
ஒருவேளை கஞ்சிக்கே ஓடாய்த் தேய்ந்த பஞ்ச காலத்தில், அவனுக்குப் போலீசு வேலை கிடைத்திருந்ததில்தான் வயிறு எரிந்தார்கள்.
“என்னப்பூ, ஊர் விட்டு ஊர் வந்து பொண்ணு தேடுறீங்க? சொதந்திரத்துல* பொண்ணு ஒண்ணும் கெடைக்கலியா?” மானூத்துக்காரனின் ஏளனம் கருப்பத்தேவனுக்கு எரிச்சலைத் தந்தது.
“சொதந்திரத்துலயா... எதுக்கு? எம் மகன் போலீசுக்காரன். நம்ம கவுரிதிக்குச் சமமா இருக்கணும்ல. சும்மா சொதந்திரம், சுருத்துன்னு போய் சீப்பட முடியுமா? உங்கள மாதிரி கள்ள வழியில மதுரைக்கு வியாபாரத்துக்குப் போற மாட்டு வண்டிகளை ராத்திரிபூரா மடக்கி, பொருளைக் களவாடுற பயலா எம் மக? சர்க்காரு போலீசு அவென். அவெனுக்குக் கீழ் நாட்லயோ உங்க மானூத்துலயோ பொண்ணு கட்ட முடியாது அப்பு. நான் அடுத்த ஊருக்குப் போய்க்கிட்டிருக்கேன். போலீசு சந்தனத்தேவன்னா ஒரு கித்தாப்பு இருக்கில்ல? அவென் மோஸ்தருக்கு ஏத்தா மாதிரி ஊருவிட்டு வந்து பொண்ணு தேடுறோம். போலீஸ்காரன் பொண்டாட்டியாகிற கவுரிதி எந்த ஊர்ல, எந்த மகராசிக்கு இருக்கோ..!” கருப்பத்தேவன் மீசையை முறுக்கிக்கொண்டான்.
“சரிப்பூ, நீங்க பாருங்க. என்ன இருந்தாலும் சொந்த ஊர விட்டுக்கொடுத்துப் பேசுறது நல்லதில்லை. ஈட்டிக்கு ஈட்டி மோதிக்கிடக் கூடாது. பாத்துக்க அப்பு. நாளைக்கு நல்லது கெட்டதுன்னா சொந்தக்காரன் கவட்டுக்குள்ளதான் போணும்.”
‘`சரிப்பா, பேச்சை விடு. பொண்ணு கொடுக்க இஷ்டமில்லாதவன் வீட்டுப்படி மிதிக்க மாட்டேன்.”
கள்ளர் இனத்தில் பிறந்திருந்தாலும், போலீசு கொடுக்கும் கைக்காசுக்கு ஆசைப்பட்டு, போலீசுக்கு ரகசியமாகத் துப்புக்கொடுத்துக் கொண்டிருந்தான் சுக்காங்கல்பட்டி சந்தனத்தேவன். ஒரு காலத்தில் சந்தனத்தேவனும் கள்ள வழிக்குப் போனவன்தான். எப்படியோ அவனுக்குப் போலீசுடன் பழக்க வழக்கம் வந்தவுடன், போலீசுக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்தான். ஓர் இடத்திற்குப் போலீசு வருது என்றாலே, அங்கே நடக்கும் ஜபர்தஸ்துகளைப் பார்த்து, சந்தனத்தேவனுக்குப் போலீசாகும் ஆசை வந்தது.
சந்தனத்தேவன் போலீசு வேலையில் சேர வேண்டும் என்று முடிவெடுத்தது சர்க்காருக்குப் பெரிய துரதிர்ஷ்டம்தான். அலைந்து திரிந்து, பெரியகுளம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சிபாரிசில் ஒரு வருடத்திற்கு முன்பு போலீசு வேலை கிடைத்தது.

அரைக்கால் காக்கி ட்ரவுசரும் காக்கி முழுக்கை சட்டையும் முழங்கால் வரை காக்கித் துணியில் பட்டி கட்டி, குதிங்கால் வரை எருமைத்தோல் பூட்சு போட்டுக்கொண்டு ஊருக்குள் ‘சரக் சரக்’கென்ற ஒலியெழுப்பி நடக்கும்போது சந்தனத்தேவனுக்கு இனம்புரியாத பெருமிதம். கள்ளர் கூட்டத்தில் காவலன். நினைத்து நினைத்துக் கர்வம் கொண்டான். ஆரம்பத்தில் நடை உடையிலிருந்த பெருமிதம், போகப் போகத் தெனாவெட்டாக மாறியது. ‘மொத்தப் பயலையும் நான் நெனைச்சா உள்ள வச்சிட முடியும்’ என்று தன் கட்டைத் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி, மந்தையில் மமதையுடன் பேசிக்கொண்டிருப்பான்.
அவன் தோரணையை ஊர் மக்கள் பெரிதாக நினைக்கவில்லை. ‘பேச்ச விடுங்கப்பா. நேத்து வரைக்கும் களவாண்ட காசுல கஞ்சி குடிச்சவன்தானே? காக்கி ட்ரவுசரு போட்டுக்கிட்டா? உள்ள ஓடுறது கள்ள ரத்தம்தானே அப்பு’ என்பதுபோல் அவனின் அல்ட்டாப்புகளைப் புறந்தள்ளப் பார்த்தார்கள். ஒருவேளை கஞ்சிக்கே ஓடாய்த் தேய்ந்த பஞ்ச காலத்தில், அவனுக்குப் போலீசு வேலை கிடைத்திருந்ததில்தான் வயிறு எரிந்தார்கள். அவிப்பதற்கு நெல் இல்லை. இருந்திருந்தால், ஒவ்வொருத்தர் வயிறும் ஒரு சால் நெல்லை வெள்ளாவி வைக்காமலேயே வேக வைத்திருக்கும். சந்தனத்தேவன் வீட்டில் மட்டும் மூன்று வேளையும் சோறு. காய்ந்து கிடந்த வயிறுகளை அவன் வீட்டுச் சோற்றுக்கஞ்சி வாசனை வருத்தியது.
வாங்கிய சம்பளத்திற்குச் சோறாய்ச் சாப்பிட்டு மதர்த்துப்போன சந்தனத்தேவனுக்குக் கல்யாண ஆசை வந்தது. காக்கி உடை கொடுத்த மிடுக்கில், சந்தனத்தேவனும் அவன் குடும்பமும் பெண் பார்க்க ஆரம்பித்தனர். தங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் தகுதி இந்த ஊரில் யாருக்குமில்லையென்று கருப்பத்தேவனின் மனைவி நினைத்தாள். குடும்பமே வெளியூர்களில் பெண் தேடிப் படையெடுத்தது.
பெண் பார்க்கும் படலம் கருப்பத்தேவன் நினைத்தபடி அவ்வளவு லகுவாக இல்லை. சொந்த கொத்தை விட்டு, வேற்றூருக்கு வந்தவர்களைக் கண்களில் சந்தேகத்தை ஊற்றி, உற்றுப் பார்த்தார்கள். ‘சொதந்திரத்த விட்டு, அசலூருல பொண்ணு கேட்டு வர்றீன்னா, ஒங்கிட்ட என்னமோ குத்தமிருக்கு’ என்று குற்றம் பார்த்தவர்களை, ‘கள்ள மூடங்க’ எனத் திட்டித் தீர்த்தான் கருப்பத்தேவன். சுத்துப்பட்டுப் பத்து ஊருக்குமேல் அலைந்து திரிந்த பிறகே கருப்பத்தேவனுக்குப் புரிந்தது.

‘கள்ளனுக்குப் போலீச பார்த்தா பயம் வருமே? அதான் பெண் கொடுக்க யோசிக்கிறாங்க. இனி அசலூருக்கு அலஞ்சு பலனில்லை. கால் ரேகை தேஞ்சுபோச்சு. நாக்குல எச்சி காஞ்சுபோச்சு’ என்ற முடிவுக்கு வந்த கருப்பத்தேவன், வேறு வழியின்றி ஊர் மந்தைக்கு வந்தான். தோள் துண்டினைக் கையில் ஏந்தி நின்றான். பொழுது ஏறுகின்ற வேளையில் மந்தையில் கருப்பத்தேவன் நிற்கும் செய்தி பரவிய அரை நாழிகையில் ஊர்ப் பஞ்சாயத்து கூடிவிட்டது. வயது வசதிக்கு ஏற்றபடி, ஜனங்கள் மந்தையில் இருந்த மேடையிலும் படிக்கட்டுகளிலும் கல்லிலும் உட்கார்ந்தனர்.
பஞ்சாயத்தார் உருமால் கட்டி, திருநீறு பூசும்வரை காத்திருந்த பெரிய தலைக்கட்டு பேயத்தேவன், “என்னப்பா, ஆரம்பிக்கலாமா?” என்றான் பொதுவாக.
பேயத்தேவனின் சித்தப்பன் முங்கிலித் தேவன் வேல்கம்பைப் பிடித்தபடி பின்னால் வந்து நின்றார். முங்கிலித் தேவன் ஓராள் வந்து நின்றவுடன் நான்காள் சேர்ந்து நிற்பதுபோல் இருந்தது அந்த இடம். உள்ளங்கையை விரித்தால் பெரிய தேக்கு இலை அகலத்திற்கு விரியும். தெருக்கோடியில் இருக்கும் வீட்டிலிருந்து மந்தைக்கு நான்கடி எடுத்து வைத்தால் போதும். யானையின் கால் பாதத்தைப்போல் கைவிரல்கள் ஒவ்வொன்றும் சதைத் திரட்சியாக இருக்கும். பேயத்தேவனின் அப்பா மொக்கைமாயத் தேவனின் கடைசித் தம்பிதான் முங்கிலித் தேவன்.
“வெத்தலை பாக்கு பணம் வச்சாச்சா நல்லப்பூ?” பேயத்தேவன்.
“வச்சாச்சு அப்பு” என்றார் முங்கிலி.
“என்ன பிராது நல்லப்பூ? யார் மேல பிராது?”
கருப்பத்தேவன் கும்பிட்டார்.
“எம் மகனுக்குப் பொண்ணு வேணும்.”
“அத எதுக்குப்பா எங்ககிட்ட கேக்குற? சொதந்திரப் பொண்ணுக உனக்கு இருக்குமில்ல? உன் கொத்துல பாரு” என்றான் பேயத்தேவன்.
“எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே கேட்டா எப்புடி பேயத்தேவா? நீ வயசுல சின்னவன்தான். நான் உன் சித்தப்பன் ஜோடு. அதனால ஒம் பேரைச் சொன்னா கோச்சுக்காதேப்பா.”
முங்கிலித் தேவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“என்னடா பேப்பயலே, பஞ்சாயத்து நடக்கயிலை, பேயத்தேவனுக்கு நல்லப்பன்* நானே கூட்ட சாட்டத்துல பேயத்தேவன்னு பேர் சொல்லிக் கூப்டுறதில்லை. அண்ணன் மகன்தான். நான் தூக்கி வளத்த பிள்ளைதான். ஆனாலும் பஞ்சாயத்துக்கு மரியாதை கொடுக்கணும். சும்மா பேர் சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காதே. எஞ்சோட்டுக்கார நாயின்றதாலே இதோட விட்டுர்றேன். அடுத்து என் அண்ணன் மகன் பேரைச் சொன்னா, இந்தா இந்த ஈட்டி, உன் எள வயத்துள்ள போயிடும்.”
‘`சரிப்பா சரிப்பா. கோச்சுக்காதே. இனிமே பேரைச் சொல்லலை. அய்யா பெரியவரே. என் மகனுக்குப் பொண்ணு வேணும்.”
“ஏன் அம்மான், பொண்ணு ஒம் பையனுக்குத்தானே, அவென் வர்றாம நீ வந்திருக்க? ஒனக்கா பொண்ணுக் கட்டப் போற?”
“அம்மானுக்குச் சும்மாவே ஏலாது. இதுல ரெண்டாந்தாரமாக்கும்..!” என்றான் ஒருவன்.
“டேய் மாப்பிள்ளை, ஒடசலக் கொடுக்காத, பேச விடுடா.”
“பொண்ணு தேடுற பய வரணும்ப்பா. அவென் வராம அவென் சார்பா அப்பன் ஆத்தால்லாம் வந்தா, பஞ்சாயத்துக்கு என்னா மரியாதை?”
கருப்பத்தேவன் கையெடுத்துக் கும்பிட்டார்.
“எப்பா, ஒங்களுக்கு மனசாட்சி இருக்கா? என்னைய குத்தம் சொல்லுற நேரமா? ஒங்களுக்குத் தெரியாதா? அவன் போலீசு வேலையில இருக்கான். பாளையத்துல உடையார் வீட்ல களவான மறுநா, சர்க்கிள் வந்து ஸ்தலத்தைப் பார்த்திருக்காரு. ஸ்தலத்தார் முன்னால என் மகன வச்சிக்கிட்டு சர்க்கிள், ‘என்னப்பா சந்தனத்தேவா, போலீசு வேலைக்குச் சேர்றதுக்கு முன்னாடி இருந்த சுறுசுறுப்பு கொறஞ்சு போயிடுச்சே? சம்பவம் நடந்து ஒரு நாளாவுது. இன்னும் ஆளு யாருன்னு சொல்ல மாட்டீங்கிற. ஒழுங்கா கண்டுபிடி. இல்லைனா துரைகிட்ட சொல்லி, வேலையைப் பிடிங்கிடுவேன்’னு சொல்லியிருக்கார். எம் பையன், ‘இல்ல தொரை, ரெண்டு நாளைக்குள்ள கண்டுபிடிக்கிறேன்’ன்னு சொல்லியிருக்கான். இந்த ஊர் இளந்தாரிகளுக்கு என்னப்பு? நம்ம ஊர்க்காரன் போலீசுல இருக்கான்னு பெருமைகூட வேணாம். அவென் வேலைக்கு ஒல வைக்கிற வேலையைப் பார்த்தா, எப்டிப்பா கூட்டத்துக்கு வருவான்? சம்பவம் பண்ணணும்னா கீழ்நாட்டுக்குப் போவ வேண்டியதுதானே? கணகொண்ட சொத்துக்காரனுங்க. ஒண்ணு ரெண்டு காணாப் போச்சுன்னாக்கூட தொலையுது சனியன்னு விட்டுடுவானுங்க. பாளையத்துக்காரன் நம்மவிட எச்சப் பய. அவென் வீட்ல பண்ணலாமா? சரி விடுங்கப்பா. நா மேல பேசல. சடவு வந்துரும். என் மகன் விசயத்துக்கு வரேன். அவென் வீட்டுல மூஞ்சிய தொங்கப்போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்கான். அந்தக் கொடுமைய பாக்க முடியாம, அவென் ஆத்தா மருகிறா. ‘நீ பஞ்சாயத்தக் கூட்டுறயா, நானே கூட்டவா?’ன்னு மல்லுக்கு நிக்கிறா. அவெ பஞ்சாயத்தக் கூட்டுனா, எனக்கு மரியாதையா இருக்காதுன்னுதான் வந்திருக்கேன்.”
கருப்பத்தேவன் பேசியதில் இருந்த உருக்கம், கூட்டத்தை அமைதிப்படுத்தியிருந்தது.
“ஒம் பையன், அதான் எம் பங்காளி, கள்ள வழியில போன வரையில எப்புடி குதூகலமா இருந்தான்? கள்ள வழியில பொழுது சாய நின்னோமா? வண்டியில களவாண்டமா, பொருள பொம்பளைகிட்ட கொடுத்துட்டு சந்தோசமா படுத்து எந்திரிச்சோமான்னு ஊரே இருக்குல. இப்ப போலீசு வேல என்ன கொடுத்துச்சு? எவனோ ஒரு சர்க்கிள், என்ன சாதிப் பயலோ, மூத்திரம் பேஞ்சதை நிறுத்துற மாதிரி அவனப் பார்த்துப் படக்குன்னு நின்னு சல்யூட் அடிக்கிறான். அதான் பாத்தோம். ‘வெத்துவேட்டு சந்தனத்தேவா, விடிய வந்து சேர்டா சுக்காங்கல்பட்டிக்கு’ன்னு தாள்ல அய்யர் எழுதிக் கொடுத்தாரு. அதைக் கல்லுல கட்டி சர்க்கிள் வீட்டுக்குள்ள எறிஞ்சோம். அவன வேலையை விடச் சொல்லு. நல்ல பொண்ணா நாங்களே பாக்குறோம். கண்ணாலம் முடிச்சிடுறோம்.”
தூரத்தில் சந்தனத்தேவன் வருவதைப் பேயத்தேவன் பார்த்தான். பின்னால் திரும்பினான். முங்கிலித் தேவன் கையில் இருந்த வேல்கம்பைச் சாய்த்துப் பிடித்துக்கொண்டு, பேயத்தேவன் வாய்க்கருகில் காதைக் கொண்டுசென்றார்.
“நல்லப்பூ, என்னவா இருந்தாலும் சந்தனத்தேவன் சர்க்காரு ஆளு. நாம இருக்கிறோம்ற தைரியத்துல இங்க இருக்கிற வெடலைப் பயலுங்க கூடக் கொறைய பேசிடுவாங்க, பாத்துக்க.”
“சரிப்பா” என்ற முங்கிலி நிமிர்ந்து நின்றார். வேல்கம்பை எடுத்துக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டார்.
“எப்பா, எல்லாரும் நல்லாக் கேட்டுக்கங்க. தலை இருக்க வால் ஆடக்கூடாது. சந்தனத்தேவனுக்காக அவென் அப்பன் வந்திருக்கான். அது தப்பில்ல. சந்தனத்தேவன் வந்தான்னா யாரும் கூடக் கொறைய பேசக் கூடாது. பஞ்சாயத்தார் மட்டும்தான் பேசணும்.”
கூட்டம் திரும்பிப் பார்த்தது. சந்தனத்தேவன் வேக நடை நடந்து கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்தான். தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்தான். பார்க்கும்போதே போலீசு என்று தெரியும். பெரிய மீசை. கழுத்தில் கறுப்புக் கயிறு. வலது கை புஜத்தில் தாயத்துக் கட்டியிருந்தான்.
“கும்பிடுறேன்...” என்றான் பொதுவாகச் சபையைப் பார்த்து.
“வாப்பா வா” என்ற முங்கிலி, “ஒங்கப்பா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாரு...” என்றான்.
“எல்லாத்தையும் சொல்லிட்டாரா சிய்யான்?”
“ஆமாம், சர்க்கிள் வீட்டுக்குள்ள கல்லுல தாள் கட்டி எறிஞ்சது வரைக்கும் சொல்லிட்டாரு.”
“சொல்லிட்டாரா? அப்போ சரி. சிய்யான், எனக்குப் பொண்ணு தேடுறது இருக்கட்டும். பாளையம் வேலுச்சாமி வீட்ல, நம்ம ஆளுக ஒறண்டை இழுக்கிறது நல்லதில்ல... சொல்லிப்புட்டேன்!” கறாரான குரலில் சந்தனத்தேவன் சொன்னான்.
“என்ன விஷயம்ப்பா. ஒடைச்சு சொல்லு.” பேயத்தேவன் குரலில் அழுத்தம் கூடியவுடன் கூட்டத்தில் இளைஞர்கள் எழுந்து நின்றனர்.
“சொல்லுறேன். சபைக்கு மரியாத காமிக்காம எந்திரிச்சி நிக்கறவனுங்கள மொதல்ல உக்காரச் சொல்லுங்க.”
பேயத்தேவன் கையமர்த்தினான். எழுந்தவர்கள் உட்கார்ந்தார்கள்.
“பேயத்தேவா, உனக்குக் கொடுக்கிற மரியாதையை எப்பவும் குறைச்சதில்ல. என்னிக்காவது உன்னைய நான் தள்ளி நில்லுன்னு சொல்லியிருக்கனா?”
முங்கிலித் தேவன் வேல்கம்பை ஓங்கித் தரையில் குத்தினார்.
“அப்பு, விஷயத்துக்கு வா. எதுனாலும் என்னையப் பாத்துப் பேசு. எதுக்குப் பஞ்சாயத்த பேர சொல்லிப் பேசுற? எங்க அண்ணன் மகனுக்கு ஒன் வயசுன்னாலும் பஞ்சாயத்துப் பெரிய தலைக்கட்டு.”
“விடு நல்லப்பூ. சொல்லிட்டுப் போகட்டும்” பேயத்தேவன்.
“சரிய்யா, நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். சொல்லுய்யா சந்தனத்தேவா..!”
“ஒரு முக்கியமான விஷயம் சிய்யான். பாளையம் வேலுச்சாமி வீடு தெரியும்ல, பெட்ரோமாக்ஸ், அரிக்கேன் லைட், கிராமபோன் விக்கிறவரு...”
“அவர் செத்துப் போயிட்டாருல்ல. அவர் மகன் சிவசுப்பிரமணியன்தானே இப்ப கட நடத்துறாரு. சொல்லு, அவருக்கென்ன?”
“ஏற்கெனவே நம்மாளுக அவரோட மாட்டுவண்டிச் சக்கரத்தைத் தூக்கிட்டு வந்திருக்காக. அதைத் தேடி விசாரணைக்கு நா வந்தேன். அப்ப, ‘மாட்டு வண்டி தெருவுலதானே நிக்கிது, அதுக்கு யாரு சொந்தக்காரன்? வீட்டுக்குள்ள இருந்து காணாமப் போச்சுன்னா பிராது கொடுக்கலாம். தெருவுல கெடக்கிறதுக்கு யாரும் பிராது கொடுக்க முடியாது’ன்னு குதர்க்கமா பேசுனானுங்க.”
“யாரது?”
“அது யாருன்னு பஞ்சாயத்துக்கும் தெரியும். தெரியாத மாதிரி கேக்குற?”
“சரி, மேல சொல்லு.”
“சரின்னு அதோட விட்டுட்டேன். எங்க சர்க்கிள் என்னைய வெரசுனாரு. இவனுங்க சிவசுப்பிரமணியம் வூட்டுக்குள்ள கல்லெ விட்டெறிஞ்சிருக்கானுங்க. கதவத் தொறந்து பாத்தா, வீட்டு வாசப்படியில ஒரு தாள் மேல, கல்ல வச்சிருந்திருக்கானுங்க. அதுல, ‘ஆறு மரக்கா திவசத்தைச் சுக்காங்கல்பட்டி மந்தையில கொண்டுவந்து வை’ன்னு எழுதியிருந்திச்சாம். ஆறு மரக்கா நெல்ல கொண்டுவந்து, நம்ம ஊர் மந்தையில வச்சிட்டுத் திரும்புனா, அந்தக் கிழக்கு வீட்டு இழுவக்குட்டிப் பய, ‘உங்க கெழக்கு வயல் கெணத்துல மாட்டு வண்டிச் சக்கரம் மிதக்குது’ன்னு சொல்லி நகர்ந்திருக்கான். இவனுங்களுக்கு எழுதிக் குடுக்கிறது யார்ன்னு தெரியும்தானே? அந்தக் குச்சனூர் அய்யருக்கு புத்தியே இல்ல. அய்யர போலீசு நாலு தட்டுத் தட்டினா உளறிடுவாரு, சொல்லிட்டேன்.”
“இதெல்லாம் தெரிஞ்சதுதானே? சிவசுப்பிரமணியம் பிராது குடுக்கலையில்ல?”
“குடுக்கல. ஆனா இப்ப அவருக்குச் சாம்பானுங்க ரொம்ப ஒப்புரவா இருக்கானுங்க. அதுவும் மாங்குடியான் காணி ஆளுங்க, அந்த வீட்டு மைக்கேல், பிலவேந்திரன் எல்லாம் கிரிசாத்துல சேந்தவனுங்க. எங்க சர்க்கிளே சாம்பானுங்ககிட்ட இறங்கிப் பேசுறாரு. டிஸ்ட்ரிக்ட் சூப்பிரண்டென்ட் தேவசகாயம் நாடார் தெரியும்ல, சிவசுப்பிரமணியம் டிஸ்ட்ரிக்ட் சூப்பிரண்டென்ட் கிட்ட சாதிப் பேரச் சொல்லி ஒட்டிக்குவாரு. சாம்பானுங்க கிரிசாத்துன்னு சொல்லி அவர்கிட்ட ஒட்டிக்கிருவானுங்க. டிஸ்ட்ரிக்ட் சூப்பிரண்டென்ட் பவர் என்னான்னு தெரியும்ல? ஊரையே சுட்டுப் பொசுக்கிப்பூடுவாரு.”
“எப்பா எப்பா, நிறுத்து சாமி. பெரிய டிஸ்ட்ரிக்ட் சூப்பிரண்டென்ட். எல்லாப் பவரையும் நாங்க பாத்துக்கிறோம். நீ எங்ககிட்ட அவெனப் பத்தியெல்லாம் பேசி, அவெனப் பெரிய மனுசன் ஆக்கிடாதே” என்றான் ஒருவன்.
பேயத்தேவன் கையமர்த்தினான்.
“டேய், பொசக்கெட்ட பயலே. என்னடா பேச்சு அதிகமா இருக்கு? இவன் நடப்பு விஷயத்தைச் சொல்றான். காலவர்த்தமானம் பாத்து நடந்துக்கிடணும்னு சொல்றான். அதுக்கு ஜில்லா சூப்பிரண்டைப் பத்திக் கூடக் கொறைய பேசுவியா? கெண்டக் கால் நரம்ப எடுத்துருவாரு” என்ற பேயத்தேவன், “நீ, சொல்லுப்பா, என்ன சொல்ல வர்ற?” என்றான்.
“சிய்யான், நம்மள வம்புக்கு இழுக்க சிவசுப்பிரமணியம் ஒரு வேலை பாக்கப் போறார். அவர் வீட்ல வெள்ள, செவப்பின்னு ரெண்டு காங்கேயம் மாடுங்க இருக்கு. ரோட்டுல பாரம் தூக்கிட்டுப் போகையில, பாக்குற ஆளுகளை முட்டித் தூக்குற மாதிரிதான் போகும். அதை ராவோட ராவா தூக்றவனுக்கு ஆயிரத்தோரு ரூபாய் இனாம்னு தமுக்கடிக்கப் போறாரு.”
“அடிக்கட்டும்ப்பா, நமக்கென்ன?” என்றார் முங்கிலி.
“தமுக்கு அடிக்கப் போறதே நம்ம ஊருக்குள்ள மாத்திரம்தான். அதைப் பத்தித்தான் கூட்டத்துல பேசணும். என் கல்யாண விசயம்கூட இப்போதைக்கு முக்கியமில்லை.”
கூட்டத்தில் ஆளாளுக்குப் பேசும் சத்தமெழுந்தது. பேயத்தேவன் எழுந்தான். எல்லாரும் உட்கார்ந்தனர்.
சந்தனத்தேவன் பேசத் தொடங்கினான்.
“எப்பா, நல்லாக் கேட்டுக்கங்க. மூணு வருசமா வரும்படி இல்ல. பஞ்சம் தாங்கி கம்மாயில மரம், செடி, கொடி எல்லாம் வெட்டித் தின்னாச்சு. பஞ்சம் தாங்கி மலை இப்ப நமக்குப் படியளக்குது. பென்னி குயிக்கினு ஒருத்தராம். நம்ம ஊருக்கு வரப்போறாராம். பேரியாத்தைத் திருப்பி, மலையைக் கொடைஞ்சி நம்ம ஊர்தாண்டி தண்ணி கொண்டுபோறதா திட்டமாம். பென்னி குயிக் மதுரை ஜில்லா கலெக்டர் மாதிரி. மிலிட்டரி ஆளு. டிஸ்ட்ரிக்ட் சூப்பிரண்டென்ட் தேவசகாய நாடாரைவிடப் பெரிய ஆளு. அவரு நம்ம ஊருக்கு எந்நேரமும் வரலாம். அவர் வர்ற நேரம் நம்ம வேலுச்சாமி மகன்கிட்ட ஒறண்ட வேணாம். தமுக்கடிச்சா அடிச்சிக்கிறட்டும்.”

“அதெதுக்குத் தமுக்கடிச்சு நம்மள சீண்டணும்? மாட்ட பத்தணும்னா சிட்டிகை போடற நேரம் போதுமே...” இளந்தாரி ஒருவன் துள்ளினான்.
“ஒன் வீரமெல்லாம் தெரியுமப்பு. வெள்ளக்காரங்க திட்டமே வேற.”
“சந்தனத்தேவா, நம்ம கூட்டத்துக்கு இருட்டுல கூட தேடிப் போற பொருள் பளீச்சினு கண்ணுல தட்டுப்பட்டுடும். தேங்காய ரெண்டா ஒடச்சி வைக்கிற மாதிரி ஒடச்சி வச்சாத்தான் பேசுற விசயம் மண்டையில ஏறும். என்ன ஏதுன்னு நூல் சுத்தாமா ஒடச்சிப் பேசுப்பா.”
சந்தனத்தேவன் தொண்டையைச் செருமினான்.
“சிய்யான், எனக்கும் என்ன ஏதுன்னு பட்டவர்த்தனமா தெரியாது. ஆனா, மேல்மலையில நீரணை கட்டப்போறதா பேச்சு அடிபடுது. சுத்துப்பட்டுல இருக்கிற இளந்தாரிகள சின்னதும் பெருசுமா காரணம் சொல்லி, காட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போப்போறாங்கன்னு நெனைக்கிறேன். மேல்மலை தெரியும்ல... அங்கதான். மனுசங்க உள்ள போனா வெளிய வர முடியாது. இதுவரைக்கும் மனுசங்களே போனது கெடையாதாம். யானை, புலின்னு சிக்குனா உசுரோட திரும்ப முடியாதாம். சும்மா வான்னு கூப்ட்டா யாரும் போ மாட்டோம் இல்ல. இப்படிக் கேசு கீசுன்னு சொல்லி, பயமுறுத்திட்டா கூப்டுற எடத்துக்கு வந்துதானே ஆகணும்? இத்தன பேர் வேணும்னு வெள்ளக்கார தொரைங்க கேட்டிருப்பாங்க. நம்ம போலீசு வான்னு கூப்ட்டா யார் வருவா? குறுக்கு வழியில சால் ஓட்டிப் பாக்குறானுங்க. மாடு பிடிக்கன்னு தமுக்குப் போட்டு, பிடிக்கப் போனம்னா களவாண்டம்னு கொத்தா நம்ம ஊரு இளந்தாரிகளைப் பிடிச்சுப் போடுவாங்க.”
“எல்லா வெள்ளக்காரனையும் நாங்க பாப்போம்.”
கருப்பத்தேவன், குரலில் இளக்காரம் காட்டினார்.
“வெள்ளக்காரங்க நேரா வரமாட்டாங்க. மண்ணுளிப் பாம்புங்க. நமக்குள்ள இருக்கிற சிக்கல்ல, அவன் சிக்கலையும் முடிஞ்சிவிட்டுட்டு அடிச்சிக்கிட்டு வாங்கடான்னு இருப்பானுங்க.”
கூட்டம் அமைதியாக இருந்தது.
“அங்கங்கே பொகையுது. என்ன ஏதுன்னு தெரியுற வரைக்கும் நம்மாளுங்க சூதானமா இருங்க. அதான் நான் சொல்ல வர்றது.”
சந்தனத்தேவன் சொன்னதும், பேயத்தேவன் முகத்தில் யோசனை தெரிந்தது.
“தண்ணி வருதுன்னா வரட்டும். அதுக்காக நம்மள அசிங்கப்படுத்துவானா?”
கருப்பத்தேவன் துள்ளினான்.
அழகிய பெருமாள் கோயில் இருக்கும் திசைநோக்கி, தலைக்குமேல் கையுயர்த்திக் கும்பிட்ட பேயத்தேவன், செம்பிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்தான்.
பஞ்சாயத்து முடிந்தது என்ற சமிக்ஞை அதிலிருந்தது.
ஈசான மூலையில் இடியும் மின்னலுமாக மழை இறங்கியது.
- பாயும்