டு, குடுத்த ஒரு அணாக் காசையும் வாங்கிட்டு, பச்சப் பிள்ளைய தூக்கிட்டு ஊரவிட்டுக் கெளம்பினவன்தான், இந்த ஊருக்கு வந்து சேந்தேன்.”

அப்போதுதான் வந்து சேர்ந்ததுபோல் ஆசுவாசமானவர், பேச்சைத் தொடர்ந்தார்.

“வழி முழுக்க மயானம்தான். எந்த ஊர்லயும் தெளிச்சியா ஜனங்க இல்ல. ஊர்ல நடமாட்டமே இருக்காது. பகல் முழுக்க அனல் காத்தா அடிக்கும். எங்கியாவது மலையடிவாரத்துல, மரத்தடியில, காலியா கெடக்கிற வீட்டுத் திண்ணையில படுத்துத் தூங்கிட்டு, படுஞாயிறு மேற்கால இறங்கிப் போனபிறகு விடிய விடிய நடக்க ஆரம்பிப்போம். ராத்திரியில நிலா வெளிச்சத்துல காஞ்சுபோய்க் குச்சி குச்சியா நிக்கிற மரஞ்செடி கொடிமேல எல்லாம் செம்மண் படிஞ்சு, பளபளன்னு இருக்கும். வயித்தெரிச்சலா இருக்கும், இதையெல்லாம் தின்ன முடியாமப்போச்சேன்னு.”

புரிந்தும் புரியாமல், ஆனால் சோகமான கதையென்று குழந்தைகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இன்னொன்னு சொல்றேன் கேளுங்க கண்ணுங்களா... இப்போ நீங்கல்லாம் நாய் பாக்குறீங்கதானே? எவ்ளோ உயரம் இருக்குது?”

“நாய் உயரம் இருக்கும் அய்யா, நாய்...”

குழந்தைகள் சிரித்தார்கள்.

“ஆமாம், சரியாத்தான்டா சொன்ன. நாய் உயரம்தான் இருக்கும். ஆனா நாங்க பாத்த நாய்ங்களே வேற. ராத்திரியில ஒவ்வொரு ஊரா நாங்க வரும்போது, திடீர்னு ரெண்டு தீக்கங்கு மட்டும் அந்தரத்துல நின்னு எரியுற மாதிரி, கண்ண உருட்டிக்கிட்டு வழியில நாய்ங்க நிக்கும். நாய்ன்னா சாதாரண நாய் இல்ல. எல்லாம் பிரேதத்தைத் தின்னு தின்னுக் கொழுத்த நாய்ங்க. ஒவ்வொன்னும் எத்தாதண்டி இருக்குந் தெரியுமா? பெரிய எருமக் கன்னுக்குட்டி இருக்கும் பாரு... அத்தாதண்டி இருக்கும். புது ஆள்னா நாய்ங்களுக்கு மோப்பத்துல புரிஞ்சிடும். பின்னாடியே வரும். சத்தமா குரல் கொடுத்தா ஓடிடும். ஆனா அப்ப இருந்த நாய்ங்களுக்கு மாமிச மிருக குணம் வந்துடிச்சு. பிரேதத்த தின்னு கொழுத்து, உயிரோட இருக்கிற ஆளுங்களோட வாசனையைப் பாத்தாலே பின்னாடி மோந்துக்கிட்டு வந்துடும். அதுவும் பச்சைப் புள்ளங்க வாசத்துக்கு நாய்ங்க பேயா பறந்துச்சுங்க. வழியில ஒரு நா மரத்தடியில, அஞ்சாறு நாய்ங்க சேர்ந்து ஒரு கால கடிச்சித் தின்னுக்கிட்டு இருந்துச்சிங்க. பாத்தா ஒரு பொம்பளக் கொழந்த, ஏழெட்டு வயசு இருக்கும். நான் எம் புள்ளைய இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு ஓட்டமா நடந்தேன். எப்படித்தான் இந்த ஒடம்புக்கு அவ்ளோ தெம்பு வந்துச்சோ, தெரியலடா சாமி.”

“நாய் பிரேதத்தைத் தின்னுமா அப்புச்சி?”

“இன்னிக்கு நாம பாக்குற நாய்ங்க காலக் கவ்வும். விட்டுடும். பஞ்ச காலத்துல நாய்ங்கெல்லாம் நரியாயிடுச்சி. பிரேதம் தின்னு அதுங்க கண்ணுல தெரிஞ்ச கொடூரத்தைப் பாக்கணுமே... அப்பா, இப்ப நெனச்சாலும் கொல நடுங்குது. ஒரு நா ராத்திரி, வழியில வந்த ஒருத்தரு சொன்னாரு... நேரா ஐஞ்சாறு மைலு போனா, பெரிய ஊர் ஒன்னு வரும். அந்த ஊர்ல சின்ன ஊத்து ஒன்னு வத்தாம ஊரக் காப்பாத்துது. எப்டியாவது உயிரக் கையில பிடிச்சிக்கிட்டுப் போய்ச் சேர்ந்துடுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவர் யாரு? திடீர்னு எப்புடி எதிர்ல வந்தாரு? எதுக்கு வந்தாரு? எதுவும் புரியல. சாமி வேற எப்டி வருவாரு, அன்னிக்கு வந்தது சாமியாத்தான் இருக்கும். சோறு தண்ணி இல்லாம துவண்டு கிடந்த குழந்தையைத் தூக்கித் தோளுல போட்டுக்கிட்டு, அருள் வந்தவெ மாதிரி நடந்தேன். கூட வந்தவங்கெல்லாம் பின்னாடி தங்கிட்டாங்க. என் நடைக்கு ஈடு குடுக்க முடியல. எங்கியாவது போய் ஒரு சொட்டுத் தண்ணியாவது எம் புள்ளைக்குக் குடுத்து உயிரக் காப்பாத்தணும்னு வெறி. உன்மத்தம். நடக்கிறேன், நடக்கிறேன். இந்தப் பொறப்புக்கு ஏன் இவ்ளோ துன்பம்னு நெனச்சி அழுதுகிகிட்டே நடக்கிறேன். பெத்தவ போயிட்டா. கட்டினவ போயிட்டா. அன்னந்தண்ணி புழங்குனவங்க போயிட்டாங்க. நானும் எம் புள்ளையும் இன்னும் உசுரோட இருக்கம்னா சாமி எங்களுக்கு ஏதோ மிச்சம் வச்சிருக்காருன்னுதானே அர்த்தம். கையில ஒரு உடுப்பு இல்ல. கட்டியிருக்கிறது கிழிசல். வழியில சொன்னவரோட சொல்லு, மனசுக்குள்ள வெளக்கேத்தி வெச்சது மாதிரி இருந்துச்சி. காத்துல ஈர வாசனை வராதான்னு மோந்துகிட்டே நடந்தேன். ஒரு நா ராத்திரி, கொள்ளிக் கண்ண வச்சிக்கிட்டு பெரிய கெடாத்தண்டி இருந்த நாய் ஒன்னு, நடுத் தெருவுல திடீர்னு என் முன்னாடி நின்னுச்சி. ஒரே சிந்தனையாப் போய்க்கிட்டு இருந்த எனக்கு நாயப் பாத்து திக்குனு ஆயிடுச்சி. புள்ளய இறுக்கிக்கிட்டேன். நாய் அசையாம ஒரே பார்வையா என்னப் பாக்காம, தோள்ல கெடந்த புள்ளைய பாத்துச்சி.”

“அய்யோ... அப்புறம் என்னாச்சு அப்புச்சி?” குழந்தையொன்று வெடித்தழுவதுபோல் கேட்டது.

“நாய் முன்ன அடி எடுத்து வைக்க வைக்க நான் பின்னாடி நடந்தேன். பக்கத்துல கல்லு, கட்டை எதுனா கெடக்குதான்னு கண்ண நாய்மேல இருந்து எடுக்காமயே தோராயமா பாத்தேன். நாய் முன்னாடி வர, நான் பின்னாடி நகர, அப்போ என் முதுகுக்குப் பின்னால இருந்து ‘ஊ ஊ’ன்னு நரிங்களோட அலறல். நரிங்க கூட்டமா ஊருக்குள்ள இருந்து ஒரு பிரேதத்தை இழுத்துக்கிட்டு வந்து கடிச்சித் தின்னுச்சிங்க. நரிங்களப் பாத்ததும் நாய் எங்கள விட்டு, அங்க ஓடிப்போச்சு. இதான் சந்தர்ப்பம்னு ஒரே ஓட்டம். வெறும் எலும்பும் காக்கிலோ சதையும் மிச்சமிருந்த எனக்கு எப்டி அவ்ளோ சக்தி வந்துச்சின்னு தெரியல. அன்னிக்குத் தப்பிச்சு வந்தவன்தான், இந்த ஊர் தண்ணிதான் எங்களக் காப்பாத்துச்சி.”

“அப்டின்னா நீங்க இந்த ஊர் இல்லையா அய்யா?”

“இல்லடீ கண்ணு. பஞ்சம் பொழைக்க வந்தவன்தான் நானு. ஆனா இந்த ஊர் மண்ணுதான் எனக்கு எல்லாங் கொடுத்திருக்கு. இதோ எதிர்ல உக்காந்திருக்காரே சுந்தரபெருமாள், அவர்தான் என்னையும் எம்புள்ளையையும் காப்பாத்துனாரு. இப்போ உன் மாமன் இந்த ஊருக்குப் பெரிய தலைக்கட்டுன்னா சும்மாவா? பெருமாளோட அனுக்கிரகம் இல்லாம எப்டி நடக்கும்?”

“அப்போ சின்ன அய்யா?”

“பர்மாவுக்குப் பஞ்சம் பொழைக்கப் போயிருந்தவென், நாங்க இந்த மண்ணுல வேர் பிடிச்சு நின்னப்பத்தான் திரும்ப வந்தான்.”

“நீங்க கத சொல்றேன்னு சொல்லிட்டு, அழுகாச்சியா ஏதோ சொல்றீங்க அய்யா.”

“கததான் கண்ணு. ஊர விட்டு ஊர் பஞ்சம் பொழைக்கப் போனவங்க கதை. என்கிட்ட ஒரு கததான் இருக்கு. வீட்டுக்கு வீடு இதே மாதிரி நிறைய கதைங்க இருக்கு. குறுக்குச் செத்துப்போய் கொடாப்புக்குள்ள படுத்திருக்கான்ல உங்க சிய்யான், அவனக் கேட்டினா உங்க வீட்டுக் கதையச் சொல்லுவான்.”

நீரதிகாரம் - 11

“வேற கத சொல்லு அய்யா.”

“அய்யா இன்னிக்கு இந்தக் கதைய மட்டுந்தான் சொல்லுவேன். நீங்கல்லாம் போய் உங்க வீட்ல என்னா சொல்லணும் தெரியுமா? பாளையத்துல தமுக்கடிச்ச உடனே ஊர்ல இருக்க இளவட்டம்லாம் நாடார் வீட்டு மாட்டப் பிடிக்கப் போகணும்னு போய்ச் சொல்லணும்.”

“மாடு பிடிக்கப் போனா, போலீசு பிடிச்சுக்குமாம் அய்யா.”

“அட கேணக் கழுத, கள்ள வழியில போறதே சாகசத்துக்காகத்தான். மாடு பிடிக்கறதும் சாகசம்தான். கள்ள வழியவிட, மாடு பிடிக்கிறதவிட, நம்மூர்க்காரங்க பெரிய சாகசம் பண்ண குமுளி மலைக்குப் போகணும். பெரியாத்துல அணை கட்டணும். நம்ம ஜனங்க போனாத்தான் அது நடக்கும்.”

“அய்யா, அந்தக் காட்டுக்குள்ள போனா உசுரோட யாரும் திரும்ப மாட்டாங்களாம்.”

“நம்ம ஜனங்களுக்குத்தான் இந்த மேல்மலையும் காடும் அத்துப்படி. நாமதான் செய்ய முடியும். தெக்கத்திக்காரன், வடக்கத்திக்காரன்னு யார் வந்து இங்க வேலை செய்ய முடியும்?”

“வேணாம்ய்யா... புலி அடிச்சிக் கொன்னுடும்.”

சொல்லிய சின்னப் பெண்ணை அருகில் அழைத்தார் மொக்கைமாயத் தேவன்.

“இங்க வாத்தா.”

பின்பாவாடையில் ஒட்டியிருந்த மந்தை மண்ணைத் தட்டிவிட்டு, அவருக்கு அருகில் வந்தது சின்னப் பெண்.

“என்ன அய்யா...”

“எங்க உன் பல்லக் காட்டு.”

“எனக்குக் கொஞ்சம் பல்லுதானே மொளச்சிருக்கு.”

“நீ காட்டு. இப்டி வெளிச்சத்துல காட்டு.”

“ஈஈஈ...” உதடு விரித்து, வாயை அகலத் திறந்தது.

“எல்லாரும் அவங்கவங்க பல்லப் பாருங்க. உங்க பல்லு மட்டுமில்ல, ஒங்க அப்பன், ஆயி... ஊர்ல இருக்கிற எல்லார் பல்லயும் பாருங்க, மொத்தம் கருக்காப் பல்லு.”

பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தவர்களின் வாயைத் திறக்கச் சொல்லி, பல்லைப் பார்த்தார்கள்.

“பொழுது விடிஞ்சா இன்னும் நல்லாப் பாருங்க. வீட்லயும் கேட்டுப் பாருங்க. இந்த ஊரே உப்புத் தண்ணி. எனக்கு உயிர் குடுத்தது இந்த ஊர்த்தண்ணிதான். தாயக் கொற சொன்னாலும் தண்ணியக் கொற சொல்லக் கூடாது. ஆனா, உப்புத்தண்ணி, வாயில வைக்க முடியாது. வெள்ளையா பல்லு வேணுமா வேணாமா உங்களுக்கு? ஒங்களுக்குப் பொறக்கப் போற பசங்களுக்காவது பல்லு வெள்ளையா இருக்கணும்னா, பேரியாத்துத் தண்ணி இந்த ஊருக்கு வரணும். நம்மூர்க்காரங்க மேல்மலைக்குப் போணும். போய் ஒங்க அப்பன் ஆத்தாகிட்ட சொல்லுங்க. நாடார் வீட்டு ஜோடிக் காளையத் தூக்கணும்.”

பெரிய தலைக்கட்டுப் பேயத் தேவன் பேச்சை மீறி அவர் அப்பா மொக்கைமாயனே மாடு பிடிக்கப் போக வேண்டும் என்று பேசுவதைக் கேட்டுக் குழந்தைகள் குழம்பி நின்றார்கள்.

“பூக்களில் மஞ்சள் நிறத்துக்கு மட்டும் ஒரு மகத்துவம் வருகிறதே, கவனித்திருக்கிறாயா குருவாயி?”

“அடர் வண்ணங்கள் எல்லாமே பூக்களுக்கு அழகுதான் ஹனி.”

ஹானிங்டன் கையிலிருந்த பெயர் தெரியாத மஞ்சள் வண்ணப் பூவை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

“இந்தப் பூவின் செடியை வேருடன் கியூ ராயல் பொட்டானிக்கல் கார்டனுக்கு அனுப்பப் போறேன். நம் தேசத்தவர் ஆளுகின்ற நாட்டில் இருக்கின்ற அபூர்வத் தாவரங்கள் எல்லாம் அங்கிருக்கிறது.”

“நம் தேசத்தவர்... நல்லதுதான் ஹனி. என்னையும் உங்கள் தேசத்தவராக்கிக் கொண்டீர்களே?”

“லாராவுடன் பேசும் ஞாபகத்தில் சொல்லிட்டேன் குருவாயி.”

குருவாயியின் முகம் சுருங்கியது.

“உன்னைப் பார்த்ததில் இருந்து லாராவைப் பார்க்கப் போகவில்லையென்று உனக்கே தெரியும். இருந்தும் லாரா பெயரைச் சொன்னாலே முகத்தைச் சுருக்க வேண்டுமா?”

“வருத்தமில்லாமல் இருக்குமா?”

“உன்னைத் திருமணம் செய்துகொண்ட பின் லாராவைத் திருமணம் செய்துகொண்டிருந்தால் நீ வருத்தப்படலாம். அப்படிப்பார்த்தால் வருத்தப்பட வேண்டியது லாராதான்.”

குருவாயி பதில் சொல்லாமல், முன்னால் நடந்தாள். ஹானிங்டன் மேற்குமலைத் தொடரைப் பார்த்து வரலாம் என்று திடீரென்று கிளம்பி வந்துவிட்டார். இரண்டு நாள்கள் பயணத்தில் கழிந்தன. இன்றுதான் மலையின் அடிவாரம் கடந்து மலையேறத் தொடங்கி யிருந்தார்கள். மலையேறும் டாமினேஷனின் கால்கள் துவள்வதை உணர்ந்த ஹானிங்டன், அதற்கு ஓய்வுகொடுத்து, காலார நடந்து சென்றபோது கண்டெடுத்தது தான் இந்த மஞ்சள் வண்ணப் பூ. உடன் வந்த நாயர் படை வீரர்களுக்கும் பூவின் பெயர் தெரியவில்லை.

“குருவாயி, உங்க ஊருக்கு நான் வந்தப்பவே எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு உனக்குத் தெரியும்தானே?”

குருவாயி திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தாள்.

“சரி, எவ்வளவு தூரம் போகிறாயோ போயிட்டுத் திரும்பி வா. திய்யா குடும்பத்துப் பெண்கள் வேகமானவர்கள். என்னால் உன் வேகத்திற்கு ஈடுகொடுத்துப் பின்தொடர முடியாது. ‘பின்தொடர்ந்து வா’ன்னு கிறிஸ்து அழைத்தாலே நான் மெதுவாத்தான் போவேன்” என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த பாறையில் அமர்ந்தார் ஹானிங்டன்.

‘அணை கட்டுற இடம் தெரியுமா என்று பென்னி கேட்கும்போது குற்றவுணர்ச்சியா இருக்கேன்னு வந்தா, குடும்பம் கொடுக்கிற குற்றவுணர்ச்சி அதிகமா இருக்கும்போல இருக்கே?’ மலைக்காற்றின் சில்லிப்பு காற்றில் இருந்தாலும் ஹானிங்டனுக்கு வியர்த்தது. மூச்சு வாங்கியது.

டாமினேஷனை அருகில் இழுத்தார். அதன் முகவாயின்மீது தலையைச் சாய்த்தபடி, எதிரில் தெரிந்த மலையுச்சியைப் பார்த்தார்.

கோபமாகக் கொஞ்ச தூரம் நடந்த குருவாயி, திரும்பி ஹானிங்டனைப் பார்த்தாள். பாறை மேல் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் அவரின் தோற்றம் துயரச் சித்திரம்போல் அவள் நெஞ்சைக் கரைத்தது. மனம் அன்பில் கசிந்தது. ஹானிங்டன் முகம் வாட அவள் அனுமதித்ததே இல்லை. வேகமாய்த் திரும்பி வந்தவள், டாமினேஷனை விரட்டினாள். ஒன்றும் பேசாமல் ஹானிங்டன் அருகில் உட்கார்ந்தாள்.

“தேங்க் யு டியர்” ஹானிங்டன் நெகிழ்ந்த குரலில் சொன்னார்.

“உங்க குதிரைக்கே நன்றி சொல்லுங்கள்.”

“டாமினேஷன். குதிரைன்னு சொல்லாதே. யோசித்துப் பார் குருவாயி. குஜராத்திலிருந்து மெட்ராஸ் பிரசிடென்சி வரைக்கும் ஏறக்குறைய ஆயிரம் மைலுக்கு இருக்கிற இந்த மலைத்தொடர் எவ்ளோ பெரிய பொக்கிஷம்? இந்தியாவுலதான் இயற்கையோட எல்லா அற்புதங்களும் இருக்கு.”

“எனக்குத் தலைச்சேரியும், திருவிதாங்கூரும் தவிர வேறு ஊர் தெரியாது.”

குருவாயியின் குரலில் வருத்தம் இன்னும் மிச்சமிருந்தது.

“இந்தச் சமஸ்தானத்துல இருக்கிறவங்களுக்கே இந்த மலையைப் பத்தித் தெரியுமான்னு தெரியலை. அவங்க ஊருக்குள்ள ஓடிவர்ற நதியெல்லாம் மேல்மலையில இருந்துதான் வருதுன்னு தெரியுமா?”

“தெரியாமயா உங்ககூட ஒப்பந்தம் போடப் போறாங்க?”

“ஏய் டியர், சண்டையைத் தொடராதே. உங்க மகாராஜாவுக்கும் திவானுக்கும் தெரியாதுன்னுதான் நினைக்கிறேன். திருவிதாங்கூர்ல இருந்து நாள்கணக்குல பயணம் செஞ்சு இங்க வரணும். மலைமேல வர்றதுக்கு அவங்களுக்குத் தேவை வரலைன்னு நெனைக்கிறேன்.”

“இருக்கலாம்.”

“ஒன்னு கவனிச்சியா குருவாயி, உங்க உள்ளூர் ராஜாக்கள்கிட்ட பொதுவாவே மத்தவங்களுக்கு நல்லது செய்ற குணமில்ல. அவங்கவங்க எல்லைக்குள்ள நல்லது செய்றாங்க. ஆனா அடுத்த ஊருக்குன்னா யோசிக்கிறாங்க. மகாராஜா விசாகம் திருநாள் எவ்வளவு நல்லவர். அறிவாளி. மென்மையான மனசு கொண்டவர். அவரே கையெழுத்துப் போட்டிருக்கலாம். தள்ளிப் போட்டார். இப்போ புதுப் புதுத் தடைகள். தம்புராட்டி, அவங்க இன்ஜினீயர்களை அனுப்பி ஆய்வு செய்யணும்னு சொல்றாங்க. இதெல்லாம் எப்போ முடியுமோ?”

அக்காக்குருவியின் இனிமையான குரலோசை சூழலை ரம்மியமாக்கியது.

“சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு இந்தியாவோட சூழல் மாறியிருக்குங்கிறது உண்மைதான். ஆனா உள்ளூர் அரசர்களின் மனநிலைதான் புரிஞ்சிக்க முடியலை.”

குருவாயி அக்காக்குருவி எங்கிருக்கிறது என்று மரங்களின்மேல் தேடினாள்.

“இன்னும் இரண்டு மூன்று மாசத்துல காங்கிரஸ்ன்ற பேர்ல ஒரு அமைப்பு உருவாகப்போகுதுன்னு கேள்விப்படறேன். என்னை மாதிரி ரிட்டயர்டு ஐ.சி.எஸ் அதிகாரிங்கதான் முயற்சி எடுக்கறாங்களாம். உள்ளூர் ராஜாக்களையும் மத்த செல்வாக்கானவங்களையும் ஒருங்கிணைக்கிறாங்களாம். நல்லதுதான். ஏதேச்சாதிகாரம் இங்கிலாந்துப் பேரரசிக்கு நல்லதில்லை. இன்னொன்னு கவனிச்சியா?”

ஹானிங்டன் சிந்தனை போகும் திசையை உணர்ந்த குருவாயி, பேச்சில் கவனம் குவித்தாள்.

“அப்படி இந்தியா முழுக்க ஒருங்கிணையப் போறவங்களோட மொழி என்னவா இருக்கும்னு சொல்லு?”

“எல்லாருக்கும் பொதுவான மொழியா?”

“சரியா சொல்லிட்ட. பொதுவான மொழி. அம்பது வருஷம் முன்னாடி வரைக்கும் பெர்ஷியன்லதான் இந்தத் தேசத்தில் ஒருத்தருக்கொருத்தர் கடிதம் எழுதிக்கிட்டாங்க. இப்போ இங்கிலீஷ் அந்த இடத்துக்கு நகர்ந்து வந்துடுச்சி பார்த்தியா? உங்க மகாராஜால்லாம் சமஸ்கிருதம், மலையாளத்தோட சேர்த்து ஏன் இங்கிலீஷ் கட்டாயம் படிக்கிறாங்க? இங்கிலீஷ்தான் இனி இந்தியாவுக்குப் பொதுவான மொழி.”

குருவாயி புரிந்தும் புரியாமலும் பார்த்தாள்.

“பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் கபளீகரம் செஞ்சிருக்கிறது உங்க சமஸ்தானங்களோட மொழியைத்தான், புரியுதா குருவாயி?”

தூரத்தில் நரியின் ஊளை கேட்டது.

- பாயும்